15 – உனதன்பில் உயிர்த்தேன்

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 15

“ஏய், இந்தா புள்ள…” என்று பதறி அழைத்தான் வைரவேல்.

தேன்மலரிடம் சிறு அசைவும் இல்லை.

“ஏய், என்னாச்சு புள்ள? கண்ணு முழி…” என்று அவளின் கன்னத்தில் லேசாகத் தட்டினான்.

அதற்கும் அவள் அசையவில்லை என்றதும், ஓடி சென்று தண்ணீர் எடுத்து வந்து முகத்தில் தெளித்தான்.

ஆனால் அதற்கும் எந்தப் பிரதிபலிப்பும் அவளிடம் இருக்கவில்லை.

தண்ணீரை தெளித்துக் கொண்டே கன்னத்தில் தொடர்ந்து தட்டினான். தேன்மலர் அசையவே இல்லை.

நெஞ்சம் திடுக்கிட்டுப் போனான் வைரவேல்.

மயக்கமாக இருந்தால் இந்த நேரம் எழுந்திருக்க வேண்டும் அல்லவா? ஏன் எழவில்லை? என்று கேள்வி எழ அவனின் பதட்டம் அதிகரித்தது.

“ஏய், புள்ள… பயமுறுத்தாத. கண்ணைத் திற புள்ள…” என்று அவளின் இரண்டு தோள்களையும் பிடித்துத் தூக்கி உலுக்கினான்.

அவனின் உலுக்கலில் உடல் அசைந்ததே தவிர, அவளிடம் சிறிதும் மாற்றம் இல்லை என்றதும் பயந்து போனான்.

என்ன செய்வது என்றே ஒரு நிமிடம் புரியாமல் முழித்தான்.

பின் அந்த அறைக்குள்ளேயே சுற்றி முற்றிப் பார்த்தான்.

அங்கிருந்த கொடியில் அவளின் சேலை தொங்கிக் கொண்டிருந்தது.

ஓடிச் சென்று அதை எடுத்து வந்து, கிழிசலின் வழியாகத் தெரிந்த அவளின் உடலை மூடி மறைத்தவன், குனிந்து அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டு, வீட்டிற்கு வெளியே தூக்கிச் சென்றான்.

வயலில் இறங்கி தன் வீட்டை நோக்கி ஓடினான். வாசலிலேயே நின்றிருந்த அப்பத்தா, அவன் அவளை அப்படித் தூக்கிக் கொண்டு ஓடி வருவதைப் பார்த்துப் பதறிப் போனார்.

“என்னய்யா, அந்தப் புள்ளக்கு என்னாச்சு?” என்று கேட்க,

வீட்டிற்குள் சென்று அவளைப் படுக்க வைத்தவன், “அப்பத்தா, இந்தப் புள்ள கண் முழிக்கவே மாட்டேங்குது. என்னன்னு பாரும்…” என்றான்.

“மயக்கமா இருக்கப் போவுதுயா. தண்ணி தெளிச்சு பார்த்தீரா?”

“தண்ணி தெளிச்சும் கண்ணு முழிக்க மாட்டேங்குது அப்பத்தா…”

“என்னய்யா சொல்ற?” என்று கேட்டவர், அவளின் கையைப் பிடித்து நாடியை பரிசோதித்தார்.

“எமக்கு என்னமோ பயமா இருக்கு அப்பத்தா. நா தாலி கட்டிய எவளுக்குமே உசுரு தங்காதோ?” என்று கலங்கிப் போய்க் கேட்டான்.

“எய்யா, செத்த சும்மா கிட…” என்று அதட்டிய அப்பத்தா, தேன்மலரின் நாடியை பரிசோதித்து விட்டு, “துடிப்பு நல்லாதேன் இருக்குயா. மயக்கமாத்தேன் இருக்கும். தண்ணி கொண்டு வா…” என்றார்.

தண்ணீரை எடுத்து வந்து கொடுத்தான். அதை வாங்கிக் கையில் ஊற்றி அவளின் இரண்டு கண்களையும் துடைத்து விட்டார்.

அதே போல் இரண்டு… மூன்று முறை செய்ய அவளின் இமைகள் அசைந்தன.

அவளை ஆவலாகப் பார்த்தான் வைரவேல்.

“எம்மா, கண்ணு முழிச்சுக்கோ தாயி…” என்று அப்பத்தா அவள் கன்னத்தில் சற்று பலமாகவே தட்டினார்.

கன்னத்தில் லேசான வலியை உணர்ந்து மெல்ல இமைகளைப் பிரித்துப் பார்த்தாள்.

கண்களில் விழுந்த அப்பத்தா உருவத்தைப் பார்த்து நெற்றியை சுருக்கினாள்.

“மேலுக்கு என்ன பண்ணுது புள்ள?” என்று அப்பத்தாவின் பின்னால் இருந்து கேட்டவனின் குரல் கேட்டதும் அவன் தன் அருகில் தான் இருக்கிறான் என்று ஆசுவாசம் உண்டானதோ? அவனுக்குப் பதில் கூடச் சொல்லாமல் கண்களை மூடி மீண்டும் ஆழ்ந்த நிலைக்குச் சென்றாள் தேன்மலர்.

“ஏய், ஏய் புள்ள…” என்று வைரவேல் அலற,

“புள்ள பயந்துருக்கும் போல ராசா. அவளுக்கு ஒன்னுமில்ல. விடு… செத்த நேரம் போனா சரியா போயிடும்…” என்றார் அப்பத்தா.

“அவளுக்கு ஒன்னுமில்ல தானே அப்பத்தா? நா பயந்துக்குவேன்னு சும்மா சொல்றீரா?” என்று கேட்டான்.

“நா ஏன் சும்மா சொல்ல போறேன்? நல்லா இருக்கா…” என்றவரின் பார்வை அப்போது தான் தேன்மலரின் மீது முழுமையாகப் படிந்தது.

அவளின் முகத்தில் ஆங்காங்கே காயம் இருந்தது. அவளைப் போர்த்தி இருந்த அவளின் புடவை விலகி இருக்க, உடைகளின் கிளிசலை கண்டார்.

“இது என்ன ராசா இப்படி?” என்று பதறி போய்க் கேட்டார்.

“அந்த ராமரு நாயி பண்ணினா வேலை அப்பத்தா…” என்றவன் பல்லை கடித்தான்.

“கட்டைல போறவன். நல்லா இருப்பானா அவன்…” என்று அப்பத்தா ராமரை தொடர்ந்து சபிக்க ஆரம்பித்தார்.

“சும்மாவா விட்ட அவனை?”

“கை, காலை எல்லாம் உடைச்சுப் போட்டேன் அப்பத்தா. தெரு நாயி… யாரு மேல கைய வச்சுப்போட்டான்…” என்றான் இன்னும் ஆத்திரம் அடங்காமல்.

“அவனை எல்லாம் வீதியில இழுத்துப் போட்டு இன்னும் நாலு அடி போட்டுருக்கணும்…” என்றார் அப்பத்தா.

“எய்யா, தப்பா எதுவும் நடந்து போடலையே…” தயங்கி பேரனிடம் கேட்டார்.

“இல்ல அப்பத்தா, அந்த நாயை அதுக்குள்ளார அடிச்சு நொறுக்கிட்டேன்…” என்றான் முகம் இறுக.

“அவன அதோட சும்மா விட்டுருக்கக் கூடாதுயா. அவன் பொஞ்சாதி பக்கத்துல கூடப் போக முடியாம செய்து போட்டுருக்கணும்…” என்றார்.

“அதுக்குள்ளார இந்தப் புள்ள கூப்பிட்டுருச்சு அப்பத்தா. இவளை மொதல பார்ப்போம்னு அந்த நாய விட்டுப் போட்டேன். இனி அவன் எங்கண்ணுல பட்டா சும்மா விட மாட்டேன் அப்பத்தா…” என்றான் கோபமாக.

சிறிது நேரம் பேரனும், அப்பத்தாவும் அங்கலாய்த்து கொண்டனர்.

“இந்தப் புள்ள என்ன ராசா இப்படி இருக்கு? கன்னமெல்லாம் வத்திப் போய், ஒடம்பு எல்லாம் இம்புட்டு இளச்சி போய்க் கிடக்கு?” என்று அப்பத்தா கேட்டதும் தான் அவளை அளவிட்டான் வைரவேல்.

பார்த்தவன் கண்கள் திடுக்கிட்டு போயின.

ஒரு மாதத்திற்கு முன் இருந்ததை விட ஆள் பாதியாக இளைத்து, கன்னமெல்லாம் ஒட்டிப் போய்க் கண்ணைச் சுற்றி கடுமை படர்ந்திருக்க, முகத்தில் பொலிவு இல்லாமல் இருந்தாள் தேன்மலர்.

“ஏன் இப்படி இருக்கான்னு தெரியலையே அப்பத்தா…” என்று கவலையுடன் சொன்ன பேரனை ஒரு பார்வை பார்த்தாரே தவிர, ஒன்றும் கேட்கவில்லை.

“சரி ராசா, பொழுது விடிஞ்சதும் என்னன்னு விசாரிப்போம். நீர் போய்ப் படும். நா இங்கன பாய்ல படுத்துக்கிறேன். அந்தப் புள்ள முழிச்சா பார்த்துக்கிறேன்..” என்றார்.

“இல்ல அப்பத்தா, உமக்கு முழிச்சா ஆவாது. இப்பயே ரொம்ப நேரம் ஆகிப் போச்சு. நா இங்கன கட்டுலுக்குக் கீழ படுத்துக்கிறேன். நீர் போய்த் தூங்கும்…” என்றான்.

அப்பத்தா அதற்கு மறுப்பு ஏதும் சொல்லவில்லை.

தேன்மலருக்கு நன்றாக மூடி விட்டு வெளியே சென்று விட்டார்.

அவர் சென்றதும் அவனின் பார்வை கட்டிலின் மீதிருந்தவளை ஆராய்ந்தது.

ஒரு மாதத்தில் நோஞ்சானாக மாறி கிடந்தவளை பார்த்து வருத்த பெருமூச்சு விட்டவன் கட்டிலுக்குக் கீழே பாய் விரித்துப் படுத்தான்.

படுத்தாலும் உறங்கவில்லை அவன்.

அவள் நடுவில் எதுவும் முழிப்பாளோ என்று நினைத்தவன், எழுந்து எழுந்து பார்த்துக் கொண்டே இருந்தான்.

விடிந்தது.

வெளியே படுத்திருந்த அப்பத்தா எழுந்து வந்து அவளை ஒரு முறை பார்த்து விட்டு காலை வேலைகளை ஆரம்பித்தார்.

வைரவேல் எழுந்து பாயை எடுத்து சுருட்டி வைத்துவிட்டு, அவளைப் பார்த்துவிட்டு வீட்டின் பின்பக்கம் போனான்.

காலை ஒன்பது மணி ஆகியது. அப்போதும் தேன்மலர் எழுந்து கொள்ளவில்லை.

“என்னய்யா இந்தப் புள்ள இம்புட்டு நேரம் தூங்குது?” என்று கேட்டார் அப்பத்தா.

“ராவு நேரஞ்செண்டு தூங்கனதுல இருக்குமோ?” என்றான்.

“எதுக்கும் எழுப்பிப் பாருய்யா. புள்ள வெறும் வவுறா கிடக்கு…” என்று அப்பத்தா சொன்னதும், அறைக்குள் சென்றான்.

சிறிது கூட அசைவு இல்லாமல் இரவில் எப்படிப் படுத்திருந்தாளோ அப்படியே தான் இன்னும் படுத்திருந்தாள்.

“இந்தா புள்ள…” என்று கட்டில் அருகில் சென்று நின்று அழைத்தான்.

அவள் முழிக்கவில்லை என்றதும், ஓங்கி குரல் கொடுத்தான். மீண்டும் மீண்டும் அழைத்து எழுப்பிப் பார்த்தான்.

இரவு போல் இப்போதும் அவள் முழிக்கவில்லை.

அவன் குரல் ஓங்கி கேட்கவுமே உள்ளே வந்தார் அப்பத்தா.

“இப்பவும் இந்தப் புள்ள கண்ணு முழிக்க மாட்டேங்குது அப்பத்தா…” என்றவன் குரலில் லேசான பதட்டம்.

அப்பத்தா இரவில் போலயே கண்களைத் தண்ணீர் கொண்டு துடைத்து விட்டார். ஆனால் இரவு போல் அவள் கண்விழிக்கவில்லை.

“அப்பத்தா…” என்று பதறி அழைத்தான் வைரவேல்.

அவருக்கும் பதட்டமாகத் தான் இருந்தது.

“பதறாதய்யா. பக்கத்தூருல புதுசா ஒரு நர்சம்மா குடி வந்திருக்குன்னு சொன்னாக. நீரு போய் அந்த அம்மாவை கூட்டிட்டு வா…” என்றார்.

“இதோ போறேன் அப்பத்தா…” விரைந்து வெளியே ஓடினான்.

அரைமணி நேரத்தில் செவிலியுடன் வந்தான்.

அவர் வருவதற்கு முன் தேன்மலரின் கிழிந்த உடையை மாற்றி விட்டிருந்தார் அப்பத்தா.

தேன்மலரை பரிசோதித்துப் பார்த்த செவிலி, “மயக்கமாக இருக்காங்க. ஆமா இவங்க சாப்பிட்டு எத்தனை நாள் ஆகுது?” என்று கேட்டார்.

“எம்புட்டு நாளாகுதா?” என்று அதிர்ந்து கேட்டான் வைரவேல்.

“உங்க வொய்ப் தானே இவங்க? உங்களுக்கே தெரியாதா?” என்று அவனை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டு அவர் கேட்க, என்ன பதில் சொல்வது என்று அறியாமல் தடுமாறிப் போனான்.

அவனை மேலும், கீழும் பார்த்தார் செவிலி.

பேரனின் தர்மசங்கடத்தை உணர்ந்த அப்பத்தா, “அது அவுகளுக்குள்ள சின்னப் பிணக்கு தாயி. அவ அம்மா வூட்டுல இருந்தா, நேத்துதேன் இங்கன வந்தா. வந்ததுல இருந்து இப்படித்தேன் இருக்கா…” என்று சொல்லி சமாளித்தார்.

“சண்டை போட்டதுல தான் இவங்க சாப்பிடவே இல்லை போல. ரொம்ப வீக்கா இருக்காங்க. உடனே குளுக்கோஸ் ஏத்தணும். ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்க…” என்றார் செவிலி.

“எங்கிட்ட குட்டி வேனு தேன் இருக்கு. அதுல கூட்டிட்டு போவலாமா?” என்று கேட்டான்.

“அதுல வேண்டாம். நான் ஆம்புலன்ஸுக்கு போன் போட்டு சொல்றேன். அவங்க வந்து கூட்டிட்டு போவாங்க…” என்ற செவிலி உடனே ஆம்புலன்ஸிற்குத் தகவல் தெரிவித்தார்.

சிறிது நேரம் கடந்த நிலையில் ஆம்புலன்ஸ் வந்து சேர, தேன்மலருடன் வைரவேலும் கிளம்பினான்.

“நானும் வரட்டுமாயா?” அப்பத்தா கேட்க,

“இல்ல அப்பத்தா, உமக்கு ரொம்ப நேரம் நின்னா ஆவது. நா பாத்துக்கிடுதேன்…” என்று அவன் மட்டும் உடன் சென்றான்.

மருத்துவமனை சென்றதும் தேன்மலரை பரிசோதித்து முடித்த மருத்துவர் வைரவேலுவை திட்டி தீர்த்திருந்தார்.

அவளின் உடலில் ஆங்காங்கே இருந்த காயங்களைப் பார்த்து விட்டு, பட்டினி போட்டு மனைவியை உடல் ரீதியாகச் சித்திரவதை செய்த கணவனாக நினைத்து அவனை மருத்துவர் திட்ட, அத்தனையும் இறுகிய முகத்துடன் அமைதியாக வாங்கிக் கொண்டான்.

ராமரின் மீது கொலைவெறியே வந்தது. அதோடு தன்னைத் தானேயும் நொந்து கொண்டான்.

அவளுக்கு என்ன நடக்கிறது என்று கூட அறிந்து கொள்ளாமல் தான் விலகி போன முட்டாள்தனத்தை நினைத்து தன்னைத்தானே திட்டிக் கொண்டான்.

தேன்மலருக்குக் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

வைரவேல் கூடவே இருந்து பார்த்துக் கொண்டான்.

நடுவில் சில முறை கண்முழித்தாலும், தான் மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்தாலும், வைரவேல் அங்கே அருகிலேயே இருக்கிறானா இல்லையா என்று மட்டும் பார்த்துக் கொண்டாள்.

அவன் இப்போது எப்படி இருக்கிறது என்று விசாரித்தாலும் அமைதியாக மட்டுமே இருந்தாளே தவிரப் பதில் சொல்லவில்லை.

அடிக்கடி பார்க்கும் அவளின் தீர்க்கமான பார்வை, அவனின் குற்றவுணர்ச்சியைக் கூட்டியது.

இரண்டாவது நாள் தேன்மலர் சற்று தெளிவாக இருக்க, ஆகாரம் கொடுக்க மருத்துவர் பரிந்துரைத்திருந்தார்.

கேன்டினில் வாங்கி வந்து கொடுத்தான்.

அதை வாங்கி அவள் அமைதியாக உண்ண, “ஏன் புள்ள சரியா சாப்புடாம கிடந்த?” என்று கேட்டான்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த அவளின் கை அப்படியே நின்றதே தவிர, வாயைத் திறந்து ஒன்றும் சொல்லவில்லை.

அவள் பதில் சொல்வாள் என்று காத்திருந்தவனுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

“சரிதேன், நா ஒன்னும் கேட்கலை. தின்னு…” என்றதும் மீண்டும் உண்ண ஆரம்பித்தாள்.

அன்று மாலையே அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்றனர்.

ஒரு ஆட்டோ பிடித்து அழைத்துச் சென்றான்.

நேராகத் தன் வீட்டின் அருகே நிறுத்தச் சொன்னான்.

ஆட்டோவை விட்டு இறங்கி அவன் பணம் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே, தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் தேன்மலர்.

வாசலில் நின்றிருந்த அப்பத்தா, “எம்மா, தாயி எங்கன போற? வூட்டுக்குள்ளார வா…” என்று அழைத்தார்.

நடந்து கொண்டிருந்தவள் நின்று கேள்வியுடன் அவரைப் பார்த்தாள்.

“என்ன அப்படிப் பார்க்கிற? இனி நீ வாழப்போற வூடு இதுதேன். இங்கனயே இரு…” என்றார்.

அவர் அப்படிச் சொன்னதும் அவளின் பார்வை சலனமே இல்லாமல் வைரவேலுவின் புறம் திரும்பியது.

அவனோ என்ன சொல்வது என்றறியாத குழப்பத்துடன் நின்றிருந்தான்.

அவனின் குழப்பத்தைக் கண்டுகொண்டவள் அதற்கு மேல் ஒரு நொடி கூட நிற்கவே இல்லை. விறுவிறுவென்று தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

“எய்யா, என்ன பார்த்துக்கிட்டு சிலை மாதிரி நிற்கிறீரு? அவளைக் கூப்பிடும். அவ தனியா இருந்து பட்ட பாடு எல்லாம் போதாதா? அவ உம்ம பொஞ்சாதி, அவள காவகாக்குற பொறுப்பு உமக்குத்தேன் இருக்கு. நீங்க ரெண்டு பேரும் புருசன், பொஞ்சாதியா சேர்ந்து வாழ எப்ப நினைக்கிறீகளோ அப்ப வாழுங்க. ஆனா இனி நீர் இருக்குற இடத்துல தேன் அவளும் இருக்கணும். போய்க் கூப்பிடும்…” என்றார் உறுதியாக.

ஆனால் அப்போதும் வைரவேலுவால் ஒரு உறுதியான முடிவிற்கு வரமுடியவில்லை.

உதவி செய்வது வேறு. உடன் இருப்பது முற்றிலும் வேறல்லவா?

அவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

“அப்ப நீரு கூப்பிட மாட்டீரு? சரிதேன், உம்ம பொஞ்சாதியை உமக்குப் பதிலா நா பாதுகாத்துட்டு போறேன்…” என்ற அப்பத்தா, தானும் தேன்மலரின் வீட்டை நோக்கி ஆரம்பித்தார்.

விக்கித்து அவரைப் பார்த்தான் வைரவேல். அவர் இந்த முடிவுக்கு வருவார் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

தேன்மலர் வீட்டுக்குச் சென்ற போது வாசலில் சோர்வுடன் படுத்திருந்த ராசு அவளைப் பார்த்ததும் தாவி வந்து அவள் மேல் தவ்வியது.

இரண்டு நாட்களாக அவளைக் காணாமல் தவித்துப் போயிருந்தது.

அன்றும் ராமர் ராசுவிற்கு மயக்க மருந்து தெளித்திருந்தான்.

விழிப்பு வந்து அவளைத் தேடிய போது கிடைக்கவில்லை என்றதும் தவித்துச் சோர்ந்து போயிருந்தது.

“எய்யா ராசு, எம்மைத் தேடினீராய்யா…” என்று ராசுவை வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டாள்.

அதுவும் அவளின் முகத்தில் முகம் தேய்த்தது.

“சரிய்யா, சரிய்யா… இனி உம்மை விட்டுப் போட்டு போவலை…” என்று ஆறுதல்படுத்தினாள்.

ராசுவை சமாதானப்படுத்திவிட்டு நிமிர்ந்தவள் எதிரே நின்றிருந்தான் வைரவேல்.

அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

“வூட்டுக்கு வா. இனி இங்கன நீ தனியா இருக்க வேணாம்…” என்றான்.

“நானா? நா எதுக்கு அங்க? இதுதேன் ஏ வூடு…” என்றாள் சலனமே இல்லாமல்.

“உமக்குத்தேன் இந்த வூட்டுல பாதுகாப்பு இல்லையே. இங்கன இருந்து என்ன செய்யப் போற?”

“ஓ, பாதுகாப்பு? அப்ப எம்மைப் பாதுகாக்க மட்டுந்தேன் உம்ம வூட்டு கூப்பிடுறீரு?” அமைதியாக வந்தது அவளின் கேள்வி.

‘மனைவியாகக் கூப்பிடவில்லை என்று சொல்கிறாளா?’ என்பது போல் அவளைப் பார்த்தான்.

“உமக்குப் பொஞ்சாதியா இருக்கக் கூப்பிடலைனா வரலைன்னு நானும் சொல்லலை. ஆனா நீர் நினைச்சிருந்தா இந்த வூட்டுல நா தனியா கிடந்த போதே உம்மால எமக்குப் பாதுகாப்புக் கொடுத்திருக்க முடியும். ஆனா அதைச் செய்ய விருப்பமில்லாம தானே விலகி விலகி போனீர்? இப்ப மட்டும் என்ன புதுசா எம்மேல அக்கறை?” என்று கேட்டாள்.

“இல்ல இல்ல பாதுகாப்புக் கொடுக்கக் கூடாதுன்னு விலகி போவலை. ஒ கழுத்துல தாலியை போட்டு உம்ம வாழ்க்கைய சீரழிச்சு போட்டுட்டேன்னோன்னு எமக்கு உறுத்தலா இருக்கு. நா தாலிய போடாம இருந்தாலும் நீ நிம்மதியா எவனாவது கல்யாணம் ஆகாதவனா பார்த்துக் கல்யாணம் பண்ணிருப்ப. ஆனா நா ஏற்கனவே வாழ்ந்தவன். அதான் எம் மனசே எம்மைக் குத்தி குடைஞ்சி எம்மைக் கொன்னுட்டு இருந்தது.

இதுல உம்ம முகத்த பார்க்க பார்க்க இன்னும் ஏ வலி அதிகமாகிடுச்சு. எம்மால அந்த வலியை தாங்க முடியலை. அதுதேன் விலகிப் போனேன். அதுவும் உம்ம கையில போன் கொடுத்ததால உமக்கு எதுவும்னா போன் போட்டு சொல்லுவன்னு நினைச்சேன். ஆனா நீ சொல்லவே இல்ல. ஏன்?” என்று கேட்டான்.

“எப்படிச் சொல்ல முடியும்? நீர் எம்மைப் பார்த்தாலே ஓடி ஒளிஞ்சீர். உம்மை நா பிடிக்க முயற்சி பண்ணுவேன்னு நினைச்சுத்தேன் நீர் ஒளியிறீர்னு நினைச்சேன். அப்படி நினைக்கிறவர்கிட்ட எப்படிச் சொல்ல முடியும்னு தேன் சொல்லலை…” என்றாள்.

“இல்ல… இல்ல புள்ள நா அப்படி நினைக்கலை…” என்று அவன் வேகமாகச் சொல்ல, அவளிடம் ஓர் ஆசுவாசம் உண்டானதோ? முக இறுக்கம் தளர்ந்து இயல்பாக அவனைப் பார்த்தாள்.

அவனையும் குறை சொல்ல முடியாது. அவன் மனதளவில் நிறைவே பாதிக்கப்பட்டிருந்தான்.

அது அவளுக்கும் புரிந்தது. ஆனால் அவன் விலகி போனது தான் அவளுக்கு வலியை உண்டாக்கியது. இப்போதும் தனக்காகத்தான், குற்றவுணர்வில் உன் முகம் பார்க்க கூசி தான் விலகி போனேன் என்று சொன்னவன் மீது அதன் பிறகும் அவளால் குற்றம் சுமத்த முடியவில்லை.

“இப்ப கூட ஒ வாழ்க்கைய பாழாக்கி போட்டுக்கிட்டு இருக்கேனோனு எமக்கு உறுத்தலா இருக்கு. அதுதேன் அப்பத்தா உம்மை வூட்டுக்கு கூப்பிட சொன்னப்ப அமைதியா இருந்தேன். அதுல அப்பத்தாவுக்கு எம் மேல சடவு. அப்பத்தாவே உம்ம பாதுகாக்க இங்கன வந்து தங்க போறேன்னு கிளம்பிடுச்சு. நாந்தேன் அதை இருக்கச் சொல்லிட்டு உம்மைக் கூப்பிடலாம்னு வந்தேன்…” என்றான்.

அப்பத்தா பற்றி அவன் சொன்னது அவளுக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

தன்னைப் பார்த்தால் கூடப் பேசாதவர், இப்போது தன் காவலுக்குக் கிளம்பினாரா? என்று ஆச்சரியப்பட்டுப் போனாள்.

“இப்ப கூட உம்மை எம் பொஞ்சாதியா எம்மனசு ஏத்துக்கிடுச்சான்னு கேட்டா… எங்கிட்ட பதில் இல்ல. இன்னும் எம்மனசு ரணப்பட்டுப் போயி தேன் கிடக்கு. அதில் இருந்து மீள்வேனான்னு கூடத் தெரியலை. ஒ வாழ்க்கைய வெறுமையா ஆக்கிப் போடுவேனோன்னு பயமா இருக்கு…” என்றவன் அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல் நிறுத்திவிட்டான்.

தேன்மலருக்கும் அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவளும் அமைதியாக இருந்தாள். பின் ஒன்று மட்டும் சொன்னாள்.

“நீர் எங்கூட வாழ்ந்தாலும், வாழலைனாலும் எங்கழுத்து இந்த எம் பொறப்புக்கு உம்ம தாலிய மட்டுந்தேன்யா சுமக்கும். இனி எமக்கு வேற வாழ்க்கை இல்ல…” என்றாள் உறுதியுடன்.

அவளின் உறுதி அவனை அசைத்துப் பார்த்தது. ஆனாலும் தான் சொல்ல வேண்டியதை சொல்ல நினைத்தான்.

“எப்ப புருசன் பொஞ்சாதியா வாழ நினைக்கிறோமோ அப்ப வாழுங்க. அதுவரை ஒரே இடத்தில் இருங்கன்னு அப்பத்தா சொல்லுது. ஆனா அது நடக்கும்னு எமக்கு நம்பிக்கை இல்ல. ஓ வாழ்க்கை வீணா போச்சுன்னா எம்மாலேயே எம்மை மன்னிக்க முடியாது…” என்றான் வலி நிறைந்த குரலில்.

அவளுக்கு அவனின் மனநிலை புரிந்ததால் அவன் பேச்சை அமைதியாக உள்வாங்கிக் கொண்டாள்.

“இன்னுங்கூட ஒ விஷயத்துல எம்மால நிலையா ஒரு முடிவு எடுக்க முடியலை. ஆனா அதே நேரம் உமக்கு ஏதாவது ஆச்சுனா நா செத்தா ஏ ஆத்துமா கூட அடங்காமத்தேன் அலையும். எதிர்கால வாழ்க்கையை விட இப்ப உம்ம பாதுகாப்பு தேன் மொதல முக்கியம்.

இப்போதைக்கு ஏ வூடு தேன் உமக்குப் பாதுகாப்பு. எம்மால அந்தப் பாதுகாப்பை கொடுக்க முடியும்னு மட்டும் நம்பிக்கை இருக்கு. உமக்கும் அந்த நம்பிக்கை இருந்தா எங்கூட வா. என்ன வர்றீயா?” என்று கேட்டான்.

இத்தனை நாட்களும் பயந்து பயந்து இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்தது கண்முன் வந்து போக, தேன்மலரின் தலை மெல்ல சம்மதமாக ஆடியது.