21 – ஈடில்லா எனதுயிரே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 21
“காலேஜூக்கு டைமாச்சு. இன்னும் கிச்சன்ல என்ன செய்ற ராகா?” சமையலறை வாசலில் நின்றபடி கேட்டான் பிரபஞ்சன்.
“இன்னும் ஒரு பைவ் மினிட்ஸ் அத்தான். இந்தச் சாம்பார் கொதித்ததும் இறக்கி வச்சுட்டு கிளம்பிடுவேன்…” என்றாள் ராகவர்தினி.
“இதுக்குத்தான் சமையலுக்கு ஒரு ஆளை வேலைக்கு வைப்போம்னு சொன்னேன். கேட்காம நீயே செய்துட்டு இருக்க. பைனல் எக்ஸாம் வேற நெருங்கிட்டு இருக்கு. இந்த நேரத்தில் நீ கிச்சன்லயே இருந்தால் எப்படி?”
“எனக்கு இது கஷ்டமா இல்லை அத்தான். நான் என்ன விதவிதமாகவா சமைக்கிறேன்? எல்லாமே சிம்பிள் சமையல் தான்…”
“சிம்பிள் சமையலாக இருந்தாலும் அதுக்கும் உன் நேரம் தானே வேஸ்டா போகுது…”
“அது பரவாயில்லை அத்தான், விடுங்க. நீங்க என்ன இன்னைக்குச் சீக்கிரம் ஸ்கூல் போகலை? ஸ்கூல் கேட்டை திறக்கவே நீங்க தானே போவீங்க. இப்ப இங்க இருக்கீங்க?” என்று கேலியாகக் கேட்டாள்.
“என்ன நக்கலா? இன்னைக்கு ஸ்பெஷல் கிளாஸ் இல்லை. லேட்டா போனால் போதும்…” என்றான்.
“பிள்ளைங்க தப்பிச்சாங்க…”
“என்னைக் கேலி செய்தது போதும். போ… போ… குளி. நான் அடுப்பை ஆப் செய்றேன்…”
“இதோ முடிந்தது அத்தான்…” என்றவள் அடுப்பை அமர்த்தி விட்டு சாம்பாரை ஒரு பாத்திரத்தில் மாற்றி விட்டே குளிக்கச் சென்றாள்.
அவள் சென்றதும் அவனின் தந்தையிடம் பேச சென்றான்.
சற்று நேரத்திற்குப் பிறகு, “அத்தான், ஒரு நிமிஷம் மேல வாங்களேன்…” என்று குரல் கொடுத்தாள் ராகவர்தினி.
‘கிளம்பி விட்டால் கீழே வராமல் என்னை எதற்கு அழைக்கிறாள்?’ என்ற கேள்வியுடன் மேலே பார்த்தானே தவிர உடனே எழுந்து செல்லவில்லை.
அதென்னவோ அவள் குளிக்கச் செல்லும் போது அறைக்குள் செல்ல மாட்டான்.
கீழேயே இருந்து கொள்வான். இல்லையெனில் மாடி வராண்டாவில் இருப்பான்.
“என்னன்னு போய்ப் பாரு பிரபா…” என்று தந்தை சொன்ன பிறகே எழுந்து சென்றான்.
உடனே அறைக்குள் செல்லாமல், கதவை லேசாகத் தட்டினான்.
“வாங்க அத்தான்…” என்றழைத்ததும் உள்ளே நுழைந்தான்.
“என்ன ராகா?”
“ஒரு ஹெல்ப் அத்தான். கதவை தாழ் போட்டுட்டு வாங்க…”
“ஏன்? அப்படி என்ன ஹெல்ப்?”
“கதவை மூடிட்டு வாங்க, சொல்றேன்…”
கதவை மூடிவிட்டு அருகில் சென்றதும், “இந்த ஜிப்பை போட்டு விடுங்க அத்தான்…” என்று அவனுக்கு முதுகை காட்டி நின்றாள்.
“ஏய், என்ன இது?” என்று பட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டான் பிரபஞ்சன்.
பின்பக்கம் ஜிப் வைத்த சுடிதார் அது. நடு முதுகு வரை திறந்திருக்க, அவள் தயங்காமல் அவனை ஜிப் போட அழைக்க, அவனோ சங்கடமாக முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“நேரமாச்சு அத்தான், ப்ளீஸ்! போட்டு விடுங்க…” என்றாள் கெஞ்சலாக.
“நீயே போட்டுக்கோ…”
“கை எட்டலை அத்தான்…”
“அப்புறம் ஏன் இந்த மாதிரி ட்ரெஸ் எல்லாம் போடுற?”
“இந்தக் கலர் எனக்கு ரொம்பப் பிடிக்கும் அத்தான். ரொம்ப நாளா தேடி அப்புறம் எடுத்தேன். பின்னாடி ஜிப் இருக்குன்னு எடுக்காமல் விட மனசில்லை…”
“நீ வேற ட்ரெஸ் போட்டு போ…” என்றவன் கதவை திறக்க போனான்.
“அத்தான்…” என்று அவன் கையைப் பிடித்து நிறுத்தினாள்.
“விடு ராகா. நீ வேற ட்ரெஸ் போட்டு வா…” என்றான் இன்னும் அவள் புறம் திரும்பாமல்.
“எனக்கு ரொம்பப் பிடிச்ச ட்ரெஸ் அத்தான். இன்னைக்குப் போடணும்னு ஆசையா போட்டேன். ஒரு ஜிப் தானே, போட்டு விட்டால் என்ன? ரொம்பப் பிகு செய்றீங்க…” அலுத்துக் கொண்டாள்.
“எனக்குச் சங்கடமா இருக்கு ராகா…” என்றவனிடம் கூச்சம் தெரிய, அவளுக்கு வருத்தம் தான் வந்தது.
ஆனாலும் அவனை அப்படியே விட்டுவிட்டால் அவள் ராகவர்தினி இல்லையே?
“இந்த உதவி எல்லாம் என் அம்மாவுக்கு அடுத்து நான் உங்ககிட்ட தான் கேட்க முடியும் அத்தான்…” என்றாள் அழுத்தமாக.
அந்த வார்த்தைகள் அவனைத் தாக்க, சட்டென்று திரும்பி அவள் முகம் பார்த்தான்.
‘என் கணவன் நீ! இதைச் செய்வதற்கு என்ன தயக்கம்?’ என்ற பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
‘அவள் உன் மனைவி!’ என்று அவனின் புத்தியும் அவனுக்கு எடுத்துரைத்தது.
ஆனாலும் அவனின் சங்கடம் மட்டும் போக மாட்டேன் என்று அடம்பிடித்தது.
ஒரே அறையில் இருந்தார்கள். எப்பொழுதும் போல் நன்றாகப் பேசி சிரித்தார்கள். ஆனாலும் அவனுக்கு மனைவி என்ற உரிமையுடன் பழகும் எண்ணம் மட்டும் இன்னும் வரவே இல்லை.
அதற்கு முதல் தடையாக இருந்தது அவள் படிப்பு.
படிக்கும் பெண்ணைத் திருமணம் முடித்திருக்கிறோம் என்ற பெரிய உறுத்தல் அவனிடம் இருந்தது.
படிக்கும் போது காதலில் விழுவதே தவறு என்று நினைக்கும் தான் இப்போது திருமணமே முடித்திருக்கிறோம் என்பதை அவனால் இலகுவாக ஏற்கவே முடியவில்லை.
அவனின் மனசாட்சியே கேள்வி கேட்டு குடைந்து எடுத்தது.
மனசாட்சி கொடுத்த குடைச்சலில் ராகவர்தினியிடம் சிறிதும் தன் உரிமையைக் காட்டினான் இல்லை.
“உங்களுக்குச் சங்கடமா இருந்தால் கண்ணை மூடிட்டு போட்டு விடுங்க அத்தான். நான் இந்த ட்ரெஸ் போட்டு தான் இன்னைக்குக் காலேஜ் போவேன். நீங்க போட்டு விடலைனா நான் இன்னைக்குக் காலேஜ் போகலை…” என்றாள் ராகவர்தினி.
“இது என்ன பிளாக்மெயிலா?”
“அப்படியே வச்சுக்கோங்க…” என்றாள் அலட்டாமல்.
இவள் அடங்க மாட்டாள் என்று தலையில் அடித்துக் கொண்டவன், “திரும்பு…” என்றவன் கண்ணை மூடிக் கொண்டான்.
ஜிப் எங்கே என்று தடவியா பார்ப்பான்? என்று நக்கலாக நினைத்தாலும் என்ன செய்கிறான் என்று பார்ப்போம் என நினைத்து அசையாமல் நின்றிருந்தாள்.
அவள் முதுகில் கையை வைத்தவன், ஜிப்பை பார்க்க கண்ணைத் திறக்க, “அங்கே ஒன்னும் கவர்ச்சியா தெரியாது அத்தான்…” என்றாள் கிண்டலாக.
அப்படியா? என்பது போல் ஆண் மனம் ஒரு நொடி ஆராய்ச்சியாக அவள் முதுகை பார்த்து வைக்க, ‘ஹப்பா!’ என்று அதிர்ந்தவன் பட்டென்று கண்களை மூடிக் கொண்டு ஜிப்பை வேகமாக மேலே இழுத்து விட்டான்.
அவன் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது.
அவள் நடு முதுகில் அரை வட்ட அளவில் ஒரு மச்சம் இருந்தது.
அது அவளின் முதுகிற்கு இன்னும் அழகு கூட்டியிருந்தது.
முதுகில் கவர்ச்சி இல்லை என்று யார் சொன்னது? இதுவும் கவர்ச்சி தான் என நினைத்துக் கொண்டு நிற்காமல் வேகமாக அறையை விட்டு வெளியேறினான்.
“ஷப்பா! இதுக்கே இந்த ஓட்டமா? இவரை வச்சுக்கிட்டு நான் குடும்பம் நடத்தி… ஹ்ம்ம்…” புலம்பிக் கொண்டே பெருமூச்சு விட்டு கல்லூரிக்கு கிளம்பும் வேலையைப் பார்த்தாள்.
“மதியத்துக்குச் சாப்பாடு எடுத்து வச்சுட்டேன் மாமா. சாப்பிட்டு மறக்காமல் மாத்திரையைப் போடுங்க…” என்று மாமனாரிடம் சொல்ல,
“சரி ராகா…” என்றார் சுபேசன்.
“நேத்தும் சரின்னு சொல்லிட்டு, ஒரு மாத்திரை போடவே இல்லை மாமா. இன்னைக்கு உங்க போனில் ரிமைண்டர் வச்சுருக்கேன். அந்த டைமில் மாத்திரை போடுங்க…” என்று அக்கறையுடன் கடிந்து கொண்டாள்.
“சரிம்மா, இன்னைக்கு மறக்க மாட்டேன்…” என்றார் சுபேசன்.
தந்தையிடம் அக்கறையுடன் பேசியவளை வாஞ்சையுடன் பார்த்தான் பிரபஞ்சன்.
அவனுக்கு முன் அவனின் தந்தையை அவன் சொல்லாமலேயே நன்றாகப் பார்த்துக் கொண்டாள் ராகவர்தினி.
அவருக்கு எண்ணெய், உப்பு எல்லாம் அளவாகப் போட்டுதான் கஸ்தூரி சமைத்து தருவார்.
அதை இப்போது அவளும் கடைபிடித்தாள். அதற்காகத்தான் கணவன் சமையலுக்கு ஆள் வைப்போம் என்று சொன்னதைக் கூட அவள் கேட்டுக் கொள்ளவில்லை.
அவள் அப்படிப் பார்த்து பார்த்துக் கவனித்துக் கொள்வது பிரபஞ்சனின் மனதிற்கு இதத்தைத் தந்தது.
விளையாட்டு பிள்ளை என்று நினைத்தவளிடம் இவ்வளவு பொறுப்புணர்வை அவன் எதிர்பார்க்கவே இல்லை.
பேச்சில் தான் விளையாட்டுத்தனமே தவிரச் செயல் என்று வரும் போது அவளின் பொறுப்பும், அக்கறையும், பண்பும் தவறியதே இல்லை.
அதிலும் இப்போதும் அவனை வியக்க வைத்தது அவன் மேல் கொண்ட அவளின் நம்பிக்கை.
வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், அவளின் அந்த நம்பிக்கையில் அவன் மனம் ஆடித்தான் போயிருந்தது.
உணவு முடிந்ததும் ராகவர்தினி கல்லூரிக்கும், பிரபஞ்சன் பள்ளிக்கும் கிளம்பினர்.
இருவரும் தனியாகத் தான் தங்கள் இருசக்கர வாகனத்தில் செல்வர்.
ராகவர்தினி தன் வண்டியை எடுத்த போது தான் கவனித்தாள், சக்கரத்தில் காற்று இல்லை என்று.
“என்ன ராகா?” பிரபஞ்சன் கேட்க,
“காத்து இல்லை அத்தான்…”
“நேத்து நல்லாதானே இருந்தது?”
“அதான் என்னன்னு தெரியலை அத்தான். இப்ப நான் காலேஜ் எப்படிப் போக?”
“ஆட்டோ பிடிக்கட்டுமா?”
“அதுக்கு மெயின் ரோடு போகணுமே அத்தான். பேசாம இன்னைக்கு ஒரு நாள் நீங்களே கொண்டு போய் விடுங்களேன்…”
“நானா? எனக்கு ஸ்கூலுக்கு டைமாச்சு ராகா…”
“ப்ளீஸ்! ப்ளீஸ்! அத்தான் இன்னைக்கு ஒரு நாள். உங்களுக்கு இன்னைக்கு முதல் பீரியட் இல்லை தானே?”
“இல்லை தான். அதுக்காக நான் ஸ்கூலுக்கு லேட்டா போக முடியாது ராகா…”
“நீங்க வாத்தி தானே? என்னவோ ஸ்கூல் பையன் போலப் பயப்படுறீங்க. நீங்க லேட்டா போனால் வெளியே முட்டி எல்லாம் போட வைக்க மாட்டாங்க அத்தான்…”
“உனக்குக் கொழுப்பு கூடி போச்சு. வாத்தியார்னா லேட்டா போகலாம்னு யார் சொன்னா? நாங்களே டிசிபிளின் பாலோ பண்ணாம பிள்ளைங்களை எப்படிப் பாலோ பண்ண சொல்ல முடியும்?”
“உங்க டிசிபிளின் ஒரே நாளில் கப்பலில் போய்க் கவிழ்ந்திடாது அத்தான். இப்ப பேசி பேசி நீங்க தான் நேரத்தை வேஸ்ட் பண்றீங்க. இந்த நேரம் என்னைக் காலேஜிலேயே விட்டிருக்கலாம்…” என்றாள் குறையாக.
கடிகாரத்தைப் பார்த்தவன், “வாயாடி… சீக்கிரம் வா…” என்று அவளையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
வண்டியில் ஏறி இரண்டு பக்கம் கால் போடு அமர்ந்தவள், அவனின் வயிற்றைச் சுற்றி கையைப் போட்டுக் கொண்டாள்.
“ஏய் ராகா… என்ன பண்ற? கம்பியை பிடி!” என்று நெளிந்த படி அதட்டினான்.
“கம்பியை பிடிக்க நான் என்ன யாரோவா? கம்பியை இல்லை உங்களைக் கட்டிப்பிடிக்கவே ஏக போக உரிமையுள்ள உடைமைக்காரியாக்கும்…” நொடித்துக் கொண்டாள் ராகவர்தினி.
“உடைமையை எல்லாம் அப்புறம் பார்க்கலாம். இப்ப கையை எடு. இல்லனா நடந்து போன்னு இறக்கி விட்டு போய்டுவேன்…”
“இறங்கி வீட்டுக்கு வேணா போறேன். காலேஜ் எல்லாம் போக முடியாது…” என்றாள்.
“சேட்டை பண்ணாதே ராகா…” என்றவனுக்கு இப்போது கோபமே வந்து விட, முகத்தைச் சுருக்கிக் கொண்டு கையை எடுத்து அவனை விட்டு விலகியும் அமர்ந்து கொண்டாள்.
அவள் முகமே வாடி போனது.
அதைக் கண்ணாடி வழியாகக் கண்டவன் மனம் வருந்தினாலும் இறுக்கமாகவே இருந்தான்.
அதன் பிறகு அவனிடம் பேசாமல் அமைதியாக வந்தாள்.
அவளின் அமைதி அவனைப் பாதித்தது.
“வெளியில் அப்படிப் போவது எனக்குப் பிடிக்கலை ராகா. சொன்னா புரிஞ்சிக்கோ…” என்று அவளைச் சமாதானம் செய்ய முயன்றான்.
“வெளியில் மட்டுமா? வீட்டிலும் தானே? என்னவோ வீட்டில் மட்டும் ஒட்டிக்கிட்டே திரியுற மாதிரி…” அவனுக்கும் கேட்கும்படியாகவே முணுமுணுத்தாள்.
அவனின் உதட்டோரம் சிரிப்பில் துடித்தது. ஆனாலும் காட்டிக் கொள்ளாமல் அடக்கிக் கொண்டான்.
“வாயாடி! வாயை அடக்கு! படிப்பு முடியாம ஏதாவது பேசினன்னு வச்சுக்கோ… கொண்டு போய் உங்க அம்மா வீட்டுல விட்டுட்டு வந்துடுவேன். அப்புறம் படிப்பு முடியுற வரை நீ அங்கே தான் இருந்தாகணும்…” என்று மிரட்டினான்.
“அம்மா வீடா இருந்தா என்ன? ஆத்துக்காரு வீடா இருந்தா என்ன? எல்லாம் ஒன்னு தான்! நோ ஒட்டிங், நோ கட்டிங், நோ கிஸ்ஸிங்…” என்று சலித்துக் கொண்டாள்.
“அடிப்பாவி! இப்படியெல்லாம் எங்கே பேச கத்துக்கிட்ட?”
“என் வாத்தி புருஷன் கூட இருந்தால் இன்னும் பேச கத்துக்கலாம். பேச மட்டும்!” என்றாள்.
“வர வர விவகாரமா பேச கத்துக்கிட்ட. இப்படியெல்லாம்…” என்று அவன் ஏதோ அறிவுரை சொல்ல ஆரம்பிக்க,
“அத்தான், வெயிட்! வெயிட்! எனக்கு ஒரு டவுட் இருக்கு. அதைக் கிளியர் பண்ணிட்டு உங்க அறுவையை ஆரம்பிங்க…” என்று அவன் பேச்சை நிறுத்தினாள்.
“என்ன டவுட்?” தன் பேச்சை நிறுத்தி விட்டாளே என்று விறைத்துக் கொண்டு கேட்டான்.
“வாயாடின்னு சொன்னீங்களே, அப்படினா என்ன? வாயில் அடிப்பதா? ஆமா… வாயில் அடிப்பதுனா எப்படி? ஐ மீன் லிப் டு லிப்?” என்று கேட்டுக் கண்ணாடியில் தெரிந்த அவன் முகம் பார்த்து கண்சிமிட்டி சிரித்தாள்.
“ராகா…” என்று டென்ஷனாகக் கத்தியவன், அடுத்து ஆற்றிய அறிவுரை மழையில் தொப்பல் தொப்பலாக நனைந்தே கல்லூரியில் இறங்கினாள் ராகவர்தினி.
அத்தனையும் கேட்டுவிட்டு, “நீங்க என் டவுட் கிளியர் செய்யவே இல்லை அத்தான். பரவாயில்லை. காலேஜ் விடும் போது கூப்பிட வந்துடுங்க. அப்போ என் டவுட் கிளியர் செய்துகிறேன். டாட்டா…!” என்று கூலாக டாட்டா காட்டி விட்டு போனாள் ராகவர்தினி.
‘அடிப்பாவி! இவ்வளவு நேரம் நான் பேசியதை எல்லாம் வேர்வையைத் துடைக்கிற மாதிரி துடைச்சிட்டு போய்ட்டாளே’ என்று புலம்பிக் கொண்டே பள்ளிக்குக் கிளம்பினான்.
அவனிடம் என்ன கலாட்டாவாகப் பேசினாலும் படிப்பில் குறை சொல்லும் படியாக வைத்துக் கொள்ள மாட்டாள்.
அதனால் அவனும் அவள் பேச்சுக்களைப் பெரிதாக எடுத்துக் கொண்டு கோபம் கொள்வது இல்லை.
ஆனாலும் அவனுக்கு இன்னும் ஆச்சரியம் தான்.
எப்படித் தன்னிடம் அவளால் இவ்வளவு இயல்பாக இருக்க முடிகிறது என்று.
தன்னால் மட்டும் ஏன் முடியவில்லை? என்று அவனுக்குள் கேட்டுக் கொண்டான்.
எவ்வளவு வாயடித்தாலும் அவள் தன் காதலை மட்டும் இன்னும் வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை.
அதனால் அவளின் இயல்பான ஒற்றுதல் அவனுக்கு ஆச்சரியத்தையே தந்தது.
அன்று கல்லூரி விடும் போதும் அவளை அழைக்க வந்தான்.
அவன் வரும் போது ஆதித்யனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள் ராகவர்தினி.
அவனைப் பார்த்ததும் அவன் அவளிடம் காதல் சொன்னதாகப் பொய் சொன்னது ஞாபகம் வர, பிரபஞ்சனின் முகம் இறுகியது.
“ஹாய் அத்தான்…” என்று அவனைப் பார்த்ததும் உற்சாகமாக வந்து வண்டியில் ஏறினாள் ராகவர்தினி.
“அன்னைக்கு ஆதித்யன் பத்தி பொய் சொன்னதாகச் சொன்னியே ராகா, ஏன்? காரணம் அப்புறம் சொல்றேன்னு சொன்ன… இப்ப எனக்குக் காரணம் தெரிந்தாகணும்…” என்றான்.
“அதைப் பத்தி சொல்ல இன்னும் நேரம் வரலை அத்தான்…” என்றவள் குரல் உள்ளே போனது.
“அந்த நேரம் எப்போ வரும்?”
“வரும் அத்தான், கூடிய சீக்கிரமே சொல்றேன்…”
“உன் ஒவ்வொரு பரிமாணமும் என்னை ஆச்சரியப்படித்திருக்கு ராகா. ஆனால் நீ ஆதித்யன் விஷயத்தில் பொய் சொன்னதை மட்டும் என்னால் ஏத்துக்க முடியலை…” என்றான் இறுக்கமாக.
“ஏன் அத்தான்?”
“என்ன ஏன்? என்னோட ராகா எதையும் யோசித்து சரியா செய்வாள்னு நினைச்சுட்டு இருக்கேன். ஆனால் இந்த விஷயத்தில்? ஒரு பொய்க்காரியா உன்னை நினைக்க எனக்குக் கஷ்டமா இருக்கு…” என்றான்.
அவனின் பதிலில் அவள் மனம் நெகிழ்ந்து போனது என்னவோ உண்மை!
“நான் உங்க ராகாவா அத்தான்?” குரல் நெகிழ கேட்டாள்.
அவள் கேட்டதும் தான் தன் வார்த்தையை உணர்ந்தான் பிரபஞ்சன்.
‘என்னோட ராகாவா இவள்?’ தனக்குள் கேட்டுக் கொண்டான்.
‘ஆம்! எனக்காக யோசித்து, என் மனம் வருந்தினால் அதைத் துடைத்து, என் கடமையை அவள் கடமையாக மாற்றி, எனக்கு ஒரு துன்பம் என்றால் துடித்து, என்னுடைய எல்லாமுமாக அல்லவா இருக்கிறாள். என்னுடையவள் தான் இவள்!’ என்று நினைக்கும் போதே அவனுள் நிறைந்து போனாள் ராகவர்தினி.