19 – வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்!
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 19
“அத்தை நான் ஹாஸ்பிட்டல் கிளம்புறேன்…” என்று சொல்லிக் கொண்டே சமையலறையில் நின்றிருந்த மாமியாரை எட்டிப் பார்த்தாள் சக்தி.
“இந்தா வர்றேன் தாயி…” ஈர கையை முந்தானையில் துடைத்துக் கொண்டே வந்தார் மீனாம்பிகை.
“தம்பி இன்னும் வீட்டுக்கு வரலையே சக்தி. அவன் வந்து தானே உம்மை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போவான்…” என்று கேட்டார்
“இல்லை அத்தை. அவருக்கு வேலை இருக்கும். நான் தனியா காரில் போய்க்கிறேன்…” என்றாள்.
“இன்னைக்குக் குமரன் அவன் புள்ளைக்கு உடம்புக்கு முடியலைன்னு வேலைக்கு வரலையே தாயி…” என்று காரோட்டி பற்றித் தகவல் சொல்ல,
“ஓ, அப்படியா? பரவாயில்லை அத்தை, நானே காரோட்டிட்டு போயிட்டு வந்துடுறேன்…”
“தனியா காரை எடுத்துட்டுப் போறீயா? வேணாம் தாயி…” வேகத்துடன் மறுத்தார் மீனாம்பிகை.
“நான் நல்லா கார் ஓட்டுவேன் அத்தை…” என்றாள்.
“நீ ஓட்ட மாட்டன்னு சொல்லலை சக்தி. தனியா வேணாம்னு தான் சொல்றேன்…” என்றார்.
அதற்குச் சக்தி ஏதோ சொல்ல வர, அப்போது சரியாக வீட்டிற்குள் நுழைந்தான் சர்வேஸ்வரன்.
“வாய்யா… நல்ல நேரத்தில் வந்த. சக்தி ஆஸ்பத்திரிக்கு கிளம்பிட்டு இருக்கா. அவ கூட நீயும் போய்ட்டு வந்துடு தம்பி…” என்றார் மீனாம்பிகை.
“இன்னைக்கு வயலுக்குக் களை எடுக்க வர சொல்லிருக்கேன் மா. அதைப் போய்ப் பார்க்கணும். அடுத்து மில்லுலயும் சின்ன வேலை இருக்கு. அதையும் பார்க்கணும்…” என்றான் சர்வேஸ்வரன்.
“வயலுக்கு நான் போய்ப் பார்த்துக்கிறேன் தம்பி. மில்லு வேலை நீங்க ஆஸ்பத்திரி போய்டு வந்த பிறகு பாரு…” என்றார்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அதற்கு மேல் மறுக்க முடியாமல் சரி என்றான்.
அவன் தன்னுடன் வர தயங்குவதைப் பார்த்துக் கொண்டே அமைதியாக நின்றிருந்தாள்.
சற்று நேரத்தில் மதுரையை நோக்கி இருவரும் காரில் கிளம்பினர்.
காரை ஓட்டிக் கொண்டிருந்தவனும், அருகில் அமர்ந்திருந்தவளும் பேசவே தெரியாதவர்கள் போல் அமைதியாக வந்தனர்.
அருகில் அருகில் இருந்தும் அவர்களுக்குள் பேச்சு வார்த்தை என்பதே இல்லாமல் இப்போதெல்லாம் குறைந்திருந்தது.
தாமோதரனை மதுரை மருத்துவமனையில் சேர்த்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தன.
அவருக்குத் துணையாகத் தேவியும், மோகனும் இருந்தனர்.
அவர்களைச் சென்னைக்குச் செல்லுமாரும், தான் தந்தையுடன் மருத்துவமனையில் இருந்து பார்த்துக் கொள்வதாகவும் சக்தி சொன்னதை மோகன், தேவி இருவருமே ஏற்கவில்லை.
தாமோதரனை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு தங்களுக்கும் இருப்பதாகச் சொல்லி மதுரையிலேயே மருத்துவமனை அருகிலேயே ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி கொண்டனர்.
பிரேமிற்கு அலுவலகத்திற்குத் தொடர்ந்து விடுமுறை எடுக்க முடியாததால் அவன் மட்டும் சென்னை கிளம்பியிருந்தான்.
மகனை தனியாகச் சமாளிக்க அனுப்பி விட்டு நண்பனுக்குத் துணையாக மதுரையில் தங்கி கொண்ட மோகன், தேவியின் நட்பு சக்திக்கு கண்கலங்க வைத்தது.
அதன் பிறகும் அவர்களிடம் வாதிடாமல் அவர்களின் போக்கில் விட்டுவிட்டாள்.
அவளைப் பகலில் மட்டும் தந்தையைப் பார்த்துச் செல்லும் படி தேவி சொல்லிவிட, காலையில் மருத்துவமனைக்குச் செல்லும் சக்தி மாலை வரை தந்தையைக் கவனித்துக் கொண்டு மாலைக்கு மேல் வீடு வந்து சேர்ந்து விடுவாள்.
நேற்று சர்வேஸ்வரனுக்கு வேலை இருந்ததால் காரோட்டியுடன் சக்தியும், மீனாம்பிகையும் மட்டும் சென்று வந்தனர்.
இன்று கணவனுடன் கிளம்பிய சக்தி வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்தாள்.
காரை ஓட்டிக்கொண்டே அவளை அவ்வப்போது திரும்பி பார்த்தான் சர்வேஸ்வரன்.
அவன் பார்க்கிறான் என்று தெரிந்தும் சக்தி அவனின் புறம் திரும்பவே இல்லை.
‘ஹாஹா… அவன் செய்ததிற்குத் திருப்பிச் செய்கிறாளாம்…’ என்று நினைத்த படி மானசீகமாகச் சிரித்துக் கொண்டான்.
அன்று உன்னை விட்டு சென்று விடுகிறேன் என்று சொன்ன சக்தி அதை நடைமுறை படுத்தவும் இல்லை. அதைப் பற்றித் திரும்பப் பேசவும் இல்லை. அவனும் அதைப் பற்றிக் கேட்கவில்லை.
அவள் அவ்வாறு சொன்னபிறகு அவளிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டான் அவ்வளவே!
இருவரும் மருத்துவமனைக்குச் சென்ற போது தேவியும், மோகனும் அறைக்கு வெளியே அமர்ந்திருந்தனர்.
“அப்பா இன்னைக்கு எப்படி இருக்கார் அத்தை?” என்று தேவியிடம் கேட்டாள் சக்தி.
“எப்பவும் போல் தான்டா தங்கம் இருக்கார்…”
“வேற எதுவும் பிராப்ளம் இல்லையே?”
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“இல்லடா தங்கம். ஊருக்கு போய்ட்டு வந்ததில் இருந்தே அண்ணா முகம் தெளிவா இருக்கு. உடம்பும் எந்தப் பின்னடைவும் இல்லை…” என்று விவரம் தெரிவித்தார் தேவி.
“சரி அத்தை நீங்களும், மாமாவும் போய்க் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க. அப்பாவை நான் பார்த்துக்கிறேன்…”
“இல்லைடா தங்கம். உன் மாமாவும் நானும் மாறி மாறி தான் ஹாஸ்பிட்டலில் இருந்தோம். இப்பத்தான் மாமாவை அனுப்பி வைக்க நான் வந்தேன். அவர் போய் ரெஸ்ட் எடுக்கட்டும். நான் உன் கூட இருக்கேன்…” என்றார்.
“ஆமாமா நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வர்றேன். நீங்க இருங்க…” என்று சொல்லிவிட்டு கிளம்பினார் மோகன்.
அவர் கிளம்பியதும் சற்று நேரத்தில் சக்தியும், சர்வேஸ்வரனும் தாமோதரனை உள்ளே சென்று பார்த்து வந்தனர்.
தாமோதரன் தூங்கி கொண்டு இருந்ததால் அவரைத் தொந்தரவு செய்யாமல் பார்த்து விட்டு வந்தனர்.
“நான் போய் உங்க இரண்டு பேருக்கும் குடிக்க ஏதாவது வாங்கிட்டு வர்றேன்…” என்று சொல்லி விட்டு கேண்டின் நோக்கி சென்றான் சர்வேஸ்வரன்.
“மாப்பிள்ளை உன்கிட்ட நல்லபடியா நடந்துக்கிறார் தானே தங்கம்?” என்று அவள் கன்னம் வருடி விசாரித்தார் தேவி.
“உங்க மாப்பிள்ளை என்னைத் தங்கம் போலப் பார்த்துக்கிறார் அத்தை…” என்றாள் சக்தி.
“நாட்டாமையா இருக்க மாட்டேன்னு சொல்லிட்டாராமே. எல்லாம் எங்களால் தானே தங்கம்?” என்று வருத்தத்துடன் கேட்டார்.
“உங்களால் இல்லை அத்தை. நான் தான் காரணம். என்னைக் கல்யாணம் பண்ணிக்கனும் என்ற அவரின் ஆசை தான் காரணம். அதைப் பத்தி ஒன்னும் நினைக்காதீங்க. நான் பார்த்துக்கிறேன்…” என்றாள்.
“உன் மாமியார் மாப்பிள்ளை நாட்டாமை பதவியை விட்டதுக்கு ஒன்னும் சொல்லலையா தங்கம்?”
“அவங்களுக்கும் வருத்தம் இருக்கு அத்தை. அதே நேரத்தில் மகன் உறுதியா சொன்ன பிறகு அதுக்கு மேல அவர்கிட்ட பேச முடியாமல் தடுமாறுறாங்க…”
“நீ வேணும்னா மாப்பிள்ளைக்கிட்டே பேசி பார்க்கலாமே தங்கம்?”
“நானும் அதுக்குத்தான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன் அத்தை. பிடிகொடுக்கவே மாட்டீங்கிறார். அதுவும் எனக்கு ரொம்பக் குற்றவுணர்ச்சியா இருக்கு அத்தை. அப்பாவுக்காகனு ஊருக்கு போய் இப்போ என்னென்னவோ நடந்து அவர் நாட்டாமை பதவியே வேண்டாம்னு சொல்ற அளவுக்குக் கொண்டு வந்து விட்டுட்டேன். என்னால் தான் அவர் அந்த முடிவு எடுக்கக் காரணமோனு மனசை எல்லாம் பிசையுது…” என்றாள் சக்தி.
அவளின் கையை ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தார் தேவி.
“மாப்பிள்ளைகிட்ட மனசு விட்டு பேசு தங்கம். பேசினால் தான் சில பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்…” என்றார்.
“கண்டிப்பா அத்தை. முடிஞ்சா இன்னைக்கே கூடப் பேசணும்…” என்றாள் சக்தி.
மேலும் அவர்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
“சீக்கிரம் ஒரு குழந்தை உண்டாகு தங்கம். அந்த நல்ல செய்தி கிடைச்சா அப்பா இன்னும் சந்தோசப்படுவார்…” என்று பேச்சு வாக்கில் தேவி சொல்லிக் கொண்டிருந்த போது இருவருக்கும் பழச்சாறை வாங்கிக் கொண்டு அங்கே வந்தான் சர்வேஸ்வரன்.
அவனின் காதில் தேவி சொன்னது விழ, சக்தி அதற்கு என்ன பதில் சொல்வாள் என்பது போல் தீர்க்கமாகப் பார்த்தான்.
ஆனால் சக்தி அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாகிவிட்டாள்.
அன்று மாலை வரை இருவரும் மருத்துவமனையில் இருந்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பினர்.
“உன்னோட தேவி அத்தைக்கு ரொம்பத் தான் பேராசை போல…” என்று காரில் போகும் போது சக்தியை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே நக்கலாகக் கேட்டான் சர்வேஸ்வரன்.
“இப்போ எதுக்கு அத்தையை வம்புக்கு இழுக்குறீங்க? அவங்களுக்கு அப்படி என்ன பேராசை?” என்று சிலிர்த்துக் கொண்டு கேட்டாள் சக்தி.
“இல்லையா பின்ன? புருஷன் கூட வாழாம விட்டுட்டுப் போகத் துடிச்சுட்டு இருக்கிறவகிட்ட போய்ப் பிள்ளை பெத்துக்கச் சொன்னா அது பேராசை தானே?” என்று கேட்டவன் குரலில் இருந்தது கடுப்பா? கோபமா? ஆத்திரமா? என்று சக்திக்கு புரியவே இல்லை
ஒரு மரத்த தன்மை தான் அவனின் குரலில் இருந்ததாக நினைத்தாள்.
“அவங்க ஆசைப்பட்டது நியாயமான ஆசை தான். பேராசை எல்லாம் இல்லை…” என்றாள் சக்தி.
அவளின் மீது அதிசய பார்வையைச் செலுத்தியவன், அதன் பிறகு ஒன்றும் பேசாமல் காரை வீட்டை நோக்கி விரைந்து செலுத்தினான்.
வீடு வந்து சேர்ந்து மீனாம்பிகையிடம் பேசிவிட்டுத் தங்கள் அறைக்குள் வந்து இருவரும் குளித்து உடை மாற்றி விட்டு வந்தனர்.
தலையை வாரி பின்னல் போட்ட சக்தி அறைக்கு வெளியே செல்ல போக, அவளைச் செல்ல விடாமல் வழி மறைத்து நின்றான் சர்வேஸ்வரன்.
சக்தி கேள்வியாகப் பார்க்க, “நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம் சக்தி?” என்று கேட்டான்.
“எதைக் கேட்குறீங்க?” குழப்பத்துடன் கேட்டாள்.
“அதான் குழந்தையைப் பத்தி…” என்று கேட்க, சக்தியின் உதட்டோரம் விஷமமாய்ச் சுளித்தது.
“அதான் அப்பவே சொன்னேனே… அது நியாயமான ஆசை தான்னு…” என்று சாதாரணமாகச் சொன்னவளை புருவம் சுளித்துப் பார்த்தான்.
“அப்போ நீ என்னை விட்டு போய் விடுவதாகச் சொன்னது?”
“அதுவும் உண்மை தான்…” என்றவளை,
“சக்தி…” என்று அதட்டலாக அழைத்தான்.
“விளையாட்டு போதும்! என்ன முடிவு பண்ணிருக்க? எனக்கு இன்னைக்குத் தெரிஞ்சாகணும்…” என்றான்.
“இப்ப என்ன தெரியணும் உங்களுக்கு? நான் ஏன் போய்விடுவேன்னு சொன்னேன்னு தெரியணுமா? இல்லை போறேன்னு சொல்லிட்டு இன்னும் ஏன் இங்கேயே இருக்கேன்னு தெரியணுமா?” என்று கேட்க,
கைகளைக் கட்டிக் கொண்டு அழுத்தமாக அவளைப் பார்த்தான்.
“சரி, சரி… ரொம்பக் கோபமா இருக்கீங்க போல. நானே சொல்றேன். நான் போறேன்னு சொன்னால் என் புருஷன் எனக்குத் தண்டனை தருவார். சோ…” என்று அவள் இழுத்து நிறுத்தி கள்ளத்தனமாகச் சிரிக்க,
“சக்தி…” என்றவனின் குரல் கண்டிப்புடன் அழைத்தது.
“ச்சே…ச்சே… இப்படிப் புரியாத தத்தியா என் புருஷன் எப்ப மாறினாருன்னு தெரியலையே?” என்று கேலியாகக் கேட்டு யோசிப்பது போல் நடித்தாள்.
“சக்தியாரே… உன்னை…” என்றவன் அடுத்த நிமிடம் பாய்ந்து அவளைத் தன் கைகளுக்குள் கொண்டு வந்து அதே வேகத்தில் அவளின் இதழ்களைச் சிறை செய்தான்.
நொடிகள் மணித்துளிகளாகக் கடக்க, அவளின் இதழை மெல்ல விட்டவன், “அப்ப என்கிட்ட இந்தத் தண்டனையை வாங்கத்தான் ஒவ்வொரு முறையும் என்னை விட்டு போயிடுவேன்னு சொன்னியா?” என்று கேட்டான்.
“ஹப்பா… இப்பவாவது புரிஞ்சதே…” என்று சக்தி சலித்துக் கொள்ள,
“போடி லூசு. ஒவ்வொரு முறையும் நீ போய்டுவேன்னு சொன்ன போது எனக்கு எப்படி வலிச்சது தெரியுமா?” என்று கேட்டான்.
“அதான் வலியும் கொடுத்து மருந்தும் கொடுத்தேனே…” என்று தன் உதட்டை நாவால் தடவி கண்சிமிட்டி சிரித்தாள்.
“ஆமா… ஆமா… நல்லா கொடுத்த போ… நானே தானே எடுத்துக்கிட்டேன்…” என்றவன் ஆசையுடன் மீண்டும் அவளின் இதழ்களை ஸ்பரிசித்தான்.
“என்னால் உங்களைக் கிஸ் பண்ண விடாமல் தடுக்க முடியாதுன்னு நினைச்சீங்களா ஈஸ்வர்? நீங்க தொட்டாலே என் உடலும், உள்ளமும் உருகிவிடும் ஈஸ்வர். அதனால் தான் நீங்க என்னைத் தொடும் போதெல்லாம் அதுக்கு மேல எதுவும் செய்ய விடாமல் கடுமையான வார்த்தையா சொல்லி உங்களை விலக வைப்பேன். ஆனா அப்படி நீங்க விலகி போன பிறகு என் மனசு படும்பாடு எனக்கு மட்டும் தான் தெரியும்…” என்றாள் வேதனையுடன்.
அவளை இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டவன், “உன் மன போராட்டமும் எனக்குப் புரிந்தது சக்தி. அதனால் தான் நைட் நீ என் அருகிலேயே இருந்தும் என்னைக் கட்டுப்படுத்திக்கிட்டேன்.
“ஆனா எல்லா நேரமும் என் கட்டுபாடு என் கட்டுக்குள் அடங்காது. அதான் அப்பப்போ சீண்டினேன்…” என்றான்.
கணவனின் மார்பில் இதமாகச் சாய்ந்து கொண்டாள் சக்தி.
பின் அவனை விட்டு விலகியவள், “நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும் ஈஸ்வர்…” என்றாள்.
“மன்னிப்பா? எதுக்கு?”
“உங்களுக்கு என் மேல கோபம் இருக்கும். அப்பா தான் முக்கியம்னு நான் இருந்து உங்களைத் தவிக்க விட்டதாக…” என்று சொல்ல,
“கோபம் இருந்தது உண்மை தான் சக்தி. ஆனா அது மாமாவை நேரில் பார்க்கும் வரை தான்…” என்றான்.
“இதுக்கு நீங்க பதில் சொல்லவே இல்லையே ஈஸ்வர். அப்பாவை எப்படித் திடீர்னு பார்க்க கிளம்பினீங்க. பஞ்சாயத்தில் என்னைப் பேசவிடாம, நீங்களே பொறுப்பை எடுத்துக்கிட்டு எப்படி உண்மையை எல்லாம் சொன்னீங்க? நீங்க என்னைப் பஞ்சாயத்தைக் கூட்ட விடாம தடுப்பீங்கன்னு நினைச்சேன்…” என்றாள்.
“எல்லாம் உனக்காகத் தான் சக்தி…” என்றான்.
“என்ன எனக்காகவா?”
“ஆமா, முதலில் நானும் என்னோட அப்பாவோட கௌரவத்தை நானே எப்படி விட்டுக் கொடுக்க முடியும்னு நினைச்சுத்தான் உன்கிட்ட சரிசமமா மல்லுக்கட்டிக்கிட்டே இருந்தேன். ஆனால் நாள் போகப் போக அடுத்து நீ என்ன செய்றதுன்னு தெரியாம தடுமாறுவதும், நைட் எல்லாம் தூக்கம் வராமல் நீ தவிப்பதையும் பார்த்த பிறகு உன் பக்கம் இருந்தும் யோசிக்க ஆரம்பித்தேன்…” என்ற கணவனை வியப்பான விழிகளுடன் பார்த்தாள்.
தான் அடுத்து என்ன செய்யலாம் என்று தடுமாறியதை கண்டு கொண்டிருக்கிறானே? அதோடு அவள் இரவில் அதை நினைத்துச் சரியாகத் தூங்காததும் உண்மை. அதனை அவன் அறிய வாய்ப்பில்லை என்றே நினைத்தாள்.
“என்ன அப்படிப் பார்க்கிற? நீ நினைச்சுருந்தால் எப்பவோ பஞ்சாயத்தைக் கூட்டி நியாயம் கேட்டுருக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல் விட்டதுக்குக் காரணம் என் மீதான உன் காதல்!” என்று சொல்ல, சக்தியின் வியப்பு அதிகம் ஆனது.
“அது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டாள்.
“தெரியும் சக்தி. நல்லாவே தெரியும். முதல் முதலாக நீ பஞ்சாயத்தில் நின்ன போது, நம்ம காதலை பத்தி, ரிஜிஸ்டர் மேரேஜ் பத்தி சொல்லி நான் திசை திருப்பிய போதே நீ நினைச்சுருந்தால் என்னைத் தடுத்து உன் அப்பாவைப் பத்தி சொல்லியிருக்கலாம்.
ஆனால் என் மீதான காதல் உன்னை அதைச் செய்ய விடலை. ஒருவேளை உன் அப்பாவை பத்தி ஊருக்கு தெரியப்படுத்திய பிறகு நம்ம கல்யாணம் நடக்காம போயிடுமோன்னு உனக்குப் பயம். நான் என் அப்பா தீர்ப்பை எப்படிக் குறை சொல்லலாம்னு உன் மேல் கோபப்பட்டுப் பிரிஞ்சிடுவேனோன்னு நினைச்சுத்தான் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க முடிவு எடுத்த போது அமைதியா இருந்த. என்ன சரிதானே?” என்று அவன் கேட்க,
‘ஆமாம்’ என்று அவளின் தலை தன்போக்கில் ஆடியது.
“அது மட்டுமில்ல. அதுக்குப் பிறகு நம்ம காதலுக்கும், உன் அப்பாவை நினைச்சும் இரண்டுக்கும் இடையில் தடுமாறி போன. வெளியே நீ என்கிட்ட வன்மையாகப் பேசினாலும் உனக்குள் இருக்கும் மென்மை சஞ்சலத்துடன் தடுமாறியதும் எனக்குப் புரிந்தது.
உன்னோட அந்தத் தவிப்பை பார்த்து தான் அப்பா பக்கம் இருந்தும் யோசித்தேன். இதே நேரம் அப்பா உயிரோடு இருந்திருந்தால் என்ன பண்ணிருப்பார். அவரோட நியாயம் எப்படி இருக்கும்னு யோசித்த போது என் தவறு எனக்கு நல்லாவே புரிந்தது.
அப்பா இருந்திருந்தால் நீ முதல் தடவை பஞ்சாயத்தைக் கூட்டிய போதே தீர விசாரிச்சு உனக்கு நியாயம் வழங்கி இருப்பார். தன்னோட தீர்ப்பு தப்பானது இல்லன்னு எப்பவும் நியாயப்படுத்த முயன்றிருக்க மாட்டார்னு தோன்றியது.
அதுக்குப் பிறகு தான் மாமாவை போய்ப் பார்க்கும் முடிவை எடுத்தேன். நான் முக்கியமா மாமாவை பார்க்க போனதுக்குக் காரணம் அவருக்கு ட்ரீட்மெண்ட் எடுக்கிற டாக்டரை பார்த்து பேசி மாமாவுக்கு ட்ராவல் பண்ண முடியுமான்னு கேட்கத்தான்.
டாக்டரும் சில கண்டிஷனுக்குப் பிறகு சரின்னு சொல்லிட்டார். ஆனா அந்த நேரத்தில் மாமாவுக்கு லேசா மூச்சு திணறல் வரவும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இங்கே அவரை அழைச்சுட்டு வரும் ஏற்பாட்டைப் பண்ணனும்னு நினைச்சுட்டே தான் ஊர் வந்து சேர்ந்தேன். ஆனா அதுக்குள்ள நீ சந்தானம் அய்யாவை பார்த்து பிராது கொடுப்பன்னு நான் எதிர்பார்க்கலை…” என்றான்.
சக்திக்குச் சந்தோஷமாக இருந்தது. தான் பஞ்சாயத்துக் கூட்டிய பிறகு அவன் மனம் மாறாமல் அதற்கு முதலிலேயே மாறி, அதற்கான ஏற்பாட்டை ஆரம்பித்திருக்கிறான் என்பதில் ஒரு நிம்மதியும் கூட உண்டாயிற்று.
“நானும் அப்பாவோட மூச்சு திணறல் கேள்வி பட்ட பிறகு தான் பஞ்சாயத்தைக் கூட்டும் முடிவுக்கு வந்தேன் ஈஸ்வர். நீங்க சொன்ன மாதிரி நம்ம காதலுக்கும், அப்பாவுக்கும் இடையே நான் அல்லாடியது உண்மைதான். என்னோட அந்தத் தடுமாற்றத்தினால் தான் நேரடியா பஞ்சாயத்தைக் கூட்டாம அப்பா பேரை ஊர் மக்களுக்கு ஞாபகப்படுத்துறேன்… அப்படி இப்படின்னு காரணமே இல்லாம ஏதாவது பண்ணிட்டு இருந்தேன்.
ஆனா அப்பாவோட மூச்சு திணறல் தான் என்னை வேற வழி இல்லாம பஞ்சாயத்தைக் கூட்டும் முடிவுக்குத் தள்ளியது. எங்கே நீங்க ஊரில் இருக்கும் போது நான் பஞ்சாயத்தைக் கூட்டினால் தடுப்பீங்களோன்னு நினைச்சுத்தான், நீங்க வரும் முன் சந்தானம் அய்யா கிட்ட பேசினேன்.
ஆனா அப்படி முடிவு எடுத்துட்டு நான் பட்டப்பாடு எனக்கு மட்டும் தான் தெரியும் ஈஸ்வர். எங்கே என் மேல கோபப்பட்டு என்னை விட்டு பிரிஞ்சிடுவீங்களோன்னு நான் எப்படித் தவித்துப் போனேன் தெரியுமா. ஒருவேளை நாம பிரிஞ்சிட்டா உங்க நினைவுகளும், வாசமும் எனக்கு வேணும்னு நைட் எல்லாம் உங்களைக் கட்டிப்பிடிச்சிட்டே இருந்தேன்.
நீங்க எல்லை மீறினால் தடுக்கக் கூடாதுன்னு முடிவோட உங்களை ஒட்டிக்கிட்டு இருந்தால் நீங்க அன்னைக்குன்னு பார்த்து நல்லா கும்பகர்ணன் போலத் தூங்கிட்டீங்க…” என்றாள்.
“ஹாஹா… அடிப்பாவி! என்னைக்கும் இல்லாம ஜம்மு ஜம்முன்னு பொண்டாட்டி கட்டிப்பிடிச்சா எந்த மடையனாவது தூங்குவானாடி?” என்று கேட்டான்.
“அதான் நீங்க தூங்கினீங்களே…” என்றாள் குறையாக.
“மட்டி…” என்று அவள் தலையில் செல்லமாகத் தட்டியவன், “நீ என் மேல கை போட்டதுமே முழிச்சுட்டேன். அப்புறம் என் பொண்டாட்டி என்னை ஒட்டிக்கிட்டதை அணுஅணுவா ரசிச்சேன்…” என்று சொல்லி கண்சிமிட்டி சிரிக்க,
“என்ன?” என்று ஆச்சரியப்பட்டவள், “அப்புறம் ஏன் தூங்குற மாதிரி நடிச்சீங்க?” என்று கேட்டாள்.
“நீயா என் பக்கத்தில் வரும் போதே எனக்கு நீ என்னவோ முடிவு எடுத்துட்டன்னு புரிஞ்சி போயிருச்சு. அதோட நான் உன்னை அன்னைக்கு அணுகியிருந்தால் உன் தவிப்பு இன்னும் அதிகமாகியிருக்கும். கணவனுடன் கூடி கழிச்சாச்சு. இனி பிரிவு தான் நிரந்தரம்னு நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்கிட்டு தவிச்சு துடிச்சு போயிருப்ப. அந்தத் தவிப்பும், துடிப்பும் உனக்கு வேண்டாம்னு தான் விலகி இருந்தேன்…” என்றான் சர்வேஸ்வரன்.