15 – வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்!

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 15

அன்று காலை குளித்து விட்டு வந்த கணவனுக்கு அவன் சொல்லாமலே அவனின் மாற்று உடையை எடுத்து தயாராக வைத்திருந்தாள் சக்தி.

‘என்னுடைய இந்த வேலையெல்லாம் நீ தான் செய்ய வேண்டும்’ என்று அவன் சொன்னாலும் வேண்டுமென்றே வீம்பு பிடித்து மறுப்பவள் இன்று அவளாக எடுத்து வைத்திருப்பதைப் பார்த்து சிந்தனையுடன் மனைவியைப் பார்த்தான் சர்வேஸ்வரன்.

அவளோ அவனைப் பார்க்காமல் ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் பின்னால் சென்று நின்றவன் “சக்தியாருக்கு திடீர்னு என்ன என் மேல அக்கறை?” என்று கேட்டான்.

“அது அக்கறைன்னு யார் சொன்னா? நீங்க சீக்கிரம் வெளியே கிளம்பி போகட்டும்னு தான்…” என்று அவனின் புறம் திரும்பாமலேயே பதில் சொன்னவள் தோளில் கை வைத்து தன் புறம் திருப்பினான்.

“அது தானே பார்த்தேன். என்னடா நம்ம பொண்டாட்டிக்கு நம்ம மேல திடீர்னு அக்கறை வந்துடுச்சேன்னு. அது சரி, நான் சீக்கிரம் வெளியே கிளம்பி போனதும் என்ன செய்யலாம்னு இருக்க?” என்று கேட்டான்.

“என்ன செய்யப் போறேன்னு உங்ககிட்ட எல்லாம் சொல்ல முடியாது. நீங்க எங்க போறீங்க? மில்லுக்கா? வயலுக்கா?” என்று கேட்டாள்.

“நீ சொல்ல மாட்ட. நான் மட்டும் சொல்லணுமா என்ன?” என்று பதிலுக்குத் திருப்பிக் கேட்டவனைப் பார்த்து உதட்டை சுழித்தாள்.

“சொல்லாட்டி போங்க. எனக்கென்ன? ஆனா எனக்குத் தெரியாதா என்ன? தெருவில் இறங்கி நீங்க எந்தப்பக்கம் போறீங்கன்னு பார்த்தாலே வயலுக்குப் போறீங்களா? இல்ல மில்லுக்குப் போறீங்களான்னு தெரிய போகுது…” என்றாள் அசட்டையாக.

“ஓஹோ! அப்போ நான் போற பக்கத்துக்கு ஆப்போசிட்டா நீ போகப் போற? சரிதான். நீ என்ன செய்யப் போறன்னு நானும் பார்க்கிறேன்…” என்றவன் அவள் எடுத்து வைத்திருந்த உடையை எடுத்து உடுத்தினான்.

தன் முன்பே அவன் உடை மாற்ற ஆரம்பிக்கவும் சக்தி மீண்டும் தன் பார்வையை ஜன்னல் பக்கமாகத் திருப்பினாள்.

அவளின் முதுகை நமட்டு சிரிப்புடன் பார்த்தவன், “அச்சோ சக்தி! என்ன இது இப்படிச் செய்து வச்சுருக்க?” என்று அலறினான்.

‘என்னவோ?’ என்று பதறி வேகமாக அவன் பக்கம் திரும்பிய சக்தி அவன் நின்ற கோலத்தைப் பார்த்து ஆவென்று வாயை பிளந்தாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

சட்டையைப் போட்டுவிட்டுப் பட்டனை மாட்டாமல் திறந்து விட்டிருந்தவன், வேஷ்டியை எடுத்துக் கட்டாமல் டவுசருடன் நின்று கொண்டிருந்தான்.

“ச்சீ, என்ன இது இப்படி நிற்கிறீங்க? கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம…” என்றவள் வேகமாக முகத்தைத் திருப்பிக் கொள்ள, “ஹாஹா…” என்று சப்தமாகச் சிரித்தான்.

“என் பொண்டாட்டி முன்னாடி இப்படி நிக்க நான் ஏன் வெட்கப்படணும்? என் பொண்டாட்டியை வெட்கப்பட வைக்க வேணும்னா செய்யலாம். என்னை இப்படிப் பார்க்க வெட்கப்பட்டுத் தானே நீ அந்தப் பக்கமே திரும்பி நின்னுகிற. உன்னை எப்படி என்னைப் பார்க்க வச்சேன் பார்த்தியா? இப்ப திரும்பவும் முகத்தைத் திருப்பிக்கிட்ட. அதனால் அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்கிறேன்…” என்றான் கேலியாக.

“நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம். பேசாம போங்க…” என்றாள் கோபமாக.

“பேசாம வேணா போகலாம். ஆனா…” என்றவனின் குரல் அவளுக்கு மிக அருகில் கேட்க அவளின் மயிர்கால்கள் கூசி சிலிர்த்தன.

அவளின் பின்னால் அவளை உரசியும் உரசாமலும் நின்றவன், பின்னங்கழுத்தில் மெதுவாக ஊதினான்.

‘ஷ்ஷ்’ என்று உள்ளுக்குள் சிலிர்த்தவள் வெளியே உடலை விறைத்துக் கொண்டு நின்றாள்.

“இப்ப முழுசா ட்ரெஸ் பண்ணிட்டுத்தான் நிற்கிறேன். இப்ப திரும்பலாம்ல?” என்று அவளின் தோளில் கை வைத்துக் கேட்டான்.

“திரும்ப முடியாது…” என்று தன் தோளில் இருந்த கணவனின் கையை எடுத்து விட்டாள்.

“ஏன்?” என்றவன் மீண்டும் சக்தியின் தோளில் கையை வைத்து தன் பக்கம் வலுவாகத் திருப்பினான்.

இன்னும் அரைகுறை உடையுடன் நிற்பானோ என்று தயங்கிய சக்தி கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.

அவளின் செய்கையில் அவனின் சிரிப்பு விரிந்தது.

“நான் தான் ட்ரெஸ் பண்ணிட்டேன்னு சொன்னேன்ல. இன்னும் என் மேல சக்தியாருக்கு நம்பிக்கை வரலையோ?” என்றவன் அவளின் மூடிய இமைகளின் மீது மென்மையாக முத்தமிட்டான்.

அடுத்த நொடி அவளின் விழிகள் பட்டென்று திறந்து கொண்டன.

அடுத்து அவளின் கன்னத்தில் தன் அதரங்களைக் கொண்டு அச்சாரமிட, சக்தியின் விழிகள் விரிந்து கொண்டன.

மெல்ல அவனின் அதரங்கள் அவளின் இதழ்களை நோக்கி நகர, அவனின் நோக்கம் புரிந்து சக்தியும் அவனை விட்டுப் பின்னால் நகர்ந்தாள்.

“ப்ளீஸ் சர்வேஸ், என்னை டெம்ப்ட் பண்ணாதீங்க…” என்றாள்.

சக்தியின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான் சர்வேஸ்வரன். அவளின் முகத்தில் ஆதங்கமோ, தவிப்போ, ஏதோ ஒன்று இருந்தது.

அதற்கு மேல் அங்கே நிற்காமல் அவளை விட்டு விலகியவன் வெளியே சென்று விட்டான்.

கணவனின் ஆசையும், தவிப்பும் சக்திக்கு நன்றாகவே புரிந்தது. அவளுக்கும் அவனின் மீது அதே அளவு ஆசையும் இருந்தது.

ஆனாலும் தன் ஆசைகளை அடக்கிக் கொண்டு அடுத்த அடி எடுத்து வைக்க முடிவு செய்தாள் சக்தி.

சர்வேஸ்வரன் வெளியே சென்றதும் தானும் வெளியே கிளம்பினாள்.

சக்தி வயலுக்குச் செல்ல, அங்கே ஆட்கள் எல்லாம் வேலையை ஆரம்பித்து இருந்தனர்.

சர்வேஸ்வரன் மில்லுக்குச் சென்றிருந்தான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

சற்று நேரம் வயலை சுற்றி வந்து ஆட்கள் வேலை செய்வதைப் பார்த்தாள்.

அங்கே இளவட்ட, நடுத்தர வயது பெண்களுடன், சில முதிய பெண்மணிகளும் வேலை செய்ய அவர்களை நோக்கி சென்றாள்.

அவளைப் பார்த்ததும் அந்த முதிய பெண்கள் நிமிர்ந்து பார்த்தனர். “என்ன தாயி, நாங்க எல்லாம் சோலியை சரியா முடிக்கிறோமானு பார்க்கிறீங்களோ?” என்று ஒருவர் கேட்க,

“அப்படியெல்லாம் இல்லை ஆத்தா. நீங்க எல்லாம் நாங்க பார்க்காமே சரியா வேலையை முடிச்சுக் கொடுப்பீங்கனு தெரியும். நான் சும்மா உங்ககிட்ட எல்லாம் பேசிட்டு இருக்கலாம்னு வந்தேன்…”

அவள் சொன்னதைக் கேட்டு அக மகிழ்ந்தார்கள்.

“ஆத்தி! நாட்டாமையம்மா எங்ககிட்ட பேச வந்துருக்காக. அடியே மூக்காயி, நம்ம நாட்டாமையம்மாவை பாரு. பெரிய நாட்டாமை அய்யாவுக்கு ஏத்த மருமவள்னு தப்பாம நிரூபிக்கிறாக…” என்று ஒரு மூதாட்டி இன்னொரு மூதாட்டியிடம் பெருமையாகச் சொன்னார்.

“ஆமாடி தங்கத்தாயி. நாட்டாமை வீட்டு மருமவளும் சொக்கத்தங்கம்…” என்று ஆமோதித்த மூக்காயி, “உம்ம மாமனாரும், வீட்டுக்காரும் வேலைக்காரவுக தானேனு எப்பவும் இளப்பமா எங்களைப் பார்க்க மாட்டாவுக தாயி. நீரும் அவுகளைப் போலவே இருக்கீக…” என்று சக்தியிடம் சொன்னார்.

அவர்களின் புகழ்ச்சிக்கு லேசாகச் சிரித்து வைத்தாள்.

அப்படியே அவர்களிடம் மெல்ல மெல்ல பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள்.

அவர்களும் பெரிய வீட்டு மருமகள் தங்களிடம் பேச வந்திருக்கிறாள் என்று பூரித்துப் போய் மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தனர்.

பேச்சு செல்ல செல்ல தான் பேச வந்த விஷயத்திற்கு மெதுவாக வர ஆரம்பித்தாள் சக்தி.

“ஆமா ஆத்தா, இந்த ஊரில் உங்களுக்குத் தாமோதரன்னு யாரையாவது தெரியுமா?” என்று கேட்டாள்.

“தாமோதரனா? யாரது?” மூக்காயி கிழவி வேலையை விட்டு விட்டு யோசனையாக வானத்தை அண்ணாந்து பார்த்தார்.

“அந்தப் பேருல இப்ப யாரும் இந்த ஊருக்குள்ள இல்லையே தாயே…” என்றார் தங்கத்தாயி.

“இப்ப இல்ல ஆத்தா. முன்னாடி…” என்று சக்தி எடுத்துக் கொடுக்க…

“முன்னாடியா?” என்று இரு மூதாட்டிகளுமே பழைய யோசனைக்குச் சென்றனர்.

அவர்களுக்குத் தன் தந்தையைப் பற்றி ஞாபகம் இருக்கிறதா என்பதை அறிய ஆவலுடன் அவர்கள் முகம் பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி.

“முன்னாடி, தாமோதரன் இல்ல… தாமுன்னு…” என்று மூக்காயி ஞாபகம் வந்தது போல ஏதோ சொல்ல துவங்க… “சக்தி இங்கே உட்கார்ந்து என்ன அரட்டை அடிச்சுட்டு இருக்க?” என்று கேட்டபடி அங்கே வந்திருந்தான் சர்வேஸ்வரன்.

மூக்காயி ‘தாமு’ என்று ஆரம்பித்ததும் எதிர்பார்ப்புடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்த சக்தி திடீரெனக் கணவனின் குரல் கேட்கவும் திடுக்கிட்டு போனாள்.

தன் முதுகிற்குப் பின்னால் நின்றிருந்தவனைத் திரும்பி பார்க்க, அங்கே கண்களில் கண்டிப்புடன் நின்று கொண்டிருந்தான் சர்வேஸ்வரன்.

அவனைக் கண்டதும் திடுக்கிட்டாலும் உடனே தலையைச் சிலுப்பி நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது போல ஒரு பார்வை பார்த்தாள்.

‘இவளுக்குத் துடுக்குத்தனம் ஜாஸ்தி ஆகிடுச்சு. இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்…’ என்று நினைத்தவன் அவளை விட்டு பார்வையை சக்தியிடம் தங்களுக்கு ஞாபகம் வந்த தாமுவை பற்றிச் சொல்ல காத்திருந்த மூதாட்டிகளின் பக்கம் திருப்பினான்.

“என்ன ஆத்தா, வேலையைப் பார்க்காம என் பொஞ்சாதி கூட ஊரு கதை பேசிட்டு இருக்கீக?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

“தாயி தான் ஏதோ விவரம் கேட்டுச்சு நாட்டாமைய்யா. அதான் பேசிட்டு இருந்தோம்…”

“அவளுக்கு வீட்டுல பொழுது போகலையாம் ஆத்தா. அதான் உங்களை எல்லாம் வம்பிழுக்க இங்கே வந்துட்டாள். ஆனா நீங்க அப்படியா? இந்த வயசுலயும் சுறுசுறுப்பா வேலை பார்க்கிறவுக ஆச்சே…” என்று பெருமையாகப் பேசியவன் மனைவியின் அருகில் நெருங்கி அவளின் கையைப் பிடித்தான்.

“அவுக வேலையைக் கெடுக்காதே சக்தி. உனக்குப் பொழுது போகலைன்னு தான் மில்லில் இருந்து சீக்கிரம் வீட்டுக்கு வந்தேன். வீட்டில் பார்த்தா உன்னைக் காணோம். அதான் வயலுக்கே தேடி வந்துட்டேன். வா, நாம அப்படிப் போய் இளநி குடிச்சுட்டே பேசுவோம்…” என்று அவளை நெருங்கி நின்று மயக்கும் புன்னகையுடன் அழைத்தான்.

அவர்களின் நெருக்கத்தைப் பார்த்த மூதாட்டிகள் ஒருவரை ஒருவர் பார்த்து வெட்கப் புன்னகை பூத்துவிட்டு குனிந்து வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர்.

தன்னை உரசி கொண்டு நின்றவனை விட்டு சக்தி தள்ளி நிற்க முயல, அவனோ அவளை நகர விடாமல் கையை இறுக பற்றிக் கொண்டான்.

அவனின் அடாவடியில் அவளின் முகம் இறுகியது.

“என்ன பண்றீங்க? கையை விடுங்க…” மெல்லிய குரலில் அதட்டினாள்.

“என்ன சக்தி, உனக்கு இரண்டு இளநி வேணுமா? உனக்கு எத்தனை இளநி வேணுமோ குடிச்சுகோ. வா, வெட்டி தர சொல்றேன்…” சப்தமாகச் சொன்னவன் அவளின் கையை வலுக்கட்டாயமாக இழுத்து தன்னுடன் நடக்க வைத்தான்.

ஆனால் பார்ப்பவர்களுக்கு அவர்கள் இருவரும் சந்தோஷமாகப் பேசிக் கொண்டே ஜோடியாகச் செல்வது போன்றான தோற்றத்தை கொடுத்தது.

வேலை செய்கிறவர்கள் பார்வையில் இருந்து விலகி வந்ததும் தன்னுடன் வந்தவளை இழுத்து முன்னால் நிறுத்தியவன், “என்ன காரியம் பண்ணிட்டு இருக்க சக்தி? இப்ப ஏன் மாமா பத்தி அவங்ககிட்ட விசாரிக்கிற? அவரைப் பத்தி அவங்களுக்கு ஞாபகப்படுத்தி என்ன சாதிக்க நினைக்கிற?” என்று கோபத்துடன் கேட்டான் சர்வேஸ்வரன்.

சக்தியோ அவனுக்குப் பதில் சொல்லாமல் அசட்டையாக நின்றாள்.

“சொல்லு சக்தி. எதுக்கு இந்த வேலை பார்க்கிற? இதனால என்ன மாறிவிடும்னு எதிர்பார்க்கிற?” என்று கடிந்த பற்களுக்கிடையே கேட்டான்.

“அதைத் தெரிஞ்சி நீங்க என்ன செய்யப் போறீங்க?” என்று அலட்சியமாகவே பதில் கேள்வி அவளிடமிருந்து வந்தது.

“சக்தி… சக்தி‌… ஏன் இப்படி வேண்டாத வேலை தான் பார்ப்பேன்னு பிடிவாதம் பிடிக்கிற? நீ இப்படிச் செய்வதால் ஒரு யூஸும் இல்லை…” என்றான்.

“யூஸ் இல்லாத விஷயத்தைச் செய்ய விடாமல் ஏன் சார் தடுத்தீங்க?” என்று புருவம் உயர்த்திக் கேட்டாள்.

“தேவையில்லாத பிரச்சனையை நீ இழுத்து விட்டுட கூடாதுன்னு தான்…”

“உங்களுக்கு வேணும்னா தேவையில்லாத வேலையா இருக்கலாம். ஆனால் எனக்கு ரொம்ப முக்கியமான வேலை…”

“அப்படி என்ன முக்கியம் இதில் இருக்கு?”

“நாளைக்கே நான் திடீர்ன்னு என் அப்பாவை இந்த ஊருக்கு அழைச்சுட்டு வரும் போது அவர் யாருன்னு இந்த ஊர் மக்களுக்கு ஞாபகம் வரணும் இல்லையா? அதுக்குத்தான். அது மட்டுமில்ல இப்ப திடீர்னு ஒரு நாள் என் அப்பாவுக்கு நியாயம் கேட்டு நான் பஞ்சாயத்தைக் கூட்டினேன் வைங்க.

அப்போ என் அப்பாவை பத்தி பேசும் போது இந்த ஊர் மக்களுக்கு உடனே ஞாபகம் வரணும்னு தான் கொஞ்சம் என் அப்பாவோட நினைவுகளைத் தூண்டி விட நினைக்கிறேன். அதைச் சரியா வந்து தடுத்துட்டீங்க. இந்த ஒருமுறை உங்களால் தடுக்க முடிந்தது. ஆனா எல்லா நேரமும் உங்களால் அதைச் செய்ய முடியும்னு நினைக்கிறீங்களா?” என்று கேட்டாள்.

அவளின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவளையே சில நொடிகள் தீர்க்கமாகப் பார்த்தான் சர்வேஸ்வரன்.

‘என்ன பார்வை?’ என்பது போல் இமைகளைச் சுருக்கிப் பார்த்தாள்.

“அப்போ ஒரு முடிவோட தான் இருக்க?” என்று கேட்டான்.

“அது உங்களுக்கு இப்பத்தான் புரியுதா?”

“புரியுது. நல்லாவே புரியுது. நீ என்ன செய்யணும்னு நினைக்கிறயோ அதைத் தாராளமா செய். இனி உன்னை நான் தடுக்க மாட்டேன்…” என்றவன் வரப்பில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.

‘என்ன சொல்லிவிட்டுச் செல்கிறான்? நிஜமாகவா சொல்கிறான்?’ என்பது போல் அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள் சக்தி.

அவளால் அவன் சொல்லி சென்றதை நம்பவே முடியவில்லை.

சட்டென்று இப்படி விட்டுக் கொடுப்பான் என்றும் எதிர்பார்க்கவில்லை.

ஒருவேளை வேறு எதுவும் பிளான் போடுகிறானோ? என்பது போல் நடந்து கொண்டிருந்தவனின் முதுகையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

அவள் திரும்பி வயலுக்கு வந்த போது, “நீங்க கேட்ட தாமோதரன் உம்ம மாமியா தம்பி தாயி. அவரு பேரு தான் தாமோதரன். இங்கன ஊருக்குள்ள அவரு பேரு தாமுன்னு தான் நிறையப் பேருக்கு தெரியும். அதான் சட்டுன்னு யோசனை வரலை தாயி. அவரைப் பத்தியா கேட்டீக?” என்று கேட்டார் மூக்காயி.

“ஆமா ஆத்தா…” என்றாள் சக்தி.

“அவரு மேல ஒரு பஞ்சாயத்தாகிப் போகி நாட்டாமை ஊரை விட்டு ஒதுக்கி வச்சுட்டார் தாயி. என்ன விசயம் தாயி? அவரைப் பத்தி எதுக்குக் கேட்டீங்க?” என்று தங்கத்தாய் கேட்க,

“சும்மாத்தான் ஆத்தா. வீட்டில் எனக்கு ஒரு வேலை இருக்கு ஆத்தா. நான் அப்புறம் வந்து பேசுறேன்…” என்ற சக்தி நிற்காமல் நடையைக் கட்டினாள்.

தந்தையின் நினைவுகளை இந்த ஊர் மக்களிடம் தூண்ட நினைத்த சக்திக்கு அது நடந்ததில் சற்று திருப்தி பட்டுக்கொண்டாள்.

இது மட்டும் போதாது. இன்னும் பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும். என்ன செய்யலாம்? என்ற யோசனையுடன் வீட்டிற்குச் சென்று சேர்ந்தாள்.

அவள் வீட்டிற்குச் சென்ற போது அங்கே சர்வேஸ்வரன் இருக்கவில்லை.

மில்லிற்குச் சென்றிருப்பான் என்று நினைத்துக் கொண்டாள்.

தேவிக்கு அழைத்துத் தந்தையைப் பற்றி விசாரித்தாள்.

அவர் அழைப்பை எடுத்ததும் “தங்கம்…” என்று அழைத்தவர் அடுத்த நிமிடம் லேசாக விசும்பினார்.

“அத்தை, என்ன அத்தை? எதுக்கு அழறீங்க? அப்பா… அப்பா நல்லா இருக்கார் தானே?” என்று பதறி போய்க் கேட்டாள்.

“அது… த… தங்கம்…” என்றவருக்கு மேலும் அழுகை தான் வந்தது.

“பக்கத்தில் பிரேம் இருக்கானா? அவன்கிட்ட கொடுங்க…” என்றாள் பதட்டத்துடன்.

சில நொடிகள் அந்தப் பக்கம் சின்னச் சின்னச் சப்தங்களாகக் கேட்டது.

பின் பிரேம் தொடர்பில் வந்தான்.

“சொல்லு சக்தி…”

“நான் என்ன சொல்ல? நீ தான் சொல்லணும். அப்பா எப்படி இருக்கார்? அத்தை ஏன் அழறாங்க?” வேகமாக வந்து விழுந்தது சக்தியின் வார்த்தைகள்.

“ரொம்பப் பயப்படும் படி ஒன்னுமில்ல சக்தி. நீ பதறாதே…” என்றவனின் குரலில் தயக்கம் இருந்ததைக் கண்டு கொண்டாள் சக்தி.

“நீ விஷயத்தைச் சொல்லு. அது பயப்படும் விஷயமா இல்லையான்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்…” பிடிவாதமாகக் கேட்டாள்.

“அது வந்து…” என்று சில நொடிகள் தயங்கிய பிரேம், “நீ ஒரு முறை இங்கே வந்துட்டு போறீயா சக்தி? அங்கிள் உன்னைப் பார்க்க ஆசைப்படுறார். கூடவே சர்வேஸையும் கூட்டிட்டு வந்தால் அங்கிள் சந்தோஷப்படுவார்…” என்றான்.

“உண்மையைச் சொல்லு பிரேம். அப்பாவுக்கு ரொம்ப முடியலையா? அது தான் என்னை நேரில் வரச் சொல்றீயா?”

“ச்சே, ச்சே… அப்படியெல்லாம் எதுவுமில்லை…” வேகமாக மறுத்தான்.

“நீ காரணம் இல்லாம எங்க இரண்டு பேரையும் நேரில் வரச் சொல்ல மாட்ட பிரேம். எதையும் மறைக்காம சொல்லு. அப்பாவுக்கு என்னாச்சு?”

அவளின் பதட்டம் இன்னும் குறையாததை உணர்ந்தவன் மெல்ல பெருமூச்சு விட்டுக் கொண்டு விஷயத்தைச் சொன்னான்.

“அங்கிளுக்கு இன்னைக்கு லேசா மூச்சு திணறல் இருந்தது சக்தி. கொஞ்ச நேரத்தில் ரொம்பக் கஷ்டப்பட்டுட்டார். டாக்டரும் இனி அடிக்கடி இப்படி வரலாம் என்பது போல் சொன்னாங்க. இப்படி அடிக்கடி வந்தால் அடுத்து என்ன ஆகுமோன்னு நாங்க கொஞ்சம் பயந்துட்டோம். அதான் நீயும் சர்வேசும் இங்கே வந்தால் அங்கிள் பார்த்து சந்தோஷப்படுவார்ன்னு நினைச்சேன்…” என்றான்.

“ஓ!” என்றாள் ஓய்ந்து போனவளாக.

“ரொம்ப மூச்சு திணறினாரா? ரொம்பக் கஷ்டப்பட்டாரா?” என்று திணறலுடன் கேட்டாள். அவளின் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டு நின்றது.

“ரொம்ப எல்லாம் இல்லை…” என்றான்.

“ம்ம்…” என்றாள்.

“என்ன சக்தி வர்றீயா?” என்று கேட்டான்.

“எனக்கு இப்ப என்ன சொல்றதுனே தெரியலை பிரேம். வந்த வேலையை விட்டுட்டுக் கல்யாணம் அது இதுன்னு என்னென்னவோ பண்ணிட்டேன். இப்ப…” என்றவள் அடுத்து என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறினாள்.

கணவனுக்காகப் பார்த்து தான் அவசரமாக எதுவும் செய்யாமல் நாட்களை நகர்த்தி விட்டாள் என்பதே உண்மை.

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர் மகளைத் தன் ஊர் நாட்டாமை திருமணம் முடித்திருக்கிறான் என்று இந்த ஊர் மக்களுக்குத் தெரிய வரும் போது அவன் இந்த ஊர் முன் தலைகுனிய நேரிடலாம் என்றே எதையும் அதிரடியாகச் செய்யமுடியாமல் அவளின் கையைக் கட்டிப் போட்டது.

ஆனால் இப்போது தந்தையின் உடல் நலன் சற்று பின்னுக்குச் சென்றிருந்தது அவளின் மனதை போட்டு அழுத்திக் கொண்டிருந்தது. கண்களும் தன்போக்கில் கலங்க ஆரம்பித்தன.

சீக்கிரம் ஏதாவது செய்ய வேண்டும். இனி சின்னச் சின்ன விஷயங்கள் எல்லாம் வேலைக்கு ஆகாது. பெரிதாகத் தான் ஏதாவது செய்யவேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்.

சற்று நேரம் யோசித்தவளுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற முடிவு கிடைத்தது.

அந்த முடிவு எடுக்கவுமே மன கண்ணின் முன் வந்தான் அவளின் கணவன் சர்வேஸ்வரன்.

தன் முடிவு தன் கணவனைத் தலை குனிய வைக்குமோ என்று நினைத்தாள்.

கண்டிப்பாக அவனும் பாதிக்கப்படுவான் என்பது புரிந்தது. அது அவளுக்கு வருத்தத்தைக் கொடுத்தது.

ஆனாலும் தந்தையின் நலிந்த தோற்றமும், அவரின் கடைசிக் காலமும் நினைவில் வர, அவளின் இளகிய மனதை பிடித்து இறுக்கினாள்.

தந்தையின் கடைசி ஆசையைக் கூட நிறைவேற்றாத தான் மகளாக இருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

தாயுமானவராகவும் இருந்து தன்னை வளர்த்த தன் தந்தையின் ஆசையை எப்படியாவது நிறைவேற்றி வைக்க வேண்டும். அதில் தன் வாழ்க்கைக்குப் பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை என்ற உறுதியான முடிவை எடுத்தாள் சக்தி.