18 – ஈடில்லா எனதுயிரே

அத்தியாயம் – 18

ஒரு வாரம் ஆகிற்று. ஆனாலும் இன்னும் அந்த வீட்டு மனிதர்கள் கஸ்தூரியின் இழப்பிலிருந்து மீளவே இல்லை.

அதிலும் பிரபஞ்சன் முற்றிலும் உடைந்து போனான். அவனை யாராலும் தேற்றவே முடியவில்லை.

தேற்ற முதலில் ஆட்களை அருகில் விட வேண்டுமே! யாரையும் அருகில் நெருங்க விடவே இல்லை.

தனக்குள் முடங்கிக் கொண்டான் பிரபஞ்சன்.

மனம் முழுவதும் நிரம்பிக் கிடந்த குற்றவுணர்வு அவனை ஆட்டிப் படைத்தது.

அதில் இருந்து அவனால் மீளவே முடியவில்லை.

தான் கோபம் கொண்டு வீட்டிற்கு வராமல் இருந்தது தான் அன்னையின் உயிரை குடித்து விட்டது என்று நினைத்து நினைத்துத் தவித்துப் போனான்.

கடந்த காலங்கள் மீண்டும் வராதா? அன்னையை மீட்டிருக்க முடியாதா? தன் குற்றவுணர்வை போக்க முடியாதா? என்று துடித்துப் போனான்.

என்ன தவித்தும், என்ன துடித்தும் கடந்த காலம் தான் திரும்புமா? போன உயிரும் தான் மீளுமா?

இரண்டுமே நடக்காத காரியம் அல்லவா?

நடக்க முடியாத ஒன்றை நினைத்து தனக்குள் உழன்று உருகி தான் போனான் பிரபஞ்சன்.

இவனுக்கும் குறையாத குற்றவுணர்வு ராகவர்தினிக்கும் இருந்தது.

கஸ்தூரி தன்னிடம் பேச வேண்டும் என்று சொல்லியும் பேசாமல் தவிர்த்தது அவளைக் குன்ற வைத்துக் கொண்டிருந்தது.

ஆனாலும் இப்போது அந்த வீட்டின் மருமகளாய் அனைத்தையும் எடுத்துச் செய்ய வேண்டியது இருக்க, அவனைப் போல் அவள் தனக்குள் முடங்கிப் போய் விடவில்லை.

மாதவனும், மீராவும் அவளுக்கு உறுதுணையாக இருக்க, துக்கத்திற்கு வந்தவர்களைக் கவனித்து, மாமனாரை தேற்றி, கணவனையும் அவ்வப்போது கவனித்து என்று எல்லாம் பார்த்துக் கொண்டாள்.

ஆம்! கணவனை அவ்வப்போது தான் அவளால் கவனிக்க முடிந்தது.

அவளையும் அவன் நெருங்க விடவில்லை. ஆனாலும் வம்படியாக அவனை அணுகி அவனைச் சிறிதாவது உண்ண வைக்க அவளால் தான் முடிந்தது.

அன்றும் இரவு எட்டு மணிக்கு அப்போது தான் மாமனாரை சாப்பிட வைத்திருந்தாள்.

மாதவனுடன் அமர்ந்திருந்த சுபேசன், “பிரபா சாப்பிட இன்னும் கீழே வரலை. என்னன்னு போய்ப் பாருமா…” என்றார்.

“இதோ போய்ப் பார்க்கிறேன் மாமா…” என்ற ராகவர்தினி மாடிப்படி ஏற ஆரம்பித்தாள்.

“ராகா, இங்கே வா…” என்றழைத்தார் மீரா.

“என்னம்மா?” மீண்டும் கீழே இறங்கி வந்தாள்.

“தட்டில் சாப்பாடு போட்டு எடுத்துட்டு போ. கீழே இறங்கி வரலைனா, அங்கேயே எப்படியாவது சாப்பிட வச்சுடு…” என்றார்.

“சரிம்மா…” என்றவள் தட்டில் சப்பாத்தியையும், சின்னக் கிண்ணத்தில் குருமாவையும் எடுத்து வைத்துக் கொண்டு மாடி ஏறினாள்.

அவன் அறை கதவு திறந்தே கிடக்க, உள்ளே சென்று பார்த்தாள்.

அவன் அறையில் இல்லை.

“அத்தான்…” என்று அழைத்துப் பார்த்தாள்.

எந்தப் பதில் குரலும் வரவில்லை.

“அத்தான்…” என்று அழைத்துக் கொண்டே வெளியே வந்து பார்த்தாள்.

மொட்டை மாடி கதவு திறந்து இருக்க, மேலே இருக்கிறான் போல் என்று நினைத்து உணவுடன் மேலே ஏறிப் பார்த்தாள்.

மொட்டை மாடி இருட்டாக இருக்க, அவன் இருக்கும் அரவமே தெரியவில்லை.

“அத்தான்… இங்கேயா இருக்கீங்க?” என்ற அவளின் கேள்விக்கும் பதில் இல்லை.

ஒருவேளை இங்கே இல்லையோ? என்று நினைத்தாலும் எதற்கும் இருக்கட்டும் என்று கதவருகில் இருந்த விளக்கை போட்டாள்.

வெளிச்சம் மொட்டை மாடி முழுவதும் பரவவில்லை என்றாலும் எதிர்ப்பக்க சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த பிரபஞ்சனின் நிழலுருவை பார்க்க முடிந்தது.

உடனே அங்கே சென்றாள்.

“என்ன அத்தான் இருட்டில் வந்து உட்கார்ந்துட்டீங்க?” என்று கேட்டாள்.

அவனோ அங்கே ஒருத்தி வரவே இல்லை என்பது போல் வான்வெளியை உணர்வற்று வெறித்துக் கொண்டிருந்தான்.

“அத்தான்…” என்று அவன் தோளில் கை வைத்து உலுக்க, மெல்ல அவள் புறம் திரும்பியவன், “என்ன?” என்று கேட்டான்.

“நீங்க சாப்பிட வரவேயில்லை. சாப்பாடு கொண்டு வந்திருக்கேன். சாப்பிடுங்க…” என்று அவனின் அருகில் அமர்ந்து தட்டை அவனிடம் நீட்டினாள்.

“அப்பா சாப்பிட்டாரா?” சாப்பாட்டை வாங்காமலே கேட்டான்.

“இப்பத்தான் சாப்பிட்டார். அப்பா கூட உட்கார்ந்து பேசிட்டு இருக்கார்…” என்றாள்.

“நீங்க எல்லாம் சாப்பிட்டாச்சா?”

“அப்பாவும், அம்மாவும் சாப்பிட்டாச்சு…”

அவள் சொன்ன பதிலில் அவள் இன்னும் சாப்பிடவில்லை என்று கண்டுகொண்டான்.

“நீ இதைச் சாப்பிடு. நான் அப்புறம் சாப்பிடுறேன்…” என்றான்.

“இது நீங்க சாப்பிட எடுத்துட்டு வந்தேன் அத்தான். நான் கீழே போய்ச் சாப்பிட்டுப்பேன்…” என்றாள்.

“ஏன் நான் சாப்பிடாம நீ சாப்பிட மாட்டியா? இது என்ன புதுப் பழக்கம்?” என்று சட்டென்று கோபத்தைக் காட்டினான்.

“புருஷன் சாப்பிட்ட பிறகு தான் பொண்டாட்டி சாப்பிடணும்னு என் பதிபக்தியை காட்ட நான் சாப்பிடாம இருக்கலை அத்தான். நீங்க சாப்பிடாமல் ஒரு ஜீவன் சாப்பிடாது என்ற நினைப்பு உங்களைச் சாப்பிட வைக்கும் என்பதால் தான் உங்களுக்கு முன் நான் சாப்பிடாமல் இருக்கேன் அத்தான்…” என்றாள் அமைதியாக.

அவள் சொன்னது அவன் மனதை பாதித்ததோ? அவளைப் புரியாத பார்வை பார்த்து விட்டு மொட்டை மாடியில் இருந்த குழாயில் கையைக் கழுவிவிட்டு வந்து அமைதியாக உணவை கையில் வாங்கினான்.

“நான் சாப்பிடுறேன். நீயும் போய்ச் சாப்பிடு…” என்றான்.

“நீங்க சாப்பிட்டு முடிங்க அத்தான். நான் அப்புறம் போறேன்…” என்றாள்.

அவள் சாப்பிட வேண்டும் என்பதற்காகவோ என்னவோ வேகமாகவே உண்டு முடித்தான்.

இப்படித்தான் அவனை ஒவ்வொரு முறையும் உணவை உண்ண வைத்துக் கொண்டிருந்தாள்.

அன்னையை இழந்து பரிதவிக்கும் குழந்தையாகிப் போனான் தன் கணவன் எனப் புரிய அவனை வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ராகவர்தினி.

அவன் தலை கோதி நானிருக்கிறேன் உனக்கு எனச் சொல்ல வேண்டும் போல் இருந்தது.

ஆனால் தன் அருகாமையை இப்போது எப்படி எடுத்துக் கொள்வானோ என நினைத்து அமைதியாக அவன் முகம் பார்த்திருந்தாள்.

அவன் சாப்பிட்டு முடித்ததும், ஒரு டம்பளரில் கொண்டு வந்திருந்த தண்ணீரை கொடுத்தாள்.

வாங்கிக் குடித்து விட்டு, குழாயில் கையைக் கழுவிவிட்டு மீண்டும் அதே இடத்தில் வந்து அமர்ந்து கொண்டான்.

“கீழே வரலாமே அத்தான்?” என்று அழைத்துப் பார்த்தாள்.

“நீ போ…” என்றதுடன் பேச்சை முடித்துக் கொண்டான்.

இனி என்ன பேசினாலும் ஓரிரு வார்த்தைக்கு மேல் பேச மாட்டான் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும்.

நீங்கள் வந்தால் தான் நானும் கீழே செல்வேன் என்றும் அவளால் சொல்ல முடியாது.

‘சாப்பிட செல்லாமல் இங்கே ஏன் அமர்ந்திருக்கிறாய்?’ என்பது போல் முறைத்துப் பார்த்து வைப்பான்.

சாப்பிடாமல் அவனருகில் இருந்தால் அடுத்த முறை சாப்பிட பிடிவாதம் பிடிப்பான்.

அதனால் சாப்பிட்டு வருவோம் என்று கீழே சென்றுவிட்டாள்.

அவள் உணவை முடித்து விட்டு திரும்ப மேலே வந்த போது ஒரு மணிநேரம் கடந்திருந்தது.

அந்த ஒரு மணிநேரமும் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை அவன்.

“என்ன அத்தான் இன்னும் இங்கே உட்கார்ந்திருக்கீங்க? கீழே வரலையா?” என்றாள்.

“ம்ப்ச்… சாப்பிட்டன்னா போய்த் தூங்கு…” என்றான் எரிச்சலுடன்.

அவன் ஒன்றுமே சொல்லாதது போல் அவனின் அருகில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தாள்.

“இன்னும் எத்தனை நாளைக்கு அத்தான் இப்படியே இருக்கப் போறீங்க? அத்தை இறந்தது வருத்தம் தான். ஆனால், அதுக்காக இப்படியே இருந்தால் என்ன செய்ய முடியும்? நீங்க ஸ்கூல் போய் ஒரு வாரம் ஆகப்போகுது. மனசை தேத்திக்கோங்க அத்தான். நாம மாமாவையும் பார்க்கணும். அவரும் உடைந்து போய்த் தான் இருக்கார். நீங்க தான் அவருக்கு ஆறுதலாக இருக்கணும்…” என்றாள்.

“அதான் மாமா அப்பா கூட இருக்காரே?” என்றான்.

“அப்பா நாளையில் இருந்து வேலைக்குப் போவதாக இருக்காங்க. அதனால் இன்னைக்கு நைட் அவங்க வீட்டுக்குப் போயிட்டாங்க. இன்னைக்கு மாமா மட்டும் தான் தனியா தூங்குறார்…” என்றாள்.

“அவங்க வீட்டுக்கு போயிட்டாங்களா?” என்று கேட்டவன் பதறி எழுந்தான்.

“இப்பத்தான் அம்மாவும், அப்பாவும் கிளம்பினாங்க…” என்றவள் அவனுடன் எழுந்தாள்.

“மாமா கூட இருக்கார்னு தானே நான் இங்கே வந்து இருந்தேன். என்கிட்ட சொல்லிட்டு போயிருக்கலாமே. அப்பாவை தனியா விட்டுருக்க மாட்டேனே…” என்று படபடவென்று படிகளில் இறங்க ஆரம்பித்தான்.

“உங்ககிட்ட சொல்லிட்டு கிளம்புறோம்னு தான் சொன்னாங்க. நான் தான் நான் சொல்லிக்கிறேன்னு சொன்னேன்…” என்றவளை நின்று திரும்பி பார்த்து முறைத்தான்.

அதில் இருந்த அவனின் கடுமையைக் கண்டு ஒரு நொடி திகைத்து நின்று விட்டாள்.

இவ்வளவு கடுமை இதுவரை அவன் அவளிடம் காட்டியதே இல்லை.

அவளின் திகைப்பை கூட நின்று கவனிக்காமல் கீழே இறங்கி சென்று விட்டான்.

அவனின் தந்தையின் அறைக்குச் சென்றவன், “அப்பா…” என்றழைத்துக் கொண்டே கதவை தட்டினான்.

“என்ன பிரபா?” என்று கதவை திறந்தார்.

“தனியா இருந்துக்குவீங்களாப்பா? நான் கூடத் தங்கட்டுமா?” என்று கேட்ட மகனை விநோதமாகப் பார்த்தார்.

“என்ன கேள்வி இது பிரபா? இனி நான் தனியாகத்தானே இருந்தாகணும். நீ போய்ப் படு…” என்றார்.

“இல்லப்பா. ஒரு வாரமா மாமா கூட இருந்தார். இப்ப நீங்க மட்டும் எப்படித் தனியா?”

“நான் இருந்துக்குவேன் பிரபா. போ… போய்ப் படு. நான் என்ன சின்னக் குழந்தையா பயப்பட?”

“இல்லைப்பா. அம்மா இல்லாம உங்களுக்குக் கஷ்டமா இருக்கும். தனியா தூங்க கஷ்டப்படுவீங்க…”

“கஷ்டம் தான் பிரபா. அதுக்காக என்ன செய்ய முடியும்? நிதர்சனத்தை ஏத்துக்கத்தான் வேணும். எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை…”

“அப்போ கதவை தாழ் போடாம படுங்கப்பா. எதுவும் வேணும்னா உடனே கூப்பிடுங்க. இல்லனா நானும் கீழே உள்ள ரூமில் படுத்துக்கட்டுமா?” என்று கேட்டவனிடம் இருந்த படபடப்பை பார்த்து அவருக்குப் புரிந்து போனது.

அன்னையின் திடீர் இறப்பினால் தனக்கும் எதுவும் ஆகிவிடுமோ என்று மகன் பயப்படுகிறான் என்று நினைத்தவர் மகனை வாஞ்சையுடன் பார்த்தார்.

“நான் கவனமா இருந்துப்பேன் பிரபா. எதுவும் வேணும்னா உடனே உனக்குக் குரல் கொடுக்கிறேன். நீ நிம்மதியா போய்ப் படு…” என்றார்.

“கண்டிப்பா கூப்பிடணும்பா…” சென்று சொல்லிவிட்டு திரும்ப மாடியேறினான்.

அதுவரை அமைதியாக அவன் செய்வதை வேடிக்கை பார்த்தபடியே படியில் நின்றிருந்தாள் ராகவர்தினி.

அவள் படியில் நிற்பதை பார்த்தவன், “நீங்க உங்க அப்பா, அம்மா கூட வீட்டுக்குப் போகலை…” என்று கேட்டவனை உள்ளுக்குள் உண்டான வலியுடன் வெறித்துப் பார்த்தாள்.

இப்போது தான் அவனின் மனைவி. இனி அவன் கூடவே அவளும் இருப்பாள் என்பதையே மறந்து விட்டான் போலும் என்று கசப்பாக நினைத்துக் கொண்டாள்.

“என்ன பதில் சொல்லாமல் நிற்கிற? மாமாவும், அத்தையும் உன்னை ஏன் விட்டுட்டு போனாங்க?” என்று கேட்டவனை அதே வெறுமையுடன் பார்த்தாள்.

“பதில் சொல் ராகா, இப்படிப் பார்த்தால் என்ன அர்த்தம்?” என்று அவன் கேட்கும் போதே பதில் சொல்லாமல் மாடிக்கு ஏறினாள்.

நேராக அவள் அவன் அறைக்குச் செல்ல, தானும் சென்றவன், “இங்கே என்ன பண்ற?” என்று கேட்டான்.

கடந்த ஒரு வாரமாக அன்னையுடன் கீழ் இருந்த அறையிலேயே தங்கிக் கொண்டாள்.

இன்று மீரா கிளம்பும் போதே ‘மேலே சென்று படு’ என்று சொல்லி விட்டுத்தான் சென்றிருந்தார்.

இன்று மட்டும் திடீரென அவள் அவன் அறைக்கு வந்ததும் ஏன் என்ற கேள்வி தான் முதலில் தோன்றியதே தவிர, இனி அவனின் மனைவியாக அவன் அறையில் தான் இருப்பாள் என்பது மட்டும் ஞாபகத்தில் வரவேவில்லை.

மனைவியாகத் தன்னை மறைந்து விட்டானே என்று உள்ளுக்குள் துடித்தாலும் வெளியே ஒன்றும் காட்டி கொள்ளாமல் அவனின் கட்டிலில் சென்று ஒரு ஓரமாகப் படுத்துக் கொண்டாள்.

“ஏய் ராகா, என் கட்டிலில் உட்கார கூடாதுன்னே சொல்லிருக்கேன். இப்ப இங்கே வந்து படுக்கவே செய்துட்ட…” என்று அதட்டினான்.

“உங்க கட்டிலில் உங்களைத் தவிர வேறு யாருக்கு உரிமை இருக்கு அத்தான்?” அவனின் பக்கம் திரும்பி பார்க்காமல் கேள்வி எழுப்பினாள்.

“என் மனைவிக்கு…” என்று பட்டென்று பதில் சொல்லும் போது தான் ராகவர்தினி இப்போது தன் மனைவி. இனி இந்தக் கட்டிலில் அவளுக்கும் இடம் உண்டு என்று மூளையில் உறைக்க, உறைந்து போனான்.

அவன் பதிலை கேட்டதும் திரும்பி தீர்க்கமாக அவனைப் பார்த்தாள் ராகவர்தினி

‘இப்போதாவது நான் ஏன் இங்கே படுத்திருக்கிறேன் என்று உனக்குப் புரிந்ததா?’ என்று அவளின் கண்கள் கேள்வி கேட்டது.

“ஸாரி ராகா, அம்மா இறந்த துக்கத்தில்…” என்றவனால் அடுத்த வார்த்தை சொல்ல முடியவில்லை.

அவள் கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டு உன்னை என் மனைவி என்றே மறந்துவிட்டேன் என்று சொன்னால் அது எவ்வளவு பெரிய அபத்தம்?

தன் தவறு புரிந்து மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டான்.

“எனக்குப் புரியுது அத்தான்…” என்றதுடன் தன் பேச்சை முடித்துக் கொண்டு மீண்டும் அவனுக்கு முதுகை காட்டி திரும்பி படுத்துக் கொண்டாள்.

தயக்கத்துடன் தானும் படுக்கையில் சென்று அமர்ந்தான்.

அவள் அருகில் படுக்க அவனுக்குச் சங்கடமாக இருந்தது. எட்டி நின்றே பழகி விட்டு இப்பொழுது அவளும் தன் படுக்கையில் என்பதை ஏற்றுக் கொள்ள அவனின் மனம் அவ்வளவு சீக்கிரம் இடம் கொடுக்கவில்லை.

ராகவர்தினி தன் மனைவி. இனி அவளுக்கும் இதே படுக்கையில் பங்குண்டு.

இனி அவளை வேரொருத்தியாய் விலக்கி நிறுத்த முடியாது என்று தனக்குத்தானே சொல்லி தன் மனதில் பதிய வைத்துக் கொள்ள ஆரம்பித்தான்.

“நான் இங்கே படுத்திருப்பது உங்களுக்குப் பிடிக்கலைன்னா சொல்லிடுங்க அத்தான். நான் வேற ரூமில் போய்ப் படுத்துக்கிறேன்…”

அவன் தன்னுடன் படுக்கையில் படுக்கத் தயங்குவதை உணர்ந்து திரும்பிப் பார்க்காமல் முனகினாள் ராகவர்தினி.

“ம்ப்ச், அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. பேசாம தூங்கு. நான் இதோ வர்றேன்…” என்றவன் அறைக்கு வெளியே சென்றான்.

மனைவி என்று மனதிற்குள் பதிய வைத்துக் கொள்ள நினைத்தாலும் அவன் மனதில் தற்போது வரை மாமன் மகளாக மட்டுமே இருந்தாள் ராகவர்தினி.

மனைவியாக ஏற்றுக் கொள்ள இன்னும் நாட்கள் ஆகலாம் என்று அவனுக்கே புரிந்தது.

ஆனாலும் இன்று அவள் அருகில் படுக்க மனது முரண்டு பிடித்தது.

அவன் வெளியே செல்லவும், தான் அறையில் இருக்கும் வரை உள்ளே வர மாட்டானோ என்று தோன்ற படுக்கையில் எழுந்து அமர்ந்து வெளியே எட்டிப் பார்த்தாள்.

வெளியே இருந்த வராண்டாவில் ஏதோ சிந்தனையுடன் நடந்து கொண்டிருந்தான்.

தான் எழுந்து சென்று விடுவோமா என்று ராகவர்தினி நினைக்க ஆரம்பித்த போது, தற்செயலாக அறைக்குள் திரும்பிப் பார்த்த பிரபஞ்சன், அவள் அமர்ந்திருப்பதைப் பார்த்து தான் படுக்காமல் தவிர்ப்பது அவளையும் நிம்மதியாகத் தூங்க விடாது என்று நினைத்தவன் மீண்டும் அறைக்குள் வந்தான்.

“இன்னும் தூங்காமல் என்ன செய்ற? தூங்கு…” என்றவன் தான் சாதாரணமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டு இன்னும் அவளுக்கு வருத்தத்தைக் கொடுக்க விரும்பாமல் மெல்ல படுக்கையில் படுத்துக் கொண்டான்.

படுத்து விட்டான் தான். ஆனால் அவனால் இலகுவாக இருக்க முடியவில்லை. இருவருக்கும் இடையே இடைவெளி இருந்தாலும், அவளின் அருகாமை அவனுக்குள் தவிப்பைத்தான் கொடுத்தது.

தவிப்புடன் உறங்காமல் படுக்கையில் புரண்டு கொண்டே படுத்திருந்தான் பிரபஞ்சன்.

அவன் வந்ததும் மீண்டும் படுத்துக் கொண்ட ராகவர்தினி அவனின் தவிப்பை உணரவே செய்தாள்.

ஆனால் ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகப் படுத்திருந்தாள்.

மெல்ல மெல்ல தன் நித்திரையைத் தழுவினான் பிரபஞ்சன்.

அவன் உறங்கியதும் மெல்ல தன் இமைகளைப் பிரித்து அவன் முகம் பார்த்தாள் ராகவர்தினி.

‘நான் இன்னும் மனைவியாக உங்க மனதில் பதியவே இல்லையா அத்தான்? எனக்குப் புரியுது அத்தை இறப்பில் நீங்க நீங்களாகவே இல்லைனு. ஆனாலும் உங்களையே நினைச்சுட்டு இருக்குற இந்த மனசு ஏமாற்றத்தில் தவிக்குது அத்தான்…’

அவன் முகம் பார்த்து தன் மனதோடு புலம்பிக் கொண்டாள் ராகவர்தினி.