20 – வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்! – Final

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 20

‘உனக்காகத் தான் விலகி இருந்தேன்’ என்ற கணவனைக் காதலுடன் பார்த்தாள் சக்தி.

அவள் கன்னத்தில் முத்தமிட்டு அழைத்துச் சென்று கட்டிலில் அமர்ந்து, அவளையும் தன்னருகே அமர வைத்துக் கொண்டான்.

“நீங்களே எல்லாம் முடிவு பண்ணிட்டு அப்புறம் ஏன் பஞ்சாயத்து அன்னைக்கு என் மேல கோபமா இருக்குற போல விலகி விலகிப் போனீங்க ஈஸ்வர்?” என்று கேட்டாள்.

“இப்போ மட்டும் ஈஸ்வர் ஈஸ்வர்ன்னு தாராளமா வாய் நிறைய வருது. இதுக்கு முன்னாடி சக்தியார் இந்தப் பேரை மறந்து இருந்தீங்க போல…” என்று அவளின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மனத்தாங்கலுடன் கேட்டான்.

“ஹான்… அது உங்களைத் தள்ளி நிறுத்த இந்தப் பேரை கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டியதாகப் போயிருச்சு. என் மனசுக்கும் கடிவாளம் போட ஈஸ்வர்னு கூப்பிடுவதைத் தவிர்த்தேன்…” என்றாள்.

“நல்லா தவிர்த்த போ… நீ தவிர்த்து என்னை நல்லா தவிக்க விட்டுட்ட…” என்றான்.

சட்டென்று அவனின் மடியில் ஏறி அமர்ந்த சக்தி, அவனின் தவிப்பை போக்குவது போல் தன் இதழை அவனின் அதரங்களில் பதித்தாள்.

ஆனந்தமாய் அதிர்ந்தவன், ஆசையுடன் அவளின் இதழ் ஸ்பரிசத்தில் நனைந்தான்.

அவளின் இடையைச் சுற்றிக் கையைப் போட்டு அணைத்துக் கொண்டவன் அவளே விட முயன்றும் விடாமல் தன் அதரங்களால் அவளின் இதழ்களைப் பற்றிக் கொண்டான்.

நொடிகள் நிமிடங்களாகக் கடந்த நிலையில் இருவரின் இதழ்களும் பிரிந்து கொண்டன.

சக்தி அவனின் மடியை விட்டு எழுந்து கொள்ள முயல, அவளின் இடையை அழுத்தமாக பற்றிக் கொண்டான்.

“விடுங்க ஈஸ்வர்…” அவள் சிணுங்க,

“இப்படியே பேசுவோம். இதுவரை நாம தனித்தனியா இருந்தது எல்லாம் போதும்…” என்று விடாமல் அடம்பிடித்தான்.

“இப்படியே உட்கார்ந்து பேசவா முடியும்?” என்று சக்தி மெல்லிய குரலில் முனங்க, அது அவனின் காதிலும் சரியாகச் சென்று விழ, நமட்டுச் சிரிப்பு சிரித்தவன்,

“அப்போ செயலை ஆரம்பிச்சுடுவோமா?” என்று கேட்டுக் கொண்டே மீண்டும் அவளின் இதழை நோக்கி குனிந்தான்.

சக்தி சட்டென்று அவனின் உதட்டை கையால் பொத்தி அவனின் மடியிலிருந்தும் எழுந்து கொண்டாள்.

“முதலில் நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்க ஈஸ்வர். அப்புறம்…” என்று அவள் நிறுத்த,

“அப்புறம் நம்ம ரொமான்ஸை வச்சுக்கலாம்னு சொல்றீயா?” என்று தன் வாயை மூடியிருந்த அவளின் கையில் முத்தமிட்டுக் கொண்டே கேட்டான்.

அவனின் மீசை ரோமங்கள் உள்ளங்கையை உரசி கூச செய்யச் சிலிர்த்துக் கொண்டாள்.

“ம்ம்ம்… முதலில் பேசலாம் ஈஸ்வர்…” என்றவள் அவனின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

“அதுவும் சரிதான். என் சக்தியாருக்கு குழந்தை ஆசை வேற வந்துருச்சு. அவள் ஆசையை நிறைவேத்தணும்னா ஹெவியா வேலை பார்க்கணும். அந்த வேலையை ஆரம்பிச்சா பேச முடியாது தான். அதனால் பேசுற வேலையே முதலில் பார்ப்போம்…” என்றான் குறும்பாக.

சக்தியின் முகத்தில் நாணப்பூக்கள் பூக்க முயல, முயன்று தன்னை இயல்பாகக் காட்டிக் கொள்ள முயன்றாள்.

அவளின் முயற்சியை ரசித்துப் பார்த்த படி பேச்சை தொடர்ந்தான்.

“நானே பஞ்சாயத்தைக் கூட்டி உண்மையைச் சொல்லிவிடலாம்னு தான் சென்னையில் இருந்து வந்தேன் சக்தி. ஆனா அதுக்குள்ள நீ அவசரப்பட்டுட்ட. இப்படி அவசரப்பட்டுட்டயேன்னு தான் எனக்கு வருத்தமாக இருந்தது.

நானே பஞ்சாயத்தைக் கூட்டியிருந்தால் அது வேற மாதிரி போயிருக்கும். ஆனா நீ கூட்டவும் ஊர் மக்களிடம் உனக்குக் கெட்ட பெயர் கிடைக்குமே. நாட்டாமை பொண்டாட்டியே நாட்டாமை மீது பிராது கொடுத்துருக்கான்னு ஊரு மக்களே கூடி பேசுவாங்க. தேவையில்லாம உனக்குக் கெட்டப் பெயரை இழுத்து விட்டுக்கிறயே என்ற கோபம் தான்.

அதோட நான் மன்னிப்பு கேட்கும் போது நீ எதுவும் சொல்லி தடுத்து விடக் கூடாதுன்னு நினைச்சேன். அதுக்கு நான் கோப முகத்தைக் காட்டினால் என்னை விட்டு தள்ளி நிற்பன்னு தான் அப்படி இருந்தேன்…” என்றான்.

“நீங்க ஏன் மன்னிப்பு கேட்டீங்க ஈஸ்வர்? எனக்கு அப்போ எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா?” என்று வருத்தத்துடன் கேட்டாள்.

“நம்ம இரண்டு பேர் தனிப்பட்ட விஷயத்தைப் பஞ்சாயத்து வரை கொண்டு வந்தது தப்பு சக்தி. நான் உன்னைப் பற்றிய உண்மை எல்லாம் சொல்லி முறைப்படி கல்யாணம் பண்ணிருக்கணும். அதை விட்டு எங்கே என் அப்பா பேருக்குக் களங்கம் வந்துடுமோனு பயந்து உன்னைப் பத்தி ஊருக்கு சொல்லாம அவசர அவசரமா கல்யாணம் பண்ணிக்கிட்டது தவறு தானே? செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்பது தவறு இல்லை சக்தி…” என்றான்.

“நீங்க என்ன சொன்னாலும் எனக்கு மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு. அதோட நாட்டாமை பதவியும் வேண்டாம்னு நீங்க சொன்னது எனக்குப் பெரிய ஷாக். என்னால் தான் நீங்க அப்படிச் சொல்ல வேண்டியது வந்தது. நான் இந்த ஊருக்கு வராமல் இருந்திருந்தால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காது. நீங்களும் மன்னிப்பு கேட்க வேண்டிய தேவை இல்லாமல் போயிருக்கும். நாட்டாமையா இருக்க மாட்டேன்னு நீங்களும் சொல்லியிருக்க மாட்டீங்க. எல்லாம் என்னால் தானே?” என்று வேதனையுடன் கேட்டாள்.

“அதை அப்படிச் சொல்ல முடியாது சக்தி. நீ உன் அப்பாவுக்காக இந்த ஊருக்கு வராமல் இருந்திருந்தாலும் இந்தப் பிரச்சனை எல்லாம் நாம சந்திச்சு தான் ஆகணும்…” என்றவனைக் கேள்வியுடன் பார்த்தாள்.

“என்ன அப்படிப் பார்க்கிற? இரண்டு வருஷமா நான் உன்னைக் கூப்பிட வரலைங்கவும் உன்னை அப்படியே விட்டுருவேன்னு நினைச்சியா? இங்கே நான் தொழில் எல்லாம் பழகி செட்டில் ஆனதும் உன்னைக் கூப்பிட வரலாம்னு தான் இருந்தேன்.

அப்படி உன்னை நான் இந்த ஊருக்கு கூட்டிட்டு வரும் போது அப்போ கண்டிப்பா உன் அப்பாவை பத்தி இந்த ஊருக்கு தெரிய வந்திருக்கும். அடுத்து என்ன நடந்திருக்கும்னு நினைக்கிற? இப்ப நடந்த பிரச்சனை எல்லாம் அப்போ கொஞ்சம் வேற மாதிரி நடந்திருக்கும். ஆனால் எப்படி இருந்தாலும் உன் அப்பாவுக்குத் தப்பான தீர்ப்பு சொன்ன விதத்தில் என் அப்பா சார்பில் நான் நாட்டாமை பதவியைத் துறந்தது சரி தான்…” என்றான்.

“நீங்க இப்படிச் சொன்னாலும் ஊர் மக்கள் உங்கள் பக்கம் தானே ஈஸ்வர். அவங்களே உங்களை ஒன்னும் சொல்லலை. அப்படி இருக்கும் போது நீங்க ஏன் அவசரப்பட்டு வார்த்தையை விடணும்?”

“மனுஷங்க எல்லாருமே ஒரே போல இருக்க மாட்டாங்க சக்தி. யாராவது நாட்டாமையா இருந்து என்ன பண்ண? இவரும் உண்மையை மறைச்சவர் தானேன்னு எந்தச் சூழ்நிலையிலாவது யாராவது என்னைப் பார்த்து ஈசியா கேட்டு விட வாய்ப்பு இருக்கு. அப்படிக் கேட்க நாமே ஏன் சந்தர்ப்பத்தைக் கொடுக்கணும்? நான் எடுத்தது நியாயமான முடிவு தான். அதனால் இதைப் பத்தி இனி பேச வேண்டாம் விடு…” என்றான் முடிவாக.

அவன் என்னதான் சொன்னாலும் சக்தியின் மனம் சமாதானமாக மறுத்தது.

அவளின் வருத்தமும் அவளை விட்டு அகல மறுத்தது.

படித்த படிப்பு, பிடித்த வேலை, பட்டணத்து வாழ்க்கை என அனைத்தையும் அவன் விட்டுவிட்டு இங்கே வந்து தன் தொழிலை அவன் மாற்றிக் கொண்டதில் முக்கியப் பங்கு இந்த நாட்டாமை பதவிக்கு உண்டு.

இந்த ஊருக்கு நாட்டாமையாக முக்கியப் பொறுப்பு இருந்ததாலேயே அவன் அனைத்தையும் மாற்றிக்கொண்டான். அதற்கு இரண்டு வருடம் கடுமையாக உழைத்தும் இருக்கிறான். அப்படி இருக்கும் போது, இப்போது அவன் நாட்டாமையாக இல்லை என்றால் அவனின் இத்தனை வருட உழைப்புக்கு எந்தப் பலனும் இல்லையே என்று நினைத்தாள்.

அவள் தன் எண்ணத்தை அவனிடமும் சொல்ல, மறுப்பாகத் தலையை அசைத்தான்.

“நீ ஏன் அப்படி நினைக்கிற சக்தி? கம்ப்யூட்டர் படிப்பு எனக்குப் பிடித்தது தான். ஆனா அதே நேரம் விவசாயமும் எனக்குப் பிடிக்கும். ஒரு தொழில் தெரிஞ்சால் இன்னொரு தொழில் பார்க்க கூடாதுன்னு எந்தக் கட்டுபாடும் இல்லையே? நம்ம மனசுக்குப் பிடிச்ச எந்தத் தொழிலாக இருந்தாலும் அது சிறந்த தொழில் தான். அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை…” என்றான்.

‘தொழில் சரி. ஆனா நாட்டாமை என்ற அவனின் குடும்பத்திற்கே இருக்கும் கௌரவம்? அதை எப்படி அவனால் இலகுவாக எடுத்துக் கொள்ள முடியும். என்றைக்கு இருந்தாலும் அவன் வருத்தப்படத்தானே செய்வான்?’ என்று வேதனையுடன் யோசனையில் ஆழ்ந்தாள்.

“என் சக்தியாருக்கு என்ன யோசனை? ம்ம்…” என்றவன் அவளை இழுத்துப் பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான்.

அவள் அப்போதும் அப்படியே இருக்க, “படபடப் பட்டாசா பொரியிற சக்தி எங்கே போனாள்? இந்தக் கொஞ்ச நாளா இருந்த அந்தச் சக்தியைத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு. இப்படி எல்லாத்துக்கும் சுணங்கி போய் மென்மையா இருக்கும் சக்தியை ஏனோ பார்க்க நல்லாவே இல்லை. இப்ப என்ன செய்யலாம். என்ன செய்தால் அந்தச் சக்தி வெளியே வருவாள்?” என்று கொஞ்சலாகக் கேட்டு அவளின் காது மடலை கடித்தான்.

அதில் உணர்வுக்கு வந்தவள், “இந்தச் சக்தி தான் நிஜம் ஈஸ்வர்…” என்றாள் அமைதியாக.

“ம்கூம்… அப்படியா? எனக்கு என்னவோ வல்லினமாய் இருக்கும் சக்தி தான் நிஜமோன்னு தோணுது. மெல்லினமாய் மாறும் இந்தச் சக்தி சும்மா அமைதியான பிள்ளை மாதிரி நடிக்கிதோன்னு தோணுது…” என்று சீண்டினான்.

“யாரு நான் நடிக்கிறனாக்கும்? அப்படிப் பார்த்தால் நீங்களும் நடிகர் தான். என்கிட்ட சில நேரம் வன்மையா சீறுவதும், அப்புறம் என் மேல் உள்ள காதலால் மென்மையா மாறுவதும் நீங்க தான். அதுவும் வீட்டை விட்டு வெளியே போய்ட்டால் சரியான வீராப்பு வீரன் போலத் தான் சுத்துவீங்க. இப்படி மாறும் நீங்களும் நடிகர் தான் என்று சிலிர்த்துக் கொண்டு அவனிடம் சண்டைக்கு வந்தாள்.

“வாவ்! வாவ்! இது தான் நான் எதிர்ப்பார்த்த என் சக்தியார். இப்படிச் சீறும் சிறுத்தையா இருக்குறதை விட்டுட்டு பூனைக்குட்டி மாதிரி இருக்கக் கூடாது. என்ன சரியா?” என்று அவளின் மூக்கை பிடித்து ஆட்டிய படியே கேட்டான்.

“அப்போ நான் உங்ககிட்ட இப்படி ஏட்டிக்கு போடி சண்டை போடுவது தான் பிடிச்சுருக்கா?” என்று கேட்டாள்.

“ஆமா, அப்பத்தானே நானும் நீயும் முட்டிக்கலாம். கூடவே கட்டிக்கலாம். நான் வல்லினமாக மாறும் போது நீ மெல்லினமாகவும், நீ வல்லினமாக மாறும் போது நான் மெல்லினமாகவும் மாறினால் தான் நம்ம வாழ்க்கையும் ரொம்பச் சுவாரசியமா இருக்கும்…” என்று கண்சிமிட்டி குறும்பாகச் சிரித்தவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

“பேசிட்டு இருக்கும் போதே கை என்னென்னவோ வேலை பார்க்குதே…”

“அதான் பேசி முடிச்சாச்சே? இனி வேலையைப் பார்க்க வேண்டியது தான்…” என்றவன் முதலில் அவளின் பேச்சை நிறுத்தும் வேலையை ஆரம்பித்தான்.

இதழில் ஆரம்பித்த அவர்களின் சங்கமம் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்து இனிமையாக நிறைவேறியது.

வல்லினமாய் இறுக்கத்துடன் சுற்றி வளைத்த கணவனின் கரங்களுக்குள் மெல்லினமாய்ச் சிணுங்கி அடைக்கலம் புகுந்து கொண்டாள் சக்தி.


ஒரு வாரம் சென்றிருந்தது.

சர்வேஸ்வரன், சக்தியின் அன்னியோன்யம் கெஞ்சலும், மிஞ்சலுமாக அமோகமாக நகர்ந்து கொண்டிருந்தது.

தாமோதரன் சொந்த ஊரை பார்த்து விட்ட திருப்தியில் சற்று தெளிவாகவே இருந்தார்.

சிகிச்சையும் அவருக்குத் தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டிருந்தது.

தந்தையின் உடல்நிலையில் சற்று முன்னேற்றத்தை கண்ட சக்தி நிம்மதியாக வலம் வந்தாள்.

தினமும் மாமியாருடன் அல்லது கணவனுடன் சென்று பார்த்து விட்டு வருவாள்.

அன்று காலை கணவன், மனைவி இருவருமே மருத்துவமனைக்குச் செல்வதற்காகத் தயாராகி வர, அப்போது ஊர் பெரியவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

அவர்களைக் கண்டதும் வேகமாகச் சென்று வரவேற்றான் சர்வேஸ்வரன்.

“வாங்க… வாங்கய்யா… என்னங்கய்யா இவ்வளவு தூரம்? சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே?” என்றான்.

“இந்த ஊர் நாட்டாமையைப் பார்க்க நாங்க தான் வரணும் தம்பி. அது தான் முறை…” என்றார் பெரியவர் ஒருவர்.

“அய்யா அது வந்து… நான் தான் இப்போ நாட்டாமை இல்லையே?” என்று கேட்டான்.

“நீங்க இல்லைன்னு சொன்னால் நாங்க அப்படியே விட்டுடுவோமா தம்பி? உங்க மாமனாரை நீங்க ஆஸ்பத்திரியில் சேர்ப்பது, அவரைப் போய்ப் பார்ப்பதுன்னு இருக்கீங்கன்னு தான் நாங்க இம்புட்டு நாள் பொறுமையா இருந்தோம். இனியும் தள்ளி போட வேண்டாம்னு தான் வந்திட்டோம்.

இன்னைக்கு ஒரு பிராது வந்திருக்கு தம்பி. நம்ம கேசவனுக்கும், அவன் தம்பிக்கும் ஏதோ நிலத்தகராறு. அதை விசாரிச்சுத் தீர்ப்பு சொல்ல நீங்க வரணும்…” என்றார் சந்தானம்.

ஊர் பெரியவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சக்தியின் முகம் மலர்ந்தது.

கணவனை ஆவலாகப் பார்த்தாள்.

அதே போல் மீனாம்பிகையும் மகனை எதிர்பார்ப்புடன் பார்த்தார். அவருக்கும் மகனின் முடிவு வருத்தத்தைத் தந்திருந்தது. அவரும் அவனிடம் பேசி பார்த்திருந்தார்.

ஆனால் அவன் உறுதியாக மறுப்புத் தெரிவித்திருந்தான். இப்போது ஊர் பெரியவர்களிடம் என்ன சொல்ல போகிறான் என்று ஆவலுடன் நோக்கினார்.

“அய்யா, அதான் நான் சொல்லிட்டேனே. நாட்டாமைனா நேர்மையா இருக்கணும். ஒரு முறை ஆனாலும் நானும் சின்னத் தப்புச் செய்திருக்கேன். அப்படி இருக்கும் போது சரி வராதுங்க அய்யா. நீங்க இத்தனை பெரியவங்க இருக்கீங்க. நீங்களே பஞ்சாயத்தை நல்ல முறையில் நடத்துவீங்கன்னு நம்பிக்கை இருக்கு அய்யா…” என்றான்.

“தப்பு செய்யாத மனுஷன் இந்த உலகத்தில் யாருமில்லை தம்பி. அதுவும் நான் தப்புச் செய்துட்டேன். அதனால் என் பதவியைத் துறந்து விடுறேன்னு சொல்லவும் பெரிய மனசு வேணும் தம்பி. அந்தப் பெரிய மனசு உங்ககிட்ட இருக்கு. இதை விட வேற என்ன தம்பி வேணும்? இந்த ஊருக்கு நாட்டாமை குடும்பம்னா அது உங்க குடும்பம் மட்டும் தான் தம்பி. அந்தப் பெருமையை இந்த ஊர் மக்கள் நாங்க என்னைக்கும் நிலைநாட்ட செய்வோம்.

ஒருவேளை யாரும் உங்க தீர்ப்பை குறை சொல்வாங்களோன்னு உங்களுக்குத் தயக்கம் இருந்தால் அதை அழிச்சிடுங்க. அப்படி ஒரு விசயம் நடக்கவே செய்யாது. இதுக்குச் சாட்சி இந்த ஊர் மக்கள் தான். அவங்க எல்லாருக்கும் நீங்க தான் நாட்டாமையா இருக்கணும்னு விருப்பம். மக்கள் விருப்பத்தின் பேரில் தான் நாங்க பேச வந்திருக்கோம்…” என்று ஒருவர் சொல்ல,

சர்வேஸ்வரன் இன்னும் தயங்கினான்.

“தயங்காதீங்க தம்பி. இந்த ஊருக்கு நாட்டாமையா இருந்து தலைமை தாங்கி எங்களை வழிநடத்த வேண்டியது உங்க பொறுப்பு. உங்க பொறுப்பை நீங்க தட்டிக் கழிக்க மாட்டீங்கன்னு இந்த ஊர் மக்கள் நம்புறோம் தம்பி…” என்று சந்தானம் சொல்ல,

மேலும் சிலரும் தொடர்ந்து பேச அவர்களின் பேச்சுக்கும், ஊர் மக்களின் அன்புக்கும் மதிப்பு கொடுத்து மீண்டும் நாட்டாமையாக இருக்கச் சம்மதம் தெரிவித்தான் சர்வேஸ்வரன்.


அன்று மாலை ஊர் மக்களே அந்தக் கல்மண்டபத்தின் முன் கூடியிருக்க, மேடையில் பெரியவர்களின் நடுவே நடு நாயகமாக அமர்ந்திருந்தான் சர்வேஸ்வரன்.

மகனை மீண்டும் நாட்டாமையாகப் பார்த்து மனம் பூரித்துக் கூட்டத்துடன் நின்றிருந்தார் மீனாம்பிகை.

வெள்ளை நிற வேட்டி, சட்டையில் லேசாக முறுக்கி விட்ட மீசையில் தன் கம்பீரத்தை நிலைநாட்டி, வழக்கை கவனத்துடன் விசாரித்து, கணீர் குரலில் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்த கணவனைக் கண்களில் நிறைந்த காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சர்வேஸ்வரனின் சக்தி.

சுபம்