2 – சிந்தையில் பதிந்த சித்திரமே

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 2

தன் எதிர்வீட்டு சிடுமூஞ்சி, தன் அன்னையின் முகத்திற்கு நேராகக் கதவை அடைத்தவன், பார்க்கிங்கில் தன்னிடம் சண்டைக்கு வந்தவன் தான் தன் புதுக் கணித பேராசிரியர் என்று தெரிந்ததும் நயனிகாவின் முகம் புஸ்வாணம் போல் புஸ்சென்று ஆகிப்போனது.

“ஏய், ஆள் செம ஹேண்ட்சம்யா!” என்று பானு அவள் காதில் முணுமுணுத்தாள்.

“ஆள் தான் ஹேண்ட்சம். வாயை திறந்தால் சுடுதண்ணி தான் தெறிக்கும்…” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள் நயனிகா.

“ம்ம்… என்னடி சொல்ற?” என்று அவள் சொன்னது புரியாமல் பானு கேட்க,

அப்போது சரியாகக் கதிர்நிலவனின் பார்வை இவர்களின் புறம் திரும்பக் கப்சிப்பென்று ஆகிப் போயினர்.

எதிர்வீட்டுப் பெண் அந்த வரிசையில் அமர்ந்திருப்பதைப் பார்த்த கதிர்நிலவன் அவளை அறியாதவன் போல் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டான்.

“குட்மார்னிங் ஸ்டுடெண்ட்ஸ்… என் பெயரை துர்கா மேடம் சொல்லிட்டாங்க. உங்க பெயர் எல்லாம் எனக்குத் தெரியாது…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாணவர்கள் வரிசையிலிருந்து ஒரு மாணவன் எழுந்து தன் பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளப் போக, அவனைக் கை நீட்டி தடுத்து அமர சொன்னான்.

“உங்க எல்லாரின் பெயரையும் தெரிந்து கொள்ள எனக்கும் ஆர்வம் இருக்கு ஸ்டுடெண்ட்ஸ். ஆனா பெயர் கேட்டுட்டு இருந்தால் முதல் நாள் வகுப்புத் தடைப்பட்டுப் போகும். முதல் நாளே பாடம் நடத்தாமல் போக எனக்கு விருப்பமில்லை. அதனால் நான் இப்ப கிளாஸ் ஆரம்பிக்கிறேன். போகப் போக உங்க பெயரை எல்லாம் தெரிஞ்சிக்கிறேன்…” என்றான்.

“ஓகே சார்…” என்று மாணவ, மாணவிகள் சொல்ல, தன் கையில் இருந்த கணித புத்தகத்தை மேஜை மீது வைத்து விட்டு சுவர் பலகை பக்கம் திரும்பினான்.

அவனின் வலது கை அவன் கால்சட்டை பைக்குள் இருக்க, இடது கையில் சாக்பீஸை எடுத்துப் பலகையில் எழுத ஆரம்பித்தான்.

‘ஓ! சாருக்கு இடது கை பழக்கம் போல…’ என்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்த நயனிகா நினைத்துக் கொண்டாள்.

வலது கையைப் பேண்ட் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு இடது கையில் எழுதிக் கொண்டே அவ்வப்போது மாணவர்களின் புறம் திரும்பி அவர்களிடம் கேள்வி கேட்டுக் கொண்டே பாடத்தை நடத்திக் கொண்டிருந்தான் கதிர்நிலவன்.

பாடம் நடத்தும் போது, எரிச்சல் படுவதோ, கோபப்படுவதோ, பதில் சொல்லவில்லை என்று திட்டவோ இல்லை.

நிதானமாக மாணவர்களுக்குப் புரியும் விதமாகச் சொல்லிக் கொடுத்தான்.

தவறான பதில் சொல்லும் போது அவர்கள் சொன்னது ஏன் தவறு என்பதைச் சுட்டிக் காட்டி அந்தத் தவறை திருத்தினான்.

அது பிஎஸ்சி கணக்குப் பிரிவு வகுப்பு தான் என்றாலும் கணக்குப் புரியாமல் முழித்துப் பயப்படும் மாணவர்களுக்கும் புரியும் வண்ணம் அவனின் விளக்கவுரை இருந்தது.

நேரம் சென்றதே தெரியாமல் வகுப்புச் சுவாரசியமாகச் சென்றது.

அவனின் வகுப்பு முடியும் நேரம் வர இன்னும் பத்து நிமிடங்கள் இருக்க, டேபிளின் மீது லேசாகச் சாய்ந்து நின்று, “எனி டவுட்ஸ் ஸ்டுடெண்ட்ஸ்? ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்க. இப்போ கேள்வி, பதில் செக்சன்…” என்றான்.

சில மாணவ, மாணவர்கள் எழுந்து பாடத்தில் தங்களுக்கு இருக்கும் சந்தேகத்தைக் கேட்க, அவர்களுக்கு எல்லாம் தெளிவாகப் பதில் தந்தான்.

பதிலை பெற்றுக் கொண்ட மாணவர்களின் முகத்தில் இருந்த திருப்தியை கண்டு உதட்டை லேசாகப் பிதுக்கி கொண்டாள் நயனிகா.

‘பரவாயில்லை சுடுதண்ணி விவரமான ஆள் தான் போல…’ என்று நினைத்துக் கொண்டாள்.

தற்செயலாக அவளின் புறம் திரும்பிய கதிர்நிலவனின் கண்களில் அவளின் உதடு பிதுக்கல் பட, வேகமாகத் தன் உதட்டை உள்ளே இழுத்துக் கடித்துக் கொண்டாள்.

“அப்புறம் ஸ்டுடெண்ட்ஸ் கிளாஸ் எப்படி இருந்தது? நல்லா அறுவை போட்டேனா நான்…” என்று அவளைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

அவனின் கேள்வியில் விதிர்த்துப் போய்த் தலையைக் குனிந்து கொண்டாள் நயனிகா.

காலையில் பார்க்கிங்கில் தான் வகுப்பில் அறுவையைக் கேட்கப் போவதாகச் சொன்னதைக் குத்திக் காட்டுகிறான் என்று புரிந்து போக, அவளுக்குக் கை, கால்களே படபடக்க ஆரம்பித்து விட்டன.

எங்கே தன்னை எழுப்பி நேரடியாக அதே கேள்வியைக் கேட்டு விடுவானோ என்று பயந்தவள் தலையைப் புத்தகத்திற்குள் விடுவது போல் குனிந்து கொண்டாள்.

அவளின் செய்கையைக் கண்டுவிட்டு பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

“ஐயோ! என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க? எனக்கு எல்லாம் இன்னைக்குத் தான் கணக்கு தெளிவா மண்டைக்குள் ஏறியிருக்கு. அவ்வளவு பொறுமையா புரியும் படியா சொல்லிக் கொடுத்தீங்க…” என்று ஒரு மாணவன் பதில் சொல்ல, மற்ற மாணவர்களும் ஆமோதிப்பாகத் தலையை அசைத்தனர்.

அதற்குக் கதிர்நிலவன் தன்னைப் பெருமையாகக் காட்டிக் கொள்ளவோ, பாராட்டுதலுக்காகச் சிரிக்கவோ இல்லை. லேசான தலையசைப்பு மட்டுமே அவனிடமிருந்து வந்தது.

அவனின் செய்கையை ஓர விழியில் கண்ட நயனிகா மனதிற்குள் வியந்து கொண்டாள்.

“வேற கேள்விகள்?” என்று கேட்டான்.

வகுப்பே அமைதியாக இருக்க, பின்னால் அமர்ந்திருந்த ஒருவன் எழுந்தான்.

அவனைக் கதிர்நிலவன் கேள்வியுடன் பார்க்க,

“சார், நீங்க லெப்ட் ஹேண்டட்டா சார்?” என்று கேட்டான்.

“டேய், என்ன கேட்குற? பார்த்தாலே தெரியுதுல. அப்புறம் என்ன கேள்வி?” என்று அவனின் அருகில் இருந்த நண்பன் அவனைக் கடிந்து கொண்டான்.

“கேட்கலாம், தப்பில்லை…” என்றான் கதிர்நிலவன்.

“உன் பேர் என்ன?” என்று தன்னைக் கேள்வி கேட்டவனிடம் கேட்டான்.

“சுந்தர் சார்…”

“எஸ் சுந்தர், நான் லெப்ட் ஹேண்டட் தான்…” என்று உதட்டோரம் லேசாக நெளியவிட்ட புன்முறுவலுடன் சொன்னான்.

அவ்வளவு நேரமாகச் சாதாரணமாக இருந்த அவனின் முகம் அந்த லேசான புன்முறுவலில் ஒளிர்விட்டது போல் ஜொலித்தது.

அந்தப் புன்முறுவல் அவனின் முகத்திற்குக் கூடுதல் அழகை கொடுக்க, ஆணழகன் போலவே காட்சி தந்ததை விழிகள் விரிய பார்த்தாள் நயனிகா.

“ஏய் நயனி, சார் சிரிப்பு அள்ளுதுபா…” என்று அருகில் இருந்த பானுவும் பரவசத்துடன் முணுமுணுத்தாள்.

“அள்ளுச்சுனா போய்க் கப்பில் அள்ளிட்டு வா போ…” என்று பதிலுக்கு முணுமுணுத்தாள் நயனிகா.

அவர்களின் பேச்சுச் சப்தம் கேட்டது போலக் கதிர்நிலவனின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பியது.

உடனே வேகமாக அவர்கள் வாயை மூடிக் கொண்டனர்.

நயனிகா அவனின் முகம் பார்க்க தவிர்த்து அவனைத் தாண்டி சுவர் பலகையைப் பார்த்தாள்.

“ஓகே ஸ்டுடெண்ட்ஸ், இன்னைக்குக் கிளாஸ் ஓவர். நான் கொடுத்த கணக்கு எல்லாம் செய்து பாருங்க. அதில் ஏதாவது டவுட் இருந்தால் நாளைக்குக் கேளுங்க. கிளியர் பண்றேன்…” என்றவன் வகுப்பை விட்டு வெளியே சென்றான்.

“ஷ்ஷ், ஷப்பா! சுடுதண்ணி போய்டுச்சு…” என்று அவன் வெளியே போனதும் பெரிதாகப் பெருமூச்சு விட்டுக் கொண்டாள் நயனிகா.

“சுடுதண்ணியா? யாரை சொல்ற நீ?” புரியாமல் கேட்டாள் பானு.

“நம்ம புது ப்ரொபஸரை தான்…”

“அடிப்பாவி! அவரை ஏன் அப்படிச் சொல்ற? சார் நல்லாத்தானே பேசினார்…”

“அது இங்கே மட்டும் தான்…”

“இங்கே மட்டுமா? என்ன சொல்ற நீ? அப்ப வேற எங்கே அவரைப் பார்த்த?”

“இவர் எங்க புது வீட்டுக்கு எதிர்வீட்டில் தான் இருக்கார்…” என்றவள் காலையில் பார்க்கிங்கில் நடந்தது வரை சொன்னாள்.

“ஆத்தி! அப்போ சார் கூடச் சண்டை போட்டியா?” என்று பானு பதறி கேட்க,

“நான் எங்கே சண்டை போட? அவர் தான் கோபமா பேசினார். அது பெரிய சண்டை ஆக விடாம நான் தான் தப்பிச்சு ஓடி வந்தேன். இங்கே வந்து பார்த்தால் அவரே நமக்குச் சாரா வந்து நிற்கிறார்…” என்றாள்.

“ஏய், சார் உன் எதிர் வீட்டில் இருப்பதும் நல்லது தானே? மேத்ஸ்ல எதுவும் சந்தேகம்னா சார்கிட்ட சுலபமா கேட்டுக்கலாம்…” என்று பானு உற்சாகமாகச் சொல்ல,

“என்ன நல்லது? ஒரு நல்லதும் இல்லை. காலேஜில் தான் அமைதியா நல்ல பிள்ளையா நடிக்க வேண்டியது இருக்கு. வீட்டிலாவது சுதந்திரமா ஜாலியா பேசிட்டு கொண்டாட்டமா இருக்கலாம்னு பார்த்தால் இப்ப அதுக்கும் வேட்டு. ப்ரொபஸர் எதிர் வீட்டிலேயே இருக்கும் போது நான் எப்படி ஜாலியா இருக்க முடியும்?” என்று சோகமாகச் சொன்னாள் நயனிகா.

“ஓ, அப்படி ஒன்னு இருக்கோ?” என்று பானு கேட்க,

“இப்ப ஏன்டா புது வீட்டுக்கு வந்தோம்னு இருக்கு போ…” என்று புலம்பிக் கொண்டாள்.

மாலை அவள் வீட்டிற்குச் சென்று தன் வண்டியை எங்கே நிறுத்துவது என்று புரியாமல் தடுமாறிப் போனாள் நயனிகா.

காலையில் கதிர்நிலவனிடம் வீராப்பாகப் பேசிவிட்டு சென்று விட்டாலும் இப்போது அவன் இடத்தில் வண்டியை நிறுத்த அவளுக்குத் தயக்கமாக இருந்தது.

அண்டை வீட்டை சேர்ந்தவன் என்பதைத் தாண்டி இப்போது தன் பேராசிரியர் அவன் என்பதில் ஒரு மரியாதை வந்து ஒட்டிக் கொள்ளக் காலையில் போல் துணிந்து அவனிடம் தன்னால் பேசிவிட முடியும் என்றும் அவளுக்குத் தோன்றவில்லை.

அவனிடம் காலையில் அனுமதி கேட்கிறேன் என்ற பெயரில் தான் அதிகப்பிரசங்கிதனமாகப் பேசிவிட்டுச் சென்றது இப்போது உறுத்தலை தந்திருந்தது.

யோசனையுடன் வண்டியில் அமர்ந்து நகத்தைக் கடித்த படி நின்றுவிட்டாள்.

இன்னும் கதிர்நிலவன் வந்திருக்கவில்லை என்பதால் அவனின் கார் அங்கே நிற்கவில்லை.

‘சார் வர்றதுக்குள்ள நிறுத்திட்டு ஓடிடுவோமா?’ என்று நினைத்தாள்.

அதே நேரம் தன் காரில் அங்கே வந்து சேர்ந்தான் கதிர்நிலவன்.

காரை நேராகத் தன் தரிப்பிடத்தில் நிறுத்தியவன் கண்ணாடி வழியாக வண்டியில் நின்ற நயனிகாவைப் பார்த்தான்.

அவளின் யோசனை புரிந்தவன் போல அவனின் முகம் இலகுவானது.

காரை நிறுத்திவிட்டு தன் பையை எடுத்துக் கொண்டு அவளைக் கவனியாதவன் போல நடக்க ஆரம்பித்தான்.

அவனையே பார்த்தபடி நயனிகா இன்னும் அங்கேயே நிற்க, சற்றுத் தூரம் சென்றவன் மெல்ல திரும்பினான்.

“இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே நிற்கிறதாக ஐடியா? அதுதான் காலையில் என்கிட்ட நீ அனுமதி வாங்கிட்டயே…” என்று அனுமதியில் ஒரு அழுத்தம் கொடுத்து நிறுத்தியவன், “என் பார்க்கிங்ல வண்டியை நிறுத்து. ஆனா என் காரை எடுக்க வசதியா இடம் விட்டு நிறுத்து…” என்று சலனமில்லா குரலில் சொல்லிட்டு மீண்டும் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

“ஷப்பா! நல்லவேளை சாரே என் பிரச்சனைக்கு முடிவு கொண்டு வந்துட்டார், தப்பிச்சேன்…” என்று நினைத்துக் கொண்டவள் அவனின் தரிப்பிடத்தில் அவன் சொன்னது போல் வண்டியை நிறுத்திவிட்டு துள்ளலாகச் சென்றாள்.

மின்தூக்கியின் அருகில் சென்றவள் அப்போது தான் அவன் படியில் ஏறி செல்வதைக் கண்டாள்.

‘லிப்ட் வேலை செய்யலையா என்ன?’ என்று மின்தூக்கியை பரிசோதித்துப் பார்க்க, மின்தூக்கி இயங்கி அவளுக்குக் கதவை திறந்து கொண்டு நின்றது.

‘லிப்ட் தான் வேலை செய்தே. அப்புறம் ஏன் சார் படியில் போறார்?’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டே மின்தூக்கியில் சென்றாள்.

செல்லும் போதே அவளுக்கு ஒரு விஷயம் புரிந்தது. காலையில் தன்னிடம் பன்மையில் பேசியவன், இப்போது ஒருமையில் பேசி சென்றதை அவளின் மனம் குறித்துக் கொண்டது.

தன் மாணவி தான் என்று தெரிந்ததும் ஒருமைக்கு மாறியிருக்கிறான் என்பதும் புரிந்தது.

அவனைப் பற்றி யோசித்த படி வீடு சென்று சேர்ந்தாள்.

வீடு காலையில் போல் கலைந்து இல்லாமல் ஓரளவு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

“என்னமா நீங்களே எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்தீங்களா? நான் வந்து செய்திருப்பேன்ல?” என்று கேட்டாள்.

“பகல் எல்லாம் சும்மாத்தானே இருக்கேன். கொஞ்ச கொஞ்சமா தான் செய்தேன். நீ போய் ட்ரெஸ் மாத்திட்டு முகம் கழுவிட்டு வா. காஃபி போட்டு தர்றேன்…” என்றார் அபிராமி.

“அப்பாவும், தயாவும் இன்னும் வரலையாமா?”

“தயாவுக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு. அவன் வர ஆறு மணி ஆகும். அப்பா அஞ்சு மணிக்கு வருவார்…” என்றார்.

அம்மாவிடம் பேசிக்கொண்டே அறைக்குள் சென்று உடையை மாற்றிவிட்டு, அவர் கொடுத்த காஃபியை வாங்கி உறிஞ்சியவள், “அம்மா உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?” என்று கேட்டாள்.

“என்ன விஷயம் நயனி?”

“நம்ம எதிர்த்த வீட்டில் இருக்குற ஆள் யார் தெரியுமா?”

“யார்?”

“அவர் தான் இன்னையிலிருந்து என் மேத்ஸ் ப்ரொபஸர் மா. காலையில் எப்படி உங்க முகத்துக்கு நேரா கதவை மூடிட்டுப் போனார்? ஆனா காலேஜில் அவ்வளவு கூலா பாடம் நடத்தினார்மா…” என்று வியப்பாக அன்னையிடம் சொன்னாள்.

“ஓ, அந்தத் தம்பியா? அப்படியா பாடம் நடத்தினார். எல்லார் கிட்டயும் நல்லா பேசினாரா?” என்று அபிராமி விசாரிக்க,

“ஸ்டுடெண்ட்ஸ் கிட்ட எரிஞ்சி விழாம நல்லா பேசினார் மா. அது தான் எனக்கு ஆச்சரியமா இருக்கு. இங்கே மட்டும் எப்படிக் கதவை அடைச்சார்? காலையில் பார்க்கிங்லயும் என்கிட்ட சண்டைக்குக் கூட வந்தார்…” என்றாள்.

“சண்டைக்கு வந்தாரா? ஏன்? எதுக்கு?” என்று அபிராமி பதறி கேட்க, காலையில் நடந்ததைச் சொன்னாள்.

“நீயும் பார்த்து பேசியிருக்கணும் நயனி. வெளி ஆளுங்ககிட்ட கவனமா பேசு…”

“அம்மா, அப்ப அவர் என் ப்ரொபஸர்ன்னு தெரியாது. அதான் அப்படிப் பேசிட்டேன். உடனே நீங்க அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடாதீங்க…” என்றாள்.

“ஆள் யாருன்னு தெரியுதோ, இல்லையோ யாரா இருந்தாலும் கவனமா தான் பேசணும். நான் சொன்னா உன் நல்லதுக்குத் தான் இருக்கும். உடனே அட்வைஸ் பண்ணாதீங்கனு அலறாதே…” என்று மகளைக் கண்டித்தார்.

“சரிமா, சரி…” என்று சலித்துக் கொண்டாள் நயனிகா.

“நீ காலேஜ் போன பிறகு அக்கம் பக்கத்து வீடுகளுக்குப் போய்ப் பாலும், கேசரியும் கொடுத்தேன் நயனி. எல்லாரும் அந்தத் தம்பி மாதிரி இல்லாம நல்லா பேசினாங்க. அந்தத் தம்பியை பத்தியும் சொன்னாங்க.

அந்தத் தம்பி அப்படித்தான் இருப்பாராம். இங்கே யார் கூடவும் ஒட்ட மாட்டாராம். பக்கத்து ஆளுங்க கூடப் பேசுவது, எதுவும் கொடுத்தா வாங்குவதுன்னு எதுவும் வச்சுக்க மாட்டாராம். அவர் ஒத்தை ஆளு தான் போல். அப்பா, அம்மான்னு யாரும் இல்லை. இங்கே குடிவரும் போதே தனி ஆளாத்தான் வந்தாராம்.

சமையல், வீட்டு வேலை எல்லாம் அவரே தான் பார்த்துப்பாராம். யாரையும் வீட்டுக்குள்ள விட மாட்டார் போல…” என்று அபிராமி அவனைப் பற்றிய விவரங்களை மகளிடம் ஒப்பித்தார்.

“என்னமா இது? விட்டா அவர் ஜாதகத்தையே சொல்லுவீங்க போல. ஒரு நாளில் இவ்வளவு இன்பர்மேஷனா?” என்று கேலியாகக் கேட்டாள்.

“பொம்பளைங்கனா அப்படித்தான்டி. நாலு பேரு கிட்ட பேசி விவரம் தெரிஞ்சிக்கிறது தான். அதுவும் இல்லாம காலையில் மூஞ்சில அடிச்சது போலக் கதவை சாத்தினார். அதுவும் எதிர் வீடு வேற. ஆள் எப்படின்னு தெரிஞ்சா தானே நாமளும் கவனமா இருக்க முடியும்?” என்றார் அபிராமி.

“நீங்க விவரம் தான் மா…” என்றாள் நயனிகா.

“அந்தத் தம்பி தான் உன் ப்ரொபஸர்னு வேற சொல்ற. பார்த்து கவனமா இருந்துக்கோடி. காலேஜில் வச்சு உன்கிட்ட சிடுமூஞ்சி தனமா நடந்துக்காம…” என்ற அபிராமி எழுந்து வேறு வேலையைப் பார்க்க சென்றார்.

‘சிடுமூஞ்சி தனமாவா? கதிர் சாரா?’ என்று நினைத்தவளுக்குச் சற்று முன் தரிப்பிடத்தில் தன்னிடம் அவன் பேசி சென்றதை நினைவு கூர்ந்தாள்.

காலையில் போல் இல்லாமல் இப்போது இலகுவாகத்தான் பேசினான். அதுவும் கல்லூரியில் பார்த்த அவனின் புன்முறுவல் ஞாபகத்தில் வர, ‘நாம தான் அவரைப் பத்தி ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டோமோன்னு தோணுதுமா…’ என்று அன்னையிடம் சொல்வது போல் தனக்குள் சொல்லிக் கொண்டாள் நயனிகா.

காலையில் சிடுமூஞ்சி, கோபக்காரன், சுடுதண்ணி என்று அவளே அவனுக்குப் பட்டப்பெயர் வைத்தவள் தான். ஆனாலும் இப்போது ஏனோ அவனை அப்படி நினைக்க அவளுக்குத் தோன்றவில்லை.

அவன் அப்படிப்பட்டவன் இல்லை என்று தான் இப்போது அவளுக்குத் தோன்றியது.