2 – ஞாபகம் முழுவதும் நீயே

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம்– 2
அன்றைய வேலை முடிந்து வினய் வீட்டிற்கு வரும் போது வழக்கத்தை விட நேரம் கடந்திருந்தது.

நேற்று இரவு சரியாக உறங்காததும், இன்றைய வேலையின் அலுப்புமாக வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு வீட்டில் இருந்த வெறுமை சலிப்பை உண்டாக்கியது.

இருந்த அலுப்பில் தானே சமைத்து வேறு சாப்பிட வேண்டும் என்ற நிலை இன்னும் எரிச்சலை உண்டாக்கியது.

இதுபோலப் பசி வயிற்றைச் சுருட்டும் போதெல்லாம் பவ்யாவை மனதிற்குள்ளேயே கரித்துக் கொட்டுவான்.

“பொண்டாட்டியாம் பொண்டாட்டி…! திமிர் பிடிச்சவ. என் பேச்சை கேட்காம போய் இப்படித் தனியா புலம்ப விட்டுட்டாளே. இப்போ பசிக்குது! பொண்டாட்டினு ஒருத்தி இருந்தும் இப்படி ஒவ்வொரு வேலை சாப்பாட்டுக்கும் அலைய வச்சுட்டாளே. எல்லாம் அவரைச் சொல்லணும். அவர் செய்து வச்ச வேலை எல்லாம் என் தலையில் விடிஞ்சிருக்கு” என்று தன் அப்பாவையும் திட்டிக் கொண்டான்.

மனதில் இருவரையும் மேலும் திட்டிக் கொண்டே பாலை எடுத்துச் சுடவைத்தவன் அதில் ஷீரியலை போட்டுச் சாப்பிட்டு இரவு உணவை முடித்துக் கொண்டு படுக்கையில் விழுந்தான்.

வார இறுதியில் மட்டுமே அவனின் மது பழக்கம் இருக்கும். மற்ற வேலை நாட்களில் வேலையை விட்டு வந்து மறுநாளுக்குத் தேவையானதைத் தயார் செய்து விட்டு, மீதம் அலுவலக வேலை இருந்தால் அதைப் பார்த்து விட்டு உறங்குவதை வழமையாக வைத்திருந்தான்.

இன்று அதிகமாக இருந்த அலுப்பினால் சாப்பிட்டு மட்டும் படுத்தவன் சிறிது நேரமே அயர்ந்து உறங்கினான். அதற்கு மேல் ஆழ்ந்து உறங்க முடியாமல் முதல் நாள் குடியால் உளறினான் என்றால் இன்று அவனின் மன சஞ்சலத்தால் உளறினான்.

அவனின் உளறல்கள் சில வருடங்களாக நடப்பது தான். மது மயக்கத்தில் இருக்கும் போது அதை அறிந்து கொள்ளாமல் போனவன், சாதாரண நாட்களில் தன் உளறல்களை கனவுகளாக நினைத்து ஒரு நிலையில் அது தரும் விழிப்பில் உறக்கத்தில் இருந்து எழுந்து விடுவான்.

இன்றும் அது போல உணர்ந்து உறக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தான். இது போல் உறக்கம் இல்லாமல் போவதில் அதிக எரிச்சலுக்கு உள்ளாகி அதிகமான குடியை நாடுவதும் உண்டு என்பதால் இன்றும் மதுவை நாடிப் போனான்.

குளிர்சாதனப் பெட்டியில் இருந்த மதுவை எடுத்து வந்து, தொலைக்காட்சியைப் போட்டுவிட்டு எதிரே அமர்ந்து குடிக்க ஆரம்பித்தான்.

குடித்துக் கொண்டே ஒவ்வொரு சேனலாக மாற்றிக் கொண்டே வந்தவனுக்கு ஒரு சேனலும் பிடிக்காமல் போகத் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு தன் மடிக்கணினியை உயிர்ப்பித்து அதில் யூடூப் சென்று தமிழ் காணொளி பாடல்களைப் போட்டுப் பார்க்க ஆரம்பித்தான்.

அது இளையராஜா இசையமைத்த பாடல்களின் தொகுப்பு. இசையில் லயித்துக் கொண்டே மதுவை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தவன் தொடர்ந்து வந்த பாடலில் பார்த்த காட்சியில் அந்தப் பாடலை மீண்டும் முதலில் இருந்து வைத்து அவனை அறியாமையிலேயே மிக ஆழ்ந்து பார்க்க ஆரம்பித்தான்.

அந்தப் பாடலில் மீண்டும் வந்த அந்தக் குறிப்பிட்ட காட்சியைப் பார்த்து விட்டுக் கையில் வைத்திருந்த மது நிறைந்த கோப்பையைக் கீழே வைத்தவன் கண்கள் கணினி திரையை வெறித்தது.

அந்தப் பாடல் மந்திரபுன்னகை படத்தில் வரும் “மந்திரப்புன்னகையோ…” என்ற பாடல்.

“மந்திரப் புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே
வாழ்க்கை ஒரு வானம் ஆசை அதில் மேகம்
பாசம் ஒரு தீபமே பாவை மனம் பாடுதே”

அந்தப் பாடலில் வரும் குழந்தைக் குடித்துவிட்டு வந்த தந்தையைப் படியில் ஒவ்வொரு காலாக எடுத்து வைத்து ஏற வைத்துக் கொண்டிருந்தது.

அதோடு அந்தப் பாடல் முழுவதும் அந்தக் குழந்தையும், அப்படத்தின் நாயகனும் தந்தை மகளாக விளையாடி, ஊர் சுற்றி என அவர்களுக்குள் இருந்த பற்றுடன் கூடிய அழகான காட்சிகளைப் பார்க்க பார்க்க, வினய்யின் மனம் இதுவரை பார்க்காத தன் பிள்ளையிடம் தாவியது.

தானும் தன் மகனும் இது போலக் காரில் சுற்றி, நீச்சல் அடித்து விளையாடி, என்று கற்பனை செய்து பார்த்தவனுக்கு, தொடர்ந்து அந்த நாயகன் குடித்துவிட்டு தடுமாறுவது போலத் தன்னையும் நினைத்துப் பார்க்க, அந்தக் காட்சி ஏனோ அவனுக்கு ரசிக்க முடியாமல் முகம் சுளிக்க வைத்தது.

அவன் கற்பனையில் மூழ்கி இருக்க, அடுத்தப் பாடலும் அதே குழந்தையும், அதே நாயகனும் நடித்த ‘பூவிழி வாசலிலே’ படத்தில் வரும் பாடல் ஓட ஆரம்பித்தது.

அதையும் பார்த்தவன் மனம் எத்தனையோ ஆசைகளைக் கிளறிவிட்டது.

அதை அடக்க வழித்தெரியாமல் திரும்பத் திரும்ப அந்தப் பாடல்களைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பார்த்துக் கொண்டிருக்கும் போதே தன்னை அறியாமல் தூக்கம் அவனைத் தழுவ, அப்படியே சோஃபாவில் சாய்ந்தவன் அயர்ந்து உறங்க துவங்கினான்.

தூக்கத்தில் இப்போது உளறல்கள் இல்லாமல் அவனும், அவனின் மகனும் நிறைந்த கற்பனைக் காட்சிகள் கனவில் உலா சென்றன.

காலையில் அவனாகக் கண் விழிக்கும் போது ஏழு மணி ஆகியிருந்தது.

மணியைப் பார்த்து விட்டுப் பட்டென எழுந்து அமர்ந்தவன் தான் சோஃபாவில் உறங்கியதும் தனக்கு முன் இருந்த கணினியும் பாதிக் குடித்து விட்டு வைத்திருந்த மது கோப்பையும் கண்ணில் பட, இரவு நடந்தது எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது.

தான் கற்பனையில் கண்ட காட்சிகளை நினைத்துப் பார்த்தவன் அப்படியே அமர்ந்து சிறிது நேரம் அதில் ஆழ்ந்து விட்டான். காட்சிகள் மீண்டும் மனதில் உலா போக மனதைப் பிசைவது போல இருந்தது.

ஆனால் அதை முயன்று அடக்கியவன், மேலும் வேறு எதையும் நினைக்கப் பிடிக்காமல் அவனின் பிடிவாத குணம் குறுக்கிட, மனதை சமன்படுத்திக் கொண்டு எழுந்து அலுவலகம் செல்ல தயாரானான்.

கற்பனையில் தன்னுருவில் தன் மகனை கண்டு ரசித்தவனுக்கு ஏனோ நிஜத்தையே தான் நினைத்தால் பார்க்கலாம் என்று தோன்றாமல் போனது.

அலுவலகத்திற்குச் சென்று வேலையில் மூழ்கியவன் இரவு நடந்ததையே மறந்து போனான்.

அவன் வெளி மனம் மறக்கலாம். ஆனால் ஆழ்மனதில் அவன் அறியாமலே அவனில் புகுந்திட்ட ஆசையைத் தோண்டி எடுக்க அவ்வப்போது சில சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்க ஆரம்பித்தன.

********

அன்று காலையில் எழுந்து அரக்கப்பறக்கக் கிளம்பினாள் பவ்யா.

இரவு முழுவதும் கவின் சரியாகத் தூங்காமல் அடிக்கடி விழித்தபடி இருக்க, பவ்யாவிற்குத் தூக்கமே இல்லாமல் போனது.

அதிகாலையில் தான் கவின் நன்றாகக் கண்ணயர்ந்தான்.

அவனுடன் சேர்ந்து அவளும் கண்ணயர்ந்த சிறிது நேரத்தில் பால் போடும் பையன் எழுப்பிய அழைப்பு மணி சத்தத்தில் எழுந்தாள்.

அப்பொழுதே மணி ஆறரை ஆக, வழக்கமாக ஒன்பது மணிக்குள் வேலைக்குச் செல்பவள் அன்று ஒரு முக்கிய வேலை இருந்ததால் எட்டரைக்குள் பள்ளியில் இருக்க வேண்டும். அதனால் அவசர, அவசரமாக வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.

அவ்வளவு விரைந்து வேலைபார்த்தும் வேலை முடிய ஏழரை மணி ஆகிவிட்டது. இனி கவினை கிளப்பிச் சாப்பிட வைத்து கிளம்ப வேண்டும் என்று நினைத்தபடி அவனை எழுப்ப போனால் அவன் இன்னும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.

அவனைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு “கவின் குட்டி குட்மார்னிங் சொல்லுங்க. ஸ்கூல் போகலாம்” என்று மெதுவாகக் பேச்சுக் கொடுத்த படி எழுப்ப, சில நிமிடங்களில் கண்விழித்தவன் உறக்கம் கலைந்ததில் சிணுங்க ஆரம்பித்தான்.

அவனைச் சமாதானப்படுத்திக் கிளப்பித் தானும் தயாராகி அவள் பள்ளி சென்று சேர்ந்த பொழுது சரியாக எட்டுமுப்பது.

அன்று கம்ப்யூட்டர் பிரிவில் சில வேலைகள் இருந்ததால் அதைப் போய்ப் பார்த்து முடித்து ஒன்பதரை அளவில் அலுவலக அறைக்கு வந்து மற்ற வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, அப்போது “ஹலோ பவ்யா!” என்று அழைத்தபடி வந்து நின்றாள் அந்தப் பள்ளியில் ஒரு மாதம் முன்பு தான் அலுவலக வேலையைப் பார்க்க வந்து சேர்ந்திருக்கும் நவிதா.

பவ்யா எப்பொழுதும் அலுவலகத்தில் கொஞ்சம் அமைதியாகத் தான் இருப்பாள். யாரிடமும் தேவையில்லாமல் பேசுவதில்லை. அதே போல அவர்களாகத் தேடி வந்து பேசும் போது தன்மையாகப் பேசுவாள்.

இப்போது நவிதா வந்து பேச்சுக் கொடுக்கவும் “ஹலோ நவிதா! வாங்க! என்ன விசயம்?” என விசாரித்தாள்.

“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் பவ்யா. மதியம் சாப்பாடு நேரத்தில் பேசலாமா?” என்று கேட்டாள்.

‘என்கிட்ட பேச இவங்களுக்கு என்ன இருக்கு?’ என்று நினைத்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் “ஓ…! மதியம் எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கே நவிதா. என் பையனுக்குச் சாதம் ஊட்ட நான் போகணும். ஈவினிங் வேணும்னா பேசலாமா?”

“அப்படியா…? ஏன் உங்க பையனுக்கு அந்த ஸ்கூல்லயே ஊட்டிவிட மாட்டாங்களா?” என்று குரலில் சிறு எரிச்சல் தொனிக்கக் கேட்டவளை கூர்ந்து பார்த்தாள் பவ்யா.

‘என் பையனுக்கு ஊட்டி விடுறதுக்கு இவளுக்கு எதுக்கு எரிச்சல் வருது?’ என்று கடுப்புடன் நினைத்த பவ்யா. “இதுக்கு உங்களுக்கு நான் விளக்கம் சொல்ல தேவையில்லைன்னு நினைக்கிறேன் நவிதா.

உங்களுக்கு இஷ்டம்னா ஈவ்னிங் பேசலாம். நீங்க தான் பேசணும்னு சொன்னீங்க. எனக்கு எதுவும் பேசணும்னு அவசியம் இல்லை” என்று அமைதியாக ஆனால் அழுத்தமாகச் சொன்ன பவ்யாவின் குரலில் எதிரே நின்றிருந்தவளின் முகம் இஞ்சியைத் தின்றது போல ஆனது.

அதைக் கவனித்தாலும் கவனிக்காதது போல அவளைச் சட்டை செய்யாமல் தன் வேலையைப் பவ்யா செய்ய ஆரம்பிக்க, அதற்கு மேல் அங்கே நிற்காமல் நவிதா அங்கிருந்து நகர்ந்தாள்.

மதியம் சென்று கவினை சாப்பிட வைத்து விட்டு, மாலை வேலைகளை முடிக்கும் போது நவிதா பேச வேண்டும் என்று சொன்னதே பவ்யாவிற்கு மறந்து போயிருந்தது.

மாலையில் அவள் தன் போக்கில் வீட்டிற்குக் கிளம்புவதற்கு அலுவலக அறையை விட்டு செல்ல பார்க்க “பவ்யா…!” என்று அழைத்துக் கொண்டே பின்னால் ஓடி வந்தாள் நவிதா.

‘இவ எதுக்குக் கூப்பிடுறா?’ என்று புரியாத பார்வையாகப் பார்த்தவளிடம் “என்ன பவ்யா ஈவினிங் பேசலாம்னு சொல்லிட்டு கிளம்புறீங்க? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! என் பேக்கை எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு வேகமாகச் சென்று பேக்கை எடுக்கச் செல்ல…

பவ்யாவிற்கு அப்போது தான் காலையில் நடந்த தங்கள் உரையாடல் ஞாபகத்திற்கு வந்தது. ‘அப்படித் தன்னிடம் என்ன பேச போகின்றாள்?’ என்று நினைத்தபடி நவிதா வர காத்திருந்தாள்.

நவிதா வந்ததும் “என் பையனை முதலில் போய் நான் கூப்பிடணும் நவிதா. அவனைக் கூப்பிட்டு வந்த பிறகு நாம அந்தப் பார்க்கில் உட்கார்ந்து பேசலாம். நீங்க அந்தப் பார்க்கில் போய் வெய்ட் பண்ணுங்க. நான் போய்க் கவினைக் கூப்பிட்டு அங்க வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு நவிதாவின் பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக நடந்து சென்றாள்.

பவ்யா அப்படிச் சொல்லி விட்டுப் போவதை வெறுப்பாகக் பார்த்தாள் நவிதா. இதில் தன்னைக் கண்டு கொள்ளாமல் செல்லவும் முகம் சுருங்கி போக நின்று விட்டாள்.

பவ்யா எல்லோரிடமும் இப்படிப் பட்டென்று பேசுபவள் இல்லை. ஆனால் நவிதா காலையில் பேசின விதம் பிடிக்காமல் போகத் தன்னாலேயே அப்படி நவிதாவிடம் அவளுக்கு நடக்கத் தோன்றி விட்டது.

முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல, அடுத்துப் பார்க்கில் சந்தித்த போது நவிதா கேட்ட கேள்வியில் அவளைத் துர்ஷ்டனை போலப் பார்த்தாள் பவ்யா.

பின்னே அவள் சாதாரணக் கேள்வியா கேட்டாள்?

“நீங்க எப்போ டிவோர்ஸ் பண்ண போறீங்க பவ்யா?” என நவிதா கேட்ட கேள்வியில் அவளை அப்படிப் பார்க்காமல் என்ன செய்வாள்?

காலையில் நவிதாவின் குரலில் தெரிந்த எரிச்சலிலேயே மீண்டும் அவளிடம் பேச பவ்யாவிற்கு விருப்பமே இல்லை. ஆனால் தாங்கள் ஒரே இடத்தில் வேலை பார்க்கிறோம். உடனே முகத்தைத் திருப்பிக் கொண்டு இருக்கக் கூடாது என்பதால் தான் பூங்காவிற்கு வரச் சொன்னாள்.

ஆனால் எடுத்ததும் நவிதா தன்னிடம் இப்படி ஒரு கேள்வி கேட்பாள் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

நவிதா கேட்ட கேள்வியில் தன் எதிரே இருந்தவளை உக்கிரமாக முறைத்துப் பார்த்தாள் பவ்யா.

அவள் முறைப்பை பார்த்தாலும் நான் கேட்க வந்ததைக் கேட்டே தீருவேன் என்பது போலக் கண்டு கொள்ளாமல் இருந்த நவிதா இருந்த பாவனைப் பவ்யாவிற்கு எரிச்சலை தந்தது.

அந்தக் கேள்வியினால் மனதில் ஏற்பட்ட வலியை சிறிதும் வெளியே காட்டிக் கொள்ளாமல் நிதானமாக நவிதாவை பார்த்த பவ்யா “நாம இதுவரை எத்தனை தடவை பேசியிருப்போம் நவிதா?” என்று கேட்டாள்.

தான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் இப்ப எதுக்கு இந்தக் கேள்வி என்று நினைத்துக் கொண்டே “என்ன ஒரு இரண்டு, மூனு தடவை பேசியிருப்போம்” என்று பதில் சொன்னாள்.

“ஹம்ம்…! நீங்க சொன்ன அந்த இரண்டு, மூனு முறையும் வெறும் ஹாய்… ஹலோ தான் சொல்லிருப்போம். அப்படி இருக்கும் போது எந்தத் தைரியத்தில் என்னிடம் இப்படிக் கேட்டீங்க நவிதா?” என்று பவ்யா அழுத்தமாகக் கேட்டாள்.

“இதுக்கு எதுக்குத் தைரியம் வேணும் பவ்யா? நாம ஒரே இடத்தில் வேலை பார்க்கிறோம். அப்ப நீங்களும் நானும் ப்ரண்டு தானே? ப்ரண்டுகிட்ட கேட்குறதுல என்ன தப்பு?” என்று நவிதா சாதாரணமாகத் திருப்பிக் கேட்டாள்.

“ஒரே இடத்தில் வேலை பார்க்கிறவங்க எல்லாம் ப்ரண்டு ஆகிற முடியாது” என்று அவளுக்கு வார்த்தையால் ஒரு கொட்டு வைத்துவிட்டு, “தைரியம் நிச்சயம் வேணும் நவிதா. ஏன்னா? நீங்க கேட்ட கேள்வி அப்படி. அது முழுக்க, முழுக்க என் பெர்சனல் விஷயம். அப்படி இருக்கும் போது சர்வ சாதாரணமா டிவோர்ஸ் பத்தி கேட்குறீங்க?” என்று இன்னும் முகம் மாறாமல் தன் கோபத்தை வார்த்தையில் மட்டும் காட்டி கேட்டாள்.

பவ்யா இங்கே பேசிக் கொண்டு இருந்தாலும் தனியாக விளையாட விட்டிருந்த மகன் மீதும் ஒரு கண்ணை வைத்திருந்தாள். பேசிக் கொண்டே திரும்பி கவின் என்ன செய்கிறான் என்று பார்த்தாள். அவன் அங்கே கீழே அமர்ந்து மண்ணை அள்ளி விளையாடிக் கொண்டிருந்தான்.

“ஏன்…? கேட்டதில் என்ன தப்பு இருக்கு பவ்யா? நீங்களும் உங்க கணவரும் பிரிந்து தானே இருக்கீங்க? அப்படி இருக்கும் போது நான் கேட்டது எனக்குத் தப்பா தெரியலை” என்று நவிதா சொன்ன விதத்தில் பவ்யா அவளை வெறித்துப் பார்த்தாள்.

என்னுடைய சொந்த விஷயத்தை நீ ஏன் கேட்கிறாய் என்று கேட்டும் அதில் என்ன தப்பு என்று கேட்டவளை என்ன செய்தால் தகும் என்பது போலப் பார்த்த பவ்யாவை சிறிதும் தயங்காமல் பதில் பார்வை பார்த்தாள் நவிதா.

“உங்க கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை நவிதா. நான் கிளம்புறேன். கவின் வாங்க செல்லம்! வீட்டுக்குப் போகலாம்” என்று நவிதாவை கண்டு கொள்ளாமல் தான் அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்தாள்.

அவள் அப்படிக் கிளம்பினதில் லேசாகப் பதறி போன நவிதா “ஹேய் பவ்யா! என்னப்பா? நான் இன்னும் பேசணும்னு சொன்ன விஷயத்தைச் சொல்லவே இல்லை. அதுக்குள்ள கிளம்புறேன்னு சொல்றீங்க? நான் பேச வந்ததைப் பேசிடுறேன். அப்புறம் போங்க ப்ளீஸ்” என்று கொஞ்சம் இறங்கிய குரலில் கேட்டாள்.

அவளின் இறங்கிய குரலுக்காக நின்று “சரி… சீக்கிரம் சொல்லுங்க. ஆனா தேவை இல்லாம என் சொந்த விஷயத்தைப் பற்றிக் கேட்காதீங்க. இந்த மாதிரி கேள்வி என்னைக் கேட்டா இனி நின்னு பதில் சொல்லிட்டு இருக்க மாட்டேன்” என்று மணியைப் பார்த்தவாறு சொன்னாள்.

அவளின் பேச்சைக் கண்டு கொள்ளாத நவிதா அதற்கு மேலும் தாமதிக்காமல் தான் சொல்ல வந்ததைச் சொல்லி பவ்யாவின் மனதில் இடியை இறக்க ஆரம்பித்தாள்.

“என் அண்ணன் அதாவது என்னோட பெரியம்மா மகன். அவரோட வைப் ஒரு ஆறு மாசத்துக்கு முன்ன இறந்துட்டாங்க பவ்யா. அவங்களுக்கு ஆறு வயசுல ஒரு பொண்ணு இருக்கா. அண்ணாவுக்கு இப்ப பொண்ணு தேடிட்டு இருக்கோம். வரன் ஒன்னும் சரியா அமையலை. நாங்க முதலில் கல்யாணமாகாத பொண்ணு தான் தேடினோம். ஆனா அவங்க எல்லாம் நிறைய டிமாண்ட் பண்றாங்க. என் அண்ணன் பொண்ணை ஹாஸ்டல்ல சேர்க்கணும்.

இல்லைனா தாத்தா, பாட்டிகிட்ட விட்டுட்டுத் தனியா போகணும்னு சொல்றாங்க. அதனால அது போலச் சம்பந்தம் எல்லாம் எங்க பெரியம்மாவுக்குப் பிடிக்கலை. சோ… இப்ப டிவோர்ஸ் ஆன, இல்லைன்னா விடோஸ் பொண்ணா தேடுறோம். அப்பதான் நான் இங்கே வேலைக்குச் சேர்ந்த கொஞ்ச நாள்ல உங்களைப் பற்றித் தெரிய வந்தது.

நீங்க கல்யாணம் ஆன கொஞ்ச நாள்லயே பிரிஞ்சிட்டிங்கன்னு கேள்வி பட்டேன். உங்களைப் பத்தி பெரியம்மாகிட்ட சொன்னேன். அவங்க தான் உங்களுக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இருக்கானு கேட்க சொன்னாங்க.

அப்படி ஒருவேளை உங்களுக்கு எண்ணம் இருந்தா உங்களை எங்க அண்ணனுக்குப் பார்க்கலாமேனு தான். நீங்க என்ன சொல்றீங்க பவ்யா?” என்று எதிரே இருப்பளின் மனதில் காயத்தை ஏற்படுத்திக் கொண்டே எழுதி வைத்ததைச் சொல்பவள் போலத் தான் சொல்ல வந்ததை எல்லாம் சொல்லிவிட்டு பவ்யாவின் பதிலைக் கூட எதிர் பார்க்காமல், இன்னும் சிலதும் பேசிக் கொண்டே போனாள்.

“இது தான் விஷயம் பவ்யா. இதைச் சொல்ல தான் காலையில் இருந்து காத்திருந்தேன். எனக்கு உடனே கூடப் பதில் சொல்ல வேண்டாம். நல்லா யோசிச்சுச் சொல்லுங்க. நான் நாளை வந்து உங்க பதிலைத் தெரிஞ்சுக்கிறேன்” என்று பவ்யாவின் திகிலடைந்த முகத்தைக் கூடக் கண்டு கொள்ளாமல் படபடவெனப் பொறிந்தவள் எழுந்து சென்று விட்டாள்.

அவள் கிளம்பி போனதைக் கூட உணர முடியாமல் சிலைப் போல அமர்ந்து விட்ட பவ்யா, நவிதா அமர்ந்திருந்த இடத்தையே வெறித்துப் பாரத்தாள். இன்னும் அவள் பேசிக் கொண்டு இருப்பது போல, நவிதாவின் வார்த்தைகள் பவ்யாவை சுழற்றி அடித்தது.

உணர்வுகள் மரத்துப் போனவள் போல எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தாள் என்று அவளுக்கே தெரியாது. ‘ம்மா…’ என்று பல முறை கேட்ட மழலை குரலில் சுதாரித்தவள் திரும்பி பார்த்தாள்.

கவின் அவள் சேலையைப் பிடித்தபடி தன்னைத் தூக்கச் சொல்லி கைகளை நீட்டிக் கொண்டிருந்தான்.

அவனைத் தூக்கியவள் நவிதா எங்கே என்று பாத்தாள்.

அப்போது தான் அவள் சென்று விட்டது புரிய ‘ச்சே…! இப்படியா மரத்துப் போனது போல இருந்திருப்பேன். வந்தாள்… பேசினாள்… போனாள்… என்ன தைரியம் அவளுக்குத் தன்னிடம் இப்படிப் பேச? அவள் தான் பேசினாள் என்றால் தானும் இப்படி இடிந்து போய் உட்கார்ந்து விட்டேனே?’ என்று தன்னையே திட்டிக் கொண்டாள்.

ஆனால் தான் முதல் முறையாகக் கேட்ட வார்த்தைகள் தன்னைச் செயலிழக்க வைத்து விட்டது என்றும் புரிந்தது.

“ம்மா வா…!” என்ற கவினின் அழைப்பு அவளை மேலே யோசிக்க விடாமல் செய்தது.

“ம்ம்…! என்னடா…?” என்று பவ்யா அவனிடம் கவனத்தை வைத்துக் கேட்க… “வா…!” என வாசல் பக்கம் கைக்காட்டி அழைத்தான்.

வீட்டிற்குப் போக அழைக்கிறான் எனப் புரிந்து “போகலாம்டா செல்லம்” என்று அங்கிருந்து கிளம்பினார்கள்.

வீடு வந்து சேர்ந்த பிறகு வேலைகளை எல்லாம் முடித்து இரவு கவின் தூங்கும் வரை, அவன் முன் தன் உணர்வுகளைக் காட்ட முடியாமல் மறைத்துச் சாதாரணமாகக் காட்டி கொண்டு நடமாடினாள்.

அவளும் படுக்கையில் விழுந்த பிறகு, நவிதா பேசிய வார்த்தைகள் மனதையும், தலையையும் குடைய ஆரம்பித்தது.

கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாம எப்படி வந்து கேட்குறா? அப்படி அவள் தன்னிடம் கேட்க துணிந்ததற்கு அவள் சொன்ன காரணங்கள் இன்னும் மனதினில் ஓடிக் கொண்டே இருந்தது.

“உங்களைப் பத்தி விசாரிச்சேன் பவ்யா. ஒருத்தர் உங்க கணவர் வெளிநாட்டுல இருக்குறதால தான் பிரிஞ்சி இருக்கீங்கனு சொன்னாங்க. அவர் வந்ததும் சேர்ந்து வாழ்வீங்கன்னு. ஆனா இன்னும் இரண்டு பேரு நீங்க உங்க மாமனார் வீட்டில் இல்லாம தனியா தான் இருக்கீங்களாமே?

நீங்க சேர்ந்து வாழ்றதா இருந்தா ஏன் தனியா இருக்கணும்? அதனால தான் நீங்க எப்ப டிவோர்ஸ் வாங்க போறீங்கன்னு சொன்னா நான் வீட்டில் போய்ச் சொல்றேன். நீங்க பார்க்கவும் அழகா இருக்கீங்க. அதனாலே எங்க அண்ணனை சீக்கரம் சம்மதிக்க வைச்சுறலாம். என்ன சொல்றீங்க?” என்று பேசிய வார்த்தையில் ‘நீங்க தனியா தானே இருக்கீங்க’ என்ற வார்த்தையிலே தன் மனம் அதிர்ந்து விட்டது என இப்போது புரிந்தது.

அதுவும் மற்ற ஆட்கள் தன் முதுகுக்குப் பின்னால் தன்னைப் பற்றி எப்படி விமர்சிக்கிறார்கள் என்று உணர்ந்த பொழுதில் அவளின் மனது துடித்துப் போனது.

நவிதா தன்னைப் பற்றி அடுத்தவர்களிடம் விசாரித்ததும் இல்லாமல் என்ன துணிச்சல் இருந்தால் கல்யாணம் பற்றிப் பேசுவாள். அந்த இடத்திலேயே நன்றாக அவளுக்குக் கொடுக்காமல் போனேனே என்று இப்போது வருந்தினாள்.

நவிதாவின் மீது கோபம் கிளர்ந்து எழுந்தாலும், பவ்யாவின் மனம் ரணமாய் வலிக்கவும் ஆரம்பித்தது.

தன்னிடம் ஒருத்தி இப்படிப் பேசும் அளவிற்கா தன் நிலை இருக்கிறது? தான் தனியாக இருப்பதால் யாரும், என்ன வேண்டும் என்றாலும் பேசலாமா என்ன?

தன்னுடைய இந்த நிலைக்குக் காரணமான தன்னவனைப் பற்றி நினைத்தாள். ‘என்னிடம் ஒரு வார்த்தைக் கூடப் பேச முடியாத அளவிற்கு நான் என்ன தப்புச் செய்தேன் வினு? நான் ஏன் உங்க பேச்சை மறுத்தேன்னு ஒரு முறையாவது நீங்க தெரிஞ்சுக்க நினைக்கலையே?

இப்ப பாருங்க கண்டவர்கள் எல்லாம் என்னைப் பற்றி எப்படிப் பேசுகிறார்கள். எனக்கு வலிக்குது வினு!’ என்று மனதிற்குள் கணவனிடம் பேசிக் கொண்டே கண்ணீர் விட்டாள் பவ்யா.

மனதில் உளைச்சலுடன் வராத தூக்கத்தை வம்படியாக வர வைத்துப் பவ்யா உறங்கும் போது இரவு வெகு நேரம் கடந்திருந்தது.

லேசாக உறக்கத்தின் பிடிக்குப் பவ்யா சென்ற சிறிது நேரத்தில் ஏதேதோ கனவு வந்து அவளைத் துரத்தியது.

பழைய நினைவுகளும், அதனுடன் இன்று தான் கேட்ட பேச்சும் அவளைத் தாக்கியதில், அவளை விட்டு சில நாட்களாக அண்டாமல் இருந்த அவளின் வாழ்வின் இருண்ட‌ பக்கம், இன்று கனவாக வர “ஐயோ…! அப்பா வேணாம்… வேணாம்… வேணாம்…” என்று அரண்ட குரலில் சொல்லியவள், ஒரு நிலையில் “அம்மாமாமா…” என்று கத்தினாள்.


முள்ளில் மாட்டிக் கொண்ட
மெல்லிறகின் கிழிசலாக
மாறிப்போன மனதிற்கு
மயிலிறகு கொண்டு
என் மனம் வருட வருவாயோ?
என் மனம் கவர்ந்த மன்னவனே!