20 – மின்னல் பூவே

அத்தியாயம் – 20

திருமண நிகழ்வில் நடந்த கலவரம் அனைத்தும் அடங்கி, கல்யாண கலை, களை கட்ட துவங்கியிருந்தது.

திருமணம் நடக்குமா? நடக்காதா? என்ற கேள்வியுடன் காத்திருந்த உறவினர்கள் இப்போது பதில் கிடைத்து விட்ட திருப்தியுடன் மேடையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பட்டு வேஷ்டி, பட்டுச் சட்டை அணிந்து கழுத்தில் மாலையைச் சுமந்து மணமேடையில் அமர்ந்திருந்தான் முகில்வண்ணன்.

அவன் முகத்தில் திருமண மாப்பிள்ளைக்குறிய களை இல்லாமல் இருந்தாலும் அதை யாரும் அங்கே பொருட்படுத்தவில்லை.

திருமணம் நின்று பின் நடக்கவிருப்பதால் அவனிடம் கலகலப்பை யாரும் எதிர்பார்க்கவும் இல்லை.

அழுத அழுகை எல்லாம் அடங்கி வளர்மதியும், இலக்கியாவும் திருமண வேலைகளைப் பரபரப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இன்னும் உடல்நிலை சீரான ஓட்டத்திற்கு வராததால் சிறு சிறு வேலைகளை மட்டும் பார்த்த வண்ணம் நடமாடிக் கொண்டிருந்தார் ரகுநாதன்.

மகள் அபிரூபாவை தன் பெற்றவர்கள் வசம் ஒப்படைத்து அவர்களை வசதியாக இருக்கையில் அமர வைத்து விட்டு, அந்த வீட்டு மாப்பிள்ளையாக மாமனாருக்கு உதவி கொண்டிருந்தான் கார்த்திக்.

அவ்வப்போது மணமேடையில் அமர்ந்திருந்த மச்சினனின் சவுகரியத்தையும் கவனிக்க மறக்கவில்லை அவன்.

சற்று நேரத்தில் மணப்பெண்ணை அழைத்து வரச் சொல்ல, அவசரமாகச் செய்யப்பட்ட மணப்பெண் அலங்காரமாக இருந்தாலும் அதிலேயே தங்கப் பதுமையென ஜொலித்த உத்ராவின் கரம் பற்றி மேடைக்கு அழைத்து வந்தாள் இலக்கியா.

உத்ராவின் முகத்திலும் துளியும் உற்சாகமில்லை. ஆனாலும் எந்தச் சலனமும் இல்லாமல் அமைதியாக இருந்தது.

முகில்வண்ணன் முகத்தில் அந்த அமைதி கூட இருந்திருக்கவில்லை.

மகளை மணக்கோலத்தில் பார்த்த பூரிப்புடன் நின்றிருந்தார் அஜந்தா.

மணமேடையில் ஒரு கண்ணும், கல்யாண வேலையில் ஒரு கண்ணுமாகச் சுற்றிக் கொண்டிருந்தார் வீரபத்ரன்.

தம்பியின் வீட்டு திருமண வீட்டிற்கென வந்திருந்த அவர்கள் பக்க உறவினர்கள் இப்போது அவரின் வீட்டு விஷேசத்திற்கு வந்தவர்கள் என ஆகிவிடச் சிரத்தையுடன் அவர்களைக் கவனித்தார்.

மகள் ஓடிப் போன துக்கம் ஒரு புறமும், தங்கள் வீட்டு பெண்ணான உத்ராவின் திருமணம் நடைபெற போவதில் திருப்தியுமாக ஓரமாக ஒதுங்கி நின்றிருந்தனர் கிரிதரனும், விமலாவும்.

‘மாப்பிள்ளை வீட்டினருக்கு தங்களால் சங்கடம் வேண்டாம் நாங்கள் கிளம்புகிறோம்’ என்றவர்களை வீரபத்ரன் பேசி இருக்க வைத்திருந்தார்.

உத்ரா தன் அருகில் அமர்ந்ததும் “அப்போ என் கல்யாணத்தை நிறுத்திய காரணம் இது தான் இல்லையா?” என்று உதட்டை அதிகம் அசைக்காமல் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் முகில்வண்ணன்.

“ஹலோ, என்னைப் பொண்ணு கேட்டது உங்க வீட்டில் தானே தவிர, நானோ, என்னோட அப்பா, அம்மாவோ இல்லை. அதை முதலில் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு பேசுங்க…” என்று உத்ராவும் பதிலுக்குச் சீறினாள்.

“அது தான் அவங்ககிட்ட நல்ல பிள்ளை மாதிரி நடிச்சு மயக்கி வச்சுருக்கீயே. அது மட்டுமா? இப்போ இன்னும் ஒன்னு கூட எனக்குச் சந்தேகமா இருக்கு. ஒருவேளை அன்னைக்கு நகை திருட்டு நடந்தது உண்மையா இல்லையோ? நீ தான் பிளான் பண்ணி திருடவும் வச்சு நகையைக் காப்பாத்தியும் கொடுத்து எங்க வீட்டு ஆளுங்க கிட்ட நல்ல பேரு வாங்கிட்டயோ?” என்று சந்தேகமாகக் கேட்டான்.

தன்னைக் குற்றம் சாட்டியவனை மேடையில் அமர்ந்திருக்கிறோம் என்பதையும் பொருட்படுத்தாமல் தலையை நிமிர்த்தித் தீர்க்கமாகப் பார்த்தாள்.

தன் வழக்கமான அலட்சியப் புன்னகையைச் சிந்திவிட்டு மீண்டும் தலையைத் திருப்பி லேசாகத் தாழ்த்திக் கொண்டாள்.

“நான் கூட உங்களை என்னவோன்னு நினைச்சேன். ஆனா நீங்க இவ்வளவு ஷார்ப்பா இருப்பீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. சரியா கண்டுப்பிடிச்சுட்டீங்களே?

“ஆமா, எல்லாமே என்னோட பிளான் தான். என்னை வேண்டாம்னு சொன்னால் கேட்டுட்டு சும்மா போக நான் என்ன சொங்கியா? நான் உத்ரா!”

“எனக்கு ஒரு பொருள் வேண்டாம்னா அதை வேண்டாம்னு ஒதுக்கவும் தெரியும். வேணும்னு நினைச்சா அதை எப்படியாவது அடையவும் தெரியும். இதோ நான் நினைச்ச மாதிரியே உங்களை அடைஞ்சுட்டேன்ல?”

“நீங்க மாடியில் வைத்து என் மேல் சாட்டிய குற்றசாட்டு எல்லாமே சரிதான். எல்லாமே என் பிளான் மட்டும் தான். நான் தான் உங்க கல்யாணத்தை நிறுத்தினேன். எல்லாம் நான் உங்க மேல வச்ச காதலுக்காகத் தான்…”

“எல்லாம் பிளான் போட்டுப் பண்ணிட்டு, நான் எதுக்காக என்னை நல்லவள்னு காட்டிக்க இந்தக் கல்யாணத்தை நிறுத்தணும்? நம்ம கல்யாணம் நடக்கணும்னு எல்லாம் பண்ணிட்டுக் கல்யாணம் வேண்டாம்னு சொல்வேன்னு எப்படி எதிர்பார்த்தீங்க?” என்று நக்கலாகக் கேட்டாள்.

அவள் பேச பேச அவனின் முகம் திகுதிகுவென எரிந்தது போல் சிவந்து போனது.

அப்போ அவன் நினைத்தது எதுவுமே தவறில்லை. அவளைச் சரியாகத்தான் கணித்திருக்கிறான். எல்லாமே அவளின் திட்டம் தான். எப்படி எல்லாம் ஏமாந்திருக்கிறான்.

அவன் மட்டுமா? இப்போது அவனின் குடும்பமும் அல்லவா ஏமாந்து போனது. இவளை நல்லவள் என்று நினைத்து இப்போது திருமண மேடை வரை கொண்டு வந்து நிறுத்திவிட்டார்களே! என்று நினைத்தவனுக்கு அவனின் கோபம் பன்மடங்காகியிருந்தது.

என்ன ஆனாலும் பரவாயில்லை என்று இந்தக் கல்யாணத்தை நிறுத்தி விடுவோமா? என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவனின் கையில் தாலி கொடுக்கப்பட்டது.

தன்னிச்சையாக அதைக் கையில் வாங்கி விட்டுக் கட்டாமல் அமைதியாக இருக்க, “கட்டு முகில்…” என்று அவனின் பின்னால் இருந்து உந்தினாள் இலக்கியா.

தாலியைக் கையில் வைத்துக் கொண்டே நிமிர்ந்து தன் குடும்பத்தினரை பார்த்தான்.

அனைவரின் முகத்திலும் நிம்மதியும், ஆவலும் போட்டிப் போட்டுக் கொண்டு தெரிய, ஒரு பெருமூச்சை இழுத்து விட்டுக் கொண்டான்.

உத்ராவின் புறம் திரும்பியவன் தாலியை அவளின் கழுத்தில் கட்டினான்.

தனக்குத் தாலி கட்டியவனை நிமிர்ந்து அவன் முகம் பார்க்க உத்ரா முயல, தாலி கட்டியதுடன் கடமை முடிந்தது என்பது போல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான் முகில்வண்ணன்.

மணமேடையிலேயே முட்டிக் கொண்ட இருவரும், மண வாழ்க்கையிலும் முட்டிக் கொள்ளத் தம்பதிகளாக மணவாழ்வில் அடி எடுத்து வைத்தனர்.

அதன்பின் நடக்க வேண்டிய சடங்குகள் அனைத்தும் முறைப்படி நடக்க ஆரம்பித்தது.

சடங்குகளும் முடிந்து பெரியவர்கள் காலில் விழுந்து இருவரும் ஆசீர்வாதமும் வாங்கிக் கொண்டனர்.

“இந்தத் தாலி உன் கழுத்தில் ஏறணும்னு இருந்திருக்கு. அதான் அது களவு போகாம நீயே காப்பாத்திக் கொடுத்திருக்க…” என்றார் வளர்மதி.

அவரைப் பார்த்து உத்ரா மென்மையாகச் சிரிக்க, முகிலின் முகம் கடுகடுவென்று ஆனது.

அடுத்து உத்ராவின் பெற்றோரிடமும் ஆசிப் பெற்றனர்.

“நல்லா இருடா உத்ராமா…” என்று அவளின் தலையில் கைவைத்து ஆசிர்வதித்த வீரபத்ரன் முகிலின் புறம் திரும்பினார்.

“எங்க பொண்ணு தைரியசாலியா இருந்தாலும் அவள் மனசு ரொம்ப மென்மையானது மாப்பிள்ளை. அவளை நல்லபடியா பார்த்துக்கோங்க…” என்றார்.

அவருக்கு இன்னும் மகளைப் பற்றி அவனிடம் நல்லவிதமாகச் சொல்ல ஆசை தான். ஆனால் திருமணம் முடிந்த கையோடு சொல்வது சரிவராது என்று நினைத்து அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டார்.

அதைவிடத் தாங்களாகச் சொல்வதை விட இனி அனுதினமும் மகளின் அருகில் இருந்து அவளின் குணநலன்களை அவனாகப் புரிந்து கொள்வது தான் அவர்களின் வாழ்க்கைக்கு நல்லது என்றும் நினைத்தார்.

‘ஆமா, ரொம்பத்தான் மென்மை. அவரோட மகளைப் பத்தி எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினைச்சார் போல. என்னை விட வேற யாருக்கும் அவளோட இன்னொரு முகம் தெரிந்திருக்காது…’ என்று தனக்குள் முனங்கிக் கொண்டான் முகில்வண்ணன்.

பெரியவர்களிடம் ஆசி பெற்று முடிந்ததும், மணமேடையில் பெண்ணும், மாப்பிள்ளையும் ஜோடியாக நிற்க, மணமக்களை வாழ்த்த உறவினர்கள் மேடை ஏறினர்.

உறவினர்கள் வாழ்த்திக் கொண்டிருந்த நேரத்தில் தான் திருமணத்திற்கு வந்து சேர்ந்தாள் புவனா. அவளுடன் குருவும் வந்திருந்தான்.

இருவருக்கும் முகில் திருமண அழைப்பு விடுத்திருந்தான் என்பதால் இருவரும் வந்திருந்தனர்.

வந்தவர்கள் மேடையில் முகிலையும், உத்ராவையும் ஜோடியாகப் பார்த்து அதிர்ந்து போயினர்.

“முகிலுக்குப் பார்த்த பொண்ணு கமலினின்னு தானே பத்திரிகையில் பார்த்தேன். இப்ப என்ன உத்ரா பொண்ணா நிக்கிறா?” என்று புவனாவிடம் ஆச்சரியமாகக் கேட்டான் குரு.

“அதுதான் எனக்கும் புரியலை குரு. உத்ரா எப்படிப் கல்யாணப் பொண்ணா? என்னால நம்பவே முடியலை. ஆனாலும் எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு…” என்று உற்சாகமாகக் கூவினாள் புவனா.

தோழியின் காதலை பற்றி அறிந்தவள் ஆகிற்றே! உத்ரா விரும்பிய முகில்வண்ணனுடனேயே அவளின் திருமணம் முடிந்ததில் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அதற்குள் அருகில் இருந்தவர்களிடம் உத்ரா மணப்பெண் ஆன கதையை விசாரித்து அறிந்து கொண்ட குரு புவனாவிற்கும் தெரிவித்தான்.

“எது எப்படியோ, ஒரு கெட்டதிலேயும் நல்லது நடந்திருக்கு. இதுக்கு அந்த ஓடிப் போன கமலினிக்கு தான் நன்றி சொல்லணும்…” என்று சொன்னவளைக் குழப்பத்துடன் பார்த்தான் குரு.

“என்ன புவி, என்னென்னவோ சொல்லிட்டு இருக்குற?” என்று கேட்டான்.

“அந்த விஷயம் உங்களுக்குத் தெரியாதே? அது ஒரு பெரிய காதல் கதை. அதை அப்புறம் சொல்றேன். இப்போ வாங்க நாமளும் போய் வாழ்த்திட்டு வருவோம்…” என்று அவனையும் அழைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் மேடை ஏறினாள் புவனா.

“ஸ்வீட் சர்ப்ரைஸ் உத்ரா. என்னோட சந்தோஷத்தை சொல்ல வார்த்தையே இல்லை. நீ ரொம்ப நல்லா இருக்கணும் உத்ரா. ரொம்ப ரொம்ப நல்லா இருக்கணும்…” என்று உணர்ச்சி மிகுதியில் தோழியை அணைத்து வாழ்த்தினாள் புவனா.

தோழியின் மனப்பூர்வமான வாழ்த்து உத்ராவையும் நெகிழ வைக்க அவளின் அணைப்பில் மகிழ்ச்சியுடன் அடங்கினாள்.

அவர்கள் இருவரையும் வினோதமாகப் பார்த்த முகில், குருவை வரவேற்றான்.

“இப்போ தான் விஷயம் கேள்விப்பட்டேன் முகில். உத்ரா கூட உன் திருமணம் முடிந்ததில் ரொம்பச் சந்தோஷம் முகில்…” என்று அவனின் கைப்பற்றிக் குலுக்கி வாழ்த்துத் தெரிவித்தான் குரு.

அவனின் வாழ்த்தை சிறு புன்னகையுடன் ஏற்றுக் கொண்டான் முகில்.

‘உத்ராவை நான் திருமணம் முடித்துக் கொண்டதில் எல்லோருக்குமே சந்தோஷம். ஆனால் எனக்கு?’ என்று விரக்தியுடன் நினைத்துக் கொண்டான்.

“சாப்பிட போகலாமா முகில்? சாப்பிட்டு நாம வீட்டுக்கு கிளம்பணும்…” என்று அழைக்க வந்தாள் இலக்கியா.

“நீங்களும் சாப்பிட வாங்க…” என்று அவள் புவனாவையும், குருவையும் அழைத்தாள்.

“அண்ணி, இவள் புவனா. என்னோட ஃபிரண்ட்…” என்று புவனாவை இலக்கியாவிற்கு அறிமுகப்படுத்தினாள் உத்ரா.

“வாங்க புவனா…” என்று அவளை வரவேற்றவள், “உன் ஃபிரண்டுக்கு இப்போ விஷயம் சொல்லி வரச் சொன்னியா உத்ரா?” என்று விசாரித்தாள்.

“இல்லைங்க. என்னைக் கல்யாணத்துக்கு அழைத்தது முகில் தான். நான் அவருக்குக் கீழே தான் வேலை பார்க்கிறேன். நாங்க எல்லாம் ஒரே காலேஜில் படிச்சவங்க…” என்று குருவையும் சேர்த்து அறிமுகப்படுத்தினாள் புவனா.

“குரு என் கிளாஸ் மேட் கா. புவனா உத்ராவோட கிளாஸ் மேட். நான் தான் அவங்களுக்கு இன்விடேஷன் கொடுத்தேன்…” என்றான் முகில்.

“ஓ, அப்போ நீ மட்டும் தான் முகில் டீமா? உத்ரா வேற டீமா?” என்று புவனாவிடம் விசாரித்தாள்.

‘நாங்க இரண்டு பேருமே முகில் டீம் தானே. இவங்க என்ன இப்படிக் கேட்குறாங்க? அதுக்கும் இதுக்கு முன்னாடி பார்த்துக்கிட்டவங்க வேற. உத்ராவும், முகிலும் இன்னும் சொல்லலையோ?’ என்பது போலத் தோழியையும், முகிலையும் கேள்வியாகப் பார்த்தாள் புவனா.

அவர்கள் இருவருமே அவளைப் பார்க்காமல் ஆளுக்கு ஒரு திசையில் பார்த்துக் கொண்டிருந்தனர்.

‘அவர்களே சொல்லாத போது தான் சொல்லலாமா, வேண்டாமா?’ என்று புவனா யோசனையுடன் இருக்கும் போதே,

“அவங்க இரண்டு பேருமே முகில் டீம் தான். நான் மட்டும் தான் வேற டீம்…” என்று அவர்களுக்குள் நடந்து கொண்டிருக்கும் பூசல் பற்றி அறியாமல் சொல்லியிருந்தான் குரு.

“ஹேய் உத்ரா, நீயும் முகில் டீம்ல தான் வேலை பார்க்கிறாயா? சொல்லவே இல்லையே, ஏன்? முகில், நீ கூடச் சொல்லலையேடா?” என்று வியப்பாகக் கேட்டாள் இலக்கியா.

“இப்போ அதுவாக்கா முக்கியம்? காலையிலிருந்து நின்னு நின்னு கால் எல்லாம் கடுக்குது. பசி வயித்தை பிராண்டுது. முதலில் சாப்பிட போகலாம். வா… நீங்களும் வாங்க குரு, புவனா…” என்று அழைத்தபடியே மேடையை விட்டு கீழே இறங்க ஆரம்பித்தான்.

அவர்களை அழைத்தவன் அவனின் மனைவியை அழைக்க மறந்திருந்தான். மறந்திருந்தானா? இல்லை மறுத்திருந்தானா என்பது அவனுக்கே வெளிச்சம்.

“டேய் முகில், இனி நீ உத்ராவையும் உன் கூடவே அழைச்சுட்டுத் தான் போகணும். நில்லு அவளையும் கூட்டிட்டுப் போ…” என்று அதட்டிய இலக்கியா,

“வா உத்ரா…” என்றழைத்து தம்பியுடன் நடக்கச் சொன்னாள்.

இருவரும் ஒன்றாக நடந்தாலும் இருவருக்கும் இடையே இடைவெளி அதிகமிருக்க, இவர்களை இப்படியே விட்டால் சரிவராது என்று நினைத்த இலக்கியா, “முகில், உத்ரா நில்லுங்க…” என்று நிறுத்தினாள்.

“ம்ப்ச், என்னக்கா?” என்று சலித்துக் கொண்டான் முகில்.

“நீங்க இரண்டு பேரும் இப்போ புருஷன், பொண்டாட்டிடா. யாரோ போலப் போறீங்க. உன் பொண்டாட்டி கையைப் பிடிச்சு அழைச்சுட்டு போ…” என்ற அக்காவை கடுமையாக முறைத்தான்.

“இவள் ஒன்னும் நீங்க முறைப்படி எனக்குப் பார்த்து பேசி கல்யாணம் முடிச்சு வச்ச பொண்ணு இல்லை. திடீர்ன்னு எல்லாத்தையும் மாத்தி உள்ளே புகுந்தவளை ஏத்துக்க எனக்கு டைம் ஆகும்…” என்று இலக்கியாவிற்கு மட்டும் கேட்கும் வண்ணம் வார்த்தைகளைப் பற்களுக்கு இடையே கடித்துத் துப்பினான்.

அவனின் பேச்சில் ஒரு நொடி மலைத்து நின்ற இலக்கியா, அடுத்த நொடியே தலையை உலுக்கிக் கொண்டு தெளித்தாள்.

“ஆனா இப்பவும் இவள் நாங்க உனக்கு முறைப்படி பேசி முடிச்ச பொண்ணு தான்டா. நீ அவளை மெதுவாவே ஏத்துக்க. அதில் எல்லாம் நான் தலையிட மாட்டேன். ஆனா இப்போ இந்த நிமிஷம் அவள் கை பிடித்துத் தான் நீ அழைத்துக் கொண்டு போகணும்…” என்று பிடிவாதமாகச் சொன்னவள், அவன் மேலும் பேசி மறுக்கும் முன் உத்ராவின் கையைப் பிடித்து முகிலின் கைக்குள் திணித்தவள், “இப்போ போங்க…” என்றாள்.

“அக்கா…” என்று அவன் ஏதோ சொல்ல வர, அவன் அழைத்தது காதில் விழாதது போல, “நான் போய் உங்க இரண்டு பேருக்கும் இலை போடுறேன்…” என்று முன்னால் நடக்க ஆரம்பித்தாள்.

“ச்சே, வா…” என்று அக்காவின் மீதிருந்த கோபத்தை எல்லாம் உத்ராவின் மீது காட்டியவன், அவளின் கையை வெக்கென்று பிடித்து இழுத்து நடக்க ஆரம்பித்தான்.

அவன் அப்படி இழுத்தது வலியை கொடுத்தாலும் உத்ரா மறுக்காமல் அவனுடன் சென்றாள்.

அக்காவும், தம்பியும் பேசிக் கொண்டது அவளின் காதிலும் நன்றாக விழுந்தது.

முகில்வண்ணனின் கோபம் அவளுக்கு நன்கு புரிந்ததால் அதை அவள் பெரிது படுத்தவும் இல்லை. அவன் இப்படிப் பேசியிருக்கவில்லை என்றால் தான் அதிசயம் என்பதே அவளின் எண்ணமாக இருந்தது.

இப்போதும் கூட அவனின் இழுப்பிற்குச் சென்றது அவளின் பெற்றவர்களுக்காகத் தான்.

தூரத்தில் இருந்து இவர்கள் இருவரும் தள்ளி தள்ளி நடப்பதை பார்த்து ‘இவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறதோ?’ என்று வருத்தத்துடன் பார்ப்பதை கண்டவள் அவர்களுக்கு இப்போது இந்தச் சிறு சந்தோஷமாவது கொடுப்போம் என்று எண்ணி அவனின் இழுப்பிற்குச் சென்றாள்.

“என்ன புவி, முகிலுக்கு உத்ராவை கல்யாணம் பண்ணிக்கிட்டது பிடிக்கலையோ? வேண்டா வெறுப்பா அழைச்சுட்டுப் போறான்?” என்று அவர்களின் பின் வந்த குரு புவனாவிடம் கேட்டான்.

“ம்ம், பொண்ணு மாறியிருக்குல குரு. அதை ஏற்றுக் கொள்ள அவருக்குக் கொஞ்சம் டைம் ஆகத்தானே செய்யும்…” என்றாள் புவனா.

“அதுவும் சரிதான். ஆனா உத்ராவை அவன் சீக்கிரம் ஏத்துக்கிட்டா பரவாயில்லை…”

“ம்ம், முகில் ஏத்துப்பார். ஏத்துக்கலைனாலும் ஏத்துக்க வைக்க உத்ராவால் முடியும்…” என்றாள்

“உத்ரா நல்ல பொண்ணு. செய்வாள்…” என்று குரு சொல்ல,

அவனைக் கேலியாகப் பார்த்தாள் புவனா.

“ஓய், என்ன அப்படிப் பார்க்கிற?”

“உத்ராவை பார்க்கும் போதெல்லாம் முறைச்சுக்கிட்டு திரிந்த குரு எங்க போனார்னு பார்க்கிறேன்…” என்றாள்.

“ஹா, அது காலேஜ் டைம்ல ஏதோ ஒரு வீம்பு. அதுக்காக இப்பவும் அப்படியேவா இருக்க முடியும்?” என்று கேட்டான்.

“அதானே அது குருசாமி, இப்போ தான் நீங்க என் சாமியாச்சே. இப்படித்தான் இருக்கணும்…” என்றாள்.

“பின்ன, என்னைப் பார்த்தாலே ஓடி ஒளிந்து கொள்ளும் நீயே இப்படி மாறி இருக்கும் போது நான் மாற மாட்டேனா என்ன?” என்று கேட்டான்.

“மாறித்தான் ஆகணும். மாறாமல் விட்டுவிடுவேனா என்ன?” என்று புவனா பதிலுக்குக் கேட்க, காதலர்களின் அர்த்தமான பேச்சுக்களும், அர்த்தமில்லா பேச்சுக்களும் தொடர்ந்தன.

“நீங்களும் பொண்ணு மாப்பிள்ளை கூட உட்காருங்க…” என்று இலக்கியா இவர்கள் இருவரையும் அமர வைத்தாள்.

முகில் அருகில் குரு அமர, உத்ராவின் அருகே புவனா அமர்ந்தாள்.

உணவு பரிமாற ஆரம்பிக்கவும், புகைப்படம், வீடியோ எடுக்கப் புகைப்படக்காரர் அங்கே வந்தார்.

“சார், பொண்ணுக்கு ஊட்டி விடுங்க. ஒரு போட்டோ எடுக்கணும்…” என்று புகைப்படக்காரர் சொல்ல,

“இல்லைங்க, அதெல்லாம் வேண்டாம்…” என்று மறுத்தான் முகில்வண்ணன்.

“சார், கல்யாணத்தில் நடந்த கலாட்டா எல்லாம் எனக்கும் தெரியும் தான். பொண்ணு உங்களுக்குப் புசுது தான். ஆனால் என்ன இருந்தாலும் இப்ப அவங்க உங்க வொய்ப் சார். இப்போ வேணும்னா அவங்க உங்களுக்குப் புதுசுன்னு நீங்க தயங்கலாம்.

ஆனா பின்னால் நீங்க மனமொத்து வாழும் போது உங்க கல்யாண ஆல்பம் பார்த்தால் ஒரு வித சந்தோஷம் தான் வரணுமே தவிரச் சங்கடம் வரக்கூடாது. இதெல்லாம் என்னைக்கும் மறக்க முடியாத நிகழ்வில் இடம்பெறும் சார். அதனால் தயங்காம ஊட்டுங்க…” என்றார்.

‘ம்ப்ச், இவரோட அறுவையெல்லாம் கேட்க வேண்டியதா இருக்கு. மாட்டேன்னு சொன்னால் இன்னும் இரண்டு பக்கத்துக்கு லெக்ட்சர் கொடுப்பார் போல. நாங்க சந்தோஷமா வாழ்வோம்னு இவர் கண்டாரா என்ன?’ என்று தனக்குள் முனங்கிக் கொண்டான்.

“ஊட்டு முகில். உன் பொண்டாட்டிக்கு கொடுக்க என்ன தயக்கம்?” என்று அங்கிருந்த உறவினர்களும் சொல்ல,

இனியும் யார் அறிவுரையும் கேட்க விருப்பமில்லாமல் கடனே என்று தன் இலையில் இருந்த இட்லியைப் பிட்டு உத்ராவின் வாயில் வைத்தான்.

அவளும் மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.

“நீங்களும் ஊட்டுங்க மேடம்…” என்று புகைப்படக்காரர் இப்போது உத்ராவிடம் சொல்ல,

அவள் தன் இலையில் இருந்து கேசரியை எடுத்து அவனுக்கு ஊட்டினாள்.

‘நீ எனக்கு என்ன தந்தாலும், நான் உனக்கு இனிப்பை மட்டுமே தருவேன்’ என்று சொல்லாமல் சொல்வது போல் உத்ரா உணர்த்திய அர்த்தம் புரியாமல் வேண்டா வெறுப்பாக அவள் ஊட்டிய இனிப்பை விழுங்கினான் முகில்வண்ணன்.