2 – இதயத்திரை விலகிடாதோ?

அத்தியாயம் – 2

தன் மேல் விழுந்தவனைப் பிடிக்க முடியாமல் தடுமாறினாள் யுவஶ்ரீ.

கடைசி நொடியில் சுவரில் சாய்ந்து சமாளித்து நின்றவள், “ஏன் இந்த அட்டகாசம் செய்றீங்க? உள்ளே வாங்க!” என்று கடுப்புடன் சொல்லிவிட்டு, அவனைக் கண்டு கொள்ளாமல் உள்ளே சென்றாள்.

“ஏய் பொண்டாட்டி, புருஷன் விழப் போறான். பிடிக்காம உன் பாட்டுக்குப் போற…” என்று கத்திக் கொண்டே தடுமாறி வாசலிலேயே நின்றான்.

“குடிச்சுட்டு வீடு வரை சரியா வர தெரிந்தது இல்ல? வீட்டுக்குள்ள வர மட்டும் ஒரு ஆளு வேணுமாக்கும்? உள்ளே வந்து கதவை மூடுங்க. அக்கம்பக்கத்து ஆளுங்க எல்லாம் வந்து சத்தம் போட போறாங்க…” என்றாள்.

“என்னை எவன் சத்தம் போடுவான்? எங்கே வர சொல்லு பார்ப்போம்…” என்று வீராப்பு பேசியவனைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டாள்.

மீண்டும் அவனருகில் வந்தவள், அவனின் கையைப் பிடித்து இழுத்து வீட்டிற்குள் விட்டுக் கதவை மூடி தாழ் போட்டாள்.

“ஏய், புருஷனை தரதரன்னு இழுத்துட்டு வர்ற? கொஞ்சமாச்சும் புருஷன்னு மரியாதை இருக்கா? வெள்ளிக்கிழமை ஆனால் பட்டையும், நாமுமா பயபக்தியா இருக்கத் தெரியுது. புருஷன் மேல மரியாதை மட்டும் இல்லை…” என்று திட்டிக் கொண்டே சோஃபாவில் சென்று தொப்பென்று விழுந்தான்.

அவன் பேசியது காதில் விழாதது போல் சமையலறைக்குச் சென்றவள், “சாப்பிட்டு வந்துட்டீங்களா? இல்லை, செய்யணுமா?” என்று கேட்டாள்.

“அதெல்லாம் சிக்கன், மட்டன்னு வெளுத்துக் கட்டிட்டேன். ஆனா இன்னும் பசிக்கிற போல இருக்கு? என்ன செய்து வச்ச?” என்று கேட்டான்.

அவன் சிக்கன், மட்டன் என்று சொன்னதும் முகத்தைச் சுளித்தாள்.

‘வெள்ளிக்கிழமை அதுவுமா நான்வெஜ்’ என்று முணுமுணுத்துக் கொண்டவள், சப்பாத்தி மாவை எடுத்து தேய்க்க ஆரம்பித்தாள்.

அவளுக்குத் தெரியும் வீட்டிலும் வந்து சாப்பிடுவான் என்று. அதனால் அவனுக்கும் சேர்த்து மாவை பிசைந்து வைத்திருந்தாள்.

தோசை கல்லை சுட வைத்தவள் மூன்று சப்பாத்திகளைச் சுட்டு எடுத்து பன்னீர் மசாலாவுடன் டைனிங் டேபிளில் சென்று வைத்தாள்.

“சாப்பிட வாங்க…” என்று அழைக்க, அவனோ சோஃபாவில் சாய்ந்து ஒரு காலை தரையிலும், இன்னொரு காலை சோஃபா மேலேயும் வைத்து பப்பரப்பா என்று படுத்துக் கிடந்தான்.

அவனிடமிருந்து குறட்டை சத்தமும் கேட்க, ‘அதுக்குள்ள தூங்கியாச்சு’ என்று புலம்பிக் கொண்டே அவன் அருகில் சென்று பார்த்தாள்.

ஆவென்று வாயைப் பிளந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

தூங்கியவன் கையைப் பிடித்து வெக்கென்று இழுத்தாள். அதில் அவன் அரண்டு எழுந்து அமர்ந்தான்.

“ஏய் எருமை, இப்படியா எழுப்பி விடுவ?” போதையும், தூக்க கலக்கமுமாக வள்ளென்று விழுந்தான்.

“சாப்பாடு ரெடி ஆகிடுச்சு. சாப்பிட வாங்க…” அவன் திட்டவே இல்லை என்பது போல் டைனிங் ஹாலுக்குச் சென்றாள்.

“என்னால் அங்கே எல்லாம் வர முடியாது. நீ இங்கே எடுத்துட்டு வா…” என்றான்.

“இது வேறயா?” என்று சொன்னாலும் தட்டை எடுத்து வந்து கொடுத்தாள்.

“ஏன் புருஷனுக்கு ஊட்டி எல்லாம் விட மாட்டியா?” கீழ் கண்ணால் அவளைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

“சாப்பிடணும்னா சாப்பிடுங்க. இல்லனா பட்டினி கிடங்க. நான் போய்த் தூங்குறேன்…” என்று தட்டை அவன் கையில் கொடுத்து விட்டு நகர்ந்தாள்.

“ஏய், தூங்கிடாதே! நான் சாப்பிட்டு வருவேன்…” என்றவன் வேகமாகச் சப்பாத்தியை பிட்டு வாயிற்குள் தள்ளினான்.

“ம்ப்ச்…” என்று கடுப்புடன் முனங்கி விட்டு உள்ளே சென்று படுக்கையில் படுத்துவிட்டாள்.

படுத்ததுமே கண்கள் சொருகின. நேரம் அப்போது பதினொன்றை தாண்டியிருந்தது.

காலையிலிருந்து கணினியைப் பார்த்தது கண்கள் எரிய, கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

பத்து நிமிடங்கள் கடந்த நிலையில் அவள் வயிற்றின் மீது அழுத்தமாக விழுந்தது சூர்யாவின் கை.

அவன் முகம் அவள் முகத்தை நோக்கி குனிந்து அவளின் உதடுகளைத் தேடியது.

“ம்ம்ம்… குடிச்சுட்டுப் பக்கத்தில் வராதீங்கன்னு எத்தனை முறை சொல்வது?” என்று அவன் முகத்தைத் தள்ளி விட்டாள்.

“குடிச்சா நான் புருஷன் இல்லைனு ஆகிடுமா? நீ பொண்டாட்டி இல்லைனு ஆகிடுமா?” என்றான்.

“நல்லா வியாக்கியானம் மட்டும் பேசுங்க. நான் குடிக்காதீங்கன்னு சொல்வதை மட்டும் காதில் வாங்கிடாதீங்க…” என்றாள்.

“நான் காதில் வாங்க மாட்டேன்னு தெரிந்தும், ஒவ்வொரு வாரமும் சொல்லிக் கட்டி, கோபமா என் கூடப் பேசாம அன்னைக்கு முழுவதும் சுத்துற பார்த்தியா? உனக்கு ரொம்பப் பொறுமைடி பொண்டாட்டி…” என்று நக்கல் அடித்தான்.

“உங்களைப் போல ஒரு எருமையைக் கட்டினால் பொறுமையா இருந்து தான் ஆகணும்…” என்று மெல்லிய குரலில் அவள் முனங்கியது அவன் காதில் விழவில்லை.

அவன் அவளைத் தனக்குள் இழுத்துக் கொள்வதில் தான் முனைப்பாக இருந்தான்.

அவள் தடுக்க, “ம்ப்ச், எனக்கு இப்ப நீ வேணும். பேசாம இருடி…” என்றவன் அவளின் மறுப்பை எல்லாம் மனதிலே ஏற்றிக் கொள்ளாமல் அத்து மீற ஆரம்பித்தான்.

“நைட்டி போடாதேன்னு உனக்கு எத்தனை முறை சொல்வது? உனக்குத் தான் நைட் பேண்ட், சர்ட் வாங்கிக் கொடுத்தேன்ல? அதைப் போட வேண்டியது தானே? சாக்கு மூட்டை மாதிரி எப்பவும் இதைப் போட்டு மொத்தமா மூடி மனுஷன் மூடை கெடுக்க வேண்டியது…” என்று வள்ளென்று விழுந்து நைட்டியை உருவும் வேலையைச் செயல்படுத்த ஆரம்பித்தான்.

“எனக்குப் பிடிக்கலைன்னு சொல்றேன்ல. காதிலேயே வாங்கலைனா என்ன அர்த்தம்?” என்ற குரல் எங்கே அவன் காதுகளை எட்டியது?

தன் தேவை ஒன்றே பெரியதாகத் தெரிய, அதில் மட்டும் முனைப்பாக இருந்தான்.

குடித்து விட்டு வந்தால் அப்படித்தான். அவன் அவனாகவே இருக்க மாட்டான்.

சும்மாவே அவள் சொல்வதற்கு எல்லாம் ஏட்டிக்குப் போட்டி தான் செய்வான். குடித்திருந்தால் சுத்தம்!

கிழமைகளில் அவள் வெறுப்பதே இந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளைத்தான்.

மூன்று நாட்களும் குடிக்க அவனுக்கு இருக்கும் காரணம் ஸ்ட்ரெஸ்! கணினியில் வேலை பார்த்துச் சூடாகி போகும் மூளைக்கு மது தான் மருந்து என்பான்.

அவளும் அவனை அந்தப் பழக்கத்தை விட வைக்க எவ்வளவோ சண்டை போட்டு விட்டாள். ஆனால் அவள் சொல்கிறாள் என்று வீம்புக்கு என்றே நிறையக் குடித்து விட்டு வருவான்.

அதனால் தன் கோபத்தைக் காட்டி அவனிடம் பேசாமல் இருந்து பார்த்தாள்.

‘பேசவில்லை என்றால் போ!’ என்று அதற்கும் அலட்சியம் தான் காட்டினான்.

இன்றும் அதே போல் காலையிலிருந்து தன் கோபத்தை அவனிடம் காட்டிப் பார்த்தாள். ஆனால் அதற்கு எல்லாம் அவன் சிறிதும் அசைந்தான் இல்லை.

சூர்யா தன் தேவை முடிந்து விலகிப் படுத்த போது, அவளின் உடல் எல்லாம் ரணமாக வலித்தது.

முரட்டுத்தனமாக அவளைக் கையாண்டிருந்தான். அவளின் உடை எல்லாம் எங்கோ போயிருக்க, போர்வைக்குள் தன்னைச் சுருட்டிக் கொண்டாள்.

தன் வேலை முடிந்தது என்று அவன் அப்படியே அவளை அணைத்துக் கொண்டு உறங்க ஆரம்பிக்க, அவளின் எரிச்சல் அதிகரித்தது.

அவனின் கையை எடுத்து விட்டு போர்வையை மூடி கொண்டு எழுந்து உடையை மாற்றி விட்டுக் குளியலறை சென்று விட்டு வந்து பார்த்தாள்.

ஒன்றும் அறியாத குழந்தை போல் வாயைப் பிளந்து கொண்டு தூங்கும் கணவனைப் பார்க்கப் பார்க்க எரிச்சல் தான் வந்தது.

அவனைத் தாண்டி தள்ளி சென்று படுக்கையில் விழுந்தவளுக்கு ‘என்ன வாழ்க்கை இது?’ என்று தான் தோன்றியது.

நன்றாகப் படித்துக் கணினி துறையில் வேலை பார்த்தாலும் எப்படியாவது வாழலாம் என்று நினைப்பவள் அல்ல அவள்.

இப்படித்தான் வாழ வேண்டும் என்று கொள்கை கொண்டவள்.

ஆனால் அவளுக்கு வாய்த்த கணவனோ முற்றிலும் வேறானவன்.

இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கட்டுப்பாடுகளுக்குள் அவள் அடங்க, அவனோ வேலையைத் தாண்டி சந்தோஷமாக வாழ்க்கையைக் கழிக்க வேண்டும் என்று நினைத்துக் கட்டுக்குள் அடங்காமல் செல்பவன்.

அதற்காகப் பல விதமான கெட்ட பழக்கங்கள் உடையவன் என்றும் சொல்வதற்கு அல்ல.

வார விடுமுறைகளில் குடிப்பது தான் அவனின் பெரிய கெட்ட பழக்கம். அதைத் தவிர அவனுக்கு இருக்கும் பழக்கங்கள் எல்லாம் அன்றாட வாழ்க்கையோடு கலந்தவை.

இருவருக்கும் திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகின்றன.

ஆனால் இந்த ஆறு மாதங்களில் ‘என்ன வாழ்க்கை இது?’ என்று யுவஶ்ரீயை பல முறை நினைக்க வைத்து விட்டான் சூர்யா.

உடல் வலித்தாலும் உறக்கம் கண்களைச் சுழற்ற, மெள்ள மெள்ள நித்திரையைத் தழுவினாள் யுவஶ்ரீ.

காலை மீண்டும் கண் விழிக்கும் போது கணவனின் கைகளுக்குள் இருந்தாள்.

அவளாகச் செல்லவில்லை. அவன் தான் நகர்ந்து வந்து அவளைத் தன் கைகளுக்குள் அடக்கி இருந்தான்.

அவன் இரவு படுத்திய பாட்டில் ஏற்கெனவே உடல் வலிக்க, இப்போது அவன் இறுக்கி அணைத்திருந்ததில் இன்னும் உடல் வலித்தது.

அவன் கையை வேகமாக எடுத்து விலக்கிவிட்டாள்.

“ஏய் பொண்டாட்டி, பக்கத்தில் வாடி! கட்டிக்கிட்டு தூங்க தானே கூப்பிடுறேன்…” என்று தூக்கத்திலேயே அவளை அழைத்தான்.

“விடிஞ்சிருச்சு…” என்றவள், அவனின் துழாவிய கைகளுக்குள் சிக்காமல் எழுந்து கொண்டாள்.

“இன்னைக்கு வீக் எண்ட் லீவ் தானே. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு, வா…” என்றழைத்தான்.

“எனக்குத் தூக்கம் வரலை…” என்றவள் எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

தான் அருகில் இருந்தால் இரவு வேலையைத் தான் தொடருவான் என்று தெரியும்.

மீண்டும் உடல் வலியை வாங்கிக் கொள்ள அவள் தயாராக இல்லை.

குளித்து வேறொரு நைட்டியைப் போட்டுக் கொண்டு, வெளியே வந்து கதவை திறந்தாள்.

கதவில் தொங்கிய பையில் பால் பாக்கெட் இருக்க, எடுத்து வந்து பாலை காய்ச்சினாள்.

பால் பொங்கியதும் காஃபி போட்டவள், கப்பில் ஊற்றி எடுத்துக் கொண்டு பால்கனி ஊஞ்சலில் சென்று அமர்ந்தாள்.

காலை ஏழு மணி ஆகியிருந்தது.

ஆட்கள் நடமாட்டமும், வாகனங்கள் விரைவதுமாக இருக்க, வழக்கம் போல வேடிக்கை பார்த்தபடி காஃபியை அருந்தி முடித்தாள்.

அவளின் மனதில் இப்போது எந்த எண்ணமும் ஓடவில்லை. அமைதியாக இருந்தது.

வெறுப்போ, விருப்போ எதுவுமில்லை.

அந்த அமைதியுடனே சில நிமிடங்கள் அமர்ந்திருந்தவள், எழுந்து அடுத்து இன்று என்ன செய்வது என்று யோசித்தாள்.

கணவன் எழ காலை பத்து மணியாவது ஆகும். அதனால் உடனே சமையலை முடிக்க வேண்டும் என்ற எந்தப் பரபரப்பும் இல்லை.

ஒரு வாரமாக அலுவலத்திற்குப் போட்டு சென்ற உடைகள் அழுக்கு கூடைக்குள் இருக்க, அதை எடுத்து மிஷினில் போட்டாள்.

அதை ஓட விட்டு, துடைப்பத்தை எடுத்து வீட்டை பெருக்கியவள், பின் துடைக்க ஆரம்பித்தாள்.

அந்த வேலை முடியவே ஒன்பது மணி ஆகிவிட, அதற்குள் வாஷிங்மிஷினும் ஓடி முடித்திருந்தது.

துணிகளை எடுத்துப் பால்கனியில் கட்டியிருந்த கயிற்றில் விரித்து விட்டாள்.

அந்த வேலை முடிந்ததும் சமையல் வேலையைச் செய்ய, சமையலறைக்குச் சென்றாள்.

காலையில் என்ன செய்யலாம் என்று யோசித்தாள்.

பூரி சாப்பிட வேண்டும் போல் இருந்தது.

உருளைக்கிழங்கை எடுத்து வேக வைத்து விட்டு மாவை பிசைய ஆரம்பித்தாள்.

அப்போது அவளில் கைபேசி இசைக்க, வரவேற்பறையில் இருந்த கைபேசியைச் சென்று எடுத்தாள்.

சூர்யாவின் அம்மா சித்ரா அழைத்துக் கொண்டிருந்தார்.

“ஹலோ அத்தை, எப்படி இருக்கீங்க?” அழைப்பை ஏற்றுக் கேட்டாள்.

“நான் நல்லா இருக்கேன்மா. நீயும், கண்ணனும் எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கோம் அத்தை…”

“கண்ணா என்ன செய்றான்?”

“இன்னும் தூங்குறார் அத்தை…”

“இன்னுமா எழுந்துக்கலை?”

“நைட் லேட்டாத்தான் வீட்டுக்கு வந்தார் அத்தை…”

“ஓ, நேத்தும் குடிச்சுட்டு வந்தானா?” என்று கேட்டவருக்கு மௌனத்தைப் பதிலாக்கினாள்.

“இந்தப் பழக்கத்தை மட்டும் விடவே மாட்டிங்கிறான். இவனை என்ன தான் செய்வது? நீ கொஞ்சம் எடுத்து சொல்லுமா. நான் சொல்லி சொல்லி அலுத்துப் போயிட்டேன்…” என்றார்.

அவளும் சொல்லாமலா இருந்தாள்? சொன்னால் இருவருக்கும் வாக்குவாதம் தான் நீளுமே தவிர, தீர்வு வருவதே இல்லை.

“சரி அத்தை…” என்றதுடன் முடித்துக் கொண்டாள்.

“காலையில் என்ன சாப்பிட்டமா?”

“துணியைத் துவைச்சு, வீடு எல்லாம் துடைச்சு விட்டேன் அத்தை. இப்பத்தான் பூரி செய்யலாம்னு மாவு பிசைந்தேன். இனி தான் குருமா வச்சுட்டு, பூரி சுடணும்…” என்றாள்.

“சரிமா, சீக்கிரம் செய்து சாப்பிடு. அவனையும் எழுப்பிச் சாப்பிட வை. அப்புறம் நீங்க இரண்டு பேரும் ஊருக்கு வந்து இரண்டு மாசம் ஆச்சு. ஊருக்கு வந்துட்டு போகலாமே?” என்று கேட்டார்.

“அவர்கிட்ட தான் சொல்லணும் அத்தை. நீங்க சொல்லுங்க, அப்பத்தான் வருவார்…” என்றாள்.

“நான் நேத்து சொன்னேன். பார்ப்போம்மான்னு சொல்லி முடிச்சுட்டான். நீயும் ஒருமுறை சொல்லு. இல்லனா… நீயே வெள்ளிக்கிழமைக்கு டிக்கெட் போடு. டிக்கெட் நான் தான் போட சொன்னேன்னு சொல்லு. அப்பத்தான் வருவான்…” என்றார்.

தன் மகனை பற்றி நன்றாக அறிந்திருந்தும் இவர் எப்படித்தான் இப்படிச் சொல்கிறாரோ? என்று தான் அவளுக்குத் தோன்றியது.

அவளாக டிக்கெட் போட்டால் ‘நீயே தானே போட்டாய். அப்போ நீ மட்டும் போயிட்டு வா’ என்பானே தவிரத் தன்னுடன் கிளம்பி எல்லாம் வர மாட்டான் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.

“நான் அவர்கிட்ட சொல்றேன் அத்தை. அதுக்குப் பிறகு டிக்கெட் பார்ப்போம்…” என்று முடித்துக் கொண்டாள்.

“சரிமா, பாரு…” என்றவர் அழைப்பை துண்டித்து விட்டார்.

மாமியாரிடம் பேசி முடித்து விட்டு சமையலை தொடர்ந்தாள்.

பூரி, குருமாவை செய்து முடித்து டைனிங் டேபிளில் எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது தான் எழுந்து வந்தான் சூர்யா.

“ஹோய் பொண்டாட்டி, காலையில் என் கூட இருன்னு சொன்னேன்ல? குடும்ப இஸ்திரி மாதிரி இங்கே வந்துட்ட?” என்று கேட்டுக் கொண்டே சாப்பாடு மேஜை அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

இன்னும் முகத்தைக் கூடக் கழுவவில்லை. அவனின் தலை ஒழுங்கற்றுப் பரட்டையாக இருந்தது.

இரவு ஏற்றிய போதை உச்சி வரை ஏறி தலையைக் கனக்க வைத்துக் கொண்டிருந்தது.

தலையைப் பிடித்துக் கொண்டே அவளைப் பார்த்தான்.

அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

“புருஷன் தலையைப் பிடிச்சுட்டு உட்கார்ந்து இருக்கானே… என்ன ஏதுன்னு கேட்க தோனுதா உனக்கு?” கடுப்புடன் குற்றம் சாட்டினான்.

அவளோ அவன் பேசவே இல்லை என்பது போல் தட்டை எடுத்து நான்கு பூரிகளை வைத்தவள், குருமாவை ஊற்றி நிதானமாக உண்ண ஆரம்பித்தாள்.

“நீ ரொம்பப் பண்றடி. எனக்குத் தலை வலிக்குது. காஃபி போட்டுக் கொண்டு வா…” என்றான் அதிகாரமாக.

“நீங்க காஃபி எல்லாம் குடிப்பீங்களா என்ன?” என்று கேட்டவளை முறைத்துப் பார்த்தான்.

அவன் எப்போதும் காஃபி, டீ என்று எதுவும் குடிக்க மாட்டான்.

ஆனால் குடித்து விட்டு மறுநாள் தலை வலிக்கும் போது மட்டும் காஃபி குடித்தால் தான் தலைவலி விடும் என்று காஃபி கேட்பான்.

அதை அவள் குத்திக் காட்ட, அவனின் முகம் கடுத்தது.

“உங்க அம்மாவுக்குப் போன் போட்டு உங்க பொண்ணு எனக்கு ஒரு காஃபி கூடப் போட்டு தர மாட்டிக்கிறாள்னு சொல்லுவேன்…” என்று அவன் மிரட்டியதும், உண்டு கொண்டிருந்த அவளின் கை அப்படியே நின்றது.

கண்கள் அவனை வெறித்தன.

“சொல்லுங்க. இங்கே அவங்க மகள் வாழும் வாழ்க்கையைப் பற்றி அவங்களுக்கும் தெரியட்டும்…” என்றாள்.

“ஏன்? நீ அப்படி என்ன குறையான வாழ்க்கை வாழ்ற? நான் என்ன உன்னை அடிச்சேனா? உதைச்சேனா? கொடுமைப்படுத்தினேன்னா?” என்று கேட்டான்.

அடிப்பது, உதைப்பது மட்டுமா கொடுமை?

மனைவி மீது கணவனுக்கு அன்பில்லாதது அல்லவா பெரும் கொடுமை! அது ஏன் இவனுக்குப் புரியவே இல்லை? என்று கணவனை விரக்தியாகப் பார்த்தாள் யுவஶ்ரீ.