16 – நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்

அத்தியாயம் – 16

சில மணி நேரங்களுக்குப் பிறகு சத்யா அறைக்கு மாற்றப்பட அனைவரும் சென்று பார்த்தனர்.

கையில் பெரிய கட்டுடன் கழுத்தோடு சேர்த்து கையைக் கோர்த்திருக்க, முகம் வெளுத்து, உதடுகள் வறண்டு மயக்கத்தில் இருந்த சத்யாவை பார்த்ததும் சட்டென்று கண்கள் கலங்கி போனது தர்மாவிற்கு.

அந்தக் கை சரியாகும் வரை அவள் ஒற்றைக் கையால் சிரமப்பட வேண்டும் என்று நினைக்கும் போதே அவனுக்கு வருத்தமாக இருந்தது.

அவன் தன் கண்களை நாசுக்காகத் துடைத்துக் கொள்வதைப் பார்த்து அவனின் தோளில் கைவைத்து அழுத்தினாள் அனுசுயா.

அவளுக்கும் தர்மா விஷயத்தைச் சொல்லியிருக்க, கணவன், குழந்தையுடன் வந்துவிட்டாள்.

ஸ்ரீதர், மகள் இனியாவை வைத்துக் கொண்டு சிறிது தள்ளி நின்றிருந்தான்.

படுக்கையின் இந்தப் பக்கம் தர்மாவும் அவனின் குடும்பமும் இருக்க, அந்தப் பக்கம் சத்யாவின் குடும்பத்தினர் இருந்தனர்.

மகளுக்கு ஒன்று என்றதும் உடனே பார்க்க வந்துவிட்ட மாப்பிள்ளை வீட்டாரை நினைத்து சத்யாவின் பெற்றோருக்குப் பெருமையாக இருந்தது.

நல்ல குடும்பத்தில் தன் மகள் வாழ்க்கைப் படப் போவதை நினைத்து பூரிப்புடன் இருந்தனர்.

அதே நேரம் மகள் இந்தக் கல்யாணத்திற்குச் சம்மதம் சொல்ல வேண்டுமே என்ற தவிப்பும் அதிகம் இருந்தது.

இந்த மாதிரி அருமையான குடும்பமும், மகளின் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கும் மாப்பிள்ளையும் இனி தாங்கள் எங்குத் தேடியும் கிடைக்க மாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டார்கள்.

சத்யாவின் மயக்கம் தெளிய இன்னும் சிறிது நேரம் எடுக்கும் என்று சொல்லி இருந்ததால் வசந்தா மட்டும் உள்ளே இருக்க, மற்றவர்கள் பார்த்துவிட்டு வெளியே வந்தனர்.

வெளியே வந்தவுடன் தன்னைச் சமாளித்துக் கொண்ட தர்மா தன்னைச் சுற்றி உள்ளவர்களைப் பார்த்தான்.

தியாகராஜனும், ஸ்ரீதரும் ஏதோ பேசிக் கொண்டிருக்க, அனுசுயா அண்ணன் அருகிலேயே ஆறுதலாக நின்றிருந்தாள்.

கார்த்திகா மட்டும் தனியாக நின்றிருந்தவள் தர்மாவை குழப்பத்துடனும், யோசனையுடனும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தர்மா தன் அக்காவை பார்த்துக் கண் கலங்கியதும், கவலைப்பட்டதும் அவளிடம் யோசனையை வரவைத்திருந்தது.

உண்மையாகவே அக்கா மேலே இவருக்கு அவ்வளவு பாசமா? ஆனா இது எப்படி? என்பதைப் போலப் பார்த்திருந்தாள்.

அதோடு உடனே அவனின் தங்கை குடும்பமும் வந்ததும், அம்மா, அப்பாவிடம் ஆறுதலாகப் பேசுவதும் ஏதோ அவர்களுக்குள் நெடுநாள் பழக்கம் போலத் தோன்ற வைத்தது. அதன் காரணமும் புரியாமல் குழப்பிப் போன முகத்துடன், அண்ணன், தங்கை இருவரையும் பார்த்திருந்தாள்.

அவளின் அந்தப் பார்வையைக் கண்டதும் மெல்ல தங்கையின் புறம் குனிந்த தர்மா “அனு அங்கே பார்! ஒரு பெண் சிஐடி நம்மளை ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கா…” என்றான் சிரிப்புடன்.

“ஆமாண்ணா! நானும் பார்த்தேன். அப்போ இருந்து நம்மளை தான் குறுகுறுன்னு பார்த்துக்கிட்டு இருக்கா. என்னவாம்? எதுக்கு அப்படிப் பார்க்கிறா?”

“கார்த்திக்கு நான் தான் மாப்பிள்ளைன்னு தெரிஞ்சுடுச்சு. அப்ப இருந்தே அவள் அப்படித் தான் பார்த்துக்கிட்டு இருக்கா. அதுவும் நான் சத்யாவை ஏமாத்தி அவ கூடப் பழகிட்டேனாம். ‘என் அக்காவை எப்படிடா நீ ஏமாத்தலாம் பாதகா?’ என்பது போலத் தான் பார்த்து வைக்கிறாள்…” என்றான்.

“அப்படியா? நான் வேணும்னா கார்த்திக்கிட்ட பேசட்டுமா?” என்று கவலையுடன் கேட்டாள் அனு.

“இதுக்கேன் இவ்வளவு கவலை அனு? கார்த்திக்கிட்ட நீ எதுவும் பேச வேண்டாம். நானே பார்த்துக்கிறேன்…” என்றான் சமாதானமாக.

“என்னண்ணா? இருந்து, இருந்து உனக்கு இப்போ தான் ஏதோ கல்யாண ஆசை வந்திருக்கு. அதுக்கே முதலில் சத்யா தடையா இருக்காள். இப்ப கார்த்தியும் அவ கூடச் சேர்ந்துகிட்டா, சத்யா மனசு எப்போ மாறுவது? உன் கல்யாணம் எப்போ நடக்குறது?” என்று இன்னும் கவலையாகப் பேசிய தங்கையின் தோளை அழுத்தி கொடுத்தவன்,

“சத்யா மனசு ஏற்கனவே என் பக்கம் சாய்ந்திடுச்சு அனு. அவளை இனி சரி கட்டுறது ரொம்ப ஈசி. அவளையே சரி கட்டும் போது இந்தச் சுண்டக்காயை சரி கட்ட மாட்டேனா? அதை என்கிட்ட விட்டுரு. நானே கார்த்தியை என் அக்காவிற்கு ஏத்த மாமா நீங்க தான்னு சொல்ல வைக்கிறேன்…” என்று தங்கையிடம் சொன்னவன், கார்த்திகாவை பார்த்து அர்த்தத்துடன் சிரித்தான்.

அவ்வளவு நேரமாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திகா அவன் தன் புறம் பார்த்து சிரிக்கவும் வேகமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அவளைப் பார்த்து இப்போது அனுவிற்கும் சிரிப்பு வந்தது.

“உன் பொண்டாட்டியை விட உன் மச்சினியை சமாளிக்கிறது தான் கஷ்டம் போலண்ணா…” என்று அண்ணனிடம் சொல்லி சிரித்தாள்.

“ஹ்ம்ம்…” என்று பாவம் போலச் சொன்னவன், ஸ்ரீதரின் அருகில் சென்று “இனியா குட்டிக்கு பசிக்க ஆரம்பிச்சுருக்குமே, நான் கேண்டின்ல போய் ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?” என்று இனியாவின் தலையைத் தடவி விட்டுக்கொண்டே தங்கையிடம் கேட்டான்.

“சரிண்ணா, வாங்கிக் கொடு. அவளுக்கும், அத்தை, மாமா, கார்த்திகாவுக்கும் வாங்கு. நாங்க வீட்டுக்கு போற வழியில் சாப்பிட்டுகிறோம்…” என்றாள்.

“அச்சோ…! மாப்பிள்ளை நான் தான் உங்களுக்கு வாங்கிக் கொடுக்கணும். அந்த ஞாபகம் கூட இல்லாம நான் பாட்டுக்கு நின்னுட்டு இருக்கேன். வாங்க தம்பி, வாங்க மாப்பிள்ளை, நீயும் வாமா…” என்று ஸ்ரீதர், தர்மா, அனு மூவரையும் அழைத்தார்.

அவரிடம் தங்களுக்காக வந்தவர்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்கிற பதட்டம் தெரிய “ரிலாக்ஸ் மாமா. இப்போ ஏன் இவ்வளவு டென்சன்? நமக்குள்ள என்ன பார்மாலிட்டிஸ்? நான் பார்த்துக்கிறேன்…” என்றான் தர்மா.

“இல்லை மாப்பிள்ளை நான் தான் பார்க்கணும்…” என்று அவர் அவசரமாகச் சொல்ல,

“ஹ்கும்… இது சரியா வராது. இனியா குட்டி மாமாகிட்ட வாங்க, கடைக்குப் போகலாம்…” என்று அழைக்க, ஆவலாக அவனின் புறம் பாய்ந்தாள் இனியா.

அவளை வாகாகக் கைகளில் வாங்கிக் கொண்டவன் “என் சமர்த்து…” என்று அவளின் கன்னத்தில் முத்தமிட்டு கொஞ்சியவன் “கார்த்தி வா! நீயும் சாப்பிட்டு வருவியாம்…” என்று உரிமையாகக் கார்த்தியை அழைத்தான்.

“இல்ல வேண்டாம். நான் அப்பா கூட அப்புறமா போய்ச் சாப்பிட்டுப்பேன்…” என்று வேகமாக மறுத்தாள்.

“அட…! பிகு பண்ணாம வாங்க மேடம். சாப்பிட்டு வந்து நீ உங்க அக்காவை பார்த்துக்கிட்டா அப்புறமா உங்க அம்மா சாப்பிட வசதியா இருக்கும்…”

“ஆமா போ கார்த்தி…” என்று அனுவும் சொல்ல, கார்த்திகாவின் தலை வேகமாக மறுப்பைத் தெரிவித்து அசைந்தது.

சின்ன மகள் தேவையில்லாமல் அடம் பிடிப்பதாகத் தோன்ற “கார்த்தி வா! நீங்களும் வாங்க மாப்பிள்ளை…” என்று அவனையும் அழைத்துக் கொண்டு முன்னால் நடந்தார் தியாகராஜன்.

அவர்கள் செல்ல, அனுவும், ஸ்ரீதரும் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தனர்.

“என்ன அனு உங்க அண்ணன் பாடு திண்டாட்டம் தான் போல? கார்த்திகாவே இவ்வளவு அடம் பண்றாள். அப்போ சத்யா?” என்று கேட்டான் ஸ்ரீதர்.

“ஐயோ…! நீங்க வேற என்னைப் பயமுறுத்தாதீங்க. அதை நினைச்சு நானும் பயந்து போய்த் தான் இருக்கேன். ஆனா அண்ணா என்னவோ நான் பார்த்துக்கிறேன்னு சொல்றான். என்ன பார்க்க போறானோ? எப்படிச் சரி கட்டப்போறானோ?” என்று கவலைப்பட்டாள்.

“உங்க அண்ணா முகம் இந்தக் கொஞ்ச நாளா தான் நல்லா தெளிவா இருக்கு அனுமா. முன்னாடி அவர்கிட்ட இருந்த குறும்பு இப்போ திரும்பி வந்திருக்கிறது போல இருக்கு. அதுவே இனி அவர் எல்லாம் சரி செய்துவார்னு சொல்லுது. கவலைப்படாதே! அவர் தொலைச்ச வாழ்க்கையைச் சத்யா மூலமா மீட்டெடுப்பார்…” என்றான் நம்பிக்கையாக.

கணவன் சொன்ன உறுதியில் அனுவின் மனதும் அமைதியாகியது. கணவனின் கையுடன் தன் கையை இறுக்கமாகப் பிடித்துத் தன் மனதை காட்டினாள்.

அங்கே மருத்துவமனையில் இருந்த உணவகத்திற்குச் சென்ற தர்மா தானே ஒவ்வொருவருக்கும் என்ன வேண்டும் என்று கேட்டு பார்த்துப் பார்த்துக் கவனித்து உணவை வாங்கித் தந்தான்.

அதோடு இனியாவிற்கு அவள் கேட்ட இட்லியை வாங்கி அவளை வசதியாக அமர வைத்து, அவளுக்குப் பொறுப்பாக ஊட்டி விட்டு, வாயை துடைத்து விட்டவன் நடுவில் தியாகராஜனுக்கும், கார்த்திகாவிற்கும் என்ன தேவை என்று கவனித்துக் கொண்டான்.

அவனின் ஒவ்வொரு செய்கையிலும் ஒரு பொறுப்புணர்வு இருந்தது. அவனின் நடவடிக்கையை எல்லாம் கவனித்துக் கொண்டே இருந்தாள் கார்த்திகா.

இனியாவை அவன் கவனித்துக் கொண்ட விதம், அவளுக்குப் புது இடத்தில் அசவுகரியமாகத் தோன்றாத வண்ணம் அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, அவளையும் மழலையில் பேச வைத்துக் கொண்டே அவளைச் சாப்பிட வைத்த விதம் எல்லாம் கார்த்திகாவின் மனதில் அவள் விரும்பாமலேயே பதிந்தது.

அவர்களைச் சாப்பிட வைத்தானே தவிர அவன் சாப்பிட வில்லை. இனியாவை சாப்பிட வைத்த பிறகும் அவனுக்கென்று எதுவும் அவன் வாங்காததைப் பார்த்து “நீங்க சாப்பிடலையா தர்மா சார்?” என்று யோசனையுடன் கேட்டாள் கார்த்திகா.

முறைத்துக் கொண்டே இருந்தவள் கவனித்துக் கேட்கவும், தர்மாவின் முகத்தில் புன்சிரிப்பு வந்தது.

“இல்லை கார்த்திமா, நான் அப்புறம் சாப்பிடுறேன்…” என்றான் வாஞ்சையுடன்.

“ஏன் மாப்பிள்ளை?” என்று தியாகராஜனும் இப்போது கேட்க, “சாப்பிடுறேன் மாமா. எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் ஆகணும்…” என்றான்.

அதற்கு மேலும் அவனை வற்புறுத்த முடியாமல் அவர் அமைதியாகி விட, வசந்தாவிற்கும் அவர் என்ன சாப்பிடுவார் என்று கார்த்திகாவிடம் கேட்டு பார்சல் வாங்கிக் கொடுத்தான்.

மேலும் ஒருமணி நேரம் கடந்த பிறகு சத்யா மயக்கம் தெளிந்து படுக்கையில் சாய்ந்து எழுந்து அமர்ந்திருந்தாள்.

அவளிடம் நலம் விசாரித்து விட்டு அனு கணவன், குழந்தையுடன் கிளம்பி விட, தர்மா மட்டும் அவர்களுடன் அங்கேயே இருந்தான்.

அவன் அங்கேயே இருந்தானே தவிரச் சத்யாவிடம் நலம் விசாரிக்கவென்று ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

அனு கிளம்பும் முன் சத்யா அனுவிடமும், அவளின் குடும்பத்தினருடனும் பேசிக் கொண்டிருந்தாலும், அவளின் காதுகள் தர்மாவின் குரலை கேட்க ஏங்கியது.

அவன் அங்கே தான் இருக்கிறான் என்று அவளின் உணர்வுகள் காட்டி கொடுத்தன.

அவனின் இருப்பை உணர்ந்து கொண்டவளுக்கு அவன் ஏன் பேசவில்லை என்ற தவிப்பு உண்டானது.

‘ஆப்ரேஷனுக்கு முன்னாடி கூட அக்கறையா ஆறுதல் சொன்னானே? இப்போது ஏன் பேசவில்லை. என் மேல் எதுவும் கோபமோ?’ என்று ஏற்கனவே ஆப்ரேஷன் மூலம் சோர்வாகியிருந்த அவளின் மனமும் சோர்வுடன் என்னென்னவோ நினைத்துக் கொண்டது.

அனு கிளம்பி செல்லும் போது வெளியே சென்று விட்டு மீண்டும் வந்தவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விடச் சத்யாவின் தவிப்பு கூடி போனது.

சத்யாவின் தவிப்பை குறைப்பது போல் அவனின் குரல் அவளின்‌ காதில் ‌ஒலித்தது.

“சத்யாவுக்குச் சாப்பிட என்ன கொடுக்கலாம் சிஸ்டர்?” என்று அங்கே வந்த செவிலியிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

அவர் மிதமான உணவாகக் கொடுக்கச் சொல்ல, வாங்க கிளம்பிய தியாகராஜனை தடுத்து விட்டு தானே வாங்கி வந்து கொடுத்து அவள் உண்டதும் மாத்திரையைக் கொடுக்கச் சொன்னான்.

அவள் உணவை உண்டு விட்டு மாத்திரை போட்டு அது கொடுத்த வீரியத்தில் கண் அசந்த பிறகுதான் அவன் உணவுண்ணவே சென்றான்.

அதையும் கார்த்திகா கவனித்தாள்.

அப்போ அக்கா சாப்பிட்ட பிறகு தான் அவர் சாப்பிட வேண்டும்னு வெயிட் செய்தாரா? என்று நினைத்தாள்.

உண்மையும் அது தான். வறண்ட உதடுகளுடன் சத்யா இருக்கும் போது அவனுக்கு உணவு உண்ணும் எண்ணம் சிறிதும் இல்லை.

முதலில் அவளுக்கான ஆகாரம் கொடுத்த பிறகுதான் தான் உண்ணவேண்டும் என்று நினைத்தவன் அதன் படி நடந்து கொண்டான்.

எதையும் அவன் கார்த்திகாவை கவர வேண்டும் என்று செய்யவில்லை. அவன் சாதாரணமாகத் தான் செய்தான். அதுதான் அவனின் குணம்.

அவனின் அந்தக் குணமே கார்த்திகாவை கவனிக்க வைத்திருந்தது.

இரவு ஒருவர் மட்டுமே நோயாளியுடன் தங்க முடியும் என்பதால், வசந்தாவை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்கள் கிளம்பினார்கள்.

மறுநாள் காலையில் சத்யா உணவருந்தும் நேரத்தில் வந்தான் தர்மா. வந்தவன் சத்யாவிடம் ஒரு வார்த்தையும் பேசாமல் வசந்தாவிடமே அவளின் உடல் நலத்தைப் பற்றி விசாரித்தான்.

அவன் குரல் கேட்டதும் ஆவலுடன் தன்னிடம் பேசுவான் என்று காத்திருந்த சத்யாவை ஏமாற்றி விட்டுத் தாயிடம் மட்டும் பேசியதில் அவளின் புருவம் யோசனையின் அடையாளமாகச் சுருங்கியது.

அன்று மட்டும் இல்லை மருத்துவமனையில் இருந்த நான்கு நாட்களும் அவர்களுக்குத் தேவையானதை பார்த்து பார்த்துச் செய்தான்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கே வந்து சென்று கொண்டிருந்தான்.

அவனின் அக்கறையைப் பார்த்து மகிழ்ந்து போயிருந்தனர் சத்யாவின் பெற்றோர்.

இந்த நான்கு நாட்களில் சத்யா வேலை பார்க்கும் பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் பார்த்து சென்றிருந்தனர்.

அவர்களோடு புகழேந்தியும் வந்திருந்தான். அவனுக்குக் கூட்டத்தோடு விசாரிக்கத் தான் முடிந்ததே தவிர வேறு பேச முடியவில்லை.

சத்யாவிற்குத் தெரிந்தவர்கள் வந்தார்கள், பேசினார்கள், சென்றார்கள். ஆனால் எதுவுமே அவளின் மனதில் பதியவில்லை.

அவள் மனதில் பதிந்ததெல்லாம் ஏன் தர்மா என்னுடன் பேசவில்லை என்பது மட்டுமே.

ஆம்! இந்த நான்கு நாட்களில் ஒரு முறை கூடச் சத்யாவிடம் பேச முயற்சி செய்யவில்லை.

தியாகராஜனுக்குப் பெரிய உதவியாக இருந்து ஒவ்வொன்றும் பார்த்து பார்த்துச் செய்தான். கண்களால் அவளைத் தழுவினான்.

அவனின் ஓட்டுநர் பயிற்சி மையத்தில் இருந்ததை விட அதிக நேரம் மருத்துவமனையில் இருந்தான். எல்லாமே செய்தான். சத்யாவிடம் பேச மட்டும் செய்யவில்லை.

ஏன்?

சத்யாவிற்கு இருந்த அதே கேள்வியும் தான் கார்த்திகாவின் மனதிலும் இருந்தது.

அவனைப் பற்றிய உண்மையை அக்காவிடம் நேரம் வாய்க்கும் போது சொல்லிவிட வேண்டும் என்று கார்த்திகா காத்திருந்தாள். ஆனால் அந்த நேரம் கிடைத்தும் அவளைச் சொல்ல விடாமல் செய்திருந்தது. தர்மாவின் செய்கையும், மௌனமும்.

அக்கா, தங்கை இருவரின் மனதிலும் ‘ஏன்?’ என்ற கேள்வியை எழுப்பி விட்டு ஏதோ உறுதியான முடிவு எடுத்து விட்டவன் போல நடமாடிக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.