20 – ஈடில்லா எனதுயிரே

அத்தியாயம் – 20

“ராகா… ராகா…” என்ற அழைப்பு கேட்ட பிறகும் கட்டிலில் அப்படியே அமர்ந்திருந்தாள் ராகவர்தினி.

“எத்தனை தடவை கூப்பிடுறேன். பதில் சொல்லாம ஏன் இப்படி உட்கார்ந்திருக்க?” என்று கேட்டபடி அறைக்குள் வந்தான் பிரபஞ்சன்.

“என்ன அத்தான்? சொல்லுங்க…” அமைதியாகக் கேட்டாள்.

“உனக்கு என்னாச்சு? ஏன் இவ்வளவு அமைதியா இருக்க?”

“நான் எப்பவும் போல் தான் இருக்கேன் அத்தான்…”

“பார்த்தால் அப்படித் தெரியலையே?” என்றான்.

அப்போதும் அவள் அமைதியே உருவாக அமர்ந்திருந்தாள்.

“என்ன ராகா இது? மண்டபத்துக்குக் கிளம்புவதற்கு நேரமாச்சுன்னு அத்தை அங்கே அவசரப்படுத்திட்டு இருக்காங்க. நீ என்னென்னா இப்பத்தான் மௌனராகம் படம் பார்த்துட்டு வந்தது போல உட்கார்ந்திருக்க…” என்றான்.

“மண்டபத்துக்குக் கிளம்பறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு விஷயம் தெரிந்தாகணும் அத்தான்…”

“என்ன விஷயம்?” என்று கேட்டவன் எதிரே சென்று நின்று தன் வலது கையை அவனின் முன் நீட்டினாள்.

“என்ன ராகா?” புரியாமல் கேட்டான்.

“என் கையைப் பிடிங்க அத்தான்…” என்றாள்.

“ஏன்?”

“பிடிங்க அத்தான்…” என்று அவள் மீண்டும் சொன்ன பிறகும் அவளின் கையைப் பிடிக்கத் தயங்கினான்.

“நான் உங்க மனைவி தானே? அப்புறம் என்ன தயக்கம் அத்தான்? இல்லை தாலி கட்டினாலும் நான் உங்க மனைவி இல்லையா?”

“என்ன பேச்சு இது ராகா?”

“எனக்குத் தெரியும் அத்தான். நான் தொட்டுப் பேசினால் கூட நீங்க என் கையை விலக்கிவிட்டு போவீங்க. அது நான் உங்க மாமா மகளா இருந்தப்ப சரி. ஆனால் இப்பவும் அது சரியா அத்தான்?” என்று கேட்டவள் குரலில் இருந்தது அப்பட்டமான வலி மட்டுமே!

அதை உணர்ந்தவன், “ராகா?” என்று கேள்வியாக அழைத்தான்.

“நானே இதை வாயை விட்டு கேட்க கூடாதுன்னு தான் நினைத்தேன் அத்தான். ஆனா நான் கேட்காம நீங்க எனக்குக் கொடுக்கும் வலியை நீங்களாக உணரவே மாட்டிங்கன்னு எனக்குப் புரிந்து போய்விட்டது. அதான் கேட்கிறேன். சொல்லுங்க அத்தான், நான் உங்க மனைவி தானே?” என்று மீண்டும் கேட்டாள்.

“என்ன ராகா, என்னென்னவோ சொல்ற? எதுக்கு இவ்வளவு பீல் பண்ற? நான் எதுவும் உன்னைக் காயப்படுத்திட்டேனா?” என்று கேட்டான்.

இன்னும் அவள் சொல்ல வருவது அவனுக்குப் புரியவே இல்லை.

“கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க அத்தான்…”

“மனைவி தான்!” என்றான் அழுத்தம் திருத்தமாக.

“அதை வெறும் வாய் வார்த்தையோடு நிறுத்திவிடாமல் உங்க மனதில் பதிய வச்சுக்கோங்க அத்தான்…” என்றவள் கண்கள் லேசாகக் கலங்கி இருந்தன.

“ராகா, என்ன இது?” என்று அவளின் கண்ணீரை தன் விரல் கொண்டு மென்மையாகத் துடைத்து விட்டவன், அவள் இன்னும் நீட்டிக் கொண்டிருந்த கையைப் பற்றிக் கொண்டான்.

“நான் என்னையே அறியாமல் உன்னை ஏதோ காயப்படுத்திட்டேன்னு புரியுது. என்னன்னு சொல்லு. இனி அந்தத் தவறு செய்ய மாட்டேன்…” என்றான்.

அவன் தன் கையைப் பிடித்ததும், தான் பட்ட காயம் எல்லாம் மறந்து போனது போல் இருந்தது அவளுக்கு.

கூடவே சற்று நேரத்திற்கு முன் அவனால் பட்ட காயமும் ஞாபகத்தில் வந்தது.

இன்று அவர்களின் திருமண வரவேற்பு இருந்தது.

அதற்குக் கிளம்புவதற்காகத் தனக்கென எடுத்த ஆடையை அலமாரியில் இருந்து எடுத்துக் கட்டிலில் வைத்துக் கொண்டிருந்தான் பிரபஞ்சன்.

அப்போது அறைக்குள் வந்த ராகவர்தினி, “ட்ரெஸ் எடுத்து வச்சுட்டு இருக்கீங்களா அத்தான்? நான் எடுத்துச் சூட்கேஸில் வைக்கிறேன். நீங்க இந்த ஜூஸை குடிங்க…” என்று அவனுக்காகக் கொண்டு வந்த பழச்சாறை அவனிடம் நீட்டினாள்.

“நான் கீழே வந்து குடிச்சிருப்பேன் தானே?” என்று கேட்டுக் கொண்டே வாங்கிக் கொண்டான்.

“அம்மா தான் நீ மேலே தானே போற, கொண்டு போன்னு கொடுத்து விட்டாங்க…” என்றாள்.

அவன் பழச்சாறை குடிக்கும் போது ஒரு துளி சாறு தெரியாமல் அவனின் சட்டையில் பட்டுவிட, “பார்த்து அத்தான்…” என்று வேகமாகத் தன் கையைக் கொண்டு மார்பில் சிந்தியிருந்த பழச்சாறை துடைக்கப் போனாள்.

ஆனால் அவனின் வழக்கம் போல அவளைத் தொடவிடாமல் சட்டென்று பின்னால் நகர, முகத்தில் அடித்தது உணர்ந்தாள் ராகவர்தினி.

எப்போதும் அவன் அப்படி நகருவது தான் என்றாலும், இப்போதும் அப்படிச் செய்தது அவளை மிகவும் பாதித்தது.

அதை அவனிடம் சொன்னவள், “ஒவ்வொரு முறையும் நீங்க இப்படித்தான் செய்றீங்க அத்தான். முன்னாடி செய்தால் அதில் ஒரு நியாயம் இருக்கு. வயசு பொண்ணைத் தொடக்கூடாது என்ற குறிக்கோளில் தள்ளி போய் இருக்கீங்க.

ஆனா இப்பவும் நீங்க இதே மாதிரி பலமுறை செய்து இருக்கீங்க. இத்தனை நாட்களும் பொறுத்துப் போயிட்டேன். ஆனால் இன்னைக்கு முடியல அத்தான். நான் எந்தத் தப்பும் செய்யாமலேயே நீங்க எனக்குத் தண்டனை கொடுப்பது போல் இருக்கு…” என்று வேதனையுடன் சொன்னவளின் கையை அழுத்திப் பிடித்தான் பிரபஞ்சன்.

“ஸாரி ராகா, நான் வேணும்னே செய்யலை. பழக்கத்தோஷத்தில் செய்திருப்பேன். அது உன்னைக் காயப்படுத்தியிருந்தால் மன்னித்துவிடு…” என்றான்.

“நீங்க மன்னிப்பு கேட்கணும்னு சொல்லலை அத்தான். உங்க செயல் என்னைக் காயப்படுத்துன்னு உங்களுக்குப் புரிய வைக்க நினைச்சேன். புரிந்து கொண்டாலே போதும்…” என்றாள்.

“புரியுது ராகா. இனி இப்படி நடக்காது. உனக்குள்ளேயே நினைச்சுக் கஷ்டப்படாமல் சொல்லிட்டயே. இல்லனா திரும்பத்திரும்ப நான் அதே தப்பை பண்ணிருப்பேன்…” என்றான்.

“எல்லா விஷயமும் எல்லாருக்கும் புரிந்து விடாது அத்தான். நான் மனசுல நினைச்சிக்கிட்டு இருக்குறதை நீங்களாகப் புரிந்து நடந்துக்கணும்னு நான் எதிர்பார்ப்பது தப்பு. அப்படியே எதிர்பார்த்தாலும் ஏமாற்றம் தான் கிடைக்கும். அந்த ஏமாற்றத்தை அடைவதற்குப் பதில் தெளிவாகப் பேசி விடுவதே நல்லது…” என்றாள்.

“நீ விளையாட்டு பிள்ளைன்னு தான் நினைச்சேன் ராகா. ஆனா உன்கிட்ட ரொம்ப மெச்சூர்ட் பார்க்கிறேன். அம்மா இறந்த போது எல்லாத்தையும் கவனிச்சு பார்த்துக்கிட்ட.

அம்மாவை இழந்துட்டேன்னு நான் குற்றவுணர்வில் தவிச்சப்போ அவ்வளவு ஆதரவாக இருந்து ஆறுதல் சொன்ன. அந்தக் குற்றவுணர்விலேயே நான் மூழ்கி போகாமல் கொஞ்சமாவது வெளியே வந்ததற்குக் காரணம் நீ தான்…” என்றான்.

“அடடா! என்னோட அத்தான் கிட்ட இருந்து பாராட்டு! அப்படியே வானத்தில் பறக்கிறேன் போங்க. உங்க சந்தோஷம் தான் என் சந்தோஷம் அத்தான்!” என்றவள் அவன் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு வெளியே சென்றாள்.

எப்போதும் தன் கன்னத்தைத் தட்டி விட்டாளே என்று பதறுபவன், இப்போது சென்றவளையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டு நின்றான்.

‘உங்க சந்தோஷம் தான் என் சந்தோஷம் அத்தான்!’ என்ற அவளின் வார்த்தை அவனை ஏதோ செய்தது.

மாலை ஆறு மணிக்கு அவர்களின் வரவேற்பு விழா ஆரம்பமானது.

நட்புகள், உறவினர்கள் வர ஆரம்பித்ததுமே அந்தச் சூழ்நிலை நின்று போன அவனின் திருமணத்தை ஞாபகப்படுத்த ஆரம்பித்தது.

கூடவே அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் எல்லாம் ஞாபகத்தில் வர, அவனின் முகம் இறுக ஆரம்பித்தது.

அவனின் மனநிலையை அருகில் நின்றிருந்தவளும் உணரவே செய்தாள்.

அவளுக்கும் அன்றைய நாள் வலி நிறைந்தது அல்லவா?

அவனுடன் இன்னொரு பெண்ணை ஜோடியாகப் பார்த்து உள்ளுக்குள்ளேயே உடைந்து தவித்தல்லவா போயிருந்தாள்.

ஆனால் அதற்கு நேர்மாறாக இப்போது அவன் அவளின் கணவன். இன்றைய நாள் அவர்களுக்கான நாள். தான் மட்டுமில்லாமல் அவனையும் இன்று மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும். வேறு நினைவே அவனுக்கு வர விடக்கூடாது என்ற முடிவுக்கு வந்தாள்.

“அத்தான்…” என்று அருகில் நின்றிருந்தவன் கையை யாரும் அறியாமல் சுரண்டினாள்.

“என்ன ராகா?”

“இன்னைக்கு நம்ம ரிசப்ஷன் தானே?”

“ஆமாம்…”

“அதைச் சிறப்பிக்க ஒரு பாட்டு பாடுங்களேன்…”

“பாட்டா? என்ன விளையாடுறயா? எனக்குப் பாடத் தெரியாது…”

“வாத்திக்குப் பாடம் தான் எடுக்கத் தெரியுமோ? பாட வராதோ?” கேலியாகக் கேட்டாள்.

அவன் முறைக்க, அதைக் கண்டுகொள்ளாமல் அங்கே பாட்டுப் போடுபவர்களை அருகில் அழைத்து மைக் கேட்டாள்.

“ராகா, எனக்குப் பாட வராது. என்ன பண்ற நீ? நான் பாட மாட்டேன்…”

தன்னை வம்பில் மாட்டி விடுகிறாளே என்று பதறினான்.

“நீங்க பாடாட்டி போங்க. நான் பாடப் போறேன்…”

“நீயா? உனக்குப் பாடத் தெரியுமா? நீ டான்ஸ் தானே கத்துக்கிட்ட?”

“இன்னைக்கு டான்ஸும் உண்டு. அது அப்புறம். இப்ப பாட்டு தான். நான் யார் தெரியுமா? பாத்ரூம் சிங்கர்…” பெருமையுடன் சொன்னவளை நக்கலாகப் பார்த்து வைத்தான்.

“மேடம், இது பாத்ரூம் இல்லை…” அவளுக்கு ஞாபகப்படுத்தினான்.

“பாட்டு பாட பாத்ரூமில் தான் இருக்கணும்னு அவசியம் இல்ல அத்தான். இருக்குற இடத்தையே பாத்ரூமா கற்பனை பண்ணிக்கலாம்…” என்றவளை ‘அட கிரகமே!’ என்பது போல் பார்த்தான்.

அவள் எங்கே அவன் பார்வையைக் கண்டாள்?

கண்களை மூடி பாடல் பாட தயாரானாள்.

‘மேடையைப் பாத்ரூமா கற்பனை பண்ணிக்கிறாளோ?’ என்று தான் அவளை வினோதமாகப் பார்த்து வைத்தான்.

ஆனால் அவள் பாட ஆரம்பித்ததும் அவனின் வினோதப் பார்வை வியப்பாக மாறியது.

கண்ண காட்டு போதும்…

நிழலாகக் கூட வாரேன்…

என்ன வேணும் கேளு….

குறையாம நானும் தாரேன்….

நச்சுனு காதல

கொட்டுற ஆம்பள

ஒட்டுறியே உசுர

நீ.. நீ…

நிச்சயமாகல

சம்மந்தம் போடல

அப்பவுமே உறவு

நீ… நீ…

அன்புல வித விதைச்சு

என்ன நீ பறிச்சாயே…..யே…

என அவனின் கண்களைப் பார்த்துக் கொண்டே பாட ஆரம்பித்தாள் ராகவர்தினி.

வெறும் பாத்ரூம் சிங்கர் என்று ஒதுக்கி தள்ள முடியாதவாறு அவள் லயித்துக் காதலுடன் பாட, அவனிடமும் காதல் வந்து விடும் போல் இருந்தது.

உன்ன என்

உசுருக்குள்ள வைக்கணும்

அட காத்து…

என்று பாடலை முடிக்கும் போது அவனின் கையைப் பிடித்துத் தன் கன்னத்தில் அழுத்தி வைத்துக் கொண்டாள்.

உறைந்து போனான் பிரபஞ்சன்.

ஏனோ அவள் அவனுக்காகக் காரணத்தோடு அந்தப் பாடலை பாடியது போல் இருந்தது.

அந்தப் பாடல் வரிகளும் கூட அவனிடம் ஏதோ சேதி சொல்ல முயன்றது.

விருந்தினர்கள் கை தட்டிய ஒலியில் தான் இருவரும் நனவுலகம் வந்தனர்.

அவளாக விடும் வரை அவள் கன்னத்தில் இருந்த அவன் கையை விடுவித்துக் கொள்ளவில்லை என்பதே அவளைப் பரவசப்படுத்தப் போதுமானதாக இருந்தது.

அவர்களுக்கு அவசர திருமணம் முடித்து வைத்து விட்டோமே, எப்படி வாழப் போகிறார்களோ? என்று உள்ளுக்குள் தவித்துக் கொண்டிருந்த, சுபேசன், மாதவன், மீராவிற்கு மனம் நிறைந்து போனது.

“பாத்ரூம் சிங்கர்னு சொன்ன. இவ்வளவு நல்லா படுற?” என்று கேட்டான்.

‘உங்க மேல உள்ள காதல் தான் என்னை நல்லா பாட வைத்ததுன்னு சொன்னா நம்புவீங்களா அத்தான்?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

“என்ன ராகா பதிலை காணோம்?”

“உங்களுக்கான பதிலை என் மனசுக்குள் சொல்லிக்கிட்டேன் அத்தான்…” என்று சொல்லி கண் சிமிட்டி சிரித்தாள்.

“மனசுக்குள்ள சொல்லிக்கிட்டயா?” அவன் முகம் கோணலாக மாறியது.

“ஹாஹாஹா…! சில நேரம் ரகசியம் நல்லது அத்தான்!” என்றாள் குறும்பாக.

“அது சரி, நடுவில் சில பாடல் வரிகளை முழுங்கினயே… என்ன அது?”

“அது என்ன வரிகள்னு தெரியுமா அத்தான்?”

“இல்ல, தெரியாது. ஆனால் நீ வரிகளைக் கட் செய்ததை உணர முடிந்தது…”

“அந்த வரிகளை என்னால் மேடையில் பாட முடியலை அத்தான். வீட்டுக்குப் போனதும் உங்களுக்கு மட்டும் பாடிக் காட்டுறேன்…” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மேடைக்கு உறவினர்கள் வர, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தனர்.

அனைவருடனும் புகைப்படம் எடுத்து முடிய, “இப்ப டான்ஸ் ஆடலாமா அத்தான்?” என்று கேட்டாள்.

“நோ, நான் வரலை…” வேகமாக மறுப்புத் தெரிவித்தான்.

“அதெல்லாம் முடியாது. இன்னைக்கு நாம டான்ஸ் ஆடியே ஆகணும். என் செல்ல அத்தான் இல்ல… எனக்கு ஆசையா இருக்கு. வாங்க ஆடலாம்…” கொஞ்சலாக அழைத்தாள்.

“நோ ராகா… எனக்கு வராது…”

“அதெல்லாம் வரும். இன்னைக்கு நம்ம ஸ்பெஷல் டே அத்தான். அதை நாம கொண்டாடியே ஆகணும்…”

“அதுதான் பாட்டு பாடி கொண்டாடினியே. பாட்டுக்கே ஒருத்தர் விடாமல் உன்னைப் பாராட்டிட்டு போனாங்க. இதில் நம்ம மேரேஜ் லவ் மேரேஜான்னு வேற சிலர் கேட்டுட்டு போனாங்க…” என்றான்.

‘நம்ம மேரேஜில் லவ்வும் இருக்கு அத்தான்’ இப்போதும் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

“என்ன இப்பவும் மனதிற்குள் ரகசியமா? அப்படி என்ன ரகசியம் உனக்குள்?” என்று கேட்டான்.

“ரகசியத்தைக் கேட்க கூடாது வாத்தியாரே! அப்படியே பேச்சை மாத்த பார்க்காதீங்க. வாங்க, ஆடலாம்…”

அவனை மறுக்க விடாமல் இழுத்தாள்.

“பிரபாவை ஏன்டி அந்தப் பாடு படுத்துற? வேண்டாம்னா விடேன்…” என்றார் மீரா.

அன்னையின் அருகில் சென்றவள், “இன்னைக்கு எங்க நாளாக மட்டும் தான் அத்தான் மனதில் பதியணும் மா” என்று அவர் காதில் ரகசியமாகச் சொல்லி விட்டு அன்னையை அர்த்தத்துடன் பார்த்தாள்.

மீராவிற்குப் புரிந்து போனது.

அதற்கு மேல் அவள் போக்கில் விட்டுவிட்டார் மீரா.

“அத்தை எனக்குச் சப்போர்ட் செய்தாங்க. அவங்களை என்ன சொல்லி ஆப் செய்த?”

“ரகசியம் அத்தான்!” என்று சொல்லி கண் சிமிட்டி சிரித்தாள்.

ஜோடியாக ஆடுவதற்கு ஏற்ப ஒரு பாடலை போட சொன்னவள், அவன் கையை இழுத்து ஆட ஆரம்பித்தாள்.

அவன் அசையாமல் நிற்க, அவனின் இடுப்பில் கை வைத்து தனக்கு ஏற்றவாறு அவனை அசைய வைத்தாள்.

“ஏய் ராகா… என்ன பண்ற?” என்று துள்ளி குதித்து விலகப் போனான்.

“அத்தான் இப்ப நீங்க விலகினா நான் உங்களைக் கட்டிப் பிடிச்சுட்டே டான்ஸ் ஆடுவேன். உங்களுக்கு எப்படி வசதி?” புருவம் உயர்த்திக் கேட்டாள்.

“அடிப்பாவி!” என்று அவன் அதிர,

“வா வாத்தியாரே என்னான்ட

நீ வராங்காட்டி நான் விட மாட்டேன்”

என்று பாடிக் கொண்டே அவனை விடாமல் அசைந்து கொண்டே இருந்தாள்.

அவளின் கலாட்டாவில் உறவினர்கள் கை தட்டி ஆர்ப்பரித்து உற்சாகப்படுத்தினர்.

“ஷ்ஷ்! ஷப்பா! முடியலை ராகா. இதோட என்னை விட்டுடேன்…” என்று அந்தப் பாடல் முடிந்ததும் கெஞ்சலாகக் கேட்டான்.

“என்ன அத்தான் இதுக்கே முடியலைன்னு சொல்லிட்டீங்க? இன்னும் எவ்வளவு இருக்கு…” என்றாள்.

“அத்தை… உங்க பொண்ணுகிட்ட இருந்து என்னைக் காப்பாத்துங்க…” என்று மீராவிடம் ஆதரவு கரம் நீட்டினான்.

“அதெல்லாம் அவங்களை நான் ஏற்கனவே ஆப் செய்துட்டேன். அடுத்தப் பாட்டு என்ன தெரியுமா அத்தான்?” என்று அவனை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கண் சிமிட்டி சிரித்தாள்.

“உன் பார்வையே சரியில்லையே என்ன பாட்டு?”

வா வா வாத்தியாரே வா

வஞ்சிக்கொடி

உன்கொஞ்சும் கிளி

உன் இஷ்டபடி…

“ஏய், போதும்! போதும்! நிறுத்து!” என்று அலறினான்.

“என்ன அத்தான், பாட்டு எப்படி?” நக்கலாகக் கேட்டாள்.

“உதை படுவ!” என்று விரல் நீட்டி மிரட்டினான்.

அந்த விரலை அப்படியே பிடித்துக் கொண்டு, “ஆட்டம் போட்டு பசிக்குது. வாங்க சாப்பிட போவோம்…” என்று சிரித்துக் கொண்டே டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றாள்.

அவளின் கலாட்டாவில் இவ்வளவு நேரம் முன் நடந்த சில நிகழ்வுகள் எல்லாம் அவனுக்கு மறந்து தான் போயிருந்தது.

இப்போது டைனிங் ஹாலை பார்த்ததும் அவன் உடல் விறைத்தது.

பற்றியிருந்த அவன் கைகளின் வழியே அதை உணர்ந்தவளுக்கு வேதனை நெஞ்சை அடைப்பது போல் இருந்தது.

ஆனாலும் தான் உடைந்தால் அவனை உடையாமல் காக்க முடியாது என்று நினைத்தவள், தன் வேதனையைத் தனக்குள் விழுங்கிக் கொண்டாள்.

டைனிங் ஹாலுக்குள் நுழைந்த போது, “அத்தான், எனக்கு ஒரு ஹெல்ப்…” என்று அவனை நெருங்கி மெல்லிய குரலில் சொன்னாள்.

அவளின் அந்தக் குரலில் தன் கவனம் கலைந்தவன், “என்ன ராகா?” என்று கேட்டான்.

“சாப்பிடும் போது சொல்றேன் அத்தான்…” என்றாள்.

சாப்பிட ஆரம்பித்த பிறகும் அவள் ஒன்றும் சொல்லாமல் இருக்க, “ஏதோ ஹெல்ப் கேட்ட ராகா?” என்று கேட்டான்.

“சொல்றேன் அத்தான், அதுக்கு முன்னாடி…” என்றவள் அவன் எதிர்பாராத நேரம் ஒரு கையால் அவன் கன்னத்தைப் பிடித்து அழுத்தி வாயை திறக்க வைத்து ஒரு முழு லட்டுவை அவனின் வாயில் திணித்தாள்.

முழு லட்டுவை உள்ளேயும் தள்ள முடியாமல் வெளியேயும் துப்ப முடியாமல் விழிகளை விரித்துத் திணறிப் போனான்.

“இதைச் சாப்பிடுவது தான் ஹெல்ப் அத்தான். ம்ம்ம்… ம்ம்ம்… சாப்பிடுங்க…” என்று திணறி கொண்டிருந்தவனை உற்சாகப்படுத்தினாள்.

பாதியை கடித்து, பாதியை கையில் எடுத்து சமாளித்தவன், கையில் இருந்த மீதியை அவள் செய்தது போலவே அவளின் வாயிற்குள் அடைத்தான் பிரபஞ்சன்.

அவளின் வாயை அந்த அரை லட்டுவே அடைத்துக் கொண்டது.

“ஹக்! ஹான்! இப்படியா அத்தான் செய்வீங்க?” என்று கஷ்டப்பட்டு விழுங்கி விட்டு திணறிய படி சிணுங்கினாள்.

“வாயை திறந்தன்னு வை அடுத்து முழு லட்டை தான் திணிப்பேன்…” என்று மிரட்டினான்.

“காபி கேட்… காபி கேட்… நான் செய்ததே செய்யக் கூடாது. நீங்களே ஏதாவது யோசிச்சு செய்ங்க…” என்றாள் கேலியாக.

“உங்களை நாங்க ஓட்டலாம்னு பார்த்தால் நீங்களே ஓட்டிக்கிறீங்களே?” இளவட்ட உறவினர்கள் அலுத்துக் கொண்டனர்.

“எங்களுக்குள் மூனாவது ஆளை எல்லாம் விட மாட்டோம். எனக்கு அத்தான்… அத்தானுக்கு நான் தான் எப்போதும்!”

ராகவர்தினி விளையாட்டாகச் சொல்வது போல் இருந்தாலும் அதில் அர்த்தம் பொதிந்தே இருப்பதை உணர்ந்து கொண்டான் பிரபஞ்சன்.

அவள் தனக்காகத் தான் இவ்வளவு கலாட்டா செய்கிறாள் என்று புரிந்து போக, அவள் கலாட்டாவில் விருப்பத்துடனே புகுந்து கொண்டான்.

அதன் பிறகு எந்தப் பழைய நினைவுகளும் தனக்குள் நுழையாதவாறு பார்த்துக் கொண்டான்.

வரவேற்பு நல்லபடியாக முடிந்து வீடு வந்து சேர்ந்தனர்.

தூங்குவதற்கு முன், “நீ பாடிய பாட்டில் என்ன வரிகளை விட்ட ராகா?” என்று ஞாபகமாகக் கேட்டான் பிரபஞ்சன்.

“வேண்டாம் அத்தான். அதைப் பாடினால் நீங்க பாடம் எடுக்க ஆரம்பிச்சிடுவீங்க…” என்றாள் பயந்தவளாக.

“சும்மா பாடு, பார்க்கலாம்…”

“இன்னைக்கு என் காது பஞ்சர் ஆகப் போகுதே!” என்று புலம்பினாலும் அந்த வரிகளைப் பாட ஆரம்பித்தாள்.

தொல்லைகள கூட்டினாலும்

நீ தூரம் நின்னா தாங்கல….

கட்டிலிடும் ஆசையால…

என் கண்ணு ரெண்டும் தூங்கல…

உன்ன கண்டதும் மனசுக்குள்ள

எத்தனை கூத்து…

சொல்லவும் முடியவில்லை

சூட்டையும் ஆத்து…

என்று அவள் பாடியதும் அவன் முகம் போன போக்கை பார்த்து வாய் விட்டு சிரித்தாள் ராகவர்தினி.

சூட்டையும் ஆத்து…

என்பதை வேண்டும் என்றே மீண்டும் அவள் பாட,

“ராகா… படிப்பை முடிக்காம…”

வாத்தியாரின் பாடம் ஆரம்பமானது.

அட! நம்புங்க! அட்வைஸ் பாடம் மட்டும் தாங்க!