20 – இதயத்திரை விலகிடாதோ?

அத்தியாயம் – 20

காலையில் நண்பனின் திருமணத்திற்குச் சென்ற சூர்யா, வீட்டிற்கு வரும் போது வழக்கம் போல் இரவாகியிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை சும்மாவே நண்பர்களுடன் சுற்றுவான். இன்று நண்பனுக்குத் திருமணம் என்று மணமக்கள் வீட்டிற்குச் செல்லும் வரை மண்டபத்தில் கொட்டம் அடித்து விட்டு, நரேனின் திருமண ட்ரீட் என்று குடித்துக் கும்மாளம் போட்டு விட்டு, ஒரு வழியாக வந்து சேர்ந்தவனை இருளான வீடு தான் வரவேற்றது.

குடி போதையில் கதவை தட்டியும் திறக்கவில்லை என்றதும், தானே கதவை திறந்து வந்தவன், இருளான வீட்டை பார்த்து முகத்தைச் சுளித்தான்.

‘இன்னைக்கும் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டாளா?’ காலையில் நடந்ததை மறந்தவனாகப் புலம்பிக் கொண்டான்.

விளக்கை போட்டு விட்டு படுக்கையறைக்குச் செல்ல, அங்கே யுவஸ்ரீ இல்லை.

‘நிஜமாவே ஊருக்குப் போயிட்டாளோ?’ என்று நினைத்துக் கொண்டு முன்பு ஒரு நாள் போல அவளின் அலைபேசிக்கு அழைக்க, அங்கிருந்த இன்னொரு படுக்கையறையிலிருந்து சத்தம் கேட்டது.

அந்த ப்ளாட்டில் இரண்டு அறைகள் இருந்தாலும் மற்றொரு அறை உபயோகம் இல்லாமல் தான் இருந்தது. ஊரிலிருந்து பெற்றவர்கள் வந்தால் அங்கே தங்கி கொள்வார்கள்.

கணவன் மீது முன்பு எவ்வளவு வருத்தம் இருந்தாலும் தனியாகத் தங்க நினைத்ததில்லை யுவஸ்ரீ.

ஆனால், அவன் கை நீட்டி அடித்த பிறகு ‘தான் சொரணை இல்லாதவள் ஆகிப்போனோமோ?’ என்று அவளின் மீதே கழிவிரக்கம் தோன்ற, இன்று அங்கே சென்று படுத்து விட்டிருந்தாள்.

அவள் தனி அறைக்குச் சென்று விட்டாள் என்று கணவன் அறிந்து கொள்ளட்டும் என்று நினைத்து தான் கதவையும் திறந்தே வைத்திருந்தாள்.

அவளின் கைபேசி அங்கே இருந்து ஒலி எழுப்பவும், “இங்கே தான் இருக்கியா பொண்டாட்டி? ஊருக்கு போயிட்டியோன்னு நினைச்சேன்…” குழறலாகச் சொல்லிக் கொண்டே அந்த அறைக்கு வந்தவன், விளக்கை போட்டு விட்டு மனைவியைத் தேட, கட்டிலில் படுத்திருந்தாள் யுவஸ்ரீ.

“பசிக்குது பொண்டாட்டி. சாப்பிட ஏதாவது கொடு…” என்றான்.

அவனுக்கு முதுகை காட்டி படுத்திருந்தவளோ முழித்திருந்தாலும், கண்களை இறுக மூடிக் கொண்டு இறுகி போய் இருந்தாள்.

கணவனின் குரல் காதில் விழுந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை.

“ஏய், பொண்டாட்டி… அதுக்குள்ள என்ன தூக்கம்?” என்று கேட்டவன், அருகில் வந்து தோளை பிடித்து உலுக்கினான்.

அவளோ சிறிதும் அசைத்தாள் இல்லை.

“நிஜமாவே தூங்கிட்டியா?” என்று கேட்டவன் தானும் அவள் அருகில் சென்று படுத்துக் கொண்டான்.

“இது நம்ம பெட் இல்லையே… ஏன் இங்கே வந்து படுத்த?” என்று அவன் அவளை அணைக்க முயன்ற போது, விருட்டென்று படுக்கையிலிருந்து எழுந்தவள், அவனை விட்டு விலகி, அறையை விட்டு வெளியே சென்றாள்.

“இன்னும் நீ தூங்கலையாடி பொண்டாட்டி?” அவள் கோபத்தை உணராமல் அவனும் பின்னால் எழுந்து சென்றான்.

ஹாலில் நடுவில் சென்று நின்றவள் அருகில் அவன் வந்ததும், வேகமாக மீண்டும் அறைக்குள் சென்றவள், கதவையும் தாழ் போட்டுக் கொண்டாள்.

“ஏய், கதவை திறடி பொண்டாட்டி!” என்று அவன் கதவை தட்ட தட்ட திறக்கவே இல்லை அவள்.

கதவை திறக்க சொல்லி கத்தினான். அவளைத் திட்டினான். எதற்கும் அசையவில்லை அவள். கத்தி பார்த்து ஓய்ந்து போனவன், சோஃபாவில் சென்று விழுந்து தூங்கியும் போனான்.

காலையில் எழுந்த பிறகு தான் சூர்யாவிற்கு முதல் நாள் நடந்த சண்டை ஞாபகத்தில் வந்தது.

அதனுடன் மனைவியை அடித்ததும் ஞாபகத்தில் வர, தலையை அழுந்த கோதி கொண்டவன், யுவஸ்ரீ எங்கே என்று தேடினான்.

சமையலறையிலிருந்து சத்தம் கேட்க, அங்கே சென்று பார்த்தான்.

வாணலியில் எதையோ கிளறிக் கொண்டிருந்தாள்.

அவளின் முதுகையே வெறித்துப் பார்த்தான்.

அவன் நின்று பார்க்கிறான் என்று உணர்ந்தாலும் திரும்பிப் பார்க்கவில்லை அவள்.

தன்போக்கில் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்தவன், அவள் திரும்பப் போவதில்லை என்று தெரிந்ததும் அலட்சியமாகத் தோளை குலுக்கி விட்டுக் குளிக்கச் சென்றான்.

தன் நண்பர்களுடன் பழகுவதைக் குறை சொல்லிவிட்டாளே என்று அவள் மீது கோபமாக இருந்தான்.

அதனால் அதன்பிறகு அமைதியாகக் குளித்துக் கிளம்பி சாப்பிடாமல் வேலைக்குச் சென்று விட்டான்.

யுவஸ்ரீயும் அவனைச் சாப்பிட சொல்லவில்லை.

அவளைப் பொறுத்தவரை அவள் எந்தத் தவறும் செய்யவில்லை. மனதிற்குள் இத்தனை நாட்களாக இருந்த அவளின் புழுக்கம் வெளியே வந்துவிட்டது.

நட்பை குறையாக நினைப்பவளும் இல்லை. கணவனுக்கு நண்பர்கள் இருப்பதை அவள் தவறும் சொல்லவில்லை.

ஆனால் அந்த நண்பர்கள் சரியானவர்கள் இல்லையோ என்ற எண்ணம் அவளுக்கு இருந்தது.

எந்த உறவுக்குமே ஒரு வரைமுறை உண்டு. நட்போ, உறவோ ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து எங்கே விலகி நிற்க வேண்டுமோ… அங்கே நின்று விட வேண்டும்.

சூர்யாவின் நண்பர்கள் அப்படி விலகி நிற்பவர்கள் இல்லையோ என்ற உறுத்தல் அவர்களைச் சரியானவர்களாக நினைக்க விடவில்லை.

கணவன் பக்கம் தான் அதிகம் தவறு இருப்பது புரிந்தாலும், நல்ல நண்பர்களாக அவர்களும் நடந்து கொள்ளவில்லை என்று தான் அவளுக்குத் தோன்றியது.

திருமணம் முடிந்த நண்பன் வாரத்தில் இரண்டு நாட்கள் மனைவியை விட்டுவிட்டு, அவர்களுடன் சுற்றுவதை, எந்த நல்ல நண்பர்களும் ஊக்கப்படுத்த மாட்டார்கள் என்று அவள் நினைத்தாள்.

ஒரே ஒரு முறை அவர்களுடன் வெளியே சென்ற போதே அதை அவள் புரிந்து கொண்டாள்.

‘உன் வொய்ப் கூடப் போ!’ என்று அன்று அவர்கள் சொன்னாலும், இவள் ஏன் எங்கள் நடுவில் வந்தாள் என்ற பார்வையுடன் தான் அவளைப் பார்த்தனர்.

அதுவும் திருமணம் முடிந்து பல மாதங்கள் ஆன பிறகும், நண்பன் இப்படித் தங்களுடன் வருகிறானே என்ற சிறு உறுத்தல் கூட அவர்களுக்கு இருந்தது போல் தெரியவில்லை.

இவை எல்லாம் இத்தனை நாட்களும் அவளை உறுத்திக் கொண்டே இருந்தது. அதனால் தான் அப்படியே பேசிவிட்டாள்.

ஆனால் அதற்குக் கணவன் தன்னை அடித்ததை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

அதனால் அவனை விட்டு விலகி இருக்க நினைத்தாள்.

அவள் நினைத்திருந்தால் கோபித்துக் கொண்டு அன்னை வீட்டிற்குச் சென்றிருக்கலாம்.

ஆனால் அதைச் செய்ய அவளுக்கு மனது வரவில்லை.

நம் பெண்களுக்கு இருக்கும் மிகப் பெரிய பலவீனம் ஒன்று உண்டு. அது தன் திருமண வாழ்க்கை சரி இல்லை என்று தன் பெற்றவர்களுக்குத் தெரிந்தால் அவர்கள் உடைந்து போய் விடுவார்களே என்று முடிந்த வரை தனக்கு ஏற்படும் பிரச்சினைகளைப் பிறந்த வீட்டில் சொல்லாமல் தவிர்க்கவே நினைப்பர்.

யுவஸ்ரீயும் அதைத்தான் செய்தாள்.

அதுவும் தந்தை இல்லாமல், தன்னைக் கஷ்டப்பட்டுத் திருமணம் முடித்து வைத்து விட்டுச் சந்தோஷமாக இருக்கும் அன்னையை வருத்த அவளால் சிறிதும் முடியாது.

பிறந்த வீட்டை நினைத்தே பல பெண்கள் புகுந்த வீட்டில் படும் கஷ்டங்களைத் தன்னோடு புதைத்துக் கொள்வார்கள்.

பிடிக்காத கணவன் விஷயத்திலேயே அப்படி எனும் போது, யுவஸ்ரீக்கு சூர்யாவை மிகவும் பிடிக்கும் என்ற போது அவள் அன்னையிடம் சொல்லாமல் இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

அதற்காகக் கணவன் செய்வது சரி என்று எல்லாவற்றிற்கும் தலையாட்ட முடியாமல் தான், தன் மன ஆதங்கத்தை அப்படியே அவனிடம் கொட்டிவிட்டாள்.

இனி கணவனுக்குத் தழைந்து போகக் கூடாது, தன் வலியையும் அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தவள், அவனிடமிருந்து சிறிது விலகி இருக்கவே நினைத்தாள்.

அவளின் அந்த விலகல் அன்று முதல் ஆரம்பித்தது.

அலுவலகத்திலும் சூர்யாவிடம் முடிந்த வரை பேசுவதைத் தவிர்த்தாள்.

அவனிடம் பேசித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் மட்டும் அவனிடம் பேசினாள்.

அதிலும் அவளின் விலகல் அப்பட்டமாகத் தெரிந்தது.

மதிய உணவின் போதும் நந்தினி அழைத்தால் ஏதாவது காரணத்தைச் சொல்லி தவிர்த்தாள்.

நந்தினியுடன் சென்றால், தினேஷுடன் சூர்யாவும் வருவான் என்று தெரியும். அதனால் தனியாகச் சென்று மதிய உணவை உண்ண ஆரம்பித்தாள்.

அவள் வராததால் காதலர்களுக்குள் தான் ஏன் இடையில்? என்று சூர்யாவும் இப்போது தினேஷுடன் செல்வது இல்லை.

அவர்களுக்குள் நடக்கும் பூசல் பற்றி அறியாமல் அவர்கள் தங்களுக்குத் தனிமை கொடுக்கத்தான் தங்களுடன் வருவதில்லை என்று தினேஷும், நந்தினியும் நினைத்துக் கொண்டனர்.

வீட்டில் தனி அறையில் மனைவி அடைந்து கொள்ள, அவள் மீதிருந்த கோபத்தில் அவளைச் சமாதானம் செய்யவும் சூர்யா நினைக்கவில்லை. வீட்டிலும் உணவு உண்ணுவதில்லை.

ஆளுக்கு ஒரு மூலையில் அவர்கள் இருந்த போதே ஒரு வாரம் ஓடி சென்றது.

நான் அப்படித்தான் என் நண்பர்களுடன் சுற்றுவேன் என்பது போல் அந்தச் சனிக்கிழமையும் வெளியே சென்ற கணவனை விரக்தி புன்னகையுடன் பார்த்து அமைதியாக இருந்து கொண்டாள் யுவஸ்ரீ.

தான் சொன்னால் மாறப் போகிறானா என்ன? என்ற எண்ணம் தான் அவளுக்கு வந்தது.

அன்று இரவு குடித்து விட்டு வந்தாலும் என்றும் போல் ஆர்ப்பாட்டம் செய்யாமல் அறையில் சென்று படுத்து தூங்கிவிட்டான்.

அதுவே அவளுக்கு வியப்பாகத்தான் இருந்தது. குடித்து விட்டு அவன் செய்யும் அலட்டல் அவள் அறிந்ததாயிற்றே!

காலையில் எழுந்தவன் முகம் மிகவுமே சோர்வாக இருந்தது. அதை யுவஸ்ரீயும் கவனித்தாள்.

வழக்கம் போல் தலைவலியாக இருக்கும் என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாள்.

ஆனால் ஞாயிறு அன்று வெளியே சென்றவன், என்றும் இல்லாத அதிசயமாக மாலை ஆறு மணிக்கு எல்லாம் வீட்டிற்கு வந்து சேர்ந்த கணவனை விநோதமாகத்தான் பார்த்தாள்.

‘என்ன இது, இந்த நேரம் வீட்டுக்கு வந்திருக்கார்?’ என்று நினைத்தாலும் அமைதியாகத் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நேராக அறைக்குள் சென்றவன் அதன் பிறகு வெளியே வரவில்லை.

அப்போது யுவஸ்ரீயின் அலைபேசி அழைத்தது.

அவளின் மாமியார் சித்ரா அழைத்துக் கொண்டிருந்தார்.

“ஹலோ அத்தை, எப்படி இருக்கீங்க? மாமா எப்படி இருக்கார்?” என்று அழைப்பை ஏற்றுப் பேச ஆரம்பித்தாள்.

“நாங்க நல்லா இருக்கோம் யுவா. நீயும், கண்ணனும் எப்படி இருக்கீங்க?” என்று விசாரித்தார்.

“நல்லா இருக்கோம் அத்தை…”

“சரி, இன்னைக்கு என்ன செய்த? சாப்பாடு என்ன?”

“பிரைட் ரைஸ் செய்தேன் அத்தை. வீட்டை எல்லாம் கிளீன் செய்து துணியை மிஷினில் போட்டுக் காயப்போட்டேன். அப்படியே நேரம் போயிருச்சு. இப்ப டீவி பார்த்துட்டு இருக்கேன்…” என்று அவளின் பேச்சு நீண்டது.

“கண்ணா இன்னைக்கும் குடிக்கப் போயிட்டானா?” என்று உள்ளே சென்றுவிட்ட குரலில் கேட்டார் சித்ரா.

“இல்லை அத்தை, இன்னைக்கு என்னாச்சுன்னு தெரியலை. சீக்கிரம் வீட்டுக்கு வந்திட்டார்…” என்றாள்.

“என்னமா சொல்ற? நிஜமாவா? நிஜமாவா?” என்று நம்ப முடியாமல் கேட்டார்.

அவரால் நிஜமாகவே நம்பத்தான் முடியவில்லை.

மகனை மாற்ற அவரும் எவ்வளவோ பேசி பார்த்து விட்டார். அவன் திருந்துவதாகவே இல்லை.

உன் அப்பாவிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டியும் பார்த்தார்.

‘சொல்லுங்க, ஆனா அதுக்குப் பிறகு உங்க மகனை மறந்துடுங்க. நான் கண்காணாம எங்கேயாவது போயிடுவேன்’ என்று அன்னையை மிரட்டி, வாயடைக்க வைத்திருந்தான்.

அதனால் மகனின் போக்குப் பிடிக்காமல் கவலையில் இருந்தவருக்கு மருமகள் சொன்ன செய்தி காதில் தேனாகப் பாய்ந்தது.

“நீ சொன்னது உண்மை தானே?” என்று மீண்டும் கேட்டார்.

“உண்மை தான் அத்தை. ரூமில் தான் இருக்கார்…” என்றாள்.

“ஏன் வேகமா வந்தானாம், கேட்டியா?” என்று கேட்டவருக்கு அமைதியே பதிலாகத் தந்தாள்.

கணவனுடன் அவள் பேசாதது மாமியாருக்குத் தெரியாது. அதைச் சொல்லவும் அவளுக்கு விருப்பமில்லை.

“ஏதோ மூட்அவுட்டா இருக்கார் அத்தை. அதோட நான் கேட்டு, ஒருவேளை அவர் கிளம்பி குடிக்கப் போயிட்டால்…” என்று சொல்லி சமாளித்தாள்.

“அதுவும் சரிதான். வீம்பு பிடிச்சவன். நான் பிடிச்சது முயல் இல்லை ஆமைன்னு வீம்பு பேசுவான். நீ எதுவும் கேட்காதே. அவன் குடிக்காமல் இருந்தாலே போதும்…” என்றார் வேகமாக.

“சரிங்க அத்தை…” என்றாள் நல்ல பிள்ளையாக.

இவள் பேசியது உள்ளே இருந்தவனுக்குக் கேட்கத்தான் செய்தது. ஆனால் அவன் வெளியே வரவே இல்லை.

“அங்கே நிலைமை எப்படி இருக்குமா? கொரானா வருதுன்னு சொல்றாங்க. நீங்க எல்லாம் கவனமா இருக்கீங்களா?” என்று விசாரித்தார்.

“நாங்க கவனமாகத்தான் இருக்கோம் அத்தை. நீங்களும் பார்த்து இருங்க. அங்கங்கே வெளிநாட்டிலிருந்து வந்தவங்களுக்குக் கொரானா இருக்குன்னு சொல்லிட்டு இருக்காங்க…” என்றாள்.

அதைப் பற்றி மாமியாரிடம் சிறிது நேரம் பேசி விட்டு வைத்தாள் யுவஸ்ரீ.

அடுத்து அவளின் அம்மாவும் அழைக்க, அவரிடம் சிறிது நேரம் பேசினாள்.

அப்படியே நேரம் எட்டு மணி ஆகியது.

அதுவரையிலுமே சூர்யா அறையை விட்டு வெளியே வரவில்லை என்றதும் யோசனையுடன் அறை பக்கம் திரும்பிப் பார்த்தாள்.

கதவு பாதித் திறந்திருந்ததால் கணவனைப் பார்க்க முடிந்தது.

மல்லாக்க படுத்துக் கண்களைக் கையால் மறைத்துக் கொண்டு படுத்திருந்தான்.

அவன் இப்படி வந்து இந்த நேரத்தில் படுத்து அவள் பார்த்ததே இல்லை. அதனால் புரியாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘தூங்கி விட்டானோ? உடம்பு எதுவும் சரியில்லையோ?’ என்று யோசித்தாலும் அவனிடம் கேட்க விருப்பமில்லை.

சில நொடிகள் யோசனையில் இருந்தவள், டீவியின் மீது பார்வையைப் பதித்தாள்.

மேலும் அரைமணி நேரம் செல்ல, அவளுக்குப் பசித்தது.

ஆனால் உள்ளே கணவன் அப்படிப் படுத்திருக்கும் போது அவனை விட்டுவிட்டு சாப்பிடவும் மனது வரவில்லை.

அதனால் மனது கேட்காமல் அறை வாயிலில் நின்று, “நான் சாப்பிட போறேன். உங்களுக்கும் எடுத்து வைக்கவா?” என்று குரல் கொடுத்தாள்.

அவள் குரல் கேட்ட மறுநிமிடம் கண்களை மறைத்த கையை விலக்கி, மனைவியைக் கூர்ந்து பார்த்தான்.

அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘அவனிடம் அடியும் வாங்கி விட்டு என்னையே முதலில் அவனிடம் பேச வைத்து விட்டானே?’ என்று உள்ளுக்குள் கோபம் கனன்றாலும், அவளால் கணவனை அப்படியே விட்டுவிட முடியவில்லை.

பெண் மனம் கணவனுக்கு என்னவோ என்று உள்ளே பதைபதைக்கும் போது அவளும் தான் என்ன செய்வாள்?

“வை! வர்றேன்…” என்று அவளுக்குப் பதில் சொன்னவன் குரல் கரகரத்ததோ? புருவம் சுருக்கி அவனைப் பார்த்தாள்.

ஆனால் அவளின் முகம் பார்க்காமல் எழுந்து குளியலறைக்குச் சென்றான்.

‘சரிதான்’ என்று நினைத்தவள் மதியம் செய்ததில் மீதமிருந்த பிரைட் ரைஸை டேபிளில் வைத்து விட்டு, மீதி உணவுக்குத் தோசை ஊற்ற ஆரம்பித்தாள்.

காலையில் வைத்த தக்காளி சட்னி இருந்தது. அதைப் பிரிட்ஜிலிருந்து எடுத்து சூடு செய்தாள்.

தோசையையும், சட்னியையும் எடுத்து சாப்பாட்டு மேஜையில் வைக்கும் போது, உடையை மாற்றி விட்டு வந்தான் சூர்யா.

ஒரு வாரத்திற்குப் பின் வீட்டில் சாப்பிடும் கணவனுக்கு அமைதியாகப் பரிமாறினாள்.

அவனும் எதுவும் பேசாமல் சாப்பிட்டான்.

மனைவியின் முகத்தை நிமிர்ந்தே பார்க்கவில்லை.

சாப்பிட்டு விட்டு எழுந்தவன், அவளைப் பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு, “ஸாரி…” என்று முனங்கி விட்டு விருட்டென்று அறைக்குள் சென்று விட்டான்.

அடுத்த வாய் உணவை எடுத்து வாயில் வைத்துக் கொண்டிருந்த யுவஸ்ரீயின் கை அந்தரத்தில் நின்றது.

‘என்னிடமா ஸாரி கேட்டான்? ஏன்? தன்னை அடித்ததற்காகவா?’ என்று எண்ணம் ஓட கணவன் சென்ற பக்கமே வெறித்துப் பார்த்தாள்.

அவன் மனதில் என்ன ஓடுகிறது? எதற்கு இன்று இப்படி இருக்கிறான்? என்று அவளால் அனுமானிக்கவே முடியவில்லை.

அதன் பிறகு வந்த நாட்களில் அவர்கள் சரியாகப் பேசிக் கொள்ளவில்லை என்றாலும் சூர்யா உணவை வீட்டில் தான் உண்டான். அவளும் தனி அறையில் தான் இருந்தாள்.

இப்படியே நாட்கள் செல்ல, அடுத்தடுத்த விடுமுறை நாட்களும் வந்து சென்றது. சனி, ஞாயிறு வெளியே செல்பவன் இப்போது செல்லவில்லை என்றதும் அதுவும் அவளுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.

ஏன்? என்று அவனும் சொல்லவில்லை. அவளும் கேட்கவில்லை. அடுத்து வந்த வாரங்கள் அப்படித்தான் சென்றது.

அதற்குப் பிறகு கொரானா பரவ ஆரம்பிக்கும் சூழ்நிலை உருவாக, சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறவர்களை வீட்டில் இருந்து வேலை செய்யச் சொல்லி அலுவலகத்திலிருந்து தகவல் வந்தது.

அதற்கு அடுத்து நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.

ஒருவர் முகத்தை ஒருவர் சரியாகப் பார்க்காமல் ஏனோ தானோ என்று சுற்றிக் கொண்டிருந்த சூர்யாவும், யுவஸ்ரீயும் ஒருவர் முகத்தை ஒருவர் மட்டுமே பார்க்கும் சூழ்நிலை உருவானது.

லாக்டவுன்!

உலகத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைய, சூர்யாவிற்கும், யுவஸ்ரீக்கும் லாக்டவுன் அவர்களின் வாழ்க்கையில் திருப்புமுனை தர காத்திருந்தது.