15 – ஈடில்லா எனதுயிரே

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 15

நந்திதாவுடன் பேசியதை நினைத்துக் கொண்டே ராகவர்தினி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது அவளின் கைபேசி ஒலி எழுப்ப, வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு யாரென்று எடுத்துப் பார்த்தாள்.

பிரபஞ்சன் தான் அழைத்துக் கொண்டிருந்தான்.

அத்தான் என்று நினைத்ததும், அவளின் மனதில் வருத்தமும், மகிழ்ச்சியும் சேர்ந்தே வந்து போனது.

“சொல்லுங்க அத்தான்…” என்று எடுத்துப் பேசினாள்.

“எங்கே இருக்க ராகா?” பிரபஞ்சன் கேட்க,

“காலேஜ் முடிந்து வீட்டுக்குப் போயிட்டு இருக்கேன் அத்தான்…”

“நான் உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும். வீட்டுக்கு வர முடியுமா?”

“என்ன விஷயம் அத்தான்? போனில் சொல்ல முடியாதா?”

இப்போது இருக்கும் மனநிலையில் அவளால் அவனை நேரில் சந்திக்க முடியும் என்றெல்லாம் தோன்றவே இல்லை.

“நேரில் தான் பேசணும் ராகா. ரொம்ப முக்கியமான விஷயம்…” என்றான்.

“நீங்க வீட்டிலா இருக்கீங்க அத்தான்?”

“இல்லை ராகா, இங்கே பீச் ரோட்டில் இருக்கேன். இனி தான் வீட்டுக்குப் போவேன். நான் வீட்டுக்குப் போறேன்… நீயும் அங்கே வந்திடு…” என்றான்.

“பீச் ரோட்டில் இருந்தால் நீங்க அங்கேயே இருங்க அத்தான். நானும் அங்கே வர்றேன். பீச்சில் உட்கார்ந்து பேசுவோம்…” என்றாள்.

“இவ்வளவு தூரம் நீ எதுக்கு? அத்தை தேட போறாங்க…”

“நான் அம்மாவுக்குப் போன் பண்ணி சொல்லிட்டு வர்றேன் அத்தான்…” என்றாள்.

“ஓகே, வா… வெயிட் பண்றேன்…” என்று அழைப்பை துண்டிக்கப் போனவன், “ராகா…” என்றழைத்தான்.

“சொல்லுங்க அத்தான்…”

“உன் குரல் ஏன் ஒரு மாதிரியா இருக்கு? அழுதியா என்ன?” என்று கேட்க, இங்கே அவளின் தொண்டைக்குழி விக்கிக் கொண்டது போலானது.

நந்திதா பற்றி அவனிடம் எப்படிச் சொல்வது என்ற யோசனையுடன் தான் அவனுடன் பேசிக் கொண்டிருந்தாள். அவன் வருந்துவானே என்று நினைக்கும் போதே அவளின் குரல் மாறித்தான் போயிருந்தது.

‘என் குரல் மாற்றத்தை கூட நீங்க கவனிப்பீங்களா அத்தான்? இல்லையே, அப்படிப் பார்த்தால் உங்களை நான் மிஸ் செய்து விட்டேனே என்று வலியுடன் நான் இருந்த நாட்களையும் நீங்க கண்டு கொண்டிருப்பீங்களே. நீங்க கண்டுபிடிக்கவே இல்லையே அத்தான்’ என்று வலியுடன் நினைத்துக் கொண்டாள்.

“என்ன ராகா, பதிலே காணோம்?” பிரபஞ்சன் அவளின் யோசனையைக் கலைக்க,

“ஹான்… ஒன்னுமில்லை அத்தான். ரோட்டோரம் நின்னு பேசுறேன். அதான் அப்படிக் கேட்டிருக்கும். நீங்க வைங்க அத்தான். நான் வர்றேன்…” என்று அழைப்பை துண்டித்து விட்டு, உடனே அன்னைக்கும் அழைத்துச் சொல்லிவிட்டு வண்டியைக் கடற்கரை சாலை பக்கம் திருப்பினாள்.

“வா ராகா… அப்படிப் போய்ப் பேசுவோம்…” அவள் கடற்கரைக்கு வந்ததும், ஆட்கள் அதிகம் இல்லாத பக்கமாக அழைத்துச் சென்றான் பிரபஞ்சன்.

கடற்கரை மணலில் கால்களைப் புதைத்து நடந்து செல்லும் போதே அருகில் வருபவனின் கையைப் பற்றிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது அவளுக்கு.

ஆனால் தன்னைத் தொட்டு பேசவே விரும்பாதவன் இதை மட்டும் விரும்புவானா என்ன? என்று தன் ஆசையைத் தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டாள்.

“இங்கே ஓகே…” என்று அவன் ஒரு இடத்தில் நின்று கொள்ள அவளும் நின்றாள்.

சற்றுத் தூரத்தில் கடல் இருக்க, அந்தப் பக்கம் ஜன நடமாட்டம் அதிகமாக இருந்தது.

இவர்கள் இருந்த பக்கம் ஆட்கள் அவ்வளவாக இருக்கவில்லை. சில பையன்கள் மட்டும் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

அவர்களை வேடிக்கை பார்த்தபடி ராகவர்தினி அமைதியாக இருந்தாள்.

ஆனால் அவள் மனத்திற்குள்ளோ பெரும் பூகம்பமே நிகழ்ந்து கொண்டிருந்தது.

நந்திதா கிளறி விட்டுச் சென்ற அவள் காதல் அவளைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தது.

“என்ன ராகா, முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னேன். ஆனா நீ என்ன விஷயம்னு கேட்காம அமைதியா இருக்க?” என்று கேட்டான் பிரபஞ்சன்.

“ஹான், ஒன்னுமில்லை அத்தான். சொல்லுங்க…” என்று அவனின் பக்கம் கவனத்தைத் திருப்பினாள்.

அதையும் அமைதியாகக் கேட்டவளை புதுமையாகத்தான் பார்த்தான்.

வழக்கமாக அவனிடம் ஏதாவது கிண்டலாகப் பேசி வாயடிப்பவளிடமிருந்து இவ்வளவு அமைதியை அவன் எதிர்பார்க்கவில்லை.

“என்ன ராகா, ஒரு மாதிரி இருக்க? உன் குரலும் சரியில்லை. உடம்பு எதுவும் சரியில்லையா?” என்று அக்கறையுடன் கேட்டான்.

“அப்படியெல்லாம் எதுவுமில்லை அத்தான். நான் நல்லாத்தான் இருக்கேன். நீங்க சொல்லுங்க…” என்றாள்.

“நீ நல்லா இருக்குற மாதிரியே தெரியலை. உன் முகம் எல்லாம் ரொம்பச் சோர்வா தெரியுது. நான் சொல்ல வந்ததைச் சீக்கிரம் சொல்லிடுறேன். உன்னை லவ் பண்றேன்னு சொன்னானே அந்தப் பையன் ஆதித்யன் அவன் அதுக்குப் பிறகு உன்கிட்ட வந்து பேசினானா?” என்று கேட்டான்.

“இல்லையே அத்தான். எதுக்குக் கேட்குறீங்க?” என்று யோசனையுடன் கேட்டாள்.

“அவன் வந்து பேசினால் இனி பேசாதே! அவன் சரியில்லை!” என்றான்.

“என்ன அத்தான் சொல்றீங்க? என்ன சரியில்லை…”

“அவன் உன்னை லவ் பண்ணியதாகச் சொன்னது பொய்! அவன் உன்கிட்டயும் லவ் சொல்லிட்டு, அந்தப் பக்கம் அவன் ஃபிரெண்டோட தங்கச்சியை லவ் பண்ணிட்டு இருக்கான். பிராடு பைய! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவங்க இரண்டு பேரையும் ஜோடியா பார்த்தேன். லவ்வர் மாதிரி ரொம்பக் குளோசா பேசிட்டு இருந்தாங்க…” என்று சொன்னான்.

ஆனால் ராகவர்தினியின் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை.

அவன் ஏதோ கதை சொல்வது போல் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“நான் சொன்னது புரிந்ததா இல்லையா ராகா? எவ்வளவு பெரிய விஷயம் சொல்லிருக்கேன். இப்படி அமைதியா இருக்க?” என்று கேட்டான்.

“நான் உங்ககிட்ட ஒரு உண்மையைச் சொல்லணும் அத்தான்…” என்றாள் தயக்கத்துடன்.

“என்ன உண்மை?” புருவம் சுருங்க சிந்தனையுடன் கேட்டான்.

“அந்த ஆதித்யன் அவன் பிரண்ட் தங்கையை லவ் பண்றது தான் நிஜம். அவன் என்னை லவ் பண்றதாகச் சொன்னது நான் சொன்ன பொய்!” என்றவளை அதிர்வுடன் பார்த்தான்.

“என்ன சொல்ற நீ? பொய்யா? என்கிட்ட ஏன் பொய் சொன்ன?” என்று கோபத்துடன் கேட்டான்.

தான் சொல்ல போவதை கேட்டு அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ என்று அவளுக்குத் தயக்கமாக இருந்தது.

அவன் திருமணம் முடிவான பிறகு தனது காதலை உணர்ந்தவள், அவனும் தன்னை ஒருவன் காதலிக்கிறான் என்று தெரிந்ததும் என்ன நினைக்கிறான் என்று தெரிந்து கொள்ள நினைத்தாள்.

அதனால் தன் வகுப்பில் இருக்கும் ஆதித்யன் அவனின் நண்பனின் தங்கையைக் காதலிக்கிறான் என்று தெரிந்தே அவன் பெயரை ஒப்புக்கு சொல்லி வைத்தாள்.

அவளுக்குத் தேவை பிரபஞ்சன் தன்னை ஒருவன் விரும்புகிறான் என்று தெரிந்தால் என்ன சொல்வான்? பொறாமைபடுவானா என்று தெரிந்து கொள்ள மட்டுமே!

ஒருவேளை ஆதித்யனை பற்றி விசாரித்தாலும் அவன் இன்னொருத்தியை காதலிக்கிறான் என்று தெரிந்தால் அவனை விட்டு விடு என்று சொல்லிவிடுவான்.

இந்தப் பொய்யினால் யாருக்கும் பாதகமில்லை என்றே சொல்லி வைத்தாள்.

ஆனால் பிரபஞ்சன் அவள் நினைத்த மாதிரி பொறாமையோ, கோபமோ கொள்ளவில்லை என்று தெரிந்ததும் தான் அவன் மனது தன் பக்கமே திரும்பவில்லை என்று புரிந்து போனது.

அவளுக்கு அது வேதனையையே தந்தது.

அதனால் தான் அவன் திருமணம் அவன் விரும்பிய படியே நடக்கட்டும் என்று தன் மனதை மறைத்துக் கொண்டாள் ராகவர்தினி.

இப்போது ‘நான் உன் மனம் பற்றித் தெரிந்து கொள்ளவே அப்படிப் பொய் சொன்னேன் என எப்படிச் சொல்ல?’ என்று அவளுக்குத் தயக்கமாக இருந்தது.

“ஏன் பொய் சொன்ன ராகா?” அவள் அமைதியைப் பார்த்து அழுத்தமாகக் கேட்டான் பிரபஞ்சன்.

“அது… அது வந்து அத்தான்…” என்றவளால் உண்மையைச் சொல்ல முடியவில்லை.

“சொல் ராகா…” என்று அதட்டினான்.

“என்னை ஒருத்தன் லவ் பண்றான்னு தெரிந்தால் நீங்க என்ன சொல்லுவீங்கன்னு தெரிந்து கொள்ள நினைத்தேன் அத்தான். அதான்…” என்றாள் தயங்கி கொண்டே.

“நான் என்ன சொல்வேன்னு தெரிந்து நீ என்ன செய்யப் போற?” என்று சந்தேகத்துடன் கேட்டான்.

“அது… அத்தான்… சும்மா விளையாட்டுக்கு…” என்று சொல்லி சமாளித்தாள்.

“எதில் எதில் விளையாடுவதுன்னு உனக்கு விவஸ்தை இல்லையா ராகா? நீ சொன்னன்னு நான் அவன் பின்னாடி சுத்தி அவன் எப்படிப்பட்ட ஆள்னு தெரியணும்னு அலைஞ்சிட்டு இருக்கேன்…” என்றான் கோபமாக.

“சாரி அத்தான், உங்களுக்குக் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகியிருந்ததால் நீங்க அந்த வேலை பார்ப்பீங்க. அதனால் ஆதித்யன் பின்னாடி இப்ப வாட்ச் பண்ண போக மாட்டீங்கன்னு நினைச்சேன்…” என்றாள்.

“நல்லா நினைச்ச போ. என்ன சொந்த வேலை இருந்தாலும் உன் மேல எனக்கு அக்கறை இல்லாமல் போகுமா? என் சொந்த வேலையை விட உன் பாதுகாப்பும், வாழ்க்கையும் எனக்கு முக்கியம் தானே!” என்று அக்கறையுடன் சொன்னவனைக் காதலுடன் பார்க்க வேண்டும் போல் இருந்தது.

ஆனால் தன் பார்வை மாற்றத்தை கண்டு கொள்வான் என்பதால் அவனைப் பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அப்படி என்ன இதில் விளையாட்டு ராகா? நீ இப்படிப் பொய் சொல்வன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை…”

“நான் ஒன்னு நினைச்சு இந்தப் பொய் சொல்லிட்டேன் அத்தான். அது தப்பு தான்…” என்றாள் வேதனையுடன்.

“அப்படி என்ன நினைச்ச?”

“ப்ளீஸ் அத்தான், அதை இப்ப கேட்காதீங்க. நான் நேரம் வரும் போது கண்டிப்பா சொல்றேன்…” என்று கெஞ்சுதலாகப் பார்த்தவளை அதற்கு மேல் திட்ட முடியாமல் முறைத்து மட்டும் பார்த்தான்.

“நல்லவேளை நீ சொன்னதை வச்சு நான் அந்த ஆதித்யன் அந்தப் பொண்ணு கூட இருக்கும் போது போய்ச் சண்டை எதுவும் போடலை. அப்படிப் போட்டிருந்தால் என் மானமே போயிருக்கும்…” என்றான் கடுப்பாக.

“சாரி அத்தான். இனி இப்படி விளையாட மாட்டேன்…” என்று மன்னிப்பு கேட்டாள்.

“சரி, அதை விடு! வந்ததிலிருந்து உன் முகமே சரியில்லை. வேற எதுவும் பிரச்சனையா? உண்மையை மட்டும் சொல்!” என்றான்.

“அது வந்து அத்தான்… நான்… நான்…” என்று தடுமாறினாள்.

“இன்னைக்கு என்ன நீ ரொம்பத் தடுமாறிட்டே இருக்க? நீ நீயாகவே இல்லை. எங்க ராகா இப்படி இருக்க மாட்டாளே!” என்று அவளை யோசனையுடன் பார்த்துக் கொண்டே கேட்டான்.

‘உண்மைதான் அத்தான். நான் நானாகவே இல்லை. இன்னைக்கு மட்டுமில்லை. நீங்க என் மனதில் இருக்கீங்கன்னு நான் எப்ப அறிந்து கொண்டேனோ அப்ப இருந்தே வெளியே ஒரு வேஷம் உள்ளே வேஷம்னு போட்டு மாறித்தான் போனேன்’ என்று தனக்குள் வேதனையுடன் பேசிக் கொண்டாள்.

அவளுக்கு இப்போது நந்திதா பற்றி எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று குழப்பமாக இருந்தது.

நந்திதாவுடன் பேசியதை சொன்னால் தன் மனதையும் அல்லவா சேர்ந்து வெளிப்படுத்த வேண்டும்.

தன் மனதை பற்றி இப்போது சொன்னால் அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ என்று பயமாக இருந்தது.

தன் மேல் கோபம் கொண்டு அவன் விலகி விட்டால் தான் என்ன செய்யப் போகிறோம்? என்று புரியாமல் அவளால் சட்டென்று பேசிவிட முடியவில்லை.

“ஆதித்யன் பற்றிப் பேசத்தான் வரச் சொன்னேன் ராகா. இப்ப வீட்டுக்குக் கிளம்பலாம், வா…” என்று நடக்க ஆரம்பித்தான்.

“அத்தான், ஒரு நிமிஷம்!” என்று அவனின் கையைப் பற்றிச் சட்டென்று நிறுத்தினாள் ராகவர்தினி.

“என்ன ராகா?” என்று புரியாமல் கேட்டவன் தன் கையை மெல்ல விலக்கிக் கொண்டான்.

‘நான் சாதாரணமாக உங்க கையைப் பிடிப்பது கூட உங்களுக்குப் பிடிக்கலையே அத்தான். இதில் நான் உங்களைக் காதலிக்கிறேன்னு சொன்னால் இனி என் முகத்தில் கூட முழிக்காமல் போயிடுவீங்களா?’ என்று உள்ளுக்குள் வேதனையுடன் கேட்டுக் கொண்டாள் ராகவர்தினி.

“ராகா… என்ன? ஏன் இப்படி நிற்கிற? எதுக்கு என்னைக் கூப்பிட்ட?” என்று கேட்டான்.

“உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் அத்தான்…” என்றாள்.

“என்ன விஷயம்?”

“நான் இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நந்திதா அக்காவை பார்த்தேன் அத்தான்…” என்று அவள் சொன்னதும் அவனின் முகம் மெல்ல மாறியது.

“இனி அந்தப் பொண்ணைச் சொந்தமா நினைச்சு அக்கான்னு நீ கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை ராகா…” என்றவனைப் புரியாமல் பார்த்தாள்.

“அத்தான்?”

“ஆமா ராகா. இனி அந்தக் கல்யாணம் சரிவராது…” என்றான்.

“ஆனா அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு நீங்க கேட்கவே இல்லையே அத்தான்?” என்று கேட்டாள்.

“அவங்க இனி என்ன நினைத்து என்ன ஆகப் போகுது ராகா?” என்றான் ஒட்டாமல்.

“அவங்க ஒருவேளை கல்யாணம் பண்ணிக்க நினைத்தால்?”

இதைக் கேட்க அவளுக்குப் பிடிக்கவில்லை தான். ஆனாலும் நந்திதாவை பற்றி அவனின் எண்ணத்தை அவள் முழுதாக அறிய வேண்டியது இருந்தது. அதனால் துணிந்து கேட்டு விட்டாள்.

“என் மேல் நம்பிக்கை இல்லாதவங்களைக் கல்யாணம் பண்ணிக்க நான் தயாராக இல்லை ராகா. அதுவும் நந்திதா பார்த்த அருவருப்பான பார்வையை என்னால் ஜென்மத்துக்கும் மறக்க முடியாது. அந்தப் பார்வையை மறந்துட்டு என்னால் அவங்க கூட ஒன்றியும் வாழ முடியாது.

ஏதாவது ஒரு சூழ்நிலையில் நான் அதைப் பற்றிக் கோபமா பேசிட்டால் வாழ்க்கை முழுவதும் நாங்க நிம்மதியா வாழ முடியாது. அதுக்கு இப்பவே பிரிவது தான் சரி. நின்னு போனது போனதாகவே இருக்கட்டும்…” என்றான்.

“அந்த அக்காவும் நீங்க கடைசியா சொன்னதைத் தான் சொன்னாங்க அத்தான்…” என்று சொல்லிவிட்டு அவன் முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தாள்.

அவன் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.

“நான் ஒன்னு கேட்டால் கோபப்படாமல் சொல்லுவீங்களா அத்தான்?”

“என்ன ராகா, கேள்!”

“நீங்க அவங்களைக் கல்யாணம் பண்ணிக்க அவ்வளவு ஆர்வமா இருந்தீங்க. அவங்க போட்ட மோதிரத்தை கூடக் கழட்ட உங்களுக்கு மனசு வரலை. அப்படி இருக்கும் போது எப்படி அத்தான் கல்யாணம் நடக்க வேண்டாம்னு சொல்றீங்க?” என்று கேட்டாள்.

அவனோ அவளுக்குப் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தான்.

“நம்மை விடச் சின்னப் பொண்ணுகிட்ட எப்படிச் சொல்வதுன்னு யோசிக்காம ஒரு பிரண்டா நினைச்சு என்கிட்ட சொல்லுங்க அத்தான்…”

அவன் எதற்காகத் தயங்குவான் என்று அறிந்தவளாகக் கேட்டாள்.

ஒரு பெருமூச்சை இழுத்து விட்டுவிட்டு சொல்ல ஆரம்பித்தான்.

“நம்ம கல்யாணம் பண்ணிக்கப் போற வாழ்க்கை துணை மேல எது இருக்கோ இல்லையோ பரஸ்பர நம்பிக்கை இருக்கணும் ராகா. எனக்குத் தெரியும். திருமணம் நடப்பதற்கு முன் என் மேல வந்த குற்றசாட்டு ரொம்பவே பெருசு தான். அதைக் கேட்டதும் யாருக்கா இருந்தாலும் சந்தேகம் வரும் தான். அப்படி இருந்தும் நந்திதா என் மேல் நம்பிக்கையா இருக்கணும்னு நான் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் தான்.

ஆனா அது மூளைக்கு நல்லா புரியுது. ஆனா மனசு? அதுக்குப் புரிய மாட்டிங்குதே! என்ன செய்ய? நந்திதா மேல் நான் கொள்ளும் என் கோபம் நியாயம் இல்லை தான். ஆனாலும் கல்யாணத்துக்கு முன்னாடி அவங்ககிட்ட எத்தனையோ முறை பேசியிருக்கேன். ஒரு முறை கூட அதில் கண்ணியம் குறைந்தது இல்லை.

நான் நினைத்திருந்தால் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு தானேன்னு எப்படி வேண்டுமானாலும் பேசியிருக்கலாம். ஆனா நான் பேசியது இல்லை. அப்படி இருந்தும் என் மேல ஒரு குற்றசாட்டு வந்ததும் சட்டுன்னு அருவருப்பா பார்த்துட்டாங்க.

அதே போலக் கல்யாணம் முடிந்த பிறகும் இப்படி ஒரு குற்றசாட்டை என் மேல் யாராவது வைத்தால் அப்பவும் என்னை அப்படிப் பார்க்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? இல்லை நீ அப்படி என்னைப் பார்ப்பன்னு நான் அவங்களைக் குறை சொல்லிட்டே இருந்தாலும் வாழ்க்கையே பாழாகி போகுமே? அதை எப்படிச் சரி பண்ண முடியும்?

இப்படி ஒரு சந்தேகத்தோடவே வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாது ராகா. எனக்கு அதில் விருப்பமும் இல்லை. ஏனோ ஆரம்பமே சரியில்லாமல் போயிருச்சு. அதைக் காலம் முழுவதும் நேராக்க போராடுவது கஷ்டம். அதான் இனி அந்தக் கல்யாணப் பேச்சு வேண்டாம்னு உறுதியா சொல்றேன். என் மோதிரத்தை எப்பவோ கழட்டவும் செய்துட்டேன். அவங்க சம்பந்தப்பட்ட எதுவும் இப்ப என்கிட்ட இல்லை…” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டதும் லேசாக வருத்தம் இருந்தாலும் அவன் திருமணம் நின்றதால் வருந்திக் கொண்டிருக்கவில்லை. யோசித்துத் தான் முடிவு எடுத்திருக்கிறான் என்று நிம்மதியும் பட்டுக்கொண்டாள்.

நந்திதா வீட்டிலிருந்து திரும்பத் திருமணத்திற்குக் கேட்டிருந்தாலும் அவன் மறுக்கத்தான் செய்திருப்பான் என்று அவளுக்குப் புரிந்து போனது.

நந்திதா தனக்காக விட்டுக் கொடுத்து விட்டுப் போனது அவளைக் குற்றவுணர்வில் தள்ளியிருந்தது.

தன்னுடைய காதல் தான் பிரபஞ்சனையும், நந்திதாவையும் பிரித்து விட்டதோ என்று உள்ளுக்குள் துடித்துப் போயிருந்தாள்.

ஆனால் இப்போது நந்திதா சொன்னது போல் தன் காதலால் அவர்களின் திருமணம் நிற்கவில்லை என்று அவளுக்குச் சந்தோஷமாகவே இருந்தது.

‘எனக்கு இது போதும் அத்தான். நந்திதா அப்படிச் சொல்லவும், என் காதலால் தான் உங்க கல்யாணம் நின்று போனதோ என்று துடித்துப் போயிருந்தேன் அத்தான். அப்படி மட்டும் ஆகியிருந்தால் காலம் முழுவதும் அந்தக் குற்றவுணர்வே என்னைக் கொன்றிருக்கும்.

ஆனா இப்ப, நீங்களே முடிவு செய்து தான் கல்யாணம் நின்றது என்பதால் என் குற்றவுணர்வில் இருந்து என்னைக் காப்பாற்றி இருக்கீங்க அத்தான். இப்போதைக்கு எனக்கு இது போதும்!

என் படிப்பு முடிந்தவுடன் நான் என் காதலை உங்ககிட்ட சொல்லுவேன் அத்தான். அதுவரை என் காதலை உங்ககிட்ட நான் சொல்ல போவது இல்லை. நான் மட்டும் இப்போதைக்கு உங்களைக் காதலிச்சுட்டே இருக்கப் போறேன்…’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் ராகவர்தினி.

“சரி இருட்டிட்டு வருது. வா, கிளம்புவோம்…” என்று அவளை அழைத்துக் கொண்டு வண்டி நிற்கும் இடத்திற்கு நடக்க ஆரம்பித்தான் பிரபஞ்சன்.

அப்போது அவனின் கைபேசி ஒலி எழுப்ப எடுத்துப் பார்த்தான்.

“மாமா தான் பேசுறார். உன்னைக் காணோம்னு தேடிட்டார் போல…” என்று நினைத்துக் கொண்டே அழைப்பை ஏற்றுப் பேச ஆரம்பித்தான்.

“இதோ கிளம்பிட்டோம் மாமா…” என்று எடுத்ததும் சொன்னான்.

ஆனால் அந்தப் பக்கம் மாதவன் சொன்ன தகவலை கேட்டுப் பதறிப் போனான்.

“என்ன மாமா சொல்றீங்க? எந்த ஹாஸ்பிட்டல்?” என்று கேட்டவனைப் பார்த்து ராகவர்தினியிடமும் பதட்டம் வந்து ஒட்டிக் கொண்டது.

“இதோ வந்துடுறேன் மாமா…” என்று பேசிவிட்டு அழைப்பை துண்டித்தவன்,

“ராகா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்காங்களாம். சீக்கிரம் வா…” என்று அவளையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான் பிரபஞ்சன்.