19 – உனதன்பில் உயிர்த்தேன்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 19
“என்ன ஆத்தா, இம்புட்டு நேரம் ஆகியும் அவரை இன்னும் காணோம்?” என்று திண்ணையில் அப்பத்தாவுடன் அமர்ந்திருந்த தேன்மலர் கேட்டாள்.
“சோலியா இருப்பான் தாயி. வருவான்…” என்றார் அப்பத்தா.
“இந்நேரம் சாப்பிட வருவாரே ஆத்தா? நா வேணும்னா வயலுக்குப் போய்ப் பார்த்துப் போட்டு வரட்டுமா?” என்று கேட்டாள்.
“இல்லை தாயி, வேணாம். மழை வர்றாப்புல வானம் மப்பும், மந்தாரமா இருக்கு. வந்துருவான். நீ போய்ச் சோத்தை போட்டு தின்னு…” என்றார்.
“இல்ல ஆத்தா, அவரு வரட்டும்…” என்றாள்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே தூறலாக ஆரம்பித்துப் பெரிய மழையாகப் பெய்ய ஆரம்பித்தது.
திண்ணையிலும் சாரல் தெறிக்க ஆரம்பிக்க, இருவரும் வீட்டிற்குள் சென்றனர்.
அப்பத்தா ஏற்கனவே சாப்பிட்டு விட்டதால் கூடத்தில் பாயை விரித்துச் சாய்ந்து விட, தேன்மலர் கதவை திறந்து வைத்து அதன் மீது சாய்ந்து வாசலை பார்த்த வண்ணம் அமர்ந்து கொண்டாள்.
ராசுவும் இன்னொரு கதவு ஓரமாக வந்து படுத்துக் கொண்டது.
“மழை காலம் வந்துருச்சு. இனி இப்படித்தேன் மழை கொட்டும்…” என்று அப்பத்தா சொல்ல, அவள் “ம்ம்…” கொட்டினாள்.
“இப்படித்தேன் ஒரு மழை காலம். அப்போ உம் புருசன் கை புள்ள. அவன் அம்மா அப்போ அவ ஆத்தா வூருக்கு போயிருந்தா. அவளைக் கூப்பிட எம் மவனும் போயிருந்தான். திரும்பி நல்லபடியா அவுக வருவாகன்னு காத்துக் கிடந்தேன். ஆனா…” என்ற அப்பத்தா வருத்த பெருமூச்சு விட்டார்.
“என்னாச்சு ஆத்தா?” என்று அவரின் புறம் திரும்பி கேட்டாள்.
“அப்ப தினமும் மழை பேஞ்சு, ஊரெல்லாம் தண்ணிகாடா போச்சு. நம்ம வூருக்கு வெளிய ஒரு ஆறு இருக்கே, அதுலயும் நிறையத் தண்ணிப் போச்சு. அப்ப எல்லாம் இந்த வூருக்கு பஸ்ஸு வராது. பக்கத்து வூருல இருந்து அந்த ஆறு வழியாத்தேன் வரணும். ஆறு மேல ஒரு மரப்பாலம் இருக்கும். ஆறுல தண்ணி போனப்ப, எம் மவனும், மருமவளும் அது வழியாத்தேன் வந்துட்டு இருந்தாக. பாலத்தை விட்டு இறங்கும் போது திடீர்ன்னு பாலம் உடைஞ்சி விழுந்துச்சு….” என்று அப்பத்தா சொல்ல,
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“அய்யோ!” என்றாள் தேன்மலர்.
“எம் மவனும், மருமவளும் ஆத்துக்குள்ள விழுந்த வேகத்துல தண்ணி இழுத்துட்டு போயிடுச்சு. அப்போ எம் மருமவ கைல இருந்த புள்ளய தூக்கி கரை பக்கம் வீசி இருக்கா. புள்ள ஒரு பொதருக்குள்ள விழுந்துருச்சு. எம் மவனையும், மருமவளையும் அடிச்சுட்டு போன ஆறு பொணமாத்தேன் கரை சேர்த்துச்சு…” என்று கலங்கிய குரலில் சொன்னார்.
துக்கம் தொண்டையை அடைக்க, கண்கள் கலங்க அமைதியாக இருந்தாள் தேன்மலர்.
“புள்ளய எப்படிப் பார்த்தீக ஆத்தா?” என்று மெல்ல கேட்டாள்.
“பாலம் உடைஞ்சு போனதை அந்த வழியா போன யாரோ பார்த்துட்டாக. அப்போ புள்ள பொதரு பக்கம் இருந்து அழுததைப் பார்த்துட்டு தூக்கியிருக்காக. அப்புறம் என்ன, ஏ வாழ்க்கைக்கு மிச்சமாகி போனான் எம் பேரன்…” என்றார்.
“பாவம் ஆத்தா அவரு…” என்றாள் வருத்தமாக.
“ம்ம் பாவந்தேன். அவன் அப்பன், ஆத்தாதேன் தண்ணியோட போயிட்டாகன்னு பார்த்தா, அவன் கட்டியவளும் கிணத்து தண்ணில விழுந்து போய்ச் சேர்ந்துட்டா. அவன் விதியை ஆண்டவன் அப்படி எழுதிட்டான் போல…” என்றார் வேதனையுடன்.
கேட்கும் போதே தேன்மலருக்கு வருத்தமாக இருந்தது.
சிறுவயதிலேயே தந்தையை இழந்தாலும், தனக்காவது அன்னையின் அன்பும், ஆதரவும் இப்போது வரை கிடைத்தது. ஆனால் அவனுக்கு அன்னை, தந்தை இருவரின் அன்பும் கிடைக்காமல் போனதே என்று வருந்தினாள்.
தாய் இல்லாத கொடுமை என்னவென்று அவளுக்கும் நன்றாகத் தெரியும் அல்லவா?
அவனைப் பற்றியே யோசித்தபடி அப்படியே அமர்ந்திருந்தாள். அப்பத்தாவும் பழைய நினைவுகளில் மூழ்கி போய் அமைதியாக இருந்தார்.
ஒரு மணி நேரம் நன்றாக அடித்து ஊற்றி விட்டு ஓய்ந்தது மழை.
மழை விட்டதும் கணவன் வந்து விடுவான் என்று காத்திருந்தாள் தேன்மலர்.
ஆனால் மேலும் அரைமணி நேரம் கடந்த பிறகும் அவன் வந்து சேரவில்லை என்றதும் அவளின் மனம் படபடவென்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.
“இன்னும் காணோமே ஆத்தா? நா போய்ப் பார்த்துப் போட்டு வாறேன்…” என்றாள்.
“மழை பேஞ்சதுல கரண்டு வேற இல்ல. இந்த இருட்டுக்குள்ளார போவணுமா தாயி?” என்று கேட்டார்.
“டார்ச் லைட் எடுத்துக்கிறேன் ஆத்தா. ஒருவேளை திரும்பக் குடிச்சுப் போட்டு எங்கனயும் விழுந்து கிடக்காரோ என்னவோ?”
“அவன் தேன் உங் கழுத்துல தாலி கட்டின நாளிலிருந்து சாராயத்தை விட்டுப் போட்டானே?” என்றார்.
“இன்னைக்கு டவுனுக்குப் போனப்ப மூத்தாரு நினைப்பு வந்துருச்சு போல அப்பத்தா. அப்பவே அவரு முகம் சரியில்லன்னு சொன்னேனே. அதை நினைச்சு குடிச்சுப் போட்டாரோ என்னவோ?” என்றாள்.
“அப்படியா சொல்ற?” என்று யோசனையுடன் கேட்டார்.
“இருக்கும் ஆத்தா. நா எதுக்கும் போய்ப் பார்த்துட்டு வாறேன். இல்லனா என்னால நிம்மதியா மூச்சு கூட விட முடியாது…” என்றவள் அதற்கு மேல் அமர்ந்திருக்கவில்லை.
இனி அவளை நிறுத்த முடியாது என்று நினைத்த அப்பத்தாவும் அமைதியாக இருந்துவிட்டார்.
டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல, ராசுவும் அவள் பின்னால் எழுந்து ஓடியது.
“பார்த்துச் சூதானமா போயிட்டு வா தாயி…” என்றார் அப்பத்தா.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“சரி ஆத்தா…” என்றவள், வயலை நோக்கி சென்றாள்.
“அவரு எங்கனயும் விழுந்து கிடக்காரான்னு பாரும் ராசு…” என்றாள்.
அதுவும் அவளுக்கு முன்னால் தேடிக் கொண்டே சென்றது.
வழியில் எங்கேயும் அவனைக் காணவில்லை. மனம் சரி இல்லை என்றால் அவன் கிணற்றடிக்கு தான் செல்வான் என்று அப்பத்தா சொன்னது ஞாபகத்தில் வர, அங்கே சென்றாள்.
கிணற்றைச் சுற்றி வந்தும் அவன் இல்லை என்றதும் எங்கே போனான் என்று குழம்பி போனவள் கண்களில் மோட்டார் அறை பட்டது. மூடிய மோட்டார் அறையில் இருந்து மெல்லிய வெளிச்சம் இருப்பதைப் பார்த்தவள், யோசனையுடன் அங்கே சென்றாள்.
கதவை தட்டி, “யோவ், உள்ளார இருக்கீரா?” என்று குரல் கொடுத்தாள்.
அடுத்தச் சில நொடிகளில் கதவை திறந்து வெளியே வந்தான் வைரவேல்.
டார்ச் லைட்டை அவன் பக்கம் அடித்துக் குடித்திருக்கிறானா என்று ஆராய்ச்சியுடன் பார்த்தாள்.
“என்ன புள்ள, இந்நேரம் நீ ஏன் இங்கன வந்த?” என்று வெளிச்சத்தில் கூசிய கண்களைச் சுருக்கிய படி கேட்டான்.
“ஏன் வந்தேனா? நீர் ஏன்யா வூட்டுக்கு வரலை? நீரு வருவீர்னு சோறு உங்காம காத்துக் கிடந்தேன்…” என்றாள்.
“உம்மை யாரு உங்காம இருக்கச் சொன்னது? போய்ச் சோத்தை போட்டு தின்னு…” என்றான்.
“நீர்?”
“நா இன்னைக்கு ரோட்டு கடைல பரோட்டா தின்னுட்டேன்…” என்றவனை அதிர்வுடன் பார்த்தாள்.
இது என்ன புதுப் பழக்கம்? லோடு ஏற்ற வெளியே சென்றால் மட்டுமே அவன் வெளியே உண்பான். இன்று காலை போய் வந்த பிறகு அவன் லோடுக்குப் போகவில்லை. அப்படியிருக்க, ஏன் இரவு வெளியே சாப்பிட வேண்டும் என்று அவளுக்குக் கேள்வி எழுந்தது.
“போ புள்ள. இன்னைக்கு ராவு நா இங்கன தேன் படுக்கப் போறேன். நீ போய்த் தின்னுட்டு தூங்கு…” என்றான்.
இதுவும் அவனின் புதுப் பழக்கம் தான். போதையில் இருந்தால் கூட வீட்டிற்குச் சென்று விட வேண்டும் என்று நினைப்பவன் இப்போது ஏன் இங்கே வந்து படுக்க வேண்டும்? என்று நினைத்தாள்.
அவனை அமைதியாகப் பார்த்தாள்.
“என்னய்யா, புதுப் புதுப் பழக்கமா இருக்கு?” என்று ஒரு மாதிரியான குரலில் கேட்டாள்.
“இனி இப்படித்தேன் பழக்கம். நீ வூட்டுக்கு போ…” என்று அதற்கு மேல் அவளுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் மோட்டார் அறைக்குள் சென்று விட்டான்.
சிறிது நேரம் அங்கேயே நின்று பார்த்தாள். அவனோ உள்ளே இருந்த கட்டிலில் படுக்கப் போர்வையை விரித்துக் கொண்டிருந்தான்.
ஏன் இப்படிச் செய்கிறான் என்று புரியாமல் அவனைப் பார்த்துக் கொண்டு அப்படியே நின்றாள்.
அவனோ அவள் பக்கமே திரும்பவில்லை.
“ஏன்யா?” என்று அவள் ஏதோ கேட்க ஆரம்பிக்க,
“நா தனியா இருக்கணும் புள்ள…” என்றான் அழுத்தமாக.
அவ்வழுத்தம் ‘இங்கிருந்து போய் விடு!’ என்று அவளை விரட்டுவது போல் இருக்க, அவளின் கண்கள் கலங்கும் போல் இருந்தது.
“ராசு, அவளை வூட்டுக்குப் பத்திரமா கூட்டிட்டு போ…” என்றான் ராசுவிடம்.
அதற்கு மேல் அங்கே நிற்க பிடிக்காமல் விறுவிறுவென்று திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
“என்ன தாயி, உம் புருசன் எங்கன இருக்கான்?” என்று வீட்டிற்கு வந்ததும் அப்பத்தா விசாரிக்க,
கலங்கிய கண்களை அவருக்குக் காட்டாமல், “மோட்டார் அறைல இன்னைக்கு ராவு படுக்கப் போறாராம். ரோட்டு கடைல சாப்புட்டாராம்…” என்று அப்படியே ஒப்பித்தவள் அடுப்படிக்கு சென்றாள்.
“என்ன சொல்ற தாயி? இதென்ன புதுசா என்னென்னவோ செய்றான்?” என்று பதறி கேட்டார்.
“அவருக்குத் தனியா இருக்கணுமாம் ஆத்தா…” என்று உள்ளிருந்து சொல்லியவளின் குரல் கரகரப்பாகக் கேட்க, அப்பத்தாவும் எழுந்து அடுப்படிக்கு சென்றார்.
உள்ளே சாப்பாட்டில் தண்ணியை ஊற்றிக் கொண்டிருந்தாள் தேன்மலர்.
“என்ன தாயி, சோறு உங்கலையா?”
“இல்ல ஆத்தா, பசிக்கலை…” என்றாள்.
அவளின் முகத்தைக் கூர்ந்து பார்த்தவர், “இங்கன இருந்தாலும் தனியாத்தானே கிடந்தான். இப்ப மட்டும் என்ன தனியா இருக்கணும்னு உம் புருசன் கிட்ட நல்லா கேட்டுருக்க வேண்டியது தானே?” என்று கேட்டார்.
“அவரைக் கேள்வி கேட்க நா யாரு ஆத்தா? அவரைப் பொறுத்தமட்டும் நா யாரோ ஒரு புள்ள தானே? பொஞ்சாதியா என்ன, உரிமையோட கேள்வி கேட்க?” என்று கேட்டவள் குரலில் இருந்தது வலி மட்டுமே.
அவன் ‘புள்ள’ என்று அவளை அழைக்கும் போதெல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டவளுக்கு, இப்போது அப்படி எடுத்துப் கொள்ள முடியவில்லை.
ஆரம்பத்தில் அவள் முத்தரசியின் மகளாக இருந்த போது எப்படிப் புள்ள என்று சொன்னானோ, அதே தான் இப்போது அவனின் மனைவியாக மாறி மாதங்கள் பல கடந்தும் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்றால் இன்னும் அவன் தன்னை அவனின் மனைவியாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று தானே அர்த்தம்? என்று நினைத்துக் கொண்டாள்.
அவளும் ஆசை கொண்ட சாதாரணப் பெண் தானே?
கணவன் மேல் அவள் மனம் எப்போதோ சாய்ந்து விட்டது. ஆனால் கணவன் முதல் மனைவியின் நினைவில் துக்கமாக இருக்க, அவளால் அவனை நெருங்க முடியவில்லை.
ஆனாலும் அவன் தன் கண் பார்வையில் தான் இருக்கிறான். என்றாவது ஒரு நாள் அவனின் மனம் மாறும். அதுவரை தான் காத்திருப்போம் என்று நினைத்து தான் இத்தனை நாட்களும் அமைதியாக இருந்தாள்.
ஆனால் இன்றோ… இன்று ஒரு நாள் அவளை வெளியே அழைத்துச் சென்று விட்டு வந்ததில் தனிமையை நாடும் நிலைக்குச் சென்று விட்டான் என்பதை அவளால் தாங்கவே முடியவில்லை.
அப்படியா தான் அவனைத் தொந்தரவு செய்தோம்? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.
அவள் கண்கள் கலங்கி போனது.
“விசனப்படாத தாயி. அவனுக்கு என்னமோ ஆகிப்போச்சு போ. விடிஞ்சதும் வூட்டுக்குத்தானே வருவான். வரட்டும், பேசிக்கிடுறேன்…” என்றார் அப்பத்தா.
“இல்ல ஆத்தா, நீர் ஒன்னும் அவரைக் கேட்காதீர். இதை நா பார்த்துக்கிடுதேன்…” என்றாள் தேன்மலர்.
“அடுத்த மாசம் குமுதா நினைவு நாளு வருது தாயி. அதுல அவன் எப்படி இருக்கானோ. பார்த்து சூதானமா நடந்துகோ தாயி…” என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார் அப்பத்தா.
அப்பத்தா சொல்லி சென்றதை யோசித்த படி படுக்கச் சென்றாள் தேன்மலர்.
அவனின் விலகலில் மனம் எல்லாம் ரணமாக வலிப்பது போல் இருந்தது.
ஆனால் அதே நேரம் அவன் பக்கம் இருந்தும் யோசித்தாள்.
அதிலும் முக்கியமாக இன்று காலையிலிருந்து நடந்ததை நிதானமாக யோசித்தவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.
காலையில் வீட்டிற்கு வந்த வைரவேல் நேராகத் தன் அறைக்குச் சென்றான்.
அறையை விட்டு வெகுநேரம் கழித்தே வெளியே வந்தான்.
வெளியே வந்த போது அவனின் முகம் கலங்கியிருந்தது.
வீட்டிற்குள் வேலையாக இருந்தாலும் அவனைக் கவனித்துக் கொண்டிருந்தவளின் கண்ணில் அவனின் கலக்கம் பட்டது.
ஆனாலும் அவள் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
இரவு வீடு வராததைப் பற்றி அப்பத்தாவையும் கேட்க வேண்டாம் என்று சொல்லிவிட்டதால் அவரும் ‘புருசன், பொஞ்சாதி பாடு’ என்று அமைதியாக இருந்து விட்டார்.
குளித்து முடித்து வெளியே வந்தவன், உடையை மாற்றி விட்டு, சாப்பிட வந்தான்.
அப்போது தேன்மலர் வீட்டின் பின் பக்கம் இருந்தாள்.
அவன் சாப்பிட வந்தது தெரிந்தாலும், ‘இன்றும் அவளைச் சாப்பாடு போட சொல்வானா?’ என்ற எதிர்பார்ப்பு அவளிடம் இருந்ததால் வேண்டுமென்றே உள்ளே வராமல் இருந்தாள்.
கூடத்தில் நின்று சுற்றி முற்றி பார்த்தான். அவள் பின் பக்கம் இருக்க, அப்பத்தா திண்ணையில் அமர்ந்திருந்தார்.
பின்பக்கம் சென்றவன் கதவின் அருகிலே நின்று வெளியே எட்டிப் பார்த்து, “இந்தா புள்ள, சோத்தை போடு. சோலி கிடக்கு, வெளிய போகணும்…” என்று அவன் குரல் கொடுத்ததும் தேன்மலரின் அகத்துடன் முகமும் மலர்ந்து போனது.
இந்த ஒரு விஷயத்திலாவது தன்னை விலக்கி வைக்காமல் இருந்தானே என்ற நிம்மதி அவளிடம்.
செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு உள்ளே வந்தாள்.
அவளின் முக மலர்ச்சியைப் பார்த்தபடி சாப்பிட அமர்ந்தான்.
அவள் சாப்பாட்டை வைத்ததும் அமைதியாகச் சாப்பிட்டு எழுந்தவன், “இன்னைக்கு ரெண்டு வயலுக்கும் நீ தேன் மேற்பார்வை பார்க்கணும். நா லோடுக்குப் போறேன். இன்னைக்குச் சாமந்தி நிறையப் பறிக்கச் சொல்லிருக்கேன். சாமந்தி நிறைய வேணும்னு போன் வந்துச்சு. சாமந்தியைப் பறிச்சு எடை போட்டு மூட்டை போட்டதும் எமக்குப் போன் போடு. நா குட்டியானைல கொண்டு போய் டவுன்ல போட்டுருவேன்…” என்றான்.
“சரிய்யா, சோலிக்கு எம்புட்டு ஆளு சொல்லிருக்கீரு?”
“ரெண்டுக்கும் அஞ்சு அஞ்சு பேரு வருவாக. ஆளுகளைச் செத்த வெரசா சோலியை முடிக்கச் சொல்லு. மூணு மணிக்கு எல்லாம் லோடு டவுன் போய்ச் சேரணும்…” என்றான்.
“சரி, மதியத்துக்குச் சோறு உங்க வூட்டுக்கு வருவீரா?” என்று கேட்டாள்.
“சாமந்தியை போட்டுட்டு நா அப்படியே டவுன்ல சாப்பிட்டுக்கிறேன். வூட்டுல சாப்புட எல்லாம் நேரம் இல்ல. நா கிளம்புறேன்…” என்றவன் உடனே வெளியே கிளம்பிவிட்டான்.
“என்ன தாயி, ராவு ஏன் வூட்டுக்கு வரலைன்னு அவனைக் கேட்கவே இல்ல? என்னையும் கேட்க வேணாம்னுட்ட?” என்று அவன் சென்றதும் அப்பத்தா கேட்க,
“கேட்டு என்ன செய்யப் போறோம் ஆத்தா? அவரு மனசுக்குள்ள என்ன வேதனை இருக்கோ? காலைலயே அவரு முகமே கலக்கமா வேற இருந்துச்சு. அதனால கேட்க மனசு வரல ஆத்தா…” என்றாள்.
“நீ அவன் முகம் பார்த்து நடந்துக்கிற… அவன் உம் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்க மாட்டேங்கிறானே. என்னமோ போ. எப்போத்தேன் அவன் மனசு மாறப் போகுதோ?” என்று புலம்பினார் அப்பத்தா.
“மாறும் அப்பத்தா. கவலைப்படாதீக. நா வயலுக்குக் கிளம்புறேன். ஆளுக சோலிக்கு வந்துருப்பாக…” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.
ஒரு மணிக்கு எல்லாம் பூக்களைப் பறித்து முடித்து மூட்டை போட்டு தயாராக வைத்தால் தான் மூணு மணிக்குள் டவுனுக்கு அனுப்ப முடியும் என்பதால், ஆட்களிடம் விரைவாக வேலை வாங்கி, அவர்களுடன் தானும் விரைந்து வேலை பார்த்தாள் தேன்மலர்.
ஒன்று முப்பது மணியளவில் ஆட்கள் மூட்டையும் போட ஆரம்பிக்க, கணவனுக்கு அழைத்தாள்.
“இங்கன சோலி முடிஞ்சதுயா. நீர் எப்ப வாறீர்?” என்று கேட்க, கால்மணி நேரத்தில் வருவதாகத் தகவல் சொன்னான்.
அவன் வர நேரம் ஆகும் என்பதால் உடனே வீட்டிற்குக் கிளம்பினாள்.
அவன் வந்த போது அவளும் திரும்பி வயலுக்கு வந்திருந்தாள்.
வயலுக்கு வெளியே வாகனத்தை நிறுத்தியிருந்தான்.
“பூ மூட்டையை எல்லாம் ஆளுக வண்டில ஏத்த இன்னும் பத்து நிமிசம் ஆகும்யா. அதுக்குள்ளார நீர் வந்து சோத்தை தின்னும்…” என்று மூட்டையைத் தூக்கப் போன கணவனை அழைத்தாள்.
“வூட்டுக்குப் போய்ட்டு வரவெல்லாம் நேரம் இல்ல புள்ள…” என்றான்.
“உம்மை யாரு வூட்டுக்கு போவ சொன்னா? நா வூட்டுல இருந்து சோறு எடுத்தாந்துட்டேன். அந்த மரத்துக்கிட்ட வச்சுருக்கேன் பாரும். போய்க் கை, கால் கழுவிட்டு வாரும்…” என்றாள்.
“நாந்தேன் டவுனுல சாப்புட்டுகிறேன்னு சொன்னேன்ல?”
“நீர் டவுனுக்குப் போகவே மூணு மணி ஆகிப் போயிடும். அங்கன லோடு இறக்கி, பூ எடை போட்டு, காசு வாங்கிட்டு அப்புறமேட்டுக்கு சாப்புட நாலு, நாலரை ஆகிப்போகும். அதுவரையும் சாப்புடாம இருந்தா ஒடம்பு என்னத்துக்கு ஆகுறது?” என்றாள் அக்கறையாக.
அவளின் முகத்தைச் சில நொடிகள் கூர்ந்து பார்த்தான்.
அவளின் மனதையே ஊடுருவது போலான பார்வை அது.
பின் தலையைத் திருப்பிக் கொண்டு தொண்டையை லேசாகச் செருமி கொண்டவன், “போய் எடுத்து வை. கை, கால் கழுவிட்டு வாறேன்…” என்றவன் கிணற்றுப் பக்கம் சென்றான்.
“என்ன இந்த ஆளு அப்படி ஒரு பார்வை பார்த்துச்சு?” என்று சிலிர்த்துக் கொண்டு அவனுக்கு உணவை வைக்கச் சென்றாள் தேன்மலர்.