19 – இதயத்திரை விலகிடாதோ?

அத்தியாயம் – 19

சூர்யா, யுவஸ்ரீ இருவரும் வேலைக்குக் கிளம்பும் போது பத்துமணி ஆகிவிட்டது.

அலுவலகத்தில் வேலை அவர்களை உள்ளிழுத்துக் கொண்டது.

நடுவில் வேலையில் ஒரு சந்தேகம் வர, தினேஷிடம் கேட்க நினைத்து அவனை நிமிர்ந்து பார்த்தாள் யுவஸ்ரீ.

அவளின் சந்தேகங்களைத் தினேஷிடம் கேட்டு, அவனால் முடியவில்லை என்றால் தான் தன்னிடம் கேட்க சொல்லியிருந்தான் சூர்யா.

அதனால் தினேஷிடம் கேட்க நினைக்க, அவனோ கணினி திரையைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவனின் கவனம் வேலையில் இல்லை என்பது போல் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தான்.

‘என்னாச்சு இவருக்கு?’ என்று நினைத்தவள் எழுந்து அவன் முன் சென்று, “தினேஷ்…” என்றழைத்தாள்.

“ஹான்… என்ன?” ஏதோ கனவிலிருந்து முழிப்பவன் போல் கேட்டான்.

“இந்தக் கோட்(code)டில் எரர் வருது. அதைப் பற்றி உங்ககிட்ட கேட்கணும்…” என்றாள்.

“எந்தக் கோட்?” என்று கேட்டான்.

அவளும் தனக்கு வந்த எரரை குறிப்பிட்டு சொல்ல, அவனோ யோசனையுடன் ஒரு நொடி முழித்தான்.

பின் தலையைக் குலுக்கி விட்டுக் கொண்டவன், “நீங்க சூர்யாகிட்ட கேளுங்க. அவன் கிளியர் பண்ணுவான்…” என்றவன் நெற்றியைத் தேய்த்துக் கொண்டே எழுந்து வெளியே சென்றுவிட்டான்.

அவனை யோசனையுடன் பார்த்துவிட்டு சூர்யா அருகே சென்றாள்.

“சூர்யா, ப்ரோகிராமில் எனக்கு ஒரு டவுட். கொஞ்சம் கிளியர் பண்றீங்களா?” என்று கேட்டாள்.

“தினேஷ்கிட்ட கேளேன் யுவா. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு…” நிமிர்ந்து பார்க்காமல் கணினியைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.

“நான் முதலில் தினேஷ் கிட்ட தான் கேட்டேன். ஆனால் அவர் ஏதோ மூட்அவுட்டில் இருக்கார் போல. உங்க கிட்ட கேட்க சொல்லிட்டு எழுந்து வெளியே போயிட்டார்…” என்றாள்.

“மூட்அவுட்டா?” என்றவன் தலையை நிமிர்த்தித் தினேஷின் இருக்கையைக் கேள்வியாகப் பார்த்து விட்டு மனைவியைப் பார்த்தான்.

“காலையில் வந்ததிலிருந்தே தினேஷ் அப்படித்தான் இருக்கார். என்னாச்சுன்னு தெரியலை…” என்றாள்.

“சரி, நான் என்னன்னு கேட்கிறேன். உனக்கு என்ன சந்தேகம்?” என்று கேட்டான்.

அவள் தன் சந்தேகத்தைக் கேட்க, அவன் அவளுக்கு விளக்கமாகப் புரிய வைத்தான்.

“இப்ப புரியுது சூர்யா. தேங்க்ஸ்! நான் போய் வேலையைக் கண்டின்யூ பண்றேன்…” என்று தன் இருக்கைக்குச் சென்றாள்.

தினேஷிடம் பேச, சூர்யாவால் உடனே எழுந்து செல்ல முடியவில்லை.

பின்பு பேசுவோம் என்று தள்ளிப் போட்டான்.

அதன்பிறகு மதிய உணவின் போது தான் தினேஷிடம் பேச முடிந்தது.

சூர்யா, தினேஷுடன் உணவிற்குச் செல்ல, யுவஸ்ரீயும் நந்தினியுடன் அங்கே வந்தாள்.

நந்தினியின் முகமும் சோர்வாக இருந்தது.

“என்னாச்சு நந்தினி? ஏன் இரண்டு பேரும் இப்படி இருக்கீங்க?” என்று விசாரித்தாள் யுவஸ்ரீ.

நந்தினி உடனே பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, “நீயாவது சொல்லு தினேஷ். என்ன பிரச்சினை உங்க இரண்டு பேருக்கும்? சண்டை போட்டுக்கிட்டீங்களா?” என்று சூர்யாவும் கேட்டான்.

“ம்ப்ச், எங்களுக்குள் ஒன்னும் பிரச்சினை இல்லை சூர்யா…” என்றான் தினேஷ்.

“பின்ன, ஏன் முகம் டல்லடிக்குது?”

“நாம நியூ இயருக்கு மகாபலிபுரம் போனோம்ல? அது பிரச்சினை ஆகிடுச்சு…” என்றதும் யுவஸ்ரீ திக்கென்று அதிர்ந்து இருவரையும் பார்த்தாள்.

“என்ன? என்ன பிரச்சினை?” பதறி போய்க் கேட்டாள்.

திருமணம் ஆகாதவர்கள் அல்லவா? பிரச்சினை என்றதும் அவளுக்கு என்னென்னவோ என்று நினைத்துப் பதறிவிட்டது.

மனைவியின் எண்ணவோட்டம் புரிந்தது போல் நமட்டு சிரிப்புடன் அவளின் கையைப் பிடித்து அழுத்தினான் சூர்யா.

‘என்ன சூர்யா இது?’ என்பது போல் கணவனைப் பார்த்தாள்.

“கற்பனை குதிரையைத் தட்டி விடாதேடி பொண்டாட்டி!” அவளின் காதருகில் குனிந்து மெல்லிய குரலில் கடிந்து கொண்டான்.

“என்ன பிரச்சினைன்னு தெளிவா சொல்லு தினேஷ்…” என்று கேட்டான்.

“நாங்க தனியா மகாபலிபுரம் சுத்தி வந்ததை நந்துவோட சொந்தக்காரர் ஒருத்தர் பார்த்து, அவள் வீட்டில் போட்டு கொடுத்துட்டார்…” என்றான்.

“ஓ! நந்தினி வீட்டில் என்ன சொல்றாங்க?”

“எங்க காதலை ஏத்துக்க மாட்டாங்களாம். நந்துவுக்கு வேற மாப்பிள்ளை பார்க்கும் விஷயத்தில் பிடிவாதமா இருக்காங்க. அதான் என்ன செய்வதுன்னு தெரியலை…” என்று தினேஷ் சொன்னதும், உடைந்து அழுதாள் நந்தினி.

“அழாதே நந்தினி! தைரியமா இரு! நீ வீட்டில் பேசிப் பார்த்தியா?” என்று கேட்டாள் யுவஸ்ரீ.

“நான் பேசிப் பார்த்துட்டேன் யுவா. தினுவை தவிர யாரையும் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு உறுதியா சொல்லிட்டேன். ஆனா அப்பா, அம்மா காது கொடுத்து கேட்கவே மாட்டிங்கிறாங்க…” என்றாள் அழுகையுடன்.

“உன் வீட்டில் உங்க காதல் விஷயம் தெரியுமா தினேஷ்?” சூர்யா கேட்க,

“தெரியாது சூர்யா. ஏற்கெனவே நந்து வீட்டில் விஷயம் தெரிந்து பிரச்சினையா இருக்கு. இந்த நேரத்தில் எங்க வீட்டிலும் தெரிந்து பிரச்சினை ஆச்சுனா சமாளிக்க முடியாது…” என்றான்.

“நீ நந்தினியை திருமணம் செய்யும் முடிவில் உறுதியா தானே இருக்க?” என்று சூர்யா கேட்க,

“என்ன இப்படிக் கேட்டுட்ட சூர்யா? நந்துவை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்…” என்றான் உறுதியாக.

“அப்புறம் என்ன தயக்கம்? உங்க வீட்டில் முதலில் விஷயத்தைச் சொல்லி உன் உறுதியான முடிவையும் சொல்லு. அவங்க என்ன சொல்றாங்கன்னு முதலில் தெரிந்து கொள். அவங்க சம்மதம் சொன்னால் நேரடியா போய் நந்தினி வீட்டில் பொண்ணு கேளு. நீ பேரண்ட்ஸ் கூடப் போய்ப் பொண்ணு கேட்கும் போது நந்தினி வீட்டில் யோசிப்பாங்க. அப்படியும் இல்லையா, இருக்கவே இருக்கு ரிஜிஸ்டர் மேரேஜ்…” என்று சொல்லி கண்சிமிட்டி சிரித்தான் சூர்யா.

“என்ன சூர்யா இது? பேரண்ட்ஸ்கிட்ட பேச சொல்லிட்டு, ரிஜிஸ்டர் மேரேஜ்னு ரூட்டை மாத்துறீங்க?” என்று கணவனைக் கடிந்து கொண்டாள் யுவஸ்ரீ.

“ஏன், நான் சொன்னதில் என்ன தப்பு? இரண்டு பேருமே தங்கள் காதலில் உறுதியா இருக்காங்க. அப்படி இருக்கும் போது அவங்க காதல் நிறைவேற என்ன செய்யணுமோ அதைச் செய்யச் சொன்னேன்…” என்றான் அலட்சியமாகத் தலையைச் சிலுப்பி.

“இவர் சொல்றாரேன்னு அவசரப்படாதீங்க தினேஷ். எதுவாக இருந்தாலும் யோசித்து முடிவு பண்ணுங்க…” என்றாள் யுவஸ்ரீ.

“இல்லை சிஸ்டர், சூர்யா சொல்வது சரி தான். இரண்டு பேர் வீட்டிலும் சம்மதிக்கலைனா ரிஜிஸ்டர் மேரேஜ் தவிர, எங்களுக்கும் வேற வழி இல்லை…” என்றான் தினேஷ்.

“நீ என்ன சொல்ற நந்தினி?” என்று தோழியிடம் கேட்டாள்.

“எனக்கு என்ன சொல்வதுன்னு தெரியலை யுவா? குழப்பமா இருக்கு…” என்றாள்.

“இனி குழப்பமே இல்லை நந்து. இவங்க கிட்ட பேசிய பிறகு இப்ப எனக்குக் கொஞ்சம் தெளிவு வந்திருக்கு. நான் இன்னைக்கே நம்ம விஷயத்தை எங்க வீட்டில் சொல்லப் போறேன். என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்…” தெளிவு பிறக்க சொன்னான் தினேஷ்.

“குட்! நல்ல முடிவு!” நண்பனின் தோளில் தட்டிக் கொடுத்தான் சூர்யா.

மேலும் சிறிது நேரம் அதைப் பற்றிப் பேசிவிட்டு, சாப்பிட்டு முடித்துத் தங்கள் வேலையைப் பார்க்க சென்றனர்.

அன்று மாலை விரைவிலேயே வேலையை முடித்துக் கொண்ட சூர்யா, மனைவியின் அருகில் வந்தான்.

“யுவா, இன்னைக்குச் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும். கிளம்பு!” என்றான்.

“ஏன் சூர்யா? இன்னும் வேலை முடியலையே?” யுவஸ்ரீ யோசனையுடன் கேட்க,

“மீதி வீட்டுக்குப் போய்ப் பார்த்துக்கலாம்…” என்றான்.

“ஏன்? அப்படி என்ன அவசரம்?”

“இன்னைக்கு என் ஃபிரண்ட் நரேன் நம்ம வீட்டுக்கு வர்றேன்னு சொல்லியிருக்கான். அவனுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகியிருக்கு. அதுக்கு இன்விடேஷன் வைக்க வர்றான்…” என்றான்.

அவனின் நண்பனின் பெயரை கேட்டதும் அவளின் முகம் சுருங்கியது.

கணவனுடன் விடுமுறை நாட்களில் வெளியே சுற்றும் நண்பர்களை அவளுக்குப் பிடிக்காது.

மனைவியுடன் நேரம் செலவழிக்காமல் கணவன் ஊர் சுற்ற அவர்களும் ஒரு காரணம் என்ற கோபம் அவளுக்கு இருந்தது.

நல்ல நண்பர்களாக இருந்தால் சூர்யாவிற்கு எடுத்துச் சொல்லியிருக்கலாம். ஆனால் அவனின் நண்பர்கள் அப்படி ஒரு நல்ல காரியத்தைச் செய்யவே இல்லை.

அந்த நண்பர்கள் குழுவில் முதலில் திருமணம் முடிந்தது சூர்யாவிற்குத் தான். மற்றவர்கள் எல்லாம் திருமணம் ஆகாதவர்கள்.

அதனால் அவர்களுக்கு வீட்டிற்கு நேரத்தை செலவு செய்யும் எண்ணமில்லை.

வாரவாரம் தங்களுடன் வரும் சூர்யாவிற்கும் எடுத்து சொல்லவில்லை என்று அவர்கள் மீது கோபமாக இருந்தாள்.

“எழுந்திரு, போவோம்!” மனைவியை மேலும் யோசிக்க விடாமல் வீட்டிற்குக் கிளப்பி விட்டான் சூர்யக்கண்ணன்.

அவர்கள் வீட்டிற்குச் சென்ற அரைமணி நேரத்திற்குப் பிறகு பத்திரிகை வைக்க அவர்கள் வீட்டிற்கு வந்தான் நரேன்.

அவனுக்கு விருந்தோம்பலாகக் காஃபி மட்டும் போட்டு கொடுத்தாள் யுவஸ்ரீ.

“தேங்க்ஸ் சிஸ்டர், எனக்கு இன்னும் பத்து நாளில் கல்யாணம். சூர்யாவும், நீங்களும் கல்யாணத்துக்குக் கட்டாயம் வரணும்…” என்றான் நரேன்.

“வர்றோம்…” என்று சம்பிரதாயமாகச் சொல்லி வைத்தாள்.

“உன் கல்யாணத்துக்கு வராமல் இருப்போமாடா? நம்ம கேங்ல எனக்கு அப்புறம் உனக்குத்தான் கல்யாணம். ஜமாய்ச்சுடுவோம்…” என்றான் சூர்யா.

‘பாவம் அந்தப் பொண்ணு. என்னைப் போல இன்னொரு ஜீவன் மாட்ட போகுது. அதைக் கொண்டாட நீங்க ஜமாய்க்க போறீங்களாக்கும்?’ என்று உள்ளுக்குள் நொடித்துக் கொண்டாள் யுவஸ்ரீ.

அவளின் எண்ணம் பற்றி அறியாமல் நண்பர்கள் இருவரும் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்களை வெறித்துப் பார்த்தாள் யுவஸ்ரீ.

அவள் மனம் வலித்தது.

கணவன் தன்னிடம் இப்படிப் பேசியது இல்லையே? நண்பர்களிடம் மட்டும் இவனால் எப்படி இப்படி இருக்க முடிகிறது? நான் மட்டும் இவனுக்கு வேண்டாத ஒருத்தியா? என்று கோபம் வர ஆரம்பித்தது.

சிறிது நேரத்தில் நரேன் கிளம்பியதும், கணவன் மீதிருந்த கோபத்தில் அவன் முகத்தைப் பார்க்க பிடிக்காமல் பால்கனி ஊஞ்சலில் சென்று அமர்ந்து கொண்டாள் யுவஸ்ரீ.

அவளின் மனநிலையைப் பற்றி எப்போதும் போல் அறிந்து கொள்ளாமல் சோஃபாவில் அமர்ந்து மீதியிருந்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தான் சூர்யக்கண்ணன்.

மேலும் நான்கு நாட்கள் சென்ற நிலையில் நந்தினியும், தினேஷும் ஒரு சந்தோஷமான விஷயத்தைச் சூர்யா, யுவஸ்ரீயிடம் பகிர்ந்து கொண்டனர்.

“என்ன முகமெல்லாம் ஜொலிக்கிது நந்தினி?” என்று விசாரித்தாள் யுவஸ்ரீ.

“எங்க வீட்டில் எங்க கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லிட்டாங்க யுவா…” ஆர்ப்பரிப்புடன் சொன்னாள் நந்தினி.

“ஹேய், சூப்பர்! எப்படி?” வியப்பாகக் கேட்டாள்.

“எல்லாம் சூர்யா ஐடியா தான் சிஸ்டர்…” என்றான் தினேஷ்.

“இவர் ஐடியாவா? என்ன சொல்றீங்க?”

“ஆமா சிஸ்டர். சூர்யா சொன்னது போல அன்னைக்கு நைட்டே எங்க வீட்டில் எங்க லவ் மேட்டரை சொல்லிட்டேன். முதலில் அவங்களும் மறுக்கத்தான் செய்தாங்க. ஆனால் அடுத்து நான் சொன்னதைக் கேட்டுச் சம்மதம் சொல்லிட்டாங்க…” என்றான்

“என்ன சொன்னீங்க?”

“நீங்களே கல்யாணம் செய்து வைங்க, நீங்க செய்து வைக்கலைனா நாங்க ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துக்கப் போறோம்னு சொன்னேன். எங்க வீட்டில் நான் ஒரே பையன். என் கல்யாணத்தை அப்படி ரிஜிஸ்டர் மேரேஜாக முடிப்பதான்னு நினைச்சு, சரி நாங்களே கல்யாணம் பண்ணி வைக்கிறோம்னு சொல்லிட்டாங்க.

மறுநாளே நந்து வீட்டுக்குப் போய்ப் பொண்ணு கேட்டோம். முதலில் தயங்கிய அவள் பேரண்ட்ஸ் அப்புறம் எங்களைப் பத்தி விசாரித்து விட்டு சரின்னு சொல்லிட்டாங்க. ஏப்ரலில் கல்யாண தேதி ஃபிக்ஸ் பண்ணிருக்காங்க…” என்றான்.

“கேட்கவே சந்தோஷமா இருக்குத் தினேஷ், நந்தினி. இரண்டு பேருக்கும் கங்கிராட்ஸ்!” என்று இருவரையும் வாழ்த்தினாள் யுவஸ்ரீ.

“என் ஐடியாவை குறை சொன்னியே? இப்ப பார்! என் ஐடியா தான் வொர்க் அவுட் ஆகியிருக்கு…” என்று அலட்டிக் கொண்டான் சூர்யா.

“ரொம்பத்தான்!” என்று நொடித்துக் கொண்டாலும் தோழியின் காதல், பிரச்சினை இல்லாமல் முடிந்ததில் சந்தோஷமாக இருந்தாள் யுவஸ்ரீ.

தானும் அவர்களுக்கு வாழ்த்து சொல்லிய சூர்யா, “உங்க மேரேஜ் ஃபிக்ஸ் ஆனதுக்கு ட்ரீட் வை தினேஷ்…” என்றான்.

“உனக்கு இல்லாததா?” என்ற தினேஷ் அவன் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தான்.

வெள்ளி இரவு ஸ்பெஷல் ட்ரீட் வேண்டும் என்று ஆண்களுக்குள் ரகசிய டீலும் போட்டுக் கொண்டனர்.

அதற்குப் பிறகு வந்த ஞாயிறு அன்று சூர்யாவின் நண்பன் நரேனின் திருமண நாளும் வந்தது.

“இன்னும் கிளம்பாமல் என்னடி செய்ற பொண்டாட்டி? கிளம்பு! கல்யாணத்துக்கு நேரமாச்சு…”

அன்று காலையில் மனைவியைக் கிளம்பச் சொல்லி துரிதப்படுத்திக் கொண்டிருந்தான் சூர்யா.

“நான் வரலை சூர்யா. நீங்க போயிட்டு வாங்க…” என்றாள் அமைதியாக.

“என்ன விளையாடுறியா? உன்னையும் தானே வரச் சொல்லி அழைப்புக் கொடுத்தான். அப்புறம் ஏன் வரலைன்னு சொல்ற?”

“எனக்கு வர விருப்பமில்லை. எப்பவும் வெளியே நீங்க மட்டும் தானே போவீங்க? இப்பவும் நீங்க மட்டும் போய்ட்டு வாங்க. என்னைக் கூப்பிடாதீங்க…” என்றாள்.

“இப்ப நானே தானே கூப்பிடுறேன். வர வேண்டியது தானே?” இடுங்கிய பார்வையுடன் கேட்டான்.

“இல்லை, நான் வரலை…” என்றாள் உறுதியாக.

“அதுதான் ஏன்னு கேட்கிறேன்?” விடாமல் கேட்டான்.

“நான் வரலைன்னு சொன்னால் விடுங்களேன். எதுக்கு இத்தனை கேள்வி?” அவளுக்குச் சலிப்பாக வந்தது.

அங்கே போனால் என்ன நடக்கும் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். அவனின் மற்ற நண்பர்கள் வருவார்கள். அவர்களுடன் சேர்ந்து கொண்டு அவளைத் தனியாக விட்டு விடுவான்.

அதைத் தாங்கிக் கொள்ளும் பொறுமை அவளுக்குத் தற்சமயம் நிச்சயமாக இல்லை என்பதால் அங்கே செல்லாமல் தவிர்க்கவே நினைத்தாள்.

“அடம் பிடிக்காதே யுவா! உன்னை விட்டுட்டுப் போனால் அங்கே எல்லாரும் நீ எங்கேன்னு கேட்பாங்க…” என்றான்.

“ஓ! அடுத்தவங்க கேட்பாங்கன்னு தான் என்னைக் கூப்பிடுறீங்களா?” ஒரு மாதிரியான குரலில் கேட்டாள்.

“அப்படின்னு இல்லை. கல்யாணத்துக்குப் போறோம். நம்ம இரண்டு பேரும் சேர்ந்து போனால் நல்லா இருக்கும். என் கூட வர ஏன் இத்தனை கேள்வி கேட்குற? கிளம்பி வான்னா, வர வேண்டியது தானே?”

“நீங்க கூப்பிட்டதும் கிளம்பி வருவதற்கும், நான் வேண்டாம்னா சொல்லாமல் விட்டுட்டு போறதுக்கும் நான் ஒன்னும் ஜடம் இல்லை சூர்யா. உயிரும், உணர்வும் உள்ள மனுஷி…” என்றாள்.

“திரும்பப் பெரிய, பெரிய பேச்சு பேச ஆரம்பிச்சுட்ட. அப்பப்போ உனக்கு என்னடி ஆகுது?” கடுப்பாகக் கேட்டான்.

“நான் எப்பவும் போல் தான் இருக்கிறேன் சூர்யா. நீங்க தான் புதுசா நடந்துகிறீங்க…”

“ஒரு கல்யாணத்துக்குக் கூப்பிட்டது குத்தமா? உன்னைப் போய்க் கூப்பிட்டேன் பார், என்னைச் சொல்லணும்…”

“என்னைக் கூப்பிடுங்கன்னு நான் சொல்லவே இல்லையே? உங்க ஃபிரண்ட் கல்யாணம், நீங்க போங்க. என்னை ஏன் கூப்பிடுறீங்க?” என்றாள்.

அவள் பேச்சில் அலுத்துப் போனவன், “அப்படி என்னடி வீம்பு கல்யாணத்துக்கு வர மாட்டேன்னு?” கோபத்துடன் கேட்டான்.

“நான் வெளிப்படையா சொல்லட்டுமாங்க? எனக்கு உங்க ஃபிரண்ட்ஸ் யாரையும் பார்க்க பிடிக்கலை. அதனால் என்னைக் கூப்பிடாதீங்க…”

“பிடிக்கலையா? ஏன்? அவங்க என்ன செய்தாங்க?”

“அவங்க ஒன்னுமே செய்யலை. செய்தது எல்லாம் நீங்க தான். ஆனால் ஒன்னுங்க… அவங்க கூட நீங்க பழகும் வரை நம்ம வாழ்க்கை என்னைக்கும் நல்லா இருக்காது…” என்றாள் பட்டென்று.

“ஏய், என்னடி சொன்ன?” சட்டென்று கோபம் கண்ணை மறைக்க, ஆத்திரத்துடன் அவளை அடிக்கக் கையை ஓங்கியே விட்டான்.

திகைத்து நின்று விட்டாள் யுவஸ்ரீ.

இதுவரை எந்த ஒரு விஷயத்திற்கும் அவன் கையை ஓங்கியதே இல்லை.

முதல் முறையாக நண்பர்களுக்காகத் தன்னை அடிக்கக் கணவன் கையை ஓங்கியது அவளைப் பலமாகத் தாக்கியது.

“அடிங்க சூர்யா! ஏன் நிறுத்திட்டீங்க? ஆனால் நீங்க என்னை அடிச்சாலும், உதைச்சாலும் நான் சொன்னது முற்றிலும் உண்மை. அவங்க உங்க ஃபிரண்ட்ஸா இருக்கும் வரை நம்ம வாழ்க்கை நாசமாகத்தான் போகும்…” என்றாள் பளிச்சென்று.

மனைவியை அடிக்கக் கையை ஓங்குவோம் என்று சூர்யாவும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அவனே திகைத்து கையைக் கீழே இறக்கும் முன், மீண்டும் அவள் அதையே சொல்ல, மீண்டும் அவனின் ஆத்திரம் உச்சிக்கு ஏறியது.

“என்னடி விட்டால் பேசிட்டே போற?” என்றவன், ஆத்திரம் கண்ணை மறைக்க, கீழே இறக்கிக் கொண்டிருந்த கையை, அதே வேகத்தில் உயர்த்தி அவள் கன்னத்தில் இறக்கினான்.

அவன் அறைந்த வேகத்தில் தடுமாறி கீழே விழுந்தாள் யுவஸ்ரீ.

“ச்சே…” என்ற சூர்யா அவள் விழுந்ததைக் கூடக் கவனிக்காமல் வெளியே சென்று விட்டான்.