2- வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்!

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 2

“சர்வேஸ்வரா…”

“ஈஸ்வரா…”

“தம்பி…”

“நாட்டாமை…”

“ஐயா…”

என்று விதவிதமான அழைப்புகள் கூட்டத்தில் இருந்து பறந்து வந்து அவனின் மீது மோதின.

அத்தனை அழைப்பிலும் அவனின் பேச்சிற்கான எதிர்ப்புக் கலந்திருந்தது.

‘சர்வேஸ்வரா’ என்ற அழைப்புக்கு உரியவர் அவனின் தாய் மீனாம்பிகை!

அவரும் அங்கே பஞ்சாயத்து பார்க்க வந்திருந்தார். கூட்டத்தில் ஒரு ஓரமாக நின்றிருந்த தாயின் புறம் பார்வையைத் திருப்பி அவரைத் தீர்க்கமாகப் பார்த்தவன், “இது இந்த ஊர் நாட்டாமையின் தீர்ப்பு!” என்றான் அழுத்தமாக.

அந்த வார்த்தை அவரை வாயடைக்க வைத்தது.

பெற்ற தாயான அவரே வாயடைத்து தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு நின்ற போது மற்றவர்களைப் பற்றிக் கேட்கவும் தான் வேண்டுமோ? நொடிப்பொழுதில் அங்கே மௌனம் ஆட்சி செய்தது.

ஆனாலும் வயதில் மூத்தவர் ஒருவர் அவனின் அழுத்தமான பேச்சையும் மீறி அவனுக்கு எடுத்து சொல்ல ஆரம்பித்தார்.

“நீங்க சொன்னது நாட்டாமையின் தீர்ப்பா இருக்கலாம் தம்பி. ஆனா நாட்டாமையின் தீர்ப்பில் நியாயம் இருக்கணும். நேர்மை இருக்கணும். ஆனா உங்க தீர்ப்பில் நியாயம் குறையுது தம்பி. தீர்ப்பை ஆலோசனை பண்ணுங்க…” என்றார் கண்டனமாக.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

அவர் பேசியதில் அடுத்தவருக்கும் தைரியம் வர, “ஆமா தம்பி, நீங்க அப்படிச் சொன்னது சரியில்லை. அந்தப் பொண்ணும், பையனும் ஒரே வீட்டுக்குள்ளார தனியா இருந்தாங்க என்பது தான் பிராதே. அப்படி இருக்கும் போது அந்தப் பையன் கூடத் தனியா இருந்த புள்ள கழுத்தில் நீங்க எப்படித் தாலி கட்ட முடியும்?” என்று கேட்டார்.

“அதானே… தம்பிக்கு என்ன வேற பொண்ணா கிடைக்கலை? இந்தப் பொண்ணு என்ன சாதி, சனம்னு தெரியலை. அவுக குடும்பம் எப்படினு தெரியலை. ஊரை சுத்தி பார்க்க வந்த பொண்ணு கழுத்தில போய்த் தாலி கட்டணும்னு சொல்றீங்களே…” என்று இன்னொருவர் பேச,

அடுத்தும் ஒவ்வொருவராகப் பேச ஆரம்பிக்க, “எல்லாரும் கொஞ்சம் பேச்சை நிறுத்துறீங்களா?” என்று ஓங்கி குரல் கொடுத்தாள் சக்தி.

“என்னமோ உங்க நாட்டாமை தாலியை நீட்டியதும் கட்டு தாலியைனு நான் கழுத்தை நீட்ட போறது போல இருக்கு உங்க பேச்சு. யார்? யார் கழுத்தில் தாலியைக் கட்டுவது?” என்று ஆத்திரமாகக் கேட்டாள்.

“அதில் என்ன சந்தேகம்? உன் கழுத்தில் தாலி கட்டப்போவது நான் தான்…” என்று தீர்மானமாகச் சொன்னான் சர்வேஸ்வரன்.

“என்ன நாட்டாமை சார், இது தான் உங்க ஊர் நியாயமான தீர்ப்பா?” என்று நக்கலாகக் கேட்டாள்.

“உன் வழக்கில் இந்த நாட்டாமையின் தீர்ப்பு இது தான்!” என்றான் உறுதியாக.

“ஓஹோ! உங்க ஊர் தீர்ப்புல தப்பு இருக்கும்னு தான் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா இப்போ நானே நேரிலேயே பார்த்துட்டேன். தப்பான தீர்ப்புக்குச் சாட்சியாக ஒரு கூட்டம், அதுக்கு ஒரு விசாரணை, அதைச் சொல்ல ஒரு நாட்டாமை…” என்றாள் எகத்தாளமாக.

“ஏய் பொண்ணு, மருவாதையா பேசு. எங்க ஊரு நடுவுல நின்னுப்போட்டு எங்க ஊரையே நாக்கு மேல பல்லு போட்டு பேச உனக்கு எம்புட்டுத் தைகிரியம் இருக்கணும்?” என்று கத்தி போல் சீறிக் கொண்டு வந்தது எதிர்ப்பு.

“முதலில் உங்க நாட்டாமை சொன்ன தீர்ப்பில் என்ன நியாயம் இருக்குன்னு கேளுங்க. என்னைக் குறை சொல்ல வந்துட்டீங்க…” என்று அலட்சியமாகக் கையை வீசினாள் சக்தி.

“அந்தப் புள்ள சொல்றதும் சரிதானுங்களே அய்யா. ஒரே வீட்டில் ஒன்னா இருந்த சோடிக்குக் கல்யாணம் கட்டி வைக்கிறது தானே நியாயம். அதை விட்டுப்போட்டு இப்போ தீர்ப்பையே மாத்தி சொன்னது என்ன விதத்தில் நியாயம்ங்க அய்யா?” என்று கூட்டத்தில் ஒருவர் குரல் கொடுத்தார்.

“அதானே…” என்று சிலர் எசப்பாட்டு போட,

“இதுக்கு நீங்க தான் பதில் சொல்லணும் தம்பி…” என்றார் ஒரு பெரியவர்.

“ஐயா, நியாயம் இல்லாம நான் ஒரு காரியம் பண்ணுவேன்னு நீங்க நினைக்கிறீங்களா?” என்று அந்தப் பெரியவரிடம் கேட்க, அவர் என்ன பதில் சொல்வது என அறியாமல் மலைத்துப் போனார்.

அந்த ஊர் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப தான் அவன் தீர்ப்பு சொல்வான் என்று நன்றாக அறிந்தவர் அவர். ஆனாலும் இப்போது அவன் மாற்றிப் பேசியதின் காரணம் புரியாமல் அவனைப் பார்த்தார்.

“இந்தத் தீர்ப்பு நான் சொல்லவும் காரணம் இருக்குங்க ஐயா. இப்போ எனக்கும், அந்தப் பொண்ணுக்கும் தான் கல்யாணம் நடந்து ஆகணும்ங்க ஐயா…” என்றான்.

“ஆனா தம்பி…” என்று அவர் எதுவோ கேட்க வர, அதற்குள் சக்தி அவனைக் கடுமையாக முறைத்து, “நீங்க நினைப்பது நிச்சயம் நடக்காது நாட்டாமை…” என்று உறுதியாகத் தெரிவித்தாள்.

“ஏன் நடக்காது? நடத்தி காட்டுறேன் நான்…” என்றான் தீர்மானமாக.

உறுதியும், தீர்மானமும் அங்கே முட்டி மோதி கொண்டது.

“இப்படி நீங்க பிடிவாதம் பிடிக்க என்ன காரணம் நாட்டாமை?” என்று பெரிய தலை ஒருவர் கேட்க,

“சொல்றேன்னுங்கய்யா…” என்றவன், அவ்விடத்தை விட்டு எழுந்து கீழே இறங்கி சக்தியின் அருகில் சென்று நின்றான்.

அவன் கீழே இறங்கிய காரணம் அறியாமல் ஊர்மக்கள் அனைவரும் அவனைக் கேள்வியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தன் அருகில் வந்து நின்றவனை ஏற, இறங்க பார்த்து, “என்ன நாட்டாமை என்னென்னமோ பேசிட்டு இருக்கிறீங்க? இப்போ எதுக்கு என் பக்கத்தில் வந்து நிற்கிறீங்க?” என்று அவனுக்கு மட்டும் கேட்டும் குரலில் பல்லை கடித்துக் கொண்டு கேட்டாள் சக்தி.

“நான் சொன்னதை நடத்தி காட்ட வேண்டாமா சக்தியாரே?” என்று அவளின் புறமே திரும்பாமல் சொன்னான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“இல்லை, நான் நடக்க விடமாட்டேன்…” என்றாள் அழுத்தமாக.

“இப்போ நிலைமை உன் கையை மட்டும் இல்லை, என் கையை மீறியும் போயிருச்சு. இனி இந்த விஷயத்தில் இருந்து நீயோ இல்லை நானோ பின் வாங்க முடியாது. அதனால் நடப்பதை மட்டும் வேடிக்கை பாருங்க சக்தியாரே…” என்று நக்கல் தொனிக்கச் சொன்னவனை முறைத்தாள் சக்தி.

“ஊர் மக்கள் எல்லாருக்கும் இப்போ ஒரு விசயம் நான் சொல்லி ஆகணும்…” அவளின் முறைப்பை உணர்ந்தாலும் ஊராரை பார்த்துப் பேச்சை ஆரம்பித்தான் சர்வேஸ்வரன்.

“என்ன விசயம் தம்பி?” என்று ஒருவர் கேட்க,

“இப்போ பஞ்சாயத்தில் நிற்கும் இவள் வேறு யாருமில்லை… என் மனைவி சக்தி!” என்று அவன் சொல்லிய நிமிடத்தில் அங்கே சலசலவென்று பேச்சுக்கள் எழுந்தன.

அவனின் அன்னை மீனாம்பிகை திகைத்துப் போய் மகனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சக்தியோ இன்னும் கடுமையாக அவனை முறைத்து, “மிஸ்டர் நாட்டாமை, இதென்ன புதுகதை?” என்று கடுப்புடன் கேட்டாள்.

“புதுகதையா?” என்று சக்தியின் புறம் திரும்பி அவளின் கண்களை ஊடுருவி பார்த்துக் கேட்டான்.

அவனின் பார்வையைச் சில நொடிகள் சளைக்காமல் எதிர் கொண்டாள் சக்தி. ஆனாலும் ஏதோ சேதி சொல்ல முயன்ற அவனின் விழிகளின் வீச்சை தாங்க முடியாதவள், மெல்ல தன் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

“என்ன தம்பி சொல்றீங்க?” என்று அதிர்வில் இருந்து வெளியே வந்த ஒருவர் கேட்டார்.

“உண்மையைத்தான் சொல்றேன். எங்க இரண்டு பேருக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சு. அவள் இந்த ஊருக்கு வந்ததுக்குக் காரணம் ஊரை சுத்தி பார்க்க இல்லை. என்னைப் பார்க்கத்தான் வந்தாள்…” என்று முழக்கமிடுவதைப் போல் ஊரார் அனைவருக்கும் கேட்கும் வண்ணம் உரக்க சொன்னான் சர்வேஸ்வரன்.

“என்ன தம்பி இம்புட்டு நாளும் இல்லாம இப்போ புதுசா என்னவோ சொல்றீங்க? எப்போ உங்க கல்யாணம் நடந்தது?” என்று விசாரித்தனர்.

“ஐயா, இந்த ஊருக்கே தெரியும், நான் படிச்சுட்டுச் சென்னையில் வேலை பார்த்துட்டு இருந்தேன்னு. இப்போ இரண்டு வருஷத்துக்கு முன்னாடி தான் இந்த ஊர் நாட்டாமையான என் அப்பா இறந்து போகவும், நான் இந்த ஊரில் வந்து செட்டில் ஆனேன்னு உங்க எல்லாருக்குமே நல்லா தெரியும்…” என்று கேட்டான்.

“தெரியுமே… உங்க அப்பா இறந்து போகவும், இந்த ஊர் வழக்கப்படி உங்க பரம்பரை தான் இந்த ஊருக்கு நாட்டாமையா இருக்கணும்னு இப்போ நீங்க நாட்டாமையா இருக்கீங்க…” என்றார் ஒருவர்.

“ஆமாம், நாட்டாமையா தலைமை ஏற்றுக் கொண்டதால் என்னால் திரும்பச் சென்னைக்கு வேலைக்குப் போக முடியலை. இங்கே அப்பா பார்த்த தொழிலை நானும் பார்க்க ஆரம்பிச்சுட்டேன்…” என்றான்.

“இந்தப் பொண்ணு உங்களுக்கு எப்படிப் பழக்கம் தம்பி?”

“நான் சென்னையில் வேலை பார்க்கும் போது தான் சக்தி எனக்குப் பழக்கம். இவளும் நான் வேலை பார்த்த ஆபிஸில் தான் வேலை பார்த்தாள். அப்போ எங்க இரண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருந்தது. அப்போ ஒரு நாள் எங்களுக்கு ஏற்பட்ட ஒரு நெருக்கடியில் நாங்க கல்யாணம் முடிச்சுக்கிட்டோம்…” என்றான்.

அவன் அடுக்கடுக்காகச் சொல்வதைக் கேட்டு அவ்வளவு நேரம் தன் வழக்கிற்குத் தானே வாதாடி கொண்டிருந்த சக்தி வாயடைத்துப் போய் நின்றிருந்தாள்.

“என்னது கல்யாணம் முடிஞ்சிருச்சா? எப்போ? அதுவும் எனக்குத் தெரியாம?” என்று அப்போது தான் அதிர்ச்சியில் இருந்து வெளியில் வந்தவன் போல் கேட்டு வைத்தான் பிரேம்.

“உன் ஃபிரண்டுகிட்ட சொல்லு சக்தியாரே… அவர் ட்ரைனிங்காகப் பெங்களூருக்குப் போயிருந்தப்ப நாம இரண்டு பேரும் சக்தி சர்வேஸ்வரனா மாறிட்டோம்னு சொல்லுங்க சக்தியாரே…” பிரேமிடம் சொல்லு சொல்லு என்று அவனே சொல்லிவிட்டான்.

“அவர் சொல்றது உண்மையா சக்தி?” அவனின் பேச்சை நம்பாமல் தோழியின் வாயிலாக உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்டான் பிரேம்.

ஆனால் அவனுக்குப் பதில் சொல்லாமல் இறுகிய முகத்துடன் நின்றிருந்தாள் சக்தி.

“சொல்லு சக்தி…” என்று மீண்டும் அழுத்தி பிரேம் கேட்க, ம்கூம், சிறிதும் அசைந்தாள் இல்லை.

முகத்தோடு மனமும் இறுகிப் போனவள் போல் நின்றிருந்தாள்.

“அவளோட அமைதியே உண்மையைச் சொல்லிருச்சே பிரேம்…” என்று சர்வேஸ்வரன் சொல்ல, அவனை உக்கிரமாக முறைத்தாள் சக்தி.

அவளின் முகத்தைப் பார்த்துப் புன்னகை புரிந்தான் சர்வேஸ்வரன்.

“அப்போ அந்தப் பையன் யாரு தம்பி?” என்று ஒருவர் பிரேமை பற்றி விசாரித்தார்.

“சக்தி சொன்னது போல் அவன் அவளோட ஃபிரண்ட் தான். இன்னும் சொல்ல போனா அவங்க இரண்டு பேரும் கூடப் பிறக்காத அண்ணன், தங்கை போலத் தான். அண்ணன், தங்கை ஒரே வீட்டில் இருப்பது தப்பில்லையே?” என்று ஊராரை பார்த்துக் கேட்டான்.

அவனின் பேச்சில் இப்போது பிரேம் வாயடைத்துப் போய் நின்றான்.

சர்வேஸ்வரன் சொல்வதில் பாதி உண்மை இருப்பது அவனுக்கே தெரியும். ஆனால் பாதித் தானே உண்மை. மீதி?

தாங்கள் இந்த ஊருக்கு வந்த காரணம் என்ன? இப்போது இங்கே நடப்பது என்ன?

இவ்வளவு நேரம் அனைவரின் மூக்கையும் உடைப்பது போல் பேசிக் கொண்டிருந்த சக்தி சர்வேஸ்வரன் பேச ஆரம்பித்ததும் ஏன் மௌனமானாள்? என்ற கேள்விகள் எழ, அருகில் நின்றிருந்த தோழியைக் கூர்ந்து பார்த்தான் பிரேம்.

முகம் இறுக உதடுகளை அழுத்தமாக மூடிய படி நின்றிருந்தாள் சக்தி.

அவள் என்ன நினைக்கிறாள் என்று அறிந்து கொள்ள அவளை ஆராய்ந்தவனுக்கு அவளிடமிருந்து எந்தப் பிரதிபலிப்பும் கிடைக்காமல் போனது.

‘இவள் வாயை திறந்து பேசினாலே பாதி நேரம் புரியாது. இப்போ வாயை மூடிட்டு வேற இருக்காள். சுத்தமா புரியாதே. இவள் ஒருத்தியே தலையைப் பிச்சுக்க வைப்பாள். இப்போ இன்னொருத்தனும் சேர்ந்திருக்கான்‌. இரண்டு பேரும் சேர்ந்து என் தலையை மொட்டையடிச்சு விட்டுருவாங்க போல இருக்கே…’

‘ஆண்டவா! இதுங்க ரெண்டும் கல்யாணம் பண்ணுதுங்களோ, இல்லையோ… என் கல்யாணத்துக்கு நான் சொட்டை தலையோட தான் பொண்ணு பார்க்க போவேன் போல இருக்கே…’ என்று தனக்குள் புலம்பிக் கொண்டான் பிரேம்.

“சக்தி நாம இந்த ஊருக்கு வந்த விஷயமே வேற. அது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா?” என்று கேட்டு தோழியை மௌனத்தில் இருந்து மீட்டெடுக்க முயன்றான்.

“நீங்க வந்த விசயம் நடக்காது. நடக்க விடமாட்டேன்…” என்று அவளுக்குப் பதிலாக உறுதி தொனித்த குரலில் பதில் சொன்னவன் சர்வேஸ்வரன்.

“நடக்கும். நடக்க வைப்பேன்…” மௌனத்தைக் கலைத்து அடுத்த உறுதி சக்தியிடம் இருந்து புறப்பட்டு வந்தது.

“அப்போ நாங்க என்ன காரணத்துக்காக இந்த ஊருக்கு வந்தோம்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று சர்வேஸ்வரனிடம் கேட்டான் பிரேம்.

ஆனால் அவனுக்குப் பதில் சொல்லாமல் ‘எல்லாம் நானறிவேன்’ என்பது போல் சக்தியைப் பார்த்துக் கொண்டு நின்றான் சர்வேஸ்வரன்.

‘எப்படி?’ என்பது போல் அவனைப் பதிலுக்குப் பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி.

தான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் ஒருவரை ஒருவர் முறைத்த படி பதில் சொல்லி கொண்டவர்களைப் பார்த்துத் தலையில் கை வைத்தான்.

‘நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாங்கய்யா…’ என்பது போல் அவர்களைப் பார்க்காமல் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டான் பிரேம்.

“என்னங்க தம்பி, அடிக்கடி உங்களுக்குள்ளயே பேசிக்கிட்டா என்ன அர்த்தம்? இப்போ நாட்டாமை நீங்களே கீழே நிற்கிறீங்க. இப்போ அடுத்து என்ன செய்யணும்? யார் முடிவெடுக்கணும்னு சொல்லுங்க தம்பி…” என்றார் ஒருவர்.

“ஐயா, என் மனைவிக்கும், இன்னொருவருக்கும் இடையே சம்பந்தப்படுத்திப் பேச்சு வந்த பிறகும் இனி நான் உண்மையைச் சொல்லாமல் இருப்பது சரியில்லைன்னு தான் இப்பவே சொல்லிட்டேன்.

இந்த மாதிரி பேச்சு வந்த பிறகும் இனி என் மனைவியை நான் தனியே விட முடியாது. எங்களுக்குள்ள சின்ன மனஸ்தாபம். அதனால் தான் நாங்க இரண்டு வருஷம் பிரிந்து இருக்க வேண்டியதாக ஆகிடுச்சு.

இனியும் நான் அவளைப் பிரித்து வைக்கப் பிரியப்படலை. என் கல்யாணத்தை, என்னோட பெத்தவங்களும், என் சொந்த ஊருகாரங்க நீங்க எல்லாரும் பார்க்க முடியாமல் போயிருச்சு. அதனால இப்போ என் மனைவிக்கு உங்க எல்லார் முன்னாடியும் தாலி கட்ட விரும்புறேன்…” என்று உரக்க சொன்னான் சர்வேஸ்வரன்.

ஊராரிடம் சொல்லிவிட்டு சக்தியை பார்த்தான் சர்வேஸ்வரன். அவளும் அப்போது அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் போய் அவளின் முகத்தில் ஓர் இளக்கம் வந்திருந்தது. கண்களில் தோன்றிய பளபளப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இதழோரம் ஒரு அலட்சிய சிரிப்பும் இருக்க, அவள் என்ன நினைக்கிறாள் என்று புரியாமல் போக, யோசனையால் வந்த புருவ சுளிப்புடன் அவளைப் பார்த்தான்.

“உங்களுக்கு நீங்களே செக் வச்சுக்கிட்டீங்க நாட்டாமை…” என்று அந்த நாட்டாமையை அழுத்தி சொல்லி நக்கலாகச் சிரித்தாள்.

“ஆஹான்! ஆட்டத்தை ஆடித்தான் பார்ப்போமே சக்தியாரே…” என்று தானும் நக்கலாகப் பதில் சொன்னான் சர்வேஸ்வரன்.

“சக்தி வேண்டாம்… உங்க அப்பாவுக்கு என்ன பதில் சொல்லுவ?” என்று அவளின் பேச்சை வைத்து ஓரளவு கணித்த பிரேம் அவளைத் தடுக்க முயன்றான்.

“பதறாதே பிரேம். நாம நினைத்து வந்ததை விட இந்த ஆட்டம் சுவாரஸ்யமாகவே இருக்கும். நான்தான் வின் பண்ணுவேன் பிரேம்…” என்றாள் சக்தி.

“ஆனால், இதில் உன் வாழ்க்கையும் அடங்கியிருக்கு சக்தி…” என்றான் பிரேம்.

முன்னதற்குப் பதில் சொன்ன சக்தி பின்னதற்குப் பதில் சொல்லாமல் மீண்டும் இறுக்கமாக வாயை மூடிக் கொண்டாள்.

அதிலேயே தோழியின் உறுதியான முடிவு தெரிந்து விட, அதன் பிறகு நடப்பது நடக்கட்டும் என்று அவனால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

ஊர் பெரியவர்கள் அதன் பிறகு விசாரித்த விசாரணைகளுக்கு எல்லாம் சர்வேஸ்வரனே அனைத்து பதிலும் சொல்லிவிட, அவனும் தாலி கட்டுவதில் உறுதியாக இருக்க, அடுத்தச் சற்று நேரத்தில் அனைவரின் முன்னிலையிலும் சர்வேஸ்வரன், சக்தியின் திருமணம் நடந்து முடிந்தது.

வழக்கிற்குத் தீர்ப்பு சொல்ல வந்தவன் தானே தீர்வாகிப் போனான்.