18 – ஞாபகம் முழுவதும் நீயே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம்– 18
வினய் இன்னும் கோபம் போகவில்லை என்று சொன்னதும் பவ்யாவின் முகம் சுருங்கிப் போனது.
மகனின் பதிலில் அவன் வருகையில் அதிர்ந்திருந்த ரங்கநாதன் அதை விரட்டி அடித்து விட்டு கோபத்துடன் சிலிர்த்தெழுந்தார்.
“கோபம் போகலையா? அப்போ எப்படித் திடீர் வரவு. எதுவும் காரணமா வந்துருக்கியா?” என்று கேட்டார்.
“ஆமா காரணமா தான் வந்துருக்கேன். என் மகனை பார்க்கணும் போல இருந்துச்சு… பார்க்க வந்தேன்” என்று சொன்னவன் கண்கள் ஓரப் பார்வையாக மனைவியைப் பார்த்துக் கொண்டிருந்தது.
ஆனால் அவனின் முதல் பதிலிலேயே இறுகி போன பவ்யாவின் முகம் அதன் பிறகு தொடர்ந்த எந்தப் பேச்சிலும் மாறவில்லை.
“மகனை மட்டும் தான் பார்க்க வந்தியா? அப்போ உன் மனைவியைப் பார்க்க வரலை. அப்படித் தானே?” என்று ரங்கநாதன் கேட்க… வினய் பதில் பேசாமல் அமைதியாக இருந்தான்.
அதில் அவருக்கு இன்னும் கோபம் வர மருமகள் புறம் திரும்பி “அந்த விசா ஃபார்ம்மை தாமா. இந்த மடையனை பார்க்க நீ உன் கோபம், வைராக்கியம் எல்லாத்தையும் விட்டுட்டு கிளம்ப முடிவெடுத்த. ஆனா பார்! சார் அவரு மகனை மட்டும் பார்க்க வந்திருக்கிறார்” என்று ஆத்திரமாக உரைத்தவர் பவ்யாவின் கையில் இருந்த காகிதத்தைப் பறித்துக் கிழித்துப் போட்டார்.
ஆம்! பவ்யா தன் கோப தாபங்களை எல்லாம் விட்டுவிட்டு கணவன் கூடவே இருந்துவிட முடிவெடுத்து விசாவிற்கு விண்ணப்பிக்க முடிவெடுத்திருந்தாள். கூடவே தன் வேலையையும் விட்டிருந்தாள்.
நவிதா மூலம் தன் அத்தை செய்த காரியத்தாலும், கிரணிடம் மாட்டி தான் பட்ட மரண வலியாலும், மகன் தந்தையைத் தேட ஆரம்பித்து விட்டதிலும் தான் தனியாக இருந்து அப்படி என்ன சாதித்து விட்டோம்?
தன் அத்தையின் மூலமாகவே தான் வாழாவெட்டி என்ற பெயர் வாங்கியது மட்டும் தான் மிச்சம். அதுவும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போன தந்தையின் மீதான மகனின் பாசம் அவளைச் சிறிது நாட்களாவே அசைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
அதனால் தன் தனிப்பட்ட வெளிநாட்டு வெறுப்பை விலக்கி வைத்துவிட்டு கணவனிடமே செல்ல முடிவெடுத்து அதற்கான ஏற்பாட்டை செய்ய ஆரம்பித்தாள்.
ஆனால் அதை ஆரம்பிக்கும் முன் ரங்கநாதனை சம்மதிக்க வைக்கத்தான் படாது பாடு பட வேண்டியிருந்தது.
“இன்னும் கொஞ்ச நாள் பொறுமையா இருமா. அவன் எப்படியும் வந்துருவான்” மருமகளை நிறுத்த பார்த்தார். அவருக்குக் கிடைத்த சில தகவல்கள் மகன் விரைவில் வந்துவிடுவான் என்ற உறுதியை தந்திருந்தது. அதனால் தான் மகனே வரும் நிலையில் மருமகள் செல்ல வேண்டாம் என்று நினைத்தார்.
ஆனால் அவரிடம் இத்தனை நாளும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்த கிரணின் விஷயத்தைச் சொல்லி, “என்னால இன்னும் கிரண் போல ஆளுங்ககிட்ட இருந்து தப்பிக்க முடியும்னு தோணலை மாமா. அந்த ஒரு சம்பவமே இன்னும் என் உயிர் போற மாதிரி வலிக்குது. என் புருஷன் கூட நான் ஒழுங்கா வாழ்ந்திருந்தா கண்டவனும் என் மேல கைவைக்கத் துணிவானா?” என்று கேட்டு அவள் கதறி அழ, விஷயம் கேள்விப்பட்ட ரங்கநாதன் துடித்தே போனார்.
“என்கிட்ட ஏன்மா முன்னயே சொல்லலை?” மருமகளைக் கடிந்து கொண்டார்.
“ஏன் மாமா சொல்லி நீங்களும் வேதனை படவா? என் வருத்தம் என்னோட போகட்டும்னு நினைச்சேன். அதோட உங்க வேலை பிசியில் இதை எல்லாம் சொன்னா உங்க ஹெல்த் தான் பாதிக்கப் படும்னு நினைச்சேன். நீங்களே புது ஆர்டர் வந்ததில் இருந்து தூக்கம் கூட இல்லாம உழைச்சுட்டு இருக்கீங்க” என்று பவ்யா அவரைச் சமாளிக்கப் பார்த்தாள்.
“வேலை எப்பவும் இருக்கிறது தான்மா. அதுக்காக இவ்வளவு பெரிய விஷயத்தை மறைக்கிறதா?” என்று இன்னும் தான் கோபம் கொண்டார்.
அதற்கு மேலும் ஏதேதோ பேசி ஒரு வழியாகச் சமாளித்து, வினய்யிடம் தான் போவதற்கான காரணத்தை விளக்கி ரங்கநாதனிடம் சம்மதம் வாங்கியிருந்தாள்.
தான் கணவனிடம் செல்லவிருந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அவனே வந்துவிடவும் தான் காலையில் உள்ளுக்குள் திக்குமுக்காடி போனாள்.
அவனிடம் தன் கோபம் மறந்து சாதாரணமாகப் பேச முயன்றாள்.
விசா வாங்க தானும் உதவுதாகச் சொல்லித்தான் தன் வேலைகளை ஒதுங்க வைத்து விட்டு வந்திருந்தார். வந்த இடத்தில் மகனை பார்க்கவும், அவருக்கு அதிர்ச்சியுடன், மனைவி, மகனை தேடி வந்துவிட்டானே தன் மகன் என்று சந்தோஷமும் உண்டான நேரத்தில், அவனின் பேச்சு அவரைக் கோபம் கொள்ள வைத்தது.
“நீ திருந்தவே மாட்டடா. இப்போ நீ உன் மகனை மட்டும் பார்த்துட்டு போக வந்திருந்தாலும் சரி. போகும் போது உன் மனைவியையும் கூட்டிட்டு போய்ரு. சண்டை போடுறதோ, சமாதானம் ஆகுறதோ எதுவா இருந்தாலும், சேர்ந்து இருந்தே செய்ங்க. என் மருமகளைப் பாதுகாக்க கூடத் துப்பில்லாத நான் எல்லாம் இனியும் உங்க வாழ்க்கையில் தலையிட அருகதை இல்லாதவன்” என்று ரங்கநாதன் பேசிக் கொண்டிருக்கும் போதே,
“என்னப்பா சொல்றிங்க…? பாதுகாக்க முடியலையா? என்ன நடந்துச்சு?” என்று பதறி போய்க் கேட்டான். அவனுக்கு ஷீலு ஒருநாள் சொன்ன தனியாக இருக்கும் பெண்ணின் பாதுகாப்பற்ற நிலை மனதிற்குள் சுழல பதறி தான் போனான்.
தந்தையிடம் கேள்வியைக் கேட்டு விட்டு மனைவியின் முகத்தைப் பார்த்தான். அவள் முகம் உணர்ச்சிகளைத் துடைத்தது போல நிர்மலமாக இருந்தது.
“என்னப்பான்னு இப்ப பதறி என்ன பண்ண? புருஷன் நீ தடிமாடு மாதிரி இருந்தும், எவனோ ஒருத்தன் வீட்டுக்குள்ள நுழைஞ்சு என் கூட வாழ வான்னு என் மருமகளைக் கூப்பிட்டுருக்கான்” என்று அவர் சொல்லி முடித்த நொடியில் “என்ன?” என்று துடித்து எழுந்து நின்றான்.
அவனின் கண்கள் கோபத்தில் சிவந்து போனது. அவன் கையில் இருந்த கவின் தந்தையின் கோபத்தைக் கண்டு பயந்து அழ ஆரம்பித்து விட்டான்.
அவன் அழுகையைக் கண்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்ட வினய் “சாரிடா குட்டி. அப்பா கோபப்படலை. நீ அழாதே…!” என்று மகனை சமாதானப்படுத்தினான்.
தன் மகன் அவன் மகனை சமாதானப் படுத்தும் அழகை இமைக்காமல் பார்த்தார் ரங்கநாதன்.
வினய்யின் சமாதானத்திற்குக் கட்டுப்படாத கவின் ஏற்கனவே தன்னிடம் வர சொல்லி அமைதியாகக் கை நீட்டிக் கொண்டிருந்த அன்னையிடம் தாவினான்.
மகனை வாங்கித் தோளில் போட்டு தட்டிக் கொடுத்து “என் செல்ல குட்டி இதுக்கு எல்லாம் பயந்து அழுவாங்களா? என் குட்டியப்பா தான் ரொம்பச் சமத்தாச்சே” என்று கவினிடம் பேசிக் கொண்டே அறைக்குள் சென்று விட்டாள்.
அவர்கள் உள்ளே சென்றதும் “யாருப்பா அவன்? அவனைச் சும்மாவா விட்டீங்க?” என்று கொதித்தெழுந்தான்.
“நான் எங்க அவனைப் பார்த்தேன்? பார்த்திருந்தா சும்மாவா விட்டுருப்பேன்…” என்று அவர் சொல்ல…
“என்னப்பா? நீங்களே பார்க்கலையா?” என்று அவன் அதிர்ந்து கேட்டான்.
“ஆமா இப்ப வந்து நிதானமா என்னைக் கேள்வி கேட்டுக் குடை. திமிர் பிடிச்ச புருஷனும், வேலை மட்டும் முக்கியம்னு சுத்தின மாமனார்கிட்டயும் எப்படி வந்து அவ மனசு விட்டு எதுவும் சொல்லுவா? வீட்டுக்கு வந்த மருமகள் அப்படி மனசு விட்டு எதுவும் சொல்ற நிலையிலா நீயும், நானும் நடந்துக்கிட்டோம்?” என்று அவர் குற்றயுணர்ச்சியுடன் சொல்ல, வினய் கேள்வியாய் நோக்கினான்.
“நான் கொஞ்ச நாளா புது ஆர்டர்ல பிஸியா இருந்துட்டேன். இங்க சரியா வந்து போக முடியலை. அதைச் சாதகமா எடுத்துக்கிட்டு பக்கத்துப் பிளாட் காரன் அடாவடியா உள்ள நுழைஞ்சு பிளாக் மெயில் பண்ணிருக்கான். அப்ப நான் நார்த் சைட் போயிருந்தேன்” என்று அன்று நடந்ததை எல்லாம் பவ்யாவின் மூலம் அறிந்ததை எல்லாம் சொன்னவர்,
“அப்படி ஒரு இக்கட்டான நிலைமையிலும் என் மருமக எனக்கு ஒரு தகவல் சொல்லலை. யாரோ ஒரு போலீஸ்காரன் மூலமா பிரச்சனையில் இருந்து வெளியே வந்துருக்கா. அவளோட மானத்துக்கே ஆபத்து வந்த நிலையில், அவளைக் காப்பாத்த புருஷன்காரன் நீயும் இல்லை. தந்தை ஸ்தானத்தில் இருந்த நானும் இல்லை. யாரோ மூணாவது மனுஷன் வந்து நம்ம வீட்டு பிரச்சனையைத் தீர்த்து வச்சுருக்கான்னா ஆம்பளைங்கனு நீயும், நானும் இருந்து என்ன பண்ண?” என்று ரங்கநாதன் வேதனையுடன் கேட்டார்.
உள்ளே இருந்த பவ்யாவிற்கு அவரின் வேதனை மனதை அரித்தது. விஷயம் தெரிந்த அன்றும் இது போல வேதனைப்பட்டவரை சமாதானபடுத்தி வைத்திருந்தாள். இன்று மகனிடமும் சொல்லி புலம்பவும் அவரைத் தன் விஷயம் மிகவும் வேதனை படுத்தி விட்டது என்று புரிந்தது.
வினய் அப்படியே இடிந்தது போல அமர்ந்து விட்டான். அவனால் கேள்விப்பட்ட விஷயத்தை ஜீரணிக்கவே முடியவில்லை. ‘தந்தை கேட்டது சரி தானே? புருஷன்னு நான் இருந்து என்ன பண்ண? கட்டின மனைவியை வச்சு ஒழுங்கா காப்பாத்தவும் இல்லை. அவள் ஒரு ஆபத்தில் இருக்கும் போது அதைத் தீர்க்கவும் முடியலை’ என்று மனதில் அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, சட்டெனச் சத்தம் கேட்டு தந்தையை நிமிர்ந்து பார்த்தான்.
ரங்கநாதன் தான் தன் தலையில் தானே அடித்துக் கொண்டிருந்தார். விரைந்து அவர் கையைப் பிடித்துத் தடுத்தான்.
“விடுடா என்னை! எல்லாம் என்னால் தான். நானெல்லாம் பெரிய மனுஷனே இல்லை” என்று அவர் திரும்பவும் கையை விடுவித்துக் கொண்டு திரும்பவும் அடிக்கப் போக “அப்பா ப்ளீஸ்…” என்று இறைஞ்சுதலாகச் சொல்லி மீண்டும் அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.
கையைப் பிடித்துக் கொண்டாலும் அவரின் ஆதங்கத்தை நிறுத்தாமல் கொட்ட ஆரம்பித்தார்.
“என் மகனையும், கம்பெனியையும், என்னோட பிறந்த மண்ணையும் பிரிய மனம் இல்லாம நான் தான் உங்க ரெண்டு பேருக்கிட்டேயும், மாத்தி மாத்தி பேசி உண்மையை மறைச்சுக் கல்யாணம் பண்ணி வச்சுட்டேன். அது தான் நான் செய்த தப்பு. பெரிய தப்பு. நான் சரியான சுயநலம் பிடிச்சவன். ஒரு பொண்ணோட வாழ்க்கையே என்னால போயிருச்சு.
என் மகனை மனசு மாற வச்சு இங்க தங்க வைக்க முடியாம ஏதேதோ செய்து இப்போ இரண்டு பேர் வாழ்க்கையோட இப்ப என் பேரனும் கஷ்டப்படுற நிலைமைக்குக் கொண்டு வந்துட்டேன்.
இதோ இப்ப பிள்ளையை மட்டும் பார்க்க ஆசை பட்டு வந்துட்ட. ஆனா உனக்கு மனைவியை அவ கர்ப்பமா இருக்கும் போது கூடப் பார்க்க வர முடியாம போனதுக்குக் காரணம் யாரு நான் தானே? எல்லாம் என் சுயநலம் தான்” என்று எல்லாம் என்னால் தான் என்றவர் தன் கையை மகனிடம் இருந்து விடுவித்துக் கொண்டவர்,
நொடியில் தன் இருகரத்தையும் கூப்பி “உன்னைக் கும்பிட்டுக் கேட்கிறேன். இனி எங்கே போனாலும் உன் மனைவி, பிள்ளைகளையும் கூட்டிட்டு போயிரு. என்னால எப்போ என் மருமகளைப் பாதுகாக்க முடியாம போயிருச்சோ, இனியும் உங்க வாழ்க்கையில் தலையிட தான் தகுதி இல்லாதவன்” என்று சொல்ல, அவர் கையெடுத்து கும்பிட்டதிலேயே துடித்துப் போனான் வினய்.
“அப்பா என்ன காரியம் செய்றீங்க? கையைக் கீழே போடுங்க” என்றான்.
அதற்குள் பேச்சுப் போன திசையில் வெளியே வந்த பவ்யா “மாமா என்ன இதெல்லாம் நீங்க எதுக்கும் காரணம் இல்லை. எங்க வாழ்க்கையை எங்களுக்கு சரியா அமைச்சுக்கத் தெரியலை. நீங்க பண்ணது சுயநலம் இல்லை. அது ஒரு தகப்பனின் ஆசை. அதைத் தப்பு சொல்ல முடியாது. நான் உங்களை ஆபிஸ்ல கம்பீரமா பார்த்து வியந்த மனுஷன். நீங்க இப்படிக் கையெடுத்துக் கும்பிடுறது நல்லாவா இருக்கு?” என்று அவரைக் கடிந்து கொண்டே அவரைச் சமாதானப் படுத்த முயன்றாள்.
“ப்ச்ச்…! என்னத்தைமா கம்பீர மனுஷன்? அது எல்லாம் ஆபிஸ்ல போடுற வேஷம்மா. ஊரையே ஆண்டாலும் வீட்டுக்குள்ள மட்டும் தான்மா அவன் உணர்வுள்ள மனுஷன். அங்கேயும் முகமூடி போட்டுகிட்டே திரிய முடியாது. மனசுக்குள்ள எத்தனை கவலை இருந்தாலும் அதை ஆபீஸ்ல அணு அளவும் காட்டாமல் அங்க இருக்குற மிஷின் கூட நாமளும் ஒரு மிஷினா இருந்து தான் ஆகணும். வீட்டிலும் அப்படியே இருக்க நான் அந்த மிஷின் இல்லையே?
இப்ப தகப்பனா நான் பேசி தான் ஆகணும். என் ஆசைக்கு உங்க வாழ்க்கை பாழானது போதும். இனியாவது உங்க வாழ்க்கையை நீங்களே நேரா பார்த்துக்கோங்க” என்றவர் கண்ணை மூடி அப்படியே சாய்ந்து அமர்ந்து விட்டார்.
அவரின் பேச்சுக்குப் பதில் சொல்ல கூட முடியாமல் வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தான் வினய்.
பவ்யாவிற்கும் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள்.
நான்கு வருட பிரச்சனையை ஒரே நாளில் தீர்க்க முடியுமா என்ன? அது என்ன கணக்கு வழக்கா ஒரே நாளில் கஷ்டப்பட்டுச் சரி பண்ணுவதற்கு.
மனிதர்களின் மன உணர்வுகள்! அவரவர் உணர்வுகள் அவரவருக்குச் சொந்தம்.
அதே போல் ஒருவர் பேசும் கருத்து அவருக்குச் சரியாகத் தெரிவது, மற்றவர்களுக்கும் சரியாகத் தான் தெரிய வேண்டும் என்று நினைக்கக் கண்டிப்பாக முடியாது.
ஒரு வார்த்தை கொல்லும் ஒரு வார்த்தை வெல்லும் என்பது போல ஒரு வார்த்தை ஒருவரின் வாழ்க்கையே புரட்டி போடும் வல்லமை உள்ளது.
இங்கே பவ்யா திருமணத்திற்கு முன் வெளிநாடு வர சம்மதித்து விட்டாள் என்றும், மகன் படிப்பை முடித்து இங்கே தான் தங்கப் போகிறான் என்று மாற்றி மாற்றி ரங்கநாதன் சொன்ன ‘பொய்’ தம்பதிகளுக்கு இடையே பிரச்சனைகளைக் கொண்டு வர, இப்போது ஆளுக்கு ஒரு மனநிலையில் சிக்கி தவித்தனர்.
ரங்கநாதன் குற்றவுணர்வில் சிக்கி தவிக்க, அந்தக் குற்றவுணர்வில் தான் மருமகளை எவ்வளவு சிக்கிரம் முடியுமோ அவ்வளவு சிக்கிரம் மகனிடம் அனுப்ப முடிவு செய்து அதற்கான வேலையில் இறங்கினார்.
வினய்யும், பவ்யாவும் என்ன மனநிலையில் இப்போது இருக்கிறார்கள் என்று கண்டறியாதளவு தங்களுக்குள் இறுகி போய் இருந்தார்கள்.
அங்கே எந்த மனபாரமும் இல்லாமல் இருந்தது கவின் மட்டுமே.
அவன் தான் இப்போது தாத்தா கோபமாக இருக்கிறாரா என்பது போல அன்னையிடம் இருந்து அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
பின்பு அன்னையை இறக்கி விடச் சொன்னவன் தளிர் நடை போட்டு தன் தாத்தாவிடம் சென்று காலுக்கருகில் நின்றவன் சில நொடிகள் அவரின் முகத்தை, முகத்தைப் பார்த்தான்.
பின்பு அவரின் காலில் தலையை வைத்துப் படுப்பது போலச் சாய்ந்து கொண்டான்.
அவனின் ஷ்பரிசத்தில் ரங்கநாதன் கண்ணைத் திறந்து பேரன் தன் மடியில் இருந்த நிலையைப் பார்த்தவர் நெகிழ்ந்து போனார்.
“என் ராஜா குட்டி. வாடா செல்லம்…. தாத்தா உன்னை இவ்வளவு நேரமும் பார்க்கவே இல்லையே” என்று பேரனை தூக்கி கொஞ்ச ஆரம்பித்தார்.
எவ்வளவு மன பாரம் இருந்தாலும் குழந்தைகளின் அருகில் குறைந்து விடும் என்பது போல, பேரனை பார்த்து ரங்கநாதன் அவ்வளவு நேரம் வேதனையுடன் இருந்தவர் சிறிது இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
வினய்யும், பவ்யாவும் அவ்வளவு நேரமும் தாத்தாவையும், பேரனையும் தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இப்போது வினய் மனைவியின் புறம் திரும்பியவன் திடுக்கிட்டான்.
பவ்யாவின் முகத்தில் காலையில் இருந்த தெளிவு, நிம்மதி அனைத்தும் தொலைந்து போய் உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன் இறுக்கமாக இருந்தது.
வினய் தன்னைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று உணர்ந்தும் பவ்யா அசையாமல் அப்படியே நின்றிருந்தாள்.
அதனைக் கண்ட வினய்யின் கண்கள் யோசனையுடன் சுருங்கியது.