19 – இன்னுயிராய் ஜனித்தாய்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 19
“வீட்டைச் சுத்திப் பார்க்கலையா துர்கா? எப்படி உனக்கு ஸ்வீட் சர்பிரைஸா இருந்ததா?” என்ற ஷாலினியின் கேள்விக்கு உதட்டைப் பிதுக்கினாள் துர்கா.
“என்ன பதில் இது?” கேட்ட ஷாலினி திருமணத்திற்காகப் போட்ட துர்காவின் தலையலங்காரத்தைக் கலைக்க உதவி செய்து கொண்டிருந்தாள்.
வீட்டிற்குள் வந்து பூஜை அறையில் விளக்கேற்றியதும், உடையை மாற்ற நினைத்த துர்கா ஷாலினியிடம் உதவி கேட்க, அவள் செய்து கொண்டிருந்தாள்.
“எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை ஷாலினி. என் வாழ்க்கை கல்யாணத்துக்குப் பிறகும் அந்தக் காம்பவுண்ட் வீட்டில் தான் இருக்கும்னு நினைச்சேன். ஆனால் இப்போ…” என்றவள் அதற்கு மேல் சொல்லாமல் நிறுத்தி கண்ணாடி வழியாக ஷாலினியைப் பார்த்தாள்.
“இப்ப உனக்குக் கல்யாணம் ஆகிருச்சு துர்கா. அதுவே பெரிய மாற்றம் தான். இன்னும் அந்தப் புறா கூண்டுக்குள்ளே இருக்காமல் ஒரு நல்ல வீட்டுக்கு வந்திருக்கோம்னு சந்தோஷப்பட்டுக்கோ…” என்றாள்.
“சந்தோஷத்துக்குப் பதில் பயம் தான் வருது ஷாலினி. இந்தப் புது இடம், புது வாழ்க்கை என்னை மிரட்டுது…” என்ற துர்காவின் குரலில் மெல்லிய கலக்கம்.
“நீ இப்படிக் கலங்கிப் போகவே தேவையில்லை துர்கா. நித்திலன் அண்ணா ரொம்ப நல்லவர். உன் மனசறிந்து நடந்து கொள்வார்…” என்றவளுக்கு அமைதியே பதிலாகத் தந்தாள் துர்கா.
சிலநொடிகள் ஏதோ யோசனையில் இருந்தாள்.
“இவ்வளவு பெரிய வீடு சொந்த வீடுன்னு சொல்றார். அது எப்படி? அவர் பார்க்கும் சாதாரண வேலையில் இது எப்படிச் சாத்தியம்?” என்று குழம்பிப் போனாள்.
“சாதாரண வேலையா? அவர் என்ன வேலை பார்க்கிறார் தெரியுமா?” என்று வியந்து கேட்டாள் ஷாலினி.
அவளின் வியப்பை புரியாமல் பார்த்தவள், “என்ன வேலை? ஏதோ தனியார் கம்பெனியில் சாதாரண வேலை தானே?” என்று கேட்ட துர்காவை விநோதமாகப் பார்த்தாள்.
“என்ன ஷாலினி சொல்லு, நான் எதுவும் தவறா புரிஞ்சிக்கிட்டேனா?” என்ற துர்காவிற்கு அவளின் பார்வையின் அர்த்தம் விளங்கவில்லை.
“நீ நித்திலன் அண்ணாகிட்டயே அவர் என்ன வேலை பார்க்கிறார்னு கேள் துர்கா…”
“ஏன் நீ சொன்னா என்ன?”
“நீ கேள் துர்கா. நீயே தெரிந்து கொண்டால் தான் சரியா இருக்கும். தலையைக் கலைச்சுட்டேன். நீ புடவையை மாத்திட்டு வா. நீ வந்ததும் நாங்க கிளம்புறோம்…” ஷாலினி அறையை விட்டு வெளியே சென்றாள்.
ஏன் ஷாலினி அப்படிச் சொல்லி சென்றாள் என்று புரியாமல் சில நொடிகள் அமர்ந்திருந்த துர்கா, பின் யோசனையைக் கை விட்டு எழுந்து புடவையை மாற்றித் தலையை வாரினாள்.
சுவற்றுடன் இருந்த அலமாரி பெரியதாக இருந்தது. அதனுடன் இணைத்திருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள்.
பின் அந்த அறையைச் சுற்றி அவளின் பார்வை சுழன்றது. அந்த அறை பெரியதாக இருந்தது. சொல்லப் போனால் அவள் குடியிருந்த காம்பவுண்ட் வீடு அளவு இருந்தது அந்த அறை. ஆனால் பொருட்கள் இல்லாமல் வெறுமையாக இருந்தது.
அந்த வெறுமையான அறை கூட அவளை மிரள வைத்தது.
ஏற்கனவே வரவேற்பறையைப் பார்த்தே பயந்து போயிருந்தாள். ஹாலில் பெரிய சோஃபா, ஐம்பது இஞ்ச் அளவு டீவி இருந்தது.
அது மட்டுமே அவள் பார்த்து, அதற்கு மேல் வீட்டைச் சுற்றி பார்க்க முடியாமல் மனதில் ஏதோ முரண்ட, உடை மாற்ற வேண்டும் என்று கேட்க, நித்திலன் சுட்டிக் காட்டிய இந்த அறைக்குள் அடைந்து கொண்டாள்.
இனி இதையெல்லாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்று தோன்ற மெல்ல வெளியே வந்தாள்.
அவள் வந்ததும் அவளிடம் சொல்லிவிட்டு ஷாலினியும், முரளியும் தங்கள் குழந்தையுடன் கிளம்பிவிட்டனர்.
அவர்களை அனுப்பிவிட்டு வந்த நித்திலன், “வீட்டைச் சுத்தி பார்க்கிறீங்களா துர்கா?” என்று கேட்டான்.
“இல்ல, அப்புறம்…” என்று துர்கா தயங்க,
“போய்ப் பாருமா. இன்னும் வீட்டில் சாமான் அடுக்குற வேலை எல்லாம் இருக்குன்னு மாப்பிள்ளை சொன்னார். என்னென்ன அடுக்கணும்னு பாருமா…” என்றார் சபரிநாதன்.
“ஆமா துர்கா, நீ அதைப் பார்த்துட்டு வா. கிச்சனில் நான் கொஞ்சம் அடுக்கி இருக்கேன். மளிகை சாமான் மட்டும் உன் வசதிக்கு ஏற்ப எங்க அடுக்கி வைக்கணும்னு பார்க்கணும்…” என்றார் செவ்வந்தி.
“ம்ம்…” என்று தந்தைக்கும், மாமியாருக்கும் தலையை அசைத்தவள்,
“வருணா எங்கே?” என்று கேட்டாள்.
“அவள் தூங்கிட்டாள். அங்கே படுக்க வச்சுருக்கேன்…” என்று ஒரு அறையைக் கை காட்டினான்.
அவள் அந்த அறைக்குச் சென்று பார்க்க, அங்கிருந்த குழந்தைகளுக்கான ஒரு பெரிய மரத்தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள் வருணா.
கூடவே அந்த அறையைப் பார்த்தவளின் கண்கள் விரிந்தன.
சுவரில் எல்லாம் பொம்மை படங்கள் வரையப்பட்டிருக்க, அறையில் ஒரு மூலையில் குழந்தை விளையாட எதுவாக ஒதுக்கி வைக்கப்பட்டு, பிளாஸ்டிக்கிளான சருக்கல், சின்ன ஊஞ்சல், பெரியதும், சிறியதுமான பந்துக்கள், அதைத் தவிர இன்னும் சில விளையாட்டுப் பொருட்கள் என்று அழகாகச் செட் செய்யப்பட்டிருந்தது.
இன்னொரு பக்கம் ஒரு கட்டில் போடப்பட்டிருந்தது.
“ரூம் நல்லா இருக்கா? இது நம்ம குட்டிம்மா ரூம். இப்போதைக்கு அவள் விளையாட மட்டும் இந்த ரூம் இருக்கும். அப்புறம் அவள் வளர்ந்ததும், ஸ்டடி ரூமாகவும் மாத்திடலாம். இப்போதைக்கு அம்மா இங்கே தங்குவாங்க. பக்கத்து ரூம்மில் மாமா இருப்பார். வாங்க அதையும் பார்க்கலாம்…” என்று அழைத்துப் போனான்.
அவள் தந்தை அறையில் மரக்கட்டில், இரண்டு மர நாற்காலி, ஒரு மேஜை, அவர் துணிகள் வைக்க அலமாரி இருந்தது. அதனுடன் அட்டாச் பாத்ரூம், ஒரு பால்கனி என்று கச்சிதமாக அந்த அறை தயாராகி இருந்தது.
இரண்டு அறையுமே தயாராகியிருக்க அவள் உடை மாற்றிய அறை மட்டும் வெறுமையாக இருந்ததை நினைவு கூர்ந்தாள்.
“நம்ம ரூம்க்கு பெரிய கட்டில் செய்யச் சொல்லி ஆர்டர் போட்டுருந்தேன். அதோட பெரிய மேஜையும் இன்னும் கொஞ்ச நேரத்தில் வரும்னு சொல்லிருக்காங்க. வந்ததும் அந்த அறையும் தயாராகிடும்…” என்று அவள் நினைவுக்கு நித்திலனே பதிலும் சொல்லி=விட்டான்.
துர்கா அவனைக் கலக்கமாகப் பார்க்க, “என்னாச்சு?” என்று கேட்டான்.
“நிஜமாவே இது உங்க வீடு தானா?” என்று கேட்டாள்.
“நம்ம வீடு!” என்று முடித்து விட்டவனிடம் அதற்கு மேல் என்ன கேட்க என்று புரியவில்லை.
“நீங்க என்ன வே…” என்று வேலையைப் பற்றி ஞாபகம் வரவும் கேட்க ஆரம்பிக்க, அதற்குள் வீட்டின் அழைப்பு மணி அழைத்து அவளின் பேச்சை நிறுத்தியது.
“கட்டில் கொண்டு வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன். நான் போய்ப் பார்க்கிறேன்…” என்று நித்திலன் சென்று விட, தனியாக நின்ற துர்காவை செவ்வந்தி சமையலறைக்கு அழைத்துப் போனார்.
அங்கே கிரைண்டர், மிக்ஸி, கேஸ் அடுப்பு, மின்சார அடுப்பு, மைக்ரோஓவன், ப்ரிட்ஜ் பாத்திரங்கள், மளிகை பொருட்கள் என்று சமையலறைக்குத் தேவையான அத்தனை பொருட்களும் இருந்தன.
மளிகை பொருட்கள் மட்டும் அடுக்கி வைக்கப்படாமல் கீழே ஒரு ஓரமாக இருந்தன.
“இதையும் நான் அடுக்கி வச்சுருப்பேன். ஆனா இந்த வீட்டில் புழங்க போறது நீ தான். எந்தெந்த சாமான் எங்கே வைக்கணும்னு உன் கைக்கு வாட்டமா தோணுதோ அங்கே வச்சுக்கட்டும்னு தான் விட்டுட்டேன்…” என்றார்.
“இதெல்லாம் எப்ப வாங்கினீங்க? நீங்க ஊரிலிருந்து வந்து அந்த வீட்டில் தானே இருந்தீங்க அ…” முறை சொல்லி அழைக்க முடியாமல் தடுமாறி நிறுத்தினாள்.
“அத்தைன்னு சொல்லுமா…” என்ற செவ்வந்தி, “பொருள் எல்லாம் என்னென்ன வாங்கணும்னு நித்திலன் லிஸ்ட் கேட்டான். நான் போட்டு கொடுக்கவும் அவனே வாங்கி வச்சுட்டான். ஊரில் இருந்து வந்ததும் காம்பவுண்டு வீட்டுக்கு வருவதுக்கு முன்னாடி இங்கே தான் கூட்டிட்டு வந்தான். நான் எல்லாம் சரியா வாங்கி வச்சுருக்கானான்னு பார்த்துட்டு அப்படியே அங்கே வந்துட்டேன்…” என்றார்.
“இந்த வீடு எப்ப வாங்கினார் அத்தை?” என்று கேட்டாள்.
“நீ கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்ன அடுத்த நிமிசம் வீடு தேட ஆரம்பிச்சுட்டான். இரண்டு வாரத்துக்கு முன்னாடி தான் வாங்கினான்…” என்றார்.
‘இந்த இரண்டு மாதத்தில் வீடும் பார்த்து, பொருட்களும் வாங்கி, கல்யாண வேலையும் பார்த்து இத்தனையும் செய்துவிட்டானா?’ என்று வியந்து நினைத்துக் கொண்டாள்.
அதனுடன் இரண்டே மாதத்தில் இவ்வளவும் செய்ய ஆகும் பணச் செலவு? எப்படி அவனால் இவ்வளவு செலவு செய்ய முடிந்தது? என்ற கேள்வி தொக்கி நின்றது.
இவரிடம் கேட்போமா என்று மாமியாரை பார்த்தாள். ஆனால் வந்ததுமே பணம் பற்றிப் பேசுகிறாளே என எதுவும் நினைத்துக் கொள்வாரோ என்று தோன்ற அமைதியாகிவிட்டாள்.
“உன்னைக் கல்யாணம் முடிச்சுட்டு முதல் முதலில் இங்கே தான் கூட்டிட்டு வரணும்னு எல்லாச் சாமானும் வாங்கியும் வச்சுட்டான். நாம மளிகை சாமானை அடுக்கி வச்சுடுவோம். அதுக்குள்ளே ஆளுங்களும் கட்டிலை செட் பண்ணி போட்டுட்டு போய்ருவாங்க…” என்று செவ்வந்தி சொல்ல, அவருடன் அந்த வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒரு மணி நேரம் சென்றிருக்க, “கட்டில் போட்டாச்சு துர்கா. சரியா போட்டுருக்கா, எதுவும் இடம் மாத்தணுமான்னு பார்த்துச் சொல்றீங்களா?” என்று அழைத்தான் நித்திலன்.
“நீங்களே பாருங்களேன்…” என்று துர்கா சொல்ல,
“நீ போய்ப் பாருமா. இங்கே தான் வேலை முடிந்ததே…” என்ற செவ்வந்தி, “இன்னும் என்ன நித்திலா துர்காவை ‘ங்க’ போட்டு பேசிட்டு இருக்க. ஒருமையில் பேசிப் பழகுபா…” என்றார் மகனிடம்.
அன்னைக்குச் சிரிப்பை மட்டும் பதிலாகத் தந்தவன், துர்காவை அழைத்துச் சென்றான்.
படுக்கையறையில் இருந்த கட்டில் நான்கு பேர் கூடப் படுக்கலாம் என்பது போல் பெரிதாக இருந்தது.
‘இவ்வளவு பெரிய கட்டிலா?’ என்பது போல் பார்த்தவள், அப்படியே நின்று விட, “இந்த இடத்தில் இருக்கட்டுமா? தள்ளி போட சொல்லுவோமா?” என்று கேட்டான்.
கட்டில் சுவரை ஒட்டி போடாமல் அந்தப் பக்கமும் ஒரு ஆள் நடப்பது போல் இடைவெளி விட்டுப் போடப்பட்டிருந்தது.
இப்படி இருப்பதே நல்லது என்று தோன்ற, “இப்படியே இருக்கட்டும்…” என்றாள்.
“அப்ப ஓகே, ஆளுங்க வெளியே வெய்ட் பண்றாங்க. அவங்களை அனுப்பி வச்சுட்டு வர்றேன். குட்டிம்மா சிணுங்கினாள்னு மாமா அவள் ரூமுக்கு போனாங்க. அதை என்னன்னு பாருங்க…” என்றவன் வெளியே சென்றான்.
மகள் அறைக்குச் சென்று பார்க்க, வருணா உறங்கிக் கொண்டு தான் இருந்தாள். சபரிநாதன் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்திருந்தார்.
“முழிச்சாளாப்பா?”
“இல்லமா, கட்டில் நகர்த்திய சத்தம் கேட்டதும் மெல்ல சிணுங்கினாள். நான் வந்து தட்டிக் கொடுத்ததும் தூங்கிட்டாள்…” என்ற சபரிநாதன், மகளைக் கனிவுடன் பார்த்தார்.
வெறுமையாக இருந்த நெற்றியில் பெரிய பொட்டாக வைத்து, பூவையே மறந்து போயிருந்த தலையில் நிறையப் பூ வைத்து, கழுத்தில் புதுத் தாலியும், காலில் மெட்டியுமாக மகளை இமை சிமிட்டாமல் பார்த்தார்.
“ஏன்பா அப்படிப் பார்க்கிறீங்க?”
“இப்பத்தான்மா உன்னைப் பார்த்து இந்த அப்பனுக்குச் சந்தோஷமா இருக்கு. எங்கே தனியாவே நின்னு போய்டுவியோன்னு பயந்துட்டே இருந்தேன்…” என்றார் மனமும், குரலும் நெகிழ.
தந்தைக்கு மட்டுமாவது இந்தத் திருமணம் சந்தோஷத்தை தந்திருக்கிறதே என்று நினைத்துக் கொண்டாள்.
உன் தந்தைக்கு மட்டுமா? என்று அவளின் மனம் இடிந்துரைத்தது.
காலையிலிருந்து மலர்ச்சியான முகத்துடன் தன் கழுத்தில் தாலி கட்டி, இப்போது ஓடி ஓடி வீட்டை அரேஞ் செய்து சந்தோஷத்துடன் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும் நித்திலன் முகம் அவளின் மனக்கண்ணில் வந்து போனது.
மானசீகமாகத் தலையை உலுக்கி தந்தையைப் பார்த்தவள், “நாம இந்த வீட்டுக்கு வரப்போறோம்னு உங்களுக்கு முன்னாடியே தெரியுமாப்பா?” என்று கேட்டாள்.
“போன வாரம் தான் மாப்பிள்ளை சொன்னார்மா. அவர் என்னையும் இங்கே தங்க சொன்னார். நான் வேண்டாம் காம்பவுண்டு வீட்டிலேயே இருந்துகிறேன். நீங்க மட்டும் துர்கா, குழந்தையோட இந்த வீட்டில் இருங்கன்னு சொல்லிப் பார்த்தேன்.
ஆனா அவர் கேட்கலை. துர்காவையும், குழந்தையையும் உங்ககிட்ட இருந்து பிரிக்கக் கல்யாணம் செய்யலை. நாம எல்லாம் ஒரே குடும்பமா இருக்கத்தான் இந்தக் கல்யாணம். உங்களைத் தனியா விட மாட்டேன்னு சொல்லிட்டார்…” என்று நித்திலனைப் பற்றிச் சற்று பெருமையாகவே சொன்னார்.
மனதின் ஏதோ ஒரு மூலையில் நித்திலனைப் பற்றித் தானும் பெருமையாக நினைத்தாள் துர்கா.
“சாப்பாடு வந்துருச்சு. சாப்பிடலாமா மாமா?” என்று அறைக்கு வெளியே இருந்து குரல் கொடுத்தான் நித்திலன்.
“பாப்பா இன்னும் தூங்குவாள் போலமா. அவள் எழுந்திருக்கும் முன்னாடி சாப்பிட்டு விடலாம், வா…” என்று மகளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்.
உணவகத்திலிருந்து தருவித்திருந்த உணவை நித்திலனும், செவ்வந்தியும் பிரித்துப் பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.
அவர்களுடன் தானும் உதவினாள் துர்கா.
மதிய வேளை உணவை அவர்கள் முடித்த போது குழந்தை எழுந்து விட்டிருந்தாள். அவளுக்கும் உணவை கொடுத்து விட்டு, வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர்.
“அந்த வீட்டில் இருந்து சாமான் எல்லாம் எடுத்துட்டு வரணுமே? எப்ப போறப்பா?” என்று செவ்வந்தி கேட்க,
“இன்னும் கொஞ்ச நேரத்தில் நானும் துர்காவும் போயிட்டு வரலாம்னு இருக்கோம்மா. என்ன துர்கா போகலாம் தானே?” என்று அவளிடம் கேட்டான்.
“போகலாம்…” என்றாள்.
“குட்டிம்மா இங்கே இருக்கட்டும். மாமாவும், அம்மாவும் பார்த்துப்பாங்க. நாம மட்டும் போயிட்டு வந்திடலாம்…” என்றவனுக்குத் தலையை அசைத்தாள்.
அவர்களின் முடிவின் படி சற்று நேரத்தில் குழந்தையைப் பெரியவர்களிடம் கொடுத்து விட்டு, இருவரும் கிளம்பினர்.
மின்தூக்கி ஏறி கீழே செல்லும் பட்டனை அழுத்தி விட்டு துர்காவின் புறம் திரும்பினான்.
“என் மேல எதுவும் கோபமா?” என்று மெல்ல கேட்டான் நித்திலன்.
“எதுக்கு?” அவனை ஏறிட்டு கேட்டாள்.
“முன்னாடியே சொல்லாம இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன்னு…”
“ஏன் கேட்குறீங்க?”
“இல்ல, இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து உங்க முகம் சரியில்லை. அதான்…”
“கோபம்னு இல்லை. ஆனா இதை எதிர்பார்க்கலை. உங்ககிட்ட நான் ஒன்னு கேட்கணும்…” என்றாள்.
“கேளுங்க…”
“நீங்க என்ன வேலை பார்க்கிறீங்க?” என்று கேட்டவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்தான்.
“நான் கேட்டது லேட் தான். முன்னாடி கேட்க தோணலை…” என்றாள்.
“உங்க மனநிலை புரியுது. நீங்க அதைப் பத்தி எல்லாம் யோசித்துக் கூட இருந்திருக்க மாட்டீங்க…” என்றவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மின்தூக்கி கீழே சென்றது.
“இந்தப் பக்கம் வாங்க…” என்று தரிப்பிடத்தில் வலது பக்கமாக அழைத்துச் சென்றான்.
அங்கே இருந்த ஒரு காரின் கதவை அன்லாக் செய்து திறந்து விட்டவன், “ஏறுங்க. போகும் வழியில் பேசலாம்…” என்றான்.
காரை புரியாமல் பார்த்தவள், “இதானே கோவிலிருந்து நாம இங்கே வந்த கார். இது வாடகை கார் இல்லையா?” என்று கேட்டாள்.
“இல்லை, இது நம்ம சொந்த கார்…” என்றான் அமைதியாக.
‘இது வேறா?’ என்று சட்டென்று மலைத்து தான் போனாள் துர்கா.
அவளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகத் தோன்றியது. அவனை இப்போது ஒரு பயத்துடன் பார்த்தாள்.
“ஏங்க, என்னை அப்படிப் பார்க்காதீங்க. உங்க பார்வை என்னவோ நான் எங்கயோ கொள்ளை அடிச்சுட்டு வந்த மாதிரி இருக்கு…” என்று நித்திலன் மிரண்டு போய்ச் சொன்னான்.
அவனின் மிரண்ட பாவனையைப் பார்த்துப் புன்னகை வரும் போல் இருந்தது.
ஆனாலும் அவனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தவள் அமைதியாகக் காரில் ஏறி அமர்ந்தாள்.
காரை லாவகமாக எடுத்துச் சாலையில் செலுத்த ஆரம்பித்தான் நித்திலன்.
“நீங்க என்ன வேலை பார்க்கிறீங்க?” என்று மீண்டும் கேட்டாள்.
ஒரு தனியார் கம்பெனியின் பெயரை சொன்னவன், “அங்கே மேனேஜரா இருக்கேன்…” என்றான்.
“மேனேஜரா?” நம்ப முடியாமல் கேட்டாள்.
அவன் சொன்ன கம்பெனியின் பெயர் அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். பெயர் சொல்லும் படியான பெரிய கம்பெனி. அதில் மேனேஜர் என்றதும் அவளால் நம்பவே முடியவில்லை.
“நம்புங்க!” என்றான்.
“அப்புறம் ஏன் அந்தச் சாதாரண வீட்டில் இருந்தீங்க? வேலைக்குக் கூடப் பஸ்ஸில் தானே போவீங்க? ஏன் அப்படி?” என்று கேட்டாள்.
“மேனேஜரா இருந்தால் சாதாரண வீட்டில் இருக்கக் கூடாதா? இல்லை பஸ்ஸில் தான் போகக் கூடாதா?” என்று கேட்டான்.
“அப்படின்னு இல்லை. ஆனால்… இப்போ மட்டும் எப்படி வீடு, கார்?”
“அப்போ எனக்கு இருக்க ஒரு இடம் இருந்தால் போதும் என்ற எண்ணம். ஆனால் இப்போ… உங்களையும், குட்டிம்மாவையும் நல்லா பார்த்துக்கணும். அதுக்கு இத்தனை நாளும் சும்மா பேங்கில் கிடந்த பணம் அதோட கொஞ்சம் லோன் எல்லாம் சேர்ந்து இப்ப வீடு, காரா மாறியிருக்கு…” என்றான்.
“வீடு, கார் நான் கேட்கலையே? காம்பவுண்ட் வீட்டுலயே என்னால் எப்பவும் போல் இருந்திருக்க முடியும்…” என்றாள்.
ஏனோ இந்தத் திடீர் வசதி அவளுக்கு ஒட்டாத தன்மையைக் கொடுத்திருந்தது.
அவளை மெல்ல திரும்பிப் பார்த்தவன், “என்னாலும் இருந்திருக்க முடியும். ஆனால் இதுவரை நீங்க அங்கே இருந்து பட்ட கஷ்டங்கள் எல்லாம் போதும். நான் சொல்வது வசதி குறைவு மட்டும் இல்லை…” என்றான்.
அவளுக்குப் புரிந்தது. வித்யாவின் பேச்சு, அவள் கணவனின் செயல், குணாவின் தொந்தரவு அனைத்தையும் சொல்கிறான் என்று.
காம்பவுண்ட் வீடு வர, இருவரும் காரிலிருந்து இறங்கினர்.
கார் சத்தம் கேட்டு, வித்யா தன் வீட்டிலிருந்து எட்டிப் பார்த்தாள். காரில் ஜோடியாக இறங்கிய இருவரையும் பார்த்து வாயைப் பிளந்தாள்.
அவர்களின் திருமணம் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து, நான் சொன்னது நடந்து விட்டது பார். இருவருக்கும் தொடர்பு உண்டு என்று எல்லோரிடமும் பேசிக் கொண்டு இருந்தாள்.
ஆனால் அதற்கு எல்லாம் நித்திலனோ, துர்காவோ எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.
நாட்கள் செல்ல செல்ல அவர்களைப் பற்றிப் பேசுவதே சப்பென்ற விஷயமாகி போக, அடக்கி வாசித்தாள் வித்யா.
ஆனால் இன்று இருவரும் காரில் வருவதைப் பார்த்து அவளின் வயிறு எரிந்தது.
பொறாமையுடன் அவர்களைப் பார்த்தவளை கண்டு கொள்ளாமல் தாங்கள் வந்த வேலையான பொருட்கள் எடுக்கும் வேலையை முடித்து விட்டு, மீதி பெரிய சாமான்களைத் தனியாக வண்டி வைத்து எடுத்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் வீடு சென்று சேர்ந்தனர்.
அன்றைய பகல் பொழுது அந்த வேலையில் ஓட, இரவு உணவை செவ்வந்தி வீட்டிலேயே தயாரித்து வைத்திருக்க, அதை உண்டு விட்டுப் பெரியவர்கள் ஆளுக்கு ஒரு அறையில் படுக்கப் போய் விட, தூங்கிய மகளை மடியில் வைத்துக் கொண்டு சோஃபாவிலேயே அமர்ந்திருந்தாள் துர்கா.
“குட்டிம்மாவை படுக்க வைக்கலையாங்க?” என்று கேட்டுக் கொண்டே படுக்கையறையிலிருந்து வெளியே வந்தான் நித்திலன்.
“ஹான்… எங்கே படுக்க வைக்க?” என்று கேட்டவளை யோசனையுடன் பார்த்தவன்,
“அங்கே தான்” என்று தங்கள் அறையைக் காட்டினான்.
சிந்தனையுடன் அவனைப் பார்த்தாள் துர்கா.
அவன் நண்பர்களாக இருப்போம் என்று சொல்லியிருந்தான் என்பதால் தான் இந்தத் திருமணத்திற்குச் சம்மதம் சொன்னாள் என்பது அவளின் மனம் அறிந்த உண்மை.
ஆனால் இப்போது தாங்கள் தங்க ஒரே அறையை ஏற்பாடு செய்திருக்கிறான். நண்பர்களாக இருப்போம் என்பதை மறந்ததைப் போல் நடந்து கொள்கிறானோ என்று நினைத்தாள்.
அவனுடன் ஒரே அறையில் எப்படி இருக்க முடியும்? என்ற கேள்வி அவளைப் பூதாகரமாக மிரட்டியது.
அவள் முகத்தைச் சில நொடிகள் கூர்ந்து பார்த்தவன், “நான் சொன்ன சொல் மாற மாட்டேன் துர்கா. என்னை நம்பி உள்ளே வரலாம். நண்பனா!” என்றவன் அதற்கு மேல் அங்கே நிற்காமல் அறைக்குள் சென்றுவிட்டான்.
அவனின் வார்த்தைகள் தைரியம் கொடுக்க, குழந்தையுடன் மெல்ல அந்த அறைக்குள் நுழைந்தாள் துர்கா.