19 – ஞாபகம் முழுவதும் நீயே

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம்- 19
இனி உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் என்று ரங்கநாதன் பேச்சை முடித்துவிட, கணவனும் மனைவியும் மௌனிகளாகி போனார்கள்.

அடுத்தச் சில மணி நேரம் கவினின் குரல் தான் வீட்டில் அதிகம் ஒலித்துக் கொண்டிருந்தது.

பவ்யா சமையலறையில் வேலையில் இருக்க ஹாலில் தந்தையிடம் சிறிது நேரம், தாத்தாவிடம் சிறிது நேரம் என்று விளையாடிக் கொண்டிருந்தான் கவின்.

மகன் வந்திருந்தாலோ என்னவோ அன்று வெகுநேரம் அங்கேயே இருந்து விட்டார் ரங்கநாதன்.

மனதில் வினய்யின் மீது கோபம் கனன்று கொண்டிருந்தாலும் அவன் மதியமும் சாப்பிடவில்லை என்பதை உணர்ந்து இரவு உணவை விரைவாகச் செய்து கொண்டிருந்தாள் பவ்யா.

வினய் ஏதோ யோசனையிலேயே அப்படியே அமர்ந்து விட்டான்.

இரவு உணவும் அமைதியாக முடிய, ரங்கநாதன் வீட்டிற்குக் கிளம்பும் போது “அப்பா உங்க கம்பெனியில் எனக்கு ஒரு வேலை கொடுப்பிங்களா?” என்று மெதுவாகக் கேட்டான் வினய்.

‘என்ன…?’ என்பது போலச் சில நொடிகள் அதிர்ந்து பார்த்தார். பவ்யாவும் ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தவள் தன் நடையை அப்படியே நிறுத்தி கணவனைப் பார்த்தாள்.

அவனின் கேள்வி அவளுக்கு யோசனையைக் கொடுக்க, ரங்கநாதனுக்குச் சந்தோஷத்தை தந்தது.

“அது உன் கம்பெனிடா. அங்க போய் வேலை கேட்குற? உனக்கு எப்போ விருப்பமோ அப்பவே வந்து பொறுப்பை எடுத்துக்கோ…” என்றார் மகிழ்வாக.

மகன் வேலை பற்றிப் பேசியதில் அவன் இனி இங்கே தான் தங்க போகின்றான் என்ற எண்ணத்தைத் தர, அதுவே அவரை உற்சாகமாகப் பேச வைத்தது.

“இல்லப்பா எனக்குப் பொறுப்பு வேண்டாம். கொஞ்ச நாளைக்கு வேலை தான் வேணும்” என்று அவன் சொன்னதும் ரங்கநாதன் கோபமாக ஏதோ சொல்ல வாயை திறந்தார்.

அவரைத் தடுத்தவன் “இருங்கப்பா நான் முதலில் பேசி முடிச்சிறேன். முதல் விஷயம் நான் இனி இங்க தான் இருக்கப் போறேன். எங்க கல்யாண வாழ்க்கையில் உங்க மேல மட்டும் தப்பு இல்லை. என் மேலேயும் நிறைய இருக்கு. அதை நீங்க சொன்னது போல நானும், பவியும் பேசி தீர்த்துக்கிறோம்.

இப்போ வேலை விஷயத்துக்கு வர்றேன். உங்களுக்கே தெரியும் படிப்பு முடிஞ்சதும் பிசினஸ் பண்ண எவ்வளவு ஆர்வமா இருந்தேன்னு. ஆனா அதுக்குப் பிறகு என்னென்னமோ ஆகிருச்சு. இத்தனை வருஷத்தில் வேலை பார்த்துக் கொஞ்சம் மணி சேவ் பண்ணி வச்சிருக்கேன்.

அதை வச்சும் மேல கொஞ்சம் லோன் போட்டும் புதுப் பிசினஸ் ஆரம்பிக்கிற எண்ணத்தில் தான் இங்கே வந்தேன்” என்று சொன்னவனைத் தடுத்து,

“என்ன பேசுற வினய்? நம்ம கம்பெனியையே ரன் பண்ண நான் நிற்காம ஓடிட்டு இருக்கேன். இப்ப நீ வந்து பொறுப்பை எடுத்துக்கிட்டா இன்னும் கூடக் கம்பெனியை நல்லா ரன் பண்ணலாம். அதை விட்டுத் தனிப் பிசினஸ்னு பேசிட்டு இருக்க?” என்று கோபத்துடன் கேட்டார்.

“அப்பா ப்ளீஸ்… புரிஞ்சுக்கோங்க… எனக்குத் தனியா ஒரு கம்பெனி ஆரம்பிச்சு ரன் பண்ணனும். உங்க உழைப்புல உருவான கம்பெனியில் உங்க பேர் தான் முதலில் இருக்கும். ஆனா எனக்குனு ஒரு அடையாளம் வேணும். உங்க கம்பெனில நான் ஹெல்ப் வேணா பண்றேன்.

அதுக்கு எனக்கு அங்க வேலை இருந்தா போதும். எனக்குன்னு தனியா ஒரு பொறுப்பு வேண்டாம். அந்த வேலை கூட நான் என் பிசினஸ் ஆரம்பிக்கிற விஷயத்தைச் சில மாதங்கள் தள்ளி போட நினைக்கிறதால தான்” என்றான்.

“என்னடா இப்படி உங்களோடது என்னதுன்னு பிரிச்சி பேசிட்டு இருக்கிற? எப்ப இருந்தாலும் அது உனக்குத் தானே வந்து சேரும்” என்று சொன்னார்.

“உங்களால முடியுறவரை நீங்க பாருங்கபா. எனக்குச் சேர்றதை பத்தி எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்” என்றான்.

“அது சரி…! எதுக்குத் தனியா பிசினஸ் ஆரம்பிக்கிறதை தள்ளி போட்டுருக்க?” என்று புரியாமல் கேட்டார்.

அவர் அப்படிக் கேட்டதும் சாப்பாட்டு மேஜையைத் துடைத்துக் கொண்டிருந்த மனைவியின் பக்கம் வினய்யின் பார்வை திரும்பியது. கவின் உண்டதும் தந்தையின் மடியில் அமர்ந்திருந்தவன் உறக்கத்தைத் தழுவியிருந்தான்.

அதுவரை வேலையில் இருந்தவள் பேச்சுச் சத்தம் நின்றதும் நிமிர்ந்து பார்த்தாள்.

வினய்யும் அவளைத் தான் இன்னும் பார்த்துக் கொண்டிருந்தான். மனைவியைப் பார்த்துக் கொண்டே மடியில் இருந்த மகனின் கேசத்தை வருடி விட்டவன் “இத்தனை நாளும் என் குடும்பத்தை என் வீண் கோபத்தால இழந்துட்டேன். கொஞ்ச நாளாவது வேற எந்தப் பெரிய சிந்தனை எதுவும் இல்லாமல் என் மனைவி, மகனுக்கு மட்டும் நேரத்தை ஒதுக்கணும்.

என்னோட நாலு வருஷ இழப்பை மீட்க முடியாது. இருக்குற நாளையாவது அவங்களோட செலவழிக்கணும். பிசினஸ் ஆரம்பிச்சா முழு மூச்சா அது என்னைத் தனக்குள் இழுத்துடும். அதான் தள்ளி போட்டிருக்கேன்” என்று தந்தைக்கு மட்டும் இல்லாது மனைவிக்கும் சேர்த்தே பதில் சொன்னான்.

மகன் வந்ததிலேயே மகிழ்ந்து போன ரங்கநாதன் இனி இங்கே தான் இருப்பேன் என்று சொல்லவும் குளிர்ந்து போனார்.

அதிலும் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க விரும்பும் அளவிற்கு மகன் மாறி வந்ததில் இதை விட வேறு என்ன வேண்டும்? அவர் விரும்பியதும் அது தானே? அது இன்று நிறைவேறியதில் என்றும் இல்லாத நிம்மதி அவர் நெஞ்சில் குடியேறியது.

அந்த நிம்மதியில் அதற்கு மேல் கம்பெனியை பற்றிப் பேசி இறுக்கி பிடிக்க நினைக்காமல் அவன் போக்கில் விட்டுவிட்டார்.

மகனின் மாற்றத்தில் அவனிடம் இன்னும் பேசிக் கொண்டிருக்க நினைத்தார் ரங்கநாதன். ஆனால் வினய்யின் பார்வை அடிக்கடி அவனின் மனைவியிடம் இருப்பதைப் பார்த்துக் கிளம்பி விட்டார்.

கிளம்பும் முன் அவர்கள் எப்போது அந்த வீட்டிற்கு வருகிறார்கள் என்று கேட்க நினைத்தார். ஆனால் இன்னும் அவர்களுக்குள் எதுவும் சரியாகாத நிலையில் பவ்யா என்ன சொல்வாளோ? என்று தான் அமைதியாக இருந்து விட்டார்.

அதுவும் கிரணின் பிரச்சனை பற்றித் தெரிந்து தான் அந்த வீட்டிலேயே இருக்க வந்து விடும்படி அழைத்தும் அவள் மறுத்து விட்டாள்.

‘இனி அவளாகச் சந்தோஷமாக அந்த வீட்டிற்கு வரட்டும்’ என்று நினைத்துக் கொண்டார். மாலையில் இருந்த நிலை மாறி இப்போது மன நிறைவுடன் தன் வீட்டிற்குச் சென்றார்.

அவர் சென்றதும் இப்போது கணவன், மனைவி மட்டும் முழித்திருக்க, பவ்யா வேலை முடித்துவிட்டாலும் இன்னும் சமையலறையில் வேலை செய்வது போல நின்றிருந்தாள். ஒரு வித பதட்டம் அவளைச் சூழ்ந்திருந்தது.

கணவன் மீது கோபம் இருந்தாலும் அவளுக்கும் அவன் இங்கேயே இருக்கப் போவது அறிந்து மனதிற்குள் இதமாக இருந்தது.

ஆனால் அவர்களுக்குள் இருந்த தீர்க்கப்படாத பிரச்சனைகள் அந்தச் சந்தோஷத்தை முழுவதுமாக அனுபவிக்க முடியாமல் செய்து கொண்டிருந்தது.

வினய் இன்னும் கவினை மடியில் வைத்துக் கொண்டு சமையலறை வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான். மனைவி கோபமாக இருக்கின்றாள் என்று புரிந்தது.

அவளிடம் பேசி அதைப் போக்க ஆவல் மிகுதியாக இருந்தது. ஆனால் அவள் இருக்கும் கோபத்தில் தான் சொல்வதைப் பொறுமையாகக் கேட்பாளா? என்று தான் அவனுக்குத் தெரியவில்லை.

அதற்கு மேலும் நேரத்தை கடத்தாமல் வெளியே வந்த பவ்யா வினய்யின் அருகில் வந்தாள்.

வினய் அவளின் முகத்தை ஆர்வமாகப் பார்க்க… அவளோ சற்றும் அவனைச் சட்டை செய்யாமல் அவன் மடியில் இருந்த கவினை தூக்க குனிந்தாள்.

அப்படி அருகில் வந்து தூக்க பவ்யாவிற்குத் தயக்கமாகத் தான் இருந்தது. ஆனால் கணவனிடம் காலையில் சாதாரணமாகப் பேச முயன்றது போல இப்போது முடியவில்லை.

மகனை தர சொல்ல கூடப் பேச பிடிக்காமல் அவளே தூக்க முயன்றவளுக்கு இப்போது அது தான் சோதனையாக முடிந்தது.

கணவனின் விடாத பார்வை அவளை ஊடுருவ அவனின் அருகாமை நடுக்கத்தைக் கொடுத்தது. கைகள் லேசாக நடுங்க குழந்தையைத் தூக்க முயல, அவளின் நடுங்கிய கைகள் வினய்க்குச் சுவாரசியத்தைத் தந்தது.

அவனின் சுவாரஸ்யம் பவ்யாவிற்கு எரிச்சலை தர, குழந்தையைப் பட்டெனத் தூக்கிக் கொண்டாள். அப்போது அவளின் கை கணவனின் மீது லேசாக உரச அந்த எரிச்சல் நிலையிலும் அவள் அறியாமல் ஒரு சிலிர்ப்பு ஓடிச் சென்றது.

அதை வினய்யும் உணர அவனிடம் ஒரு கள்ள சிரிப்பு இதழில் வந்து அமர்ந்து கொண்டது.

கவினை தூக்கி தோளில் போட்டுக் கொண்டவள் வினய்யின் முகத்தைக் காணாமல் அவனைக் கடந்து போக முயன்றாள்.

அதில் சுதாரித்த வினய் “பவி…!” என்றழைத்தான்.

அவன் அழைப்பில் நடந்து கொண்டிருந்தவள் கால்கள் அப்படியே நின்றன.

அவள் என்ன என்று கூடக் கேட்காமல் நிற்கவும் “பவி…” என்று மீண்டும் அழைத்தான். இன்னும் அசையாமல் ‘சொல் கேட்கிறேன்’ என்பது போல நின்று கொண்டிருந்தாளே தவிர அவளிடமிருந்து வார்த்தைகள் எதுவும் வராமல் போனது.

அவளின் அமைதி வினய்யை உலுக்க “என்கிட்ட பேச மாட்டியா பவி?” என்று கேட்டவனின் குரலில் ஏக்கம் நிறைந்திருந்தது.

அந்த ஏக்கத்தை உணர்ந்தவளுக்கு உள்ளுக்குள் வலித்தது. ஆனாலும் அவளின் இதழ்கள் நாங்கள் பிரியமாட்டோம் என்று சத்தியாகிரகம் செய்து கொண்டிருந்தது.

“என்மேல கோபமா இருக்கன்னு புரியுது. காலையில் கூட என்கிட்ட சில வார்த்தைகளாவது பேசின. ஆனா இப்போ என் முகத்தைப் பார்க்க கூடப் பிரியமில்லாம இருக்க. அப்பாகிட்ட நான் பேசின போது ஏதோ ஒரு வார்த்தை உன்னைக் கோப பட வச்சுருக்குன்னு நினைக்கிறேன். அது என்னனு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டான்.

இப்போது எழுந்து அவள் பின்னால் தான் நின்றிருந்தான். அவன் பேசும் போது அவனின் மூச்சுக் காற்று அவளையும் சேர்த்து உஷ்ணமாக்கியது.

அந்த உஷ்ணத்தில் அவள் தணலாகத் தகித்தாலும், கொஞ்சமும் தன் மன இறுக்கத்தை விடாது மௌன கூண்டுக்குள் இறுக்கமாக அடைந்துக் கொண்டாள்.

மனைவியின் மௌனம் வினய்யை கொல்லாமல் கொல்ல, கண்ணை இறுக மூடி தன் வேதனையை அடக்க முயன்றான்.

“பவிமா ப்ளீஸ். நான் நிறையத் தப்புப் பண்ணிருக்கேன். உன் பார்வையில் இப்போ கூட நான் இப்படி இத்தனை நாள் இல்லாம இப்போ சமாதானம் பேச வர்றது உனக்குத் தப்பா தெரியலாம். ஆனா செய்த தப்பை எப்படிச் சரி பண்றதுன்னு யோசிக்கணுமே தவிர… அந்தத் தப்பை சரி தான்னு சாதிக்க நியாயம் தேடுறது தான் தப்புன்னு நான் நினைக்கிறேன்.

இப்போ நான் செய்ததெல்லாம் சரின்னு சொல்ல போறது இல்லை. இனி செய்யப் போறதை எல்லாம் சரியா செய்யணும்னு ஆசைப்படுறேன். அந்த ஆசை நிறைவேற என் ஒருத்தனால மட்டும் முடியாது. என்னில் பாதியா உன் பங்கும் அதில் வேணும்” என்று அவன் சொல்லி நிறுத்தி மனைவியின் ஒரு வார்த்தைக்காகக் காத்திருந்தான்.

ஆனால் பவ்யா அசையாமல் அப்படியே நிற்க, திரும்பி நின்றிருந்தவளின் தோளில் மீது கைவைத்து தன் பக்கம் திருப்பி மனைவியின் முகத்தைப் பார்த்து “பவி…!” என்று அதிர்வாக அழைத்தான்.

முகம் உணர்வுகளற்று இருந்தாலும் பவ்யாவின் கண்ணில் இருந்து கட்டுக்கடங்காமல் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

அவளின் கண்ணீர் அவனை வதைக்க, “பவிமா…! ப்ளீஸ் அழாதே…!” என்றான் தவித்துப் போன குரலில்.

ஆனால் அவளின் கண்ணீர் நிற்காமல் தொடர அதைக் காண முடியாமல் துடித்தவன் மனைவியின் தோளை சுற்றி கைபோட்டு அணைக்க முயன்றான்.

அவன் முயற்சியைக் கண்டு தன் தோளை குலுக்கி சட்டென அவனை விட்டு விலகியவள் “டோன்ட் டச் மீ…!” என்று ஆவேசமாகச் சொன்னவள் குரல் உயரவில்லை என்றாலும் அவள் கண்ணிலும், குரலிலும் தெரிந்த கனல் அவனின் கையைத் தன்னால் விலக்க வைத்தது.

மனைவியின் அந்த ஆவேசத்தில் வினய்யின் முகம் சுருங்கிப் போனது. ஒரு அடி பின்னால் விலகி நின்றான்.

ஆவேசம் குறையாமல் வினய்யை நோக்கியவள் “மாமாகிட்ட உங்க கோபம் இன்னும் குறையலைன்னு சொன்னீங்க. அதுக்கு என்ன அர்த்தம்? அப்போ இன்னும் என்னை நடிக்கிறவளா தான் உங்க மனசில் நினைச்சுட்டு இருக்கீங்கன்னு தானே அர்த்தம். அப்படி இருக்கும் போது நடிக்கிறவளோட பங்கு உங்களுக்கு எதுக்கு?” என்று கேட்டவள் நிற்காமல் தன் அறைக்குள் நுழைந்தவளை பார்த்து திகைத்து நின்றான்.

அப்போது தான் மனைவியின் கோபத்தின் காரணம் புரிய அவளைச் சமாதானப் படுத்தும் நோக்கோடு அவனும் அவளின் அறைக்குள் நுழையும் முன் கவினை படுக்க வைத்து விட்டு வந்த பவ்யா அவனின் எதிரே நின்று, அவன் பேசுவதற்கு இடம் தராமல் தன் மன ஆதங்கத்தை எல்லாம் கொட்ட ஆரம்பித்தாள்.

“இப்படிக் கேட்குற நான் அப்புறம் எப்படி உங்க மனநிலை தெரியாமல் உங்ககிட்ட வர முடிவெடுத்தேன்னு உங்களுக்குக் கேள்வி வரலாம். நான் வர முக்கியக் காரணம் கவின் மட்டும் தான். என் பிள்ளை உங்க போட்டோவை பார்த்து வளரும் போதே உங்களை அப்படித் தேடுறான்.

இனியும் அவனைத் தவிக்க விடக் கூடாதுனு தான் எனக்கு வெளிநாடு பிடிக்கலைனாலும் அங்கே வர முடிவெடுத்தேன். என்னால ஒரு நல்ல மனைவியா தான் இருக்க முடியலை. ஒரு நல்ல தாயா இருந்து கவினுக்கு அவனோட தகப்பனை கொடுக்க நினைச்சேன். அதில் என் பாதுகாப்பு! கிரண் சம்பவம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.

திரும்ப அது போல ஒரு சம்பவம் நடந்தா கண்டிப்பா என் உயிர் போய்ரும். ஆமா… இனி அது போல யாரது ஒருத்தன் கை என் மேலே பட்டுச்சுனா கண்டிப்பா நான் உயிரோடு இருக்க மாட்டேன். அப்படி என் உயிர் போனா கவினுக்கு யார் இருக்கா? அவன் தகப்பன் இல்லாம வளர்ந்து தாயும் இல்லாம போனா அவனுக்கு வேற யார் இருக்கா? மாமா இருக்காரேனு நீங்க நினைக்கலாம்.

ஆயிரம் சொந்தங்கள் சுத்தி இருந்தாலும் பெத்தவங்களுக்கு ஈடா யாரும் வர முடியாது. பெத்தவங்க இல்லாம நான் பட்ட வேதனையும், வலியும் அணு அணுவா அனுபவிச்சவ நான். அந்த நிலைமை கண்டிப்பா என் பிள்ளைக்கு வந்திற கூடாது. அவனை உங்ககிட்ட ஒப்படைச்சிறணும்னு தான் அங்கே கிளம்ப ஏற்பாடு செய்தேன்.

இந்த நாடககாரி உங்ககிட்ட நாடகம் ஆட வர நினைக்கலை” என்று சொன்னவள் அப்படியே மடங்கி அமர்ந்து கண்ணீர் விட்டு கதற ஆரம்பித்தாள்.

மனைவியின் பேச்சை கேட்டு உறைந்து போய் நின்று விட்டான் வினய். அவள் உயிரோடு இருக்க மாட்டேன் என்று சொல்லும் போதே அவனின் உயிரும் இங்கே ஆட்டம் கண்டது.

தான் முன்பு சொன்ன வார்த்தை இன்னும் அவளை வதைக்கிறது என்றால் அது எந்த அளவு அவளைப் பாதிக்கிறது என்பதை உணர்ந்தவன் சிலை போல் நின்றான்.

பின்பு மனைவி அழுகிறாள் அவளைச் சமாதானப் படுத்த வேண்டும் என்பதைக் கூட உணர முடியாது உறைந்து போனவன் அவளுக்கு எதிரே அவனும் அப்படியே தரையில் அமர்ந்தான்.

சிறிது நேரத்தில் அழுகையை நிறுத்தி வேகமாகத் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டவள் “ஸாரி இந்த அழுகையும் கூட உங்களுக்கு நாடக தன்மையா தெரியலாம்” என்றவள் எழுந்து செல்ல போக,

“பவிமா…!” என்ற கரகரப்பான குரலில் இருந்த வித்தியாசத்தைக் கண்டு கணவனின் புறம் திரும்பியவள் கண்களை அகல விரித்துப் பார்த்தாள்.

அவளின் எதிரே இத்தனை நாளும் தூக்கி சுமந்து கொண்டிருந்த கர்வம், பிடிவாதம் அனைத்தும் கலைந்து, பவ்யாவின் கணவனாகக் கண்ணில் தேங்கிய நீரை பொருட்படுத்தாமல் கையை ஏந்தி யாசகம் கேட்பவன் போல மண்டியிட்டு அமர்ந்திருந்தான் வினய்.