18 – உனதன்பில் உயிர்த்தேன்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 18
நாட்கள், மாதங்களாகக் கடந்து ஓடின.
தேன்மலர் அவ்வீட்டில் வைரவேலின் மனைவியாக ஒன்றி போனாள் என்று சொல்வதை விட, அவ்வீட்டில் மருமகளாக ஒன்றி போனாள் என்று சொன்னால் சரியாக இருக்கும்.
அதுவும் அப்பத்தாவும், அவளும் நன்றாக நெருங்கி போயிருந்தார்கள்.
ஆனால் நெருங்க வேண்டியவனிடமோ நெருக்கம் என்பது இம்மியளவும் வரவில்லை.
ஒரே வீட்டில் இருந்தார்கள் என்று தான் பெயர். அவர்களுக்குள் பேச்சு வார்த்தை கூட அளவோடு தான் நடக்கும். அதுவும் எதுவும் அவசியம் ஏற்பட்டால் ஒழிய பேசுவதே இல்லை.
முக்கியமாக வைரவேல் பேசுவதில்லை.
காலையில் எழுந்து வயலுக்கோ, லோடுக்கோ செல்வான். மீண்டும் நடுவில் ஒரு முறை வந்து குளித்து, உணவை உண்டு விட்டு செல்வான். வீட்டிற்கு வர முடியாத நாட்களில் வெளியே சாப்பிட்டு கொள்வான்.
அவனின் துணியைக் கூட அவனே துவைத்துக் கொள்வான்.
தேன்மலர் தானே துவைத்து விடுவதாகக் கேட்டுப் பார்த்தும் அவன் சம்மதிக்கவில்லை. அவன் அறைக்குள்ளும் இதுவரை அவளை நுழைய விட்டது இல்லை. அந்த அறையையும் தானே சுத்தம் செய்து கொள்வான்.
படுக்கையும் வெளியே மட்டுமே. தேன்மலர் அறையில் படுத்துக் கொள்வாள். அவள் முதல் நாள் இந்த வீட்டிற்கு வந்த போது ஆரம்பித்த இப்பழக்கம் இன்று வரை மாறவே இல்லை.
தேன்மலரோ அப்பத்தாவை ஒரு வீட்டு வேலை கூடப் பார்க்க விடாமல் தானே தான் அனைத்தையும் பார்த்துக் கொள்வாள்.
காலையில் எழுந்து வாசலை கூட்டி கோலம் போடுவதில் ஆரம்பித்து, காலை உணவை செய்வது, வீட்டை சுத்தம் செய்வது, அவரின் துணியையும் சேர்த்து அலசி போடுவது என்று பார்ப்பவள், அந்த வேலை முடிந்ததும் தன் வயலுக்கு மட்டும் இல்லாது அவனின் வயலுக்கும் செல்வாள்.
அவளின் வயலுக்கும் சேர்த்தே வேலைக்கு ஆள் சொல்லிவிடுவதில் மட்டும் வைரவேல் குறையே வைத்தது இல்லை. அதோடு இரண்டு வயலின் பூக்களையும் அவனே டவுனுக்குச் சென்று சேர்த்து விடுவான் என்பதால் அந்த வேலை பளூ அவளுக்குக் குறைந்து தான் போனது.
அவளின் வயலில் வரும் பூக்களின் வருமானத்தை அன்றாடம் அவளின் கையில் கொடுத்து விடுவான்.
அப்போது சில வார்த்தைகள் பேசுவதுடன் சரி. அதற்கு மேல் எந்தப் பேச்சும் அவனிடம் இருக்காது.
அப்பத்தாவும் பேரன் அவளிடம் ஒன்றி விட மாட்டானா என்று ஆவலுடன் எதிர்பார்ப்பார். ஆனால் அவனோ பிடி கொடுக்காமல் நழுவி கொண்டே இருந்தான்.
எல்லா விஷயத்திலும் அவன் நழுவ, அவன் உணவு விஷயத்தில் மட்டும் அவனை நழுவ விடாமல் பார்த்துக் கொண்டார்.
உணவு பரிமாற அவரை அவன் அழைத்தாலும், தேன்மலரை தான் உணவு பரிமாறச் சொல்வார்.
அதனால் இப்போதெல்லாம் அவனே நேரடியாக “சோறு போடு புள்ள” என்று கேட்டு உண்பான்.
சில நாட்களில் அது மட்டுமே அவளிடம் அவன் பேசும் அதிகப் பட்ச வார்த்தையாக இருக்கும்.
அவன் இப்படி இருக்க, தேன்மலரோ முற்றிலும் வேறாக இருந்தாள்.
தெளிந்த அவளின் மனதில் வைரவேல் சட்டென்று நுழைந்து விட்டிருந்தான்.
அவன் வீட்டில் இருந்தால் அவனைச் சுற்றியே அவளின் பார்வை வலம் வரும். அவன் சாப்பாடு கேட்டதும் ஆவலுடன் அவனுக்குப் பரிமாறுவாள். அதனுடன் அவனின் மற்ற வேலைகளைச் செய்யவும் அவளுக்கு ஆவல் உண்டு.
ஆனால் அதற்கு அவன் இடம் கொடுக்க மாட்டான் என்பதால் அவளின் மனதில் சுணக்கம் வந்து போகும். ஆனால் அதை அவனிடம் காட்டிக் கொள்ள மாட்டாள்.
அதனால் அவளின் சுணக்கம் அவனுக்கும் தெரிய வராமல் போனது.
அன்று காலை ஒன்பது மணியளவில், வீட்டின் பின்பக்கம் இருந்த கல்லில் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தாள் தேன்மலர்.
அப்போது வீட்டின் முன் குட்டி யானை வண்டி நிற்கும் சத்தம் கேட்டது.
‘லோடு ஏத்தி முடிச்சுட்டு வந்துட்டாரு போலருக்கு…’ என்று நினைத்துக் கொண்டே துவைத்துக் கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு வீட்டிற்குள் வந்தாள்.
இந்த நேரம் வந்தால் சாப்பிடுவான் என்பதால் சாப்பாட்டைத் தயாராக எடுத்து வைக்க அடுப்படிக்கு சென்றாள்.
சாப்பாட்டை எடுத்து வைத்து முடித்த பிறகும் அவன் வீட்டிற்குள் வரவில்லை என்றதும், வாசலில் சென்று எட்டிப் பார்த்தாள். வாசலில் வண்டி நின்று கொண்டிருந்தது. ஆனால் அவனைக் காணவில்லை.
“கொல்ல பக்கம் போனான் தாயி…” என்றார் திண்ணையில் அமர்ந்திருந்த அப்பத்தா.
ராசுவின் சத்தமும் பின்னால் இருந்து தான் கேட்டது. உடனே பின்பக்கம் சென்றாள்.
“எமக்கு ஒன்னுமில்ல ராசு. நீ தள்ளி போ…” என்று ராசுவிடம் பேசிக் கொண்டிருந்தவனைப் பார்த்து பதறி போனாள்.
அவனின் சட்டை, வேட்டி எல்லாம் சகதியாக இருந்தது. அதைப் பார்த்து தான் ராசு அவனைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.
“என்னய்யா இப்படி வந்திருக்கீரு?” என்று பதட்டமாகக் கேட்டாள்.
“நேத்துச் சாயங்காலம் மழ பேஞ்துல. அதுல ரோடு எல்லாம் சகதி. வண்டி சக்கரம் ஒரு பள்ளத்துல மாட்டிக்கிச்சு. அதை இறங்கி எடுக்க வேண்டியதா போயிடுச்சு. அதுதேன். வேற ஒன்னுமில்லை. நா போய்க் குளிச்சுட்டு வர்றேன்…” என்றவன் கிணற்றில் தண்ணீரை இறைத்துக் குளிக்கச் சென்றான்.
குளியலறைக்குள் சென்று கதவை மூடியவன், வேஷ்டி, சட்டையைக் கழட்டி கதவின் மீது போட்டான்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்தவள் வெளியே இருந்து அவ்வேஷ்டி சட்டையை உருவி எடுத்து வந்து தான் துவைத்துக் கொண்டிருந்த இடத்தில் போட்டாள்.
தனியாக அந்தத் துணியை நனைத்து அலச ஆரம்பித்தாள்.
குளித்து முடித்து வெளியே வந்தவன், அவள் தன் துணியைத் துவைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் வேகமாக அருகில் வந்தான்.
“உம்மை யாரு புள்ள ஏ உடுப்பை துவைக்கச் சொன்னது? தள்ளி போ! நா துவைச்சு போட்டுக்கிறேன்…” என்றான்.
“ஏன் நா துவைச்சாத்தான் என்னவாம்?” என்று கேட்டவளை கூர்ந்து பார்த்தான்.
அவளிடம் உரிமை உணர்வு தெரிந்தது. அதைக் கண்டவனுக்கு மனது பிசைவது போல் இருந்தது.
“ஏ உடுப்பை நானே துவைச்சுக்கிறேன். நீ ஒன்னும் எமக்காகக் கஷ்டப்பட வேணாம்…” என்றான்.
“இதுல என்னய்யா கஷ்டம்? குளிச்சுப் போட்டு நீரு சகதி உடுப்புல கை வைக்க வேணாம். நீரு உள்ளார போரும். நா இதை அலசிப் போட்டு வாறேன்…” என்றாள்.
“இல்ல புள்ள, வேணாம்…” அவன் பிடிவாதமாகச் சொல்ல, அவளோ அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.
அவள் பாட்டுக்கு குனிந்து அவனின் துணியைத் துவைத்துக் கொண்டிருந்தாள்.
அதிலேயே அவள் கொடுக்க மாட்டாள் என்று தெரிந்து விட, அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு வீட்டிற்குள் சென்றான்.
சென்றவனின் முதுகை திரும்பி பார்த்தவள் நமட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டாள்.
‘ஏன் எங்கை அவரு உடுப்புல பட்டா என்னவாம்? ரொம்பத்தேன். எம் புருசன் உடுப்பு நா அப்படித்தேன் துவைப்பேன். இனி தினமும் நாந்தேன் துவைப்பேன். அப்ப என்ன பண்றாருன்னு பாப்போம்…’ என்று தனக்குள் நொடித்துக் கொண்டவள், அவனின் துணியை மகிழ்ச்சியுடன் துவைத்துக் காயப் போட்டாள்.
அவள் உள்ளே செல்லும் போது தான் அவன் அறையை விட்டு வெளியே வந்தான்.
“சோறு போடு புள்ள…” என்று சாப்பிட அமர்ந்தான்.
தட்டில் சோறை போட்டு, அதில் வெள்ளாட்டு கறி குழம்பை ஊற்றினாள்.
“இன்னைக்கு என்ன புள்ள கறி சோறு?”
“முனியன் வூட்டுல கூரு கறி போட்டாக. ஆத்தா தேன் வாங்கிட்டு வர சொன்னாக. அதான் வாங்கிட்டு வந்து குழம்பு வச்சேன்…” என்றாள்.
“ம்ம்…” என்றவன் பின் ஒன்றும் பேசாமல் சாப்பிட்டு எழுந்தான்.
“இன்னைக்கு நா டவுனுக்குப் போவணும். பஸ்ஸுல போய்ட்டு வந்துடுறேன்…” என்று அவனுக்குத் தகவல் சொன்னாள்.
“டவுனுல என்ன சோலி?” என்று கேட்டான்.
அவனுக்கு உடனே பதில் சொல்லாமல் சில நொடிகள் அமைதியாக நின்றவளை கேள்வியுடன் பார்த்தான்.
“எமக்குக் கொஞ்சம் உடுப்பு எல்லாம் எடுக்கணும். எல்லாம் ரொம்பப் பழசா போய்டுச்சு. ஆத்தா தேன் போய் எடுத்துட்டு வர சொன்னாக…” என்றவளை ஆராய்ந்து பார்த்தான்.
அவளின் சட்டை, சேலை எல்லாமே வெளுத்துச் சாயம் போயிருந்தது. அவளின் மற்றைய துணிகளும் அப்படி இருந்ததாகத் தான் ஞாபகம்.
அவள் இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து அவளுக்கு அவன் துணியே எடுத்துக் கொடுத்தது இல்லை.
அவள் அன்னை உயிருடன் இருக்கும் போது எடுத்த உடைகளைத் தான் மாற்றி மாற்றிக் கட்டிக் கொண்டிருந்தாள்.
அதைக் கூட அவன் கவனத்தில் கொள்ளவில்லை.
தன் தவறு புரிய, “கிளம்பி இரு. வயலு வரை போயிட்டு வந்து டவுனுக்குக் கூட்டிட்டு போறேன்…” என்றான்.
உடனே தேன்மலரின் முகம் மலர்ந்து போனது. சந்தோசத்துடன் தலையை ஆட்டிவிட்டு சென்றாள்.
“ஆத்தா, என்னைய உம்ம பேரனே டவுனுக்குக் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டாரு…” என்று சிறுகுழந்தை போல் குதூகலித்துச் சொல்லி கொண்டு போனவள் மீது இப்போதும் அவனின் பார்வை கூர்மையுடன் படிந்தது.
தன்னிடம் இருந்ததிலேயே நல்ல ஒரு சேலையை எடுத்துக் கட்டிக் கொண்டு தயாராக நின்றாள் தேன்மலர்.
“மதியத்துக்கு அப்படியே கடைலயே சாப்பிட்டு போட்டு வந்துடுங்க தாயி. அவன் வாங்கிக் கொடுக்குறதை கூச்சப்படாமல் வாங்கிக்கோ. அது வேணாம், இது வேணாம்னு சொல்லாதே…” என்றார் அப்பத்தா.
“எம் புருசன் கிட்ட என்ன கூச்சம் ஆத்தா? அதெல்லாம் மறுப்பு சொல்ல மாட்டேன்…” என்று தேன்மலர் சொல்வதைக் கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் வந்தான் வைரவேல்.
அவனின் முகம் லேசாக மாறியது. ஆனால் ஒன்றும் காட்டிக் கொள்ளாமல், “வா போவலாம்…” என்று அழைத்தவன், “கிளம்புறோம் அப்பத்தா…” என்று அவரிடம் சொல்லி விட்டு வெளியே சென்றான்.
“வாறேன் ஆத்தா…” என்ற தேன்மலரும் வெளியே சென்றாள்.
தன் பைக்கை எடுத்து வாசலில் தயாராக நிறுத்தியிருந்தான் வைரவேல்.
‘இந்த வண்டியிலா போறோம்?’ என்று உள்ளுக்குள் குதூகலித்தபடி வண்டியைப் பார்த்தாள் தேன்மலர்.
பைக்கில் செல்ல போகிறோம் என்று சிறு குழந்தை எவ்வளவு மகிழுமோ அவ்வளவு மகிழ்ச்சி அவளிடம் தெரிந்தது. அவளின் மகிழ்வை கண்ணாடி வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தான் வைரவேல்.
அவளுக்கு அந்த வண்டியில் அமர்ந்து பழக்கம் இல்லை என்பதால் எப்படி அமர்வது என்று தடுமாற, “அதுல கால் வச்சு ஏறி உட்காரு. இந்தப் பக்கம் கம்பி இருக்கு பாரு. அத பிடிச்சுக்கோ…” என்று லேசாகத் திரும்பி பார்த்துச் சொன்னான்.
“ம்ம்…” என்றவள், அவன் சொன்ன படி ஏறி அமர்ந்தாள்.
அவள் சரியாக அமர்ந்திருக்கிறாளா என்று பார்த்துவிட்டே வண்டியை எடுத்தான் வைரவேல்.
இருவரும் ஜோடியாக வெளியே செல்வதைக் கண்குளிர பார்த்தார் அப்பத்தா.
வாழ்க்கையிலும் அவர்கள் இப்படி ஜோடியாக வாழ வேண்டும் என்பதே அந்த நேரம் அவரின் வேண்டுதலாக இருந்தது.
சற்றுத் தூரம் சென்றதுமே நேற்று பெய்த மழையில் சாலை மோசமாக இருந்தது.
“நல்லா புடிச்சுக்கோ புள்ள, ரோடு ரொம்ப மோசமா இருக்கு…” என்றான்.
“நல்லாத்தேன் பிடிச்சுருக்கேன்யா. நீர் எதுவும் குண்டும் குழியிலும் விட்டுடாதேயும்…” என்றாள் தேன்மலர்.
அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு குழியில் வண்டி இறங்கியது. வண்டியில் துள்ளியவள் பயத்தில் அவன் தோளை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.
அடுத்த நொடி சட்டென்று விதிர்த்துப் போனது என்னவோ வைரவேல் தான்.
“அந்த ரோட்டுல விலகவே வழி இல்லை புள்ள. அதுதேன். இப்ப கம்பியைப் பிடிச்சுக்கோ. இனி சூதானமா ஓட்டுறேன்…” என்றான்.
அவன் சொன்ன பிறகே அவனின் தோளை பிடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள் தேன்மலர்.
கையில் உணர்ந்த அவனின் ஸ்பரிஷத்தில் அவளின் உள்ளம் பரபரத்துப் போனது.
அவன் சொன்னதைக் கவனிக்காதது போல் இன்னும் அழுத்தமாக அவனின் தோளை பற்றிக் கொண்டாள் தேன்மலர்.
இது என் உரிமை என்ற அழுத்தம் அது!
மறுத்து ஏதோ சொல்ல வந்தவனுக்கு, அதற்கு மேல் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் அமைதியாகி போனான். என்ன சொன்னாலும் அதை அவளைக் காயப்படுத்தும் என்பதால் வாயை இறுக மூடிக் கொண்டான்.
ஆனாலும் அத்தொடுகையை அவனால் இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதே உண்மை.
இருவரும் டவுன் சென்று சேர்ந்து ஜவுளி கடைக்குச் சென்றனர்.
முதலில் சேலைகள் எடுத்துக் கொடுத்தான். அடுத்து அவள் உள்பாவாடைகள் எடுக்க, “வேற எதுவும் வாங்கணும்னாலும் தயங்காம வாங்கிக்கோ. நா இங்கன இருக்கேன்…” என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னவனைப் பார்த்து அவளுக்குப் புன்னகை வந்தது.
அப்புன்னகையுடனே சென்று உள்ளாடைகளும் எடுத்துக் கொண்டு வந்தாள்.
அனைத்துக்கும் பணம் கட்டி வாங்கியதும் இருவரும் வெளியே வந்தனர்.
“ஆத்தா நம்மள கடைலயே சாப்பிட்டு வர சொன்னாக…” என்றாள்.
அவளை யோசனையுடன் பார்த்தவன், “வா…” என்று உணவகத்திற்கு அழைத்துச் சென்றான்.
மதிய நேரமாக இருந்ததால் உணவகம் கூட்டமாக இருந்தது.
“இடம் இருக்குறது போலத் தெரியலையே. இங்கன இந்தக் கடை சாப்பாடு தேன் நல்லா இருக்கும்…” என்றான்.
“அதோ அங்கன எழுந்திருக்கிறாகயா. வாரும், அங்கன உட்காரலாம்…” என்று அந்த மேஜையின் அருகே சென்றாள்.
இருவரும் அங்கே அருகருகே அமர்ந்து சாப்பாடு சொல்லி சாப்பிட ஆரம்பித்தனர்.
முதல் முறையாக இருவரும் அருகருகே அமர்ந்து உண்டது தேன்மலருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
வீட்டில் அவன் உண்ட பிறகு தான் உண்ணுவாள். இன்றோ இருவரின் தோளும் லேசாக உரசிய படி அமர்ந்து உண்டது அவளுக்கு ஆனந்தத்தைத் தந்தது.
அவனோ அதற்கு எதிர்பதமாக இறுகி போய் அமர்ந்திருந்தான்.
எந்தப் பெண்ணிற்கும் கணவனுடன் வெளியே செல்வதில் தனி மகிழ்வு ஏற்படுவது உண்டு.
தேன்மலரும் அதற்கு விதிவிலக்கு இல்லை.
அதுவும் அன்னையைத் தவிர யாருடனும் வெளியே சென்று பழக்கம் இல்லாதவளுக்கு, பைக் பயணமும், தன் கணவனுடன் வெளியே செல்கிறோம் என்ற உணர்வையும் மறைக்காமல் அப்பட்டமாக வெளிப்படுத்தினாள் தேன்மலர்.
ஆனால் வைரவேலுக்கோ வேறுவிதமாக உணர்வு எழுந்தது.
அவள் ஒரு கணவனாகத் தன்னிடம் அதிகம் எதிர்பார்க்கிறாள் என்ற எண்ணம் தான் அவனுக்குத் தோன்றியது.
அந்த எண்ணம் அவனை இயல்பாக இருக்க விடவில்லை.
அவளின் அந்த எதிர்பார்ப்பை தான் வளர விடுவது சரியா? என்று தான் அவனுக்குத் தோன்றியது.
அந்த இறுக்கத்துடனே அவளை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டவன் உடனே வெளியே சென்று விட்டான்.
தாங்கள் கடைக்குச் சென்று வந்த கதையை அப்பத்தாவிடம் சொல்லி மகிழ்ந்து அவளுக்கு வாங்கிய உடைகளை எல்லாம் ஆசையாக எடுத்துக் காட்டினாள் தேன்மலர்.
“உம் புருசன் உங்கிட்ட நல்லா பேசினானா?” என்று அப்பத்தா விசாரித்தார்.
“நல்லாத்தேன் பேசினாரு ஆத்தா. ஆனா அடிக்கடி அவரு முகம் மாறிப்போச்சு. பழைய நியாபகம் வந்திருக்கும் போல…” என்று சிறிய குரலில் சொன்னாள்.
“ம்ம், அவ மேல அவன் ரொம்ப உசுரா இருந்தான் தாயி. அதுதேன் உங்கூட அவனால சட்டுன்னு ஒட்ட முடியலை. நீதேன் கொஞ்சம் பொறுமையா இருக்கணும். அவன் விலகி போறான்னு நீயும் விலகி நிக்காத.
பொஞ்சாதிங்கிற உரிமைக்கே தனி இடம் இருக்கு. அந்தப் பொஞ்சாதி அன்பை அணைக்கட்டாம காட்டினாள்னா எப்பேர்பட்ட காளையா இருந்தாலும் அவள் காலடியில் கிடப்பான். அன்புக்கு அடங்காதவக யாரும் இருக்க முடியாது தாயி. நீ ஒ அன்பை எல்லாம் அவனுக்குக் கொடு. காயப்பட்டவன் மாற நாளு ஆகத்தேன் செய்யும். ஆனா மாறிட்டான்னு வச்சுக்கோ உம்மை உள்ளங்கையில் வச்சு தாங்குவான்…” என்றார்.
“இப்பயே அவரு விலகி இருந்தாலும் எமக்குன்னு ஒன்னுனா தயங்காம பார்க்கிறார் தானே ஆத்தா?”
“அது நீ அவனை நம்பி இங்க வந்துபோட்டன்னு ஒரு அக்கறை தேன். அந்த அக்கறைய அன்பா மாத்த வேண்டிய பொறுப்பு உம்ம கையில் தேன் இருக்கு…” என்றார்.
“புரியுது ஆத்தா. எமக்கும் உம்மை எல்லாம் விட்டா யாரு இருக்கா? ஏ அன்பையும் ஒரு இடத்தில் வைக்க ஆள் கிடைச்சா விடுவேனா என்ன? இனி பாரும் உம்ம பேரன் ஒரு வழி ஆகப்போறாரு…” என்றாள்.
“அப்படிப் போடு. இனி பய மிரண்டு போகப் போறான்னு சொல்லு…” என்று அப்பத்தா சிரிக்க, அவருடன் சேர்ந்து சிரித்தாள்.
இவர்கள் இங்கே சந்தோசமாகப் பேசி சிரிக்க, அவர்களின் பேச்சிற்கு உரியவனோ அவளின் ஆசையை வளர விடக்கூடாது என்ற முடிவுடன் அன்று இரவு வீட்டிற்கு வராமல் மோட்டார் அறையிலேயே தங்கி கொண்டான்.