17 – ஈடில்லா எனதுயிரே

அத்தியாயம் – 17

அதிகாலை ஐந்து மணி.

அந்த மருத்துவமனை வளாகமே அமைதியாக இருக்க, பிரபஞ்சனின் மனம் மட்டும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.

அன்னையின் திடீர் ஆசையை அவரின் உடல்நலத்தை முன்னிறுத்தி உடனே நிறைவேற்றி வைக்க வேண்டிய கட்டாயம்.

அன்னையின் ஆசைக்காக மட்டுமே ராகவர்தினியைத் திருமணம் செய்யச் சம்மதம் சொல்லியிருந்தான் பிரபஞ்சன்.

ஆனாலும் அவனால் அதை ஏற்கத்தான் முடியவில்லை.

விருப்பமே இல்லாத ஒரு திருமணப் பந்தத்தில் தன்னை நுழைத்துக் கொள்வது என்பதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

தான் இவ்வாறு தவித்துக் கிடக்க, ராகவர்தினி மட்டும் எப்படி உடனே சம்மதம் சொன்னாள் என்பதில் இன்னும் அவனுக்கு ஆச்சரியமே!

பெரியவர்களுக்காகத்தான் அவளும் சம்மதம் சொல்லியிருப்பாள் என்று உறுதியாக நம்பினான்.

அவனுக்குள் உழன்று கொண்டிருந்தவனைக் கலைத்தது அவனின் தந்தையின் குரல்.

“பிரபா வீட்டில் இருந்து தாலி எடுத்துட்டு வந்தியா?” என்று கேட்டார் சுபேசன்.

“எடுத்துட்டு வந்துட்டேன் பா. இந்தாங்க…” என்று தன் கையில் இருந்த தாலியை அவரிடம் கொடுத்தான் பிரபஞ்சன்.

அவனின் திருமணத்திற்கு என வாங்கிய தாலி, உடை எல்லாம் இருந்ததால், வீட்டிற்குச் சென்று குளித்து உடையை மாற்றிக் கொண்டு, அப்படியே தாலியையும் எடுத்து வந்திருந்தான்.

இன்னும் ராகவர்தினி வந்திருக்கவில்லை. தயாராகி வர அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தனர்.

இரவே திருமணத்தைப் பற்றிப் பேசி முடிவு செய்து, அதற்கான வேலையையும் பார்க்க ஆரம்பித்திருந்தார் மாதவன்.

இரவே கஸ்தூரியிடம் திருமணத்தைப் பற்றிச் சொன்ன பிறகு தான் அவர் அமைதியானார்.

ஆறு மணிக்கு மேல் அறுவை சிகிச்சை. அதற்குள் திருமணத்தை நடத்திவிட முடிவு செய்திருந்தனர்.

“ராகாவை அழைச்சுட்டு வர்றேன்னு போன மாதவனை இன்னும் காணோமே…” என்று தவிப்புடன் கேட்டார் சுபேசன்.

“வந்திருவாங்கப்பா. அமைதியா இருங்க…” என்றவன் மனதில் தான் அமைதியில்லாமல் போனது.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு முன்னால் நடந்து வந்து கொண்டிருந்தார் மாதவன். அவருக்குப் பின்னால் அவரின் மனைவியும், மகளும் வந்து கொண்டிருக்க, ஏனோ ராகவர்தினியைத் தலையை நிமிர்த்திப் பார்க்க முடியவில்லை அவனால்.

ராகவர்தினியோ அவனை மட்டுமே பார்த்துக் கொண்டு வந்தாள்.

பட்டு வேஷ்டி, சட்டையில் சுவரில் சாய்ந்து நின்று எங்கோ பார்த்துக் கொண்டிருந்தவன் இன்னும் சற்று நேரத்தில் தன் கணவன் என்று நினைக்கும் போதே அவளின் உள்ளம் பூரித்துப் போனது.

அவனுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

ஆனாலும் அவளால் அதற்காகக் கவலைப்பட முடியவில்லை.

அவன் தன் மனதிற்குள் நுழைந்தது போல் தானும் அவன் மனதிற்குள் நுழைவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தாள்.

“வா மாதவா, டாக்டர்கிட்ட பர்மிஷன் கேட்டு வாங்கிட்டேன். சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சுட்டு வெளியே வர சொல்லியிருக்கார். வாங்க உள்ளே போவோம்…” மூவரையும் உள்ளே அழைத்துச் சென்றார் சுபேசன்.

அவர்கள் முன்னால் செல்ல பிரபஞ்சன் தயங்கி பின்னால் நின்றான்.

அவனின் தயக்கத்தைக் கண்ட ராகவர்தினி தன்னுடைய நடையையும் நிறுத்தினாள்.

“உள்ள வாடி!” என்று மீரா அழைக்க,

“நீங்க முன்னால் போங்கம்மா. நான் வரேன்…” என்றாள்.

மகளின் பார்வை பிரபஞ்சனிடம் இருப்பதைக் கண்ட மீரா, உள்ளே சென்றுவிட்டார்.

இன்னும் சுவரில் சாய்ந்து தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தவனின் எதிரே போய் நின்றவள், “அத்தான்…” என்று மென்மையாக அழைத்தாள்.

“ம்ம்ம்…” என்று மெல்ல எதிரே இருந்தவளை பார்த்தான்.

பட்டுப்புடவை அணிந்து சில நகைகள் போட்டு சிம்பிளாகவே என்றாலும் மணப்பெண் போல் தயாராகி நின்றிருந்தாள் ராகவர்தினி.

“என்னைக் கல்யாணம் பண்ணிக்க உங்களுக்குப் பிடிக்கலையா அத்தான்?” என்று பதில் தெரிந்திருந்துமே கேட்டாள்.

“ராகா, உன்னால் எப்படி முடியுது? என்னால் முடியலை ராகா. என் மாமா பொண்ணா உன்னை எனக்குப் பிடிக்கும். ஆனா அதுக்கு மேல… ஸாரி ராகா, என்னால யோசிக்கக்கூட முடியல…” என்றான்.

அவனின் பதில் அவளுக்கு வலிக்க வைத்தது.

ஆனாலும் தன் வலியைக் காட்டாமல், “பிடித்த மாமா பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறது ஒன்னும் தப்பு இல்லையே அத்தான்?” என்று கேட்டாள்.

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை ராகா. ஆனால் ஏதோ தப்பு பண்ற ஃபீல் மட்டும் மனசை விட்டு போக மாட்டிங்குது…” என்றான்.

“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதை அவ்வளவு பெரிய தப்பான விஷயமா நினைக்கிறீர்களா அத்தான்?” என்று இப்பொழுது தன் வலியை மறக்க முயலாமல் கேட்டே விட்டாள்.

அவளின் வலி அவனையும் பாதித்தது.

“ஸாரி ராகா. என் மனநிலையை உனக்கு எப்படிச் சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல. நான் உன்னைக் காயப்படுத்த விரும்பவில்லை, வா உள்ளே போவோம்…” என்று அழைத்தான்.

அவனின் கையைப் பிடித்து நிறுத்தினாள். அவன் தன் வழக்கம் போல் நாசுக்காக அவள் கையை விலக்கி விட்டான்.

அதை உணர்ந்தாலும் கண்டு கொள்ளாதது போல் பேச ஆரம்பித்தாள்.

“உங்க மனநிலை எனக்குப் புரியுது அத்தான். உங்களுக்குப் பிடிக்கலைனா இந்தக் கல்யாணம் வேண்டாம் அத்தான். நான் பெரியவங்ககிட்ட பேசுறேன்…” என்றாள்.

அவளுக்கு மனம் நிறைய அவனின் மீதான காதல் இருந்தது. ஆனாலும் அவனை வருத்தி இந்தத் திருமணம் வேண்டாம் என்று தான் அந்த நொடி அவளுக்குத் தோன்றியது.

அதனால் தன் மனதை ஒதுக்கி வைத்து விட்டு இப்போதும் அவன் விருப்பத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க நினைத்தாள்.

ஆனாலும் அதைச் சொல்லும் போது அவளால் தாளவே முடியவில்லை.

கண்ணின் ஓரம் லேசாகக் கண்ணீர் கூட எட்டிப் பார்த்தது.

அவனுக்காகத் தன் வேதனையையும் அடக்கிக் கொள்ள முயன்றாள்.

“இல்ல ராகா. அம்மாவுக்காகத்தான் நீயும், நானும் இந்தக் கல்யாணத்துக்குச் சரி சொன்னோம். இப்ப கஷ்டமா இருந்தாலும், பின்னாடி நம்ம வாழ்க்கை நம் கை வந்து சேரும்னு நம்பிக்கை இருக்கு…” என்றான்.

அவள் நினைத்தது போல் அவனும் பின்னால் மனம் மாறும் என்று நம்புகிறான் என்று நினைத்ததும் அவளுக்குச் சற்று நிம்மதியானது.

இருவரும் உள்ளே சென்றனர்.

மகனின் திருமணத்தைப் பார்க்க படுக்கையில் ஆர்வமுடன் காத்திருந்தார் கஸ்தூரி.

இருவரும் உள்ளே வந்ததும், தாலியை எடுத்து சுபேசன் மகனின் கையில் கொடுக்க, அதைக் கையில் வாங்கியவன், ஒரு நொடி கண்களை மூடி ஏதோ பிரார்த்தனை செய்துவிட்டு ராகவர்தினியின் கழுத்தில் தாலியைக் கட்டினான் பிரபஞ்சன்.

சட்டென்று பரவசமான உள்ளத்துடன் மனம் கவர்ந்தவன் கட்டிய தாலியை மனமுவந்து ஏற்றுக் கொண்டாள் ராகவர்தினி.

‘என் அத்தானின் மனதில், காதலியாக, மனைவியாக நான் விரைவில் இடம் பிடிக்க வேண்டும் கடவுளே!’ என்று வேண்டியும் கொண்டாள்.

திருமணம் முடிந்ததும் இருவரும் கஸ்தூரியின் அருகில் சென்றனர்.

“இப்ப சந்தோசமா அம்மா?” என்று அன்னையிடம் கேட்டான் பிரபஞ்சன்.

“ரொம்பச் சந்தோசம் பிரபா…” என்று மகனின் கையைப் பிடித்துக் கொண்டார்.

“அத்தை, இப்ப பயப்படாம நம்பிக்கையோட ஆப்ரேஷனுக்குப் போயிட்டு வாங்க. உங்களுக்காக நாங்கள் இத்தனை பேர் இங்கே காத்திருக்கோம் என்பது ஞாபகம் இருக்கட்டும்…” என்றாள் ராகவர்தினி.

“இனி எனக்கு எந்தப் பயமும் இல்லை ராகா. என் பிள்ளைக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னு இப்ப நான் சந்தோசமா இருக்கேன்…” என்றார் கஸ்தூரி.

செவிலி வந்து அறுவை சிகிச்சைக்குத் தயார் செய்ய வேண்டும் என்று சொல்ல, அனைவரும் வெளியே சென்று காத்திருக்க ஆரம்பித்தனர்.

கஸ்தூரிக்கு அறுவை சிகிச்சையும் ஆரம்பிக்கப்பட்டது.

சற்றுமுன் நடந்த திருமணத்தைப் பற்றி நினைக்கக் கூட நேரம் இல்லாமல் கஸ்தூரி நன்றாகப் பிழைத்து வர வேண்டும் என்ற வேண்டுதலுடன் அனைவரும் காத்திருந்தனர்.

நேரம் கடந்து செல்ல, அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது என்ற தகவலை மருத்துவர்கள் தெரிவிக்க, அதன் பிறகே அனைவரும் நிம்மதியாக மூச்சு விட்டனர்.

“காலையில் இருந்து யாரும் தண்ணி கூடக் குடிக்கலை. நீங்க எல்லாம் போய்ச் சாப்பிட்டு வாங்க. நான் அதுவரை இங்கே இருக்கேன்…” என்றார் மாதவன்.

“இல்ல மாமா, நீங்க போய்ட்டு வாங்க. நான் இருக்கேன்…” என்றான் பிரபஞ்சன்.

“கல்யாணம் முடிந்த பிறகு நிறையச் சடங்கு இருக்கு பிரபா. ஆனால் நம்மால் இப்போதைக்கு அது எதையும் செய்ய முடியாது. ஆனால் முதல் நாளே நீங்க இரண்டு பேரும் தனித்தனியா சாப்பிட வேண்டாம்…” என்றார் மீரா.

அதற்கு மேல் மறுக்க முடியாமல் அவர்களுடன் சென்றான் பிரபஞ்சன்.

மணமக்கள் போல் வந்தவர்களை அந்தக் கேண்டினில் இருந்தவர்கள் அனைவரும் வேடிக்கை பார்ப்பது போல் திரும்பி பார்த்தனர்.

‘இதுக்குத்தான் தனித்தனியா போவோம்னு நினைச்சேன்’ என்று முனங்கிக் கொண்டான் பிரபஞ்சன்.

அது அருகில் நடந்து கொண்டிருந்தவள் காதிலும் விழ, ‘நமக்கு இன்ஸ்டெண்ட் கல்யாணம் ஆகிடுச்சுன்னு நான் வேணும்னா எல்லாருக்கும் அனோன்ஸ் பண்ணட்டுமா அத்தான்?’ என்று அவனிடம் குறும்பாகக் கேட்க ஆசை வந்தது.

ஆனால் இருக்கும் சூழல் அவளின் வாயை கட்டிப் போட அமைதியாக வந்தாள் ராகவர்தினி.

மருத்துவமனையில் திருமணம், மருத்துவமனை உணவகத்தில் விருந்து என்று அவர்களின் திருமண நிகழ்வு முடிந்தது.

மருத்துவமனையில் திருமண உடையிலேயே இருக்க வேண்டாம் என்று வீட்டிற்குச் சென்று இருவரையும் உடையை மாற்றி வரச் சொன்னார் மீரா.

“நீயும் கூடப் போயிட்டு வா மீரா…” என்று அவர்களுடன் மனைவியையும் கிளம்பச் சொன்னார் மாதவன்.

பிரபஞ்சன் காரை ஓட்ட அருகில் அமர்ந்து கொண்டாள் ராகவர்தினி. பின்னால் மீரா.

“முதலில் உங்க வீட்டுக்குப் போகலாம் பிரபா…” என்று மீரா சொன்னதும், காரை தன் வீட்டின் முன் சென்று நிறுத்தினான்.

“நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருங்க…” என்றவர் அவனிடம் வீட்டின் சாவியை வாங்கிச் சென்றார்.

அவசரமாக ஆரத்தியை கரைத்து எடுத்து வந்தார்.

“இப்ப உள்ள சூழ்நிலையில் இதெல்லாம் தேவையா?” பிரபஞ்சன் புலம்ப, ராகவர்தினி அவனைக் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தாள்.

ஆரத்தி எடுத்து முடித்ததும் தான் இருவரையும் உள்ளே விட்டார் மீரா.

“இப்ப உள்ள சூழ்நிலையில் இது எல்லாம் செய்வது கஷ்டமாகத்தான் இருக்கும் பிரபா. ஆனா பெத்த மனசு கேட்க மாட்டிங்குது. பூஜை ரூமில் விளக்கு ஏத்தி சாமி மட்டும் கும்பிட்டுக்கோங்க. அப்புறம் எதுவும் சொல்ல மாட்டேன்…” என்றார் மீரா.

ராகவர்தினி விளக்கேற்றியதும் இருவரும் கடவுளை தொழுதனர்.

“நாம நம்ம வீட்டுக்குப் போகலாமா மா?” என்று கேட்டாள் ராகவர்தினி.

“நீ இங்கேயே இரு ராகா. நான் போய் உனக்கு ட்ரெஸ் எடுத்துட்டு வர்றேன்…” என்றார் மீரா.

அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே தனது அறைக்குச் சென்றான் பிரபஞ்சன்.

“இனி நீ இந்த வீட்டு மருமகள் ராகா. உன் கல்யாணம் அவசர அவசரமா முடிந்தாலும், உன் அத்தை ஹாஸ்பிட்டலில் இருக்கும் நிலையில் நீ தான் பொறுப்பா இருக்கணும். நம்ம வீட்டுக்கு நீ பிரபா கூடத்தான் வரணும்…” என்று ஆரம்பித்த மீரா மகளுக்கு அட்வைஸ் மழையாகப் பொழிந்தார்.

“அம்மா, போதும்! பட்டுப்புடவை எனக்குக் கசகசன்னு இருக்கு. நீங்க போய் என் ட்ரெஸ் எடுத்துட்டு வாங்க…” என்று விரட்டாத குறையாக அவரை அனுப்பி வைத்தாள்.

அவர் சென்றதும் மேலே அண்ணாந்து பார்த்தாள். பிரபஞ்சன் இன்னும் அவனின் அறையை விட்டு வெளியே வரவில்லை.

முன்பு எந்தத் தயக்கமும் இல்லாமல் அவனின் அறைக்குச் சென்று வந்தவள் தான். ஆனால் இப்போது அப்படிச் செல்ல அவளுக்கு விருப்பமிருக்கவில்லை.

ஏனோ தாலி கட்டிய பின் பிரபஞ்சனிடம் ஒருவித ஒட்டாத தன்மை வந்து விட்டது போல் உணர்ந்தாள்.

அவனை வருந்த வைக்கக் கூடாது என்று நினைத்த தானே அவனை வருந்த வைத்து விட்டோமோ என்று அவளுக்கு உறுத்தலாக இருந்தது.

அந்த உறுத்தல் அவளை இயல்பாக இருக்கவிடவில்லை.

‘ஸாரி அத்தான்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

உடையை மாற்றி விட்டு பிரபஞ்சன் இறங்கி வந்த போது சோஃபாவில் அமர்ந்து கொண்டே உறங்கிய ராகவர்தினியைத் தான் கண்டான்.

இரவெல்லாம் தூங்காதது சோஃபாவில் அமர்ந்த உடனே அவளுக்குக் கண்களைச் சொருகியிருந்தது.

அவனுக்கும் அலுப்பாகத்தான் இருந்தது. ஆனால் தந்தையும், மாமாவும் அலுத்துப் போயிருப்பார்கள் என்பதால் அவர்களை வீட்டிற்குச் செல்ல சொல்லி விட்டு தான் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று கிளம்பி விட்டான்.

சோஃபாவின் பின்னால் தலையைச் சாய்த்து தூங்கிக் கொண்டிருந்த ராகவர்தினியின் முகத்தையே சில நொடிகள் கூர்ந்து பார்த்தான்.

‘இவளை தான் திருமணம் செய்தது சரியா தவறா?’ என்று தான் அவனின் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சட்டென்று கண்விழித்தாள் ராகவர்தினி.

“ஹான் அத்தான், எதுவும் வேணுமா? ஸாரி, அப்படியே தூங்கிட்டேன்…” என்று பதறி எழுந்தாள்.

“தூங்கு ராகா…” என்றவன் அங்கேயிருந்து விலகி சென்று விட்டான்.

சென்றவனைப் பார்த்து பெருமூச்சு விட்டு கொண்டாள்.

மீரா வந்ததும் உடை மாற்றிக் கொண்டாள்.

“நீங்க இரண்டு பேரும் இங்கே இருங்க அத்தை. அப்பாவையும், மாமாவையும் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்…” பிரபஞ்சன் சொல்ல,

“நான் இருக்கேன். நீங்க ராகாவை அழைச்சுட்டு போங்க…” என்றார் மீரா.

“அவள் டயர்ட்டா தெரியுறா அத்தை. வீட்டில் ரெஸ்ட் எடுக்கட்டும்…”

“இல்லை பிரபா, அண்ணி கண் முழிச்சதும் உங்க இரண்டு பேரையும் ஜோடியா பார்க்க ஆசைப்படுவாங்க. அதனால் நீங்க அங்கே இருப்பது தான் சரி வரும்…” என்றதும் வேறு வழியில்லாமல் அவளையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

காரில் செல்லும் போது இருவருக்கும் இடையே மௌனம் மட்டுமே நிலவியது.

அவனிடம் நிறையப் பேச வேண்டும் என்று தோன்றினாலும் எதுவும் பேச முடியவில்லை.

அவனுக்கு அவளிடம் பேசும் ஆர்வமே இல்லை.

நேற்று வரை அவர்களுக்குள் இருந்த இலகுவான மனநிலை இப்போது இல்லாமல் தான் போனது.

அமைதியாக வருவதற்குப் பதில் தூங்குவதே மேல் என்று நினைத்தவள், இருக்கையில் தலையைச் சாய்த்துக் கண்களை மூடி கொண்டாள்.

அப்படியே சற்று நேரத்தில் தூங்கியும் போனாள்.

மருத்துவமனை வந்ததும், “ராகா…” என்று அழைத்துப் பார்த்தான்.

ஆனால் அவளோ நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்ததில் சிறிதும் அசையவில்லை.

“ராகா, ஹாஸ்பிட்டல் வந்திருச்சு. எழுந்திரு…” என்று சப்தமாக அழைத்தான்.

அப்போதும் அவளைத் தொட்டு எழுப்ப முயலவில்லை. அவளுடன் எவ்வளவு வாயடித்தாலும் எப்போதும் அவளைத் தொட்டு பேசவே மாட்டான்.

இப்போது மனைவியாக ஆன பிறகும் அதையே கடைபிடித்தான்.

அவள் இனி தன் மனைவி. தான் அவளைத் தொட்டுப் பேசலாம் என்பது கூட அவனுக்கு உறைக்கவில்லை.

“ராகா…” என்று மீண்டும் கத்தி அழைத்தான். அவன் கத்தலில் திடுக்கிட்டு முழித்தாள் ராகவர்தினி.

“என்ன அத்தான், என்னாச்சு? ஏன் கத்தினீங்க?” என்று பதட்டமாகக் கேட்டாள்.

“எவ்வளவு நேரமா எழுப்புவது? ஹாஸ்பிட்டல் வந்திருச்சு. வா…” என்று சொல்லி விட்டு காரை விட்டு இறங்கினான்.

‘உசுப்பி எழுப்பி இருந்தால் முழிச்சிருக்கப் போறேன். இதுக்கு எதுக்குக் கத்தணும்?’ என்று முணுமுணுத்துக் கொண்டே அவளும் இறங்கினாள்.

அவர்கள் சென்ற போது கஸ்தூரி மயக்கத்தில் தான் இருந்தார். இருவரும் அனுமதி வாங்கி ஒரு முறை பார்த்து விட்டு மட்டும் வந்தனர்.

கஸ்தூரி கண்விழிக்கும் நேரத்திற்காக மாலை வரை காத்திருந்தனர்.

ஆனால் அவர் கண்விழிக்கவே இல்லை. இதற்கிடையில் மாலைக்குப் பிறகு கஸ்தூரியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட ஆரம்பித்தது.

மருத்துவர்கள் உள்ளே செல்வதும், வருவதுமாக இருக்க, பிரபஞ்சன் பயந்து போனான்.

உடனே வீட்டில் இருந்த மாதவனுக்குத் தகவல் அனுப்ப அவரும் வந்து சேர்ந்தார்.

“என்னாச்சு பிரபா, ஆப்ரேஷன் நல்லபடியா முடிந்ததுன்னு தானே சொன்னாங்க. அப்புறம் என்ன பிரச்சனை?” என்று பதறி விசாரித்தார்.

“இப்பத்தான் டாக்டர் பேசினார் மாமா. என்னன்னு தெரியலை. திடீர்னு அம்மா உடல்நிலையில் பின்னடைவுன்னு சொல்றாங்க. இன்னும் பார்த்துட்டு தான் இருக்காங்க…” என்றான் கலங்கிப் போய்.

அவனின் அருகில் சுபேசனும் கலங்கி போய்த் தான் அமர்ந்திருந்தார்.

“ஆப்ரேஷன் முடிந்ததும் எல்லாம் சரியாகிடுச்சுன்னு நினைச்சேன் மாதவா. ஆனா இப்போ… டாக்டர் நம்பிக்கையா எதுவும் சொல்ல மாட்டேங்கிறாங்க…” என்றார் உடைந்த குரலுடன்.

அவரை மாதவனும், பிரபஞ்சனை ராகவர்தினியும் தேற்ற முயன்றனர்.

ஆனால் அவர்களின் தேறுதல் பலனற்று தான் போனது.

ஆம்! கஸ்தூரியின் உடல்நிலை முன்னேற்றமே இல்லாமல் போகக் கணவனையும், மகனையும் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு இறைவனடி சென்றிருந்தார்.

தாயை இழந்து, குழந்தை போல் உடைந்து அழுதான் பிரபஞ்சன்.