17 – உனதன்பில் உயிர்த்தேன்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 17
தன் சந்தோஷம் இவ்வளவு சீக்கிரமாகக் குறைந்து போகுமென்று தேன்மலர் எதிர்பார்க்கவே இல்லை.
சட்டென்று அவளின் மனதில் சுணக்கம் வந்து அமர்ந்து கொள்ள, அவளின் நடையும் தளர்ந்து நின்று போனது.
வழக்கமாகக் கோவிந்தனுக்குத் தகவல் சொல்லும் ராமர் இந்த முறை தகவல் சொல்ல, வீட்டில் இல்லாமல் கையும், காலும் ஒடிந்து மருத்துவமனையில் கிடந்தான்.
அவனின் சபலபுத்தியை பற்றி நன்கு அறிந்த அவனின் மனைவி அவனைப் பார்த்துக் கொள்ள முடியாது என்று அம்மாவின் வீட்டில் சென்று அமர்ந்து விட, ராமர் தனியாக மருத்துவமனையில் கிடந்தான்.
அவன் தகவல் சொல்லாததால் கோவிந்தனுக்குத் தேன்மலர் அவ்வீட்டிற்கு வந்து சேர்ந்த செய்தி தாமதமாகத்தான் தெரியவந்தது.
உடனே மனைவியுடன் கிளம்பி வந்து வாசலில் இருந்தே கத்திக் கொண்டிருந்தார்.
“எய்யா, இப்ப என்னாத்துக்கு வீதில நின்னே கத்துறீரு? வூட்டுக்குள்ளார வாரும். உட்கார்ந்து பேசுவோம்…” என்றார் அப்பத்தா.
“வூட்டுக்குள்ள உட்கார்ந்து பேச நா என்ன சம்பந்தம் பேசவா வந்தேன்?” என்று கடுப்பாகக் கேட்டார்.
“எம்மா கோமதி நீயாவது உம் புருசனுக்கு எடுத்து சொல்ல கூடாதா? அப்படி எம் பேரன் என்ன தப்பு பண்ணிப் போட்டான்னு உம் புருசன் இந்தக் குதி குதிக்கிறாரு? உம்ம மவ போய்ச் சேர்ந்துட்டா. அதுக்காக எம் பேரன் கால முச்சூடும் ஒத்தைல காலத்தைக் கழிக்கணுமா? அவனுக்கும் ஒரு வாழ்க்கை வேணாமா? உம் மருமவன் இடத்துல உமக்கு ஒரு மவன் இருந்தா அவன் ஒத்தைலயே கிடக்கட்டும்னு நினைப்பியா?” என்று கோமதியிடம் நியாயம் கேட்டார்.
அதற்குக் கோமதி எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக இருக்க, “அவகிட்ட என்ன பேச்சு? எங்கிட்ட பேசும். நீர் கேட்டது போல எம் மவன் வாழ்க்கையைத் தொலைச்சுட்டு நின்னா நா நல்ல ஒரு குடும்பத்துப் பொண்ணா பார்த்து அவனுக்குக் கட்டி வச்சுருப்பேன். இப்படி வேசி மவளை கட்டி வச்சுருக்க மாட்டேன்…” என்று நக்கலாகச் சொன்னார் கோவிந்தன்.
“எய்யா, வார்த்தையை அளந்து பேசும். வேசி அது… இதுன்னு தப்பா பேசாதீர். இப்ப அவ எம் பேரனோட பொஞ்சாதி…” என்றார் அப்பத்தா.
“அப்ப, எம் மவ யாரு?” என்று எகத்தாளமாகக் கேட்டார்.
“இதுல என்ன சந்தேகம் மாமா? எம் பொஞ்சாதி தேன்…” என்று சொல்லியபடி அங்கே வந்தான் வைரவேல்.
அவன் அப்படிச் சொன்னதும் தேன்மலருக்கு சுருக்கென்று தைத்தது.
‘அப்போ தான் யார்?’ என்ற கேள்வி எழுந்தது.
நேற்று வரை அதைப் பற்றி யோசிக்காதவளின் மனது இன்று நினைக்க ஆரம்பித்தது.
அவனின் புறம் திரும்பிய கோவிந்தன், “அப்போ எம் மவ இருந்த இடத்துல இவளுக்கு என்ன சோலி மாப்ள?” என்று அங்கே நின்றிருந்த தேன்மலரை பார்த்துக் கேட்டார்.
இப்போதைய கேள்விக்கு வைரவேல் சட்டென்று பதில் சொல்லிவிடவில்லை.
அதில் இன்னும் தேன்மலரின் மனது காயப்பட்டுப் போனது.
இனி தான் இங்கே நிற்பதில் என்ன அர்த்தம் உண்டு? என்று நினைத்தவளின் கால்கள் அப்படியே திரும்பி தன் வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்தன.
“எங்கன போற? நில்லு…” அவள் கையைப் பிடித்து நிறுத்திய வைரவேல், அவளை அழைத்துக் கொண்டு கோவிந்தன் அருகில் வந்தான்.
“உம்ம மவ எம் பொஞ்சாதி தேன் மாமா. ஆனா இப்ப இவ கழுத்துல நா கட்டிய தாலி இருக்கு. இதுலேயே இவ எமக்கு என்ன உறவுன்னு நா சொல்லித்தேன் உமக்குத் தெரியணுமா என்ன?” என்று நிதானமாகத் திருப்பிக் கேட்டான்.
நேரடியாகச் சொல்லவில்லை என்றாலும், அவள் கையைப் பற்றி அவன் கேட்ட அந்தக் கேள்வி, தீயாகக் காய்ந்து கொண்டிருந்த தேன்மலரின் மனதை குளிர வைத்தது என்னமோ நிஜம்.
“நீ உள்ளார போ…” என்று தேன்மலரை வீட்டின் பக்கம் நகர்த்தியவன், “போதும் மாமா. பிரச்சனையை இதோட முடிச்சுக்கலாம். உம்ம மவ, அதுதேன் எம் பொஞ்சாதி குமுதா செத்தது விதினா, இவ கழுத்துல நா தாலிக் கட்ட காரணமும் விதிதேன். யாரும் எதுவும் திட்டம் போட்டு செய்யலை.
ஆனா நீர் நா என்னவோ திட்டம் போட்டு எல்லாம் செய்தது போல நிறையப் பேசிட்டீர், செய்துட்டீர். அந்த ராமரை வச்சு நீர் செய்தது எல்லாம் எமக்குத் தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கீரா? எல்லாம் தெரியும் மாமா. அவனைத் தூண்டி விட்டு இவளை தொந்தரவு கொடுக்கச் சொன்னதே நீர் தேன்னு தெரிஞ்சும் நா பேசாமத்தேன் விலகி இருக்கேன். ஆனா நீர் திரும்பத் திரும்பப் பிரச்சனை பண்றீர். உமக்கு என்ன தேன் மாமா பிரச்சனை?” என்று கேட்டான்.
அவன் ராமரை பற்றிச் சொன்னதும் உள்ளுக்குள் திடுக்கிட்டுப் போனார். ஆனாலும் வெளியே ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் தெனாவட்டாக அவனைப் பார்த்தார்.
“இதோ பாரும் மாப்ள, நீர் எவள வேணுமானாலும் கட்டிக்கோ, இல்லை வச்சுக்கோ. அதைத் தட்டிக் கேட்குற கட்டத்தை எல்லாம் நீர் தாண்டிட்டீர். இனி நா என்ன சொன்னாலும் இந்தச் சிறுக்கிய விட மாட்டீர்ன்னு தெரிஞ்சி போச்சு. இனி நா பிரச்சனை பண்ணலை. ஆனா எம் மவ கழுத்துல தொங்குன அதே தாலி அந்த வேசி மவ…” என்று சொல்லும் போதே…
“இனி அந்தப்புள்ளய வேசின்னு சொன்னா மாமன்னு கூடப் பார்க்க மாட்டேன்…” என்று பற்களைக் கடித்துக் கொண்டு கோபப்பட்டான்.
“அது சரி முத்திப் போச்சு…” என்றவர், “அவ கழுத்துல எம் மவ தாலி தொங்க கூடாது. கழட்டிக் கொடும். நா போயிடுறேன். அதோட இனி உமக்கும், எமக்கும் இருக்குற உறவு இதோட அத்துப் போகட்டும்…” என்றார்.
வைரவேலுவின் முகம் மாறியது.
“அது எம் பொஞ்சாதி தாலி மாமா. அதை ஏன் நா உமக்குத் தரணும்?” என்று இறுகிய முகத்துடன் கேட்டான்.
“எம் மவ தாலி புனிதமானது மாப்ள. அது கண்டவ கழுத்துல கிடக்குறதை பார்த்துட்டு எம்மால சும்மா இருக்க முடியாது…” என்று கோவிந்தன் பிடிவாதமாக இருக்க, வைரவேல் அவரை அதே இறுக்கத்துடன் பார்த்தான்.
எப்படியும் அந்தத் தாலியை கழட்டுவதில் தான் இவர் குறியாக இருக்கிறார் என்பதில் அவனுக்குச் சுள்ளென்று கோபம் வந்தது.
ஆனாலும் பிரச்சனையை மீண்டும் மீண்டும் அதிகமாக்குவதை விரும்பாதவன் கோபத்தை அடக்கிக் கொண்டு நின்றான்.
“எய்யா, அவன் பொஞ்சாதி கழுத்துல இருக்குற தாலியை அவனையே கழட்டிக் கொடுக்கச் சொல்றீரே இது உமக்கே நியாயமா இருக்கா?” என்று அப்பத்தா சொல்ல,
“எல்லாம் நியாயமாத்தேன் சொல்றேன் ஆத்தா. ஒன்னு எம் மவ தாலியை கழட்டிக் கொடுக்கச் சொல்லுங்க. இல்லைனா வூரு பஞ்சாயத்தைக் கூட்டி ஏ நியாயத்தை நா கேட்டுக்கிறேன்…” என்றார்.
அவரின் பிடிவாதத்தில் எரிச்சல் வர, “அப்பத்தா இவரு இப்படித்தேன் கோட்டித்தனமா ஏதாவது பேசிட்டு இருப்பாரு. பஞ்சாயத்தைக் கூட்டினா நம்ம பக்கந்தேன் நியாயம் நிக்கும்னு கூட யோசிக்க மாட்டிங்கிறார். விடும், நீர் போய்ச் சோலியை பாரும்…” என்றான் கடுப்பாக.
“என்ன மாப்ள எம்மையே கோட்டிபயன்னு சொல்றீரா? சரிதேன் நா கோட்டிபயலாவே இருந்து போட்டு போறேன். ஆனா எம் மவ தாலியை அந்தச் சிறுக்கி கழுத்துல இருந்து கழட்டி தராம விடமாட்டேன்…” என்றார்.
“வேணாம் மாமா…” என்று அவன் கோபமாகச் சொல்ல வர,
“எய்யா இரு…” என்று அவனை அமைதிபடுத்தினார் அப்பத்தா.
“இப்ப என்ன அந்தத் தாலி தேன் உமக்குப் பிரச்சனை?” என்று கோவிந்தனிடம் கேட்டார்.
அவரின் கேள்வியைக் கதவருகில் நின்று கேட்டுக் கொண்டிருந்த தேன்மலர் அவரை விக்கித்துப் பார்த்தாள்.
“அப்பத்தா நீரும் என்ன?” என்று வைரவேல் கேட்க,
“காரணமாத்தேன். நீர் உள்ளார வாரும். எம்மா கோமதி, நீயும் உம் புருசனை கூட்டிட்டு வா…” என்றவர் பேரனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.
கேள்வியுடன் கோமதியும், கோவிந்தனும் உள்ளே சென்றனர்.
“அப்பத்தா என்ன இது?” என்று வைரவேல் மறுப்பாக ஏதோ சொல்ல வர,
“நீர் கம்முன்னு வாய்யா…” என்றவர் வாசல் அருகில் திகைத்து நின்ற தேன்மலரின் முன் சென்று நின்றார்.
தாலியைத் தான் கேட்க போகிறார் என்று நினைத்து தன் தாலியை கையினால் இறுக பற்றிக் கொண்டாள் தேன்மலர்.
அவளின் தவிப்பைப் பார்த்துக் கொண்டே, “தாயி சாமி மாடத்துக்குப் போ…” என்றதும் புரியாமல் அவரைப் பார்த்தாள்.
“ஆத்தா சொல்றேன் போ தாயி…” என்றார்.
அவள் தயக்கத்துடன் சாமி மாடத்தின் அருகே செல்ல, “நீரும் வாரும்…” என்று பேரனையும் அங்கே அழைத்துச் சென்றார்.
“எம்மா தாயி ஒ தாலியை கழட்டி சாமி படத்துக்கிட்ட வை…” என்றார் தேன்மலரிடம்.
“ஆத்தா…” என்று அவள் அதிர்ந்து அழைக்க,
“அப்பத்தா என்ன பண்றீர்?” என்று வைரவேல் கேட்க,
கோவிந்தனோ திருப்தியுடன் புன்னகைத்துக் கொண்டார்.
“சொல்றதை செய் தாயி…” என்றார்.
தேன்மலர் மறுப்பாகத் தலையை அசைத்தாள்.
“எம் பேரன் தேன் உம்ம புருசன். கழட்டு…” என்று அப்பத்தாவின் வார்த்தை உறுதியாக வந்து விழ, அவ்வார்த்தைகள் அவளுக்குப் பலத்தைத் தர, மெல்ல தன் கழுத்தில் இருந்த தாலியை கழட்டினாள்.
கழட்டும் போதே அவளின் கண்களிலிருந்து சரசரவென்று கண்ணீர் இறங்கி வந்தது.
தாலியை கழட்டி சாமி படத்தின் முன் வைத்து விட்டுக் கண்ணீர் மல்க அப்பத்தாவை பார்த்தாள்.
“எய்யா வேலு, அந்தப் பொட்டியை திற…” என்று சாமி படத்தின் முன் இருந்த சின்னப் பெட்டியை திறக்க சொன்னார்.
அந்தப் பெட்டியை அவன் திறக்க, அதனுள் மஞ்சள் கிழங்கு கட்டிய ஒரு தாலி கயிறு இருந்தது.
“அந்தத் தாலியை கயிறை எடுத்து அவ கழுத்துல கட்டு…” என்றார்.
“அப்பத்தா?” என்று வைரவேல் தயங்கினான்.
முதல் முறையாவது தன் நினைவில் இல்லாமல் தேன்மலரின் கழுத்தில் தாலி கட்டியிருந்தான். ஆனால் இப்போது முழு நினைவுடன் அல்லவா கட்ட வேண்டும் என்றதும் அவனிடம் தயக்கம் வந்தது.
“கட்டு ராசா…” என்று அப்பத்தா அழுத்தமாகச் சொல்ல, அதற்கு மேல் மறுக்க முடியாமல் மெல்ல திரும்பி தேன்மலரின் கழுத்தில் தாலியை கட்டினான்.
தேன்மலரின் வலியுடன் கூடிய அழுகை இப்போது ஆனந்த அழுகையாக மாறியது.
அவளின் கழுத்தில் தாலியை கட்டிவிட்டு அழுத்தமாகக் கண்களை மூடி திறந்தான் வைரவேல்.
தங்கள் முன்பே பேரனை தேன்மலரின் கழுத்தில் தாலி கட்ட வைத்த அப்பத்தாவை அயர்ந்து பார்த்தார் கோவிந்தன்.
“இப்ப சரிதானேயா?” என்று அவர் நிதானமாகக் கோவிந்தனிடம் கேட்டு வைக்க,
“தாலி…” என்று அவருக்கு என்ன சொல்வது என்று அறியாமல் மகளின் தாலியை கேட்டு கையை நீட்டினார்.
“இல்ல, அதைத் தரமுடியாது மாமா. அதான் நீர் நினைச்சது நடந்துருச்சே. இனி தாலியை கேட்காதீர்…” என்று வைரவேல் அழுத்தமாகச் சொல்ல, அதற்கு மேல் அங்கே நிற்காமல் விறுவிறுவென்று மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார் கோவிந்தன்.
அவர் சென்றதும் தேன்மலரை நிமிர்ந்து பார்க்காமல், “நா வெளியே போயிட்டு வர்றேன் அப்பத்தா…” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான் வைரவேல்.
அப்பத்தாவின் காலில் கண்ணீர் மல்க விழுந்தாள் தேன்மலர்.
“எம்மா தாயி, என்ன இது?” என்று அவளைத் தூக்கி விட்டார்.
அவள் எதுவும் சொல்லாமல் கண்ணீருடன் அவரைப் பார்க்க, “உம்ம கழுத்துல இருந்த தங்க தாலியை கழட்டிப் போட்டு வெறும் மஞ்சள் கயிற கட்ட வச்சுப் போட்டேன்னு எம் மேல சடவு ஆகிடாத தாயி…” என்று அவளின் கன்னத்தை வாஞ்சையுடன் தடவி விட்டார்.
“அன்னைக்கு உம்ம கழுத்தில் உம் புருசன் ஒசாரு இல்லாம தாலிக் கட்டிப் போட்டான். அதோட என்ன இருந்தாலும் அந்தத் தாலி அவன் மூத்த பொஞ்சாதி கழுத்துல கிடந்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு அவன் மொத பொஞ்சாதி நியாபகம் தேன் வரும். உம்ம நிமிர்ந்து பேச கூடத் தயங்குவான்.
சும்மாவே உம்மை விட்டு பய ஓடி ஒளிவான். அதுவும் அந்தத் தாலியைப் பார்த்தா சொல்லவே வேணாம். இப்போ சுயநினைவோட தாலி கட்டியிருக்கான். இனி பாரு. உம்மையும் நிமிர்ந்து பார்க்க ஆரம்பிப்பான்…” என்றார்.
நினைக்கும் போதே இன்பமாக இருக்க, தேன்மலரின் இதழ்கள் புன்னகையில் நெளிந்தன.
வெளியே சென்ற வைரவேலுவிற்கோ மீண்டும் மீண்டும் தான் சுழலுக்குள் மாட்டிக் கொண்ட உணர்வு.
முதலில் தெரியாமல் தப்புச் செய்தான் என்றால் இப்போது தெரிந்தே தவறு செய்த உணர்வு.
ஒரு பக்கம் மறைந்த மனைவியின் நினைவுகள், இன்னொரு பக்கம் ஒரு பெண்ணைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிந்தே தவறு செய்து கொண்டிருப்பது அவனை நிலையில்லாமல் தள்ளாட வைத்தது.
தான் செய்து கொண்டிருப்பது சரியா தவறா என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.
பதில் என்னவோ அவனுக்குக் கிடைக்கவே இல்லை.
‘உம் பொஞ்சாதி இறந்து சில மாசந்தேன் ஆவுது. அதுக்குள்ள நீ ரெண்டு தடவை தாலி கட்டிப்போட்டியே… அம்புட்டு தானா உம் பொஞ்சாதி மேல நீ வச்ச பாசம்?’ என்று ஒரு மனம் குற்றம் சாட்ட,
இன்னொரு மனமோ, ‘அப்போ ஒ கண்ணு முன்னாடி ஒரு பொண்ணுக்கு கெடுதல் நடப்பதை பார்த்துப் போட்டு கைய கட்டி வேடிக்கை பார்ப்பியா? அதுவும் உம்மால தேன் அந்தப் புள்ளக்கு கெட்ட பேரு வந்துச்சுன்னு தெரிஞ்சும் உம்மால பேசாம போக முடியுமா? நீ தானே அவளுக்கு ஒரு வழி சொல்லணும்? அந்த வழியைத் தான் நீ செய்திருக்க…’ என்று அவனுக்குத் தேறுதல் சொன்னது.
அவனின் மனமே இரண்டாகப் பிரிந்து வாதாடி அவனைக் குத்திக் கிழிக்க, எந்தப் பக்கம் சாய்வது என்று தெரியாமல் அல்லாடி போனான்.
வீட்டில் இருந்து கிளப்பியவன் நேராக மனைவி இறந்த கிணற்றுக்குச் சென்றான்.
கிணற்றின் உள்ளே இறங்கியவன் கீழ் படியில் தண்ணீரில் அமர்ந்தான். தண்ணீரை அள்ளி முகத்தில் பளிச்சென்று பளிச்சென்று அடித்துக் கொண்டான்.
“நா செய்றது சரியா தப்பானே தெரியலை ராசாத்தி. எம் மனசே என்னைய குத்திக் கொல்லுது. ஆனா நா உமக்குத் தெரிஞ்சே துரோகம் செய்யலை ராசாத்தி…” என்றவன் தொடர்ந்து தண்ணீரை அள்ளி முகத்தில் தெளித்துக் கொண்டான்.
அப்படியும் மனம் சாந்தம் அடையாமல் தள்ளாடுவது போல் இருக்க, அப்படியே கிணற்றுக்குள் இறங்கி நீந்த ஆரம்பித்தான்.
நேரம் செல்ல செல்ல மனம் அமைதியடைவது போல் இருக்க, அதன் பிறகே கிணற்றை விட்டு வெளியே வந்தான்.
அதற்குள் நன்கு இருட்டியிருந்தது. ஈர உடையுடன் வீட்டிற்குச் சென்றான்.
நேராக வீட்டின் பின் பக்கம் சென்றவன், கொடியில் கிடந்த காய்ந்த துணியை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து உடையை மாற்றி விட்டு வீட்டுக்குள் வந்தான்.
“என்னய்யா, மதியம் சோறு உங்காமயே போயிட்ட? இப்பவாவது வெரசா சாப்பிடு…” என்றார் கூடத்தில் இருந்த அப்பத்தா.
அவனுக்கும் நிறைய நேரம் தண்ணீரில் நீந்தியது பசியைக் கூட்டியிருந்தது. “ம்ம்… சோறு போடும் அப்பத்தா…” என்றவன், சாப்பிட அமர்ந்தான்.
எழுந்து வராத அப்பத்தா, “தாயி, உம் புருசன் வந்துட்டான். அவனுக்குச் சோறு வை…” என்று அடுப்படியை பார்த்து குரல் கொடுத்தார்.
‘அவளா?’ என்று நினைத்தவன், முகம் மாற எழுந்து போய் விடலாமா என்று நினைத்தான்.
ஆனால் ஏற்கனவே தான் விலகி விலகி போனதால் அவள் பாதிக்கப்பட்டது நினைவில் வர, தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.
அதே நேரம் முகம் நிறைய மகிழ்ச்சியுடன் அடுப்படியிலிருந்து சாப்பாட்டை எடுத்து வந்தாள் தேன்மலர்.
தன் கையால் முதல் முறையாகக் கணவனுக்குப் பரிமாறப் போகும் பரவசம் அவளிடம் இருந்தது.
அந்தப் பரவசத்துடனே அவனுக்கு உணவு பரிமாற ஆரம்பித்தாள்.
எதிரே இருந்தவளை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் உணவை உண்டு எழுந்தான் வைரவேல்.
அன்று இரவு அறைக்குள் தேன்மலர் புதுவிதமான இன்ப உணர்வுகளுடன் படுக்கையில் விழ, வெளியே கயிற்றுக் கட்டிலில் படுத்து வானத்தில் தெரிந்த நட்சத்திரங்களை இலக்கற்று வெறித்துக் கொண்டிருந்தான் வைரவேல்.