16 – ஈடில்லா எனதுயிரே

அத்தியாயம் – 16

“மாமா, அம்மாவுக்கு என்னாச்சு?” மருத்துவமனை வாசல் அருகில் நின்றிருந்த மாதவனைப் பார்த்ததும் பதறி போய்க் கேட்டான் பிரபஞ்சன்.

“திடீர்னு ரொம்ப வேர்த்திருக்கு. அப்படியே மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. அத்தான் முதலில் உனக்குத்தான் போன் போட்டுருக்கார். நீ எடுக்கலைன்னு உனக்குச் சொல்ல சொல்லி எனக்குப் போன் போட்டார்…” என்று விவரம் சொன்னதும், அன்னை, தந்தை நம்பரை பிளாக் செய்து வைத்ததற்குத் தன்னையே நொந்து கொண்டான் பிரபஞ்சன்.

“இப்ப அம்மா எப்படி இருக்காங்க மாமா?”

“மயக்கம் தெளிந்து எழுந்தப்ப உன் பேர் தான் சொல்லிருக்காங்க. அதான் நீ வர்றியான்னு பார்க்க வாசலுக்கு வந்தேன். வா, உள்ளே போவோம்…” என்று அழைத்துக் கொண்டு உள்ளே நடக்க ஆரம்பித்தார்.

“டாக்டர் என்ன சொல்லிருக்கார்பா?” என்று உடன் நடந்தபடி விசாரித்தாள் ராகவர்தினி.

“இன்னும் ஒன்னும் சொல்லலைமா. டாக்டர் செக் பண்ணிட்டுத்தான் இருக்காங்க…” என்றார்.

ஐசியூ வாசலில் நின்றிருந்த சுபேசன் மகனைப் பார்த்ததும் கலங்கிப் போய் அருகில் வந்தார்.

அவரின் கலக்கத்தைக் கண்டு அவனின் உயிர் துடித்துப் போனது.

“பிரபா, எங்களை மன்னிச்சுடுப்பா. அம்மாவும், நானும் அவசரப்பட்டு உன்னைத் தப்பா நினைச்சுட்டோம்…” என்று அவனின் கையைப் பிடித்துக் கொண்டு மன்னிப்புக் கேட்டார்.

“அதையெல்லாம் விடுங்கப்பா. இப்ப அம்மா எப்படி இருக்காங்க?” என்று தன் கோபத்தை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுக் கேட்டான்.

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள். இங்கே பெற்ற தாய் உடல் நலமில்லாமல் இருக்கிறார் என்றதும் அவனின் ஒவ்வொரு அணுவும் ஆடித்தான் போனது. அதில் அவனின் கோபம் கூட எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது.

“டாக்டர் ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறாங்க. கண்ணு எல்லாம் சொருகி போய் அப்படியே மயங்கி விழுந்துட்டாள் உன் அம்மா. கொஞ்ச நேரம் எனக்கு என்ன செய்றதுனே தெரியலை. அப்புறம் காரில் தூக்கிப் போட்டு இங்கே கொண்டு வந்து சேர்த்தேன்…” என்றதும் அவனின் மனம் துடித்தது.

“அம்மாவுக்கு ஒன்னும் ஆகாதுப்பா. கவலைப்படாதீங்க…” என்றான்.

“அவள் உன்னைப் பத்தித்தான் புலம்பிட்டே இருந்தாள். நீ எங்கே வீட்டுக்கே வராம போய்டுவியோன்னு பயம். நீ வீட்டுக்கு வராமல் போனதிலிருந்து நைட் எல்லாம் சரியா தூங்க கூட இல்லை…” என்றார்.

தன்னால் தான் அன்னைக்கு இந்த நிலை என்று புரிந்ததும் அவனுக்கு வேதனையாகிப் போனது.

தன் கோபத்தை வயதானவர்கள் மீது காட்டி வருத்தி விட்டோமோ என்று உடைந்து தான் போனான்.

“சாரிப்பா… எல்லாம் என்னால் தான்…” என்றான் கலக்கமாக.

“அத்தான் தைரியமா இருங்க. அத்தைக்கு ஒன்னுமாகாது…” என்றாள் ராகவர்தினி.

“நீயும் தான்டி காரணம். அவர்கிட்ட நீயும் பேச மாட்டன்னு மூஞ்சை திருப்பிக்கிட்டு நின்ன. நான் தான் அவங்ககிட்ட பேசுன்னு சொன்னேன்ல?” என்று அங்கிருந்த மீரா மகளைக் கடிந்து கொண்டார்.

இப்போது அவளுக்குக் குற்றவுணர்வாகிப் போனது.

“நான் வேணும்னு பண்ணலைமா…” என்றாள்.

“நீ ஏன் பேசாம இருந்த ராகா?” என்று பிரபஞ்சன் கேட்க,

“அவள் தான் உனக்கு ஒன்னுன்னா துடிச்சுப் போயிடுவாளே! நீ பேசலைன்னு நானும் அவங்ககிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்டா…” என்றார் மீரா.

“ஏன் ராகா? அம்மா மேல உனக்கு என்ன கோபம்? நீ வழக்கம் போலப் பேச வேண்டியது தானே?” என்று கேட்டவனுக்கு அந்தப் பதட்டமான நிலையிலும் மீரா சொன்ன வார்த்தைகள் அவனின் மனதில் பதிந்தது.

‘அவள் தான் உனக்கு ஒன்னுன்னா துடிச்சுப் போயிடுவாளே!’ என்ற வார்த்தைகள் அவனுக்குள் பதிய, ராகவர்தினியை ஒரு நொடி சிந்தனையுடன் தான் பார்த்தான்.

“சாரி அத்தான்…” என்றதுடன் முடித்துக் கொண்டாள்.

அவரின் இந்த நிலைக்குத் தானும் காரணமாகி போனோமே என்று வருத்தப்பட்டாள்.

அப்போது மருத்துவர் வெளியே வர, அவர்கள் பேச்சு நின்று போனது.

“டாக்டர்…” என்று அவர்கள் அருகில் செல்ல,

“என் ரூமுக்கு இரண்டு பேர் மட்டும் வாங்க…” என்று சொல்லிவிட்டு சென்றார்.

“அத்தான், பிரபா போய் என்னன்னு கேட்டுட்டு வாங்க…” என்றார் மாதவன்.

அவர்கள் இருவரும் மருத்துவர் அறைக்குச் சென்றனர்.

“டாக்டர் என்னோட அம்மாவுக்கு எப்படி இருக்கு?” என்று கேட்டான் பிரபஞ்சன்.

“அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கு…” என்றதும் இருவரும் திடுக்கிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“என்ன டாக்டர் சொல்றீங்க?” என்று பதறிப் போய்க் கேட்டார் சுபேசன்.

“ஆமாம், அட்டாக் தான். அதோட இதயத்தில் இரண்டு இடத்தில் அடைப்பு இருக்கு. நாளைக்குள் ஆப்ரேஷன் பண்றது நல்லது…” என்றார்.

“என்ன டாக்டர் இப்படிச் சொல்றீங்க. அவளுக்குப் போயா இப்படி ஆகணும்…” என்று புலம்பிக் கொண்டார் சுபேசன்.

“அப்பா, அமைதியா இருங்க…” என்று தந்தையிடம் சொன்னவன், “ஆப்ரேஷன் செய்தால் சரியாகிடுமா டாக்டர்?” என்று கேட்டான்.

“ஆப்ரேஷன் செய்தால் நல்லது. அவங்க உடல் நிலை இப்ப ஆப்ரேஷன் செய்யும் நிலையில் தான் இருக்கு. தள்ளிப் போடுவது நல்லது இல்லை…” என்றார் மருத்துவர்.

“சரிங்க டாக்டர், அப்போ ஆப்ரேஷனுக்கு ஏற்பாடு செய்ங்க…” என்றான் பிரபஞ்சன்.

“ஓகே…” என்று மருத்துவர் சொன்னதும் தந்தை, மகன் இருவரும் வெளியே வந்தனர்.

“என்ன சொன்னாங்க பிரபா?” என்று மாதவன் விவரம் கேட்க, மருத்துவர் சொன்னதைத் தெரிவித்தான்.

“ஆப்ரேஷனா?” என்று மூவரும் அதிர்ந்தனர்.

“செய்தே ஆகணும்னு சொல்றாங்க. இப்ப அம்மா உடல்நிலை ஆப்ரேஷன் பண்ண ஒத்துழைப்பு கொடுக்கும் நிலையில் தான் இருக்காம். அதனால் பயப்படத் தேவையில்லைன்னு தான் நினைக்கிறேன்…” என்றான்.

“பிரபா யாரு? பேஷண்ட் பார்க்கணும்னு சொல்றாங்க. அவங்க மட்டும் உள்ளே வாங்க. ரொம்ப நேரம் உள்ளே இருக்கக் கூடாது. உடனே வெளியே வந்திடணும்…” என்று சொன்ன படி அழைத்தார் செவிலி.

“நான் தான் சிஸ்டர்…” என்று பிரபஞ்சன் உள்ளே சென்றான்.

உள்ளே ஆக்சிஜன் குழாய், மானிட்டர் என்று புடைசூழ படுத்திருந்த அன்னையைக் கண்டதும் அவனின் கண்கள் கலங்கின.

அவன் அருகில் சென்றதும், “பிரபா…” என்று கண்கள் ஒளிர தீனமாக அழைத்தார் கஸ்தூரி.

“அம்மா, என்னம்மா… இப்படி வந்து படுத்துட்டீங்க?” என்று கலக்கமாகக் கேட்டான்.

“என்னை மன்னிச்சுட்டியா பிரபா?” என்று அந்த நிலையிலும் தடுமாறிக் கேட்டார்.

“நீங்க தான்மா என்னை மன்னிக்கணும். நான் தான் உங்களை விட்டுப் போய்த் தப்பு பண்ணிட்டேன்…” என்று அன்னையின் கையை மென்மையாகப் பிடித்துக் கொண்டான்.

“நாங்க தான் தப்பு… எங்க உன் முகத்தைப் பார்க்காமலேயே போய்ச் சேர்ந்துடுவேன்னு நினைச்சேன்…” என்றவரின் கண்களின் ஓரம் கண்ணீர் வடிந்தது.

“உங்களுக்கு ஒன்னுமில்லைமா. இன்னும் இரண்டு நாளில் வீட்டுக்குப் போயிடலாம்…” என்று ஆறுதலாகச் சொன்னவன், அவரின் கண்ணீரை துடைத்து விட்டான்.

“இல்லை, நான் பிழைப்பேன்னு எனக்கு நம்பிக்கை இல்ல. உங்க அப்பாவை பார்த்துக்கோ…” என்றார் திணறலாக.

“அப்படி எல்லாம் நினைக்காதீங்கமா. டாக்டரே உங்களுக்கு ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டாங்க. அதனால் இப்படிப் பேசாதீங்க. நீங்க எங்களுக்கு வேணும்மா. நல்லபடியா வீட்டுக்கு போவோம்னு நம்பிக்கையா இருங்க…” என்றான்.

“அவங்களை ரொம்பப் பேச விடாதீங்க…” என்று செவிலி சொல்ல,

“அம்மா நீங்க ரெஸ்ட் எடுங்க. நாங்க வெளியே தான் இருக்கோம். பயப்படாதீங்க…” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான் பிரபஞ்சன்.

வெளியே வந்து அமர்ந்ததும் உடைந்து போய் அப்படியே இருக்கையில் அமர்ந்தான்.

கைகளைக் கொண்டு முகத்தை மூடிக் கொண்டான்.

அவன் அப்படித் தளர்ந்து அமர்ந்ததும் மற்றவர்கள் பயந்து போனார்கள்.

“பிரபா, உன் அம்மாவுக்கு என்னாச்சு?” என்று குரல் நடுங்க கேட்டார் சுபேசன்.

அவரின் குரல் மாற்றத்தைக் கண்டவன், தன் தவறை உணர்ந்து கைகளை விலக்கியவன், “அம்மா நல்லா இருக்காங்கப்பா. என்னால் தான் அம்மாவை அப்படிப் பார்க்க முடியலை. ட்டூப், வயர்ன்னு என்னென்னவோ சொருகி வச்சுருக்காங்க…” என்றான் கலங்கிய குரலில்.

மகனே உடைந்து போகவும், சுபேசனும் தளர்ந்து போனார்.

“பிரபா, இப்ப நீ தான் தைரியமா இருக்கணும். கலங்காதே! அக்கா நல்லபடியா பிழைத்து வருவாங்க…” என்று அவனின் தோளை தட்டி ஆறுதல்படுத்தினார் மாதவன்.

“இல்ல மாமா. என்னால் தான் அம்மாவுக்கு இப்படி ஆகிடுச்சுன்னு ரொம்பக் குற்றவுணர்வா இருக்கு…” என்றான்.

“ம்ப்ச், அந்த நேர சூழ்நிலை அப்படி ஆகிடுச்சு. விடு!” என்றார்.

“நீங்க தைரியமா இருங்க அத்தான். நீங்க கலங்கிப் போனால் எங்களால் தாங்க முடியலை…” என்றாள் ராகவர்தினி.

“ம்ம்ம்…” என்றவன் தன்னைத் தேற்றிக் கொள்ள முயன்றான்.

அன்றைய பொழுது கடினமாக நகர ஆரம்பித்தது.

காலையில் அறுவை சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லி விட, அதற்குப் பணம் கட்ட செல்வதும், அவர்கள் சொல்லும் மருந்துகளை வாங்கிக் கொடுப்பதுமாக நேரம் சென்றது.

இதற்கிடையில் அறுவை சிகிச்சை பற்றி அறிந்த கஸ்தூரி ‘ஆப்ரேஷன் செய்து கொள்ள மாட்டேன்’ என்று அடம்பிடிக்க ஆரம்பித்தார்.

“உங்க அம்மாகிட்ட வந்து பேசுங்க சார். மருந்து கொடுத்தும் தூங்காம ஆப்ரேஷன் பண்ணிக்க மாட்டேன்னு புலம்பிட்டே இருக்காங்க. அவங்க ஒத்துழைப்பு இல்லனா காலையில் ஆப்ரேஷன் பண்ண முடியாது. அப்புறம் அவங்களுக்குத்தான் கஷ்டம்…” என்று ஒரு செவிலி வந்து சொல்ல,

“என்ன சொல்றீங்க சிஸ்டர்? இதோ வர்றேன்…” என்று உள்ளே விரைந்தான் பிரபஞ்சன்.

உள்ளே தலையை அசைத்து அசைத்து ஏதோ அரற்றிக் கொண்டிருந்தார் கஸ்தூரி.

“அம்மா, என்னம்மா?” என்று வேகமாக அருகில் சென்று அவரின் கையைப் பற்றிக் கொண்டான்.

“பிரபா, வந்துட்டியா? இவங்க கிட்ட சொல்லு… ஆப்ரேஷன் எனக்குப் பண்ண வேண்டாம்னு சொல்லு…” என்று பதட்டமாகப் புலம்பினார் கஸ்தூரி.

“அம்மா… ரிலாக்ஸ்! எதுக்கு இவ்வளவு பதட்டம்? ரிலாக்ஸ் மா!” என்று அவரின் நெற்றியை மென்மையாக நீவி விட்டான்.

“இல்ல பிரபா எனக்கு ஆப்ரேஷன் வேண்டாம். ஆப்ரேஷன் செய்தால் நான் பிழைக்க மாட்டேன்…”

“அப்படியெல்லாம் நினைக்காதீங்கமா. ஆப்ரேஷன் செய்தால் சீக்கிரம் வீட்டுக்கு போயிடலாம்னு டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க…”

“இல்லை, அவங்க பொய் சொல்றாங்க. நம்பாதே!”

“டாக்டர்ஸ் பொய் சொல்ல மாட்டாங்கமா. நீங்க நம்பிக்கையா இருக்கணும். அப்போதுதான் எங்களுக்கும் நிம்மதியா இருக்கும்…”

“எனக்கு நம்பிக்கையே இல்லை. ஆப்ரேஷன் வேண்டாம்னு சொல்லு…”

கஸ்தூரி சொன்னதையே மாற்றி மாற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாரே தவிரச் சமாதானமாக மறுத்துவிட்டார்.

“அம்மா, என்னம்மா இது? அமைதியா இருங்க. இப்படி அலட்டிக் கொண்டே இருந்தால் கஷ்டமா இருக்குமா. நீங்க சீக்கிரம் சரியாகி வரணும்னு தான் ஆப்ரேஷன் பண்ண போறாங்க. நீங்க முதலில் நம்பிக்கையா அமைதியா இருக்கணும்…” என்று பொறுமையாக எடுத்துச் சொன்னான்.

“இல்ல பிரபா, நான் உன் கல்யாணத்தைப் பார்க்க ஆசைப்பட்டேன். அது நடக்கவே இல்லை. நீயும் எங்க மேல கோபப்பட்டுப் போயிட்ட. நான் ஆப்ரேஷன் முடிந்து வீட்டுக்கு வந்தால் நீ திரும்ப எங்களை விட்டு போயிடுவ. நான் இப்படியே செத்துப் போறேன்…” என்றார்.

“அம்மா, என்ன பேசறீங்க? இப்படி எல்லாம் பேசாதீங்கமா. நான் எங்கயும் போக மாட்டேன். நீங்க வீட்டுக்கு வரும் போது உங்க கூடவே நானும் வர்றேன். இனி தனியா போக மாட்டேன்…” என்றான்.

“இல்லை, நீ பொய் சொல்ற. நீ எங்களை விட்டு போய்டுவ…” என்றார்.

“ஏன்மா இப்படிப் பேசுறீங்க? நான் உண்மையைத்தான் சொல்வேன்னு உங்களுக்குத் தெரியாதா?” என்று ஆதங்கமாகக் கேட்டான்.

கஸ்தூரியின் மனம் மிகவும் சஞ்சலத்தில் இருந்தது.

மகனை போலீஸ் கைது செய்தது, அவனின் திருமணம் நின்றது, அவனைத் தாங்கள் தவறாகப் புரிந்து கொண்டதால் வந்த குற்றவுணர்வு, அவன் வீட்டிற்கு வராமல் போனது… என்று சில நாட்களாக மனதிற்குள் அவருக்குப் பெரும் போராட்டம்.

இப்போது அறுவை சிகிச்சையில் எதுவும் ஆகிவிடுமோ, தான் இறந்து விடுவோமோ என்ற பயத்தில் மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

“நீ இனி கல்யாணம் பண்ண மாட்டன்னு மாதவன்கிட்ட சொன்னயாமே. அப்போ நான் உன் கல்யாணத்தைப் பார்க்கவே முடியாதா?” என்று இப்போது அவன் கல்யாண விஷயத்தில் வந்து நின்றார்.

“கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன்னு சொல்லலைமா. நின்னு போன கல்யாணம் நடக்க வேண்டாம்னு தான் சொன்னேன். நீங்க நல்லபடியா வீட்டுக்கு வந்ததும் வேற பொண்ணு பார்த்து கொடுங்க, கல்யாணம் பண்ணிக்கிறேன்…” என்றான் சமாதானமாக.

“இல்லை, நீ கல்யாணம் பண்ணிக்க மாட்ட. முன்னாடியே சொல்லுவ, பொண்ணு மாத்தி மாத்தி பார்த்துட்டு இருக்கக் கூடாது. பார்க்கிற பொண்ணையே முடிவு பண்ணனும்னு. அப்படித்தானே நந்திதாவை பார்த்தோம். இப்ப நந்திதா வேண்டாம்னா அப்போ நீ வேற பொண்ணைப் பார்க்கவும் மாட்ட, கல்யாணம் பண்ணிக்கவும் மாட்ட. எனக்கு நல்லா தெரியும்…” என்றார் உறுதியாக.

“அப்படி எல்லாம் இல்லம்மா…” என்று அவன் சொல்லியும் அவர் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

“எனக்கு உன் கல்யாணத்தைப் பார்க்கணும். கல்யாணம் பண்ணிக்கோ, நான் ஆப்ரேஷன் பண்ணிக்கிறேன்…” என்பதில் வந்து நின்றார்.

மலைத்துப் போனான் பிரபஞ்சன்.

“இப்ப உங்க ஆப்ரேஷன் தான்மா முக்கியம். அது முடியட்டும். அப்புறம் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கிறேன்…”

“இல்லை, நீ என் கண் முன்னால் என் ஆப்ரேஷனுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணு. ஆப்ரேஷனில் செத்துப் போனால் கூட உன் கல்யாணத்தைப் பார்த்த திருப்தியோட செத்துப் போறேன்…” என்றார்.

“உடனே எப்படிமா கல்யாணம் பண்ண முடியும்? பொண்ணுக்கு எங்கே போறது? நந்திதா வீட்டில் திரும்பக் கல்யாணம் பேசி அது நடப்பது எல்லாம் முடியாத காரியம் மா. எனக்கு அந்தக் கல்யாணம் வேண்டாம். சொன்னால் புரிஞ்சிக்கோங்க…” என்றான்.

“வேற பொண்ணு பாரு…”

“உங்களுக்குக் காலையில் ஆப்ரேஷன்மா. அதுக்குள்ள பொண்ணு எப்படிப் பார்க்க முடியும்?” என்று புரிந்து கொள்ள மறுக்கிறாரே என்ற இயலாமையுடன் சொன்னான்.

“அதான் நம்ம ராகா இருக்காளே? அவளுக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். நாங்க உன்னை நம்பாதப்ப கூட அவள் உன்னை நம்பினாள். அவள் தான் உனக்குச் சரியா இருப்பாள். அவளைக் கல்யாணம் பண்ணு…” என்பதில் வந்து நின்றார்.

“ராகா?” என்று அதிர்ந்து தான் போனான்.

“ராகாவை நான் அப்படியெல்லாம் நினைத்தது இல்லைம்மா. நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க. நீங்க வீட்டுக்கு வந்ததும் வேற பொண்ணு பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கிறேன்…”

“இதுவரை நினைக்கலைனா இனி நினை! நீ அவளைக் கல்யாணம் பண்ணு. அப்புறம் ஆப்ரேஷன் பண்ணிக்கிறேன்…” என்றவரின் மூச்சு திணற ஆரம்பித்தது.

அவரை உடனே வந்து செவிலி கவனிக்க, “அம்மா… அம்மா…” என்று பயந்து அழைத்தான்.

“கல்யாணம் பண்ணு…” என்று மூச்சு காற்றுக்குத் தவித்த நிலையிலும் விடாமல் திணறிக் கொண்டே சொன்னார்.

“நீங்க வெளியே போங்க சார்…” என்று செவிலி சொல்ல, தளர்ந்த நடையுடன் வெளியே வந்தான்.

அன்னை இப்படிச் சொல்வார் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

என்ன செய்வது என்று புரியாமல் தளர்ந்து போனான்.

“என்ன பிரபா, என்னாச்சு?” என்று வெளியே இருந்தவர்கள் அவனின் தளர்வை பார்த்து பயந்து கேட்க, அவர்களிடம் சொல்ல கூட அவனுக்கு வாய் வரவில்லை.

ராகவர்தினியை பற்றி அவன் அப்படி நினைத்து கூடப் பார்த்தது இல்லை.

“என்னாச்சு பிரபா, அக்கா ஆப்ரேஷனுக்குச் சரி சொன்னாங்களா இல்லையா?” என்று மாதவன் கேட்க, அவரை வேதனையுடன் பார்த்தான்.

“ஏன் பிரபா?”

“நான் உடனே கல்யாணம் பண்ணிக்கணுமாம். அப்பத்தான் ஆப்ரேஷன் செய்துப்பாங்களாம்…” என்றான் தீனமான குரலில்.

“என்ன கல்யாணமா? உடனே எப்படி முடியும்?”

“அதைத்தான் நானும் சொன்னேன். ஆனா அவங்க கேட்கவே மாட்டிங்கிறாங்க. பேசி பேசி மூச்சு திணறல் வந்துருச்சு. இப்ப என்ன செய்வதுனே தெரியலை…” என்று வருத்தமாக நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டான்.

“பொண்ணுக்கு எங்கே போறது? நந்திதா வீட்டில் என்ன சொல்வாங்களோ?” என்றார் மீரா.

அவனோ மாதவனையும், மீராவையும் தயக்கத்துடன் பார்த்தான்.

அவர்களிடம் அன்னை சொன்னதைச் சொல்ல அவனுக்கு விருப்பம் இல்லை தான். ஆனால் அவரின் திணறலான பேச்சு, அவரின் ஆசை, தவிப்பு, மூச்சு திணறல்… எல்லாம் சேர்ந்து அவனை ஒரு முடிவு எடுக்கத் தள்ளியது.

“மாமா… அத்தை…” என்று இருவரையும் அழைத்தவன், மெல்ல அன்னையின் ஆசையைச் சொல்லிவிட்டான்.

அதைக் கேட்டதும் ராகவர்தினி சந்தோஷப்படுவதா, வருத்தப்படுவதா என்று தெரியாத நிலையில் நின்றிருந்தாள்.

அவளுக்குத் தன் காதலை பிரபஞ்சனிடம் சொல்லி, அவனும் தன்னைக் காதலித்து அதன் பிறகு திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது.

அவனுடனான திருமணத்தில் சந்தோஷம் தான் என்றாலும், தன் காதலை சொல்ல முடியாதே என்பதில் வருத்தமாக இருந்தது.

“ராகாவை நான் அப்படி எல்லாம் நினைத்துப் பார்த்தது இல்லை மாமா. ஆனால் அம்மா பிடிவாதமா இருக்காங்க. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை…” என்றான் பிரபஞ்சன்.

அவன் அப்படிச் சொன்னதும் ராகவர்தினி வேதனையுடன் அவனைப் பார்த்தாள்.

அப்போது தான் காதலை சொன்னாலும் இவன் சரி சொல்ல மாட்டானோ? என்று தவிப்புடன் நினைத்தாள்.

“மாதவா, உன் அக்காவோட ஆசையை நிறைவேத்தி வைப்பா. அவளுக்காக நான் கெஞ்சி கேட்கிறேன்…” என்று சுபேசன் மாதவன் கையைப் பற்றிக் கொண்டு கேட்டார்.

மாதவனுக்கு என்ன பதில் சொல்ல என்று புரியாமல் விழிபிதுங்கி போனது.

“உடனே எப்படி அண்ணா கல்யாணம் பண்ண முடியும்? அவள் எங்களுக்கு ஒரே பொண்ணு. அவளுக்கு நல்லா கல்யாணம் பண்ணனும்னு எங்களுக்கும் ஆசை இருக்கும்ல?” என்றார் மீரா.

“கஸ்தூரி வீட்டுக்கு வந்ததும், ரிசப்ஷன் பெருசா செய்வோம் மா…” என்றார் சுபேசன்.

“அத்தான், முதலில் நம்ம பிள்ளைங்க மனதில் என்ன இருக்குன்னு தெரியணும்…” என்றார் மாதவன்.

உடனே மகன் பக்கம் திரும்பிய சுபேசன், “பிரபா, ஏற்கனவே உன் கல்யாணம் நின்னதில் அம்மா உடைந்து போயிருக்கா. இப்ப இந்த நிலையில் வேற இருக்கா. அவளோட ஆசை உன் கல்யாணம் தான் என்னும் போது அதை நிறைவேத்தி வையேன்…” என்று மகனிடம் கெஞ்சலாகக் கேட்டார்.

“அப்பா, ராகா… ம்ப்ச், எனக்கு என்ன முடிவு எடுக்குறதுனே தெரியலைபா. அவள் படிப்பை வேற முடிக்கலை. இந்த நிலையில்…” என்றவனுக்கு மேலே என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை.

“கல்யாணம் முடிந்த பிறகு படிக்கட்டும்…” என்றார் சுபேசன்.

“நீ என்ன நினைக்கிற ராகா?” என்று மாதவன் மகளிடம் கேட்டார்.

“அத்தானை கல்யாணம் பண்ணிக்க எனக்குச் சம்மதம் பா…” என்று பிரபஞ்சனை பார்த்துக் கொண்டே சொன்னாள் ராகவர்தினி.

அவனை மனதில் சுமந்து கொண்டிருப்பவளால் அந்தப் பதிலை மட்டுமே சொல்ல முடிந்தது.

அவளின் பதிலை கேட்டு விழுக்கென்று நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான் பிரபஞ்சன்.

அவனின் பார்வையைத் தயங்காமல் எதிர்கொண்டாள் ராகவர்தினி.