15 – ஞாபகம் முழுவதும் நீயே

அத்தியாயம்– 15

அந்த அமைதியான காலைப்பொழுதில் கவின் உறங்கிக் கொண்டிருக்கப் பவ்யா சமையலறையில் வேலையை அப்பொழுது தான் ஆரம்பித்திருந்தாள்.

அந்த அமைதியை கிழித்துக் கொண்டு வீட்டின் அழைப்பு மணி ஒலி எழுப்பி அவளை அழைத்தது.

அது பால் வரும் நேரம் என்பதால் அவனாகத் தான் இருக்கும் என்று நினைத்த படி பாலை எடுக்கக் கதவை நோக்கி நடக்க மீண்டும் அழைப்பு மணி அடித்தது.

‘என்ன இது? பால் போடுற ஆள் ஒரு முறை தானே பெல் அடிப்பான். இன்னைக்கு என்ன புதுசா திரும்பவும் அடிக்கிது’ என்று நினைத்தவள் ஒரு நொடி தயங்கி நின்றாள். அதற்குள் இப்பொழுது கதவு லேசாகத் தட்டப்பட்டது.

‘இது பால் போடுற பையன் இல்லை. வேற யாரோ வந்திருக்காங்க போல. யாரா இருக்கும்? அதுவும் இந்த நேரத்தில்?’ என்று நினைத்துக் கொண்டே கதவில் பொருத்தியிருந்த லென்ஸ் வழியாகப் பார்த்தாள். இப்போதெல்லாம் அவளின் கவனம் அதிகமாகியிருந்தது.

வெளியே உன்னிப்பாகக் கவனித்த நொடியில் அவளின் வாய் “ஹா…” என்று தன்னால் திறந்து கொண்டது. வெளியே நின்றிருந்த உருவம் ஒரு பக்கம் மட்டுமே லென்ஸில் தெரிந்தது.

ஆனாலும் அந்த ஒரு பக்கத்தைப் பார்த்தே தான் கண்டது நிஜம் தானா என்பது போல இன்னும் கவனித்துப் பார்த்தவள் என்ன மாதிரி உணர்ந்தாள் என்று அவளே அறியவில்லை. ஒரு மாதிரி திகைப்பில் ஆழ்ந்திருந்தாள். ஒரு படபடப்பும் அவளைச் சூழ ஆரம்பித்தது.

திகைப்புடன் அவள் அப்படியே நின்றிருக்க இப்பொழுது மீண்டும் கதவு லேசாகத் தட்டப்பட்டது. அதனால் அதற்கு மேலும் தாமதிக்காமல் திகைப்பில் இருந்து வெளியே வந்து அதற்குள் லேசாக நடுங்க ஆரம்பித்து விட்ட கையினால் கதவின் தாழ்ப்பாளை மெள்ள விடுவித்தாள்.

கதவை திறந்து விட்டு வெளியே நின்றிருந்தவனை இப்போது முழுவதுமாகக் கண்டு என்ன பேசுவது என்று கூட அறியாமல் அப்படியே பக்கத்தில் இருந்த சுவரிலேயே தலையைச் சாய்த்து விட்டாள்.

அப்படியே நின்று அவனையே பார்த்தது பார்த்த படி இருந்தாள். கொஞ்சமும் எதிர்பாராத நபரை இந்த நேரத்தில் சந்திப்போம் என்று அவள் சிறிதும் நினைத்தாள் இல்லை.

கனவு எதுவும் காண்கிறோமோ என்று கூட நினைத்தாள். ஆனால் கனவு இல்லை என்பது போல வாசலில் பெரிய இரண்டு பெட்டியுடன் நின்றிருந்த வினய்யும் அவளைத் தான் பார்வையால் வருடிக் கொண்டிருந்தான்.

அவன் முகத்தையே விடாமல் பார்த்தது பார்த்த படி நின்றிருந்த பவ்யாவை சில நொடிகளுக்கு பின் அவன் குரல் கலைத்தது.

அவன் என்ன சொல்கிறான் என்று கூடக் காதில் ஏறாமல் சிலையாய் இருந்தவளை சிறிது சத்தமாக மீண்டும் அழைத்து அவள் நிலையைக் கலைத்தான்.

அப்பொழுது தான் “நான் உள்ளே வரலாமா…?” என்ற அவனின் கேள்வியை உணர்ந்தவள் பாதி மட்டும் திறந்திருந்த கதவை விரிய திறந்து வைத்து “வாங்க…! இது உங்க வீடு. என்கிட்டே ஏன் கேட்கணும்..?” என்று பவ்யா திணறலாகக் கமறிய குரலை சரி செய்து கொண்டே கணவனை வரவேற்றாள்.

அவளின் தடுமாற்றத்தை கண்டு கொண்டாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் “வீடு வேணா என் பேரில் இருக்கலாம். ஆனா இப்ப உண்மையா இந்த வீடு உனக்குத் தான் சொந்தம். நான் வீட்டுக்குள்ள வரணும்னா உன் அனுமதி கண்டிப்பா எனக்கு வேணும். அதோடு…” என்று மேலும் ஏதோ சொல்ல வந்தவன் வார்த்தையை முடிக்கும் முன் அவன் பெட்டி ஒன்றை தூக்கமுடியாமல் கஷ்டப்பட்டு வீட்டினுள் இழுத்தாள்.

அதிலேயே அவளின் பதிலை உணர்ந்தவன் “விடு…! அது ரொம்ப வெயிட்டா இருக்கும். நான் தூக்கிட்டு வர்றேன்” என்று அவளைத் தடுத்து பெட்டியை இழுத்துக் கொண்டு வந்து வீட்டின் உள்ளே நுழைந்தான் வினய். அவனிடம் எந்தத் தடுமாற்றமும் இல்லை. இல்லையா…? இல்லை அவன் காட்டிக் கொள்ளவில்லையா? என்று அவன் மட்டுமே அறிந்தது.

கையில் இருந்த சிறிய பேக்கை அங்கிருந்த டீப்பாயில் வைத்து விட்டு வெளியே சென்று இன்னொரு பெட்டியையும் இழுந்து வந்து வைத்தான்.

கொஞ்சமும் எதிர்பார்க்காத வினய்யின் வரவு பவ்யாவை உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருந்தது.

அமைதியாக ஓரமாக நின்று அவனின் ஒவ்வொரு அசைவையும் பார்த்தபடி நின்று விட்டாள்.

பெட்டியை ஹாலில் வைத்து விட்டு கதவை தாழ் போட்டு விட்டு வந்தவன் அவளைப் பார்த்துக் கொண்டே சோஃபாவில் போய் அமர்ந்தான். சிறிது நேரம் அங்கே மௌனம் ஆட்சி செய்தது. முழுதாக நான்கு வருட பிரிவு.

யார் முதலில் இறங்கி வருவது என்று இருந்தவர்களில் இப்போது வினய் வந்திருந்தாலும், அவனின் இந்தத் திடீர் வருகை எதற்கு என்று தெரியாததால் பவ்யா வரவேற்றதுடன் அமைதியாக இருந்தாள். ஆனாலும் அவளின் உணர்வுகள் இன்னும் அவள் வசத்திற்கு வராமல் தான் இருந்தது.

பின்பு அந்த மௌனத்தை முதலில் களைத்த வினய் அவளின் உணர்ச்சிகரமான முகத்தைப் பார்த்து மெல்ல “ஸாரி…” என்றான்.

அவன் எடுத்ததும் ஸாரி சொல்லவும் எதற்கு என்பதைப் போலப் பார்த்தாள்.

“உன்கிட்ட பேசணும் பவ்யா. கொஞ்சம் இல்லை நிறைய… ஆனா உடனே அவசரமா பேச முடியாது. நிதானமா பேசணும். இப்ப ஸாரி சொன்னது இன்பார்ம் பண்ணாம வந்ததுக்கு” என்ற வினய் தன் கைகளை விரித்து உள்ளங்கைகளைப் பார்த்தவன் பின்பு அதனைக் கொண்டே தன் முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டவனிடம் இருந்து மெல்லிய பெருமூச்சு வெளிப்பட்டது.

பவ்யாவிற்கு அவனின் பெருமூச்சிற்கான காரணம் புரிந்தது.

வினய்யின் வாயில் இருந்து ஸாரி என்ற வார்த்தை வருவது அவ்வளவு எளிதல்ல.

தன்னிடம் ஸாரி சொல்லிவிட்டு அவன் அவஸ்தை படுவதாக நினைத்தாள். அதனால் அவன் பேச்சுக்குப் பதில் சொல்லும் விதமாக “உங்க வீட்டுக்கு நீங்க எப்ப வேணும்னாலும் வரலாம். என்கிட்ட சொல்லிட்டு வரணும்னு அவசியமில்லை. அதனால ஸாரி சொல்லவும் தேவையில்லை” என்றாள் உணர்ச்சியற்ற குரலில்.

அவளின் பேச்சில் பவ்யாவை கூர்ந்து சில நொடிகள் பார்த்த வினய் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

பவ்யாவும் மேற்கொண்டு பேசாமல் அமைதியாகி விடச் சில நிமிடங்கள் மீண்டும் மௌனம் சூழ்ந்து கொண்டது.

நான்கு வருடத்திற்குப் பிறகு கணவனும், மனைவியும் சந்தித்துக் கொள்கிறார்கள். இத்தனை வருட பிரிவிற்குப் பிறகு பார்த்தும் இருவரும் ஆர்வத்துடன் பேசிக் கொள்ளவில்லை. வெளிநாட்டில் இருந்து கணவன் வந்திருக்கிறான். அவனை ஆசையுடனும், சந்தோஷத்துடனும் வரவேற்கும் நிலையிலா அவர்களுக்குள் பழக்கம் இருந்தது.

கவினின் காணொளியை அனுப்புவதைத் தவிர வேறு எந்தத் தொலை தொடர்பும் கூட இல்லாமல் இருந்துவிட்டு இப்போது திடீரெனச் சகஜமாகப் பேச முடியாமல் தடுமாறிப் போனார்கள்.

அந்த வரவேற்பு கூடச் சம்பிரதாயமாகவே தோன்ற வைத்தது.

வாய் மெளனமாக இருந்தாலும் வினய்யின் கண்கள் வீட்டை அளவெடுப்பது போல அலைப்பாய்ந்தது.

வினய்யின் அறையும் இன்னொரு அறையும் வெளியே தாழ் போடப்பட்டிருக்க ஒரு அறை மட்டும் பாதித் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் வினய்யின் கண்கள் ஒளிர்ந்தது.

ஏதோவொரு பரபரப்புத் தொற்றிக் கொண்டது போலக் காணப்பட்டான்.

அந்த அறைக்குள் நுழைய சொல்லி மனமும், கால்களும் பரபரத்தன.

ஆனாலும் மற்ற இரு அறைகளும் பூட்டியிருப்பதை வைத்துத் திறந்திருக்கும் அறை பவ்யா தற்போது உபயோகித்துக் கொண்டிருக்கும் அறை என்று புரிந்ததால் அங்கே செல்ல முடியாமல் தடுமாறினான்.

அவன் எதிரே நின்றிருந்த பவ்யாவின் கண்கள் அவனின் அசைவையும், வினய்யின் கண்கள் சென்ற திசையையும், தன்னுள் ஏற்பட்ட பரபரப்பை அவன் அடக்க முயற்சிப்பதும் புரிந்தது.

அவனின் அந்த நிலை ஏன் என்று உணர்ந்தவள் போல “நீங்க அந்த அறைக்குத் தாராளமா போகலாம்” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.

திறந்திருந்த கதவையே பார்த்துக் கொண்டிருந்த வினய், பவ்யாவிடம் அறைக்குள் செல்ல சம்மதம் கேட்கலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே தன்னைப் புரிந்தது போலப் பவ்யாவே சம்மதம் சொல்ல அவளை நன்றியுடன் ஒரு பார்வை பார்த்தவன் சட்டென எழுந்து அறைக்குள் வேக நடைப் போட்டு விரைந்தான்.

அவன் போவதையே பார்த்துக் கொண்டு அதே இடத்தில் அசையாமல் நின்ற பவ்யா சுவற்றில் தலையைச் சாய்ந்து கண்களை இறுக மூடிக்கொண்டாள். பிள்ளை பாசம் அவனை இழுத்து வந்து விட்டதோ என்ற எண்ணம் தோன்றியது.

அறைக்குள் நுழைந்தவன் அங்கே தலையணை சூழ படுத்திருந்த தன் சிறுவயது அச்சாய் குட்டி உருவம் கொண்டு லேசாகத் திறந்திருந்த வாயுடன் ஒரு காலை தலையணை மீது போட்டுக் கொண்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கவினை பார்த்து காணக் கிடைக்காத பொக்கிஷத்தை பார்ப்பது போலப் பார்க்க ஆரம்பித்தான் வினய்.

ஆம் பொக்கிஷம் தான்.

சிலருக்கு எளிதிலும், சிலருக்குத் தவமாய்த் தவமிருந்தும், சிலருக்கு எத்தனை ஏங்கி புலம்பி தவமிருந்தாலும் கிடைக்காமலும், சிலருக்கு கிடைத்தும் தங்காமல் கையை விட்டு போகும், சிலருக்கு கிடைத்தும் அதன் அருமை புரியாமலும் எனக் குழந்தை என்னும் வரம் பெரிய பொக்கிஷம் தான் அல்லவோ…?

இத்தனை நாளும் அந்தப் பொக்கிஷத்தின் அருமையை உணராமல் தான்தோன்றித் தனமாக இருந்த வினய்க்கு இப்போது தான் குழந்தையின் உன்னதம் புரிந்தது போலத் தன் உதிரத்தால் உதித்த அற்புத பொக்கிஷமான கவினை விடாமல் பார்த்தான் வினய்.

தான் காணொளியில் பல முறை பார்த்து ரசித்த குட்டி உருவம் இப்போது தன் கண் முன்னால். என் கர்வத்தை அழிக்க வந்த தன் உயிர் மொட்டு.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கவின் அசைய ஆரம்பிக்க, வினய்யின் உடலில் அவனையும் அறியாமல் மெல்லிய நடுக்கம் ஓடி மறைந்தது.

கவின் கண் விழித்ததும் தன்னைப் பார்த்து எப்படி நடந்து கொள்வானோ? என்று புரியாத தவிப்பு அவனை ஆட்கொண்டது.

தான் இத்தனை நாளும் பார்க்காமல் தவிர்த்து வந்த தன் மகவு. இப்போது தன்னை யாரோ? என ஒதுக்கி விடுவானோ? என்று நினைத்து உள்ளம் பதறித்தான் போனது.

உள்ளத்தில் ஏற்பட்ட பதட்டத்தில் தன்னையறியாமல் கட்டிலில் தளர்ந்து அமர்ந்து கவினையே பார்த்துக் கொண்டிருந்தான்.

கவின் தூக்கம் கலைந்து படுக்கையில் புரண்டுக் கொண்டிருந்தவன் தன் காலடியில் அமர்ந்திருந்த உருவத்தைப் பார்த்து சட்டென எழுந்து அமர்ந்தான்.

தூக்கம் இன்னும் மீதம் இருந்த தன் சின்னக் கண்களைத் தன் குட்டி கரங்களால் தேய்த்து விட்டு விட்டுத் தன்னால் முடிந்த வரை விழிகளை அகலமாக விரித்து வினய்யை பார்த்தவன் அடுத்த நொடி தன் இரு கைகளையும் விரித்தபடி “அப்பா…” என்று அழைத்துக் கொண்டே வினய்யின் அணைப்பில் தஞ்சமடைந்திருந்தான் கவின்.

சில உணர்வுகளின் உச்சத்தில் இருக்கும் போது உணர்ச்சிகளை வர்ணிக்க, வார்த்தைகள் தேடினாலும் கிடைக்காமல் போய் விடுகிறது.

அப்படி ஒரு மன நிலையில் இருந்தான் வினய். தன் முரட்டு கரங்களுக்குள் அடங்கி இருந்த தன் உதிர முத்தை அணைத்து உச்சி முகர்ந்தான்.

முதல் முறையாகத் தன் மகனின் ‘அப்பா’ என்ற அழைப்பில் வினய்யின் கண்களும் கூடக் கண்ணீர் சிந்தின.

குட்டி கண்ணனின் ஸ்பரிசம் தன் மேல் படப்பட அவனின் ஒவ்வொரு அணுவும் புத்துணர்வு கொண்டது போலச் சிலிர்த்து எழுந்து நின்றது.

விடியலில் கண் முழித்ததில் இருந்து இரவு தூங்கும் வரை வினய்யின் பங்கும் இருப்பது போலப் பவ்யா வளர்த்தாலோ என்னவோ தன் தந்தையைக் கண்ணால் பார்த்த நொடியில் அவனுடன் ஒட்டிக் கொண்டான்.

சிறிது நேரம் தந்தையின் அணைப்பில் அடங்கி இருந்தவன் பின்பு விலகி நின்று வினய்யின் முகம் முழுவதும் எச்சில் தெறிக்க முத்தமிட்டான்.

மகனின் பிஞ்சு இதழால் கிடைத்த முத்த யுத்தத்தில் அந்தப் பெரிய பிடிவாத குழந்தையின் கர்வம், தான் என்ற அகம்பாவம், ஆணவம் எல்லாம் கரைந்து அந்தக் குட்டி காலடியின் கீழ் சரணாகதி அடைந்தது.

முத்தமிட்டு முடித்த கவின் தன் நெற்றியில் கைவைத்துச் சல்யூட் அடித்து “குட்மானி பா…” என்றான்.

கவினின் ஒவ்வொரு செய்கையிலும் திக்குமுக்காடி போனான் வினய்.

இப்போது மகன் காலை வணக்கம் சொல்லவும் தன்னால் எழுந்து வணக்கம் வைத்தன வினய்யின் கைகள்.

அந்த நொடியில் இருந்து தந்தை மகனுக்கான உலகம் உருவாக ஆரம்பித்து விட்டது.

தந்தையிடம் வணக்கத்தைப் பெற்றுக் கொண்ட கவின், “ம்மா வா…! ப்பா… குட்மானி சொல்லு…!” என்று தன் அம்மாவையும் தங்கள் சந்தோஷத்தில் கலந்து கொள்ள அழைத்தான்.

கவின் அம்மா என்று அழைக்கவும் தான் சுற்றுப்புறத்தை உணர்ந்த வினய் சுயநிலைக்கு வந்தவன் போலத் தலையை உலுக்கி விட்டுக் கொண்டு தன் பின்னால் திரும்பி பார்த்தான்.

பவ்யா இன்னும் ஹாலில் இருந்தாள். அதை உணர்ந்தவன் தன் கலங்கிய கண்களைக் கவின் கவனிக்காத வண்ணம் துடைத்துக் கொண்டு அவனைக் கையில் தூங்கிக் கொண்டு வெளியில் வந்தான்.

அங்கே வினய் அறைக்குள் நுழையும் போது எப்படிச் சுவரில் சாய்ந்து நின்றிருந்தாளோ அப்படியே தான் இன்னும் நின்றுகொண்டு இருந்தாள்.

வீடு அமைதியாக இருந்ததால் உள்ளே நிகழ்ந்த சிறுசிறு சத்தங்கள் அவளுக்குக் கேட்க தான் செய்தன. ஆனாலும் அசையாமல் அப்படியே நின்றிருந்தாள்.

அவளை அப்படிப் பார்த்த வினய் அந்த அறை வாசலிலேயே அப்படியே நின்றுவிட்டான்.

கண்மூடி சுவரில் சாய்ந்து கண்ணில் அலைபுறுதல் இருக்க அவள் நின்றிருந்த கோலம் கண்டு மனைவியின் முகத்தை விடாமல் பார்த்தப் படி வினய் நிற்க… தன் அம்மா தன்னைக் கவனிக்கவில்லை என்றவுடன் கவின் “ம்மா…! ப்பா பாடு…!” என்று அன்னைக்கே தந்தையை அறிமுகப்படுத்தினான்.

மகனின் அழைப்பில் பட்டெனக் கண்களைத் திறந்த பவ்யா வாட்டசாட்டமான வினய்யின் கைகளில் பாந்தமாக அமர்ந்திருந்த கவினை கண்டவள் கண்கள் ஒரு நிறைவை பிரதிபலித்தது.