2 – ஈடில்லா எனதுயிரே

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 2

“குட்மார்னிங் சார்…”

“குட்மார்னிங்…”

எதிர்ப்பட்ட மாணவர்கள் தெரிவித்த காலை வணக்கத்தை ஏற்றுக் கொண்டு அவர்களுக்குப் பதில் வணக்கத்தைத் தெரிவித்த படி பள்ளி வளாகத்தில் நடந்தான் பிரபஞ்சன்.

அது ஆண், பெண் என இருபாலரும் படிக்கும் பள்ளி.

காலை பள்ளி ஆரம்பிக்கும் நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே பள்ளிக்கு வந்து விடுவது பிரபஞ்சனின் வழக்கம்.

விரைவாகவே வந்து மாணவர்களையும் வரவைத்து, அவன் எடுக்கும் வேதியியல் பாடப்பிரிவில் ஏதாவது சின்னச் சின்னத் தேர்வுகள் வைப்பான்.

இல்லையென்றால் சந்தேகம் கேட்கும் மாணவர்களுக்குத் தெளிவு படுத்தும் வேலையைச் செய்வான்.

பள்ளிக்கு விரைவாக வரவைப்பதில் சில மாணவர்கள் முணுமுணுப்பது தெரிந்தாலும் அதைப் பற்றிப் பொருட்படுத்தாமல் வேதியியல் பாடப்பிரிவில் பின்தங்கிய மாணவர்களே இல்லை என்ற நிலையில் அவர்களை நன்றாகப் படிக்க வைத்திருந்தான்.

அதனால் அவன் பாடத்தில் மாணவர்கள் அனைவரும் முன்னிலையில் தான் இருந்தனர்.

பள்ளிக்கு வந்து விட்டால் கண்டிப்பு ஆசிரியர் தான் அவன்.

மாணவர்களுக்குப் புரியும் விதத்தில் சொல்லி தந்து, அவர்கள் தடுமாறும் போது தட்டிக் கொடுத்து அவர்களை வழிநடத்துவான்.

அதே நேரம் அவன் மிகவும் கண்டிப்புடன் இருப்பது ஒழுக்கம் விஷயத்தில் தான்.

ஆண், பெண் இருபாலரும் படிக்கும் பள்ளி என்பதால் பள்ளியில் எந்த விதமான தவறும் நடந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பான்.

நட்பு முறையில் அவர்கள் பேசிக் கொள்வதை அவன் என்றுமே தவறாக எடுத்துக் கொண்டது இல்லை. ஆனால் அது நட்புடன் மட்டுமே இருக்க வேண்டும் என்று கண்டிப்புடன் இருப்பான்.

அதனால் தன் வகுப்பு நேரத்தில் பாதி நேரம் பாடம் எடுத்து விட்டு, மீதி நேரம் அவர்களுடன் கலந்துரையாடுவான்.

தன் பள்ளி கால அனுபவங்கள் தன் கல்லூரி கால அனுபவங்கள், படிக்க வேண்டிய காலத்தில் படிப்பில் கவனம் செலுத்தாமல் வாழ்க்கையைத் தொலைத்தவர்களைப் பற்றிச் சம்பவங்கள் என்று அனைத்தைப் பற்றியும் அவர்களுடன் பேசுவான்.

அறிவுரை என்று நேரடியாக இல்லாமல் சில சுவையான சம்பவங்கள் மூலம் அவர்களுக்கு எடுத்துச் சொல்லும் போது, அவனின் பாட நேரத்தை விட, அவனின் அந்தப் பேச்சை கேட்க காத்திருக்கும் மாணவர்கள் பலர் உண்டு.

இன்றும் காலையில் விரைவிலேயே பள்ளிக்கு வந்திருந்தான் பிரபஞ்சன். இன்னும் சற்று நேரத்தில் ஒரு தேர்வு வைத்திருந்தான்.

ஆசிரியர் அறையில் தன் பொருட்களை வைத்து விட்டு அப்படியே தன் கைபேசியை அவனின் மேஜை ட்ராயரில் வைத்து மூட போன போது அவனின் கைபேசி ஒலி எழுப்பாமல் அதிர்ந்தது.

பள்ளிக்கு வந்து விட்டால் கைபேசியைச் சைலண்ட்டில் போட்டுவிட்டு மேஜை ட்ராயரில் போட்டு மூடி விட்டுத்தான் வகுப்பறைக்குச் செல்வது அவனது வழக்கம்.

இந்த நேரம் யார்? என்ற கேள்வியுடன் கைபேசியை எடுத்துப் பார்த்தான்.

நந்திதா அழைத்துக் கொண்டிருந்தாள்.

அவளின் பெயரை பார்த்ததும் அவனின் உதடுகள் புன்முறுவலில் மலர்ந்தது.

அவளைப் பெண் பார்த்து விட்டு வந்து ஒரு மாதம் கடந்திருந்தது. அடுத்த மாதம் இருவருக்கும் திருமணத் தேதி குறிக்கப்பட்டிருந்தது.

இருவரும் அலைபேசி வழியாக ராகவர்தினி சொன்ன கடலையை நன்றாகவே வறுத்துக் கொண்டிருந்தனர்.

திருமண வேலைகள் எந்தச் சுணக்கமும் இல்லாமல் அது ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.

இவர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசிக் கொள்வார்கள். ஆனால் வேலை நேரத்தில் மட்டும் பேச வேண்டாம் என்று அவர்களுக்குள் தீர்மானமே போட்டுக் கொண்டிருந்தனர்.

அப்படியிருக்க, இப்போது தான் பள்ளியில் இருப்போம் என்று தெரிந்தும் ஏன் அழைக்கிறாள்? என்று நினைத்துக் கொண்டே அலைபேசியை உயிர்ப்பித்தான்.

“ஹாய் நந்து… என்ன இந்த நேரம்? நான் ஸ்கூலில் இருக்கேன்…” என்று பேசிக் கொண்டே ஸ்டாப் ரூமின் ஜன்னலோரம் நகர்ந்தான்.

“நீங்க இந்த நேரம் ஸ்கூலில் இருப்பீங்கன்னு தெரியும் பிரபு. உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கத்தான் போன் போட்டேன்…” என்றாள்.

இந்த ஒரு மாதத்தில் ‘நந்து… பிரபு’ என்ற அழைப்பு அவர்களுக்குள் வந்திருக்கும் நெருக்கத்தைப் பறைசாற்றியது.

“என்ன விஷயம் நந்து?” எனக் கேட்க,

“வாட்ச்அப் பாருங்க…” என்றாள்.

‘வேலை இருக்கே…’ என்று நினைத்தாலும் அவளுக்கு ஒரேடியாக மறுப்பு தெரிவிக்க முடியாமல் வாட்ச்அப் பார்த்தான்.

ஒரு புகைப்படம் அனுப்பியிருந்தாள். அதைத் திறந்து பார்க்க, ஒரு புதுப் புடவை விரித்துக் காட்டப்பட்டிருந்தது.

லைனில் இருந்தவளிடம், “இது என்ன புடவை படம் இருக்கு? எதுக்கு நந்து?” என்று கேட்டான்.

“அந்தப் புடவை பிடிச்சிருக்கான்னு பார்த்து சொல்லுங்க பிரபு…” என்றாள்.

“ம்ம், நல்லாத்தான் இருக்கு. இதைக் கேட்கவா வேலை நேரத்தில் போன் செய்த?” என்று கேட்டான்.

“வேலையும் முக்கியம் தான் பிரபு. அதை விட நம்ம பர்சனலும் முக்கியம் தானே? இந்தச் சேலை இப்ப ஆர்டர் போடலாம்னு இருக்கேன். உங்களுக்குத் பிடிச்சால் தான் நான் ஆர்டர் பண்ண முடியும். ஏன்னா அதை முக்கியமான நேரத்தில் ரசிக்கப் போவது நீங்க தானே…” என்ற நந்திதாவின் குரல் குழைவாக வந்தது.

அவளின் குழைவில் பிரபஞ்சனின் மனமும் மயங்கியது. ஆனால் இருக்கும் இடம் உணர்ந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.

“அப்படி என்ன முக்கியமான நேரம் நந்து?” என்று புரியாமல் ரகசியமாகக் கேட்டான்.

“அடுத்த மாதம் இருபத்தி இரண்டாம் தேதி ஈவ்னிங் அந்தச் சேலை தான்…” என்று கிசுகிசுப்பாகச் சொன்னவள் அடுத்த நொடி அழைப்பை துண்டித்திருந்தாள்.

என்ன இருபத்தி இரண்டாம் தேதி என்று யோசித்த பிரபஞ்சனின் மூளையில் மின்னல் வெட்டியது போல் இருந்தது.

அவர்களின் திருமணத்தேதி. அன்று காலையில் கல்யாணம். இரவு முதலிரவு.

இரவு கட்ட போகும் சேலையைப் பற்றித்தான் சொல்லியிருக்கிறாள் என்று புரிந்ததும் அந்த ஆண்மகனின் வதனத்தில் கனவுகளுடன் கூடிய செம்மை படர்ந்தது.

அதே செம்மையுடன் இப்போது புடவையை மீண்டும் நன்றாகப் பார்த்தான்.

மஞ்சளும் இல்லாமல், ஆரஞ்சும் இல்லாமல் இருந்த அந்தச் சேலையின் நிறம் அவனுக்குப் பிடித்திருந்தது.

அதைக் கட்டினால் நந்திதா எப்படி இருப்பாள் என்று கற்பனையில் கண்டவனுக்கு மேனி சிலிர்த்துப் போனது.

அவன் அந்தப் புடவை படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போதே அந்தப் படத்தைக் கோட் செய்து, ‘ஓகே வா?’ என்று கேட்டாள் நந்திதா.

“டபுள் ஓகே…” என்று பதில் அனுப்பியவன் இதய வடிவிலான ஸ்மைலிகளையும் சேர்த்தே அனுப்பி வைத்தான்.

அடுத்து ஒரு ஜாக்கெட் டிசைனை அனுப்பி ‘அது பிடித்திருக்கிறதா?’ என்று கேட்டாள்.

ரொம்பப் பிடித்திருப்பதாக இவன் சொன்னதும் அவளிடமிருந்தும் இதய வடிவ ஸ்மைலிகள் தொடுதிரையை நிரப்பின.

“ஓகே நந்து, கிளாஸூக்கு நேரமாச்சு. நாம அப்புறம் பேசலாம். பை…” என்று விடைபெற்றுக் கொண்டான்.

அவளிடம் பேசி முடித்து விட்டு தற்செயலாக ஜன்னல் வழியாகப் பார்வையைத் திருப்பியவன் கண்களில் தூரத்தில் ஒரு மரத்தின் பின் யாரோ நிற்பது போல் தெரிய, ‘யார் அங்கே?’ என்பது போல் பார்த்தான்.

அங்கே நின்றிருந்தது தங்கள் பள்ளி மாணவன் என்று லேசாகத் தெரிந்த பள்ளி சீருடையை வைத்தே கண்டு கொண்டான் பிரபஞ்சன்.

அது ஒரு புதர் போலான பகுதி. பள்ளி கட்டிடத்தின் பின் பக்கம் இருந்தது.

அங்கே ஆட்கள் நடமாட்டம் அவ்வளவாக இருந்தது இல்லை.

‘அங்கே ஏன் அவன் போனான்? எந்த வகுப்பு மாணவனாக இருக்கும்?’ என்று யோசித்தான்.

அந்த மாணவன் தனியாக நிற்பது போலவும் தெரியவில்லை. அந்தப் பக்கம் யாருடனோ பேசுகிறான் என்று அவன் உடல் மொழி எடுத்துரைத்துக் கொண்டிருந்தது.

அந்தப் பக்கம் யார் என்று பார்க்கும் முயற்சியில் அவன் இருந்த போதே, “சார்…” என்று வாசல் பக்கம் இருந்து யாரோ அழைக்கவும் திரும்பிப் பார்த்தான்.

அவன் வகுப்பு மாணவன் தான் நின்று கொண்டிருந்தான்.

“டெஸ்ட் சொல்லிருந்தீங்க சார். எல்லோரும் தயாராயிருக்கோம். நீங்க வரலைங்கவும் என்னாச்சுன்னு பார்க்க வந்தேன் சார்…” என்றான் அந்த மாணவன்.

“யா… இதோ வர்றேன் சுரேஷ். எல்லாரையும் ரெடியா இருக்கச் சொல்…” என்றதும்,

“ஓகே சார்…” என்ற மாணவன் கிளம்பி விட்டான்.

அவன் சென்றதும் ஜன்னல் வழியாக மீண்டும் அந்த மரத்தைப் பார்க்க, அங்கே இப்போது யாரும் இருக்கவில்லை.

இனி இந்தப் பக்கம் ஒரு பார்வை வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் தன் வகுப்பை நோக்கி சென்றான் பிரபஞ்சன்.

அன்று மாலை வேலை முடிந்து வீட்டிற்குச் சென்ற போது வரவேற்பறையில் அமர்ந்து அவனின் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தாள் ராகவர்தினி.

“ஹாய் வாத்தி, இப்பதான் வர்றீங்களா?” என்று உற்சாகமாக வரவேற்றாள்.

“என்ன ராக்கம்மா, அதிசயமா இந்தப் பக்கம் வந்திருக்க?” என்று விசாரித்தான்.

“நான் அடிக்கடி இங்கே வந்து கொண்டு தான் இருக்கேன். உங்களுக்குத் தான் இப்ப என்னை எல்லாம் கண்ணுக்கு தெரியல…” என்று குறும்புடன் கிண்டலடித்தாள்.

“யாரு நீ? பொய் சொல்றதுக்கு ஒரு அளவு வேணாம்? நீ இங்க வந்து ரெண்டு வாரம் ஆச்சு. என் கண்ணு நல்லாத்தான் தெரியுது. உனக்குத் தான் ஞாபக மறதி‌ அதிகமா இருக்கு. போய் டாக்டர்கிட்ட செக் பண்ணு…” என்று அவன் நக்கலாகச் சொன்னான்.

“எனக்கு ஞாபகம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா உங்களுக்கு என்னை மறந்து விட்டதுன்னு சொன்னது உண்மை தான். அதனால் தான் நான் போன் போட்டா கூட உங்க போன் எங்கேஞ்ச்டா இருக்கு. நானும் போன் போட்டு போட்டு அலுத்துப் போய் நேரிலேயே வந்துட்டேன்…” என்றாள்.

“போன் போட்டியா? எப்போ?” என்று கேட்டவன் தன் கைபேசியை எடுத்துப் பார்த்தான்.

அவளிடமிருந்து எந்த அழைப்பும் வந்த மாதிரி தெரியவில்லை.

கேள்வியுடன் அவளை நிமிர்ந்து பார்க்க, அவளோ நமட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

“பொய்! பொய்! அவ்வளவும் பொய்!” என்றான் முறைத்துக் கொண்டே.

“ஹாஹாஹா… நான் போன் போட்டேன்னு சொன்னதும் ஒரு முழி முழிச்சீங்க பாருங்க. அதுலயே நந்திதா அக்கா உங்ககிட்ட பேசிட்டு இருக்கும் போது நான் போன் போட்டு விட்டோனோன்னு நீங்க தடுமாறியதை சொல்லிடுச்சு. என்ன அத்தான் ஒரே கடலை தானா?” என்று கண்சிமிட்டிக் கேட்டாள்.

“வாலு! இப்படிப் பேசாதேன்னு சொல்லிருக்கேன்ல?” என்று அதட்டினான்.

அதற்கு அவள் ஏதோ சொல்ல வர, “போதும்! போதும்! உங்க ரெண்டு பேர் சண்டை…” என்று அவ்வளவு நேரம் அவர்களின் வாயாடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கஸ்தூரி இருவரையும் அடக்கினார்.

“இப்பத்தான் வந்தவன் கிட்ட என்ன அரட்டை ராகா? நான் போய் அவனுக்குக் காஃபி எடுத்துட்டு வரேன். அதுவரைக்கும் சண்டை போடாம அமைதியா இருங்க…” என்றவர் சமையலறைக்குச் சென்றார்.

“நான் போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன். அதுவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணு…” என்று சொல்லிவிட்டு மாடிக்குச் சென்றான் பிரபஞ்சன்.

அவன் கீழே இறங்கி வரும் முன் கஸ்தூரி போட்டுக் கொண்டு வந்த காஃபியை வாங்கிக்கொண்டு தானே மாடி ஏறி சென்றாள் ராகவர்தினி.

அவள் அறைக்குள் நுழைந்த போது, குளியலறையிலிருந்து வெறும் பெர்முடாஸ் மட்டும் அணிந்து, சட்டையில்லாமல் வந்த பிரபஞ்சன் அவளைப் பார்த்ததும் சட்டென்று அங்கிருந்த துவாலையை எடுத்து மேல் உடம்பை மறைத்தான்.

“நான் கீழே வருவேன்ல? அதுக்குள்ள நீ ஏன் காஃபி எடுத்துட்டு வந்த?” என்று கேட்டான்.

அவன் மேல் உடை அணியாததை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் இயல்பாக உள்ளே வந்தபடி, “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் அத்தான். அதான் வந்தேன்…” என்றாள்.

“நான் கீழே வந்த பிறகு பேச வேண்டியது தானே?” என்றவன் அலமாரி கதவை திறந்து ஒரு சட்டையை எடுத்து அலமாரி மறைவிலேயே மாற்றி விட்டு கதவை மூடிவிட்டு அவளின் கண்பார்வைக்கு வந்தான்.

“தனியா பேசணும் அத்தான்…” என்றவள் அவன் கையில் காஃபியைக் கொடுத்தாள்.

“என்ன பிரச்சனை உனக்கு?” என்று கேட்டுக் கொண்டே காஃபியைப் பருக ஆரம்பித்தான்.

“பிரச்சனைன்னு எப்படிக் கேட்குறீங்க? நான் சும்மா கூட உங்ககிட்ட தனியா பேச வந்திருக்கலாம்ல?” என்று கேலியாகக் கேட்டாள்.

“இப்போ கேலியா பேசத்தான் வந்தியா? உனக்குப் பிரச்சனை இல்லாமல் தனியா பேசணும்னு என்னைக்கும் இல்லாமல் காஃபி கப்பை நீ தூக்கிட்டு வந்திருக்க மாட்ட. விளையாடாமல் என்ன பிரச்சனைன்னு சொல்லு…” என்றான்.

“இதுக்குத்தான் அத்தான் உங்ககிட்ட பேச முடிவு செய்தேன். நீங்க ரொம்ப ஷார்ப். ஆனால் நான் சொல்ல போற விஷயத்தை நீங்க நம்ம வீட்டு பெரியவங்ககிட்ட சொல்ல கூடாது…” என்று கண்டிஷன் போட்டாள்.

“வீட்டில் சொல்ல முடியாத அளவுக்குப் பெரிய பிரச்சனை எதுலயும் மாட்டிக்கிட்டயா என்ன?” என்று கேட்டவனிடம் லேசான பதட்டம்!

“நீங்க பதட்டப்படும் அளவுக்குப் பெரிய பிரச்சனை இல்லை அத்தான். ஆனா அதுக்காகச் சின்னப் பிரச்சனையும் இல்லை…” என்றாள்.

“தலையைச் சுத்தி மூக்கை தொடாமல் என்ன பிரச்சனைன்னு முதலில் சொல்லு ராகா…” என்று அதட்டினான்.

“லவ் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க அத்தான்?” என்று அலட்டாமல் கேட்டவளை ஆத்திரமாகப் பார்த்தான் பிரபஞ்சன்.

“படிக்கும் போது படிக்கிற வேலையை மட்டும் தான் பார்க்கணும்னு சொல்லிருக்கேனா இல்லையா?” என்று அதட்டலாகக் கேட்டான்.

“முதலில் வாத்தியாரா பேசாம என் அத்தானா பேசுங்க அத்தான். இப்படி நீங்க அதட்டிக்கிட்ட இருந்தால் என்னால் உங்ககிட்டயும் விஷயத்தைச் சொல்ல முடியாமல் போகும்…” என்றாள்.

“சரி… சரி… அதட்டலை. விஷயத்தைச் சொல்லு…” முயன்று பொறுமையாகக் கேட்டான்.

“அதான் நான் கேட்டனே… காதலை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க அத்தான்?” மீண்டும் கேட்டாள்.

அவளிடம் அதைப்பற்றிப் பேச விருப்பமில்லை என்றாலும் அவளின் பிரச்சனையை அறிந்து கொள்ளத் தன் எண்ணத்தைச் சொல்ல நினைத்தான்.

“அதைப் பற்றி எனக்குப் பெரிய அபிப்பிராயம் இல்லை ராகா. ஆனாலும் காதலை தப்பு என்றும் சொல்ல மாட்டேன். யாருக்கும் காதல் வரலாம். ஆனா அந்தக் காதல் எப்போ எந்த நேரத்தில் வரணுமோ அந்த நேரத்தில் வருவது தான் சரியாக இருக்கும்.

காதல் உணர்வுகளுக்கு அப்படிக் கால நிர்ணயம் விதிக்க முடியுமா என்ற வாதம் வந்தால் நிர்ணயம் செய்து தான் ஆகணும் என்பது தான் என் எண்ணம்.

அதிலும் படிக்கும் வயதில் காதல் வேண்டாமே வேண்டாம் என்று தான் சொல்லுவேன். நம் எதிர்காலத்தையே நிர்ணயிக்கப் போவது நாம் படிக்கும் காலம் தான். படிக்க வேண்டிய வயதில் மனதை அலைபாய விட்டால் கண்டிப்பாக அது எதிர்கால வாழ்க்கையையே பாதிக்கும்.

வாழ்க்கைக்குக் காதல் முக்கியமாக இருக்கலாம். ஆனால் படிப்பு அதைவிட முக்கியம்! நம் சந்ததிகளை முன்னேற்ற, வழிநடத்த, படிப்பு கண்டிப்பாக வேணும்.

வாழ்க்கைக்கு அனுபவ அறிவு மட்டும் போதாது… படிப்பறிவும் முக்கியம் என்பதுதான் என் எண்ணம்…” என்றான்.

‘ஷப்பா! ஒற்றைக் கேள்விக்கு எவ்வளவு பெரிய விளக்கம். வாத்தி! வாத்தி!’ என்று உள்ளுக்குள் பல்லைக் கடித்தாள் ராகவர்தினி.

ஆனால் வெளியே அவனை அப்பாவி பிள்ளைபோல் பார்த்து வைத்தாள்.

“என்ன உள்ளுக்குள் எரிச்சல் குபுகுபுன்னு எரிந்து கொண்டு இருப்பது போல இருக்கு?”

அவளின் முகப் பாவனையை வைத்தே அவள் என்ன நினைக்கிறாள் என்பதை அறிந்தது போல் கேலியாகக் கேட்டான் பிரபஞ்சன்.

“மைண்ட் வாஸை கூடக் கேட்ச் பண்ணினால் எப்படி அத்தான்?” என்று சலித்துக் கொண்டாள்.

“நீ அப்பாவி போல மூஞ்சியை வைத்திருக்கிறதே காட்டி கொடுக்குதே. உன் நடிப்பு எல்லாம் என்கிட்ட செல்லுபடி ஆகாது…” என்றான் கெத்தாக.

“உங்ககிட்ட படிக்கிற பிள்ளைங்க எல்லாம் பாவம் அத்தான். எப்படித்தான் உங்க அறுவையை எல்லாம் தினமும் சகிச்சுக்கிட்டு இருக்காங்களோ…” என்றாள்.

“நல்லது சொன்னால் உன்னைப் போல ஆளுங்களுக்கு எல்லாம் அறுவையாகத்தான் இருக்கும். சரி, அதை விடு! எதுக்குக் காதலை பத்தி என்கிட்ட கேட்ட?” என்று விசாரித்தான்.

“நான் லவ் பண்ணலாம் என்று இருக்கிறேன் அத்தான். அதுதான் அதைப்பற்றி உங்ககிட்ட அபிப்பிராயம் கேட்க வந்தேன்..” என்றவளை கடுமையாக முறைத்தான் பிரபஞ்சன்.