16 – இன்னுயிராய் ஜனித்தாய்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 16
தெளிந்த நீரோடையாக இருந்த தன் மனதில் ஷாலினி கல் எறிந்து விட்டுப் போவாள் என்று சிறிதும் நினைத்திருக்கவில்லை துர்கா.
இப்போதும் கூட மறுமணம் பற்றி அவள் பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. தனக்கு அது தேவையில்லை என்றே நினைத்தாள்.
அதே நேரம் சபரிநாதன் அப்படி நினைக்கவில்லை. ஷாலினி சென்றதும் மகளிடம் பேசினார்.
அவரின் பேச்சு தான் அவளின் மனச்சஞ்சலத்தைக் கூட்டி விட்டிருந்தது.
“ஏன்மா அப்படிச் சொன்ன?” ஷாலினி கிளம்பியதும் கதவை மூடிவிட்டு வந்த மகளிடம் கேட்டார் சபரிநாதன்.
“எப்படிப்பா?”
“அதுதான் தனியா குழந்தையை வளர்த்துக்கிறேன்னு?”
“நான் என்ன முடிவெடுத்திருக்கேனோ… அதைத்தான் பா சொன்னேன்…”
“இல்லமா, நீ எடுத்திருக்கும் முடிவு சரியானது இல்லை…” என்ற தந்தையைச் சலனமே இல்லாமல் பார்த்தாள்.
“வாழவே ஆரம்பிக்காம உன் வாழ்க்கை முடிந்து போய்விட்டது மா. முடிந்த வாழ்க்கையைத் துளிர்க்க வைக்கணும்னு இந்த அப்பா ஆசைப்படுறேன்…”
“இத்தனை நாளும் நான் நல்லாத்தானே பா வாழ்றேன்? என் வாழ்க்கையில் இப்போ ஒரு குறையும் இல்லப்பா. ஷாலினி பேச்சை கேட்டு மனசு குழம்பிப் போய் இருக்கீங்கன்னு நினைக்கிறேன். அமைதியா படுத்து தூங்குங்க. காலையில் தெளிவா யோசிப்பீங்க…” என்றவள் அறைக்குள் படுக்கச் செல்ல,
“ஷாலினி பேசியதால் நான் அந்தப் பேச்சை தொடரவில்லைமா. எனக்கே ரொம்ப நாளா அந்த எண்ணம் இருக்கு. ஆனா உன்கிட்ட பேச சரியான சந்தர்ப்பம் அமையலை. ஷாலினி இன்னைக்கு அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும், உன்கிட்ட என்னால் இப்போ என் ஆசையைச் சொல்ல முடியுது.
இந்த அப்பனோட காலம் இன்னும் எவ்வளவு நாளைக்குன்னு சொல்ல முடியாது. நான் உயிரோட இருக்கும் போதே என் கண் முன்னாடியே உன்னைக் கழுகா கொத்த காத்திருக்காங்க. உன் மேல அபாண்ட பழி போடுறாங்க. எல்லாம் கேட்டுக்கிட்டு கையாளாகாம கிடக்கேன்.
நானும் இல்லைனா, பொம்பளை பிள்ளையை வச்சுக்கிட்டு நீ என்ன செய்வமா? நான் உன் கூட இல்லைனா எவனும் வீட்டுக்குள் நுழைய கூடத் தயங்க மாட்டான் மா. அப்படி ஏதாவது உனக்கு ஆகிடக் கூடாதேன்னு பயப்படுறேன். இப்ப எல்லாம் படுத்தா என்னால் நிம்மதியா தூங்க கூட முடியலைமா. என் பொண்ணையும், பேத்தியையும் தனியா தவிக்க விட்டுப் போனா அவங்க எப்படி இந்த வக்கிர உலகத்தில் வாழப் போறாங்கன்னு நினைச்சு நினைச்சே என்னால் கண்ணை மூட முடியலைமா…” என்றார்.
“ஏன்பா நீங்களா ஏதேதோ நினைச்சுட்டு தவிக்கணும்? அப்படி எல்லாம் எதுவும் ஆகாதுபா. என்னால் தனியா வாழ முடியும்…” என்றாள் துர்கா.
“நான் பக்கத்தில் இருக்கும் தைரியத்தில் நீ பேசுறமா. நானும் இல்லாம போனா…”
“அப்பா, ப்ளீஸ்! உங்களுக்கு ஒன்னும் ஆகாது. நீங்க எங்க கூடத் தான் நல்லா இருப்பீங்க. நாம சேர்ந்து தான் இருக்கப் போறோம். நீங்க என் பக்கத்தில் இருக்கும் போது என்னால் எதையும் சமாளிக்க முடியும்…” என்றாள் உறுதியாக.
“அதே தான்மா நானும் சொல்றேன். நான் பக்கத்தில் இருக்கும் வரை தான்…” என்று மேலும் பேச போன தந்தையைத் தடுத்தாள்.
“போதும் பா. சும்மா அதையே சொல்லாதீங்க. என்னால தாங்க முடியலை. உங்க பேத்தியை வளர்த்து அவளைக் கட்டிக் கொடுத்துன்னு எல்லாமே நீங்க கூட இருந்து தான் பார்க்கணும்…”
“இதெல்லாம் அதீத ஆசைமா. நேரமும் காலமும் எப்பவும் நாம நினைக்கிறபடியே நடக்காது. எப்ப என்ன நடக்கும்னு சொல்லவும் முடியாது. இந்த உலகம் வக்கிரமும், வஞ்சகமும் நிறைந்தது மா. இது அப்பாவோட கடைசி ஆசைன்னு கூட நினைச்சுக்கோ. உனக்கு ஒரு கல்யாணம் நடக்கணும். வருணாவுக்கு அப்பா கிடைக்கணும். யோசிமா, அப்பாவுக்காக…” என்ற சபரிநாதன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் கட்டிலில் சாய்ந்து விட்டார்.
ஆனால் துர்காவோ தவித்துப் போனாள். அதிலும் தந்தை கடைசி ஆசை என்றது அவளைப் போட்டு உலுக்கியிருந்தது.
ஆனாலும் ஏனோ மறுமணத்தைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. மனமெல்லாம் தவிக்க, உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு உறக்கத்தைத் துறந்தாள் துர்கா.
மறுநாள் காலை இயந்திரகதியில் சென்றது.
வேலைகளை முடித்துத் தந்தையிடம் மகளைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வேலைக்குக் கிளம்பினாள் துர்கா.
அவள் வழக்கமாகச் செல்லும் பாதையில் குழி தோண்டி ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அதனால் அந்தப் பாதை தடுப்பு வைத்து மறைக்கப்பட்டிருந்தது.
அதனால் கிளை பாதையில் சென்றாள் துர்கா.
இரண்டு தெருக்களைக் கடந்து சென்றால் அவள் வேலை பார்க்கும் பள்ளி வரும்.
இரண்டாவது தெருவில் நடந்து கொண்டிருந்த போது, “ஹலோ டீச்சர்…” என்று அவளை வழி மறைத்தான் குணா.
அவனைக் கண்டதும் துர்காவின் முகம் எரிச்சலை காட்டியது.
“இது தான் நம்ம வீடு. வாங்களேன், கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்…” என்று அந்தத் தெருவிலிருந்த அவன் வீட்டை சுட்டிக் காட்டி அழைத்தான்.
“ப்ச்ச்” என்று எரிச்சலுடன் முணுமுணுத்து விட்டு நிற்காமல் நடையைத் தொடர்ந்தாள்.
“என்ன டீச்சர் கூப்பிட கூப்பிட போயிட்டே இருக்கீங்க? வீட்டுல யாருமில்லை டீச்சர். அப்பாவும், அம்மாவும் ஊருக்குப் போயிருக்காங்க. நாம தனியா பேச ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுருக்கு. அதை யூஸ் பண்ணிப்போம், வாங்க டீச்சர்…” அவன் பேச்சை கேட்க கேட்க உள்ளுக்குள் இறுகி போனவள், நிற்காமல் நடையை எட்டிப் போட்டாள்.
“என்ன டீச்சர் நான் பேசிட்டே இருக்கேன். காதில் வாங்காமல் போனால் என்ன அர்த்தம்?” என்ற குணா வேகமாக அவளின் கையைப் பிடித்தான்.
“ஏய், என்ன பண்ற? விடு கையை…” பதறிய துர்கா, சுற்றிலும் பார்த்தாள்.
சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் சிலர் வேடிக்கை பார்த்தபடி செல்ல, அவளுக்கு அவமானமாகி போனது.
“என்ன தைரியம் இருந்தா கையைப் பிடிப்ப?” என்று கோபமும் ஆத்திரமாகக் கேட்டவள், இன்னொரு கையால் அவனைப் பளாரென்று அறைந்தாள்.
“தப்பு பண்றீங்க டீச்சர்…” என்று பற்களைக் கடித்தவன், அவளின் கையை விடாமல் இன்னும் இறுக்கி பிடித்தான்.
“விடுடா, விடு…” என்று துர்கா கோபமாகச் சொன்னாள்.
அப்போது சாலையில் சென்ற ஒருவர், “ஏய், பொம்பிளை பிள்ளை கையைப் பிடிச்சு இழுத்துட்டு இருக்க. விடுப்பா…” என்று துர்காவிற்கு ஆதரவாக வந்தார்.
“யோவ், உன் பொண்டாட்டி கையையா பிடிச்சு இழுத்தேன்? பேசாம போய்டு. இல்லனா உன் பொண்டாட்டி கையையும் பிடிச்சு இழுப்பேன்…” என்றான் குணா.
தனக்கு எதற்கு வம்பென அவர் விலகிச் சென்று விட, அதன் பிறகு சாலையில் சென்ற யாரும் அவளுக்கு உதவிக்கு வரவில்லை.
மீண்டும் அவள் குணாவை அறைய செல்ல, முகத்தை விலக்கியவன், “என்ன டீச்சர் ஓவரா துள்ற? பேசத்தானே கூப்பிட்டேன். என்னவோ படுக்கக் கூப்பிட்டது போலக் குதிக்கிற?” என்றவன் பேச்சில் அருவருத்துப் போனாள்.
கோபமாக அவனிடமிருந்து தன் கையை விடுவித்துக் கொள்ளப் போராடினாள். ஆனால் அவளால் தன் கையை விடுவித்துக் கொள்ள முடியவில்லை.
அப்போது குணாவின் முதுகில் சுரீரென ஒரு அடி விழ, பதறி போய் அவளின் கையை விடுவித்துத் திரும்பிப் பார்த்தான். அங்கே கோபத்துடன் நின்று கொண்டிருந்தான் நித்திலன்.
“டேய், என்னை அடிக்க நீ யாருடா?” என்று நித்திலனை குணா அறைய போக, அவனின் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தியவன், இன்னொரு கையால் அவனின் முகத்தில் ஒரு குத்து விட்டான்.
“தப்பு பண்றவனைத் தட்டிக் கேட்க சாதாரண மனுஷனே போதும்…” என்ற நித்திலன் அவனின் கை விரல்களைப் பிடித்து நசுக்கினான்.
“டேய், விடு… விடு…” என்ற குணா குதிக்க, “இதே தானே அவங்களும் சொன்னாங்க. அப்ப விட்டியா நீ?” என்று கேட்டுக் கொண்டே விரல்களை நொறுக்கினான்.
‘சாந்தமான நித்திலனா இவன்?’ என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள் துர்கா.
அவனின் முகத்தில் அளவில்லாத இரௌத்திரத்தைப் பார்த்தாள்.
தூரத்தில் வரும் போதே துர்காவை குணா கையைப் பிடித்து விடாமல் அடம்பிடித்ததைப் பார்த்தவன், ஓடோடி வந்திருந்தான்.
தன் துர்காவின் கையை இன்னொருவன் பிடிப்பதா என்ற ஆத்திரத்தை எல்லாம் குணாவின் கையில் காட்டினான்.
“எல்லாரும் வேடிக்கை பார்க்கிறாங்க. விடுங்க போதும்…” காட்சி பொருளாக நிற்க முடியாமல் துர்கா சொல்ல, அதன் பிறகே விட்டான்.
“சரிதான், இரண்டு பேருக்கும் தொடர்பு இருக்குன்னு உங்க காம்பவுண்ட்ல இருக்குற பொம்பள சொன்னது உண்மைதான் போலிருக்கு…” என்று குணா அடங்காமல் வார்த்தையை விட, துர்காவிற்குக் கூசிப் போனது.
நித்திலன் குணாவை அடிக்கப் போக, வேகமாக ஓடி தன் வீட்டிற்குள் அடைந்து கொண்டான்.
“அவன் வீரம் அவ்வளவுதான். நீங்க இதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க துர்கா…” நித்திலன் சமாதானம் செய்ய முயல, கோபத்துடன் கையைக் காட்டி அவன் பேச்சை நிறுத்தினாள்.
“அவங்க எல்லாம் அப்படித் தப்பா நினைக்கிற மாதிரி தானே உங்க நடவடிக்கையும் இருக்கு. குழந்தைக்கு அப்பான்னு சொல்லிக் கொடுத்ததிலேயே அது புரிஞ்சி போச்சு. நீங்க மட்டும் ரொம்ப யோக்கியம் போலப் பேச வேண்டாம்…” என்றவள் அங்கிருந்து வேகமாகச் சென்றாள்.
நித்திலன் சிலையாக அசைவில்லாமல் நின்று போனான்.
அவனின் வலி நிறைந்த கண்கள் தூரத்தில் சென்று கொண்டிருந்த துர்காவையே வெறித்தன.
பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த துர்காவின் மனம் கோபம் ஒரு புறமும், தவிப்பு ஒரு புறமுமாகத் தத்தளித்துக் கொண்டிருந்தது.
குணாவின் செயலில், பேச்சில் கோபம் என்றால், தனக்கு உதவ வந்த நித்திலனுக்கு ஒரு நன்றி கூடச் சொல்லாமல், அவனைத் தான் கோபமாகத் திட்டியது மனதை போட்டு அழுத்தியது.
தான் திட்டியதும் முகமே செத்துப் போனது போல் அவன் முகம் வெளுத்துப் போனது இன்னும் கண்ணுக்குள் வந்து நின்றது.
தவறு செய்பவனின் முகமல்ல அது என்று உள் மனம் எடுத்துக் கூறியது.
ஆனாலும் குழந்தை அப்பா என்று அழைத்தது எப்படி? அவன் தான் சொல்லிக் கொடுத்திருப்பான் என்று மீண்டும் வீம்பாக அவனின் மீது பழி சுமத்தினாள்.
‘இந்தக் காலத்தில் யாரையும் நம்ப முடியாது’ என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டே பள்ளி சென்று சேர்ந்தாள்.
தன் நினைப்புத் தவறு என்று அவளுக்கு அன்றே புரியும் நேரமும் வந்தது.
மதியம் இரண்டு மணிக்கு மேல் வருணா காரணம் இல்லாமல் அழுது கொண்டே இருக்க, அவளைச் சமாளிக்க முடியாமல் மகளிடம் கொண்டு வந்து விட்டார் சபரிநாதன்.
அன்னையிடம் வந்ததும் அழுகையை நிறுத்தி, அவளை விடப் பெரிய பிள்ளைகளைப் பார்க்கவும், அவர்களுடன் விளையாட ஆரம்பித்தாள்.
மூன்று வயதிலிருந்து, ஐந்து வயது வரையிலான குழந்தைகள் தான் என்பதால் மதிய வேளையில் விளையாட விட்டு விடுவார்கள்.
அவர்களுடன் வருணாவும் கலந்து கொள்ள, அவர்களை விடக் குட்டி பெண்ணை வைத்துப் பிள்ளைகள் விளையாட்டு காட்டி மகிழ்ந்தனர்.
“இன்டா, இட வச்சுகோ. இட ஏ ப்பா வாங்கிக் கொடுட்டாரு…” என்று ஒரு குட்டி தன் மழலையில் பேசி ஒரு சாக்லேட்டை வருணாவிடம் நீட்டியது.
அந்தச் சாக்லேட்டை வாங்கிக் கொண்ட வருணா அதைப் பிரித்துச் சாப்பிட தெரியாமல், இப்படியும், அப்படியுமாகத் திருப்பிப் பார்த்தாள்.
“உனகு ஓ ப்பா சாக்கி வாங்கி டருவாரா?” என்று அவளுக்குச் சாக்லேட் கொடுத்த குழந்தை கேட்க,
“ப்பா… ப்பா…” என்றாள் வருணா.
வருணாவை விளையாட விட்டு அந்தப் பக்கம் சில குழந்தைகளைக் கவனித்துக் கொண்டிருந்த துர்கா, குழந்தையின் அப்பா என்ற அழைப்பில் விலுக்கென்று திரும்பிப் பார்த்தாள்.
“ஏ ப்பா சாக்கி வாங்கி டருவாரு. டாய்ஸ் வாங்கி டருவாரு. பைக்ல கடைக்குக் கூட்டிட்டு போவாரு. இப்ப வீட்டுக்கு கூட்டிட்டு போவ பைக்ல வருவாரே…” என்று அந்தக் குழந்தை வருணாவிடம் தன் அப்பா புராணத்தைப் பாட,
“ஏ அப்பாவும் தான் இதெல்லாம் செய்வாரு…” என்றது இன்னொரு ஐந்து வயது குழந்தை.
அவர்களுடன் மற்ற குழந்தைகளும் தனது அப்பா என்னென்ன செய்வார் என்ற புராணத்தைப் பாட, வருணாவோ அவர்கள் சொல்ல சொல்ல, தானும் ப்பா… ப்பா… என்று சொல்லிப் பழகிக் கொண்டிருக்க, அப்போது தான் அந்த உண்மை சுரீரெனத் துர்காவிற்கு உறைத்தது.
இந்தக் குழந்தைகள் மூலமாகத்தான் தன் மகள் அப்பா என்ற வார்த்தையைக் கற்றுக் கொண்டிருக்கிறாள் என்ற உண்மை புரிந்த நொடியில் வலியின் பிரதிபலிப்பை அப்பட்டமாக முகத்தில் தாங்கி நின்றிருந்த நித்திலன் அவளின் மனக்கண்ணில் வந்து போனான்.
எந்தத் தவறும் செய்யாதவனை அவசரப்பட்டுத் திட்டி விட்டேனே! என்று மனம் வருந்தினாள்.
ஆனாலும் அவன் ஏன் அப்பா என்ற வார்த்தையைக் கேட்டதும் அவ்வளவு சந்தோஷப்பட வேண்டும்? அது தானே அவனைத் தவறாக நினைக்க வைத்தது என்றும் நினைத்துக் கொண்டாள்.
அதோடு இன்று உதவி செய்ய வந்தவனையும் தான் காரணமே இல்லாமல் திட்டியது தன் பெரும் தவறு என்று அவளுக்கு உறுத்தியது.
அவனை நேரில் சந்திக்கும் போது மன்னிப்பும் கேட்டு விட்டு, நன்றியும் சொல்ல வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டாள்.
அன்று மாலை வேலை முடிந்து வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில், “உள்ளே வரலாமா?” என்ற குரல் கேட்டு எட்டிப் பார்த்தாள் துர்கா.
வாசலில் நின்றிருந்தார் செவ்வந்தி.
‘இவரா? இவர் எங்கே இங்கே?’ என்று உள்ளுக்குள் நினைத்தாலும் வெளியே ஒன்றும் காட்டிக் கொள்ளாமல், “உள்ளே வாங்க…” என்று வரவேற்றாள்.
யார் என்று எட்டிப் பார்த்த சபரிநாதனும் அவரை வரவேற்றார்.
செவ்வந்தி முன்னால் வீட்டிற்குள் நுழைய, அவருக்குப் பின்னால் வந்த நித்திலன் தயக்கத்துடன் வாசலில் நின்றான்.
“தம்பி நீங்களும் வாங்க. ஏன் அங்கேயே நிற்கிறீங்க?” சபரிநாதன் அழைக்க, நித்திலனின் பார்வை துர்காவின் மீது அழுத்தமாகப் படிந்தது.
காலையில் திட்டியவள் இப்போதும் திட்டுவாளோ என்று நினைத்தான்.
ஆனால் ஏற்கனவே அவனிடம் மன்னிப்பு கேட்க நினைத்துக் கொண்டிருந்த துர்கா, அவனை வாசலில் பார்த்தும் தயங்காமல் உள்ளே அழைத்தாள்.
“வாங்க…” என்று அவள் அழைத்த பிறகே உள்ளே வந்தான்.
“உட்காருங்க…” இருவருக்கும் பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்துப் போட்டாள். நித்திலனை பார்த்ததும் கட்டிலில் அம்ர்ந்திருந்த வருணா, “ப்பா…” என்றழைத்து அவனைத் தூக்க சொல்லி கையை நீட்டி துள்ளினாள்.
குழந்தை மீண்டும் அப்பா என்றதும் அங்கே பெரும் சங்கடமான சூழ்நிலை ஆட்கொண்டது.
சபரிநாதன் மகள் எங்கே அவனைத் திட்டி விடுவாளோ என்று பதறி போய்ப் பார்க்க, செவ்வந்தி தன் மகனை அப்பா என்றழைத்த குழந்தையை ஆர்வமாகப் பார்த்தார்.
நித்திலன் மனதில் அன்று போல் இன்றும் பரவசம்! ஆனாலும் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் துர்காவைத் தயக்கத்துடன் ஏறிட்டான்.
துர்காவின் முகம் இறுகிப் போய் இருந்ததே தவிர நித்திலன் பக்கம் திரும்பாமல் மகளின் அருகில் சென்று அவளைத் தூக்கிக் கொண்டு, “அவர் உன் அப்பா இல்லடா கண்ணுமா…” என்றாள் மகளிடம்.
அவள் அப்படிச் சொன்னதும் நித்திலனின் முகம் சிறுத்துப் போனது.
“ம்ம்…ம்ம்… ப்பா…” அன்னை சொன்னது புரியாமல் வருணா அவனைத் தூக்க சொல்லிதான் கையை நீட்டினாள்.
குழந்தைக்கு எப்படிச் சொல்லி புரிய வைப்பது என்று துர்காவிற்குப் புரியவில்லை. சொன்னால் புரிந்து கொள்ளும் வயதும் அவளுக்கு இல்லை என்பதால் அமைதியாக இருந்தாள்.
“சாரிங்க, நான் சொல்லி கொடுக்கலை. என்னை நம்புங்க…” என்றான் நித்திலன்.
அது அவளுக்கே தெரியும் என்பதால், “தெரியும், சாரி. இன்னைக்குத்தான் ஸ்கூலில் மத்த பிள்ளைங்க சொன்னதை வைத்து சொன்னாள்னு தெரியும். உங்களைத் தவறா புரிந்து திட்டியதற்குச் சாரி…” என்றாள் துர்கா.
அவள் அப்படி மன்னிப்பு கேட்பாள் என்று எதிர்பாராத நித்திலன் இன்பமாக அதிர்ந்து போனான்.
அவர்கள் பேச, ‘அதெல்லாம் எனக்கு எதுக்கு? முதலில் என்னைத் தூக்கு’ என்பது போல், துர்காவின் கையிலிருந்து நழுவி இறங்க முயன்றாள் குழந்தை.
“நான் குழந்தையைத் தூக்கலாமா?” என்று அனுமதி கேட்டான்.
மகளைக் கட்டுப்படுத்த முடியாத துர்கா அவனிடம் நீட்ட, ஆசையாகக் குழந்தையை அள்ளிக் கொண்டான்.
இத்தனை நாட்களும் குழந்தையைப் பார்க்காமல் தவித்த தவிப்பு எல்லாம் சட்டென்று அடங்கிப் போனது போல் உணர்ந்தான்.
“ப்பா…” என்ற குழந்தையும் அவனின் கன்னத்தை எச்சில் படுத்த, தன் முகத்தில் ஓவியம் தீட்டியது போல் ஆசையாக வாங்கிக் கொண்டான்.
மகனின் முகத்தில் இருந்த பூரிப்பை பார்த்து செவ்வந்திக்கு கண்கலங்கிப் போனது.
இந்தப் பூரிப்பை எப்போதும் மகனின் முகத்தில் நிலைக்கச் செய்ய வேண்டும் என்று தோன்ற,
“குழந்தைக்கு அப்பாவா நித்திலன் இருக்க ஆசைப்படுறான். நீ கணவன் ஸ்தானத்தை என் பிள்ளைக்குக் கொடுப்பியாமா துர்கா?” என்று சுற்றி வளைக்காமல் தான் கேட்க வந்ததைப் பட்டென்று கேட்டுவிட்டார்.
“என்ன?” அவர் கேட்டது புரியாமல் ஒரு நொடி முழித்த துர்கா, புரிந்த போது நம்ப முடியாத திகைப்புடன் செவ்வந்தியைப் பார்த்தாள்.