15 – சிந்தையில் பதிந்த சித்திரமே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 15
கலைந்த தலையும், நலுங்கிய உடையும், சோர்வை சுமந்த முகமுமாகக் கட்டிலில் இறுக்கமாக அமர்ந்திருந்தாள் நயனிகா.
அவளின் அருகில் பட்டுப்புடவை ஒன்று வீற்றிருந்தது.
அதன் பக்கம் திரும்பி கூடப் பார்க்காமல் முகத்தில் கோபமும் வெறித்த பார்வையுமாக அமர்ந்திருந்தாள்.
ஒரு வாரத்தில் தங்கள் வீட்டில் இவ்வளவு மாற்றம் வரும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.
அதிலும் தந்தையின் கோபம் அவளை மொத்தமாக முடக்கி போட்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
தந்தைக்குத் தன் காதல் விஷயம் தெரிந்தால் முதலில் மறுத்தாலும் பின் சம்மதிப்பார் என்றே அவளின் எண்ணமாக இருந்தது.
கதிர்நிலவன் மீது தன் பெற்றவர்களுக்கு நன்மதிப்பு இருந்ததால் தான் மிகவும் தன் காதல் விஷயத்தில் போராட வேண்டியது கூட இருக்காது என்றே நினைத்தாள் நயனிகா.
ஆனால் தான் சொல்வதற்கு முன்பே தன் தந்தைக்குத் தெரியும் என்ற அதிர்விலிருந்து அவள் மீள்வதற்கு முன்பே, கதிர்நிலவனின் உடல் குறையைச் சொல்லி மட்டம் தட்டி தன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்பது அவள் முற்றிலும் எதிர்பாராத ஒன்று.
அன்றைய தந்தையின் கோபத்தை இப்போதும் நினைத்துப் பார்த்தவளுக்கு உடல் நடுங்கிற்று.
“பூனை கண்ணை மூடிக்கிட்டால் உலகமே இருண்டு போயிருச்சுன்னு நினைக்குமாம். அது போல் தான் உன் மகளுக்கும் எண்ணம் போல.
அவள் காதல் பண்றது யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்காள். அன்னைக்கு ஒரு நாள் பார்க்கிங்ல வச்சு உன் மகள் அந்தக் கதிர்கிட்ட காதலை சொல்லிட்டு இருக்காள். சுத்தி யார் இருக்காங்க என்ற நினைப்பு கூட அவளுக்கு இல்லை. அப்ப எனக்கு இருந்த ஆத்திரத்துக்கு உன் பொண்ணை அப்படியே அடிச்சு துவைக்கணும் போல் தான் இருந்தது.
வளர்ந்த பொண்ணைக் கை நீட்ட வேண்டாம்னு நான் நினைச்சது எவ்வளவு பெரிய தப்புன்னு இன்னைக்கு உன் பொண்ணு புரிய வச்சுட்டாள். எப்ப அவன் வீட்டுக்குள் போய்க் கதவை மூடிக்கிட்டு பேசுற அளவுக்கு முன்னேறிட்டாளோ இனியும் நான் கையைக் கட்டி வேடிக்கை பார்ப்பதில் அர்த்தம் இல்லை…” என்று ஞானசேகரன் தொடர்ந்து கோபத்தில் கத்திக் கொண்டிருந்தார்.
நயனிகாவோ தந்தைக்குத் தன் காதல் விஷயம் எப்படித் தெரியும் என்ற கேள்விக்கு விடை தெரிந்தவளாக நின்று கொண்டிருந்தாள்.
நடுவில் ஒரு நாள் கதிர்நிலவனிடம் பேசாமல் வாடிய மன வேதனையைத் தாள முடியாமல் அவன் கார் நிறுத்தும் போது, “என்னை உங்களுக்குப் பிடிக்கவே இல்லையா கதிர்? ஏன் இப்படி விலகி விலகிப் போறீங்க? என்னால் உங்கள் விலகலை தாங்க முடியலை கதிர். ப்ளீஸ், என் மனதையும் புரிஞ்சுக்கோங்க…” என்று தொடர்ந்து இன்னும் ஏதோதோ சொல்லி தன் காதல் வலியை புரிய வைக்க முயன்றதை தான் தந்தை கேட்டுவிட்டார் என்று புரிந்தது.
“எப்ப அவளுக்கான துணையை அவளே தேடும் அளவுக்கு முன்னேறிட்டாளோ இனியும் என்னால் அமைதியாக இருக்க முடியாது அபிராமி. இவளுக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன். நான் சொல்ற பையனுக்குக் கழுத்தை நீட்ட உன் பொண்ணைத் தயாரா இருக்கச் சொல்லு…” என்று ஆத்திரமாகச் சொன்ன தந்தையின் வார்த்தைகளில் முகத்தில் சுடுதண்ணீரை ஊற்றியது போல் துடித்துப் போய் அவரைப் பார்த்தாள்.
சில நொடிகளில் தன் வாழ்க்கையில் இப்படி ஒரு திருப்பம் வரும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.
“அப்பா, ப்ளீஸ்… நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க…” என்று நயனிகா கெஞ்சலாகக் கேட்க,
“என்ன சொல்ல போற? இல்ல என்ன சொல்ல போறன்னு கேட்குறேன்? அந்தக் கதிர் தான் உன் வாழ்க்கைன்னு சொல்லுவ… அவ்வளவு தானே? ஆனா கையில்லாதவனை உன்னோட வாழ்க்கை துணையா என்னால் கொடுக்க முடியாது. அதனால் பேசாம வாயை மூடிக்கிட்டு போ…” என்றார்.
“அப்பா இன்னொரு முறை அவரைக் கை இல்லாதவர்னு சொல்லாதீங்கபா…” என்று அவள் அழுகையுடன் சொல்ல,
“கை இல்லாதவனைக் கை இல்லாதவன்னு தான் சொல்ல முடியும்…” என்றவரிடம் தெரிந்தது அலட்சியம் மட்டுமே.
‘தன் தந்தையா இப்படிப் பேசுவது?’ என்று விக்கித்துப் போனாள் நயனிகா.
“அப்பா, அவர் நமக்கு எவ்வளவு பெரிய உதவி எல்லாம் பண்ணிருக்கார். அவரைப் போய் இப்படி…” என்று அவள் திணறி கேட்க,
“அவன் செய்த உதவிக்கு நன்றி சொல்லியாச்சு. அவ்வளவுதான் செய்ய முடியும். அதுக்காக என் பொண்ணையேவா கொடுக்க முடியும்? என்னால் அது நிச்சயம் முடியாது…” என்று உறுதியாக மறுத்தார்.
நயனிகாவிற்கு என்ன பேசுவது? என்ன சொல்லி தந்தையைச் சமாதானம் செய்வது என்றே தெரியவில்லை.
தந்தையிடம் பேச தன் மனதை அவள் இன்னும் தயார்படுத்தி இருக்கவில்லை என்பதால், புரியாமல் குழம்பி போய் நின்றிருந்தாள்.
“நான் இப்ப உயிரோட இருக்கக் காரணமே அவர் தான்பா. அதையாவது கொஞ்சம் யோசிங்க…” இதைச் சொன்னால் தந்தையின் கோபம் குறையுமோ என்ற எண்ணத்தில் சொல்லி வைத்தாள்.
“ஓஹோ! அப்போ உன் உயிரை காப்பாத்தவும் அவன் மேல் உனக்குக் காதல் வந்துருச்சா? அதுக்குப் பேரு நன்றி கடன். அப்போ அதைத் தான் காதல்னு நினைச்சுட்டு இருக்கியா?” என்று அவர் கேட்க, இல்லவே இல்லை என்று அவள் மனது அடித்துச் சொன்னது.
அவன் தன்னைக் காப்பாற்றிய பொழுது தனக்கு அவனின் மீது இருந்தது நன்றி உணர்வு மட்டுமே. அப்போது எல்லாம் அவன் மீது தனக்கு எந்த எண்ணமும் தோன்றவில்லை என்று எண்ணியவளுக்குத் தனக்குக் காதல் தோன்றிய தருணமும், கதிரின் கண்களில் கண்ட கண்ணீரும் அவளின் கண்ணின் முன் இன்னும் நின்றது.
தன் காதல் நன்றிவுணர்வால் வந்ததில்லை என்று மறுத்து சொன்னாலும் தந்தை அதற்கும் ஏதாவது குதர்க்கமாகத்தான் பதில் சொல்வார் என்பது அவளுக்கு நன்றாகவே புரிந்து போனது.
தந்தை கதிர்நிலவனை மறுக்கக் காரணம் அவனின் கை குறைபாடு மட்டுமே என்று புரிய அவளுக்கு வெகுநேரம் தேவைப்படவில்லை.
அதன் பிறகு நயனிகா பேசிய எதற்கும் செவி சாய்க்க ஞானசேகரன் தயாராக இருக்கவில்லை.
அபிராமியோ தந்தை மகளுக்கு இடையே அல்லாடியவராக விழித்துக் கொண்டிருந்தார்.
தயா வாயை திறக்க, “நீ சின்னப்பையன். வாயை மூடிட்டு இரு” என்று அவனை அடக்கியிருந்தார்.
பேசி பேசி ஓய்ந்து போன நயனிகாவிற்குத் தான் சொல்வதைப் பொறுமையாகக் கேட்கவோ, நிதானமாகத் தன் மனதை புரிந்து கொள்ளும் நிலையிலோ தந்தை இல்லை என்று புரிந்து போனது.
‘கை இல்லாதவனுக்கு என் பொண்ணைக் கொடுக்க மாட்டேன்’ என்ற உறுதியை மட்டும் தான் ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்படுத்தினார் ஞானசேகரன்.
இது தான் ஞானசேகரனின் குணம். ஒரு விஷயத்தில் முடிவு எடுத்துப் பிடிவாதமாக இருந்தால் அவர் முடிவை யாராலும் மாற்றவே முடியாது.
அந்தக் குணத்திற்குப் பயந்தே அஷ்வத் தொல்லை செய்த போது வீட்டில் சொல்லாமல் மறைத்தாள்.
ஆனால் அவள் எண்ணத்திற்கு மாறாகத் தந்தை தன் படிப்பு தான் முக்கியம் என்று சொன்னது அவளுக்கு ஆறுதலாக இருந்தது.
கதிர்நிலவன் விஷயத்திலும் அது போல் தான் தந்தை ஏதாவது சொல்வார் என்று அவள் கொண்ட கற்பனையினாலேயே அப்பா, அம்மாவுடன் உங்கள் வீட்டிற்கு வருகிறேன் என்று தைரியமாகச் சொல்லிவிட்டு வந்திருந்தாள்.
ஆனால் இப்பொழுதோ அனைத்தும் முற்றிலும் வேறாகத் தான் நடந்தது.
அடுத்து வந்த நாட்களில் நயனிகா வீட்டிற்குள் முடக்கப்பட்டாள்.
ஞானசேகரன் உக்கிரமாகத் தான் வீட்டிற்குள் வலம் வந்தார். யாரும் அவரிடம் இயல்பாகப் பேசவே முடியவில்லை.
சொன்னதைச் செய்பவராக அடுத்து வந்த நாட்களில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு வந்து நின்றார் ஞானசேகரன்.
“நாளைக்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து பொண்ணு பார்க்க வர்றாங்க அபிராமி. உன் பொண்ணைப் பிடிவாதம் பிடிக்காம தயாரா இருக்கச் சொல்லு…” என்று அபிராமிடம் சொல்ல, அறைக்குள் இருந்த நயனிகா மனம் உடைந்து விதிர்த்துப் போய் வெளியே ஓடி வந்தாள்.
“அப்பா, நான் படிக்கணும் பா. இந்த நேரத்தில் கல்யாணம் வேண்டாம்…” என்றவளை உக்கிரமாகப் பார்த்தார்.
“படிக்கணும்னு நினைச்சவளுக்குக் காதலும் வந்திருக்கக் கூடாது. படிக்கும் போதே காதல் மட்டும் பண்ணலாம். கல்யாணம் பண்ணிக்கக் கூடாதோ?” என்று கேட்டவருக்குப் பதில் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போனாள்.
“கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூடப் படிப்பு எவ்வளவு முக்கியம்னு எனக்குத் தெரியும்னு சொன்னீங்களேப்பா?” என்று மெல்ல கேட்டுப் பார்த்தாள்.
“இப்பவும் அதே தான் சொல்றேன். உனக்குத்தான் உன் படிப்பின் மீது அக்கறை இல்லாம போயிருச்சு. அதுக்காக நானும் அப்படியே இருக்க முடியுமா? மாப்பிள்ளை வீட்டில் பேசிட்டேன். கல்யாணத்துக்குப் பிறகும் படிக்கச் சம்மதம் சொல்லிட்டாங்க. அதனால் அதுக்காக நீ ஒன்னும் ஃபீல் பண்ண வேண்டாம்…” என்றார் வெடுக்கென்று.
அவள் என்ன பேசினாலும் அவரிடம் அதற்குப் பதில் இருந்தது.
“கதிர் தவிர என்னால் யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாதுபா…” என்றவள் கண்ணிலிருந்து கண்ணீர் திரண்டு வழிய ஆரம்பித்தது.
“அபிராமி… உன் பொண்ணை வாயை மூடிக்கிட்டு உள்ளே போகச் சொல். இன்னும் ஒரு வார்த்தை அவனைப் பத்தி இவள் என் முன்னாடி பேசினால் அடி வெளுத்துடுவேன்…” என்று அவர் கத்த, அரண்டு போனாள் நயனிகா.
இப்போது இன்னும் சற்று நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வருவதாக இருக்க, நயனிகா இறுகி போனவளாக அமர்ந்திருந்தாள்.
“நயனி இன்னும் என்ன பண்ற? போய்க் குளிச்சுட்டு வந்து சேலையைக் கட்டு…” என்று சொல்லியபடி வந்த அன்னையை வெறித்தது அவளின் பார்வை.
“என்னடி அப்படிப் பார்க்கிற? எழுந்திரு. போ… போய்க் குளி…” என்று அபிராமி அமைதியாகச் சொல்ல,
“அன்னைக்குக் கதவை உடைச்சு உங்களைக் காப்பாத்தியவரை பத்தி நீங்களும் கீழாகத்தான் நினைக்கிறீங்களாமா?” என்று அமைதியாகக் கேட்டாள்.
அவளின் பார்வையைச் சந்திக்காத அபிராமி, “அதெல்லாம் இப்ப பேச நேரமில்லை. மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க வந்திருவாங்க. கிளம்பு…” என்றவர் அறையை விட்டு வெளியே செல்லப் போனார்.
“அப்போ உங்களுக்கும் கொஞ்சம் கூட நன்றி இல்லாம போயிருச்சு அப்படித்தானே மா?” என்ற வார்த்தையில் பட்டென்று மகளைத் திரும்பி பார்த்தார் அபிராமி.
அவரின் கண்கள் கலங்கியிருந்தது. அன்னையைச் சலனமே இல்லாமல் பார்த்தாள் நயனிகா.
“நீங்களும் அவருக்குக் கை இல்லாததைப் பெருசா நினைக்கிறீங்களாமா?” என்று அடுத்தக் கேள்வி அவளிடமிருந்து பிறந்தது.
இப்போது அவரின் கண்கள் உடைபெடுக்கவே ஆரம்பித்து விட்டது.
“அந்தப் பிள்ளை என்னையும் அம்மாவா நினைச்சு அம்மா… அம்மான்னு தான் கூப்பிட்டு பேசும். அப்படிப்பட்ட பிள்ளைக்கு ஒரு கை இல்லைன்னு நான் எப்படி அழுதேன்னு உனக்குத் தெரியாது நயனி…” என்று சொன்னவரை நம்பிக்கை இல்லாமல் பார்த்தாள் நயனிகா.
“அன்னைக்கு என்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போன போது தான் அந்தத் தம்பி கையைப் பார்த்துத் தெரிஞ்சிக்கிட்டேன். அன்னைக்கு நைட் ஹாஸ்பிட்டலில் இருக்கும் போது மனம் தாங்காமல் உங்க அப்பாகிட்ட சொல்லி அழுதேன். அப்போத்தான் அவருக்கே அந்த விஷயம் தெரிந்தது.
ஆனா ஏன் சொன்னோம்னு இப்போ உன் அப்பா என்னை ஒவ்வொரு நாளும் நினைக்க வச்சுட்டார். அந்தத் தம்பிக்குக் கை இல்லன்னு தெரிஞ்சப்ப அனுதாபப்பட்ட மனுஷன் இப்படி மாறிப் போவார்னு நான் நினைக்கவே இல்லை…” என்றார் அழுகையுடன்.
“அப்போ நான் கதிரை கல்யாணம் பண்ணிக்கிறதில் உங்களுக்கு விருப்பம் தானேமா?” என்று சிறிதாகத் துளிர்விட்ட நம்பிக்கையுடன் கேட்டாள்.
மறுப்பாகத் தலையை அசைத்தார் அபிராமி.
“அம்மா…” சிறு நம்பிக்கையும் நசுங்கி விட, வேதனையுடன் அழைத்தாள்.
“உன் கல்யாண விஷயத்தில் நானோ, நீயோ நினைச்சாலும் இனி எந்த மாற்றமும் வராது. உன் அப்பா முடிவு எடுத்தது எடுத்தது தான். அதனால் என் வாயை புடுங்காமல் கிளம்பும் வழியைப் பார்…” என்று சொல்லி விட்டு நிற்காமல் வெளியே சென்றார் அபிராமி.
அன்னையின் ஆதரவு கிடைக்கும் என்று நினைத்தவளுக்கு அதுவும் கிடைக்காமல் போக உடைந்து போய் அமர்ந்திருந்தாள் நயனிகா.
அப்போது மெல்ல அறைக்குள் வந்து கதவை அடைத்தான் தயாகர்.
அவனை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் விரக்தியுடன் அமர்ந்திருந்தாள் நயனிகா.
“அக்கா…” என்று மெல்ல அழைத்தான்.
“கதிர் சார்கிட்ட பேசி பார்த்தியா? பேசாம அவரை வந்து உன்னைக் கூட்டிட்டுப் போகச் சொல்லுக்கா. அப்பா அப்போ என்ன செய்றார்னு பார்ப்போம்…” என்று ரகசியமாகச் சொல்லிய தம்பியை வேதனையுடன் பார்த்தாள்.
“ஏன்கா?” தமைக்கையின் பார்வை புரியாமல் கேட்டான்.
“அப்பா என்னை வீட்டை விட்டு வெளியவே போக விடலைன்னு உனக்கே தெரியுமேடா…” என்றாள்.
“அது எனக்குத் தெரியாதாக்கா? போன்ல பேச வேண்டியது தானே?” என்று கேட்டான்.
“போனை எடுத்தா கேட்க மாட்டேனா?” என்று விரக்தியுடன் கேட்டாள்.
“என்னக்கா சொல்ற?”
“ம்ம்… அப்பா சொன்னதைத் தான்டா அவரும் சொன்னார். அவருக்குக் கை இல்லாததால் என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டாராம். இதை என்கிட்ட அவர் எப்பவோ சொல்லிட்டார். அன்னைக்கு அதைப் பத்தி பேசிட்டு வரும் போது தான் அப்பா பார்த்துட்டார். அதுக்குப் பிறகு இங்கே நடந்ததை அவரிடம் என்னால் சொல்ல முடியலை.
என் போன் நம்பரை பார்த்தாலே எடுக்க மாட்டேங்கிறார். அவர் ஆதரவு இருந்தாலாவது அப்பாவை இன்னும் நான் எதிர்த்திருப்பேன். ஆனா… அவரும் என்னை விலக்கி நிறுத்தத்தான் நினைக்கிறார். அப்படி இருக்கும் போது நான் என்ன செய்வது?” என்றவள் உடைந்து போய் அழ ஆரம்பித்தாள்.
தன் காதல் இப்படி ஒரு தலை காதலாகிவிட்டதே என்று அழுதாளா? அல்லது மனம் நிறைய ஒருவனைச் சுமந்து கொண்டு இப்பொழுது இன்னொருவன் முன்னால் நிற்க வேண்டிய நிலை வந்து விட்டதே என்று அழுதாளா? இல்லை, தன் காதல் தன்னோடு மட்டுமே புதைந்து போய் விடுமோ என்று நினைத்து அழுதாளா? ஏதோ ஒன்று அவளால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
வாய் விட்டு கதறி அழும் அக்காவை பார்த்த தயாவின் கண்களிலும் கண்ணீர் சரம் கோர்த்துக் கொண்டு நின்றது.
தன் கண்களை மெல்ல துடைத்துக் கொண்டவன், அறையை விட்டு எழுந்து சென்றான்.
கடைக்குப் போவது போல் வெளியே சென்றவன், தந்தைக்குத் தெரியாமல் கதிர்நிலவன் வீட்டுக் கதவை தட்டினான்.
அவன் வந்து கதவை திறக்க, வேகமாக உள்ளே சென்று கதவை அடைத்தவன், “ஏன் சார்… ஏன் என் அக்காவை இப்படி அழ வைக்கிறீங்க? அவள் உங்களை லவ் செய்ததைத் தவிர வேற என்ன தவறு செய்தாள்?” என்று வீட்டிற்குள் நுழைந்ததும் நுழையாதுமாகக் கோபமாகப் பொரிந்த தயாவை புரியாமல் பார்த்தான் கதிர்நிலவன்.
“உங்களை அவள் லவ் பண்ற விஷயம் எங்க அப்பாவுக்குத் தெரிஞ்சி போயிருச்சு. எங்க வீட்டில் ஒரு வாரமா சண்டையும், அழுகையும் தான்…” என்றவனை இப்போது கதிர்நிலவன் எந்தத் திடுக்கிடலும் இல்லாமல் சலனமே இல்லாமல் பார்த்தான்.
“அப்பா உடனே அவளுக்குக் கல்யாண ஏற்பாடு பண்ணிட்டார். இன்னைக்குப் பொண்ணு பார்க்க வர்றாங்க. அங்கே என்னோட அக்கா உயிரே போற மாதிரி அழுதுட்டு இருக்காள்…” என்று சொல்லும் போதே அவனின் கண்கள் கலங்கி விட, லேசாக விசும்பிய படி கண்களைச் சிறு பையன் போல் துடைத்துக் கொண்டான் தயா.
கதிர்நிலவனிடம் எந்த எதிர்வினையும் இல்லை. ஏதோ பிடித்து வைத்த பொம்மை போல் ஆடாமல் அசையாமல் நின்றிருந்தான்.
“உங்களுக்குக் கை இல்லைன்னு என் அக்காவே பெருசா எடுத்துக்கலைன்னும் போது அவள் காதலை ஏற்றுக் கொள்வதில் உங்களுக்கு என்ன சார் கஷ்டம்? உங்களை உயிரா நினைக்கும் என் அக்காவுக்கு இவ்வளவு தான் உங்களிடம் மதிப்பா? உங்களை ரொம்ப நல்லவர்ன்னு நினைச்சேன் சார். ஆனா என் அக்காவை அழ வச்சு இப்படி வேடிக்கை பார்க்கிறீங்களே. இது உங்களுக்கே நியாயமா இருக்கா?” என்று தான் சரியாகத்தான் அவனிடம் கேள்விகள் கேட்கிறோமா என்ற புரியாத பாவனை அவனிடம் இருந்தாலும், தன் அக்காவின் அழுகையை நிறுத்த வேண்டும் என்றே தனக்குத் தோன்றியதை கேட்டான்.
தன் கேள்விக்கு ஏதாவது பதில் சொல்வானா என்பது போல் கதிர்நிலவனைப் பார்க்க, ‘பேசிவிட்டாயா? அவ்வளவு தானே?’ என்பது போல் பார்த்துக் கொண்டு நின்றான் அவன்.
இப்படி மரம் போல் நிற்பவனிடம் மேலும் என்ன கேட்பது என்று அவனுக்கே தெரியவில்லை.
“உன் அக்காவை உங்க அப்பா பார்க்கிற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டுச் சந்தோஷமாக இருக்கச் சொல்…” என்று மெல்ல உதிர்ந்தது கதிர்நிலவன் வாயிலிருந்து வார்த்தை என்னும் முத்துக்கள்.
அப்படிச் சொன்னவனை நம்பவே முடியாமல் பார்த்த தயா, அடுத்த நிமிடம் அங்கே நிற்காமல் விருட்டென்று வெளியே சென்றுவிட்டான்.
“உன் காதலை பத்தி கொஞ்சமும் புரிஞ்சுக்காத மனுஷனுக்காக இன்னும் ஏன்கா இப்படி அழுதுட்டு இருக்க?” மீண்டும் தமைக்கையிடம் சென்று கோபமாகத் தயா கேட்க, தம்பியை மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.
“நீ தான் இப்படி அவரையே நினைச்சுட்டு அழுதுட்டு இருக்க. ஆனா அவர்…” என்றவன் சொல்ல முடியாமல் தயக்கத்துடன் தடுமாறினான்.
“டேய் தயா, அவரைப் பார்த்தியா?” என்று ஆர்வமாகக் கேட்டாள்.
அவளின் ஆர்வம் அவனை வலிக்க வைத்தது.
‘ஆமாம்’ என்று மெல்ல தலையை மட்டும் அசைத்தான்.
“என்ன சொன்னார்?” என்று பரபரப்பாகக் கேட்டாள்.
அவன் சொல்லாமல் அமைதியாக இருக்க, “சொல்லுடா, என்ன சொன்னார்?” என்று தம்பியின் சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.
“அப்பா பார்க்கிற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிட்டு நீ சந்தோஷமா இருக்கவாம்…” என்று அவள் முகம் பார்க்காமல் வருத்தத்துடன் அவன் சொல்ல, தன் தம்பியின் சட்டையைப் பிடித்திருந்தவளின் கை மெல்ல நழுவ, அவளின் கண்கள் உயிர் போகும் வலியை பிரதிபலித்தன.
“அப்படியா சொன்னார்?” என்று உயிரே இல்லாதவள் போல் கேட்டாள்.
தயா வேதனையுடன் தலையை அசைக்க, தன் கண்களை வேகமாகத் துடைத்துக் கொண்டாள் நயனிகா.
“சரிதான். அவர் சொன்னால் செய்துட வேண்டியது தான். நீ வெளியே போ தயா. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்ற நேரம் ஆச்சு. நான் கிளம்புறேன்…” என்ற தமக்கையை வியப்பாகப் பார்த்தான்.
‘என்ன சொல்கிறாள் இவள்? இவ்வளவு நேரம் அவள் அழுத அழுகை என்ன? இப்போது இப்படிச் சொல்கிறாளே?’ என்று நினைத்தவண்ணம் அவளைப் பார்த்தான்.
“போ தயா…” என்று அவள் பிடிவாதமாகச் சொல்ல, எழுந்து வெளியே வந்தான்.
ஆனால் இன்னும் அவளின் பேச்சை அவனால் நம்ப முடியவில்லை. ‘அது எப்படி அவளால் சட்டென்று தன்னை மாற்றிக் கொள்ள முடியும்?’ என்று நினைத்தவனுக்கு மனதில் ஏதோ ஒரு உறுத்தல் உண்டானது.
‘அக்கா வேற எதுவும் யோசிக்கிறாளோ?’ என்று குழம்பி தவித்துப் போனான்.
அவனின் உறுத்தல் சரிதான் என்று அடுத்தச் சில மணிநேரத்தில் நிரூபணம் ஆனது.
மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும் வந்து பொண்ணை அழைத்து வர சொல்ல, அபிராமி மகளின் அறை கதவை தட்ட, நயனிகாவோ கதவை திறக்கவே இல்லை.
“என்னாச்சு? பொண்ணு ஏன் கதவை பூட்டிட்டு வெளியே வர மாட்டேங்குது?” என்று வந்தவர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.
அறைக்குள்ளோ மணிக்கட்டில் வெட்டிய காயத்திலிருந்து ரத்தம் வடிந்து தரையில் சிறு குளமாகத் தேங்கியிருக்க, நயனவிழிகள் மேல் நோக்கி சொருகி கொள்ள, உயிர்நாடியின் துடிப்பை சிறிது சிறிதாக இழந்து கொண்டிருந்தாள் நயனிகா.