17 – இன்னுயிராய் ஜனித்தாய்

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 17

செவ்வந்தி அப்படிக் கேட்பார் என்று துர்கா மட்டுமல்ல, சபரிநாதனும் எதிர்பார்க்கவில்லை.

நித்திலனும் கூட அன்னை இப்படிப் பட்டென்று கேட்டுவிடுவார் என்று நினைக்கவில்லை.

அதைப் பற்றிப் பேசத்தான் அன்னை அங்கே தன்னையும் அழைத்து வந்தார் என்று தெரிந்தாலும், நிதானமாகப் பேச்சை ஆரம்பிப்பார் என்று நினைத்திருந்தான்.

இரவு முதலில் அன்னையிடம் துர்காவை பெண் கேட்க வேண்டாம் என்று மறுத்தவன் தான். ஆனால் காலையில் குணா வீதியில் வைத்து அவளின் கையைப் பிடித்திருந்ததைப் பார்த்து அவனுக்கு உயிரே ஆடிப் போனது போல் ஆனது.

என்னதான் துர்காவிற்குத் தான் வேண்டாம் என்று அன்னையிடம் சொன்னாலும், இன்று இன்னொருவன் கையில் அவள் மாட்டிக் கொண்டு தவித்த தவிப்பும், அடுத்தடுத்து அவளைச் சுற்றி நடக்கும் ஆண்களின் வக்கிரமான தாக்குதலும் அவனை நிலைகுலைய வைத்திருந்தது என்னவோ உண்மை.

அதோடு இன்று அலுவலகம் சென்றிருந்த போது துர்காவின் திருமணத்தைப் பற்றி அவளிடம் ஷாலினி பேசிய விஷயத்தையும், சபரிநாதனுக்கும் அவளுக்குத் திருமணம் செய்து வைப்பதில் விருப்பம் இருப்பதையும் தெரிவித்திருந்தான் முரளி.

அதைக் கேட்டதும் அவனின் மனதில் ஒரு முணுமுணுப்பு.

ஒருவேளை திருமணத்திற்குத் துர்கா சம்மதித்து, அவள் வேறு ஒருவனைத் திருமணம் செய்ய வேண்டிய நிலை வந்தால் என்ற கேள்வி அவனின் மனதை வண்டு போல் குடைந்து அவனை ஒரு வழியாக்கியிருந்தது.

அதோடு குழந்தை வருணாவையும் அவனால் விட்டுக் கொடுக்க முடியாது என்று நன்றாகப் புரிந்திருந்தது.

மனதின் முணுமுணுப்பும், குடைச்சலும் அன்னையிடம் சம்மதம் சொல்ல வைத்திருந்தது.

அதிலும் தன்னைப் பற்றிய உண்மை எல்லாம் அவர்களிடம் சொல்லியே மணம் முடிக்கக் கேட்க வேண்டும் என்று பேசி முடிவு செய்தே அன்னையுடன் வந்திருந்தான்.

ஆனால் செவ்வந்திக்கு உண்மையைச் சொல்வதில் தயக்கம் இருந்தது.

நித்திலன் பற்றித் தெரிந்தால் திருமணத்திற்குச் சம்மதிக்க மாட்டார்களோ என்று நினைத்தார். அதை மகனிடமும் தெரிவித்தார்.

“மறுப்பு வந்தாலும் பரவாயில்லைமா. எதையும் மறைச்சு ஏமாத்த எனக்கு விருப்பம் இல்லை. உண்மையைச் சொன்ன பிறகும் என்னை ஏற்றுக் கொள்ள விருப்பம் இருந்தால் ஏற்றுக் கொள்ளட்டும். இல்லைனாலும் பரவாயில்லை. எனக்கு வலி ஒன்னும் புதுசு இல்லையேமா? துர்கா குழந்தையுடன் எனக்குக் கிடைக்கலைனா அந்த வலியையும் ஜீரணிக்க முயற்சி செய்துக்கிறேன்…” என்று சொல்லிவிட்டான்.

வெளியே அப்படிச் சொல்லிவிட்டானே தவிர, உள்ளுக்குள் அதைச் சொல்லும் போதே மனம் ரணமாக வலித்தது.

வலியைப் பொறுத்துக் கொண்டு தான் ஆகவேண்டும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு தான் அன்னையுடன் வந்திருந்தான்.

“என்ன… என்ன கேட்டீங்க?” தான் கேட்டது சரிதானா என்று நம்ப முடியாமல் கேட்டார் சபரிநாதன்.

“நித்திலனுக்குத் துர்காவை கொடுப்பீங்களான்னு கேட்டேன் அண்ணா…” என்று செவ்வந்தி தெளிவாகச் சொல்ல, அவரின் பார்வை விருட்டென்று நித்திலனின் புறம் திரும்பியது.

அவன் அமைதியாக அவரின் பார்வையை எதிர் கொண்டான். அடுத்து அவரின் பார்வை மகளின் புறம் திரும்ப, கோபத்துடன் உக்கிரமாக நித்திலனை முறைத்துக் கொண்டிருந்தாள் அவள்.

“கடைசியில் உங்களைப் பத்தி நான் நினைத்தது சரிதான் இல்ல?” என்று அதே கோபத்துடன் கேட்டாள்.

“துர்கா ப்ளீஸ், அவசரப்படாதீங்க. கொஞ்சம் பொறுமையா கேளுங்க…” என்றான்.

“பொறுமையா கேட்க என்ன இருக்கு?” அவள் சீற,

“துர்கா, அமைதியா இருமா. அப்பா பேசிக்கிறேன்…” என்று சபரிநாதன் தான் இடையிட்டு அவளை அமைதியாக்கினார்.

வாய்க்கு அமைதி கொடுத்தாலும், அவளின் கைகள் நீண்டு மகளை அவனிடமிருந்து வாங்க முயன்றன.

ஆனால் வருணாவோ அவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டு வர மாட்டேன் என்று சிணுங்க ஆரம்பித்தாள்.

“அவளை விடுமா…” என்று மகளிடம் சொன்னவர், “நீங்க கேட்டது?” என்று செவ்வந்தியிடம் கேள்வியாகக் கேட்டார்.

“ஆமாண்ணா. உண்மை தான். நான் இங்கே வந்து ஒரு வாரம் ஆகப் போகுது. இந்த ஒரு வாரத்தில் என் பிள்ளை ஒரு நாள் ராத்திரி கூடத் தூங்கலை ணா…” என்றார்.

“ஏன்?” கேட்டவர் பார்வையோ நித்திலன் மீதிருந்தது.

அவன் குழந்தையின் கையை லேசாக வருடி விட்டு அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“ஏன்னா, நீங்களே பாருங்க. குழந்தையை அவன் எப்படிப் பார்த்துட்டு இருக்கான்னு. அவனுக்கு அவளை ரொம்பப் பிடிச்சுருக்கு. நான் இங்கே வந்த அன்னைக்குத் துர்கா அவனை இனி குழந்தையைப் பார்க்க கூடாதுன்னு திட்டிட்டு இருந்தாள். இனி அவளைப் பார்க்க முடியாதோன்னு நைட் எல்லாம் தூங்கவே இல்லை. அதை விட என் மடியில் படுத்துச் சின்னப் பிள்ளை மாதிரி கண்ணீரே விட்டான்…” என்று செவ்வந்தி சொல்ல,

அவனைச் சபரிநாதன் வியந்து பார்க்க, துர்கா அவனை விநோதமாகப் பார்த்தாள்.

யாரின் பார்வையையும் அவன் பொருட்படுத்தவே இல்லை. குழந்தையின் முகத்தை விட்டு பார்வையை நிமிர்த்தவும் இல்லை.

“குழந்தையைப் பார்க்கணும்னா பார்க்கட்டும். ஆனா அதுக்காக…” அதற்கு மேல் எப்படிக் கேட்க என்று புரியாமல் நிறுத்தினார்.

“குழந்தையை மட்டுமில்ல. அவனுக்குத் துர்காவையும் பிடிச்சிருக்கு…” பளிச்சென்று சொல்லிவிட்டார்.

“ஓ!” என்ற சபரிநாதனுக்குச் சில நொடிகள் பேச்சே வரவில்லை.

ஆனால் துர்கா கோபமாக அவனைப் பார்த்தாள்.

“இதெல்லாம் என்ன மிஸ்டர் நித்திலன்? உங்க அம்மா என்ன சொல்லிட்டு இருக்காங்க? அப்ப மத்த ஆம்பளைங்க மாதிரி தான் நீங்களுமா?” என்று கேட்டாள்.

அவள் கேள்வியில் விலுக்கென்று தலையை நிமிர்த்திப் பார்த்தவன், “ப்ளீஸ் துர்கா, உங்க மேல பாயத் துடித்த ஆம்பளங்க லிஸ்டில் என்னையும் சேர்க்காதீங்க. வலிக்குது!” என்றான் கண்களில் அப்பட்டமாகத் தன் வலியைக் காட்டி.

“அப்ப இதுக்கு என்ன அர்த்தம்?” அவள் தன் கோபத்தை விடுவதாக இல்லை.

நித்திலனை அப்படி நினைப்பது தவறு என்று அவளின் மனமே சுட்டிக் காட்டியது.

ஆனாலும் அவனுக்குத் தன்னைப் பிடித்திருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? தான் ஒரு குழந்தையின் தாய் அல்லவா?

திருமணமாகாத பெண்ணை ஒரு இளைஞன் விரும்புவது வேறு. ஆனால் குழந்தையின் தாயை விரும்புவது? ஏனோ அவளின் மனதிற்கு ஏற்புடையதாகவே இல்லை.

தவறான கண்ணோட்டத்துடன் தன்னை நெருங்கிய ஆண்களைப் பார்த்து சூடுபட்டவளுக்கு அதை உடனே ஏற்றுக் கொள்வதும் முடியாது தான்.

தான் அவனுடன் பழகாமல் எட்ட நின்றிருந்தால் இந்த அனர்த்தங்கள் நடந்திருக்காதே… என்று அவளுக்குத் தன் மீதே கோபம் வந்தது.

“நான் எந்தத் தப்பான உள்நோக்கத்தோடும் உங்களோட பழகலை. ஒரு நட்பு குடும்பமாத்தான் உங்க எல்லாரையும் நினைத்தேன். ஆனா இப்போ சமீபமாத்தான் நட்பையும் தாண்டி இந்தக் குடும்பத்தில் நானும் இருக்க ஆசைப்படுறேன்.

உங்களுக்குத் தெரியாது துர்கா, இந்த ஊருக்கு நான் வந்து இங்கே குடிவந்த போது யார் கூடவும் பழகக் கூடாது, யாரும் எனக்கு வேண்டாம். நான் தனிமையாத்தான் இருக்கும்னு நினைச்சுத்தான் வந்தேன்.

அதன் படி இருக்கவும் செய்தேன். ஆனா என் கட்டுபாட்டை முதலில் தளர்த்தியது முரளி தான். அலுவலகத்தில் நான் விலகிப் போன போதும் விடாமல் என்னை அவன் நட்பில் இணைத்துக் கொண்டான்.

அதுக்குப் பிறகும் இந்தக் காம்பவுண்ட்ல கூட யார்கிட்டயும் பேசாமல் தான் இருந்தேன். உங்க கூட எல்லாம் எப்படிப் பேச ஆரம்பித்தேன்னு உங்களுக்கே தெரியும்…” என்று அவன் நிறுத்த,

“அப்படி இருந்தவர் இப்ப ஏன் இப்படி மாறிப் போனீங்க?”

“ஏன்னு நான் என்ன காரணம் சொல்ல முடியும்? எதைச் சொன்னாலும் அது சரியா இருக்குமான்னு தெரியலை. இதனால் தான் ஒருத்தரை பிடிக்கும்னு ஒரு காரணத்தை மட்டும் வச்சு முடிவு எடுக்க முடியாது. என் மனது இதுவரை ஒருத்தரை வேணும்னு கேட்டு அடம் பிடித்ததே இல்லை.

ஆனால் இப்ப அடம் பிடிக்குது. நீங்க மட்டுமில்ல இதோ என் குட்டிம்மாவும் என் மகளா எனக்கு வேணும்னு என் மனசு அடம் பிடிக்குது. என் மனசை அடக்கத்தான் முயற்சி செய்தேன். ஆனால் முடியலை…” என்று தன் தோல்வியைக் கூடக் கௌரவமாக ஒப்புக் கொடுத்தான் நித்திலன்.

அவன் பேச்சுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் துர்கா அவனை வெறித்துப் பார்த்தாள்.

“தம்பி நீங்க சொல்றது கேட்க சந்தோஷமாத்தான் இருக்கு. ஆனா உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. என் பொண்ணுக்கு ஒரு பொண்ணும் இருக்காள். இது எப்படிச் சரி வரும்? உங்க சொந்தத்தில் என்ன பேசுவாங்க?” என்று தயங்கியே கேட்டார் சபரிநாதன்.

“என் சொந்தம் எல்லாம் என் அம்மாவும், அண்ணனும் தான் அங்கிள். அம்மாவே பொண்ணு கேட்க வந்திருக்காங்க. அண்ணாவுக்கும் தெரியும். அண்ணாகிட்ட போனில் விஷயத்தைச் சொல்லிட்டேன். அவனுக்கும் சந்தோஷம் தான்…” என்றான்.

“ஆனாலும்… அது எப்படித் தம்பி…?” அவருக்கு என்னவோ இது சரியாக வருமென்று தோன்றவில்லை.

மகளுக்கு மறுமணம் செய்து வைக்க அவருக்கும் விருப்பம் தான். ஆனால் அது ஒரு திருமணம் ஆகாத இளைஞனுடன் எப்படிச் சரி வருமென்று தெரியவில்லை.

அதிலும் மகனுக்கு மணம் முடிக்க எப்படி ஒரு குழந்தையுடன் இருக்கும் பெண்ணைப் பெண் கேட்டு செவ்வந்தி வர சம்மதித்தார் என்பது அவருக்குப் பெரும் ஆச்சரியமாக இருந்தது.

எந்த அன்னையும் இதற்கு முன் வருவாரா? எதனால் இப்படி என்று ஒரு தகப்பனுக்கே உண்டானே பயமும், கேள்வியும், சந்தேகமும் எழுந்தது.

“நீங்க நினைச்சா ஒரு கல்யாணம் ஆகாத பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிருக்கலாமே தம்பி?” என்று கேட்டே விட்டார்.

அவர் கேள்விக்குப் பதில் சொல்லாமல் சில நொடிகள் அமைதியாக இருந்தவன் அன்னையைப் பார்த்தான்.

‘சொல்லி விடு’ என்பது போல் தலையை அசைத்தார் அன்னை.

தொண்டையை லேசாகச் செருமிக் கொண்டவன், “இப்ப துர்காவை பொண்ணு கேட்டு வருவதில் கூட எனக்குக் கொஞ்சம் தயக்கம் தான் அங்கிள்…” என்றவன் நிறுத்த,

“அப்படித் தயக்கதோட உங்களை யாரு வர சொன்னா? நான் மறுமணம் எல்லாம் செய்து கொள்ளும் ஐடியாவில் இல்லை…” என்று எரிச்சலுடன் சொன்னாள் துர்கா.

“நான் இன்னும் பேசி முடிக்கலை துர்கா. நான் முதலில் சொல்லி முடிச்சுக்கிறேன். அதுக்குப் பிறகு உங்க முடிவு என்னவோ அதை நான் ஏத்துக்கிறேன்…” என்றவன்,

“உங்களை மட்டும் இல்லை. யாரையுமே எனக்குக் கல்யாணம் முடிக்கத் தகுதி இல்லை. கல்யாணமே முடிக்காமல் தான் இருக்க நினைச்சேன். ஆனா இப்ப உங்களையும், குட்டிம்மாவையும் விட்டுட்டு இருக்க முடியும்னு எனக்குத் தோணலை…” என்றான்.

“என்ன தம்பி சொல்றீங்க, தகுதி இல்லையா?” சபரிநாதன் புரியாமல் கேட்க,

“அங்கிள் நான் சொல்லப் போறதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியலை. ஆனால் உங்ககிட்ட மறைக்கவும் விருப்பமில்லை. நான் சொல்வதைக் கேட்டு விட்டு உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் மேல பேசலாம்…” என்று அவனின் குரல் தயங்கி தடுமாறி நின்றது.

“என்ன தம்பி என்னென்னவோ சொல்றீங்க? என்னென்னு சொல்லிடுங்க…” என்று கேட்டவரிடம் என்ன பூதமோ என்ற பயம் தெரிந்தது.

சொல்கிறேன் என்றவனால் உடனே சொல்லிவிட முடியவில்லை. அவஸ்தையுடன் அவனின் தொண்டைக்குழி ஏறி இறங்கியது.

“எனக்கு ஒரு குறை இருக்கு அங்கிள்…” என்றான் மெல்ல.

செவ்வந்தி ஆறுதலாக மகனின் கையை அழுத்திக் கொடுத்தார்.

“என்ன குறை தம்பி?” சபரிநாதன் வார்த்தைகளால் கேட்க, துர்கா கண்களால் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“அது… அது… நான் ஆண்மையானவனே இல்லை அங்கிள்…” என்று சொன்னவன் அங்கே இருந்த யாரின் முகத்தையும் பார்க்க கூசி கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டான்.

“தம்பி…” என்று சபரிநாதன் திடுக்கிட்டு அழைக்க,

துர்கா அதிர்வுடன் கண்களை விரித்தாள்.

இப்படி ஒரு காரணத்தைத் தந்தை, மகள் இருவருமே எதிர்பார்க்கவில்லை.

சில நொடிகள் இருவரும் உறைந்து போனது போல் அவனைப் பார்த்தனர்.

“நீ ஏன் நித்திலா அப்படிச் சொல்ற? தெளிவா சொல்லு…” என்று செவ்வந்தி சொல்ல,

“என் உடல் குறைக்கு அதான்மா அர்த்தம்…” என்றான் இன்னும் இமைகளைத் திறக்காமல்.

“தம்பி என்னமா சொல்றார்? நீங்க என்னவோ சொல்ல சொல்றீங்க. ஒன்னும் புரியலையே…” என்று சபரிநாதன் கேட்க,

“நீயே சொல்லு நித்திலா…” என்றார் மகனிடம்.

இமைகளை மெதுவாகப் பிரித்து முதலில் துர்காவை பார்த்தான். அவளின் முகத்தில் கேள்வியும், அதிர்ச்சியும் சரிவிகிதத்தில் இருந்தது.

அவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டே, “திருமணப் பந்தத்தில் ஒரு பொண்ணுக்கு எல்லா விதத்திலும் ஒரு நல்ல கணவனா என்னால் இருக்க முடியும். ஆனால் ஒரு குழந்தைக்குத் தகப்பன் ஆகுற தகுதி எனக்கு இல்லை. அதாவது என் மூலமா குழந்தை பிறக்காது…” என்றான்.

கேட்டுக் கொண்டிருந்த துர்காவிற்கு என்ன முகபாவம் காட்டுவது என்று கூடத் தெரியவில்லை.

அவனுக்கு இப்படி ஒரு குறை இருக்கும் என்று எதிர்பார்க்கவும் இல்லை.

“ஓ, உங்களுக்கு இப்படி ஒரு குறை இருக்குன்னு எப்படித் தெரியும் தம்பி?” என்று சபரிநாதன் விசாரிக்க,

அவரின் புறம் பார்வையைத் திருப்பியவன், “ஒரு வருஷத்துக்கு முன்னாடி காலேஜ் பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரு மீட்டிங் போட்டோம் அங்கிள். அப்போ பல விஷயங்களைப் பற்றிப் பேசும் போது ஸ்பெர்ம் டொனேசன் பற்றியும் பேச்சு ஓடுச்சு. அந்தப் பேச்சின் முடிவில் சிலர் ஸ்பெர்ம் டொனேசன் செய்யலாம்னு முடிவுக்கு வந்தாங்க. அவங்க கூடச் சேர்ந்து நானும் ஒரு ஆர்வத்தில் ஹாஸ்பிட்டல் போனேன்.

டொனேசன் கொடுத்து டெஸ்ட் எடுத்த போது தான் இந்த உண்மை தெரிந்தது. அப்போ தான் எனக்குக் கல்யாணத்துக்கு அம்மா பொண்ணு பார்த்துட்டு இருந்தாங்க. இந்த உண்மை தெரிந்ததும் ஒரு பொண்ணோட வாழ்க்கையைப் பாழாக்க விரும்பாமல் கல்யாணம் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து இங்கே வந்துட்டேன்…” என்றான்.

தந்தையும், மகளும் அமைதியாக இருந்தார்கள்.

இன்னும் ஏதோ ஒன்றை அவன் சொல்லாமல் விட்டது போல் துர்காவிற்குத் தோன்றியது.

அதற்காக எதற்கு ஊர் விட்டு ஊர் வர வேண்டும்? இங்கே வந்து ஏன் தனிமையை நாட வேண்டும்? என்று தோன்றியது.

ஆனால் அதைப் பற்றிக் கேட்டு தனக்கு என்ன ஆகப்போகிறது என்று நினைத்தவள் மௌனமாக இருந்தாள்.

“இந்த மாதிரி ஒரு குறையை வச்சுக்கிட்டு கல்யாணத்துக்குப் பொண்ணு கேட்டு வந்தது தப்புத்தான் அங்கிள். நீங்க என்ன முடிவு எடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன்…” என்றான் மெல்லிய குரலில்.

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை தம்பி. ஆனா உண்மையை மறைக்கக் கூடாதுன்னு வெளிப்படையாகச் சொல்லி விட்ட உங்க நல்ல மனசை பாராட்டணும். நான் கொஞ்சம் யோசித்துச் சொல்லட்டுமா தம்பி?” என்று கேட்டார்.

“சரி அங்கிள்…” நித்திலன் சொல்ல,

“இதுல யோசிக்க என்னப்பா இருக்கு? அவருக்கு அந்தக் குறை இருப்பது வருத்தம் தான். ஆனா அதை நம்மகிட்ட சொல்லி என்ன ஆகப் போகுது? எனக்கு இன்னொரு கல்யாணத்தில் எல்லாம் விருப்பம் இல்லை அப்பா. அவருக்கு இப்பவே என் முடிவு தெரியட்டும்…” என்று தந்தையிடம் சொல்லிவிட்டு அவனின் புறம் திரும்பி,

“சாரிங்க, நீங்க வேற யாரையாவது குழந்தையுடன் இருக்கும் பொண்ணா பார்த்துக் கல்யாணம் செய்துகோங்க. நான் கல்யாணம் செய்து கொள்வதாக இல்லை…” என்றதும், அவனின் முகம் வேதனையைப் பிரதிபலித்தது.

“எனக்குக் குழந்தை பிறக்காது என்ற காரணத்தால் குழந்தையோட இருக்குற உங்களைக் கல்யாணம் பண்ணிக்க நான் நினைக்கலை துர்கா. என் அன்பு ஆத்மார்த்தமானது. உங்களை ரொம்பப் பிடிச்சுப் போய்த் தான் கல்யாணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தேன்.

ஒருவேளை நம்ம கல்யாணத்திற்குப் பிறகு இன்னொரு குழந்தை பிறக்காது என்று நினைத்து என்னை நிராகரிக்க நினைத்தால் வெளிப்படையாகவே சொல்லி விடலாம்…” என்றான்.

“ம்ப்ச், நான் ஏன் அதுவரைக்கும் யோசிக்கணும்? நான் கல்யாணம் என்றதையே யோசிக்கத் தயாரா இல்லை…” என்றாள்.

“துர்கா, உடனே முடிவு எடுக்காதே மா” என்றார் சபரிநாதன்.

“அப்பா, ப்ளீஸ்… நான் ஏற்கனவே சொல்லிட்டேன். இன்னொரு கல்யாணத்தைப் பத்தி என்னால் யோசிக்கக் கூட முடியலைபா…” என்றாள் இயலாமையுடன்.

“என்னமா நீ?” என்று தந்தை வருத்தமாகச் சொல்ல,

“நான் கொஞ்சம் பேசலாமா?” என்று இடையிட்டார் செவ்வந்தி.

“சொல்லுங்கமா…” என்றார்.

“துர்கா, உன்னை மாதிரி இளவயதுலேயே கணவனை இழந்து பிள்ளைகளோட தனியா நின்றவள் என்ற முறையில் சொல்றேன். இந்த உலகம் நம்மை நிம்மதியா வாழ விடாதுமா. படியை விட்டு வெளியே போகாமல் இருந்தாலும் வீட்டுக்குள் நுழைந்து நமக்குக் களங்கத்தை வர வைக்க நினைப்பாங்க.

ஆண் துணை இருந்தால் தான் வாழ முடியுமா? இல்லனா வாழ முடியாதான்னு புரட்சி பேச, கேட்க நல்லாத்தான் இருக்கும். ஆனால் நம்மைத் துரத்தும் ஆண்களிடமிருந்து தப்பிக்க ஒரு ஆண் துணை தேவைப்படும் மா. அதை விட நமக்கும் இளைப்பாற, ஒரு மனக்கஷ்டம்னா மனம் விட்டு பேச, கண்ணீர் விட்டா துடைக்க ஒரு கை வேணும் மா. யோசித்து முடிவு பண்ணு…” என்றார்.

“அப்படிப் பார்த்தால் நீங்க எல்லாம் இரண்டு பிள்ளைகளைத் தனியா வளர்த்து ஆளாக்கியிருக்கீங்க. அது போல என்னாலும் இருக்க முடியாதா என்ன?” என்று கேட்டாள் துர்கா.

“எங்க காலத்தில் மறுமணம் பற்றிப் பேச தயக்கம் இருக்கும். அதை விட நாங்க வளர்ந்த சூழ்நிலை அதைப் பற்றி நினைக்க விடாது. அதோட ஆண்கள் யாரும் முன்வரவும் யோசிப்பாங்க. அதையும் தாண்டி ஒன்னு, இரண்டு நடந்தாலும் முன்னாடி எல்லா இடத்திலும் அது சாத்தியம் இல்லைமா. ஆனால் இப்ப சூழ்நிலை அப்படி இல்லை…” என்றார்.

அவர் அவ்வளவு சொல்லியும் மறுப்பாகத் தான் தலையை அசைத்தாள் துர்கா.

அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த நித்திலன் குழந்தையுடன் எழுந்து அவளின் அருகில் சென்றான்.

“என் இந்தப் பிறப்பு எதுக்கு? நான் பிறக்காமலே இருந்திருக்கலாமே என்று நினைத்திருக்கேன் துர்கா. ஆனா இப்ப அந்த நினைப்பு எனக்கு இல்லை. என்னை அப்பான்னு கூப்பிட்டு அந்த எண்ணத்தைத் தவுடுபொடி ஆக்கியது இவள் தான்…” என்று கையிலிருந்த குழந்தையின் கன்னத்தில் லேசாக முத்தமிட்டு சொன்னவன்,

“உங்களுக்கு நான் கணவனா இருக்க விரும்புவதை விட ஒரு பாதுகாவலனா இருக்க விரும்புறேன். இன்னைக்குக் கூட அந்தக் குணா உங்கள் கையைப் பிடித்து வம்பு இழுத்த போது நான் எவ்வளவு துடிச்சுப் போனேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். உங்களுக்கு மறுமணத்தால் வரும் தாம்பத்திய வாழ்க்கை வேண்டாம்னா அதற்கு நான் உடன்படுறேன்.

நாம வெறும் நண்பர்களா இருப்போம். என்னைத் திருமணம் செய்தால் நீங்க இப்ப இருப்பது போலவே எப்பவும் இருக்கலாம். உங்களுக்கும், குழந்தைக்கும் நான் காவல்காரன்னு நினைச்சுக்கோங்க. இதை நம்ம திருமணம் நடக்காமலேயே என்னால் செய்ய முடியும்.

ஆனால் நம்ம மேல் தவறான பார்வை விழும். அது எதுக்கு? உங்களுக்கு மறுமணத்தில் விருப்பமில்லை. எனக்கு உங்க இரண்டு பேரையும் விட்டு இருக்க முடியலை. இந்தக் கல்யாணம் நம்ம இரண்டு பேரின் எண்ணத்தையும் நிறைவேற்றும். யோசித்து முடிவு சொல்லுங்க…” என்றவன், குழந்தையை அவளிடம் கொடுத்து விட்டு,

“நாம கிளம்பலாம் மா…” என்று அன்னையுடன் வாசலை நோக்கி நடந்தான்.

அவன் பேச்சை கிரகிக்க முயன்று நின்றிருந்த துர்காவின் புறம் மீண்டும் திரும்பியவன், “ஆனா ஒன்னு, ஒருவேளை நீங்க வேற யாரையாவது மறுமணம் முடிக்க நினைத்தாலும் எனக்குச் சந்தோசம் தான். அதே நேரம் எனக்கு அப்பா ஸ்தானத்தைக் கொடுத்தது வருணா மட்டும் தான். அதே போல் என் மனதில் நுழைந்த முதல் பெண் நீங்க மட்டும் தான். வேற யாருக்கும் என் வாழ்க்கையில் இடமில்லை!” என்று நிறுத்தி நிதானமாக உரைத்தவன் அதே நிதானத்துடன் வெளியே சென்றான் நித்திலன்.