19 – ஈடில்லா எனதுயிரே

அத்தியாயம் – 19

கஸ்தூரி இறந்து அன்றுடன் முப்பது நாட்கள் ஆகியிருந்தன.

முப்பதாவது நாள் காரியத்திற்காக ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது.

“எல்லாத்திலேயும் கொஞ்சம் கொஞ்சம் தனியா கிண்ணத்தில் எடுத்து வை ராகா. படையல் போடும் போது அதைத் தான் இலையில் வைக்கணும்…” என்று மகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார் மீரா.

“சரிம்மா…” என்ற ராகவர்தினி அவர் சொன்ன படி சமைத்த உணவில் இருந்து தனியாக எடுத்து வைத்தாள்.

“எல்லா வேலையும் இங்கே முடிந்தது. படையல் போடுவதற்கு முன் குளிச்சுட்டு வந்திடு…”

“இதோ போறேன்மா…”

“இன்னைக்கும் சுடிதாரை எடுத்து மாட்டாதே! ஒரு சேலையை எடுத்துக் கட்டு…”

“சரிம்மா…” என்று அன்னையிடம் சொல்லிவிட்டு மாடி ஏறினாள்.

உள்ளே அறையில் ஜன்னல் அருகில் நின்று வெளியே வெறித்துக் கொண்டிருந்தான் பிரபஞ்சன்.

“என்ன அத்தான் குளிச்சுட்டு கீழே போகலையா? இங்கேயே நின்னுட்டீங்க?” என்று கேட்டதும் தன் கவனம் கலைந்து அவள் புறம் திரும்பினான்.

“போகணும். எனக்கு எதுவும் வேலை இருக்கா?”

“வேலை எதுவும் இல்லை அத்தான். ஆளுங்க எல்லாம் வருவாங்க. நீங்க கீழே இருந்தால் நல்லா இருக்கும்…”

“சரி, நான் கீழே போறேன்…”

“சரி அத்தான், போங்க… நான் குளிச்சுட்டு வர்றேன்…” என்றவளுக்குத் தலையை அசைத்து விட்டு சென்று விட்டான்.

அவனின் முதுகையே வெறித்துப் பார்த்து பெருமூச்சு விட்டு கொண்டாள் ராகவர்தினி.

அவனின் அறைக்குள் அடைக்கலம் புகுந்திருந்தாளே தவிர இன்னும் அவன் மனதிற்குள் அடைக்கலம் புகவில்லை.

மாமன் மகள் என்பதைத் தாண்டி தன்னை அவன் நினைக்கின்றானா இல்லையா என்றே அவளுக்குப் புரியவில்லை.

ஒரே அறையில் இருந்தாலும் இன்னும் அவளிடம் ஒற்றுதல் இல்லை.

அந்த வீட்டின் மருமகளாகத் தன்னை நிலைநிறுத்தியிருந்தாள்.

கல்லூரிக்குச் சென்று வந்து கொண்டிருந்தாலும் வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொண்டாள்.

அவள் படிப்பில் தேக்கம் வந்து விடக் கூடாது என்று மேல் வேலைக்கு ஒரு ஆளை வேலைக்கு வைத்திருந்தான்.

மீராவும் மகளுக்கு வந்து உதவுவார் என்பதால் அவளுக்குப் படிப்பையும், வீட்டையும் சமாளிக்க முடிந்தது.

அவனும் பள்ளிக்கு வழக்கம் போல வேலைக்குச் சென்று கொண்டிருந்தான்.

அனைத்தும் நடைமுறை வாழ்க்கைக்கு வந்து விட்டது போல் தோன்றினாலும் அவன் இன்னும் தன் இறுக்கத்தில் இருந்து வெளியே வரவில்லை. முன்புபோல் கலகலப்பான பேச்சும் இல்லாமல் தனக்குள் இறுகித்தான் போயிருந்தான்.

பேச்சும் தேவைக்கு மட்டுமே வந்தது. அவனை அப்படிப் பார்த்து வருந்தி கொண்டிருந்தாள் ராகவர்தினி.

அவளிடம் அளந்துதான் பேசினான் என்பதால் அவளாலும் அவனை மாற்ற முடியவில்லை.

ராகவர்தினி குளித்துவிட்டு வந்ததும் சில உறவினர்களும் வர ஆரம்பித்திருக்கப் படையலை போட்டு கும்பிட்டு முடித்தனர்.

அன்று மாலைக்கு மேல் உறவினர்கள் எல்லாம் கிளம்பிவிட வீட்டினர் மட்டுமே இருந்தனர்.

சுபேசனிடம் பேசிக்கொண்டிருந்த கணவரிடம் கண்ஜாடை காட்டினார் மீரா.

‘இரு! பேசுறேன்’ என்பது போல் தலையை அசைத்த மாதவன் “அத்தான்…” என்று பேச்சை ஆரம்பித்தார்.

“சொல்லு மாதவா…”

“அக்கா நம்மை விட்டு போன இந்த நேரத்துல இதெல்லாம் செய்யக்கூடாது தான். ஆனாலும் நம்ம வீட்டு பிள்ளைங்க கல்யாணத்தை நாம எல்லோருக்கும் தெரியப்படுத்தணும்…”

“ஆமா மாதவா, கஸ்தூரி வீட்டுக்கு வந்ததும் ரிசப்ஷன் வைப்பதாகத்தானே முடிவு செய்திருந்தோம். ஆனா அவள் நம்மை விட்டு போவாள்னு நாம எதிர்பார்க்கலை…” என்றார் மனைவியை இழந்த சோகத்துடன்.

“ஆமா அத்தான். நாம எதிர்பாராமல் தான் என்னென்னவோ நடந்து போயிருச்சு. இப்ப முப்பதாவது நாள் சாமி கும்பிட்டாச்சு. இனி ரிசப்ஷன் நடத்திடலாமா அத்தான்?”

“நடத்தலாம் மாதவா. பிள்ளைங்க கல்யாணம் தான் சிம்பிளா முடிந்தது. ரிசப்ஷன் நல்லா செய்திடுவோம். நல்ல மண்டபமா பாரு மாதவா. நானும் எனக்குத் தெரிந்த இடத்தில் தேடிப் பார்க்கிறேன். எது கிடைக்குதோ அதில் வைத்து விடுவோம். பத்திரிக்கை வேற அடிக்கக் கொடுக்கணும்…” என்றார்.

“ஆமா அத்தான். அதையும் பார்க்கணும்…” என்று மாதவன் சொல்ல,

“மாமா…” என்று அவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டே மாடியிலிருந்து இறங்கி வந்த பிரபஞ்சன் அழைத்தான்.

“சொல்லு பிரபா…”

“இப்ப எதுக்கு ரிசப்ஷன்? இன்னும் ராகா படிப்பை முடிக்கலை. அவள் படிப்பை முடிக்கும் முன் கல்யாணம் முடிச்சதே எனக்கு உறுத்தலாக இருக்கு. இதில் இந்த நேரத்தில் ரிசப்ஷன் எல்லாம் தேவையா?” என்று கேட்டபடி அவர்கள் எதிரே அமர்ந்தான்.

மாதவனும், மீராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“இதில் என்ன உறுத்தல் பிரபா? கல்யாணம் முடிந்த பிறகும் படித்து நல்ல வேலையில் இருக்கிறவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. ராகா படிப்பு முடிய போகுது. அவளும் நல்லா படிக்கிற பொண்ணு தான். அதனால் மேரேஜ் ஆனதால் படிப்பு பாதிக்கப்படுமோன்னு நினைக்க வேண்டியது இல்லை…” என்றார்.

“புரியுது மாமா. ஆனாலும் படிப்பு முடிந்த பிறகு ரிசப்ஷன் வச்சால் என்ன?”

“முடிக்க வேண்டிய கடமையைச் சரியான நேரத்தில் முடிக்கணும் பிரபா. அம்மா இறந்ததால் ஒரு மாதம் தள்ளிப் போட்டுட்டோம். இனியும் போட முடியாது. நீங்க இரண்டு பேரும் ஜோடியா வெளியே போனால் ராகா உன் மனைவின்னு பார்க்கிறவங்களுக்குத் தெரியணுமே தவிர, யாரோ ஒரு பொண்ணா இல்லை…” என்றார் சுபேசன்.

“நீயும் இந்த வீட்டுக்கு ஒற்றைப் பிள்ளை. ராகாவும் எங்க வீட்டுக்கு ஒற்றைப் பிள்ளை. உங்க கல்யாணத்தைச் சிறப்பா செய்யணும்னு எங்களுக்கும் ஆசை இருக்கும் தானே பிரபா? எங்க ஆசைக்காகவாவது சரின்னு சொல்லு…” என்றார் மீரா.

பெரியவர்கள் அவ்வளவு சொல்ல, அதற்கு மேல் அவனால் மறுப்பு சொல்ல முடியவில்லை.

அங்கே ஓரமாக நின்றிருந்த ராகவர்தினியைப் பார்த்தான்.

அவன் என்ன பதில் சொல்வான் என்பது போல் ஆவலாக அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் ஆவலை பார்த்த பிறகு அவனுக்கு மறுப்பு சொல்ல தோன்றவில்லை.

“சரி, செய்ங்க…” என்று தன் சம்மதத்தைச் சொல்லி விட்டு எழுந்து சென்றான்.

மர்மத்துடன் புன்னகைத்துக் கொண்டாள் ராகவர்தினி.

‘என் படிப்பு முடியும் வரை தான் நான் நல்லபிள்ளையா இருப்பேன் அத்தான். அதுக்குப் பிறகு டோட்டலா உங்களை மாத்தும் வேலை தான் எனக்கு. நான் உங்க மாமா பொண்ணு மட்டும் இல்லை, உங்க பொண்டாட்டியும் கூடன்னு உங்களுக்குப் புரிய வைக்கிறேனா இல்லையான்னு பாருங்க…’ என்று தனக்குள் சொல்லி சபதமே எடுத்துக் கொண்டாள் ராகவர்தினி.

அவன் சம்மதம் சொன்னதும் பெரியவர்கள் வரவேற்பு பற்றிக் கலந்து பேச ஆரம்பித்தனர்.

பிரபஞ்சன் எதிலும் கலந்து கொள்ளாமல் அவன் அறைக்குச் சென்று விட்டான்.

“இப்படி எதிலும் ஒட்டாமல் இருந்தால் எப்படி ராகா? பிரபாவை கொஞ்சம் கலகலப்பா இருக்கச் சொல்லு…” என்று மகளிடம் சொன்னார் மீரா.

“அத்தான் இன்னும் அத்தை இறந்ததில் இருந்து வெளியே வரலைமா. அவங்க கோபப்பட்டுத் தனியா போனது தான் அவங்க இறப்புக்கு காரணமோன்னு குற்றவுணர்வில் இருக்கார்…” என்றாள்.

“நடக்கணும்னு இருக்குறது நடந்து தான் தீரும். அதுக்குக் குற்றவுணர்வு வரத் தேவையில்லைன்னு சொல்லு. நாங்க கூடத் தான் உன்னை அவருக்குக் கட்டி வைக்கிறதாகவே இல்லை. சொந்தத்துக்குள் வேண்டாம்னு தான் பிரபாவுக்குக் கல்யாணம் பேசினப்ப கூடச் சொன்னோம்.

ஆனா இப்ப அண்ணி கடைசி ஆசையா கேட்டதால் மறுக்க முடியாமல் கல்யாணம் பண்ணி வச்சோம். இது எல்லாம் நாம முடிவு செய்தா நடந்தது? நம்ம தலையில் என்ன எழுதியிருக்கோ அது தான் நடக்கும். பிரபாவை ஏதாவது நினைச்சுட்டு இருக்க விடாமல் நார்மலா இருக்கச் சொல்லு. நீயும் நார்மலா பிரபாகிட்ட பழகு. நீ தான் பிரபாவுக்குப் பக்கபலமா இருக்கணும்… “ என்றார்.

“சரிம்மா, நான் பார்த்துக்கிறேன்…” என்றாள்.

“சரி, நைட் நாம எல்லாம் சேர்ந்து சாப்பிடுவோம். போய் அழைச்சுட்டு வா…” என்றார்.

உடனே மாடிக்குச் சென்றாள்.

மொட்டை மாடியில் தான் இருந்தான் பிரபஞ்சன். சுவரோரமாகக் கைகளைக் கட்டிய படி நின்றிருந்தான்.

“அத்தான், சாப்பிட வாங்க…” என்றாள்.

“நீ போ, வர்றேன்…” என்றவனின் குரல் வேறுபாட்டை உணர்ந்தவள், “அத்தான்…” என்று அவன் தோளில் கையை வைத்தாள்.

அவனின் வழக்கமாக எப்போதும் போல் அவளை விலகி நின்றான் பிரபஞ்சன்.

சுருக்கென்று வலித்தது அவளுக்கு.

இன்னும் தொட்டு பேசினாலே விலகும் அவன் பழக்கம் மட்டும் மாறவே இல்லை.

அப்போ இன்னும் தன்னை அவன் மனைவியாக நினைக்கவே இல்லை என்றல்லவா ஆகிறது என்று நினைக்கும் போது நெஞ்சை அடைத்துக் கொள்வது போல் இருந்தது.

அவனிடம் பேசாமல் அப்படியே சென்றுவிட்டால் தான் என்ன? என்று தான் அவளுக்குத் தோன்றியது.

ஆனாலும் அவனின் குரல் மாற்றம் அவளை அப்படிச் செல்ல விடவில்லை.

“திரும்புங்க அத்தான்…” என்று அவனின் கையைப் பிடித்து வேகமாகத் தன் பக்கம் திருப்பி அவன் முகம் பார்த்தவள் அதிர்ந்தாள்.

அவன் கண்கள் கலங்கி இருந்தன.

“என்ன அத்தான் இது? என்னாச்சு?” என்று கேட்டாள்.

‘ஒன்னுமில்லை’ என்பது போல் தலையை மட்டும் அசைத்தான்.

“சொல்லுங்க அத்தான்…”

“என்ன சொல்ல? எனக்கு நெஞ்சை எல்லாம் அடைக்கிற மாதிரி இருக்கு. என் வாழ்க்கை முழுவதும் இந்த வலி என்னை விட்டு போகாது…” என்றான் வலியுடன்.

“ஏன் அத்தான்?”

“என்ன ஏன்? என்ன நடந்ததுன்னு உனக்கே தெரியும் தானே? ஏன் என் வாழ்க்கையில் இதெல்லாம் நடந்தது ராகா? நான் பண்ண நல்லதுக்காக ஒரு பொண்ணு ஏன் என் மேல் தவறான புகார் கொடுக்கணும்? என் கல்யாணம் ஏன் நிக்கணும்? போலீஸ் ஸ்டேஷன் வாசலை மிதித்து, கெட்ட பெயர் வாங்கி, அம்மா, அப்பாவே என்னைத் தவறா நினைத்துன்னு ஏன் இத்தனையும் நடக்கணும்?

அதை விட அவங்க என்னை நம்பலைன்னு நான் ஏன் அப்பா, அம்மா மேல கோபப்பட்டுத் தனியா போகணும்? அவங்க கூடப் பேச கூடாதுன்னு நம்பரை ஏன் பிளாக் பண்ணனும்? நான் அப்படிச் செய்தது எவ்வளவு பெரிய தவறா போயிருச்சு.

காலம் முழுவதும் நான் குற்றவுணர்விலேயே தவிப்பது போல அம்மா போய்ச் சேர்ந்துட்டாங்க. என்னால் ஒரு நாள் கூட நிம்மதியா தூங்க முடியலை. நெஞ்சமெல்லாம் ரணமா வலிக்குது.

நானே என்னோட அம்மாவை கொன்னுட்டதாகச் சொல்லி என் மனசாட்சி என்னைக் குத்தி கிழிக்கிது. என்னால் முடியலை ராகா. நான் ஏன் ராகா இவ்வளவு பெரிய தப்புச் செய்தேன்? அம்மா ஏன் என்னை இப்படித் தவிக்க விட்டு போனாங்க?” என்று கேட்டவன் உடைந்து போய் அழ ஆரம்பித்தான்.

தன் கணவன் வளர்ந்த குழந்தையாய் கதறி அழுவதைப் பார்த்துத் துடித்துப் போனாள் ராகவர்தினி.

“அத்தான்… என்ன அத்தான் இது? நீங்க எந்தத் தப்பும் செய்யலை அத்தான். எல்லாம் விதி!” என்று சமாதானம் செய்தாள்.

“விதி இல்லை ராகா… விதி இல்லை. எல்லாம் என்னால் தான். நான் மட்டுமே எல்லாத்துக்கும் காரணம். அம்மாவை நானே கொன்னுட்டேன்…” என்றவன் அப்படியே தரையில் மடங்கி அமர்ந்தான்.

“அத்தான்… அப்படி எல்லாம் இல்லை அத்தான். நீங்க எதுவும் செய்யலை. நடக்க இருக்கும் விதியை நாம மாத்த முடியுமா அத்தான்? நீங்க உங்க மனசுக்குச் சரின்னு பட்டதைச் செய்தீங்க. ஆனால் எல்லாம் தவறாகி போனது விதி தான்! உங்க தவறு இல்லை…” என்று அவள் எவ்வளவோ சமாதானம் செய்தும் அவன் சமாதானம் ஆகவே இல்லை.

முகம் குனிந்து கண்ணீர் விட்டவனை, “அத்தான் இங்கே பாருங்க…” என்று நாடியில் கை வைத்து தன் முகம் பார்க்க வைத்தாள்.

“அத்தை, மாமா மேல நீங்க பட்ட கோபம் நியாயமானது தான் அத்தான். உங்களை நல்லா அறிந்த பெத்தவங்க, தவறா நினைச்சுட்டாங்கன்னு அந்த நேரத்தில் நீங்க கோபப்படலைனா உங்களுக்கு உணர்வுகளே இல்லைன்னு ஆகிடும் அத்தான். பாசம், ஆசை, அழுகை, துக்கம், மகிழ்ச்சி போலக் கோபமும் நம்ம உணர்வோட கலந்த ஒரு உணர்ச்சி அத்தான்.

நீங்க இருந்த சூழ்நிலையில் அந்தக் கோபம் கூட வரலைனா எப்படி? தப்பு செய்தவன் கூட அவன் செய்த தப்பை குத்தி காட்டினால் என் தப்பை நீ எப்படிக் குத்திக் காட்டுவன்னு கோபப்படுவான் அத்தான். அப்போ நீங்க தப்பே செய்யாத போது இன்னும் கோபம் வரத்தான் செய்யணும்…” என்றாள்.

“இல்லை ராகா, என் கோபம் இப்ப அம்மா உயிரை பறிச்சுடுச்சே. அதுக்கு என்ன சொல்வது? நான் கோபப்பட்டது தப்புத்தான் ராகா…” என்றான்.

“அப்படிப் பார்த்தால் அத்தையும், மாமாவும் அவசரப்பட்டு உங்களைத் தவறா நினைத்ததும் தப்புத்தானே அத்தான்? அதை இல்லைன்னு மறுக்க முடியாதே?” என்றாள்.

“அவங்க தவறால் என் மனது மட்டும் தான் பாதிக்கப்பட்டது. ஆனால் என் தவறால் அம்மா உயிரே போயிடுச்சு…”

“அது நீங்க தெரிந்தே செய்தது இல்லை அத்தான். இப்ப ரோட்டில் போகும் போது திடீர்ன்னு விபத்து நடந்தால், என்ன செய்ய முடியும்? அது போல் தான் அத்தைக்குத் திடீர்னு உடம்பு சரியில்லாம போயிடுச்சு.

அப்படியும் அவங்க கேட்டாங்கன்னு உங்களுக்கு விருப்பம் இல்லாமயே என்னைக் கல்யாணம் பண்ணிருக்கீங்க அத்தான். என்னைக் கல்யாணம் செய்தது எல்லாம் எவ்வளவு பெரிய தவறு தெரியுமா? காலம் முழுவதும் உங்களை ஆட்டிப்படைத்து நீங்க செய்த தவறுக்குத் தண்டனை கொடுக்க என் கையில் உங்க குடுமியை கொடுத்துட்டு போயிருக்காங்க…”

அவனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டே வந்தவள், தன்னைப் பற்றிச் சொல்லும் போது கண்சிமிட்டி குறும்பாகச் சிரித்தாள்.

அவனுக்குச் சிரிப்பு வரவில்லை என்றாலும் அவன் மனதில் அவ்வளவு நேரம் இருந்த கனம் குறைவது போல் இருந்தது.

“நானும் கூடத்தான் அத்தைகிட்ட பேசாமல் தவிர்த்துத் தப்புச் செய்தேன் அத்தான். எனக்கும் அது குற்றவுணர்வாகத்தான் இருக்கு. நான் அத்தைகிட்ட மானசீகமா மன்னிப்புக் கேட்டேன் அத்தான். அத்தை ரொம்ப நல்லவங்க. நான் செய்த தவறை கண்டிப்பா மன்னிப்பாங்க.

அதே போல் நீங்களும் மன்னிப்பு கேளுங்க. இல்லனா மாமாகிட்ட மன்னிப்பு கேளுங்க. மாமாகிட்ட கேட்டால் அத்தைகிட்ட கேட்ட மாதிரி தான்…”

“கண்டிப்பா அப்பாகிட்ட மன்னிப்பு கேட்கிறேன்…” என்றான் சற்று தெளிந்தவனாக.

“ஆனாலும் இதில் இருந்து நீங்களும் சரி, நானும் சரி ஒரு பாடம் படிச்சிருக்கோம் அத்தான்…” என்றதும் கேள்வியாக அவளைப் பார்த்தான்.

“நம்ம உறவுகள் மேல கோபப்பட்டு என்ன சாதிக்கப் போறோம் அத்தான்? இதோ அவங்க இறந்து போன பிறகு அவங்களைத் தவிர்த்து விட்டோமேன்னு நம்ம மனசு குற்றவுணர்வில் குன்றி போகுது. நம்ம கண்ணு முன்னாடி அவங்க இருந்த போது கோபப்பட்டு அவங்க இறந்த பிறகு பீல் பண்ணிட்டு இருக்கோம்.

இதுக்கு அவங்க வாழும் போதே நம்ம கோபத்தை விட்டுட்டு, நல்லா பேசியிருந்தால் இந்தக் குற்றவுணர்வு தேவையில்லையே? இப்ப இருக்கும் உயிர் அடுத்த நொடி இருக்குமான்னு உறுதி இல்லாத நிலையில் நாமெல்லாம் கோபம், பழி, வஞ்சம், ஆத்திரம்னு இருந்து எதுவும் சாதிக்கப் போவது இல்லை அத்தான். வாழும் வரை அன்பாக இருப்போம். எல்லோரின் மீதும்!” என்றாள்.

“உண்மை தான்!” என்று ஒப்புக் கொண்டான்.

“ம்ம், இனியாவது நாம அப்படி இருக்கக் கூடாதுன்னு நினைச்சுட்டு அன்பை விதைப்போம் அத்தான்…” என்றாள்.

“கண்டிப்பா!” என்றவனின் கண்ணீர் நின்றே போயிருந்தது.

“வா, அப்பாகிட்ட பேசுவோம்…” என்று அவளையும் அழைத்துக் கொண்டு கீழே வந்தான்.

நேராகச் சோஃபாவில் அமர்ந்திருந்த தந்தையின் காலடியில் சென்று மண்டியிட்டு அமர்ந்தான்.

“என்ன பிரபா… மேலே உட்கார்…” என்றார் சுபேசன்.

“என்னை மன்னிச்சுடுங்கபா…” என்றான் சுற்றி வளைக்காமல்.

“எதுக்குப் பிரபா?” என்று புரியாமல் கேட்டவருக்கு அவனின் குற்றவுணர்வை எடுத்து சொன்னாள் ராகவர்தினி.

“என்ன பிரபா இது? எதுக்குக் குற்றவுணர்வு? அது தேவையில்லை பிரபா. எப்போ உன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு தெரிந்ததும் உன் கோபத்தை எல்லாம் தூக்கி போட்டுட்டு ஓடி வந்தியோ அப்பவே நமக்குள் இருந்த கோப தாபம் எல்லாம் சரியாகிடுச்சு பிரபா.

எங்க பிள்ளையை நாங்களே நம்பலையே பிரபா. அதெல்லாம் எவ்வளவு பெரிய தவறு. யார் நம்பாமல் போனாலும் நாங்க உன்னை நம்பியிருக்கணும். ஆனா அதைச் செய்யாம உன்னைக் குறை சொல்லிட்டோம். நாங்க தான் உங்கிட்ட மன்னிப்பு கேட்கணும். நீ இல்லை.

ஆனால் நாங்க செய்த தவறை மன்னிச்சு அதை எல்லாம் மறந்துட்டு நீ உடனே வந்தியே. அப்பவே அம்மா சந்தோஷமாகிட்டாள். அதோட அவள் கேட்டதும் உடனே கல்யாணம் பண்ணி அவளோட கடைசி ஆசையை நிறைவேத்தி வச்சுருக்க. அதில் அவள் நிம்மதியாகத்தான் போய்ச் சேர்ந்திருக்காள்.

அதனால் ஏதாவது நினைச்சு மனசை போட்டுக் குழப்பிக்காமல் நிம்மதியா, சந்தோஷமா ராகா கூட வாழ ஆரம்பி. உன் அம்மாவே உனக்குக் குழந்தையா பிறந்து உன்கூடவே வளர்வாள்…” என்ற சுபேசன் மகனின் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்தார்.

அன்னையே ஆசீர்வாதம் செய்தது போல் மகிழ்ந்து போனான் பிரபஞ்சன்.

வாழப்போவது கொஞ்சமே!

அதில் எதற்கு வஞ்சமே?

வன்மம், கோபம், ஆத்திரம் அனைத்தும் தரப்போவது துன்பத்தை மட்டுமே!

அன்பாய் இருப்போம்! இன்பத்தைக் காண்போம்!