17 – சிந்தையில் பதிந்த சித்திரமே

அத்தியாயம் – 17

ஞானசேகரனிடம் கதிர்நிலவன் பேசிய பேச்சில் தயா வாயைப் பிளந்து அவனைப் பார்த்தான்.

அபிராமியோ முகத்தில் ஒருவித திருப்தியை வெளிப்படுத்தினார்.

“என்ன நான் உன்கிட்ட பெர்மிஷன் கேட்கணுமா? அவள் என் பொண்ணு. அவளை யார் பார்க்கணும், பார்க்க கூடாதுன்னு நான் தான் முடிவு பண்ணனும். நான் நல்ல மாதிரியா பேசும் போதே இங்கிருந்து போயிடு…” ஞானசேகரனின் பொறுமை காற்றில் பறக்க, கதிர்நிலவனைச் சுட்டெரிப்பது போல் முறைத்தபடி சொன்னார்.

“உங்க பொண்ணு முறை எல்லாம் நேத்தோட போயிடுச்சு. அவள் இனி என் பொண்டாட்டி…” என்று கதிர்நிலவன் சற்றும் அலட்டிக் கொள்ளாமல் சொல்ல,

‘இது எப்ப இருந்து?’ என்பது போல் அவனைப் பார்த்தான் தயா.

“என்ன பொண்டாட்டியா? என்ன தைரியம் உனக்கு?” அவனை அடிக்கவே பார்த்தார் ஞானசேகரன்.

“என்னங்க, என்ன பண்றீங்க?” என்று அவரைத் தடுத்து நிறுத்தினார் அபிராமி.

“விடு என்னை… அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் நம்ம பொண்ணை அவனோட பொண்டாட்டின்னு சொல்லுவான். அவனைச் சும்மா விடச் சொல்றீயா?” அபிராமியின் பிடியிலிருந்து திமிறினார்.

“அவர் சொல்றதில் என்னங்க தப்பு? நேத்து வரை நம்ம பொண்ணா இருந்தவள், இவர் கிடைக்க மாட்டார்னு எப்ப சாகத் துணிந்தாளோ அப்பவே அவள் நம்ம கையை விட்டு போயிட்டாள். அப்படி இருக்குறப்ப அவரைத் தடுக்க உங்களுக்கோ எனக்கோ இனி எந்த உரிமையும் இல்லை…” என்றார் அபிராமி.

“என்ன பேசுற நீ? புரிஞ்சி தான் பேசுறியா? என்னவோ அவன் தாலி கட்டிய மாதிரி நீயும் அவனுக்குச் சப்போர்ட்டா பேசுற?” அவனை விட்டு மனைவியுடன் சண்டைக்குத் தயாரானார்.

“நான் நல்லா புரிஞ்சி தாங்க பேசுறேன். உங்களுக்குத் தான் எதுவும் புரிந்து கொள்ள முடியாமல் கோபம் கண்ணை மறைக்குது. இப்ப நயனி கண் முழிச்சுடுவா. அவள் முன்னாடி நாம சண்டை போட்டுக்க வேண்டாம். வாங்க இப்படி…” என்று கணவனின் கையைப் பிடித்து வெளியே அழைத்துச் சென்றார் அபிராமி.

அவர்களின் பின்னால் செல்லும் போது கதிர்நிலவனை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றான் தயா.

“ஏய், என்ன அபிராமி நீயும் அவன் கூடச் சேர்ந்து ஆடுறியா?” என்ற ஞானசேகரனின் குரல் தேய்ந்து ஒலித்தது.

அபிராமியின் புரிதலில் நெகிழ்ந்த மனதுடன் அறைக்குள் நுழைந்த கதிர்நிலவனின் கண்கள் படுக்கையில் ஒரே நாளில் முற்றிலும் துவண்டவள் போல் சோர்வுடன் கிடந்தவளை வலியுடன் நோக்கின.

ஒரு கையில் அவள் வெட்டிக்கொண்ட காயத்திற்கான கட்டு இருக்க, இன்னொரு கையில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது.

அவள் வெட்டிக் கொண்ட கை பக்கமாக அமர்ந்து, அந்தக் கட்டை மயிலிறகால் வருடுவது போல் மென்மையாக நீவினான்.

அதுவரை கண்களை உறக்கத்திற்குக் கொடுத்திருந்தவள், உறக்கத்தைத் துறந்து மெல்ல இமைகளைப் பிரித்தாள்.

கண் திறந்ததும் எதிரே இருந்தவனை நம்ப முடியாமல் பார்த்தாள். தான் கனவு எதுவும் காண்கிறோமோ? என்ற எண்ணத்தில் மீண்டும் இமைகளை மூடி திறந்தாள் நயனிகா.

நீ கண்டது கனவில்லை என்று சொல்வது போல், அவளையே பார்த்துக் கொண்டிருந்த கதிர்நிலவன் அவளின் கலைந்த தலைமுடியை லேசாக ஒதுக்கிவிட்டான்.

அவளின் நெற்றியை மென்மையாக நீவிவிட்டவன் விரல்கள் மெல்ல அவளின் கன்னத்தை வருட ஆரம்பிக்க, அவனின் ஸ்பரிசத்தில் மெய்சிலிர்த்து போய் விழிகளை விரித்துப் பார்த்தாள்.

அவளின் விழியோடு விழி நோக்கியவன், “ஏன்டி இப்படிச் செய்த?” கதிர்நிலவன் நயனிகாவிடம் கேட்ட முதல் கேள்வியே அதுவாகத்தான் இருந்தது.

மனதிற்குள்ளேயே பல முறை கேட்ட கேள்வியை அவளிடமும் கேட்டான்.

அவன் குரலில் ஒலித்த உரிமை தொனியில் அவளின் விழிகள் இன்னும் பெரிதாக விரிந்தன.

“சொல்லுடி, ஏன் இப்படிச் செய்த?” என்றவனுக்குப் பதில் சொல்லாமல் இமைகளைத் தாழ்த்திக் கொண்டாள்.

“உயிர் உள்ள வரை என்னைக் காதலிப்பேன்னு சொன்னியே நயனிகா… உன் காதலுக்கு ஆயுள் இவ்வளவு தானா?” அவனிடமிருந்து அடுத்தக் கேள்வி கூர்மையுடன் வந்து விழுந்தது.

தாழ்த்திய இமைகளை உயர்த்தி அவனைப் பார்த்தவள், “என் உயிர் உள்ளவரை உங்களைக் காதலிப்பேன்னு தான் சொன்னேன். என் உயிர் இருக்கும் போதே எவனோ ஒருவனுக்கு மனைவி ஆவேன்னு சொல்லலையே? இன்னொருத்தனை கட்டிக்கிட்டு வாழுன்னு நீங்க சொன்ன பிறகு இந்த உயிர் எதுக்கு?” என்று சொன்னவளுக்குப் பதில் சொல்லும் திராணியற்று போவது இப்போது அவனின் முறை ஆகிற்று.

“என் காதலுக்கு ஆயுள் அதிகம் தான். அதனால் தான் இறந்தால் உங்க நினைவுகளோட மட்டுமே இறந்து போகணும்னு நினைச்சேன். அடுத்தவன் முன்னாடி சும்மா பெயருக்கு கூட நிற்க என்னால் முடியலை…” என்றாள் மெல்ல.

அவளின் கண்களை ஊடுருவியவன் கண்கள் காதலை பிரதிபலித்தது.

நெஞ்சம் அவளின் காதலில் விம்ம, “உன்னோட இந்தக் காதலுக்கு நான் அருகதையானவனே இல்லை நயனிகா…” என்றான் வலியுடன்.

“ம்ப்ச்…” அவனின் பேச்சுப் பிடிக்காமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

அப்போது தான் தன் குடும்பத்தினர் யாரும் அறைக்குள் இல்லாததைக் கண்டவள், “அப்பா, அம்மா, தயா எல்லாம் எங்கே?” என்று கேட்டாள்.

“வெளியே இருக்காங்க…” என்றவன், அவளின் கையை மென்மையாக பற்றிக் கொண்டான்.

‘அவ்வளவு கோபமாக இருந்த தந்தை இவரை உள்ளே விட்டு அவர் எப்படி வெளியே சென்றிருப்பார்?’ என்ற கேள்வி தோன்ற, சட்டென்று அவன் புறம் திரும்பினாள்.

“அப்பா எப்படி உங்களை என்னைப் பார்க்க விட்டார்?” என்று கேட்டாள்.

“அவர் ஏன் என்னைப் பார்க்க விடணும்?” என்று திருப்பிக் கேட்டவனைப் புரியாமல் பார்த்தாள்.

“இப்பத்தான் கண் முழிச்சுருக்க. ரொம்ப டயர்டா வேற தெரியுற? நான் போய் உனக்குக் குடிக்க ஏதாவது கொடுக்கலாமான்னு கேட்டுட்டு வர்றேன்…” என்றவன் அவளுக்குப் பதில் சொல்லாமல் எழுந்து சென்றான்.

இவ்வளவு நாட்களும் தன்னை விட்டு விலகி விலகிச் சென்றவன், தன் காதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றவன், தன்னை வேறொருவனைத் திருமணம் செய்து கொள்ளச் சொன்னவன் இப்போது மட்டும் எப்படி இவ்வளவு இலகுவாகத் தன்னைத் தொடுகிறான்? இயல்பாகப் பேசுகிறான்? என்ற கேள்வியுடன் அவன் முதுகையே வெறித்துப் பார்த்தாள்.

அவன் வெளியே சென்ற அடுத்த நிமிடம் நயனிகாவின் குடும்பத்தினர் உள்ளே நுழைந்தனர்.

மகளின் அருகில் சென்ற அபிராமி, அவளின் தலையை மெல்ல தடவி விட்டார்.

‘ஏன் இப்படிச் செய்தாய்? நாங்க உனக்கு முக்கியமில்லையா?’ என்பது போல் எந்தக் கேள்வியும் அவரிடமிருந்து வரவில்லை.

மகள் உயிர் பிழைத்து வந்ததே போதும் என்பது போல் அமைதியாக இருந்தார்.

“நீ இப்படிச் செய்வன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலைக்கா. தெரிஞ்சிருந்தால் உன்னைத் தனியாவே விட்டுருக்க மாட்டேன். என்னைப் பத்தி, அம்மா பத்தியெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்கலைல நீ?” ஆதங்கமும் கோபமுமாகக் கேட்டான் தயா.

“இல்லடா தயா, எனக்கு வேற வழி தெரியலை…” என்று முனங்கினாள்.

“அவளுக்கு நாம எப்படிக் கண்ணில் தெரிவோம்? அதான் காதல் கருமம்னு அவள் கண்ணை மறைச்சுடுச்சே…” அவ்வளவு நேரம் விறைத்துக் கொண்டிருந்த ஞானசேகரன் கோபமாக இரைந்தார்.

நயனிகாவின் முகம் சட்டென்று சுணங்கியது.

“என்னங்க, கொஞ்சம் அமைதியா இருங்க. அவளே இப்பத்தான் கண் முழிச்சுருக்கா…” கணவனை அடக்க முயன்றார் அபிராமி.

“போதும் நிறுத்து அபிராமி. எனக்கும் அவள் மேல பாசம் இருக்கு. அது உங்க யாருக்கும் புரியாம போனது தான் எனக்கு வருத்தமா இருக்கு. அவள் நல்லா வாழணும்னு நினைச்சதை தவிர நான் எந்தத் தவறும் செய்யலை. ஆனா நல்லது நினைச்ச நான் உங்களுக்கு எல்லாம் வில்லனா தெரியுறேன். பரவாயில்லை, தெரிஞ்சிட்டு போறேன். இப்பவும் அவள் நல்லதுக்காகத்தான் சொல்றேன். அவனை இவள்கிட்ட நெருங்க விடாதே…” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கையில் பழச்சாறுடன் அங்கே வந்தான் கதிர்நிலவன்.

அவனை அவர் உக்கிரமாக முறைக்க, அதை எல்லாம் அவன் சிறிதும் கண்டு கொள்ளாமல் நயனிகாவின் அருகில் சென்றான்.

“இப்போதைக்கு ஜூஸ் மாதிரி தான் கொடுக்கச் சொல்லிருக்காங்க நயனிகா. நைட் இட்லி வாங்கிக் கொடுக்கச் சொன்னாங்க. இப்போ ஜூஸ் வாங்கிட்டு வந்தேன், குடி…” என்றான்.

அவள் தயக்கமாகத் தன் பெற்றவர்களைப் பார்க்க, “நீ ரொம்பப் பண்ற கதிர்…” என்று கத்தினார் ஞானசேகரன்.

“என்னங்க, போதும்! இங்கே வச்சு எதுவும் பேச வேண்டாம்…” என்று அபிராமி அவரை அடக்கியவர், “இங்கே கொடுங்க தம்பி, நான் கொடுக்குறேன்…” என்று கையை நீட்டினார்.

“இல்லம்மா. நானே கொடுக்குறேன்…” என்றவன், பழச்சாறை ஓரமாக வைத்து விட்டு, நயனிகாவின் தலைக்குக் கீழ் கை கொடுத்து தூக்கி லேசாக அமரவைத்தான்.

அவனின் அருகாமையில் தவித்துப் போனாள் நயனிகா.

தன் பெற்றவர்களை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அவள் தவிக்க, ஞானசேகரனோ அங்கே நடப்பதை பார்க்க முடியாமல் விருட்டென்று வெளியேறினார்.

அவளை அமர வைத்துப் பழச்சாறை அவள் வாயில் வைத்து புகட்ட முயல, “நீங்க ஏன் இதெல்லாம் செய்யணும்? அம்மாகிட்ட கொடுங்க…” என்றாள் நயனிகா.

“இனி நான் தான் உனக்குச் செய்யணும். குடி…” என்று சொன்னவன் டம்ளரை அவளின் உதட்டில் அழுத்தமாக வைத்தான்.

பழச்சாறை வாயில் வாங்கித் தொண்டைக்குள் இறக்கிக் கொண்டாலும், அவனின் புதிய பரிமாணத்தால் தோன்றிய கேள்வி மட்டும் அவள் மனதை விட்டு அகலவில்லை.

தன் மன கேள்விக்குப் பதில் அறிந்து கொள்பவள் போல அவனின் கண்களையே கூர்மையாகப் பார்த்தாள்.

அவனோ காதலும், கனிவுமாக அவளுக்குப் பழச்சாறை புகட்டினான்.

அவள் குடித்து முடித்ததும் வாயையும் துடைத்து விட்டான்.

“கொஞ்சம் நேரம் மட்டும் உட்கார்ந்துட்டு அப்புறம் படுத்துக்கோ…” என்றான்.

“அம்மா, நேத்தில் இருந்து நீங்க வீட்டுக்கே போகலையே. உங்க சேலையெல்லாம் லேசா ரத்தமா வேற இருக்கு. நீங்க வேணும்னா வீட்டுக்கு போயிட்டு வாங்க. நான் இங்கே இருக்கேன்…” என்று அபிராமியிடம் சொல்ல,

“சரி தம்பி…” என்று அமைதியாகச் சொன்ன அபிராமி, “வா தயா, போயிட்டு வந்திடுவோம்…” என்று மகனை அழைத்தார்.

தயாவோ, ‘இங்கே என்னடா நடக்குது?’ என்பது போல் அமைதியாக நின்றான்.

இன்று இப்படி உரிமை எடுத்துக் கொள்பவர், நேற்றும் மட்டும் ஏன் அப்படிச் சொன்னார்? அவர் மட்டும் நேற்றே தன் அக்காவின் பக்கம் நின்றிருந்தால் அவள் இத்தனை கஷ்டப்பட்டிருக்க மாட்டாளே? என்று கேள்வி அவனை இம்சித்தது.

கதிர்நிலவனை ‘இதற்கு எல்லாம் என்ன அர்த்தம்?’ என்பது போல் பார்த்துக் கொண்டு நின்றான்.

அவனின் பார்வையை எதிர்கொண்ட கதிர்நிலவன் மென்மையாகச் சிரித்துக் கொண்டானே தவிர, எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

“வர்றியா தயா?” அபிராமி மீண்டும் அழைக்க,

“நீங்களும், அப்பாவும் போய்ட்டு வாங்கமா. நான் அப்புறம் போய்க்கிறேன்…” என்றான் தயா.

‘சரி’ என்று அவரும் கிளம்பி விட்டார்.

அவர் சென்றதும், “நான் என் அக்காகிட்ட தனியா பேசணும்…” கதிர்நிலவனை நேராகப் பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான்.

அவனின் விறைத்த பேச்சில் உதடுகள் விரிய சிரித்த படி வெளியே சென்றான் கதிர்நிலவன்.

“என்னக்கா இதெல்லாம்?”

“தயா, என்னடா இதெல்லாம்?” தம்பி கேட்ட அதே கேள்வியை அதே நேரத்தில் தானும் கேட்டு வைத்தாள் நயனிகா.

“என்னடா தயா, இவர் எப்படி இப்படி மாறினார்? நேத்து கூட என்னை வேற யாரையாவது கட்டிக்கச் சொன்னாரே. இப்ப மட்டும் எப்படி? என் மேல இரக்கமோ?” என்று கேட்டாள்.

“அதான்கா எனக்கும் தெரியலை. நேத்து நைட் எல்லாம் ஒரு வாய் தண்ணி கூடக் குடிக்காம வெளியே காத்திருந்தார்கா. அது மட்டும் இல்லை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அப்பாகிட்ட என்ன சொன்னார் தெரியுமா?” அவன் நிறுத்த,

“என்ன சொன்னார்?”

கதிர்நிலவன் சொன்னதை அப்படியே தமக்கையிடம் பகிர்ந்து கொண்டான்.

“பொண்டாட்டின்னு சொன்னாரா?”

“ம்ம், ஆமா…”

“ஓ!” என்றவள் முகத்தில் சந்தோஷத்திற்குப் பதில் யோசனை ரேகை ஓடியது.

“கெட்டதுலயும் ஒரு நல்லது போலக்கா. அவர் மனசு மாறியிருக்கு. உன் காதல் ஜெயிச்சிருக்குக்கா. இனி கவலை இல்லைன்னு நினைக்கிறேன்…” என்று தயா சொல்ல, அவளால் மகிழத்தான் முடியவில்லை.

“அம்மாவும் உங்க பக்கம் தான்க்கா. அப்பா தான் இன்னும் துள்ளிட்டு இருக்கார். ஆனா அவரையும் அம்மா பார்த்துக்குவாங்கன்னு நினைக்கிறேன். அதனால் கவலைப்படாம, இனி இந்த முட்டாள்தனம் பண்ணாம இருக்கா…” என்றான் தயா.

“ம்ம்…” என்று முனங்கினாலும் நயனிகாவின் முகம் தெளியவில்லை.

அதன் பிறகு இரண்டு நாட்கள் மருத்துவமனையில் நயனிகா இருந்த போதும் அவளுடனே இருந்து பார்த்துக் கொண்டான் கதிர்நிலவன்.

ஞானசேகரனின் பொருமலோ, கோபமோ, முறைப்போ எதையும் அவன் சட்டையே செய்யவில்லை.

எவ்வளவுக்கு எவ்வளவு முன்பு நயனிகாவை விட்டு விலகினானோ அதை விட அதிகமாக இப்பொழுது அவளை நெருங்கினான்.

அவனின் நெருக்கத்தைக் கண்டு நயனிகாவால் மகிழ முடியவில்லை.

இதுவே அவள் காதல் சொல்லி அவன் பின்னால் சுற்றிய போது அவனும் காதல் சொல்லியிருந்தால் தலைகால் புரியாமல் மகிழ்ந்து கொண்டாடியிருப்பாள்.

ஆனால் வேறு ஒருவனைத் திருமணம் செய்யச் சொன்னவன், இப்பொழுது தான் சாகத் துணிந்த பிறகு நெருங்கி வருவதை ஏனோ அவளால் இயல்பாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

அப்போ என் மீதான இரக்கத்தினால் தான் தன்னை நெருங்கி வருகிறானா? என்ற எண்ணம் அவளை இறுகி போக வைத்தது.

காதலுக்கு எதிர்வினை காதல் தான் வேண்டுமே தவிர, இரக்கம் அல்ல! என்று நினைத்தவள் அவனின் நெருக்கத்தில் தகித்துத் தான் போனாள்.

அதிலும் ஞானசேகரன் மகள் தற்கொலைக்கு முயன்று பிழைத்து வந்த பிறகும் சிறிதும் மாறவில்லை.

கதிர்நிலவனுக்கு அவள் சரியான ஜோடி இல்லை என்ற எண்ணத்திலிருந்து அவர் முற்றிலும் மாறவில்லை.

ஆனால் அபிராமியோ மகள் மீண்டும் தவறான முடிவு எடுத்தால் தங்களுக்கு இல்லாமலேயே போய்விடுவாளோ என்று பயந்தவர், கணவனின் எதிர்ப்பையும் மீறி அமைதியாக இருந்தார்.

முன் போல் அவர் செய்வதற்கு எல்லாம் சரி என்று சொல்லிக் கொண்டிருக்காமல் எதிர்த்தும் நின்றார்.

இரண்டு நாட்களும் அப்படியே செல்ல, அன்று மருத்துவமனையிலிருந்து நயனிகா வீட்டிற்குச் செல்லும் நாள்.

அபிராமி அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க, அப்போது கோபமாக அறைக்குள் நுழைந்தார் ஞானசேகரன்.

“டேய், உன் மனசில் என்னடா நினைச்சுட்டு இருக்க?” வந்ததும் வராததுமாகக் கதிர்நிலவனின் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்டார்.

“என்னங்க, என்ன பண்றீங்க?” என்று அபிராமி ஓடி வர, நயனிகா திகைத்து தந்தையைப் பார்க்க, கதிர்நிலவனோ நிதானமாகத் தன் சட்டையிலிருந்த அவரின் கையை எடுத்து விட்டான்.

“இப்ப என்ன ஆச்சு?” அதே நிதானமான கேள்வி அவனிடம்.

“என் மகள் ட்ரீட்மெண்ட்டுக்கு நீ யார்டா பணம் கட்ட? எனக்குப் பணம் கட்ட வக்கு இல்லைனு உன்கிட்ட சொன்னேனா?” என்று கேட்டார்.

“உங்களுக்கு வக்கு இல்லைன்னு நான் ஒன்னும் சொல்லலையே? நான் இரண்டு நாள் முன்னாடி சொன்னதே தான் இப்பவும் சொல்றேன். அவள் இனி என் பொண்டாட்டி. அவளுக்கான செலவை நான் தான் செய்யணும்…” என்றான்.

அவர்களின் சண்டையைப் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த நயனிகா விலுக்கென்று திரும்பி கதிர்நிலவனின் முகம் பார்த்தாள்.

அவனின் முகத்தில் இருந்த தீவிரம் அவன் மனதை எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தது.

“என்னமோ அவள் கழுத்தில் தாலி கட்டியவன் போலப் பேசுற. இன்னும் அவள் என் பொண்ணாகத்தான் இருக்காள். போதும் உன் ஆட்டம்! இதோட நிறுத்திக்கோ…” என்றார்.

“ஆட்டமா? அதை நான் இனி தானே ஆடப் போறேன். முன்னாடி மாதிரி நீங்க மிரட்டியதும் ஓடி ஒதுங்கி போற கதிர்நிலவன் இல்லை நான். இப்போ இங்கே இருப்பது நயனிகாவின் கதிர்நிலவன். என்னை உங்களால் அசைக்கக் கூட முடியாது…” என்று சொன்னவனை அதிர்வுடன் பார்த்தாள் நயனிகா.

‘என்ன அப்பா இவரை மிரட்டினாரா?’ என்று பார்க்க,

அவள் மனதில் நினைத்த கேள்வியை அபிராமி வெளிப்படையாகவே கேட்டார்.

“என்ன தம்பி சொல்றீங்க? இவர் மிரட்டினாரா?”

“ஆமாம்மா. நயனிகா என்கிட்ட பார்க்கிங்ல பேசிட்டு இருந்ததைப் பார்த்தவர் என்னைத் தனியா சந்திச்சு பேசினார். என் பொண்ணுக்கு உன்னை மாதிரி கை இல்லாதவனுக்குக் கொடுக்க முடியாது. அவள் வழியிலிருந்து விலகி போய்டு. இல்லைனா உன்னோட இன்னொரு கையும் இல்லாம போய்டும்னு சொன்னார்…” என்று அவன் சொல்ல,

‘தன் தந்தையா இப்படிச் சொன்னார்?’ நம்ப முடியாமல் தந்தையை வெறித்தாள் நயனிகா.

“என்னங்க இதெல்லாம்?” என்று அபிராமி கேட்க,

“பின்ன என்னை என்ன செய்யச் சொல்ற? உன் பொண்ணு தான் என்னை இப்படி எல்லாம் நடக்க வச்சது. இவளுக்கு விரும்புறதுக்கு வேற ஆளா கிடைக்கலை?” என்று சிடுசிடுத்தார் ஞானசேகரன்.

“அப்ப அப்பா மிரட்டலுக்குப் பயந்து விலகி போனவர் இப்ப மட்டும் எப்படி என்னை நெருங்கி வர்றீங்க? உங்களுக்காகச் சாகப் போனதால் என் மேல் இரக்கமா? இரக்கத்தினால் வந்த காதலை நான் எப்படி எடுத்துக்கிறது?” என்று ஒரு மாதிரியான குரலில் கேட்டாள் நயனிகா.

“இரக்கமா? உன் மேலயா?” என்று விரக்தியாகக் கேட்ட கதிர்நிலவன், தலையை அழுந்த கோதி ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டான்.

“இரக்கத்தினால் வர்ற காதல், காதலே இல்லை நயனிகா. என் காதல் இரக்கத்தால் வந்த காதல் இல்லை…” என்றான் கதிர்நிலவன்.