18 – வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்!
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 18
“எய்யா, எம் பொறப்பே, தம்பி…” என்று கதறலாக அழைத்த படி தன் தம்பி தாமோதரனை வரவேற்றார் மீனாம்பிகை.
எலும்பும், தோலுமாக ஸ்ரெக்சரில் படுத்திருந்த தாமோதரனை இரண்டு பேர் ஆம்புலன்ஸிலிருந்து கீழே இறக்கினர்.
“இப்படி ஓடா தேஞ்சி போய் வந்திருக்கயே ய்யா…” என்று அழுதார் மீனாம்பிகை.
தான் இந்த ஊருக்கு வருவதற்கு முன் இருந்ததை விட இப்போது இன்னும் தந்தை இளைத்து விட்டதைக் கண்டு சக்தியின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
“அப்பா…” என்று படுத்திருந்தவரின் கையைப் பற்றிக் கொண்டாள்.
தாமோதரன் உடம்பில் வலு இல்லாமல் சோர்வாக இருந்தாலும் அவரின் கண்கள் சொந்த ஊருக்கு வந்துவிட்ட திருப்தியில் சுடர் விட்டு ஜொலித்தன.
“அம்மா, சக்தி… மாமாகிட்ட அப்புறமா பேசலாம். முதலில் அவரை வீட்டுக்குள் கூட்டிட்டு போவோம்…” என்று அவர்களின் அழுகைக்கு அணை போட்டான் சர்வேஸ்வரன்.
அவனின் அருகில் ஆம்புலன்ஸில் தாமோதரனுடன் வந்த பிரேம் நின்றிருந்தான்.
“ஆமா சக்தி, ட்ராவலில் மாமா ரொம்ப டயர்ட் ஆகிட்டார்…” என்றான் பிரேம்.
‘சரி’ என்று அவர்கள் விலகி நின்றதும், தாமோதரன் ஏதோ மெல்லிய குரலில் முணுமுணுத்தார்.
அவர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் அவரின் அருகே குனிந்து கேட்டான் சர்வேஸ்வரன்.
அவர் சொன்னதைக் கேட்டதும் லேசாகத் தயங்கினான். பின் ஸ்ரெக்சரை தூக்கிக் கொண்டிருந்தவர்களின் புறம் திரும்பி விவரத்தை சொல்ல,
“கஷ்டம் சார். அவரால் நிக்க முடியாது…” என்றனர்.
“பரவாயில்லை, நான் பார்த்துக்கிறேன்…” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு, படுத்திருந்தவரை அப்படியே தூக்கி தன்னுடன் அணைவாகப் பிடித்துக் கீழே நிற்க வைத்தான்.
“நானும் பிடிக்கட்டுமா?” என்று பிரேம் வர,
“இல்லை பிரேம், நான் பிடிச்சுக்கிறேன். நீ ஒரு சப்போர்ட்டுக்கு அந்தப் பக்கமா நில்லு…” என்றான்.
அவரின் கையை லேசாக பற்றிய படி நின்று கொண்டான் பிரேம்.
நீண்ட வருடங்களுக்குப் பின் தன் சொந்த ஊர் மண்ணை மிதித்ததும் தாமோதரனின் முகம் பரவசமாக மாறியது.
தந்தையின் பரவசத்தைக் கண்களில் தேங்கிய நீருடன் பார்த்தாள் சக்தி.
இதோ இந்த நொடிக்காகத் தானே அவள் இத்தனை நாட்களும் போராடினாள்.
இந்தப் போராட்டம் கூட இவன் இல்லை என்றால் நிறைவேறி இருக்காது என்று கணவனையும் காதலுடன் பார்த்துக் கொண்டாள்.
காற்றாக இருந்த தாமோதரனை சில நொடிகள் மண்ணில் கால் ஊன்றி நிற்க வைத்த சர்வேஸ்வரன் பின் அவரைத் தூக்கி மீண்டும் படுக்கையில் படுக்க வைத்தான்.
தாமோதரனின் முகத்தில் திருப்தியும், நிம்மதியும் ஒருங்கே இருந்ததைக் கண்டுவிட்டு அவரை வீட்டிற்குள் படுக்க வைக்கச் சொன்னான்.
ஆம்புலன்ஸ் அலுவலர்களும் அவரை வீட்டிற்குள் கொண்டு வந்து அவருக்கென்று ஒதுக்க வைக்கப்பட்டிருந்த அறைக்குள் படுக்க வைத்தனர்.
“கிளம்பும் போது சொல்லுங்க சார், வந்திடுறோம்…” என்று சொல்லி விட்டு ஆம்புலன்ஸ் அலுவலர்கள் கிளம்பினர்.
தாமோதரனுக்குத் துணையாக ஒரு செவிலி வந்திருக்க, அவர் கட்டிலின் அருகில் நின்று கொண்டார்.
“இப்ப எப்படிப்பா இருக்கு?” என்று தந்தையின் அருகே படுக்கையில் அமர்ந்து விசாரித்தாள் சக்தி.
“ம்மா சக்தி…” என்று திணறலாக அழைத்தவர் அவளின் கையைப் பற்றித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டார்.
அவரின் கண்களில் இருந்த சக்தியின் கையில் ஈரம் படிந்தது.
“அப்பா, என்னப்பா இது?” என்று அவளும் கலங்கினாள்.
“உன்னால் தான்டா அப்பா எம்மண்ணை மிதிச்சுயிருக்கேன். பொம்பள புள்ளையா பெத்துட்டோமேன்னு நான் என்னைக்கும் வருத்தப்பட்டது இல்லடா. எப்பவும் சந்தோஷம் தான் பட்டுருக்கேன். இன்னைக்கு அதையும் தாண்டி ரொம்பப் பெருமையா இருக்குடா…” என்று திணறி திணறி சொன்னார்.
“நெசந்தான் தம்பி. அருமையான பிள்ளையாத்தான் சக்தியை வளர்த்து இருக்க. பெத்த அப்பனுக்காக என்னவும் செய்வேன்னு தைகிரியமா நின்னு சாதிச்சுருக்கா…” என்றார் மீனாம்பிகை.
“அக்கா…” என்று தமக்கையின் புறம் திரும்பிய தாமோதரன், “எப்படி இருக்கக்கா?” என்று கேட்டார்.
“எனக்கு என்ன ராசா? குத்துக் கல்லு மாதிரி இருக்கேன். நீ தான் இப்படிப் போயிட்டயேய்யா…” என்று தம்பியைப் பார்த்துக் கலங்கினார்.
“எனக்கு என்னக்கா? நான் வாழ்ந்து முடிஞ்சிட்டேன். எம்பொண்ணும் இப்ப உன் வீட்டுக்கே மருமகளா வந்துட்டா. அருமையான மருமகன் கையில் என் பொண்ணைக் கொடுத்துருக்கேன். என் கடைசி ஆசையா நம்ம ஊர் மண்ணையும் மிதிச்சுட்டேன். இனி என் பொண்டாட்டிக்கிட்ட போக வேண்டியது தான்…” என்றார்.
“அப்படிச் சொல்லாதய்யா தம்பி. பல வருசம் செண்டு நாம பார்த்துருக்கோம். இனியாவது ஒத்துமையா இருக்கலாம். இங்கன கொஞ்ச நாளு இருந்து பாரு. அக்கா உம்ம உடம்பை நல்லா தேத்தி விடுறேன்…” என்றார் வெள்ளந்தியாக.
“அம்மா, மாமாவை இன்னைக்கு மதியம் மதுரை ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணனும்…” என்று அன்னைக்கு ஞாபகப்படுத்தினான் சர்வேஸ்வரன்.
பஞ்சாயத்துத் தீர்ப்பு முடிவானதும் சக்தி பிரேமிற்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல, சந்தோஷத்துடன் அடுத்த வேலைகளை ஆரம்பித்தான் அவன்.
தாமோதரனுக்கு இருந்த மூச்சு திணறல் குறைந்ததும் மருத்துவரின் அனுமதியுடன் அவரை இங்கே அழைத்து வர பிரேம் ஏற்பாடு செய்ய, அதே நேரம் சர்வேஸ்வரன் மதுரை மருத்துவமனையில் பேசி அவரை அங்கே சேர்க்க அனுமதி வாங்கினான்.
முதலில் சென்னையில் இருந்து ஆம்புலன்சில் நேராக மதுரை மருத்துவமனை சென்று, அங்கே சில பரிசோதனைகள் செய்து முடித்ததும் ஊருக்கு வர அனுமதி வாங்கி இங்கே அழைத்து வந்திருந்தனர்.
தாமோதரனின் உடல் பலவீனமாக இருந்ததால் மதியம் வரை மட்டுமே ஊரில் இருக்க மருத்துவர் அனுமதித்திருந்தார்.
அதனால் சர்வேஸ்வரன் அந்த விவரம் சொல்ல, “இன்னும் எம்புட்டு நாளைக்குயா இந்த ஆஸ்பத்திரி வாசம்? பேசாம இங்கனயே இருந்தா நான் என் தம்பியை நல்லா பார்த்துப்பேன்…” என்றார் மீனாம்பிகை.
“மாமா உடல்நிலைக்கு வீட்டில் எல்லாம் இருக்க முடியாதுமா. புரிஞ்சிக்கோங்க…” என்றான்.
மீனாம்பிகையும் வருத்தத்துடன் தலையை ஆட்டினார்.
“அதான் உங்களை எல்லாம் கண்ணு நிறையப் பார்த்துட்டேனே கா. எனக்கு இன்னும் என்ன குறை? நீ கவலைப்படாதேகா…” என்று தமக்கையின் வருத்தம் பார்த்து சொன்னார் தாமோதரன்.
மேலும் சிறிது நேரம் அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஊர் பெரியவர்கள் சிலரும் தாமோதரனை வந்து பார்த்தனர்.
இத்தனை வருடங்களாக ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததற்காக ஊர் சார்ப்பாக வருத்தம் தெரிவித்து விட்டு சென்றனர்.
சற்று நேரத்தில் சென்னையிலிருந்து தேவியும், மோகனும் வர நலவிசாரிப்பும், பழைய கதைகளைப் பேசுவதுமாக நேரம் சென்றது.
சக்தி தந்தையின் கையைப் பற்றிய படி அவரை விட்டு அசையாமல் அமர்ந்திருந்தாள்.
அடிக்கடி அவரின் கையை நீவி விட்டாள். காய்ந்த அவரின் உதடுகளுக்குக் குடிக்க ஏதுவாக ஏதாவது குடுத்தாள்.
தந்தையைப் பரிவுடன் வருடி சென்றது அவளின் பார்வை.
நேரமும் கடந்து செல்ல, தாமோதரன் மருத்துவமனைக்குக் கிளம்பும் நேரமும் வந்தது.
“மாப்பிள்ளை…” என்று மெல்ல அழைத்தார் தாமோதரன்.
“மாமா…” என்று அருகில் வந்தான் சர்வேஸ்வரன்.
“எம்பொண்ணு சின்னப் பிள்ளையில் இருந்தே அம்மா இல்லாத பொண்ணா வளர்ந்துட்டா. இனி எப்ப வேணும்னாலும் அப்பா இல்லாத பிள்ளையாவும் ஆகிடுவா…” என்று அவர் திக்கி திணறி பேச,
“அப்பா…” என்று கதறலாக அழைத்தாள் சக்தி.
“அப்பா உள்ளதை தானே சொல்றேன் சக்திமா. அழாதேடா…” என்றார்.
சக்தி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு கண்களைத் துடைக்க,
“இனி நீங்க தான் என் பொண்ணுக்கு எல்லாம். அவள் இதுவரை ஏதாவது தப்புச் செய்திருந்தாலும் மன்னிச்சுடுங்க. நீங்க இரண்டு வருஷம் முன்னாடி என் வீட்டுக்கு வந்தப்ப உங்களை அவமானப்படுத்தி அனுப்பிட்டேன்.
அதை எல்லாம் மனசில் வச்சுக்காம என்னைச் சென்னை வரை வந்து பார்த்து, சீக்கிரமே இந்த ஊருக்கு அழைச்சுட்டு வர்றேன்னு நீங்க சொன்ன மாதிரி செய்யவும் செய்துட்டீங்க. உங்களோட இந்த நல்ல மனசுக்கு என்ன கைம்மாறு செய்றதுன்னே தெரியலை…” என்று அவர் சொல்ல,
‘என்ன சென்னை சென்று தந்தையைச் சந்தித்தானா? இது எப்போ?’ என்று கணவனை அதிர்ந்து பார்த்தாள் சக்தி.
அவனோ அவளைப் பார்க்காமல் மாமனாரின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்தான்.
உடனே சக்தியின் பார்வை பிரேமின் புறம் திரும்பியது.
பிரேமோ அவஸ்தையாக எச்சில் முழுங்கி அவளைப் பார்த்தான்.
அவனின் முகமே அவனும் இதில் கூட்டாளி என்பதை எடுத்துரைக்க, “கூட்டு களவாணிகளா…” என்று முனங்கி கொண்டாள்.
தாமோதரனின் பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது.
“உங்க மனசில் எங்க மேல ஏதாவது குறை இருந்தாலும் அதை மறந்துடுங்க. சூழ்நிலை நமக்குள் சில காயங்களை ஏற்படுத்தியிருக்கலாம். அதை மனசில் வச்சுக்காம எங்க தவறுகளை மன்னிச்சுடுங்க…” என்று லேசாகக் கை கூப்ப முயன்று கொண்டே சொன்னார்.
“என்ன மாமா இது?” என்று அவரின் கையைப் பிடித்தவன், “யாரும் எந்தத் தப்பும் பண்ணலை மாமா. அவரவருக்கு நியாயம் எனப் பட்டதைச் செய்தோம். அதனால் மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம். சக்தியைப் பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம். அவளை நான் நல்லா பார்த்துப்பேன்…” என்றான் ஆறுதலாக.
தந்தைக்கு ஆறுதல் சொன்னவனையே விடாமல் பார்த்தாள் சக்தி.
ஆனால் அவள் தன்னைப் பார்க்கிறாள் என்று தெரிந்தும் அவளின் புறம் அவன் திரும்பக் கூட இல்லை.
அவனின் பாராமுகம் சக்தியின் முகத்தைச் சுருங்க வைத்தது.
பஞ்சாயத்து முடிந்த இந்த ஒரு வாரமாக அவன் அப்படித்தான் இருக்கிறான்.
அன்று பஞ்சாயத்து முடியும் நேரத்தில் இனி தான் இந்த ஊர் நாட்டாமையாக இருக்க மாட்டேன் என்று சர்வேஸ்வரன் சொல்லவும் ஊரே அதிர்ந்து போனது.
“தம்பி என்ன சொல்றீங்க?” என்று கேட்டுக் கொண்டே மேடையில் இருந்த பெரியவர்கள் எழுந்து வந்தனர்.
“உண்மையைத்தான் அய்யா சொல்றேன். உங்க எல்லாருக்கும் மறைச்சு நான் ஒரு விஷயம் பண்ணிருக்கேன். அதுக்கு என்னதான் நான் சரியான காரணம் சொன்னாலும் என்னோட பதவிக்கு என் செயல் தவறு தான். நாளைக்கே நான் இந்த மேடை ஏறினால் நான் சரியான தீர்ப்பு சொன்னேனா, இல்ல தப்பான தீர்ப்பு சொன்னேனான்னு யாருக்காவது சந்தேகம் வந்தால் அது என் நாட்டாமை பதவிக்கே இழுக்கு…” என்றான்.
“அப்படி எல்லாம் இங்கே யாரும் நினைக்க மாட்டாங்க தம்பி. என்னய்யா நீங்க எல்லாம் என்ன சொல்றீங்க?” என்று ஊர் மக்களைப் பார்த்து கேட்டார்.
“அப்படியெல்லாம் நாங்க யாரும் நினைக்க மாட்டோம் அய்யா…” என்று குரல் கொடுத்தனர்.
“கேட்டீங்க தானே தம்பி? மக்கள் எப்பவும் நாட்டாமை குடும்பத்து மேல மரியாதை வச்சுருக்காங்க. யாரும் உங்க தீர்ப்பை தவறா நினைக்கிற போல நடக்காது தம்பி. அதனால நீங்களும் உங்க குடும்பமும் தான் எப்பவும் போல் நாட்டாமையா இருக்கணும்…” என்றார்.
“நீங்க என்ன தான் சொன்னாலும் என் மனசாட்சிக்கு நான் பதில் சொல்லியாகணும் அய்யா. வேண்டாம் அய்யா. நீங்க எல்லாருமே இனி பஞ்சாயத்தை எடுத்து நடத்துங்க. நான் இனி இந்த ஊர் மக்களில் நானும் ஒருவன். அவ்வளவு தான்…” என்றவன் அடுத்து அவர்கள் பேச வருவதை எதையும் கேட்காமல் கிளம்பிவிட்டான்.
அவ்வளவு நேரம் அவனின் பேச்சில் வாயடைத்து போய் நின்றிருந்த சக்தி, அவன் நடக்க ஆரம்பிக்கவும் வேகமாக அவனின் பின்னால் ஓடினாள்.
“ஒரு நிமிஷம் நில்லுங்க ஈஸ்வர். எதுக்கு இவ்வளவு பெரிய முடிவு? நாட்டாமை பதவி உங்க குடும்பத்துக்கே கிடைச்ச பெருமை ஈஸ்வர். அதை எப்படி உங்களால் சாதாரணமா விட்டுவிட முடியுது?” என்று கேட்டாள்.
அவனோ அவளைத் தீர்க்கமாகப் பார்த்தான்.
“என்ன ஈஸ்வர் எதுக்கு இப்படிப் பார்க்கிறீங்க? பதில் சொல்லுங்க…” என்று கேட்டாள்.
அவனோ அவளின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் வேறொரு கேள்வி கேட்டான்.
“என்னை ஈஸ்வர்னு கூப்பிட உனக்கு இத்தனை நாள் ஆச்சா சக்தியாரே?” என்று கேட்டவன் குரல் கரகரப்புடன் ஒலித்தது.
கணவனின் குரலில் வேறுபாட்டை உணர்ந்தவளுக்கு மனது பிசைந்தது. அவனின் கலக்கமும் புரிந்தது.
ஆம்! கலக்கம் தான். காதல் மட்டுமே கலங்கவும் வைக்கும்! கனியவும் வைக்கும்!
ஊருக்காகத் தன்னை விறைப்பாகக் காட்டிக் கொண்டாலும் அவனின் மனது எப்போதும் மென்மை தான்.
அவளிடம் கேள்வி கேட்டவன் அடுத்த நொடி அங்கே நிற்காமல் விலகி சென்றுவிட்டான்.
‘என்ன கேட்டால் என்ன சொல்லிவிட்டு போகிறான்?’ என்று சக்தி தான் மலைத்து போய் நின்றிருந்தாள்.
அதன் பிறகு வீட்டில் வைத்தும் அவனின் முடிவை பரிசீலிக்கச் சொல்லி பேச முயல, அதற்குச் சர்வேஸ்வரன் இடம் கொடுக்கவே இல்லை.
அதோடு வீட்டில் அவனின் பேச்சும் குறைந்திருந்தது. அவளையும் ஒரு பொருட்டாகக் கூட எடுப்பதில்லை. ஏதாவது தேவைக்கு மட்டுமே பேசினான்.
அதிலும் ஒரு ஒட்டாத தன்மை தான் இருந்தது.
அவளின் தந்தையை இங்கே அழைத்து வர செய்ய வேண்டிய ஏற்பாடும் அவனுக்குச் செய்ய வேண்டியது இருந்ததால் அவனுக்குப் பொறுமையாக நின்று பேச நேரமும் இருக்கவில்லை.
இதோ இன்று தாமோதரனும் வந்து அவரின் ஆசையும் மனம் குளிர நிறைவேறியது.
“நீங்க சென்னைக்குப் போய் அப்பாவை பார்த்தீங்களா ஈஸ்வர்? அன்னைக்கு மதுரை போறதா சொல்லி இரண்டு நாள் வெளியூர் போனீங்களே அப்பவா?” என்று கேட்டாள் சக்தி.
“அதைப் பத்தி பேச இதுவா இடம்? அப்புறம் பேசலாம்…” என்று தட்டிக் கழித்தான் சர்வேஸ்வரன்.
“அப்பாவை டாக்டர்கிட்ட ஒப்படைச்சுட்டோம் ஈஸ்வர். இனி அவங்க சொல்ற விசிட்டர் டயத்தில் தான் பார்க்க முடியும். அதான் இப்ப கேட்கிறேன். சொல்லுங்க…” என்றாள்.
சற்று நேரத்திற்கு முன் தான் ஊரில் இருந்து மதுரை மருத்துவமனைக்குத் தாமோதரனை அழைத்து வந்து சேர்த்திருந்தனர்.
மருத்துவமனை இருக்கையில் தேவி, மோகன், பிரேம், மீனாம்பிகை அனைவரும் அமர்ந்திருக்க, சக்தியும் சர்வேஸ்வரனும் அங்கே சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தனர்.
“ஏன் திடீர்ன்னு அப்பாவை பார்க்க போனீங்க ஈஸ்வர்? என்கிட்ட சொல்ல மாட்டீங்களா?” என்று விடாமல் கேட்டாள்.
“அதைச் சொல்லி என்ன ஆகப்போகுது? இனி நாம பேச வேண்டியது வேற விஷயம் இருக்கே. அதைப் பேசலாமே?” என்றான்.
“வேறயா? என்னது?” சக்தி கேட்க,
“நம்ம கல்யாணம் முடிஞ்ச புதுசுல ஏதோ சொல்லிட்டு இருந்தியே. அதைப் பத்தி என்ன முடிவு பண்ணிருக்க?” என்று கேட்டான்.
“எதைப் பத்தி கேட்குறீங்க?” என்று யோசனையுடன் கேட்டாள்.
“அதான் நீ வந்த வேலை முடிந்ததும் போயிடுவேன்னு சொல்லிட்டே இருப்பியே… அதைத்தான் கேட்கிறேன்…” என்று அவன் கேட்கவும் செய்வதறியாது முழித்தாள்.
அவள் அப்போது இருந்த கோபத்தில் அப்படிச் சொன்னது உண்மை தான். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.
பஞ்சாயத்திற்கு முதல் நாள் அவளின் முடிவின் படி ஒருவேளை தன் செயலால் கணவன் தலைகுனிய நேர விழைந்தால் அதன்பிறகும் அவனின் முகத்தில் முழிக்கத் தனக்குத் தகுதி இல்லை என்றே அவள் அவனை விட்டு சென்று விட வேண்டும் என்று நினைத்து வைத்திருந்தாள்.
இப்போது கணவனே பொறுப்பை எடுத்துக் கொண்டு பஞ்சாயத்தில் பேசியதால் இப்போது தான் என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் விழித்தாள்.
‘இப்போது எதற்கு இதைக் கேட்கிறான். ஒருவேளை தன்னைப் போய்விடு என்று சொல்கிறானோ?’ என்பது போல் கணவனைப் பார்த்தாள்.
அவனும் அவளைத்தான் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“சொல்லு சக்தி, என்ன முடிவு பண்ணிருக்க?” என்று மீண்டும் கேட்டான்.
சக்தி கண்களை மூடி சில நொடிகள் யோசித்தாள்.
அவள் மீண்டும் கண்களைத் திறந்த போது அவளின் முகத்தில் ஒரு முடிவு எடுத்துவிட்ட உறுதி தெரிந்தது.
“உங்களை விட்டு போயிடலாம்னு முடிவு பண்ணிட்டேன் ஈஸ்வர்…” என்றாள் சக்தி.
அவளின் பதிலை கேட்டதும் சர்வேஸ்வரன் இன்னும் இறுகி போனவனாக அவளைப் பார்த்தான்.