18 – நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 18
சத்யாவை வீட்டிற்கு அழைத்து வந்து அரைமணி நேரம் ஆகியிருந்தது.
அறைக்குள் வந்து அமர்ந்த பிறகு தான், தான் சகஜமாகத் தர்மாவுடன் உரையாடிக் கொண்டே வந்தது புரிந்தது.
‘நாலு நாளா என்கிட்ட பேசாம தவிக்க விட்டான். இப்போ கூட நானா பேசின பிறகு தான் பேசினான். உனக்குக் கொஞ்சம் கூடச் சொரணையே இல்லையா சத்யா? இப்படித்தான் நீயே போய் வழிய பேசுவியா?’ என்று தன்னையே திட்டிக் கொண்டாள்.
‘ஆனாலும் பாவம் எவ்வளவு கஷ்டப்பட்டுருக்கான். சிறு குழந்தை ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொண்ணா கத்துக்கிறது போல. திரும்ப டிரைவிங் படிச்சு, தனக்குனு ஒரு அடையாளம் ஏற்படுத்திக்க வந்த சோதனையெல்லாம் தாண்டி வந்து இப்போ தான் ஸ்கூல் ஆரம்பிச்சுருக்கான்.
வாழ்க்கையில் பட்ட கஷ்டத்தையும் தாங்கிக்கிட்டு, முன்னேறி வர அவன் எடுத்த முயற்சிகள் அவனை ஒரு சிறந்தவனாக அவளுக்கு உயர்த்திப் பார்க்க தோன்றியது.
“மை பெஸ்ட் மேன்!” என்று வாய் விட்டு முனங்கி கொண்டாள்.
அவள் ‘மை’ என்று சொன்னதை அவளே உணர்ந்து கொள்ளும் முன், வெளியே ஆரவாரமாகக் கேட்ட சத்தத்தில் ‘என்ன சத்தம்? அப்பாவும், அம்மாவும் இவ்வளவு ஆர்பாட்டமா யாரை இப்படி வரவேற்கிறாங்க?’ என்பது போலக் கவனித்துக் கேட்டாள்.
சில நொடிகள் கவனித்துக் கேட்டதில் வந்தவர்களின் குரலை ஆராய்ந்து வந்திருப்பது யார் என்று அறிந்து கொண்டாள்.
‘தர்மா சாரோட அம்மா, அப்பா வந்திருக்காங்க’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டே மெல்ல எழுந்து வெளியே வந்தாள்.
“வாம்மா சத்யா, எப்படி இருக்க? கை இப்போ பரவாயில்லயா?” என்று விசாரித்தார் சாவித்திரி.
“இப்போ பரவாயில்லை ஆன்ட்டி…” என்று சுவரில் சாய்ந்து நின்றபடி சொன்னாள்.
“இங்கே வாம்மா. ஏன் அங்கயே நின்னுட்ட? இங்கே வந்து உட்கார். நாங்க உன்னைப் பார்க்க தான் வந்தோம்…” என்ற சாவித்திரி தானே எழுந்து சென்று அவளின் கையைப் பிடித்து அழைத்து வந்தவர் கீழே விரிக்கப் பட்டிருந்த பாயில் அமர வைத்து, தானும் அவளின் அருகில் அமர்ந்து கொண்டார்.
நீலகண்டனும், தர்மாவும் அவ்வீட்டில் இருந்த இரண்டு பிளாஸ்டிக் நாற்காலியில் ஆளுக்கு ஒன்றில் அமர்ந்திருக்க, தியாகராஜன் அருகில் இருந்த சுவரில் சாய்ந்து நின்றிருந்தார்.
அவரைத் தான் எழுந்து கொண்டு தர்மா அமர சொல்லியும் அமராமல் போக, வேறு வழியில்லாமல் அமர்ந்திருந்தான்.
கழுத்தோடு மாட்டியிருந்த சத்யாவின் கைக்கட்டை மென்மையாகத் தடவிய சாவித்திரி “உனக்குக் கை உடைஞ்சு ஆப்ரேஷன் நடந்துட்டு இருக்குனு தர்மா சொல்லவும் எங்களுக்குப் பதறி போயிருச்சு. அப்பயே கிளம்பி வர்றோம்னு இவன்கிட்ட சொன்னா இல்லை நீங்க இப்போ வர வேண்டாம்னு சொல்லிட்டான். எப்படியும் இன்னும் நாலு நாளில் மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு இங்க தான் வர போறீங்க. அப்பயே வாங்க. அலைய வேண்டாம்னு சொல்லிட்டான். அதான் உன்னைப் பார்க்க வர லேட் ஆகிருச்சு…” என்றார்.
“பரவாயில்லை ஆன்ட்டி…” என்று சத்யா சொல்ல,
“வீடு காலி பண்ணிட்டு இங்கயே வந்துடீங்களா?” என்று கேட்டார் வசந்தா.
“ஆமா, அதுக்குத் தான் அன்னைக்கே வர முடியலை. வீட்டை காலி பண்ணிட்டோம். சொந்த வீட்டை காலி பண்ணிட்டு வர கஷ்டமா தான் இருந்தது. ஆனா பிள்ளைங்க வாழ்க்கை இந்த ஊரில் இருக்கும் போது நாமும் கொஞ்சம் இறங்கி வந்தா பரவாயில்லைனு மனசை தேத்திக்கிட்டோம். இவராலயும் முன்னாடி மாதிரி முடியலை.
தர்மா டிரைவிங் ஸ்கூலையும் பார்த்துட்டு ஸ்டோரையும் பார்த்துக்கலாம்னு நினைச்சுட்டு இருந்தோம். ஆனா அவன் அனுக்காக இங்கே வரணும்னு முடிவெடுத்தான். அதோட அவனுக்கு டிரைவிங் ஸ்கூலில் தான் ஆர்வம் அதிகமா இருந்தது. அவனுக்குப் பிடிச்சதை மன திருப்தியோட செய்யட்டும்னு நானும் இவரும் முடிவு பண்ணிட்டோம்.
ஸ்டோரை கை மாத்தி விட்டுட்டு, வீட்டையும் வாடகைக்கு விட ஏற்பாடு பண்ணி விட்டுட்டு வந்துட்டோம். இனி என்ன எங்க பிள்ளைங்க வாழ்க்கையைப் பார்த்து எங்க நாளை ஓட்ட வேண்டியது தான். தர்மாவுக்கும் கல்யாணத்தை முடிச்சு வச்சுட்டா இன்னும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்…” என்றார்.
“உங்க இரண்டு பேருக்கும் பெரிய மனசு ஆன்ட்டி. பிள்ளைகளுக்காகச் சொந்த ஊரை காலி பண்ணிட்டு வர்றதெல்லாம் பெரிய விஷயம்…” என்றாள் சத்யா.
“ஒரு கட்டத்தில் பிள்ளைகளை வச்சு தான் நம்ம வாழ்க்கைனு நிர்ணயக்கப்படுதுமா. பெத்த பிள்ளைங்க சந்தோஷமா வாழ்றதை பார்த்தாலே மனசு நிறைஞ்சு போயிடுது. ஆனா இதுவரை என் இரண்டு பிள்ளைகளும் கஷ்டம் மட்டும் பட்டுருக்காங்க. அனுக்கு அவள் மாமியார் மாமனார் மனஸ்தாபத்தினால் பிரச்சனைனா தர்மாவிற்கு அவன் வாழ்க்கையே பிரச்சனையா போயிருச்சு…” என்று வேதனையுடன் சொல்லி பெருமூச்சு விட்டார்.
“வாழ்க்கையே பிரச்சனையா? என்ன ஆன்ட்டி சொல்றீங்க? அவர் கால் அப்படி ஆனதை சொல்றீங்களா?” என்று ஒரு அனுமானத்தில் கேட்டாள்.
“என்னமா உனக்குத் தெரியாதா? உங்க அம்மா இன்னும் சொல்லலையா?” என்று குழப்பத்துடன் கேட்டார் சாவித்திரி.
‘தர்மா சார் பத்தி எங்க அம்மா என்கிட்ட சொல்ல என்ன இருக்கு?’ என்று யோசனை தோன்ற அதை அவரிடம் சட்டென்று கேட்க முடியாமல் அமர்ந்திருந்தாள்.
அவளின் அமைதியை கண்டு சத்யாவின் முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தவர் பின்பு மகனை கேள்வியாகப் பார்த்தார்.
அவ்வளவு நேரமாக அவர்கள் பேசுவதைக் கேட்டபடி அமர்ந்திருந்த தர்மா அன்னையின் கேள்வியில் சத்யாவின் முகத்தைப் பார்த்து விட்டு அன்னை தன்னைப் பார்க்கவும் உதட்டை பிதுக்கி காட்டினான்.
அவன் உதட்டை பிதுக்கவும் ‘என்னங்க இது?’ என்பது போலக் கணவனைப் பார்த்தார்.
அவரோ தியாகராஜனை பார்த்தார். அவர் நீலகண்டனை சங்கடமாகப் பார்த்துவிட்டு மனைவியைப் பார்த்தார்.
வசந்தாவோ கைகளைப் பிசைந்து கொண்டு நின்றவர் இந்த நேரத்தில் மகளிடம் சொல்லி விடுவதே சரி என்று நினைத்தவர் “சத்யா, தர்மா தம்பி தான் மாப்பிள்ளை…” என்றார்.
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதை அறியாத சத்யா அன்னை சொன்னதைக் கேட்டு இன்னும் குழம்பி போனாள்.
“என்னமா, என்ன மாப்பிள்ளை?” சட்டென்று பிடிபடாமல் குழப்பத்துடன் கேட்டாள்.
“அதான் சத்யா, நாங்க சொன்னோமே ஒரு சம்பந்தம் வந்திருக்கு அவங்களா கேட்டாங்கனு. அது… அது… தர்மா தம்பிக்குத் தான்மா…” சிறிது தயங்கினாலும் சொல்ல வேண்டியதை பட்டெனச் சொல்லிவிட்டார்.
“என்…என்ன…?” அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“நாங்க தான்மா உன்னைப் பொண்ணு கேட்டோம். இன்னொரு கல்யாணமே வேண்டாம்னு பிடிவாதம் பிடிச்சுட்டு இருந்த தர்மா தான் உன்னைப் பிடிச்சுருக்குனு சொல்லி, பொண்ணு கேட்க சொன்னான். நாங்களும் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு. ஒரு பதிலும் வரலை. தர்மாகிட்ட கேட்டா இன்னும் கொஞ்ச நாள் பொறுமையா இருக்கச் சொன்னான். அவன் ஏன் அப்படிச் சொன்னான்னு புரியாமல் இருந்தோம். இப்போ தான் தெரியுது. உனக்காகத் தான் சொன்னான்னு…” என்று அவர் பேசியது எல்லாம் ஏதோ வெகு தூரத்தில் இருந்து பேசியது போலக் காதில் விழுந்தது சத்யாவிற்கு.
அவள் தர்மாவின் இன்னொரு கல்யாணம் என்ற வார்த்தையிலேயே உச்ச கட்ட அதிர்ச்சியை வாங்கியவள் போலத் திகைத்திருந்தாள்.
‘அப்போ என்னை இரண்டாந்தாரமா கேட்டது தர்மாவிற்கா?’ என்றதிலேயே அவளின் மனம் வேறு எதுவும் யோசனை செய்ய முடியாமல் அதிலேயே நின்று விட்டது.
அவளின் அதிர்வை வெளிப்படுத்த முடியாமல் போன கண்களுக்குப் பதிலாக அவளின் முகம் வெளிப்படுத்தியது.
நெற்றி சுருங்க, பார்வையில்லா கண்களைத் தாங்கியிருந்த இமைகள் படபடவெனச் சிமிட்ட, அதிர்வை தாங்கியிருந்த முகப் பாவனையுடன் இருந்தாள்.
அந்நிலையிலும் சத்யாவின் முகம் தர்மா இருந்த திசையைப் பார்த்த வண்ணம் இருந்தது.
அவள் அப்படிப் பார்த்த விதம் ‘அப்போ இத்தனை நாளா என்னை ஏமாற்றினாயா?’ என்று கேட்பது போல இருக்க, தர்மாவிற்கு மனதை பிசைந்தது.
‘உன்னை ஏமாற்ற நினைக்கவில்லை பெண்ணே! நீ என்னை ஏற்றுக் கொள்ளக் காத்திருந்தேன்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டதோடு அதை அவளிடமும் சொல்ல நினைத்து, “சத்யா…” என்று மென்மையாக அழைத்தான்.
அவன் குரல் கேட்டதும் பட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அது மட்டுமில்லாமல் சாவித்திரியின் அருகில் இருந்து வேகமாக எழுந்தவள் தன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
அவளின் வேகத்தைப் பார்த்து சாவித்திரி என்னவோ ஏதோ என்று பார்க்க, நீலகண்டன் மகனை புரியாமல் பார்த்தார். அவனோ அவரைப் பார்க்காமல் சத்யாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“சத்யா நில்லு! உன்கிட்ட பேசணும்…” என்று தர்மாவின் குரல் காதில் விழுந்ததும் இன்னும் வேகமாக நடையை எட்டிப் போட்டாள்.
“சத்யா என்ன இது, பேசிட்டு இருக்கும் போதே மரியாதை இல்லாம எழுந்து போற?” என்று வசந்தா அதட்ட, “சத்யா…” என்று கோபமாகத் தியாகராஜனும் அழைக்க, நிற்காமல் நடந்து கொண்டே இருந்தாள் சத்யவேணி.
யாரின் அழைப்பையும் காதில் வாங்காமல் நடந்து கொண்டே இருந்த சத்யா பதட்டத்தில் அறைக்குள் நுழைய முயன்று அருகில் இருந்த சுவரில் பலமாக முட்டிக்கொண்டாள். அதோடு கையும் முன் பக்கம் மடக்கி இருந்ததால் கையிலும் அடி பட, வலித்த கையைப் பிடிப்பதா? விண்ணென்று வலித்த தலையைப் பிடிப்பதா? என்று கூடப் புரியாமல் தடுமாறிப் போனாள்.
அவள் இடித்துக் கொண்டதைப் பார்த்து அங்கிருந்த ஐவருமே பதறி அவளை நோக்கி சென்றனர்.
தர்மா கையில் மாட்டாமல் கழற்றி வைத்திருந்த ஊன்றுகோலை அவசரமாகக் கையில் எடுத்துக்கொண்டு நடந்தான். அவனும் பதட்டப்பட்டதால் அவனின் நடையும் தடுமாறியது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு நடந்தான்.
அவர்கள் அனைவரும் சத்யாவிடம் செல்வதற்கு முன் அப்போது தான் சிறப்பு வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்த கார்த்திகா அக்கா இடித்துக் கொண்டதை பார்த்து விரைந்து ஓடி வந்து பிடித்துச் சத்யாவின் நெற்றியை பரபரவெனத் தேய்த்து விட்டாள்.
அதற்குள் அருகில் வந்திருந்த தர்மா சத்யாவின் கையைத்தான் பிடித்துப் பார்த்தான். ஆனால் அவனை முறைத்த கார்த்திகா அவனின் கையை எடுத்து விட்டுவிட்டு தான் பிடித்துக் கையையும் தடவி விட்டாள்.
“ஷ்ஷ்…. விடு கார்த்தி, கைக்கு என்ன ஆச்சுன்னு பார்க்கணும்…” என்று தர்மா சொல்ல, சத்யாவோ “கார்த்தி என் கைக்கு ஒன்னும் இல்லை. என்னை உள்ளே கூட்டிட்டு போ…!” என்றாள் பிடிவாதமாக.
“சத்யா என்ன பிடிவாதம் இது?” மகளின் செய்கை பிடிக்காமல் தியாகராஜன் அதட்டினார்.
ஆனால் அவருக்குப் பதிலை சொல்லாமல் “கார்த்தி…” என்று தங்கையை அழைத்தாள்.
அவள் சத்யாவின் கையைப் பிடித்துக் கொள்ளப் பிடிவாதமாக உள்ளே சென்று அமர்ந்து கொண்டாள்.
அவளைத் திட்ட வசந்தாவும் பின்னால் போகப் பார்க்க, “சத்யாவை ஒன்னும் சொல்லாதீங்க அத்தை. அவள் கோபம் சரிதானே? என் மேலயும் தப்பு இருக்கு. அவள் எங்க சம்பந்தத்தை என்ன காரணத்துக்காக நிராகரிச்சானு தெரிஞ்ச பிறகும் நான் இத்தனை நாளும் உண்மையைச் சொல்லாம இருந்தது தப்பு. அதான் அவளுக்குக் கோபம் வந்திருச்சு. விடுங்க! இப்போ அவளே ஷாக்கில் இருப்பா. நாம அப்புறம் பேசுவோம்…” என்றான்.
வசந்தா சரி என்பதாகத் தலையசைக்க, தியாகராஜன் “என் பொண்ணுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன் மாப்பிள்ளை, மன்னிச்சுருங்க சம்பந்தி…” என்று தர்மாவிடமும், நீலகண்டனிடமும் மன்னிப்பு கேட்டார்.
“எனக்கு இங்க என்ன நடக்குதுனே புரியலையே? சத்யாவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? தர்மாவுக்குப் பிடிச்சுருக்குன்னு சொன்ன பிறகு தான் நாங்க சம்பந்தமே பேசினோம். ஆனா சத்யாவுக்கு எங்க சம்பந்தத்தில் பிடித்தம் இல்லை போல இருக்கே… இவன்கிட்ட என்ன பொண்ணு வீட்டில் இருந்து இன்னும் பதில் வரலைன்னு கேட்டதுக்கு டிரைவிங் ஸ்கூல் வேலையா இருக்கேன். கொஞ்ச நாள் தள்ளி போறது நல்லது தான்னு சொன்னான். ஆனா இவன்கிட்ட நீங்க ஏற்கனவே சொல்லிட்டீங்க போலயே? இவனும் எங்ககிட்ட ஒன்னும் சொல்லலை. என்ன விவரம்னு முழுசா சொல்லுங்க…” என்றார் நீலகண்டன்.
“அப்பா இதுக்குப் பதிலை நானே சொல்றேன். ஆனா அதை நம்ம வீட்டில் போய்ப் பேசுவோம்…” என்று தந்தையிடம் சொன்ன தர்மா, “மன்னிப்பு எல்லாம் வேண்டாம் மாமா. சத்யா என் மேல உரிமையா கோபப்பட்டிருக்காள். அது எனக்குப் பிடிச்சுருக்கு. அவளுக்கும் என்னைப் பிடித்திருப்பதால் தான் இந்த உரிமையான கோபம். அதனால் வேற எதுவும் போட்டு குழப்பிக்க வேண்டாம். சத்யாகிட்ட ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிட்டு நாங்க கிளம்புறோம்…” என்று தியாகராஜனிடம் சொன்னான்.
“சரிங்க மாப்பிள்ளை, பேசுங்க…” என்று அவர் சொன்னதும் நகர்ந்து கதவின் ஓரம் சென்றான்.
சத்யா சுவற்றில் சாய்ந்து கீழே அமர்ந்திருக்க, கார்த்திகா அவளின் அருகே அமர்ந்து கையைத் தடவி கொடுத்துக் கொண்டிருந்தாள். வெளியில் அவர்கள் பேசிக் கொண்டதை வைத்தே அவன் தான் மாப்பிள்ளை என்று அக்காவிற்குத் தெரிந்து விட்டது என்று புரிந்து கொண்டாள்.
அவன் வாயிலில் நின்று பார்த்ததும், வழக்கம் போல அவள் முறைக்க, அவளின் முறைப்பை எல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் அவன் இல்லை. அவளைப் பார்த்து, “கைல எதுவும் வீக்கம் இருந்தா சொல்லு கார்த்தி. அசால்ட்டா விட்டுடாதே. கண்டுக்காம விட்டா கைக்குப் பெரிய பாதிப்பு வந்திரும்…” என்றான்.
“பார்த்துட்டேன். அப்படி ஒன்னும் இல்லை…” என்று முறைத்துக் கொண்டே முணுமுணுத்தாள்.
“ஓ! சரி…” என்றவன் சத்யாவைப் பார்த்தான்.
கண்ணின் ஓரம் கண்ணீர் சரமாகக் கோர்த்து நிற்க அதைப் பொருட்படுத்தால் எதிரே உள்ள சுவர் பக்கம் பார்வையை வைத்து வெறித்துப் பார்ப்பது போல் அமர்ந்திருந்தாள்.
அவளை அப்படிப் பார்த்து வருந்தியவன், “நான் தான் மாப்பிள்ளைனு நீ தெரிந்து கொண்ட விஷயத்தை மனதில் ஏற்றிக்கொண்டு சீக்கிரம் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வா சத்யா. நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டியிருக்கு…” என்றான்.
“எனக்கு யார் கூடவும் பேச விருப்பமில்லை…” தயங்காமல் பட்டென்று சொன்னாள் சத்யா.
“ஓ! அப்படியா?” என்று ஆச்சரிய குரல் எழுப்பிய தர்மா, குறும்பான பார்வையுடன் சத்யாவைப் பார்த்தவன், அந்தக் குறும்பு குரலிலும் வழிய, “என் கூடப் பேச உனக்கு விருப்பம் வரும் சத்யா. ஏன்னா நீ என்னை விரும்புற. நானும் உன்னை விரும்புறேன். என் நெஞ்சத்தில் நீயும், உன் நெஞ்சத்தில் நானும் விழுந்த பிறகு இனி எழவே முடியாது. எழ விடவும் மாட்டேன். நீ என்னை மறுக்கும் காரணத்தை எல்லாம் தவிடுபொடியாக்கி விட்டு உன்னைக் கரம் பிடிக்கக் காத்திருக்கிறேன் வா…!” என்று சுற்றி உள்ள யாரை பற்றியும் கவலைப்படாமல் தன் காதலை சொல்லிக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.
அவன் பேச்சைக் கேட்டுப் பெரியவர்கள் மட்டும் இல்லாமல், கார்த்திகாவும் “ஆ…” வென வாயை பிளந்து கேட்டுக் கொண்டிருக்க, சத்யாவோ தன் கோபத்தையும் தாண்டி உள்ளுக்குள் கரைந்து கொண்டிருந்தாள்.