16 – மின்னல் பூவே

அத்தியாயம் – 16

“அப்பா, வாங்க… வாங்க…” என்று ஆர்ப்பாட்டமாக வரவேற்ற மகளைப் பார்த்துப் பாசத்துடன் சிரித்தார் வீரபத்ரன்.

“எப்படி இருக்கடா உத்ரா?” என்று மகளின் தலையை வாஞ்சையுடன் தடவிக்கொண்டே கேட்டார்.

“ரொம்ப நல்லா இருக்கேன் பா. நீங்க எப்படி இருக்கீங்க?” என்று கேட்டு அவரின் இன்னொரு கையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.

“அப்பா எப்படி இருக்கேன்? நீயே பாரு…” மகளை விட்டுத் தள்ளி நின்று இடுப்பில் ஒரு கையை வைத்து இன்னொரு கையால் மீசையை முறுக்கிவிட்டுக் கம்பீரமாக நிமிர்ந்து நின்று காட்டினார்.

“என்னோட அப்பா எப்பவும் கம்பீரம் தான்!” என்றாள் மகள்.

“ம்ம்… அப்படியா?” என்ற கேள்வி மகளிடம் இருக்க, அவரின் கண்களோ மகளைத் தாண்டி உதட்டில் புன்னகை நெளிய நின்றிருந்த மனைவியின் மீதிருந்தன.

‘ஆமா’ என்பது போல் தலையை மெல்ல அசைத்த அஜந்தா, தன் மூக்கிற்கும் உதட்டிற்கும் இடையே கையை வைத்து மீசையை முறுக்குவது போல் கையைச் சுழற்றிவர், உதட்டை மெல்ல அசைந்து ஏதோ சொன்னார்.

‘முறுக்கு மீசை முனியாண்டி’ என்று ஜாடையில் சொல்லிய மனைவியைப் பார்த்துக் குறும்பாகக் கண்சிமிட்டினார் வீரபத்ரன்.

அன்னை தந்தையைக் கவனித்தாலும் கவனியாதது போல “நான் உங்க பேக்கை ரூமில் வச்சுட்டு வர்றேன்பா…” என்று அவரின் பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் உத்ரா.

அவர்களுக்கான தனிமையை மகள் கொடுக்கிறாள் என்று புரிந்து கொண்ட வீரபத்ரன் சிரிப்புடன் மனைவியின் அருகில் வந்தார்.

“எப்படி இருக்க அஜ்ஜு?” என்று விசாரித்தார்.

கண்களில் கண்ணீர் ததும்பி நின்றிருக்க, உதடுகளில் புன்னகை உறைந்திருக்க, தொண்டை குழியில் வார்த்தைகள் அடைத்துக் கொண்டிருக்க, வார்த்தைகளால் பதில் சொல்ல முடியாமல் ‘நல்லா இருக்கேன்’ என்று தலையை அசைத்துக் காட்டினார் அஜந்தா.

ஒவ்வொரு முறையும் கணவர் ஊருக்கு வரும் அன்று அஜந்தா சற்று உணர்ச்சி வசப்பட்டு விடுவார்.

இன்றும் அதே போல் அவர் நெகிழ்ந்து நின்றிருக்க, மனைவியின் தோளை சுற்றிக் கைப்போட்டு லேசாக அணைத்து விடுவித்தார் வீரபத்ரன்.

அதன் பிறகு அந்த மூவருக்கு மட்டுமே ஆன உலகம் சிறிது நேரம் அங்கே ஆக்ரமித்துக் கொண்டது.

அதிகாலையில் வந்திறங்கியவரை சுற்றி சுற்றி வந்து, அப்பா, அப்பா என்று மூச்சுக்கு முன்னூறு தடவை அழைத்துக் குழந்தையாகக் குதூகளித்தபடி பல கதைகள் பேசிய மகளை வாஞ்சையுடன் பார்த்தார் வீரபத்ரன்.

“புது ஆஃபீஸ் எப்படி இருக்கு டா? வேலை எல்லாம் பழகிருச்சா?” என்று விசாரித்தார்.

“வேலை இப்போ தான் கொஞ்சம் கத்துக்கிட்டு இருக்கேன்பா. இதில் கத்துக்க நிறைய இருக்கு. புதுப் புது டெக்னாலஜி வந்துட்டே இருக்கு. அது வரவர நாங்களும் வேலையில் அப்டேட் ஆகிட்டே இருக்க வேண்டியது இருக்கு…” என்றாள்.

“எல்லா வேலையிலும் அப்படித்தான்டா. வருஷம் கூடக் கூடப் புதுப் புது விஷயங்களைக் கத்துக்க வேண்டியது தான்…”

“ஆமாப்பா…”

“ரொம்பத் தூரம் டெய்லி ஸ்கூட்டியில் ட்ராவல் பண்ணி ஆஃபீஸ் போறயே டா. அது கஷ்டமா இல்லையா? ஒரு கார் வாங்குவோமா?” என்று கேட்டார்.

“நீங்க வேறப்பா, காரில் போனா காலையில் கிளம்பினா நான் மதியம் தான் ஆஃபீஸ் போவேன். ஸ்கூட்டியில் போனா ஒரு மணிநேரம் தான்பா. டிராபிக்கா இருந்தாலும் நுழைந்து நுழைந்து போய்டலாம். அதனால் ஒன்னும் கஷ்டம் இல்லப்பா…” என்றாள்.

“சரிமா. இன்னைக்கு ஆஃபீஸ் போகணுமா? இல்லை லீவ் போட்டுட்டயா?”

“இப்போ கிளம்பணும்பா. இன்னைக்கு லீவ் எடுக்க முடியலை. இன்னைக்கு லீவ் எடுத்தால் அடுத்த வாரம் நடக்கப் போற கமலி கல்யாணத்துக்கு லீவ் எடுக்க முடியாது…” என்று உத்ரா சொன்னதும் அங்கே சில நொடிகள் மௌனம் ஆட்சி செய்தது.

வீரபத்ரன் மகளின் முகத்தை ஊடுருவிப் பார்த்தார்.

கமலினியின் திருமணத்தை ஒட்டி தான் விடுமுறை எடுத்துக் கொண்டு வந்திருந்தார் வீரபத்ரன்.

கமலினிக்கு நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளை மகள் விரும்பிய முகில்வண்ணன் என்று தெரிந்ததில் இருந்து அவரும் உள்ளுக்குள் பதைபதைத்து தான் போயிருந்தார்.

மகளின் நிலையை நினைத்தே அந்தப் பதைபதைப்பு.

அதனால் இப்போது மகள் எதுவும் வருத்தப்படுகிறாளோ என்று அவள் முகம் பார்த்தார்.

ஆனால் பல நாட்களாகக் கமலினியின் திருமணத்தைப் பற்றிப் பேசியிருப்பதால் அதை ஏற்றுக் கொள்ள அவளின் மனதை தயார்ப்படுத்த முயன்று கொண்டிருந்தாள் உத்ரா.

அதனால் தந்தையுடன் பேசும் போது அவளின் முகத்தில் எந்த மாற்றமும் வரவில்லை. அவளின் நிலையைப் புரிந்து கொண்டவர் போல அவள் அறியாமல் பெருமூச்சு விட்டுக் கொண்டார்.

“எத்தனை மணிக்கு வேலைக்குக் கிளம்பணும் டா?” என்று கேட்டுப் பேச்சை மாற்றினார்.

“இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பணும்பா…”

“சரிடா, நீ கிளம்பி வேலைக்குப் போய்ட்டு வா. அப்பா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். நைட் பேசலாம்…” என்றார்.

“என்னப்பா முக்கியமான விஷயம்? சொல்லுங்க, இப்பயே கூடப் பேசலாம். ஒன்னும் பிரச்சனை இல்லை…” என்றாள்.

“இல்லமா, இது நிதானமா பேச வேண்டிய விஷயம். நீ வேலைக்குப் போய்ட்டு வா. நைட் பொறுமையா பேசுவோம்…” என்றார்.

‘அப்படி என்ன விஷயம்?’ என்று தந்தையை யோசனையுடன் பார்த்தாலும் அதற்கு மேல் ஒன்றும் கேட்காமல் வேலைக்குச் செல்ல கிளம்ப ஆரம்பித்தாள்.

நாட்கள் அதன் வேகத்தில் ஓடியிருந்தன. அடுத்த வாரத்தில் முகில்வண்ணனின் திருமணம்.

நாட்கள் நெருங்க நெருங்க உத்ராவின் மனம் நிலையில்லாமல் தள்ளாடிக் கொண்டிருந்தது.

என்னதான் மனதை முயன்று அடக்கிக் கொள்ள முயன்றாலும் காதல் கொண்ட மனம் தவிப்பு அடங்காமல் அல்லாடியது.

அவனின் திருமணத்திற்கு முன்பே இப்படி என்றால் அவன் திருமணத்தை வேறு எப்படிக் கண்களால் காணப்போகிறோம்?

அதையும் விடக் கமலினியின் அருகில் அவளின் கணவனாக முகிலை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? என்பது தான் அவளின் மிகப் பெரிய போராட்டமாக இருந்தது.

அதோடு கமலினி வேறு திருமணத்திற்கு அவளுக்குத் தேவையான பொருட்கள் வாங்க அவளையே அநேக நேரம் உதவிக்கு அழைத்தாள்.

அதிலும் மொத்தமாக வாங்காமல் யோசித்து, யோசித்து நினைத்த நேரம் அவளுடன் வெளியே செல்ல வேண்டும் என்றாள்.

தான் காதலித்தவன் திருமணம் செய்யப் போகிறவளுக்குத் தானே பொருட்களை வாங்க உதவுவது எல்லாம் அவளுக்கு மரண வேதனையாக இருந்தது.

சொந்தமாகப் போய்விட்ட நிலையில் அவளால் மறுப்பும் தெரிவிக்க முடியவில்லை.

தன் வருத்தம், வேதனை, துடிப்பு, காதல் அனைத்தையும் தனக்குள் போட்டு அழுத்தி அழுத்தி அடக்கி வைத்திருந்தாள்.

‘ஒரு நாள் இல்லை ஒரு நாள் அனைத்தையும் அடக்கி வைக்க முடியாமல் வெடித்துச் சிதறி விடுவோமோ?’ என்று அவளுக்கே பயமாக இருந்தது.

‘அடுத்த வாரம் தன்னை எப்படிச் சமாளித்துக் கொள்ளப் போகிறோமோ?’ என்று கலக்கத்துடன் யோசித்துக் கொண்டே அலுவலகம் வந்து சேர்ந்தாள் உத்ரா.

“என்ன உத்ரா இன்னைக்கு உன் அப்பா வந்திருப்பார். அவரைப் பார்த்துட்டு வரும் போது உன் முகம் இன்னைக்குப் பிரகாசமா இருக்கும்னு பார்த்தால் இப்படிச் சோர்ந்து போய் வர்றயே?” என்று அவளை எதிர்கொண்டு கேட்டாள் புவனா.

“அப்பாவை பார்த்துச் சந்தோஷமா தான் பேசிட்டு வர்றேன் புவி. டிராவல் செய்த சோர்வா இருக்கும். முகம் கழுவிட்டு வேலையைப் பார்க்க ஆரம்பிச்சா சரியாப்போகும்…” என்று முயன்று வருவித்த சிரிப்புடன் சொன்னாள் உத்ரா.

முகிலை பற்றி நினைத்துக் கொண்டு வந்தேன் என்று தோழியிடம் கூடச் சொல்ல அவளுக்கு இப்போது மனமில்லை.

தோழியின் இரக்கப்பார்வையை எதிர்கொள்ளவோ, ஆறுதல் வார்த்தைகளைக் கேட்கவோ அவளுக்கு அப்போது முடியும் என்று தோன்றவில்லை. தன் வேதனையைப் பேசி பேசி அதிகப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணத்தில் அவளிடம் சொல்லாமல் தவிர்த்து விட்டாள்.

இருவரும் அலுவலகத்திற்குள் செல்லாமல் பார்க்கிங் அருகில் இருந்த ஒரு மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அலுவலகம் வந்த குரு தன் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து செல்லாமல் புவனாவையே பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

அவனைக் கவனித்த உத்ரா, “குரு அங்கிருந்து உன்னையே பார்த்துட்டு இருக்கான் புவி…” என்றாள்.

“நானும் கவனிச்சேன். அன்னைக்குப் பிறகு என்கிட்டே நேரில் வந்து பேசுறது இல்லை. இப்படித்தான் எங்கயாவது நின்னு என்னைப் பார்க்கிறார்…” என்றாள் புவனா.

“தெரிஞ்சும் பேசாம இருக்கியா?”

“வேற என்ன பண்றது?”

“குருவை பத்தி யோசிச்சியா? அன்னைக்கு நான் சொன்ன மாதிரி ஆரம்பம் தப்பா இருந்தாலும், இப்போ கூட உன் முடிவு தெரிய காத்திருப்பதைப் பார்த்து நீ யோசிக்கலாமே?” என்று கேட்டாள் உத்ரா.

“நானும் யோசிக்க ஆரம்பிச்சேன் உத்ரா. ஆனா…” என்று நிறுத்தினாள் புவனா.

“என்ன ஆனா?”

“எனக்கு அவர் மேல் காதல் எல்லாம் இன்னும் வரலை. ஆனால் அவர் என்னைக் காதலிக்கிறது பிடிச்சிருக்கு…” என்று மென்புன்னகையுடன் சொன்னாள்.

“அட! அட! இதைச் சொல்லும் போதே உன் முகம் ஜொலிக்கிதே. அப்போ அதையாவது குருகிட்ட சொல்ல வேண்டியது தானே?” என்று கேட்டாள் உத்ரா.

“சொல்லணும். ஆனா…” என்று புவனா மீண்டும் இழுக்க,

“இன்னும் என்ன ஆனா?”

“அவர் இன்னும் உன்னை வில்லி மாதிரி பார்க்கிறார் உத்ரா. எனக்கு அதுதான் பிடிக்கலை. நீ எனக்காகத் தானே அவர்கிட்ட சண்டை போட்ட. அதுவும் காலேஜில் நடந்தது. ஆனா இன்னும் உன்னை முறைச்சு தான் பார்க்கிறார். நான் கவனிச்சேன். அது தான் ஒரு மாதிரி உறுத்தலா இருக்கு…” என்றாள் புவனா.

“ஏய் புவி, என்ன பேசிட்டு இருக்குற நீ? என்னை முறைக்கிறதுக்கும், உங்க லவ்வுக்கும் இடையே நான் எங்கே வந்தேன்? அதுக்கும் இதுக்கும் முடிச்சுப் போடாதே புவி…”

“ஆனா அப்படி எல்லாம் என்னால் பிரிச்சு பார்க்க முடியலை உத்ரா…”

“நீ அனாவசியமா குழப்பிக்கிற புவி. ஒரு பொண்ணு தன்னை அடித்துவிட்டால் எந்த ஆம்பளைக்குமே கோபம் வரும். அந்தக் கோபத்தில் தான் குரு அப்ப என்னென்னவோ பேசி, ஏதேதோ செய்துட்டார்.

இன்னும் நான் அடிச்சுட்டேன்னு கோபம் இருக்கும் போல. அதான் அந்த முறைப்பு. ஆனா உன் மேல வச்ச காதல், உன்கிட்ட அதுக்குப் பிறகு வக்கிரம் எதையும் காட்டாதது இது எல்லாம் குருவை தப்பானவனா எனக்கு நினைக்கத் தோணலை.

அதனால் என்னையும் அவனையும்… ஸாரி, இனி அவர்னே சொல்றேன். என்ன இருந்தாலும் என் தோழியோட வருங்காலக் கணவர் ஆச்சே…” என்று கண்ணைச் சிமிட்டி சொன்ன உத்ரா,

“அதனால் என்னையும் அவரையும் நினைச்சுக் குழப்பிக்காம உன் எண்ணத்தைக் குருகிட்ட சொல்லு…” என்றாள் உத்ரா.

“ம்ம்…” என்று யோசனையுடன் இழுத்தாள் புவனா.

அப்போது அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டே அவர்களைக் கடந்து போனான் முகில்வண்ணன்.

‘என்னடா இது? காலேஜில் அவனை அடிக்கவும் செய்தாள். இப்போ அவனுக்காகச் சப்போர்ட்டும் செய்றாள்…’ என்று நினைத்துக் கொண்டே போனான் அவன்.

அன்றைக்குக் காலேஜில் முகிலும் அடித்த பிறகு குரு அவனிடம் பேசவில்லை. ஆனால் ஒரே கம்பெனியில் வேலை கிடைத்த பிறகு ‘என்ன என்றால் என்ன’ என்ற அளவில் பேசிக் கொள்ள ஆரம்பித்து இருந்தனர்.

இங்கே அலுவலகத்தில் குரு வேறு பிரிவில் வேலை பார்ப்பதால் அவர்களின் பழக்கமும் அதற்கு மேல் வளரவில்லை. நேருக்கு நேர் பார்த்தால் சின்னச் சிரிப்பு, நலம் விசாரிப்பு என்று அவர்களின் பழக்கம் நின்று போயிருந்தது.

முகிலின் அடியைக் கூட மறந்து அவனிடம் பேச ஆரம்பித்த குருவிற்கு ஏனோ பெண்ணான உத்ரா அடித்ததை இன்னும் அவனின் மனம் ஏற்க மறுக்க அவளைப் பார்க்கும் போதெல்லாம் முறைப்பை காட்டுவான்.

உத்ராவும், புவனாவும் பேசிக் கொண்டே அலுவலகத்திற்குள் சென்று வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர்.

அன்று மதிய உணவை உண்ண தோழிகள் இருவரும் உணவகத்திற்குச் சென்று கொண்டிருந்தனர்.

மின்தூக்கியில் ஏறிய பிறகு, “புவி, என் போனை டேபிளிலேயே வைத்துவிட்டு வந்துட்டேன். நீ போய்ட்டு இரு. நான் வர்றேன்…” என்ற உத்ரா மீண்டும் தன் இருக்கைக்குச் செல்ல, புவனா மட்டும் மீன்தூக்கியில் கீழே சென்றாள்.

அப்போது அவளின் பின் அதே மின்தூக்கியில் குருவும் வந்தான்.

கீழ் தளத்தில் இருந்த உணவகத்திற்குள் புவனா நுழைந்த போது உள்ளே இருந்து தன் நண்பர்களுடன் விளையாட்டாகப் பேசிக் கொண்டே வெளியே வந்த ஒருவன் எதிர்பாராத விதமாக எதிரே வந்த புவனாவை கவனிக்காமல் அவளின் மீது மோதி விட்டிருந்தான்.

அவன் துள்ளலாக நடந்து கொண்டே வந்து புவனாவின் மீதும் வேகமாக மோதியதில் தடுமாறி கீழே விழப் போனாள்.

அவளைப் பார்த்துக் கொண்டே வந்த குரு அவள் விழப் போகவும் விரைந்து வந்து அவளைத் தாங்கி நிறுத்தியவன், அடுத்த நிமிடம் அவளின் மீது மோதியவனை அடிக்கப் பாய்ந்திருந்தான்.

அவளை மோதியவன் ஏற்கனவே அதிர்ந்து, “ஸாரி…” என்று புவனாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே குரு அவனை அடிக்கப் பாய்ந்து விட்டான்.

“டேய், கண்ணை எங்கே வச்சுட்டுடா வர்ற?” என்று அவனைக் குரு அடிக்கப் போக,

“தெரியாம நடந்துடுச்சுங்க. அதுக்குப் போய் அடிக்க வர்றீங்க?” என்று மோதியவனின் நண்பர்கள் சேர்ந்து அவனை அடிக்க விடாமல் பார்த்துக் கொண்டனர்.

“நேரா பார்த்து நடந்து வராம கண்ணைப் பொடனியில் வச்சுட்டு வந்தவனுக்கு நீங்க எல்லாம் என்னடா சப்போர்ட்?” என்று குரு அவர்களுடனும் சண்டைக்குப் போனான்.

“ஹலோ, என்னங்க நீங்க? பேசிட்டே வந்ததில் கவனிக்கலை. அதுக்காக எதுக்கு ரொம்பத் துள்றீங்க? நான் அவங்ககிட்ட ஸாரி கேட்டுக்கிறேன்…” என்று சொன்ன மோதியவன், புவனாவைப் பார்த்து,

“ஸாரிங்க, தெரியாம நடந்துருச்சு…” என்றவன், தன் நண்பர்களின் புறம் திரும்பி, “பிரச்சனை வேண்டாம். வாங்க போகலாம்…” என்று அங்கிருந்து செல்லப் போனான்.

“மோதி கீழே தள்ளிவிட்டுட்டு ஸாரின்னு சொன்னா ஆச்சா?” என்று குரு இன்னும் துள்ள,

“குரு, விடுங்க. வாங்க போகலாம்…” என்று அவனின் கையைப் பிடித்த புவனா, “நீங்க போங்க…” என்று மோதியவனிடம் சொல்லிவிட்டு, குருவின் கையைப் பிடித்து இழுத்து உணவகத்திற்குள் அழைத்துச் சென்றாள்.

புவனா அவனின் கையைப் பிடித்ததுமே குருவின் கோபம் அப்படியே அடங்கியிருந்தது. அவளின் இழுப்பிற்கு ஏற்ப அவளின் பின் நடந்தான்.

அவனை ஒரு இருக்கையில் அமர வைத்து தானும் ஒரு இருக்கையில் அமர்ந்த புவனா, “அவன் தெரியாமல் இடிச்சதுக்கு எதுக்கு இவ்வளவு கோபம் குரு?” என்று கேட்டாள்.

“பின்ன, அவன் இடிச்சுட்டுப் போவான். நான் பார்த்துட்டுப் பேசாம போகணும்னு சொல்றீயா?” என்று கேட்டவனைத் தீர்க்கமாகப் பார்த்தாள்.

“ஏன் அப்படிப் பார்க்கிற?”

“அவன் என்னைத் தானே இடிச்சான். அதுக்கு நான் தானே கோபப்படணும்? நீங்க ஏன் கோபப்படுறீங்க?” என்று நிதானமாகக் கேட்டாள்.

“என்ன நீ இப்படிக் கேட்கற? நான் உன்னைக் காதலிக்கிறது மறந்து போய்டுச்சா? உனக்கு என்ன நடந்தாலும் நான் எப்படிப் பார்த்துட்டுச் சும்மா இருக்க முடியும்? உனக்கு எதுவும்னா, நான் முன்ன நிப்பேன்…” என்றவனை இன்னும் தீர்க்கமாகப் பார்த்தாள்.

“என்ன?”

“உத்ரா என் பிரண்டு அது ஞாபகம் இருக்கா?” என்று கேட்டாள்.

“அதுக்கென்ன இப்ப?” உத்ராவின் பெயரைச் சொன்னதும் கடுப்புடன் கேட்டான்.

“இன்னைக்கு என் மேல இடிச்சவன் மேல உங்களுக்குக் கோபம் வந்த மாதிரி தான் அன்னைக்குக் காலேஜில் நீங்க என்னைக் கிஸ் பண்ணிட்டீங்கன்னு நான் அழுதப்ப உத்ராவுக்கும் கோபம் வந்தது.

“இப்ப நீங்க அவனை அடிக்கப் போன மாதிரி தான் அவளும் கோபத்தில் உங்களை அடிச்சாள்…” என்று புவனா சொல்ல,

“இப்ப என்ன சொல்ல வர்ற நீ?” என்று கேட்டான்.

“இன்னைக்கு உங்க கோபம் சரின்னா, அன்னைக்கு உத்ரா கோபப்பட்டதும் சரின்னு சொல்றேன். ஆனா நீங்க அன்னைக்கு எனக்காகப் பேச வந்தவளை அசிங்கமா எல்லாம் பேசிட்டீங்க.

இப்போ கூட அவளை என் கூடப் பார்க்கும் போதெல்லாம் முறைச்சுப் பார்க்கிறீங்க. உங்களோட இந்தக் கோபம் தான் உங்களை விட்டு என்னைத் தள்ளி நிக்கச் சொல்லுது…” என்றாள்.

“அவளை நான் முறைக்கிறதுக்கும், நீ என்னைத் தள்ளி நிறுத்துவதற்கும் என்ன சம்பந்தம் புவி? என் காதலும், அவள் ப்ரண்ட்ஷிப்பும் ஒண்ணா?” என்று உரிமை உணர்வு தலைதூக்க கேட்டான்.

“கண்டிப்பா வேற வேற தான். ஆனால் எனக்கு உங்க காதலும் வேணும். அதே நேரத்தில் உத்ராவின் நட்பையும் என்னால் விட முடியாது. அதனால் தான் இன்னும் உங்களுக்குப் பதில் சொல்ல முடியாம தடுமாறிட்டு இருக்கேன்…” என்றாள்.

“அதான் இப்போ சொல்லிட்டியே என் காதல் வேணும்னு…” என்று சந்தோஷமாக ஆர்ப்பரித்தான் குரு.

தான் பேச்சுச் சுவாரசியத்தில் உளறிவிட்டது புரிய உதட்டைக் கடித்துக் கொண்டாள் புவனா.

அவளைச் சிரிப்புடன் பாரத்த குரு, “இப்ப நான் ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன் புவி. என்னோட காத்திருந்த காதலுக்குப் பலன் இப்போது தான் கிடைச்சுருக்கு. தேங்க்யூ சோ மச் புவி. ஐ லவ் யூ…” என்றவன் அவளின் கையைப் பற்றிக் கொண்டான்.

அடுத்தச் சில நிமிடங்கள் அவர்களுக்கே ஆன நேரத்துடன் சென்றது.

குருவின் காதல் தனக்குப் பிடித்திருப்பதையும், அவனைத் தங்கள் வீட்டில் வந்து பேசவும் சொன்னாள் புவனா.

மேலும் சில நிமிடங்கள் அவர்களைப் பற்றிப் பேசிய பிறகு, “உத்ராவை பற்றி நீ சொன்னதும் எனக்குப் புரிந்து விட்டது புவி. என் புவிக்காக என் மேலே கோபப்பட்ட உத்ராவின் மீது நான் கோபப்பட்டது நியாயமே இல்லை தான். என் தப்பு புரியுது. நான் உத்ராகிட்ட ஸாரி கேட்கிறேன்…” என்றான் குரு.

“நீங்க ஸாரி எல்லாம் கேட்க வேண்டாம். அவளை முறைச்சுக்கிட்டே இல்லாம இருந்தாலே போதும்…” என்ற புவனா அப்போது தான் தன் பின்னால் வருகிறேன் என்று சொன்ன தோழியை இன்னும் காணவில்லை என்று தேடினாள்.

அவர்களுக்கு நேரெதிராக இன்னொரு இருக்கையில் அமர்ந்து உண்டு கொண்டிருந்த உத்ரா தோழி தன்னைப் பார்த்ததும் கண்சிமிட்டி சிரித்துக் கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள்.

அவளைக் கண்டதும் அங்கே எழுந்து ஓடிய புவனா தோழியின் தோளின் மீது கைப் போட்டு அணைத்துக் கொண்டாள்.

“வெரி ஹேப்பிப் பார் யூ புவி குட்டி. சந்தோஷமா இரு…” என்று வாழ்த்தினாள் உத்ரா.

அங்கே வந்த குருவிற்கும் அவள் வாழ்த்து தெரிவிக்க, “தேங்க்ஸ் உத்ரா அன்ட் ஸாரி. காலேஜில் ரொம்பச் சில்லித்தனமா நடந்துகிட்டேன். ஸாரி…” என்றான்.

“அச்சோ! ஸாரியெல்லாம் வேண்டாம் குரு. பழைய விஷயத்தை எல்லாம் மறந்துடுவோம். புவனாவை சந்தோஷமா பார்த்துக்கங்க. அது போதும்…” என்றாள் உத்ரா.

அவர்கள் இருவரும் உத்ராவுடனே அமர்ந்து உணவை வாங்கி உண்ண ஆரம்பிக்க, அவர்களையே பார்த்த வண்ணம் இன்னொரு டேபிளில் அமர்ந்திருந்தான் முகில்வண்ணன்.

புவனாவை ஒருவன் இடித்தபோதே அவன் உள்ளே தான் அமர்ந்திருந்தான்.

அதன் பிறகு குருவும், புவனாவும் அவன் அமர்ந்திருந்த டேபிளுக்குப் பக்கத்து டேபிளில் தான் வந்து அமர்ந்தனர். அதனால் அவர்கள் பேசிக் கொண்டதும் அவனுக்குக் கேட்டது.

குரு உத்ராவை புரிந்து மன்னிப்பு கேட்டதைப் பற்றி யோசித்துக் கொண்டே அங்கிருந்து எழுந்து சென்றான் முகில்வண்ணன்.

அன்று இரவு புவனாவைப் பற்றி நினைத்துக் கொண்டே தன் வீட்டிற்குச் சென்று சேர்ந்தாள் உத்ரா.

வீட்டிற்குச் சென்று இரவு உணவு முடிந்ததும் மகளை அருகில் அழைத்தார் வீரபத்ரன்.

“என்னப்பா?”

“உன்கிட்ட ஒருவிஷயம் பேசணும் டா…”

“ஹான்… காலையிலேயே சொன்னீங்களே. என்னப்பா விஷயம்? சொல்லுங்க, கேட்டுருவோம்…” என்றாள்.

“உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நானும், அம்மாவும் முடிவு பண்ணிருக்கோம் டா…” என்று அப்பா சொன்னதைக் கேட்டதும் அதுவரை இலகுவாக அமர்ந்திருந்த உத்ரா விறைத்து நிமிர்ந்தாள்.