15 – இதயத்திரை விலகிடாதோ?

அத்தியாயம் – 15

‘மாத மாதம் மாத்திரை போடுகிறாளா, எதுக்கு?’ என்ற சிந்தனையுடன் அப்படியே சில நொடிகள் நின்றுவிட்டான் சூர்யா.

‘அது கூடத் தெரியாமல் இருந்திருக்கிறோமே?’ என்று அவனுக்கு எப்படியோ ஆகிப் போனது.

உடல்நிலை முடியாமல் ஏன் அலுவலகம் வந்தாள்? என்றும் தோன்ற, அலுவலகத்திற்குள் சென்றான்.

சாப்பிட்டு, மாத்திரை போட்டதும் சற்று தெம்பாக இருக்க, வேலையை ஆரம்பித்திருந்தாள் யுவஸ்ரீ.

அவள் எதிரில் சென்று நின்றவன், “முடியலைன்னா வீட்டுக்கு கிளம்பு!” என்றான்.

தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தவள், “இப்பத்தானே சொல்லிட்டு வந்தேன்? உங்க அக்கறை எனக்குத் தேவையில்லை. என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும். நீங்க உங்க வேலை எதுவோ அதைப் போய்ப் பாருங்க லீடர் சார்…” என்றாள் பட்டென்று.

“உனக்குத் திமிரு கூடிப் போயிருச்சுடி. உடம்பு முடியலையேன்னு சொல்ல வந்தேன் பார், என்னைச் சொல்லணும்…” என்று கடுப்படித்தவன் தன் இருக்கையில் சென்று அமர்ந்தான்.

அவனின் கடுப்பிற்கு எல்லாம் யுவஸ்ரீ அலட்டிக் கொள்ளவில்லை.

அவளுக்கு நெஞ்சு முட்ட கணவன் மேல் கோபம் தான் வந்தது.

இதற்கு முன் அவளின் மாதாந்திர பிரச்சினையின் போது, அவன் அருகில் வந்தால் மூன்று நாட்கள் முடியாது என்று சொல்லிவிட்டால் அமைதியாக விலகி விடுவான்.

ஆனால் அதற்கு மேல் அவளின் வலியைப் பற்றியோ வேதனையைப் பற்றியோ அவன் கவனித்துப் பார்த்ததும் இல்லை. அவளும் அவனிடம் சொன்னதும் இல்லை.

திருமணம் முடிந்த புதிதில் அவனிடம் “எனக்கு வயிறு ரொம்ப வலிக்குதுங்க” என்று அவள் சொல்ல,

“இந்த நேரத்தில் இப்படி எல்லாம் இருக்குமாமே… பேசாம ரெஸ்ட் எடு. நான் என் ஃபிரண்ட்ஸ் பார்த்துட்டு வந்துடுறேன்…” என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டான்.

அவளின் வலிக்கு அவனின் பிரதிபலிப்பு அவ்வளவுதான் என்றாகிப் போனதில், அதன் பிறகு அவள் தன் வலியை அவனிடம் சொல்லாமல் தவிர்த்து விட்டாள்.

அவளின் வலியை அவனால் போக்க முடியாது தான். ஆனால் ஆறுதலாக ஒரு வார்த்தை அவன் சொல்லியிருந்தாலே போதும். அவள் எதிர்பார்த்ததும் அதுதான். ஆனால் அதைச் செய்யவில்லை அவன்.

இப்போது புதிதாக அவன் அக்கறை போல் கேட்க, இப்போது மட்டும் உனக்கு ஏன் நான் சொல்ல வேண்டும்? என்ற எண்ணம் தான் அவளுக்கு வந்தது.

அன்று முழுவதும் வேலை தன்னைப்போல் நடந்து கொண்டிருந்தாலும் சூர்யாவின் பார்வை அவ்வப்போது மனைவியைத் தழுவி மீண்டது.

சோர்வுடன் காணப்பட்டாலும், தன் வேலையை எந்தச் சுணக்கமும் இல்லாமல் செய்து கொண்டிருந்தாள் யுவஸ்ரீ.

அவள் ஒரு மாதத்திற்கு முன் கலந்து கொண்ட நேர்முகத் தேர்வில் தேர்வாகாமல் போக, அடுத்த இன்டர்வியூக்கு காத்திருந்தாள்.

மீண்டும் அவளுக்கு இண்டர்வியூ அழைப்பு வந்தது என்னவோ அவளின் கணவன் அடுத்துச் செய்யப் போகும் பிராஜெக்ட்டிற்காக இருந்தது.

அப்போது நடந்த இண்டர்வியூவில் தேர்வாகி சூர்யாவின் டீமில் இணைந்து கொண்டாள்.

சூர்யா, தினேஷ், யுவஸ்ரீயுடன் மேலும் ஒரு பெண்ணும், இரண்டு ஆண்களும் அந்த டீமில் இருந்தனர்.

நந்தினி வேறு ஒரு டீமில் இருந்தாள். மதிய உணவின் போது தோழிகள் சந்தித்துக் கொள்வர்.

அன்றும் மதியம் அலைபேசியில் இருந்து நந்தினி கேண்டினுக்கு அழைக்க, “இதோ வர்றேன் நந்தினி…” என்று சொல்லி விட்டு கணினியை லாக் செய்து விட்டு எழுந்து சென்றாள்.

செல்பவளையே பார்த்தான் சூர்யா.

“நாமும் சாப்பிட்டு வந்து வேலையைப் பார்க்கலாம் சூர்யா…” என்று தினேஷ் வந்து அழைக்க, அவனும் எழுந்து சென்றான்.

தினேஷ் நேராக நந்தினி அருகில் சென்று அமர,

மனைவியின் அருகில் சென்று அமர்ந்தான் சூர்யா.

தினேஷ், நந்தினி, யுவஸ்ரீ மூவரும் பேசிக் கொண்டே உணவருந்தி கொண்டிருக்க, சூர்யா அவர்களின் பேச்சில் கலந்து கொள்ளவில்லை.

“என்ன சூர்யா அமைதியா இருக்க? நியூ இயருக்கு நீங்க ஊருக்குப் போறீங்களா? இங்கே இருப்பீங்களா?” என்று கேட்டான் தினேஷ்.

நாளை மறுநாள் 2020-ஆம் வருடம் பிறக்க இருப்பதால் அவர்களின் ப்ரோகிராம் என்ன என்று விசாரித்துக் கொண்டிருந்தான்.

“ஊருக்குப் போகலை தினேஷ். இங்கே தான் இருக்கப் போறோம்…” என்றான்.

“ஆமா, ஒரு நாள் தான் லீவ். இங்கே இருந்து போய்த் திரும்ப ஒரே நாளில் ஓடி வர முடியாது. லீவ்வும் போட முடியாது வேலை டைட்டா இருக்கு…” என்றாள் யுவஸ்ரீ.

“ஏன் யுவா, நியூ இயருக்கு நாம ஒரு ப்ரோகிராம் போடுவாமா?” என்று கேட்டாள் நந்தினி.

“என்ன ப்ரோகிராம் நந்தினி?” யுவஸ்ரீ கேட்க,

“நாம நாலு பேரும் சேர்ந்து எங்கேயாவது சுத்திப் பார்க்க போகலாம். நீங்க என்ன சொல்றீங்க தினேஷ்?” என்று கேட்டாள்.

“அதிசயம் தான் நந்து. என் கூட வெளியே வான்னு கூப்பிட்டால் வருவதற்கு அவ்வளவு யோசிப்ப. இப்ப நீயே ஐடியா சொல்ற? இதுக்கே சைனா பக்கம் சுத்துற கொரானா நம்ம நாட்டுக்குப் பக்கம் கண்டிப்பா வராது போ…” என்று கேலியும், வியப்புமாகச் சொன்னான் தினேஷ்.

“உங்க கூடத் தனியா வருவதற்குத் தான் எனக்கு யோசனை தினு. யுவாவும், சூர்யாவும் நம்ம கூட வந்தால் நான் யோசிக்காமல் வருவேன்…” என்று கண்சிமிட்டி சிரித்தவளை முறைத்தான் தினேஷ்.

“அடி! நான் என்ன உன்னைக் கடிச்சா தின்னுட போறேன்? என்கூட வருவதற்கு உனக்கு என்ன பயம்?” என்று பாய்ந்தான் தினேஷ்.

“பயம்னு இல்லை தினு. கல்யாணம் முடியிற வரை நாம இப்படி இருப்பது தான் நல்லது. சரி, நம்ம சண்டையை அப்புறம் வச்சுக்கலாம்…” என்று தினேஷை அடக்கியவள், 

“நீங்க சொல்லுங்க சூர்யா, யுவா… போகலாமா? இல்லை, நீங்க தனியா எதுவும் ப்ரோகிராம் வச்சுருக்கீங்களா?” என்று கேட்டாள்.

“நாங்க இன்னும் அதைப் பத்தி யோசிக்கலை நந்தினி…” என்ற யுவஸ்ரீ, கணவனைக் கேள்வியுடன் பார்த்தாள்.

“நல்ல ஐடியா தான். ஆனால் நீங்களும், தினேஷும் மட்டும் போய்ட்டு வாங்களேன். நாங்க எதுக்கு?” என்று கேட்டான் சூர்யா.

“இவள் என் கூடத் தனியா வருவாள்னு நினைச்சியா சூர்யா? அதுக்குச் சான்ஸே இல்லை. நீங்க இரண்டு பேரும் வந்தாலும் என் கூடக் கொஞ்ச நேரம் நல்லா பேசுவாள். இல்லனா எப்படா வீட்டுக்குப் போவோம்னு கேட்டே என்னை ஒரு வழி ஆக்கிவிடுவாள்.

நீங்களும் வாங்க சூர்யா. நாம போயிட்டு வரலாம். கொரானா வேற நம்ம நாட்டுக்கும் வரும்னு சொல்றாங்க. அப்படி வந்துட்டால் அப்புறம் வெளியே போக முடியுமோ என்னவோ…” என்றான் தினேஷ்.

“நம்ம நாட்டுக்கு வந்தாலும் நம்ம ஊர் வெயிலுக்குத் தாக்கு பிடிக்காதுன்னு சொல்றாங்க தினு. அதனால் வந்தாலும் கவலை இல்லை…” என்றாள் நந்தினி.

“அது என்னவோ உறுதியா தெரியலை. நான் பேஸ்புக்கில் பாலோ பண்ணும் ஒரு டாக்டர் வார்னிங் போஸ்ட் நிறையப் போட்டுட்டு இருக்கார். நாம கவனமா இருக்கணும் போல…” என்றான் தினேஷ்.

சிறிது நேரம் நால்வரும் தாங்கள் கேள்விப்பட்ட கொரானா செய்திகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

“சரி, அது நமக்கு இப்ப முக்கியம் இல்லை. நாம நாலு பேரும் போவோமா? வேண்டாமா?” என்று கேட்டாள் நந்தினி.

யுவஸ்ரீ எந்தப் பதிலும் சொல்ல தயாராக இருக்கவில்லை. அவளுக்குத் தெரியும். சூர்யாவிற்கு அவர்களின் நண்பர்களுடன் சுற்ற மட்டுமே விருப்பம் இருக்குமென்று.

என்னுடன் வருவதாக இருந்தால் இவனுக்குத்தான் வேப்பங்காயாகக் கசக்குமே… என்று உள்ளுக்குள் கசப்பாக நினைத்துக் கொண்டாள்.

அதனால் நந்தினிக்கு வேண்டிய பதிலை அவனே சொல்லட்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

சூர்யாவோ ஏதோ யோசனையுடன் மனைவியைப் பார்த்தான்.

“என்ன சூர்யா யோசிக்கிற? சரின்னு சொல்லு…” என்றான் தினேஷ்.

“ஓகே தினேஷ், போகலாம்…” என்று அவன் சம்மதம் சொன்னதும் பட்டென்று கணவனைத் திரும்பிப் பார்த்தாள் யுவஸ்ரீ.

‘நீயா சொல்லியது? நீயே தானா?’ என்பது போல் கணவனை வியப்பாகப் பார்த்தாள்.

அவளின் பார்வையைச் சந்தித்து விட்டு, தினேஷின் புறம் திரும்பிக் கொண்டான்.

“சூப்பர்! தேங்க்ஸ் சூர்யா. எங்கே போகலாம்? எனி ஐடியா?” என்று தினேஷ் கேட்க,

“எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. நீங்களே முடிவு பண்ணுங்க…” என்றான் சூர்யா.

“மகாபலிபுரம் பீச் ரெஸ்ராண்ட் போகலாமா?” என்று நந்தினி கேட்க,

“பாண்டிச்சேரி போகலாம்…” என்றான் தினேஷ்.

“நோ, அங்கே போனால் நீங்க ட்ரிங் பண்ணனும்னு சொல்லுவீங்க. அங்கே வேண்டாம்…” என்று உடனே மறுத்தாள் நந்தினி.

“ஏன் மகாபலிபுரம் போனால் குடிக்க மாட்டேனா என்ன?” என்று தினேஷ் சிலிர்த்துக் கொண்டு சண்டைக்குத் தயாராக,

‘இங்கேயும் குடிக்கிறது தானா?’ என்று மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டாள் யுவஸ்ரீ.

“இவங்க ட்ரிங் பண்ணுவாங்கனா நான் வரலை நந்தினி. என்னைக் கேட்டால் நீயும் போக வேண்டாம்னு தான் சொல்வேன். இவங்க குடிச்சுட்டு மட்டையாகி போனால் நாம உருப்படியா வீடு வந்து சேர முடியாது…” என்றாள் கோபத்துடன்.

“என்னடி ரொம்பச் சிலிர்த்துக்கிற? நாங்க குடிச்சா உனக்கு என்ன குறைஞ்சு போயிருச்சு?” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்தான் சூர்யா.

அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தவள் பதிலே சொல்லவில்லை.

‘இவ ரொம்பப் பண்றா!’ என்று தான் சூர்யாவிற்குத் தோன்றியது.

“யுவா சொல்வது கரெக்ட். குடிக்கிறதாக இருந்தால் போக வேண்டாம்…” என்றாள் நந்தினி.

“ஏய், என்ன பிளானை இழுத்து மூடுற? இப்ப என்ன குடிக்கக் கூடாது, அவ்வளவு தானே? நாங்க குடிக்கலை. என்ன சூர்யா, நீ என்ன சொல்ற?” என்று கேட்டான் தினேஷ்.

‘ஓகே’ என்பது போல் அலட்சியமாகத் தோளை குலுக்கினான் சூர்யா.

“அப்போ சரி, எங்கே போகலாம்னு முடிவு பண்ணலாம்…” என்று சிறிது நேரம் பேசி மகாபலிபுரம் போகலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

“உன்னால் வர முடியுமா?” என்று திரும்பி அலுவலகத்திற்குள் செல்லும் போது மனைவியிடம் கேட்டான் சூர்யா.

“ஏன் எனக்கு என்ன?” என்று கேட்டாள்.

“உனக்கு உடம்பு சரியில்லையே?”

“அது அன்னைக்குச் சரியாகிடும்…” என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

‘இவளுக்கு என்ன பிரச்சினைன்னு தெரியலையே?’ என்று நினைத்துக் கொண்டான் சூர்யா.

மாலை வேலை முடிந்து சூர்யா வீட்டுக்கு கிளம்பும் போது தான் யுவஸ்ரீயும் கிளம்பினாள்.

அவளுடன் மின்தூக்கியில் செல்லும் போது தான் கவனித்தான். அவள் தன் கைபேசியில் ஆட்டோவிற்குப் புக் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

அதைப் பார்த்த பின் தான் காலையில் அவள் ஸ்கூட்டி பஞ்சர் என்றது ஞாபகத்தில் வந்தது.

“ஆட்டோவுக்குப் புக் பண்ணாதே! என் கூட வந்திடு…” என்றான் சூர்யா.

முதுகிற்குப் பின் நின்று அவன் சொல்லியதைக் கேட்டதும், திரும்பிப் பார்த்தாள்.

அவனும் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“தேவையில்லை, நான் ஆட்டோவில் போயிக்குவேன்…” என்றாள்.

“ஏய், என்னடி நான் என்ன சொன்னாலும் மறுத்துட்டே இருக்க?” என்று சீறினான்.

“எனக்கு மட்டும் மறுக்கணும்னு ஆசையா? உங்களுக்குத் தான் நான் உங்க கூட வந்தால் பிடிக்காதே?” என்றாள்.

“நான் எப்போ பிடிக்காதுன்னு சொன்னேன்?” கோபத்துடன் கேட்டான்.

மின்தூக்கியில் அவர்கள் மட்டும் இருக்க, இருவரின் பேச்சுக்களும் சூடாகவே வந்தன.

இருவரின் நேரமும் முன்னே பின்னே இருக்கும் என்று அவன் சொன்னது தான் காரணம் என்றாலும், அவளுக்கு இருந்த கடுப்பில் அவனைத் தான் குற்றம் சொன்னாள்.

அவன் நினைத்திருந்தால் காலையிலேயே ஏன் சோர்வுடன் இருக்கிறாள் என்று கேட்டு அவனுடனே அழைத்து வந்திருக்க முடியும். ஆனால் அதைக் கூட அவன் செய்யவில்லையே என்ற கோபம் தான் வந்தது.

அதற்குள் மின்தூக்கி கீழே வந்திருக்க, இருவரும் வெளியே வந்தனர்.

அவனின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் ஆட்டோ பிடிக்க அலுவலகம் வெளியே செல்ல பார்க்க, அவனுக்கு இன்னும் தான் கோபம் வந்தது.

வேகமாகச் சென்று தன் பைக்கை எடுத்து வந்தவன், ஆட்டோ பிடிக்க அலுவலக வாசலில் காத்திருந்த மனைவியின் அருகில் பைக்கை நிறுத்தி, அவளின் கையைப் பிடித்து, “ஏறுடி…” என்றான் பல்லை கடித்துக் கொண்டு.

“ம்ப்ச், விடுங்க…” என்றாள்.

“யுவா, ரோட்டில் வச்சு சீன் கிரியேட் செய்யாதே. ஏறு!” என்றான்.

ஒரு சிலர் அவர்களைத் திரும்பிப் பார்க்க, அதற்கு மேல் ஒன்றும் கேட்காமல் வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

“உனக்கு என்னடி ஆச்சு? ஏன் இப்ப எல்லாம் ஒரு மாதிரியா நடந்துக்கிற? காலையில் மயக்கம் போட்டு விழுந்து என்னவோ மாத்திரை விழுங்குற. என்ன மாத்திரைன்னு கேட்டால் பதில் சொல்ல மாட்டீங்கிற. வண்டியில் வான்னு சொன்னால் பிகு பண்ற.

நான் என்னவோ உன்னை வேணும்னே தனியா வர சொன்னது போல் சொல்ற. நமக்கு வேலை டைம் முன்ன பின்ன இருக்கும்னு நான் சொன்னது எல்லாம் மறந்து போயிருச்சா?” என்று வண்டியில் போகும் போது கேட்டான்.

“எதுவுமே மறக்கலைங்க. நீங்க தான் இன்னைக்கு என்னவோ வித்தியாசமா நடந்துக்கிறீங்க…”

“நான் என்ன வித்தியாசமா நடந்துக்கிறேன்?” புரியாமல் கேட்டான்.

“அது சொன்னால் புரியாது, விடுங்க…” என்றவள் அதன் பிறகு அவன் என்ன கேட்டும் அவள் பதில் சொல்லவில்லை.

அதன் பின் வீடு செல்லும் வரை இருவருக்கும் இடையே பெரும் அமைதி ஆட்கொண்டது.

அன்று இரவு உணவிற்குப் பிறகும் அவள் மாத்திரையைப் போடுவதைப் பார்த்தவன், அவள் கையில் இருந்து அந்த மாத்திரை அட்டையைப் பறித்துப் பெயரைப் பார்த்தான்.

அது எதற்கான மாத்திரை என்று தெரியவில்லை என்றதும், கூகுளில் போட்டு தேடிப் பார்த்தான்.

என்னவோ செய்து கொள்! என்பது போல் போய்ப் படுக்கையில் படுத்துக் கொண்டாள் யுவஸ்ரீ.

கூகுளில் விவரங்கள் தெரிய, “மாத மாதம் உனக்கு இப்படித்தான் வயிறு வலிக்குமா?” என்று கேட்டவனை ‘உனக்கு இன்னைக்குத்தான் இது தெரியுமா?’ என்பது போல் கூர்ந்து பார்த்தாள்.

“பதில் சொல்லுடி…” என்றான்.

“காலையில் சொன்னதைத் தாங்க இப்பவும் சொல்றேன். என் மேல புதுசா அக்கறை காட்டாதீங்க. இப்படி எல்லாம் நீங்க கேட்குறது எனக்கு இப்ப சந்தோஷத்தைத் தரவில்லை. வலியைத் தான் தருது. என் புருஷனுக்கு என்னைப் பத்தி எதுவுமே தெரியலை என்பது எனக்கு வலிக்க வைக்கிது. வேண்டாம் விட்டுடுங்க…” என்றாள் வலி நிறைந்த குரலில்.

“என்னடி என்னென்னவோ பேசுற? அன்னைக்கும் இப்படித்தான் நீ நிறையப் பேசிட்ட. அதில் இருந்து உனக்குப் பிடிக்காத விஷயம் வேண்டாம்னு நான் உன் பக்கத்துலயே வருவதில்லை. இன்னைக்கும் இப்படிப் பேசுற. நீ என்ன நினைத்து இப்படிப் பேசுறன்னு எனக்குப் புரியவே இல்லை…” என்றான் இயலாமையுடன்.

எனக்குக் கிடைத்த ஏமாற்றங்கள் என்னை இப்படிப் பேச வைக்கிறது என்று தான் நினைத்துக் கொண்டாள்.

ஏனோ அதை அவனிடம் சொல்ல பிடிக்கவில்லை.

‘நீ என்கிட்ட இப்படி எல்லாம் இருக்கணும்னு ஆசைப்படுறேன். ஆனா நீ அப்படி இல்லை. அது தான் எனக்கு ஏமாற்றம் தருகிறது’ என்று அவள் சொல்லி அவன் மாறுவதில் என்ன அர்த்தம் உள்ளது?

தன் துணை என்ன எதிர்பார்க்கிறாள் என்று ஒரு கணவனுக்குத் தெரிய வேண்டாமா?

மனைவிக்காகப் பெரிய பெரிய சாகசங்கள் செய்ய வேண்டாம். உனக்கு மனம் விட்டு பேச நான் இருக்கிறேன். உனக்கு வலி என்றால் நீ ஆதரவாகத் தோள் சாய நான் இருக்கிறேன். உன் வேதனை, சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள நான் இருக்கிறேன் என்று அரவணைத்தால் போதுமே.

ஆனால் அதைக் கூடச் செய்யாமல் தான், தனது சுகம் என்று அவன் சுற்றும் போது அவனிடம் எதையும் கேட்டு வாங்க அவளுக்கு விருப்பம் இல்லாமல் தான் அவனிடம் தன் உள்ளக்கிடங்கை சொல்லாமல் தவிர்த்தாள்.

“ஒரு கணவனுக்கான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு என்னைக்குப் புரியுதோ, அன்னைக்கு உங்க கேள்விக்குப் பதில் நான் சொல்லாமலே புரியும் சூர்யா…” என்று மட்டும் சொல்லிவிட்டு, விழிகளை மூடிக் கொண்டாள் யுவஸ்ரீ.

எப்போதும் போல் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான் சூரியக்கண்ணன்.