17 – நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்

அத்தியாயம் – 17

அன்று சத்யாவை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் நாள்.

மாலை நான்கு மணியளவில் மருத்துவமனையில் இருந்து கிளம்புவதாக இருக்க, மதிய உணவின் போதே அங்கே வந்து விட்டான் தர்மா.

மருத்துவரிடம் அடுத்து வர வேண்டிய நாளை பற்றி விசாரித்து விட்டுக் கிளம்புவதாக இருந்தது.

அதற்கு முன் மருத்துவமனையில் இருந்த பில்லை முடிந்தால் தான் கட்டி விட வேண்டும் என்று நினைத்துத் தான் விரைவில் வந்தான்.

ஆனால் இந்த முறை தியாகராஜன் அவனைக் கட்ட விடவில்லை.

ஏற்கனவே அவன் அறுவை சிகிச்சைக்குச் செலுத்திய பணத்தையே இன்னும் கொடுக்காமல் இருக்கும் நிலையில் இப்போதும் அவனைப் பணம் கட்ட விடுவது சரியில்லை என்று நினைத்தவர் தானே கட்டினார்.

அவன் கொடுத்த பணத்தையும் விரைவில் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.

இரண்டு நாட்கள் முன்பே கொடுக்க முயன்ற போது தர்மா வாங்க மறுத்து விட்டான். ‘வீட்டிற்கு அழைத்துச் சென்ற பிறகு கொடுத்தால் போதும். அதுவரை இப்போது வங்கியில் இருந்து எடுத்து வந்த பணத்தை மற்ற மருத்துவமனை செலவிற்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி மறுத்திருந்தான்.

முடிந்த வரை பணத்தைத் திருப்பித் தர விடாமல் தள்ளிப் போடவே விரும்பினான்.

பணம் கட்ட கூடச் சென்று விட்டு திரும்பி வந்த தர்மா படுக்கையில் தயாராக அமர்ந்திருந்த சத்யாவை பார்த்தான்.

அவளின் முகம் லேசான கலக்கத்துடன் இருந்தது. அதையும் வெளியே தெரியாத வண்ணம் மறைக்கப் போராடிக் கொண்டிருந்தாள்.

அதைக் கண்டவனின் மனம் உருகி போனது. ‘சாரிடா சத்யாமா! உன் இந்தக் கலக்கம் என்னால் தான்னு எனக்கு நல்லா தெரியுது. ஆனா இது உன் நன்மைக்குத் தான்டா’ என்று மானசீகமாக அவளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்.

மனதிற்குள் வேண்டும் அவனின் மன்னிப்பை அறியாமல் அமர்ந்திருந்த சத்யாவின் மனதிற்குள் பெரிய போராட்டமே நடந்து கொண்டிருந்தது.

தர்மாவின் மௌனம் அவளைப் போராட வைத்துக் கொண்டிருந்தது.

‘நான் எப்படி இருக்கேன்? என் கை வலி எப்படி இருக்கு? மாத்திரை சரியா போட்டியா? இந்தக் கேள்வியை எல்லாம் என்கிட்டயே கேட்டால் தான் என்ன? அது என்ன எப்ப பார் என் அம்மாகிட்டயே விசாரிக்கிறது. என்கிட்ட நேரா கேட்க முடியாத அளவிற்கு அப்படி என்ன என் மீது கோபம்? நான் என்ன செய்தேன்?’ என்று மீண்டும் மீண்டும் பல தடவை இந்தக் கேள்விகளைத் தனக்குத் தானே கேட்டு விட்டாள் சத்யா.

ஆனால் பதில் தான் இன்னமும் அவளுக்குத் தெரிந்தபாடில்லை.

அவன் தன்னிடம் பேசாமல் தானாக அவனிடம் பேசக்கூடாது என்று நினைத்திருந்தவள் அவன் ஒருவன் அங்கு வந்து சென்று கொண்டிருப்பதையே அறியாதவள் போலக் காட்டிக் கொண்டாள்.

ஆனால் அவளின் ஒவ்வொரு புலன்களும் அவன் அங்கே இருக்கும் போது அவனைச் சுற்றியே வலம் வந்து கொண்டிருந்தன.

அவனிடம் தெரியும் சிறு அசைவையும் கிரகித்து மன பெட்டகத்தில் சேமித்து வைத்து கொண்டாள்.

அவனின் செருமல், அவனின் கால்கள் நடக்கும் போது ஏற்படுத்தும் சத்தத்தின் லயம், அவன் பேசும் போது குரலில் இருக்கும் ஏற்ற தாழ்வான ஒலிகள், அவன் அவளின் பக்கம் கொஞ்சம் நகர்ந்து வந்தால் வெளிப்படும் மூச்சின் வேகம் என அவனிடம் இருந்து வெளிப்படும் சிறு சிறு நுணுக்கமான ஒலியையும் காதில் வாங்கி மனதிற்குள் நிரப்பிக் கொண்டிருந்தாள்.

இத்தனை விஷயங்களைக் கவனித்தவள் ஒன்றை மட்டும் காதில் வாங்கியும் கருத்தில் வைத்துக் கொள்ளாமல் போனாள்.

அது! தன் பெற்றோரை அவன் மாமா, அத்தை என்று உரிமையுடன் அழைத்ததைக் காதில் வாங்கியும் கருத்தில் ஏற்றிக் கொள்ளவே இல்லை.

தர்மாவை பற்றிய சிந்தனையில் சுழன்றாலும் அது கவனத்தில் இல்லாமல் தான் போனது.

ஒருவேளை அவனின் அந்த அழைப்பை அவளின் மனம் உரிமையாக ஏற்றுக் கொண்டதோ?

நான்கு மணிக்குச் சரியாக மருத்துவமனையில் இருந்து கிளம்பத் தர்மா அவனின் பயிற்சி மையத்தின் காரை எடுத்து வந்திருந்ததால் தானே ஓட்டி அழைத்துச் சென்றான்.

சிறிது கூடப் பிசிறு இல்லாமல் லாவகமாக அவன் கார் ஓட்டியதை உணர்ந்து சத்யாவின் முகம் வியப்பில் மலர்ந்தது.

‘சூப்பரா ஓட்டுறீங்க’ என்று பின்னால் அமர்ந்திருந்த சத்யா சொல்ல நினைத்த போது “அருமையா கார் ஓட்டுறீங்க தம்பி…” என்று வாய்விட்டுச் சொல்லியிருந்தார் அவனின் அருகில் அமர்ந்திருந்த தியாகராஜன்.

அவரைத் திரும்பி பார்த்து மெதுவாகப் புன்னகைத்தவன் “எல்லாம் பயிற்சி தான் காரணம் மாமா. கிட்டத்தட்ட ஒரு வருஷ பயிற்சி. விபத்துக்கு முன்னாடி கார் ஓட்டுவதை விளையாட்டு போலச் சர்வசாதாரணமா செய்துருக்கேன். கால் பாதிச் செயல் இழந்த நிலை ஆன பிறகு ஒட்டு மொத்தமா முடங்கிப் போய்ட்டேன்னு தான் சொல்லணும். பல நாள் படுக்கை தான் இருப்பிடம்.

அப்புறம் மெல்ல நடக்கப் பழகி வெளி உலகத்தில் நானா நடக்க ஆரம்பித்த போது ஒரு வருஷமே ஓடிருச்சு. அதுக்குப் பிறகும் வெளியே எங்கயும் போகணும்னாலும் யாரோட துணையாவது தேவைப்பட்டது. ஒரு கட்டத்தில் நானா தனியா எங்கயும் வெளியே போக முடியாதோன்னு தவிச்சுப் போயிருக்கேன். அப்போ தான் ஒரு பத்திரிகையில் கால் செயல் இழந்தவங்களுக்குக் கார் ஓட்டுற பயிற்சி நிலையம் வைச்சுருக்கேன்னு சிறு வயதில் இருந்தே இரண்டு காலும் செயல் இழந்தவர் பேட்டி கொடுத்திருந்தார்.

அதைப் பார்த்துட்டு தான் உத்வேகம் வந்து நானும் அந்த வேலையைச் செய்தால் என்னனு தோணுச்சு. அதுக்கு முன்னாடி அப்பாவோட டிபார்ட்மென்ட்ல் ஸ்டோரை பார்த்துக்கிட்டு இருந்தவன் தனியா டிரைவிங் ஸ்கூல் நடத்தலாம்னு முடிவுக்கு வந்தேன்.

டிரைவிங் சொல்லிக் கொடுக்கணும்னா நான் அதை நல்லா தெரிந்து வைத்திருக்கணும்னு ஏற்கனவே பழகி விட்டுப் போயிருந்த ட்ரைவிங்கை திரும்பக் கத்துக்கப் போனேன். ஆரம்பத்தில் ரொம்பக் கஷ்டமா இருந்தது. ஆனா எனக்குள் இருந்த ஒரு வெறி என்னை விடாமல் துரத்தி என்னைக் கத்துக்க வச்சது.

இப்படித் தடுமாறாம ஓட்ட எனக்கு ஒரு வருஷம் தேவைப்பட்டது. அதுவும் கால் நல்லா இருக்கும் போது காலிலேயே ஆக்சிலேட்டர், பிரேக் எல்லாம் அழுத்தி பழகிட்டு, காலுக்கு வலுகொடுக்காம கையால் பழகி ஓட்டுவதற்கு ரொம்பவே தடுமாறினேன்னு தான் சொல்லணும்…” என்று சொல்லி முடித்துவிட்டுத் தியாகராஜனை பார்த்து புன்முறுவல் பூத்தவன் கண்ணாடி வழியாகப் பின்னால் இருந்த சத்யவேணியைப் பார்த்தான்.

அவள் அவனின் பேச்சை கேட்டு அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.

கண்ணாடி அணியாததால் அவளின் கண்களின் ஓரம் கண்ணீர் தேங்கி இருந்தது தெரிந்தது.

அவனுக்காக வெளி வந்த அவளின் கண்ணீர் ஏதோ ஒரு விதத்தில் தர்மாவிற்கு இதத்தைத் தந்தது.

“நீங்க பட்ட கஷ்டம் புரியுது தம்பி. ஏற்கனவே தெரிஞ்ச விஷயத்தை மீண்டும் முதலில் இருந்து கத்துக்கிறது கஷ்டமா தான் இருக்கும்…” என்ற தியாகராஜன் மேலும் ஏதோ கேட்க வந்தவர் தயங்கினார்.

“ஏன் தம்பி…” என்று ஆரம்பித்தவர் மேலும் பேசாமல் நிறுத்தியதை பார்த்து அவரின் முகத்தைப் பார்த்தவன் அதில் இருந்த தயக்கத்தைப் பார்த்து “என்ன மாமா? கேளுங்க சொல்றேன்…” என்று ஊக்கினான்.

“நீங்க சொன்னதை எல்லாம் வச்சு பார்த்தா ட்ரைவிங் ஸ்கூல் நடத்தணும்னு முடிவு பண்ணி ரொம்ப நாள் ஆச்சு போல இருக்கே. ஆனா இப்போ சமீபத்தில் ஆரம்பிச்சுருக்கீங்க. அதுவும் உங்க சொந்த ஊரு ஈரோட்டை விட்டு இங்கே வந்து…” என்று ஏன் இந்த ஊருக்கு வந்தாய் என்று கேட்பது போல ஆகிவிடும் என்று நினைத்தவர் பேச்சை நிறுத்தினார்.

அது புரிந்தவன் “கேட்கலாம் மாமா. தப்பே இல்லை…” என்று சொன்னவன் “இரண்டு வருஷத்துக்கு முன்னாடி அப்பாவுக்கு அட்டாக் வந்துருச்சு மாமா. எல்லாம் என்னைப் பற்றியும், அனுவை பற்றியும் நினைச்சு தான். அதில் அவர் பிழைத்து வந்ததே கடவுள் புண்ணியம் தான்…” என்று அவன் சொல்ல…

“ஓ…!” என்று அதிர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார் தியாகராஜன். பின்னால் அமர்ந்திருந்த அவரின் மனைவியும், மகளும் அனுதாபத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.

“ம்ம்… அந்தச் சமயம் தான் ஈரோட்டிலேயே ட்ரைவிங் ஸ்கூல் ஆரம்பிக்க ரெடி பண்ணிட்டு இருந்தேன். அப்பாவுக்கு முடியாம போகவும் ஸ்டோரை நானே பார்த்துக்க வேண்டியது இருந்தது. அப்பாவும் உடம்பு தேறி வர நாளாச்சு. அதில் எனக்கு ட்ரைவிங் ஸ்கூல் பத்தி நினைக்கக் கூட நேரமில்லை.

அப்படியே நாளும் ஓடிப் போயிருச்சு. இப்போ திரும்பச் சமீபத்தில் ஸ்கூல் வைக்கிறதை பத்தி அப்பாக்கிட்ட பேசினேன். நான் ஸ்டோரை பார்த்துக்கிறேன். நீ ட்ரைவிங் ஸ்கூல் ஆரம்பினு சொன்னார். அதுக்கான வேலை ஆரம்பிக்கலாம்னு இருக்கும் போது இங்கே அனுவுக்குக் கொஞ்சம் பிரச்சனை…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே “அவங்களுக்கு என்னாச்சு?” என்று பதறி கேட்டாள் சத்யா.

அவனோடு தான் முதலில் பேச்சை ஆரம்பிக்கக் கூடாது என்பதெல்லாம் அவளின் ஞாபகத்திலேயே இல்லை. அவனின் புதிய முயற்சிக்கு எத்தனை தடங்கல் தான் வரும் என்று நினைத்து வருந்தியவளுக்கு அடுத்து என்ன நடந்தது என்று ஆர்வம் தலை தூக்க வேகமாகக் கேட்டிருந்தாள்.

கண்ணாடியின் வழியே அவளின் முகத்தைப் பார்த்தவன் “அனு இப்போ கன்சீவா இருக்கா சத்யா… நாலு மாசம் ஆகுது…” தர்மாவும் நேரடியாக அவள் கேட்கவும் அவளைத் தவிர்க்க முடியாமல் அவளுக்குப் பதிலைச் சொன்னான்.

“வாவ்…! கங்கிராட்ஸ்! இரண்டாவது தடவையா மாமாவாகப் போறீங்கனு சொல்லுங்க. ஆனா இது சந்தோஷமான விஷயம் தானே… இதில் என்ன பிரச்சனை?” என்று கேட்டாள்.

“ரொம்பச் சந்தோஷமான விஷயம் தான் சத்யா. அதில் எங்க சந்தோஷத்திற்குக் குறைவில்லை. அவளுக்கு இருக்குற பிரச்சனை வேற. இனியா குட்டிக்கு கண்ணு தெரியாம போனதில் அப்போ பிரச்சனை வந்து கோவிச்சுக்கிட்ட மாப்பிள்ளையோட அம்மா, அப்பா இன்னும் மாறலை. கொஞ்சம் கூடப் பேச்சுவார்த்தை, போக்குவரத்து எதுவும் இல்லை. இதுக்கும் இதே ஊரில் இருக்காங்க. மாப்பிள்ளையும் பேசி பார்த்துட்டு அவங்க கோபம் குறையலைன்னு தெரியவும் அதுக்கு மேல அவங்க கிட்ட பேச முடியாம விட்டுட்டார்.

இத்தனை நாள் இனியாவை அனுவும், மாப்பிள்ளையும் கேர் எடுத்து நல்லா பார்த்துக்கிட்டாங்க. ஆனா இப்போ அவ கன்சீவா இருக்கா. இந்த நேரத்தில் அவளுக்கு ஒத்தாசைக்கு ஆள் தேவைப்படுது.இனியாவையும் கவனிச்சுக்கணும். அவ உடல் நிலையையும் பார்க்கணும். மாப்பிள்ளையும் வேலைக்குப் போனா நைட் தான் வருவார். அதோட இனியாவை ஸ்கூலில் சேர்க்கணும். அவளைக் கூட்டிட்டு போக, கூட்டிட்டு வர ஆள் வேணும். இனியா புதிய இடத்தைப் பழகி அதை ஏத்துக்க நாள் ஆகும். இந்தச் சமயத்தில் தானே இனியாவுக்கு அதிகக் கேர் எடுத்துக்கணும்…”

“ம்ம்… சரிதான். புது இடத்தில் அவ பழகுறதுக்குக் கொஞ்ச நாள் ரொம்பக் கஷ்டப்படுவா. அதிகக் கேர் வேணும் தான்…” என்றாள் சத்யா.

“யெஸ்…! அதேதான்! இந்த நேரத்தில் தான் கன்சீவ் ஆகிட்டோமேனு அனுவுக்குக் கொஞ்சம் மனவருத்தம்…”

“அச்சோ…! என்ன இது? இதுக்குப் போய் வருத்தப்படுவாங்களா?” என்றாள் சத்யா.

“அவளுக்கு இனியாவை கேர் பண்ண முடியாமல் போயிருமோன்னு பயம் சத்யா. இன்னொரு குழந்தை வேண்டாம். இனியாவை மட்டும் நல்லா பார்த்துப்போம்னு கூட மாப்பிள்ளையும், அனுவும் பேசியிருந்திருக்காங்க. ஆனா இப்போ கன்சீவ் ஆனதினால் இந்தச் சூழ்நிலையை எப்படிச் சமாளிக்கனு தெரியாம தடுமாறி போய்ட்டா.

மாப்பிள்ளை நல்லவர் தான்! அனுவையும், இனியாவையும் நல்லா பார்த்துப்பார். ஆனா இப்போ தன்னால் இனியாவை தனியா சமாளிக்க முடியாமல் போய் அவருக்குக் கஷ்டத்தைக் கொடுத்திருவோமோனு அவளுக்கு உறுத்தல். அவருக்கும் தான் தொந்தரவு தரக் கூடாதுன்னு நினைக்கிறாள். அதில் லூசு போல எல்லாம் உளற ஆரம்பிச்சுட்டா…”

“ஓ…! என்னனு?”

“இனியா மட்டும் போதும், இப்போ வந்த குழந்தை வேண்டாம்னு…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“ஐயோ…! என்ன சொல்றீங்க?” என்று பதறினாள் சத்யா.

“ஹ்ம்ம்… அவள் அப்படி அம்மாகிட்ட சொல்லவும், அம்மா நல்லா திட்டிவிட்டுட்டாங்க. இப்போ வர போற பிள்ளையை உன்னால வளர்க்க முடியலைனா என்கிட்ட கொடு நான் வளர்த்து விட்டுக்கிறேன்னு அம்மா சொல்லி திட்டவும், எனக்கு இங்கே ஒத்தாசைக்கு யாரும் இல்லை. எங்க மாமியார், மாமனாரே பேசாத போது மத்த சொந்தங்கள் எப்படிப் பழகுவாங்க?

நான் இங்கே தனியா தவிக்கிறேன்னு ஒரே அழுகை. அவள் அழுகவும் அம்மாவும் அழுகை. ஒரு வாரமா மாத்தி மாத்தி அழுகவும், இங்கே அனுவை பார்க்க வந்தோம். அப்போ தான் நான் இங்கேயே நாங்க எல்லாரும் வந்திடலாம்னு ஒரு முடிவுக்கு வந்தேன்…” என்று அவன் சொல்ல, சத்யாவின் வீடு வந்திருந்தது.

அதோடு பேச்சும் நிற்க, ‘நான் இங்கே வர முடிவெடுத்ததிற்குக் காரணம் நீயும் தான்…’ என்று தர்மா தனக்குள் சொல்லிக் கொண்டது சத்யாவிற்கு அப்போதைக்குத் தெரியாமல் போனது.