18 – சிந்தையில் பதிந்த சித்திரமே

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 18

காரின் பின்னிருக்கையில் தலை சாய்த்து கண்மூடி அமர்ந்திருந்தாள் நயனிகா.

அவளின் அருகில் அபிராமி அமர்ந்திருக்க, காரை ஞானசேகரன் ஓட்டிக் கொண்டிருந்தார்.

கதிர்நிலவன் மருத்துவமனையில் பேசியதைக் கேட்டு அவர் கடுகடுத்த முகத்துடன் வர, அவரின் மகளோ இனிமையாக அவனின் வார்த்தைகளை அசைப்போட்டுக் கொண்டு வந்தாள்.

“மனசுக்குப் பிடிச்சவங்களை விலக்கி வைப்பது எவ்வளவு கொடுமையான வலின்னு வார்த்தைகளில் மட்டுமே விளக்கி சொல்ல முடியாது நயனிமா…” என்றவன் குரல் மென்மையாக ஒலித்தாலும் அவனின் கண்கள் மிகுந்த வலியை பிரதிபலித்தன.

அவனை வேதனையுடன் பார்த்தவளின் கேசத்தை மெல்ல ஒதுக்கிவிட்டான்.

ஞானசேகரனும், அபிராமியும் அங்கே தான் இருக்கிறார்கள் என்பதையே அவன் பொருட்படுத்தவில்லை.

“உங்க அப்பா என்னை மிரட்டியதும், மிரண்டு போக நான் ஒன்னும் சின்னக் குழந்தை இல்லையே? இன்னொரு கை இல்லனா என்னால் வாழ முடியாதா என்ன? ஒரு கையோட வாழ்ந்து பழகியவன் தான் நான். இரண்டு கை இல்லனாலும் என்னால் வாழ முடியும். அப்படி இருந்தும் நான் ஏன் விலகிப் போனேன் தெரியுமா?” என்று கேட்டான்.

அவள் கேள்வியாகப் பார்க்க, “உனக்காகத் தான்! உனக்காக மட்டும் தான்!” என்றான் அழுத்தமாக.

“எனக்காகவா?” என்று திகைத்துக் கேட்டவள், “ஆனா எனக்குத் தேவை நீங்க தானே? உங்க விலகல் இல்லையே?” என்று கேட்டாள் நயனிகா.

“உனக்குத் தேவை நான் தான். ஆனாலும்…” என்று இழுத்தவன், “இதுக்கு நான் தனியா விளக்கம் சொல்றேன் நயனிமா. ஹாஸ்பிட்டலில் வச்சு இதைப் பேச வேண்டாம். உன்கிட்ட நான் நிறையப் பேசணும், சொல்லணும். ஆனா இந்தச் சூழ்நிலையில் இல்லை. இப்ப கிளம்பலாம்…” என்றான்.

‘என்னவாக இருக்கும்?’ என்ற கேள்வியுடன் வீட்டிற்குக் கிளம்பினாள் நயனிகா.

வீட்டிற்குச் சென்றதும் நயனிகா எதிர்வீட்டைப் பார்க்க, அவளுக்கு முன் வந்திருந்த கதிர்நிலவன் கதவைத் திறந்து வைத்துச் சோஃபாவில் அமர்ந்திருந்தான்.

அவளைப் பார்த்ததும் எழுந்து வந்தவன், மென்மையாகச் சிரித்து ‘போ’ என்பது போல் தலையை அசைத்தான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“இன்னும் என்னம்மா இங்கயே நிற்கிற? உள்ளே போ…” என்று பின்னால் வந்த ஞானசேகரன் எரிச்சலுடன் சொல்ல,

“ஒரு நிமிஷம்…” என்று அவரை நிறுத்தினான் கதிர்நிலவன்.

“நான் இன்னும் தாலின்னு ஒன்னு கட்டலை என்பதால் மட்டுமே இப்ப நயனிகா உங்க வீட்டுக்குள் வர்றாள். ஆனாலும் மனசார நாங்க இப்ப கணவன் மனைவி தான். இப்ப உங்க வீட்டுக்குள் வருவது என் மனைவி நயனிகா.

அவளை எந்த விதத்திலாவது மைண்ட் டார்ச்சர் செய்தாலோ, அவள் திரும்ப விபரீத முடிவு எடுக்கும் நிலைக்குத் தள்ளி விட்டாலோ அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்…” என்றான் கடுமையாக.

“டேய், என்னடா ஓவரா பேசுற? அப்படி என்ன செய்ய முடியும் உன்னால்? ஏதோ என் பொண்ணு உடம்பு சரியில்லாமல் இருந்தாளேன்னு அமைதியா போனா ரொம்ப ஓவராத்தான் ஆடுற?” என்று ஞானசேகரன் சண்டைக்கு வர,

“அவர் அப்படித்தான் கத்துவார். நீ உள்ளே போ நயனிமா. நின்னுட்டே இருப்பது கால் வலிக்கும்…” என்று நயனிகாவை உள்ளே அனுப்பியவன், அவர் தன்னிடம் பேசவே இல்லை என்பது போல் வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.

“ஸ்ஸ்…” என்று பெருமூச்சு விட்டு தன் கோபத்தை அடக்க முடியாமல் அவனின் வீட்டுக் கதவை முறைத்துக் கொண்டிருந்தார் ஞானசேகரன்.

ஒரு வாரம் அதன் வேகத்தில் கடக்க, நயனிகாவின் உடல் சற்றுத் தேறியிருந்தது.

அந்த ஒரு வாரமும் கதிர்நிலவன் அவள் வீட்டிற்குச் சென்று அவளைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.

அவன் வரும் நேரம் ஞானசேகரன் இருந்தால் கோபத்தில் ஏதாவது கத்துவார்.

ஆனால் அவர் பேசினார் என்பது போலயே காட்டிக் கொள்ளாமல் நயனிகாவிடம் நலம் விசாரிப்பான். அபிராமியிடம் வழக்கம் போலச் சாதாரணமாகப் பேசுவான். அவரும் எந்தப் பாகுபாடும் காட்ட மாட்டார்.

தயா நடப்பதை அமைதியாக வேடிக்கைப் பார்ப்பானே தவிர எதிலும் தலையிடமாட்டான்.

அக்காவின் காதல் நிறைவேறிவிட்டது என்ற நிம்மதி இருந்தாலும், இவர் மட்டும் அன்று தான் சென்று பேசிய போது ஏதாவது செய்திருந்தால் தன் அக்கா உயிரை விடத் துணிந்திருக்க மாட்டாளே என்ற மன சுணக்கம் அவனை விட்டு அகல மறுத்தது.

அதே எண்ணம் தான் நயனிகாவிற்கும் இருந்தது.

அவன் என்னதான் இரக்கத்தால் விரும்பவில்லை என்று சொன்னாலும் அவளால் முழுமையாக இன்னும் அவன் சொன்னதை ஏற்றுக்கொள்ளத்தான் முடியவில்லை.

இன்னொருவனைக் கட்டிக் கொள்ளச் சொன்னானே என்ற எண்ணம் வரும் போதெல்லாம அவளின் மனது அதீத உளச்சலுக்கு உள்ளானது.

அதோடு ஞானசேகரன் வேறு முன்பை விட வீட்டில் கடுகடுவெனச் சுற்றி வந்தார். மகளையும் கடிந்து பேச முடியவில்லை. கதிர்நிலவன் சுதந்திரமாக இங்கே வந்து செல்வதையும் ஏற்க முடியாமல் எரிச்சலை காட்டினார்.

மகள் தற்கொலைக்கு முயன்றது எல்லாம் கருத்தில் இருந்தாலும் அவரால் இன்னும் அவளின் காதலுக்குச் சம்மதம் தெரிவிக்க முடியவில்லை.

கதிர்நிலவனின் குறை நிரந்தரமானது என்பதால் சட்டென்று அவரால் மனதை மாற்றிக் கொள்ள இயலவில்லை.

அதனால் அவன் இயல்பாக வந்து செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதவர் தான் விரைந்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற நிலைக்கு வந்திருந்தார்.

கதிர்நிலவன் நயனிகாவிடம் தனிமையில் பேச விரும்பினான். ஆனால் அதற்கான சந்தர்ப்பத்தை வர விடாமல் தடுத்திருந்தார் ஞானசேகரன்.

அதனால் கதிர்நிலவனின் திடீர் மனமாற்றத்திற்கான காரணம் அறிய முடியாமல், அவனிடம் முன் போல் இயல்பாகவும் ஒன்ற முடியாமல் இறுகி போனாள் நயனிகா.

முன்பு நயனிகாவிற்குக் கதிர்நிலவன் வைத்த பெயரான ‘ஸ்பீக்கர்’ என்பதற்கான எதிர்பதமாக மாறிப் போனாள்.

தற்கொலைக்கு முயன்றதால் சுற்றிலும் உள்ள ஆட்களின் வாய்க்கு அவுலாகி போனதால் வீட்டை விட்டும் அவள் வெளியேயும் எங்கும் செல்ல முடியவில்லை.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

அவளின் அந்த நிலைக்கு வருந்திய கதிர்நிலவன், அன்று இரவு நடைபயிற்சிக்குச் செல்லும் முன் அவளை அலைபேசியில் அழைத்தான்.

அவனின் அழைப்பை எடுத்துவிட்டாலும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

“நயனிமா, சாப்பிட்டியா?” எனக் கேட்டான்.

“ம்ம்ம்…” என்று அவள் முனங்க,

“நான் சாப்டேனான்னு கேட்க மாட்டியா?” என்று மெல்ல கேட்டான்.

அவளோ அமைதியையே பதிலாகத் தர, கதிர்நிலவனின் பெருமூச்சுப் பெரிதாக அவளின் காதைச் சென்றடைந்தது.

“என் மேல கோபமா இருக்கன்னு புரியுது. நானும் உங்கிட்ட தனியா பேச நினைக்கிறேன். ஆனா சந்தர்ப்பம் அமைய மாட்டேங்குது. இப்போ மாடிக்கு நடக்கப் போறேன். நீயும் வர்றீயா? பேசலாம்…” என்று அழைத்தான்.

அவளும் அவனிடம் பேசிவிட நினைத்தவள், “ம்ம்ம்…” என்று முனங்கி தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.

“நான் முன்னாடி போறேன். நீ வா. தனியா வர கஷ்டமா இருந்தால் தயாவை கூட அழைச்சுட்டு வா…” என்றவன் சொன்னது போலவே முன்பே மாடி ஏறிச் சென்றான்.

அவன் மேலே ஏறிய சிறிது நேரத்திற்குப் பின் வெளியே செல்ல தன் அறையை விட்டு வெளியே வந்தாள் நயனிகா.

அப்போது வீட்டின் அழைப்புமணி அழைக்க, தயா கதவைத் திறந்தான்.

“வா அரவிந்த்…” என்று ஒரு இளைஞனை உள்ளே அழைத்து வந்து கொண்டிருந்தார் ஞானசேகரன்.

“ஹாய் தயா…”

“அரவிந்த் அண்ணா. வாங்க வாங்க அண்ணா…” புன்னகை முகமாக வரவேற்றான் தயா.

“ஹாய் ஸ்வீட்டி, எப்படி இருக்க? என்னை எல்லாம் ஞாபகம் இருக்கா?” நயனிகாவை பார்த்து ஆர்ப்பாட்டமாகக் கேட்டான் அரவிந்த்.

“ஹாய் அரவிந்த், வாங்க. நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?” லேசாக இதழ்களைப் பிரித்துச் சிரித்து விசாரித்தாள் நயனிகா.

“எனக்கு என்ன? சூப்பரா இருக்கேன். இதோ நீயே பார்…” இடுப்பில் கைவைத்து நிமிர்ந்து நின்று கேட்டான்.

லேசாகப் புன்னகைத்துவிட்டு அமைதியாக இருந்தாள்.

“வாப்பா அரவிந்த். அப்பா, அம்மா எல்லாம் எப்படி இருக்காங்க?” என்று அபிராமி அவனை வரவேற்க,

“நல்லா இருக்காங்க ஆன்ட்டி. அம்மா உங்களைப் பத்தி எல்லாம் வீட்டில் பேசாத நாளே இல்லை. இங்கே வந்து உங்களை எல்லாம் பார்க்கணும்னு சொல்லிட்டே இருப்பாங்க. ஆனா வரத்தான் நேரம் அமையலை…”

“எனக்கும் அந்தப் பக்கம் வர ஆசை தான்பா. ஆனா எங்கே? வீட்டு வேலையே சரியா இருக்கு…”

“அம்மாவும் அதே தான் சொல்லி புலம்புவாங்க ஆன்ட்டி. நான் இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்தேன். அப்பத்தான் எதிரே அங்கிளை பார்த்தேன். அங்கிள் வீட்டுக்கு வந்துட்டுப் போன்னு சொன்னதும் உடனே வந்துட்டேன்…”

“உட்காருப்பா. டிபன் வேலை முடிஞ்சது. சாப்பிட்டு தான் போகணும்…”

“ஆன்ட்டி கைமணச் சமையலை வேண்டாம்னு சொல்வேனா என்ன?” என்று எந்தப் பிகுவும் காட்டாமல் சொன்னவன் சோஃபாவில் அமர்ந்தான்.

“அப்புறம் தயா, படிப்பு எல்லாம் எப்படிப் போகுது?” என்று பேச்சை ஆரம்பித்தான் அரவிந்த்.

ஞானசேகரனும், அரவிந்தின் தந்தையும் ஒரே அலுவலகத்தில் தான் பணிபுரிகின்றனர்.

அவர்கள் முன்பு குடியிருந்த வீட்டின் அருகில் தான் அரவிந்தின் வீடும் இருந்தது.

பலவருடங்களாக இரு குடும்பத்தினருக்கும் பழக்கம் என்பதால் நல்ல நட்புணர்வு இருந்தது.

நயனிகாவை விட மூன்று வருடங்கள் அரவிந்த் பெரியவன் என்றாலும் சிறு வயதிலிருந்து பெயர் சொல்லி அழைத்தே பழகியிருந்தாள்.

கலகலப்பாக அனைவரிடமும் பேசிய அரவிந்த் அவர்களுடன் சேர்ந்து இரவு உணவையும் உண்டான்.

“அப்புறம் ஸ்வீட்டி, என்ன ரொம்ப அமைதியா இருக்க? ஸ்வீட்டி கேரக்டர் இது இல்லையே?” என்று உணவை உண்டு கொண்டே கேட்டவனுக்குப் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள் நயனிகா.

அவளின் மனம் அங்கேயே இல்லை. கதிர்நிலவன் மேலே வர சொல்லி வெகுநேரம் ஆகியிருந்தது. தன்னைத் தேடுவாரே என்று தவிப்புடன் அமர்ந்திருந்தாள்.

அவளின் அமைதியைக் கேள்வியாகப் பார்த்தவன், மற்றவர்களையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டான்.

மற்றவர்களும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க, லேசாகத் தோளை குலுக்கி விட்டுக் கொண்டவன் உண்ணும் வேலையை மட்டும் தொடர்ந்தான்.

உணவு முடிந்ததும், “சரி அங்கிள், ஆன்ட்டி நான் கிளம்புறேன். நீங்க நேரம் இல்லைன்னு தள்ளிப் போடாம ஒரு நாள் வீட்டுப் பக்கம் வாங்க ஆன்ட்டி…” என்றான்.

“கண்டிப்பா முயற்சி பண்றேன் அரவிந்த். அம்மா, அப்பாவை கேட்டதாகச் சொல்லு. நீயும் இந்தப் பக்கம் வந்து போய் இரு. அம்மாவையும் ஒரு நாள் கூட்டிட்டு வா…” என்றார் அபிராமி.

“இனி நான் அடிக்கடி இந்தப் பக்கம் வருவேன் ஆன்ட்டி. எனக்கு வேலை இந்த ஏரியா பக்கம் தான் இப்ப கிடைச்சுருக்கு…”

“அப்படியா? நல்ல விஷயம் அரவிந்த்…”

“சரி ஆன்ட்டி, கிளம்புறேன். தயா நல்லா படிடா. வர்றேன் அங்கிள்…” என்றவன் வாசலை நோக்கி நடந்து கொண்டே, “ஸ்வீட்டி, உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணுமே…” என்று நயனிகாவை அழைத்தான்.

அவனைக் கேள்வியாகப் பார்த்தாலும் அவனுடன் வெளியே நடந்தாள். வெளியே சென்று அப்படியே மாடிக்கு சென்று விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு சென்றாள்.

இன்று முடிந்தவரை தன் மனதை நயனிகாவிடம் பேசி தெளிவுபடுத்தி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் மேலே சென்ற கதிர்நிலவன் அவள் வரும் நேரத்திற்காகக் காத்திருந்தான்.

பத்து நிமிடங்கள் சென்ற பிறகும் அவள் வராமல் போக, ‘என்னாச்சு? அவள் அப்பா தடுத்துட்டாரோ?’ என்ற யோசனையுடன் நடக்க ஆரம்பித்தான்.

நேரம் தான் சென்றதே தவிர அவள் வரும் வழியைக் காணவில்லை.

அவளுடன் பேசும் போது இடையூறாக இருக்க வேண்டாம் என்று நினைத்து கைபேசியையும் வீட்டிலேயே வைத்து விட்டு வந்திருந்தான்.

அதனால் அவளுக்கும் அழைக்க முடியாமல் மேலும் சிறிது நேரம் காத்திருந்தான்.

மேலும் பதினைந்து நிமிடங்கள் கழித்து இனி அவள் வரமாட்டாள் என்று தோன்ற கீழே இறங்கி வர ஆரம்பித்தான்.

“என்ன ஸ்வீட்டி ஆளே ரொம்ப மாறி போயிட்ட? எதுவும் பிரச்சனையா?” என்று வீட்டிற்கு வெளியே வந்து படிக்கட்டின் அருகில் அவளை அழைத்துச் சென்ற அரவிந்த் கேட்க,

“அப்படியெல்லாம் ஒன்னுமில்லை அரவிந்த். நானும் இப்ப வளர்ந்து பெரிய பொண்ணா ஆகிட்டேன். இனி பொறுப்பா இருக்கணுமே. அதான்…” என்ற நயனிகா லேசாகப் புன்னகைத்தாள்.

“பொறுப்பா இருக்க வேண்டியது தான். அதுக்காக இப்படி ஆளே டோட்டலாவா மாறுவாங்க? என்னவோ போ, நீ சொல்ற நானும் கேட்டுக்கிறேன். ஒருவேளை எதுவும் பிரச்சனை என்றாலும் சொல்லு ஸ்வீட்டி, நான் பார்த்துக்கிறேன்…” என்றான்.

“எனக்கு என்ன பிரச்சனை வரப் போகுது? எதுவுமில்லை அரவிந்த்…” என்றாள்.

“பிரச்சனை இல்லனா நல்லது தான். ஓகே ஸ்வீட்டி, நான் போயிட்டு வர்றேன். பை…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது தான் மாடியிலிருந்து இறங்கி வந்தான் கதிர்நிலவன்.

‘யாரிவன்? ஸ்வீட்டின்னு உரிமையோட கூப்பிடுறான்?’ என்று நினைத்துக் கொண்டே வந்தான்.

“பை அரவிந்த்…” என்ற நயனிகா அப்போது தான் கதிர்நிலவனைக் கண்டாள்.

அவனின் முகம் சுருங்கியிருப்பதைப் பார்த்தவள் வேகமாக அவனின் அருகில் செல்ல போனாள். தான் வேண்டுமென்றே வரவில்லை என்று கோபத்தில் இருக்கிறானோ என்ற எண்ணத்துடன் படியில் கால் வைத்தாள்.

“நயனிகா, அரவிந்த் போய்ட்டானா? இன்னும் வெளியே என்ன பண்ற? உள்ளே வா…” என்று அதே நேரம் சரியாக ஞானசேகரன் வெளியே வந்து அழைக்க, மேலே ஏற முயன்றவள் வேகமாக வீட்டிற்குள் சென்றாள்.

ஏற்கனவே கதிர்நிலவனின் முகம் சுருங்கியிருக்க, இதில் இப்போது தங்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்தால் தந்தை ஏதாவது வார்த்தையை விட்டுவிடுவாரோ என்று நினைத்தவள் தந்தை அழைத்ததும் சென்று விட்டாள்.

வேகமாக அறைக்குள் சென்று தன் கைபேசியை எடுத்து கதிர்நிலவனுக்கு அழைத்தாள்.

அப்போது தான் தன் வீட்டிற்குள் நுழைந்த கதிர்நிலவன் உடனே அழைப்பை ஏற்றான்.

“ஸாரி கதிர், நான் கிளம்பும் போது வீட்டுக்கு ஹெஸ்ட் வந்துட்டாங்க. அதான் வர முடியலை. அவங்க முன்னாடி போன் பண்ணி உங்களுக்குத் தகவலும் சொல்ல முடியலை. ஸாரி…” என்றாள்.

“ம்ம், பரவாயில்லை நயனிமா. உனக்கு வர முடியாத சூழ்நிலைன்னு எனக்கே புரிந்தது…” என்றான் அமைதியாக.

‘புரிந்தது என்றால் பின் ஏன் அவரின் முகம் சுருங்கியிருந்தது?’ என்று கேள்வி தோன்றியது.

“ஆமா, அது யார்? உன்னை ஸ்வீட்டின்னு கூப்பிட்டது?” என்று அவள் யோசனையில் இருக்கும் போதே ஒரு மாதிரியான குரலில் கேட்டான் கதிர்நிலவன்.

அவனின் குரலில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்து கொண்டவளுக்குச் சற்று முன் அவளுக்குத் தோன்றிய கேள்விக்குப் பதில் கிடைத்தது.

அதோடு அவனின் பொறாமை அப்பட்டமாகத் தெரிய, ‘ஓஹோ! கதிருக்குப் பொறாமை எல்லாம் வருமா?’ என்று நினைத்தவள் உதடுகள் புன்னகையில் விரிந்தன.

“நயனிமா, என்ன பதிலையே காணோம்?” பொறுமை இல்லாமல் கேட்டான் கதிர்நிலவன்.

அதில் அவளின் புன்னகை இன்னும் பெரிதானது.

“அவர் அரவிந்த். நாங்க முன்னாடி இருந்த வீட்டுக்குப் பக்கத்து வீடு. சின்ன வயசில் இருந்தே அரவிந்த் என்னை அப்படிக் கூப்பிட்டு பழக்கம்…” என்றாள் தன் புன்னகையை மறைத்துக் கொண்டு .

“ஓ! ஓகே நயனிமா. இன்னைக்குத் தான் பேச முடியாம போயிடுச்சு. இன்னொரு நாள் கண்டிப்பா பேசுவோம். இப்போ தூங்கு. குட்நைட்..” என்றான்.

“ம்ம், குட்நைட்…” என்றவள் அழைப்பை துண்டித்தாள்.

அவனின் பொறாமை உணர்வு அவளின் மனதை இலவம்பஞ்சாகப் பறக்க வைத்தது.

அவளிடம் சாதாரணம் போல் பேசிவிட்டு வைத்துவிட்டாலும் அரவிந்த் அவளை உரிமையுடன் செல்ல பெயர் சொல்லி அழைத்ததைக் கதிர்நிலவனால் இலகுவாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

காதலனுகே உண்டான பொறாமை மனம் முழுவதும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.

அன்று மட்டும் இல்லாமல் அவனின் பொறாமை உணர்வை கூட்டுவது போல் தான் அடுத்து வந்த நாட்கள் நகர்ந்தன.

அரவிந்த் அதன் பிறகு அடிக்கடி நயனிகாவின் வீட்டிற்கு வர ஆரம்பித்தான்.

ஆரம்பத்தில் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு கவனித்த கதிர்நிலவனுக்கு நாள் செல்ல செல்ல அரவிந்தின் வருகை வித்தியாசமாக எண்ண வைத்தது.

அதுவும் நயனிகாவுடன் அரவிந்த் அதிக நேரத்தை செலவளிப்பதாகத் தோன்றியது.

கூடவே ஞானசேகரனின் பார்வை கதிர்நிலவன் மீது லேசான நக்கலுடன் படிவதையும் கண்டவனுக்கு அரவிந்தின் வருகையை ஒன்றும் இல்லாதது என்று விலக்கித் தள்ள முடியவில்லை.

அவன் சந்தேகம் சரிதான் என்பது போல் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்தன.