20 – சிந்தையில் பதிந்த சித்திரமே

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 20

அவனின் காதல் பார்வையைக் கண்டவளுக்கு மனதிற்குள் ஜில்லென்று இருந்தது.

“ஏன் அப்படிப் பார்க்கிறீங்க?” அவனின் பார்வையில் கிறக்கமும், சிலிர்ப்புமாகக் கேட்டாள் நயனிகா.

மனதிற்குள் தன் மேல் காதல் இருந்தும் தன்னை விட்டு விலகி விலகிச் சென்றவனின் இந்த மாற்றம், காதல் கொண்ட கன்னிகைக்குப் பொக்கிஷம் கிடைத்தது போல் இருந்தது.

“பார்க்க மட்டுமா? உன்னை ஏதேதோ செய்யணும் போலக் கூடத்தான் இருக்கு…” என்று காதலுடன் சொல்லியவன் அவளின் கையைப் பற்றி அதில் மென்மையாக முத்தமிட்டான்.

“உனக்கு என் குறைகள் வித்தியாசமா தெரியலை என்பது என் மனதுக்கு எவ்வளவு ஆறுதலா இருக்கு தெரியுமா நயனிமா?அன்னைக்கு உன்கிட்ட என் வாழ்க்கையில் காதலுக்கோ, கல்யாணத்துக்கோ இடமில்லைன்னு சொன்னேனே, அது பொய்…” என்றான்

“அதான் அன்னைக்கு நானே நேரில் பார்த்தேனே… அந்தப் பெரியவர் உங்களைத் தான் மாப்பிள்ளையா பார்ப்பதாகச் சொன்னாரே…” என்றாள் மனத்தாங்கலுடன்.

“அது நானே எதிர்பாராததுடா…” என்றவனை நம்ப முடியாமல் பார்த்தாள்.

“நிஜம் தான்! உன்னைப் பார்க்கிறதுக்கு முன்னாடி எனக்கும் கல்யாண ஆசை இருந்தது…”

“என்ன?”

“ம்ம், ஆமா. தனிமை வாழ்க்கை எவ்வளவு கொடுமையானதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். யாரோடும் ஒன்றவும் முடியாமல், மனம் விட்டுப் பேச கூட ஆள் இல்லாமல் இருக்கும் கொடுமை என்னை மிரட்டியது. அதான் கல்யாணம்னு ஒன்னு நடந்தால் வாழ்க்கை துணையுடன், அவள் குடும்பமும் எனக்குக் கிடைக்குமேன்னு நினைச்சேன்.

ஆனா எனக்குன்னு பொண்ணு பார்க்கவோ, எடுத்து செய்யவோ யாருமில்லை. அதனால் நானே மேட்ரிமோனில விளம்பரம் கொடுத்தேன். ஆரம்பத்தில் சிலர் விசாரிச்சு போன் போட்டாங்க. ஆனால் அவங்களுக்கு எல்லாம் என் குறை பெரிதாகத் தெரிந்ததால் வேண்டாம்னு சொல்லிட்டாங்க.

அதுவும் பிறவியிலேயே எனக்கு இந்தக் குறைபாடு இருந்ததால் எனக்குப் பிறக்க போகும் குழந்தைக்கும் வரலாம்னு அவங்க வேண்டாம்னு சொன்ன போது நிஜமா என் மனம் காயப்பட்டது.

என் குழந்தை ஒருவேளை அப்படி இருந்தால் அந்தக் குழந்தையை மனம் கோணாமல் வளர்க்க என்னால் முடியும். ஆனால் எனக்கு வரப் போறவளுக்கும் அந்தப் பக்குவம் இருக்கும்னு எதிர்பார்க்க முடியாது இல்லையா? அதனால் தான் கல்யாண ஆசையை விட்டுட்டேன்…” என்றான்.

“அப்புறம் அன்னைக்கு வந்தவர்?” என்று கேட்டாள்.

“அவர் பழைய விளம்பரத்தை பார்த்துட்டு அவராகக் கேட்டார். அந்த நேரம் உன்னை விட்டு விலகிப் போறதுன்னு முடிவாகிடுச்சு. அந்தப் பொண்ணையாவது எதுக்கும் பார்க்கலாம்னு ஒரு எண்ணத்தில் தான் என் விவரத்தை எல்லாம் சொன்னேன். ஆனால் சொன்ன பிறகு ஏன்டா சொன்னோம்னு ஒரு உறுத்தல்.

உன்னை மனசில் வச்சுக்கிட்டு வேற எந்தப் பொண்ணையும் என் பக்கத்தில் சேர்க்க கூட எனக்கு விருப்பமில்லை. அதுக்குப் பிறகு அவர் போன் போட்டால் வேண்டாம்னு சொல்லலாம்னு தான் இருந்தேன். ஆனா எனக்கு வேலை வைக்காம நீயே அவரை விரட்டி விட்டுட்ட…” என்றவன் சிரிப்புடன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

அவனின் உதடுகளின் ஸ்பரிசம் ஏற்படுத்திய சிலிர்ப்பில் விழி மூடிக் கொண்டாள் நயனிகா.

“அது மட்டுமில்லை. அன்னைக்கு என் கூட வேலை பார்க்கிறவங்க பேசினது கேட்டு, அது யார் என்ன பேசினீங்கன்னு விசாரிச்சியே… உனக்கே தெரியும் இரக்க பார்வை வேண்டாம் என்ற எண்ணத்தில் நான் வெளியிடத்தில் என் கையைக் காட்ட மாட்டேன். அது போலத் தான் அந்தக் காலேஜிலும் இருந்தேன்.

என் கூட வேலை பார்க்கும் அந்தப் பொண்ணு என் கையைப் பத்தி தெரியாமல் என்னைப் பிடிச்சிருப்பதாகவும், கல்யாணம் பண்ணிக்க விரும்புவதாகவும் சொன்னாங்க…”

“என்ன?” என்று சிறு அதிர்வுடன் கேட்டாள்.

“ம்ம், அதுவும் நான் தனியாக இருக்கவும், எந்தப் பிக்கல் பிடுங்கல் இல்லைனு அவங்களுக்கு ஒரு திருப்தியாம். என் கையைப் பற்றிச் சொன்னதும் நீங்க இப்படின்னு தெரிஞ்சிருந்தால் உங்ககிட்ட ஃபிரண்ட்லியா கூடப் பேசியிருக்க மாட்டேன்னு சொல்லிட்டு போயிட்டாங்க.

“இப்படி ஒவ்வொருத்தரும் என் குறையைப் பெருசா சொல்லி மறுப்புத் தெரிவித்த போது, நீ மட்டும் என் குறைபாட்டையும் பார்த்து அதுக்கு என்னன்னு சாதாரணமா கேட்ட போது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?” என்று கேட்டவன் அவளின் தோளை சுற்றி கையைப் போட்டு மென்மையாக அணைத்துக் கொண்டான்.

“நீ அன்னைக்குச் சொன்ன பார்… என் அம்மா போல என்னை மடி சாய்ச்சுக்கணும்னு தோன்றியதுன்னு. அது தான் என் அம்மாவே எனக்காக உன்னை அனுப்பி வச்சுருக்காங்கன்னு நினைக்க வச்சது. ஆனாலும் என்னோடு சேர்ந்து நீயும் பிற்காலத்தில் ஏதாவது காயப்பட்டால் என்னால் தாங்கவே முடியாதுன்னு தோணுச்சு. அந்த வலி இல்லாம நீ நல்லபடியா வாழணும்னு தான் தயாகிட்ட உங்க அக்காவை வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுன்னு சொன்னேன்…” என்றான்.

“இதுல என்ன வலி கதிர்? மத்தவங்க பார்வைக்காகவும், பேச்சுக்காகவும் நம்மால் வாழ முடியுமா?” என்று கேட்டாள்.

“முடியாது தான். ஆனால் அதோட உங்க அப்பா என் கையை எடுத்துருவேன்னு மட்டும் மிரட்டலை. சில பொண்ணு வீட்டுக்காரங்க கேட்ட அதே கேள்வியைத் தான் அவரும் என்கிட்ட கேட்டார்…”

“என்ன கேள்வி?”

“அதான் உங்க குறை உங்களுக்குப் பிறக்க போற குழந்தைக்கும் வந்தால் என்ன செய்து? அதனால் என் பொண்ணு வாழ்க்கையில் குறுக்கிடாமல் விலகிப் போய்டுங்கன்னு சொன்னார்…” என்றவனைக் கூர்மையாகப் பார்த்தாள்.

“உடனே சரின்னு விலகிப் போனீங்களாகும்? உங்க குறையே எனக்குப் பெருசா தெரியாத போது, நம்ம பிள்ளையை மட்டும் நான் எப்படி விடுவேன்? பொக்கிஷம் போலப் பார்த்துக்க மாட்டேனா?” என்று மனத்தாங்கலுடன் கேட்டாள்.

அவள் கேள்வியில் காதலுடன் பார்த்தவன், அவள் தோளில் இருந்த தன் கையை அழுத்திப் பிடித்தான்.

“நான் இப்ப சொல்வதைக் கேட்டு கோபப்படாதேடா. உனக்கு அந்தப் பக்குவம் இல்லனா என்ன செய்வதுன்னு எனக்குப் பயம். அதனால் உங்க அப்பா சொன்னதும் நாம விலகி இருப்பது தான் சரின்னு தோணுச்சு…” என்றவனை அவள் கடுமையாக முறைக்க, முறைத்த அவளின் இமைகளின் மீது தன் உதட்டைப் பதித்தான்.

‘என்னடா இது… கதிரா இது? இப்படி இத்தனை முத்தம் கொடுக்குறாரே. இவருக்கு என் மேல் இவ்வளவு பிரியமா?’ என்று நினைத்தபடி அவனின் இதழொற்றலை ஏற்றுக் கொண்டாள்.

“அப்போ நான் கையை வெட்டிக்கிட்ட பிறகு மட்டும் எப்படி உங்க மனசை மாத்திக்கிட்டீங்க? உங்க பயம் போயிருச்சா?” என்று கேட்டாள்.

“மனுஷனோட உயிரே இல்லாதப்ப நம்ம வலி எல்லாம் எம்மாத்திரம் நயனிமா? என் மேல் உள்ள காதலுக்காக நீ உயிரையே கொடுக்கத் துணியும் போது, தேவையில்லாம என் மனசை நானே குழப்பிக்கிட்டு உன்னை எதுக்கு வருந்த வைக்கணும்னு தோணுச்சு.

நாம சேர்ந்து இருந்தால் உனக்கு வலி வரும்னு நினைச்ச நானே உன்னை விலக்கி வச்சாலும் அதே வலியைத் தானே நீ அனுபவிப்பன்னு யோசிக்காம போயிட்டேன். அப்போ எப்படி இருந்தாலும் நான் உனக்கு வலியைத் தான் தந்துட்டு இருக்கேன்.

இதே என்கூட நீ இருக்கும் போது வரும் வலிக்கு கூட நம்ம காதல் அதுக்கு மருந்து போட்டுடும். ஆனா நீ ஒருபக்கம், நான் ஒரு பக்கம் பிரிஞ்சி போன பிறகு வரும் வலி மரணத்தை விடக் கொடுமையா இருக்கும்னு தோன்றியது. அதனால் தான் என் தேவையில்லாத பயத்தை எல்லாம் தூக்கிப் போட்டுட்டேன்…” என்றவன் தோளில் இதமாகச் சாய்ந்து கொண்டாள் நயனிகா.

அவனும் அவளை அணைத்துக் கொண்டு அமைதியாக இருந்தான்.

சில நொடிகளுக்குப் பிறகு அவன் தோளிலிருந்து நிமிர்ந்தவள், “உங்களுக்கு எப்ப என் மேல விருப்பம் வந்ததுன்னு சொல்லவே இல்லையே?” என்று கேட்டாள்.

“அதைக் கண்டிப்பா சொல்லணுமா என்ன?” என்று குறும்புடன் கேட்டவன், அவள் நெற்றியில் லேசாக முட்டினான்.

“அப்போ சொல்ல மாட்டீங்களா?” என்று மூக்கைச் சுருக்கி கொண்டு கேட்டாள்.

“சொல்றேன்… ஆனா இப்ப இல்ல, நம்ம முதலிரவில்…” என்று கண்சிமிட்டி சிரித்தான்.

சட்டென்று நாணம் வந்து சூழ்ந்து கொள்ள, உதட்டில் லேசான சிரிப்பை மட்டும் கசிய விட்டாள்.

ஆனாலும் உடனே அவள் முகம் மாறியது.

“என்னம்மா?” என்று வாஞ்சையுடன் கேட்டான்.

“அப்பா இன்னும் கோபமா இருக்காரே கதிர். நம்ம கல்யாணம் நடக்குமா?” என்று வருத்தத்துடன் கேட்டாள்.

“கண்டிப்பா நடக்கும்டா. கவலைப்படாதே!” என்றான்.

“ஆனா, அப்பா மாறுவார்னு எனக்கு நம்பிக்கை இல்லை…” என்றாள் விரக்தியுடன்.

“அவர் நினைக்கிறதும் நியாயம் தானேடா. கை இல்லாதவனுக்கு என் பொண்ணைக் கட்டிக் கொடுத்தேன்னு அவர் வெளியே பெருமையாகவா சொல்லிக்க முடியும்?” என்று கேட்டவனை விட்டுத் தள்ளி அமர்ந்து உக்கிரமாகப் பார்த்தாள்.

“என்ன நீங்களும் அவருக்குச் சப்போர்ட்டா பேசுறீங்க? அதானே நீங்களும் அப்படி நினைச்சு என்னை விட்டு விலகிப் போனவர் தானே?” என்றாள் கோபமாக.

“கோபப்படாதே நயனிமா! உண்மையைச் சொன்னால் உங்க அப்பாவை நான் தப்பு சொல்ல மாட்டேன். அவரின் கோபம் நியாயமானது தான். ஆனா நீ அந்த முடிவு எடுத்த பிறகும் அவர் மாறாதது எனக்கு வருத்தம் தான்.

என் கையை மட்டும் பார்த்து முடிவு பண்றவர், என் குணத்தையும் கொஞ்சம் பார்க்கலாமே என்ற ஆதங்கம் எனக்கும் வருது. ஆனா அவர் இடத்தில் இருந்து யோசிச்சு பார்க்கும் போது ஒரேடியா அவரைக் குறை சொல்ல முடியலை.

அதுக்காக உன்னை விட்டுவிடவும் எனக்கு மனசு வரலை. என் வாழ்க்கைக்கு நீ வேணும், என் தாரமா என் கூடவே நீ இருக்கணும். நீ தான் இனி எனக்கு எல்லாம்னு என் மனசு முடிவு செய்து விட்டது. இனி அவர் முடியாதுன்னு சொன்னாலும் நான் விலக மாட்டேன். அதே நேரம் அவர் மனசு மாறக் காத்திருப்பதில் தவறு இல்லைன்னு எனக்குத் தோணுது.

அதனால் தான் ஹாஸ்பிட்டலில் இருந்து வந்த உடனே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதை பத்தி அவர்கிட்ட பேசாமல் அமைதியா இருக்கேன்…” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு மனம் நெகிழ்ந்தாலும் அவளால் வேறு ஒன்றும் பதில் பேச முடியவில்லை.

தங்கள் காத்திருப்பிற்குத் தந்தை சரியான பலன் தருவாரா என்பதில் அவளுக்குச் சந்தேகமே.

அவரின் பிடிவாத குணம் தான் அவளுக்கு நன்றாகத் தெரியுமே.

“என்னாச்சு இன்னும் முகம் ஒரு மாதிரி இருக்கு?” என்று கேட்டான்.

“ம்ப்ச்… என்ன நடக்குமோன்னு தெரியலை. மனசுக்குள் ஒரு மாதிரி பயமா இருக்கு…” என்றாள்.

“இதில் பயப்பட ஒன்னுமில்லை நயனிமா. இன்னும் உன் படிப்பு வேற முடியலையே? முதலில் படி. அதுக்குள்ள என் மாமனார் மனசுல நான் இடம் பிடிக்க முடியுமான்னு பார்க்கிறேன்…” என்றான்.

“ம்ம்… பிடிச்சுடுவீங்க தானே?”

“ட்ரை பண்றேன். முடியலைனா யோவ் மாமா, உன் பொண்ணை எனக்குக் கட்டிக் கொடுக்கிறயா? இல்லை நானே உன் பொண்ணைத் தூக்கிட்டுப் போய்க் கல்யாணம் பண்ணிக்கட்டுமான்னு கேட்டுடுறேன்…” என்று அவன் சிரித்துக் கொண்டே சொல்ல,

“யாரு? நீங்க அப்படிக் கேட்பீங்க?” அவள் சந்தேகமாக இழுக்க…

“நம்புடி தங்கம். கேட்குறேனா இல்லையான்னு பார்…” என்றான் வீரமாக.

“பார்ப்போம்… பார்ப்போம்… நீங்க என்ன செய்யப் போறீங்கன்னு…” என்று கேலியாகச் சொன்னாள்.

மேலும் சிறிது நேரம் கேலியும் கிண்டலுமாகப் பேசிக் கொண்டனர்.

நயனிகாவின் படிப்பு இருப்பதால் பொறுமையாக இருப்போம் என்று நினைத்தான் கதிர்நிலவன்.

ஆனால் அவன் பெண் கேட்கும் சந்தர்ப்பத்தை எல்லாம் ஞானசேகரன் கொடுக்கவே மாட்டார் என்று அறியாமல் போனான்.

“சரி, நான் கிளம்புறேன்…” கதிரிடம் சொல்லிவிட்டு அவன் வீட்டை விட்டு வெளியே வந்தாள் நயனிகா.

அதே நேரம் தன் வீட்டிலிருந்து வெளியே வந்த ஞானசேகரன் மகள் எங்கிருந்து வருகிறாள் என்பதைப் பார்த்ததும் அவரின் முகம் மாற ஆரம்பித்தது.

தந்தையைப் பார்த்ததும் நயனிகா லேசாகத் திடுக்கிட்டு நின்றாள்.

அன்று போல் தந்தை கோபப்பட்டுத் திட்டுவாரோ என்ற பயம் மனதை கவ்வ ஆரம்பித்தது.

ஆனால் மகளின் முகத்தைக் கூர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே சென்று விட்டார் ஞானசேகரன்.

நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டாள் நயனிகா.

அவளின் நிம்மதிக்கு ஆயுள் கம்மி என்பதை அவள் விரைவிலேயே அறிய வேண்டிய நேரமும் நெருங்கி கொண்டிருந்தது.

நயனிகாவும், கதிர்நிலவனும் கைபேசியில் தங்கள் காதலை வளர்க்க ஆரம்பித்தனர்.

ஐந்து நாட்கள் சென்ற நிலையில் அன்று மீண்டும் நயனிகாவை சந்திக்க வந்தான் அரவிந்த்.

தனியாகப் பேச வேண்டும் என்று சொன்னதால் கீழே தரிப்பிடத்தில் நின்று பேசினர்.

“ரிஜிஸ்டர் மேரேஜுக்கு டேட் பிக்ஸ் பண்ணிட்டேன் ஸ்வீட்டி…” என்றான்.

“ஓ, சூப்பர்! என்னைக்கு அரவிந்த்?”

“நாளைக்குக் காலையில் பத்து மணிக்கு ஸ்வீட்டி. நீ வந்துடுவ தானே?”

“கண்டிப்பா வந்துடுவேன் அரவிந்த். நீங்க கவலையே பட வேண்டாம்…” என்றாள்.

“வரும் போது சேலை கட்டிட்டு வா ஸ்வீட்டி…” என்றவனை யோசனையாகப் பார்த்தாள்.

“ஏன் அரவிந்த், சுடிதார் போட்டா போதாதா?”

“இல்லை ஸ்வீட்டி. அவள் பக்கம் ஃபிரண்ட்ஸ் எல்லாம் சேலை கட்டிட்டு வருவாங்களாம். அதான் நீயும் கட்டிட்டு வந்தால் நல்லா இருக்குமேன்னு யோசிச்சேன். உனக்குப் பிடிக்கலைனா வேண்டாம்…” என்றான்.

“ம்ம், பரவாயில்லை அரவிந்த். நான் சேலையிலேயே வர்றேன்…”

“தேங்க்ஸ் ஸ்வீட்டி. ஒரு ஒன்பதரைக்குள் எல்லாம் வந்திடு…” என்றான்.

“ஓகே அரவிந்த்…” என்றதும் அவளிடம் விடைபெற்றுக் கிளம்பினான்.

மறுநாள் காலை ஒன்பது மணிக்கு எல்லாம் சேலையைக் கட்டிக் கொண்டு, தோழி வீட்டு விசேஷம் என்று மட்டும் வீட்டில் சொல்லிவிட்டு தன் வண்டியில் கிளம்பினாள் நயனிகா.

அரவிந்த் சொன்னது போல் ஒன்பதரை மணியளவில் பதிவு அலுவலகம் சென்றாள்.

அங்கே வாசலில் அரவிந்த் பட்டு வேஷ்டி, சட்டையில் மாப்பிள்ளை போல் நின்றிருந்தான்.

“வா ஸ்வீட்டி. சேலையில் ரொம்ப நல்லா இருக்க…” என்றான்.

“தேங்க்யூ அரவிந்த். பொண்ணு வந்துட்டாங்களா?”

“இன்னும் இல்லை ஸ்வீட்டி. வந்துட்டு இருக்கேன்னு சொன்னாள். நீ வா…” என்று அழைத்துச் சென்று அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர சொன்னான்.

“உங்க ஃபிரண்ட் கூட யாரையும் காணோமே?”

“அவனும் வந்துட்டு இருக்கேன்னு போன் போட்டான் ஸ்வீட்டி…”

“ஓகே… மாலை எல்லாம் வாங்கிட்டீங்களா?”

“என் ஃபிரண்ட் தான் வாங்கிட்டு வந்துட்டு இருக்கான்…”

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே அரவிந்தின் நண்பன் மாலையுடன் வந்தான்.

மேலும் நேரம் செல்ல, “இன்னும் பொண்ணைக் காணோமே அரவிந்த்? நீங்க போன் பண்ணி பார்த்தீங்களா?” என்று கேட்டாள்.

“பண்ணிட்டேன் ஸ்வீட்டி. நீங்க உள்ளே போய்ட்டு இருங்க, நான் வந்துடுறேன்னு சொன்னாள். வா, நாம உள்ளே போகலாம். இன்னும் ஐந்து நிமிஷம் தான் இருக்கு…” என்றான்.

“பொண்ணு வந்ததும் சேர்ந்து போகலாமே அரவிந்த்?” என்று கேட்டாள்.

“நாம உள்ளே போய் நின்னா அவள் வந்ததும் ரிஜிஸ்டர் பண்ண ஆரம்பிச்சுடலாம் ஸ்வீட்டி…” என்றதும் ‘சரிதான்’ என்று அவனுடன் உள்ளே சென்றாள்.

உள்ளே சென்று நின்ற சிறிது நேரத்தில், “அரவிந்த், நயனிகா யார்? வாங்க…” என்று அலுவலர் அழைக்க,

“வா ஸ்வீட்டி…” என்று அவளின் கையைப் பற்றி மேஜையின் அருகில் அழைத்துச் சென்றான்.

“என்ன அரவிந்த் இது? இவர் ஏன் என் பெயரை கூப்பிடுறார்?” என்ற நயனிகாவின் சந்தேகமான கேள்விக்கு எல்லாம் அவன் பதிலே சொல்லவில்லை.

தன் கையைப் பிடித்திருந்த அவனின் கையிலிருந்த அழுத்தத்தை உணர்ந்த நயனிகா இங்கே ஏதோ தப்பாக நடக்கிறது என்பதை உணர்ந்து தன் கையை விடுவிக்க முயன்றாள்.

“பேசாமல் வா ஸ்வீட்டி…” என்றான் அழுத்தமாக.

“என் கையை விடுங்க அரவிந்த். என்ன நடக்குது இங்கே?” கோபமாகக் கேட்டாள்.

“உனக்கும், அரவிந்துக்கும் இப்போ இங்கே கல்யாணம் நடக்கப் போகுதுமா…” என்று சொல்லிய படி அங்கே வந்தார் ஞானசேகரன்.

“அப்பா…” என்று அதிர்ந்து அழைத்த நயனிகாவிற்குத் தலை சுற்றுவது போல் இருந்தது.

நெற்றியை அழுந்த பிடித்த படி தந்தையின் முகத்தைப் பார்த்தவளின் கண்களில் அவர் மட்டுமில்லாது, அபிராமியும், தயாவும் விழுந்தனர்.

கூடவே அரவிந்தின் பெற்றோரும் நிற்க, தான் முற்றிலும் ஏமாற்றப் பட்டிருக்கிறோம் என்ற உண்மை முகத்தில் அறைய, மூளை செயல் இழந்தது போல் உறைந்து போனாள் நயனிகா.