16 – இதயத்திரை விலகிடாதோ?

அத்தியாயம் – 16

2020 – ஆங்கிலப் புத்தாண்டு.

“ஹேப்பி நியூ இயர் சூர்யா…”

“ஹேப்பி நியூ இயர் சிஸ்டர்…”

கணவன், மனைவி இருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்தான் காரில் அமர்ந்திருந்த தினேஷ்.

அவனுக்கு நன்றி சொல்லியவர்கள், பதில் வாழ்த்து தெரிவித்தனர்.

அவன் அருகில் அமர்ந்திருந்த நந்தினி காரிலிருந்து இறங்கி வந்து, இருவருக்கும் வாழ்த்து சொல்லி, பெற்றும் கொண்டாள்.

“நீங்க முன்னால் உட்காருங்க சூர்யா. நானும், யுவாவும் பின்னால் உட்கார்ந்துகிறோம்…” என்றாள் நந்தினி.

சூர்யா முன்னால் அமர, தோழிகள் இருவரும் பின்னால் அமர்ந்து கொண்டனர்.

தினேஷ் காரை செலுத்த ஆரம்பிக்க, “வீட்டில் என்ன சொல்லிட்டு வந்த நந்தினி?” என்று யுவஸ்ரீ விசாரித்தாள்.

“என் லவ்வரோட ஊர் சுத்த போறேன்னு சொல்லியிருப்பாள்…” என்று சொல்லிவிட்டு கிண்டலாகச் சிரித்தான் தினேஷ்.

“ஆமா, சொல்றாங்க… நான் வீட்டில் விளக்கமாத்து அடி வாங்கவா? ஃபிரண்ட்ஸ் கூட ஊர் சுத்த போறேன்னு சொல்லி சமாளிச்சுட்டு வந்திருக்கேன். அதுக்கே திட்டு. வருஷப் பிறப்பு அன்னைக்கு எங்க கூட இருக்க மாட்டியான்னு…” என்று நொடித்துக் கொண்டாள் நந்தினி.

“அவங்க சொல்வதும் சரிதானே நந்தினி? மத்த நாளில் எல்லாம் நாம வேலை வேலைனு ஓடுறோம். இதுபோல் லீவு நாளில் தானே அவங்க கூட நேரம் ஸ்பென்ட் பண்ண முடியும்…” என்றாள் யுவஸ்ரீ.

“எவ்வளவு நேரம் வேலைன்னு வெளியே சுத்தினாலும் வீட்டுக்கு வந்ததும் எப்பவும் வீட்டில் இருப்பவங்க கூடத் தான் இருக்கப் போறோம். அதில் என்ன சுவாரசியம் இருக்கு? கிடைக்கிற நேரத்தில் இப்படி ஊர் சுத்தினால் தான் ஜாலியா இருக்கும். மைண்ட்டுக்கும் ரிலாக்ஸா இருக்கும்…”

யுவஸ்ரீ, நந்தினியிடம் கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னது என்னவோ சூர்யா தான்.

‘அப்போ இவள் எங்க போயிட போறாள்? வீட்டில் தானே இருப்பாள்… எப்போ வேண்டுமானாலும் இவள்கிட்ட பேசலாம். இவளுக்கு எதுக்கு நேரத்தை செலவழிக்கணும் என்ற அலட்சியத்தில் என்னைக் கண்டு கொள்வது இல்லையா?’ என்ற நினைப்பு மனதில் ஓட, கணவனை வெறித்துப் பார்த்தாள் யுவஸ்ரீ.

“அதே தான் சூர்யா. வீட்டில் இருந்து என்ன செய்யப் போறோம்? டிவியில் போடும் ப்ரோகிராம் பார்த்துட்டு, சாப்பிட்டு, தூங்கின்னு நேரம் போகும். அது எப்பவும் லீவில் நாம செய்வது தானே? ஆனா, இப்படி வெளியே போகும் போது சுத்திப் பார்த்த மாதிரியும் ஆச்சு. பல மனுஷங்களைப் பார்த்த மாதிரியும் ஆச்சு. பார்த்த மூஞ்சிகளைப் பார்த்து போர் தான்…” என்றாள் நந்தினி.

நந்தினியும் சூர்யா போலவே பேச, யுவஸ்ரீயின் முகம் மாறியது.

“வீட்டில் இருக்கும் மனுஷங்களையே கண்டுக்காம யாருன்னே தெரியாத மத்த மனுஷங்களைப் பார்த்து என்ன சாதிக்கப் போற நந்தினி? முதலில் வீட்டில் இருப்பவங்களைச் சக மனுஷனா மதிக்கணும். வீட்டில் இருப்பவங்களைக் காயப்படுத்திட்டு வெளியே போய் ஜாலியா இருப்பது ஒன்னும் அவ்வளவு நல்ல விஷயம் இல்லை நந்தினி…” ஒரு மாதிரியான குரலில் சொன்னாள் யுவஸ்ரீ.

“ஏய், யுவா… நீ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற? வெளியே ஜாலியா இருந்தால் வீட்டில் இருப்பவங்களைக் காயப்படுத்துவதாக அர்த்தமா என்ன?” என்று தோழியைச் சமாதானம் செய்தாள் நந்தினி.

“அதை நீ சொல்ல கூடாது நந்தினி. உன் வீட்டில் இருப்பவங்க மனநிலை என்னன்னு அவங்ககிட்ட கேட்டால் தான் தெரியும்…” என்றாள் யுவஸ்ரீ.

“நீ எதுக்கு இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிறன்னு தெரியலை யுவா. எங்க வீட்டில் யாரையும் அப்படி நான் காயப்படுத்தியது இல்லை. லீவ் அன்னைக்கு எல்லாம் நான் அவங்களை ஒரு வழி ஆக்கிருவேன். என் சேட்டை தாங்காமல் இன்னைக்கு எதுக்கு உனக்கு லீவ் விட்டாங்கன்னு அவங்களே அலறுவாங்க…” என்றாள் நந்தினி.

“வீட்டில் இருப்பவங்களுக்கும் நீ நேரம் செலவழித்தால் சந்தோஷம் தான் நந்தினி…” என்று பேச்சை முடித்துக் கொண்டாள் யுவஸ்ரீ.

அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு வந்த சூர்யாவின் முகம் யோசனையில் சுருங்கியது.

“ஓகே, டாப்பிக் சீரியஸ் மோட்க்கு போகுது. ரிலாக்ஸ்! காலை டிபன் சாப்பிட இங்கே நிறுத்துவோமா?” என்று கேட்டான் தினேஷ்.

“இன்னும் கொஞ்ச தூரம் போயிடலாம் தினேஷ்…” என்றான் சூர்யா.

“நீங்க என்ன சொல்றீங்க லேடீஸ்?” தினேஷ் பெண்களிடம் கேட்க,

“சூர்யா சொல்வது தான் சரி…” என்றனர்.

“ஓகே…” என்றான்.

“இந்தக் கார் எவ்வளவுக்கு எடுத்த தினேஷ்?” சூர்யா அவன் காரைப் பற்றி விசாரிக்க,

“பதின்னொன்னு ஆச்சு சூர்யா. போன மாசம் தான் எடுத்தேன். மாடல் நல்லா இருக்கா?” தினேஷ் கேட்க,

“நல்லா இருக்கு…” என்றான் சூர்யா.

“நீயும் ஒரு கார் வாங்க வேண்டியது தானே சூர்யா? இது மாதிரி வெளியே போகக் கார் தான் வசதி…”

“வாங்கணும் தினேஷ். இப்போதைக்குப் பைக் தான் எனக்கு வசதியா இருக்கு. அதான் கார் வாங்கும் ஐடியாவை தள்ளிப் போட்டுருக்கேன்…” என்றான்.

“உங்களுக்குன்னு பேபி எல்லாம் வரும் போது கார் தான் நல்லது சூர்யா. அந்த நேரம் வாங்கிடுங்க. என் ஃபிரண்டை காரில் தான் வசதியா ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும்…” என்ற நந்தினி தோழியைப் பார்த்து கண்சிமிட்டி சிரித்தாள்.

‘ஆமா, எங்க இரண்டு பேருக்கும் முட்டிக்கவே நேரம் சரியா இருக்கு. இதில் எங்கிருந்து குழந்தை?’ என்று உள்ளுக்குள் வருத்த பெருமூச்சு விட்டுக் கொண்ட யுவஸ்ரீ, தோழியைப் பார்த்து பெயருக்கு சிரித்து வைத்தாள்.

நந்தினியின் பேச்சைக் கேட்டுக் கொண்டே மனைவியைத் திரும்பிப் பார்த்தான் சூர்யா.

அவளின் முகத்தில் நொடியில் வந்து போன வருத்தமும், சமாளிப்பு சிரிப்பையும் கவனித்து விட்டு திரும்பிக் கொண்டான்.

அப்போது ஓர் உணவகத்தின் முன் காரை நிறுத்தினான் தினேஷ்.

“சாப்பிடலாம் வாங்க…” என்றான்.

காலை எட்டு மணி ஆகியிருந்தது.

காலையில் சீக்கிரம் கிளம்பி சென்று இரவு பத்து மணிக்குள் வீடு சென்று விட வேண்டும் என்ற திட்டத்துடன் நால்வரும் கிளம்பி வந்திருந்தனர்.

உணவகத்தில் காலை உணவை முடித்துக் கொண்டு மீண்டும் பயணத்தை ஆரம்பித்தனர்.

நால்வருக்கும் இடையே பேச்சுச் சரளமாக ஓடியது.

ஆனாலும் சூர்யாவும், யுவஸ்ரீயும் நேராகப் பேசிக் கொள்ளவில்லை.

இருவருக்கும் இடையே ஒரு திரை விழுந்திருந்தது.

அன்று மாத்திரை பற்றி விசாரித்த போது யுவஸ்ரீ பேசியது சூர்யாவை ஏதோ ஒரு வகையில் தாக்கியிருந்தது.

அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை. அதனால் அவனுக்கு யோசனையும், குழப்பமும் வந்து சேர்ந்ததே தவிரத் தெளிவு கிடைக்கவில்லை.

தான் நினைத்ததை நினைத்தது போல் செய்து விட வேண்டும் என்று நினைப்பவன் அவன்.

அவனுக்கு மனைவிக்கு இருக்கும் நினைப்பை பற்றியோ, எதிர்பார்ப்பு பற்றியோ தெரியவில்லை.

ஆனாலும் மனைவியை அதன் பிறகு அமைதியாகக் கிரகிக்க முயன்றான் என்பதே உண்மை.

அதுவே அவனிடம் வந்த சிறு முன்னேற்றமாக இருந்தது.

மகாபலிபுரம் வந்து சேர்ந்தனர்.

ஒரு பீச் ரிச்சார்ட்டில் அறை புக் செய்திருந்தனர்.

நேராக ரிச்சார்ட்டில் காரை நிறுத்தினான் தினேஷ்.

“நம்ம இரண்டு பேருக்கும் ஒரு ரூம் தான் புக் பண்ணிருக்கேன் நந்து. உனக்கு ஓகே தானே?” தினேஷ் கேட்க,

“ஒரே ரூமா?” என்று தயங்கினாள் நந்தினி.

“நான் நல்ல பையன் தான் மா. என்னை நம்பி வரலாம்…” என்று ஒரு மாதிரியான குரலில் தினேஷ் சொல்ல,

“அதுக்கு இல்லை தினு. நான் இவ்வளவு தூரம் வந்ததே பெருசு. ரொம்ப நாளா நீங்க கேட்டுட்டு இருந்தீங்கன்னு தான் இந்த ட்ரிப் வர முடிவு செய்தேன். ஆனா ஒரே ரூம்னா…” என்று தயக்கத்துடன் இழுத்தாள்.

“வேற ரூம் கிடைக்கலை நந்து. நியூ இயர்க்கு புக் ஆகிடுச்சு. இதுவே கஷ்டப்பட்டுத்தான் பிடிச்சேன்…” என்றான்.

அவர்கள் இருவரும் சற்று தள்ளி நின்று மெதுவான குரலில் பேசிக் கொண்டிருக்க, சூர்யாவும், யுவஸ்ரீயும் தனியாக நின்றிருந்தனர்.

சங்கடமாகக் கைகளைப் பிசைந்த நந்தினி, தோழியைத் திரும்பிப் பார்த்தாள்.

யுவஸ்ரீ புரியாமல் நந்தினியைப் பார்க்க, ‘ரூம்’ என்று உதட்டை மட்டும் அசைத்தாள்.

அவளுக்கு ரூம் விவரம் எல்லாம் தெரியவில்லை. ஆண்கள் இருவரும் தான் அறைக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

“எதுக்கு இவ்வளவு யோசிக்கிற நந்து? நாம என்ன ரூமுக்குள்ளயேவா இருக்கப் போறோம்? வெளியே சுத்திட்டுக் கடலில் குளிச்சுட்டு இங்கே வந்து ட்ரஸ் மாத்திட்டுக் கிளம்பத்தான் ரூம்.

என்னவோ ரூமுக்குள் போனதும் உன் மேல நான் பாய்ந்து விடுவது போல் எதுக்கு யோசனை? என் மேல நம்பிக்கை இல்லைனா எதுக்கு இவ்வளவு தூரம் வரணும்?” என்ற தினேஷுக்கு கோபமே வந்து விட்டிருந்தது.

“கோபப்படாதீங்க தினு. நான் ரூமில் ரெடி ஆகும் போது நீங்க வெளியே இருக்கணும். அதுக்கு ஓகேவா?” என்றவளை முறைத்தான்.

“தினு ப்ளீஸ். நீங்க நல்ல பையனா இருக்கலாம். ஆனால் நான் நல்ல பொண்ணா இல்லாமல் போனால்…” என்று குறும்பாகப் பேசி அவன் கோபத்தை மாற்ற முயற்சி செய்தாள்.

“ஆமா… நீ கெட்ட பொண்ணா மாறிட்டாலும்… வந்து தொலை! சரியான சாமியாரிணியை லவ் பண்ணி தொலைச்சுட்டேன்…” என்று அலுத்துக் கொண்டான்.

இருவரும் சூர்யா, யுவஸ்ரீ அருகில் வந்தனர்.

“என்னாச்சு நந்தினி?” தோழியிடம் மெதுவாக விசாரித்தாள் யுவஸ்ரீ.

அவள் அறையைப் பற்றிச் சொல்ல, “நாம இரண்டு பேருக்கும் ஒரு ரூம், அவங்க இரண்டு பேருக்கும் ஒரு ரூம்னு எடுத்துக்கலாமா?” எனக் கேட்டாள்.

“இருக்கட்டும் யுவா. எதுவும் பிரச்சினை இருக்காது. நான் சமாளிச்சுக்கிறேன்…” என்றாள்.

பின் இரண்டு ஜோடிகளும் அருகருகே இருந்த தங்கள் அறைக்குச் சென்றனர்.

தாங்கள் கொண்டு வந்த பையை அறையில் வைத்து விட்டு உடனே வெளியே கிளம்பினர்.

ரிச்சார்ட் கடற்கரை அருகில் தான் இருந்தது. ரிச்சார்ட்டிற்கென ஒதுக்கப் பட்ட பகுதி என்பதால் அதிகம் கூட்டம் இல்லாமல் அங்கே தங்கியிருந்தவர்கள் மட்டும் தான் இருந்தனர்.

தினேஷும், நந்தினியும் கைகளைக் கோர்த்துக் கொண்டு கடல் நீரில் கால்களை நனைக்க, சற்று தள்ளி முன்னால் சென்ற சூர்யா கடலுக்குள் சென்று குளிக்க ஆரம்பித்தான்.

அவனைப் பார்த்த வண்ணம் கடற்கரையில் கால்களை மட்டும் நனைத்தபடி தனியாக நின்றிருந்தாள் யுவஸ்ரீ.

அவளுக்குக் கணவனுடன் கைகளைக் கோர்த்துக் கொண்டு கால் நனைக்க ஆசையாக இருந்தது.

ஆனால் அவன் அதைப் பற்றி எப்போதும் போல் இப்போதும் யோசிக்காமல் முன்னால் சென்று விட, ‘இது வழக்கம் தானே?’ என்பது போல் தன் கால்களை வந்து போதும் அலைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் யுவஸ்ரீ.

“யுவா, ஏன் தனியா நிற்கிற? சூர்யா கூட நீயும் போ!” சற்று தள்ளி நின்றிருந்த நந்தினி குரல் கொடுத்தாள்.

“போகலாம்… போகலாம்… நீ என்னைப் பார்க்காமல் என்ஜாய் பண்ணு…” என்று சிரித்தபடி சொன்னாள்.

அவர்களின் குரல் கேட்டதும், இருவரையும் திரும்பிப் பார்த்தான் சூர்யா.

தினேஷும், நந்தினியும் கைகளைக் கோர்த்தபடி தண்ணீரில் விளையாடுவதையும், மனைவி மட்டும் தனியாக நிற்பதையும் பார்த்தவன் என்ன நினைத்தானோ, கரைக்கு வந்தான்.

“என்ன தனியா நின்னுட்ட? என் கூட வர வேண்டியது தானே?” என்று கேட்டான்.

“நான் தனியாக இருப்பது புதுசா என்ன?” என்றவளை தீர்க்கமாகப் பார்த்தான்.

அவளுக்குப் பதில் சொல்லாமல் அடுத்த நொடி அவளின் விரல்களுடன் தன் விரல்களைக் கோர்த்துக் கொண்டவன், “என்னவோ உன்னை மட்டும் அத்துவான காட்டுக்குள் கொண்டு போய் விட்டது போலப் பேசுற…” என்றவன் அவளின் விரல்களைப் பற்றிய படியே உள்ளே அழைத்துப் போனான்.

‘நீங்க என்னை ஒவ்வொரு முறை தனியாக விடும் போதும் நான் அப்படித்தான் பீல் பண்ணிருக்கேன்’ என்று அவள் மனதில் நினைத்ததை வெளியே சொல்லவில்லை.

அதற்கு மேல் அவளை யோசிக்க விடாமல் ஆழத்திற்கு இழுத்துப் போயிருந்தான் சூர்யா.

“சூர்யா, ஆழமா இருக்கு. என்னை விடுங்க…” என்று அவனின் கையை விடுவிக்க முயன்றாள்.

“ஆழத்தில் தான்டி குளிக்கணும்…”

“அதுக்காக இவ்வளவு ஆழமா?” என்றவள் இடையைத் தாண்டி மேலே ஏறிக் கொண்டிருந்த தண்ணீரை சுட்டிக் காட்டிப் பயந்தாள்.

“இடுப்பு வரை தானே தண்ணி இருக்கு? இது கூட இல்லாமல் கரையில் உட்கார்ந்தா குளிக்க முடியும்?” என்று அவன் கிண்டலாகக் கேட்க,

“விளையாடாதீங்க சூர்யா, எனக்குப் பயமாக இருக்கு…” என்றாள்.

“நான் உன் பக்கத்தில் இருக்கும் போது உனக்கு என்னடி பயம்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டவன், தண்ணீரை கையில் அள்ளி அவளின் முகத்தின் மீது தெளித்தான்.

தண்ணீர் அவள் முகத்தில் தெளித்து, மூக்கிலும் சிறிது ஏறியது.

“ஹா… அச்… என்ன சூர்யா இது?” என்று திணறி போனாள்.

அவனோ இன்னும் தண்ணீரை அள்ளி தெளிக்க, “வேண்டாம் சூர்யா…” என்றவள் தானும் தண்ணீரை அள்ளி அவன் மேல் தெளித்தாள்.

அப்படியே இருவரும் மாறி மாறி தண்ணீரை அடித்து விளையாட, தங்கள் மன சுணக்கங்களை எல்லாம் மறந்து தான் போயினர்.

முதல் முறையாகக் கணவனிடம் அப்படி விளையாடியது யுவஸ்ரீக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

தண்ணீரில் விழுந்து புரண்டு, கொண்டாட்டமாக விளையாடினர்.

விளையாடிக் கொண்டே யுவஸ்ரீ தடுமாறி தண்ணீருக்குள் விழுந்து விட, “ஏய், பார்த்துடி…” என்று அவளின் இடையைப் பற்றித் தூக்கியவன், அதன்பிறகு விடாமல் தன்னுடன் சேர்த்து அழுத்தமாகப் பிடித்துக் கொண்டான்.

சில நாட்களுக்குப் பிறகு மனைவியுடனான அந்த நெருக்கம் அவனைப் புரட்டிப் போட்டது.

சும்மாவே அவளை உரசிக் கொண்டு இருப்பவன், சில நாட்களின் இடைவெளிக்கு பிறகு ஒட்டிக் கொண்டதில் இப்போது பற்றிக் கொண்டது போல் இருந்தது.

தன் தலையைச் சிலுப்பித் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றான்.

அவன் தலையில் இருந்து அவளின் முகத்தில் தண்ணீர் தெறிக்க, அவன் இப்படியும் விளையாடுகிறான் என்று நினைத்து, தன் தலையையும் உதறினாள் யுவஸ்ரீ.

அதில் அவனின் முகத்தில் தண்ணீருடன் அவளின் முடியும் சேர்ந்து ஒட்டிக் கொண்டது.

ஒரு கொத்து முடி அவனின் உதட்டின் மீது ஒட்டிக் கொள்ள, அதில் தன் உதடுகளை அழுத்தி முத்தம் வைத்தவன், அவளின் இடையை அழுத்திப் பிடித்தான்.

அப்போது தான் அவன் தன்னைப் பிடித்திருக்கும் வேறுபாட்டை உணர்ந்தாள் யுவஸ்ரீ.

“சூர்யா, என்ன இது?” என்று நெளிந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றாள்.

“கொல்றடி பொண்டாட்டி…” தாபத்துடன் முனங்கியவன் அவளின் கழுத்தில் முகத்தைப் புதைத்தான்.

“சூர்யா…” என்று தயக்கத்துடன் அவனை விலக்க முயன்ற போது, ஒரு பெரிய அலை வந்து அவர்கள் மீது மோத… இருவருமே தண்ணீருக்குள் விழுந்தனர்.

மனைவியைக் கட்டிக் கொண்டு விழுந்தவன், சமாளித்து எழுந்து, அவளையும் தூக்கி விட்டான்.

அதுவரை விளையாட்டாக விளையாடிக் கொண்டிருந்த இருவரின் மனதிலுமே சலனம்.

ஆர்வமும், ஏக்கமுமாக மனைவியின் முகம் பார்த்தான். அவனின் பார்வை அவளைத் தாக்கியது.

“கரைக்குப் போகலாம் சூர்யா…” என்று தடுமாற்றத்துடன் சொன்னவள், இடையில் இருந்த அவனின் கையை விலக்க முயன்றாள்.

“போகலாம்…” என்று கரகரப்பான குரலில் சொன்னவன், தன் கையை மட்டும் விலக்கிக் கொள்ளவே இல்லை.

லேசாக நெளிந்தாலும் ஒரேடியாக அவனை விட்டு அவளும் விலக முயற்சி செய்யவில்லை.

இருவரும் கரைக்கு வந்த போது, அங்கே தினேஷூம், நந்தினியும் வரவும் தான் இருவரும் விலகி நின்றனர்.

“தண்ணியில் நல்லா ஆட்டம் போட்டாச்சு. மதியமே ஆகிருச்சு. பசிக்குது, சாப்பிட போகலாமா சூர்யா?” என்று கேட்டான் தினேஷ்.

“போகலாம் தினேஷ்…” என்றதும், நால்வரும் கிளம்பினர்.

நந்தினி யுவஸ்ரீயுடன் பேசிக் கொண்டு வர, வேறு வழியில்லாமல் மனைவியை விட்டு தள்ளி சென்று தினேஷூடன் பேசிக் கொண்டு வந்தான் சூர்யா.

ஆனாலும் அவ்வப்போது அவனின் பார்வை மனைவியைத் தழுவி மீண்டது.

அவளும் அவனின் பார்வையை உணர்ந்தே இருந்தாள்.

அறை வந்ததும் தினேஷ் வெளியே நின்று கொள்ள, நந்தினி மட்டும் அறைக்குள் சென்றாள்.

அவர்களைக் கவனிக்கும் நிலையில் சூர்யாவும், யுவஸ்ரீயும் இல்லை. ஏதோ கனவில் இருப்பது போல் இருவரும் தங்கள் அறைக்குள் சென்றனர்.

அறைக்குள் சென்று கதவை மூடிய மறுநொடி முன்னால் சென்ற மனைவியின் கையைப் பிடித்துச் சுண்டி இழுத்தான் சூர்யா.

சுழன்று அவன் மார்பில் மோதி நின்றாள் யுவஸ்ரீ.

வேகத்துடன் அவளை அணைத்துக் கழுத்தில் முகத்தைப் புதைத்தவன், “நிஜமாவே நான் தொட்டால் உனக்குப் பிடிக்காதாடி பொண்டாட்டி?” என்று ஏக்கத்துடன் முணுமுணுப்பாகக் கேட்டான்.

“சூர்யா…” என்று அவள் முனங்க,

“சொல்லுடி, ப்ளீஸ்!” என்றான் அழுத்தமாக.

‘ஆமாம்’ என்று சொல்லி விட்டால் அவன் உடைந்தே போவான் என்பது போல் இருந்தது அவன் குரல்.

அவளுக்குப் பிடிக்காமல் இருந்தது இல்லை. அதையும் தாண்டி அவனின் அன்பும் தனக்கு வேண்டும் என்பது மட்டுமே அவளின் எண்ணம் தானே தவிர, கணவனை முற்றிலுமாக விலக்கி நிறுத்த அவள் நினைத்ததே இல்லை.

அதனால் அவளால் ‘ஆமாம்’ என்பதைச் சொல்ல முடியவில்லை.

‘இல்லை’ என்பது போல் தலையை அசைத்தாள்.

‘அப்போ ஏன் அன்று அப்படிப் பேசினாள்?’ என்ற எண்ணம் மனதில் ஓடினாலும், அதையும் தாண்டி மனைவியின் அருகாமை அவனை மயக்க, சிந்தனைக்கு விடை கொடுத்தவன், சிந்தை தொலைந்து போனான் அவளுள்!