15 – இன்னுயிராய் ஜனித்தாய்

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 15

“நித்திலன் அண்ணா என்ன தப்புச் செய்தார் துர்கா? ஏன் அவரை வாசலில் நிக்க வச்சு எல்லாரும் பார்க்குற மாதிரி திட்டின?” என்று துர்காவிடம் நியாயம் கேட்டுக் கொண்டிருந்தாள் ஷாலினி.

நித்திலன் வீட்டிலிருந்து நேராக அவளின் வீட்டிற்கு வந்திருந்தாள்.

முரளி நித்திலனுடன் பேசிக் கொண்டே அவன் வீட்டு வாசலில் நின்றிருந்தான்.

அவளின் கேள்வியில் லேசாக முகத்தைச் சுளித்தாள் துர்கா.

“இங்கே என்ன நடந்தாலும் உடனே எல்லார்கிட்டயும் சொல்றதுக்கு அவருக்கு வெட்கமா இல்லை?” என்று கேட்டாள்.

அவளை அமைதியாகச் சில நொடிகள் பார்த்தாள் ஷாலினி.

“ஏன் அப்படிப் பார்க்கிற ஷாலினி?”

“ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சிக்கோ துர்கா. அந்த அண்ணா எல்லார்கிட்டயும் பேசுவது இல்லை. ஆபிஸ்ல முரளி கூட மட்டும் தான் ஃபிரண்ட். அவருக்கும் வலி, வேதனை, வருத்தம் எல்லாத்தையும் கொட்ட ஒரு ஆள் வேணும். அதை முரளியிடம் செய்கிறார்.

அதுவும் அவரா சொல்லலை. அவர் மூட்அவுட்டா இருந்ததைப் பார்த்து முரளி விசாரிக்க, அப்புறம் தான் நித்திலன் அண்ணா சொல்லிருக்கார். அதுசரி, ஏன் துர்கா இந்த விஷயம் எங்களுக்குத் தெரிந்தது உனக்குப் பிடிக்கலையா?” என்று கேட்டாள்.

“அப்படியில்லை ஷாலினி…” துர்கா தயங்கினாள்.

“இதைப் பத்தி நான் பேசுவது பிடிக்கலைனா சொல்லிடு. நான் பேச மாட்டேன்…” என்றாள்.

“ச்சே, ச்சே… நான் அப்படிச் சொல்லலை…” வேகமாக மறுத்தாள்.

“அந்த அண்ணா ரொம்ப நல்லவர் துர்கா. நீ நினைக்கிற மாதிரி குழந்தைக்கு ‘அப்பா’ என்ற வார்த்தையை அவர் சொல்லிக் கொடுத்திருக்க மாட்டார். அவசரப்பட்டு அவர் மேல கோபப்பட்டுட்டியோன்னு தோணுது…” என்று ஷாலினி சொல்ல, துர்கா ‘இந்தப் பேச்சு பிடிக்கவில்லை’ என்பது போல் பார்த்தாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“நான் பேசுவது பிடிக்கலைன்னு நினைக்கிறேன். சரி, நான் பேசலை. கிளம்புறேன்…” என்றாள்.

“ஏன் அதுக்குள்ளே கிளம்புற ஷாலினி? நைட் இங்கேயே சாப்பிட்டுப் போகலாம். இரு…” என்று துர்கா உபசரிக்க,

“உனக்குத்தான் நான் பேசுவது எதுவுமே பிடிக்கவில்லையே. நான் கிளம்புறேன் துர்கா. இங்கே இருந்தால் ஏதாவது பேசிட்டே இருப்பேன்…” ஷாலினி கோபம் போல் சடைத்துக் கொண்டாள்.

“நீ வேற என்ன வேணும்னாலும் பேசு ஷாலினி. உன் அண்ணா புராணம் மட்டும் வேண்டாம். இரு, இன்னைக்கு எங்க வீட்டில் சாப்பிட்டுத்தான் போகணும்…” என்ற துர்கா இரவு உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.

அவளைப் பார்த்து நமட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டாள் ஷாலினி.

‘நான் அடுத்து பேசப் போவதை கேட்டால் என்னை வீட்டை விட்டே துரத்திடுவ’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு சபரிநாதனிடம் பேச அவரின் புறம் திரும்பினாள்.

ஷாலினியின் குழந்தையும், வருணாவும் தனியாகப் பாயில் அமர்ந்து விளையாட்டுப் பொருட்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்து விட்டுச் சபரிநாதனிடம் பேச ஆரம்பித்தாள்.

“இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு அங்கிள்? கால் நல்லா நடக்க வருதா?” என்று விசாரித்தாள்.

“ரொம்ப நேரம் நின்னா வலிக்குது மா. மத்தப்படி இப்ப பரவாயில்லை” என்றார்.

“ஓகே அங்கிள், உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும் அங்கிள்…” என்று குரலை தாழ்த்தி சொன்னாள்.

அவளை யோசனையுடன் பார்த்தவர், “சொல்லுமா” என்றார்.

“துர்கா இப்படியே இருக்கப் போறாளா அங்கிள்?” என்றவளின் கேள்வி புரியாமல் பார்த்தார்.

துர்கா சமையலறையில் எதையோ போட்டு உருட்டிக் கொண்டிருந்ததால் ஷாலினியின் தாழ்ந்த குரல் அவளின் காதில் விழவில்லை.

“என்னமா கேட்குற, புரியலையே?” குழப்பத்துடன் கேட்டார்.

“துர்காவுக்குச் சின்ன வயசு தானே அங்கிள். அவள் இப்படித் தனியாவே இருக்கப் போறாளா? அவளுக்குன்னு ஒரு துணை வேண்டாமா அங்கிள்?” என்று கேட்டாள்.

அவள் கேள்வியில் லேசாகத் திகைத்துப் பார்த்தவர், உடனே மகள் என்ன செய்கிறாள் என்று பார்க்க, அவளின் கவனம் இங்கே இல்லை என்று தெரிந்ததும் மீண்டும் ஷாலினியைப் பார்த்தார்.

“நான் என்ன கேட்குறேன்னு உங்களுக்குப் புரிந்து இருக்கும் அங்கிள். நீங்க தயங்குவதைப் பார்த்தால், ஒருவேளை மறுமணம் செய்து வைக்க எல்லாம் உங்களுக்கு விருப்பம் இல்லையா?” என்று கேட்டாள்.

“இல்ல… இல்லமா” என்று வேகமாக மறுத்தவர், “அந்த மாதிரி பத்தாம்பசலித்தனம் எல்லாம் எனக்கு இல்லமா. எனக்கும் என் மகளுக்கு ஒரு வாழ்க்கை துணை வரணும்னு ஆசை தான். ஆனா அதை எப்படி அவள்கிட்ட பேசன்னு எனக்குத் தெரியலை. என் பிள்ளை வாழவே இல்லை. அவள் வாழணும்னு நானும் நினைக்கிறேன். ஆனா அதை எப்படி, என்னன்னு நடத்த போறேன்… புரியலையே…” என்று வருத்தத்துடன் கையை விரித்தார்.

“கவலையை விடுங்க அங்கிள். நான் துர்காகிட்ட பேசுறேன். உங்களுக்கு இதில் சம்மதமா இல்லையான்னு எனக்குத் தெரிய வேண்டியது இருந்தது. நீங்களும் நல்ல பதிலை சொல்லிட்டீங்க. இனி நான் பார்த்துக்கிறேன்…” என்றாள் மகிழ்ச்சியாக.

“சந்தோஷம் மா. துர்காவிடம் எப்படிப் பேசுவதுன்னு தயங்கிப் போய் இருந்தேன். நீ என் பொண்ணுக்குப் பிரண்டா கிடைச்சதுக்கு நாங்க கொடுத்து வச்சுருக்கணும்…” என்றவரின் குரல் நெகிழ்ந்து வந்தது.

“துர்கா போல ஒரு நல்ல பொண்ணு எனக்குப் பிரண்டா கிடைத்ததில் நானும் சந்தோஷமா இருக்கேன் அங்கிள். அவளுக்கு ஒரு நல்லது நடக்க என்னாலான முயற்சியைச் செய்வேன். அவளிடம் நான் பேசுறேன்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கே வந்தாள் துர்கா.

“என்கிட்ட என்ன பேசப் போற ஷாலினி? அது சரி, என்ன அப்பாகிட்ட எனக்குக் கேட்க கூடாதுன்னு ரகசியமா பேசிட்டு இருந்த மாதிரி இருந்தது. என்ன விஷயம்?” என்று கேட்டாள்.

“எல்லாம் நல்ல விஷயம் தான் துர்கா…” அலட்டிக் கொள்ளாமல் சொன்னாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“நல்ல விஷயமா? என்ன அது?”

“எல்லாம் உன் விஷயம் தான். ஆமா நீ எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போற?” என்று பட்டென்று கேட்டிருந்தாள் ஷாலினி.

அவள் கேள்வியில் தன் கையிலிருந்த பத்திரத்தை நழுவ விட்ட துர்கா, அவள் கேள்வியை நம்ப முடியாமல் கேட்டாள்.

“என்ன துர்கா, நான் கேட்டது சாதாரணக் கேள்வி… எதுக்கு இவ்வளவு ஷாக்?” கேட்ட ஷாலினி அசரவே இல்லை.

“சாதாரணக் கேள்வியா? நீ புரிந்து தான் பேசுறியா ஷாலினி? எனக்குக் கல்யாணமாகி எனக்கு ஒரு பொண்ணு இருக்கா…” என்றாள் துர்கா.

“தெரியாமல் என்ன? உனக்குக் கல்யாணமாகி இதோ இந்தப் பொண்ணு இருக்கான்னு எனக்கும் தெரியும்…” என்று வருணாவை சுட்டிக் காட்டியவள்,

“ஆனா உனக்கு ஹஸ்பெண்ட் இல்லை, உன் பொண்ணுக்கு அப்பா இல்லையே துர்கா? உனக்கு ஒரு வாழ்க்கை, அதை அழகாக்க உன் ஹஸ்பெண்ட், உன் பொண்ணு கூடக் குழந்தையோடு குழந்தையாக மாறி விளையாட அவளுக்கு அப்பா வேணும் துர்கா.

நான் இப்படிப் பளிச்சுன்னு கேட்டது உனக்குப் பிடிக்காமல் இருக்கலாம். என்னடா இவள் கூடப் பழகி கொஞ்ச நாள் தான் ஆகுது. இப்படிச் சொந்த விஷயத்தில் மூக்கை நுழைக்கிறாளேன்னு கூடத் தோணும்.

ஆனா உன்கூட என்னைக்குப் பேச ஆரம்பிச்சேனோ அன்னையில் இருந்து உனக்கு நல்ல பிரண்டா இருக்கணும்னு நினைக்கிறேன். என் பிரண்டு அவளுக்குன்னு ஒரு குடும்பம் அமைந்து சந்தோஷமா இருக்கணும் என்பது என் ஆசை…” என்று ஷாலினி தன் மனதில் இருப்பதைச் சொல்ல,

துர்கா அவளை வெறித்துப் பார்த்தாள்.

“எனக்கும் கூட உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணும்னு ஆசை இருக்குமா…” என்ற தந்தையை நம்ப முடியாமல் பார்த்தாள்.

“எனக்கும், உன் அப்பாவுக்கும் மட்டுமில்ல. உன் பொண்ணுக்கும் கூட அந்த ஆசை இருக்கு. அவள் இப்பயே அப்பாவை எதிர்பார்ப்பது உனக்கே புரிஞ்சிருக்கும். எங்க எல்லார் ஆசையும் நிறைவேறுவது உன் கையில் தான் இருக்கு துர்கா…” என்றாள் ஷாலினி.

“இல்லை ஷாலினி, உங்க ஆசை நிறைவேறாது. எனக்கு அப்படி எந்த ஆசையும் இல்லை. என் மகளுக்கு நல்ல அப்பா போலவும் இருந்து என்னால் அவளை வளர்க்க முடியும். இனி இது போல் எல்லாம் பேச வேண்டாம்…” என்று வெடுக்கென்று சொன்னவள், மீண்டும் சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

“என்னமா இப்படிச் சொல்லிட்டு போறாள்?” வருத்தமாகக் கேட்டார் சபரிநாதன்.

“இப்பத்தானே அங்கிள் விதை போட்டுருக்கோம். அந்த விதையை வளர்க்க என்ன செய்யணுமோ செய்வோம்…” என்றவளுக்குத் தலையை அசைத்தார்.

சமையலறையில் இருந்த துர்காவின் முகம் இறுகியிருந்தது. ஷாலினி இப்படித் திடீரென மறுமணம் பற்றியெல்லாம் பேசுவாள் என்று எதிர்பார்க்கவே இல்லை.

துர்கா இதுவரை அதைப் பற்றி யோசித்ததே இல்லை.

மகளை எப்படி எல்லாம் வளர்க்கலாம் என்ற யோசனையைத் தாண்டி அவளுக்கு வந்தது இல்லை. அதனாலேயே குணா அவள் வழியில் குறுக்கிட்டு சீண்டும் போதும் அவளால் பொருட்படுத்தாமல் இருக்க முடிந்தது.

ஷாலினி இப்போது பேசியது அவளுக்குள் ஒரு பிரளயத்தையே உருவாக்கி வைத்திருந்தது.

மனம் குமிறிக் கொண்டிருந்தாலும் கை தன்னைப்போல் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தது.

இப்போது சமைக்கும் ஆர்வம் குறைந்தாலும், ஷாலினியை உண்ண சொல்லிவிட்டு வெறும் வயிறாக அனுப்ப விருப்பமில்லை என்பதால் வேலையைத் தொடர்ந்தாள்.

அன்று இரவு துர்காவின் வீட்டில் உண்டு முடித்தனர் ஷாலினியின் குடும்பம்.

கிளம்பும் முன் “யோசி துர்கா. வாழ்க்கை துணைன்னு ஒருத்தர் கூட இருந்திருந்தால் கண்டவனும் உன் மேல கை வைக்கத் துணிந்திருக்க மாட்டான். அதே போல யாரும் உன் மேல தப்பான பழியும் போட்டுருக்க மாட்டாங்க. இந்த உலகம் வக்கிரம் நிறைந்தது துர்கா. உனக்கு மட்டுமில்ல, வருணாவுக்கும் பாதுகாப்பு கொடுக்க உனக்குத் துணை இருந்தால் மட்டும் தான் முடியும். யோசித்து நல்ல முடிவா எடு…” என்று சொல்லி விட்டே கிளம்பினாள் ஷாலினி.

துர்கா அவளுக்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. ஆற்ற விருப்பமும் இல்லை.

மேலும் இரண்டு நாட்கள் கடந்திருந்தன.

ஒவ்வொரு நாளும் என்ன, ஒவ்வொரு நொடியும் கூட நித்திலனுக்கு வேதனையுடன் கடந்து சென்று கொண்டிருந்தன.

வேலை எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.

முன்பும் குழந்தையை விட்டு விலகி இருந்திருக்கின்றான். அப்போது கூடக் குழந்தையைக் கண்ணாலாவது பார்த்து விடுவான்.

ஆனால் இப்போதோ கண்ணில் கூடப் பார்க்க முடியவில்லை. பார்க்க முடியாதவாறு வெளியே விடாமல் வைத்திருந்தாள் துர்கா.

தந்தையிடமும் வெளியே குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று உறுதியாகச் சொல்லியிருந்தாள்.

அதனால் தவித்துப் போனது என்னமோ நித்திலன் தான்.

குழந்தையைப் பார்க்க தான் இவ்வளவு தவித்துப் போவோம் என்று அவனே எதிர்பார்க்கவில்லை.

குழந்தையுடன் அவளின் அம்மாவும் நெஞ்சின் ஓரம் முணுக் முணுக்கென்று முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

துர்காவின் மறுமணம் குறிந்து ஷாலினியும், அன்னையும் பேசிக் கொண்டது வேறு மனதை அரித்துக் கொண்டிருந்தது.

அவர்களாகத் தான் பேசிக் கொண்டார்கள். எதுவும் முடிவு ஆகவில்லை என்று மூளைக்கு எடுத்துரைத்தாலும், மனது ஏற்க அடம்பிடித்தது.

அவன் மனதில் உண்டான இரைச்சலான அலை அவனை அமைதியாக இருக்க விடவில்லை.

அதனால் இரவெல்லாம் தூக்கம் வராமல் தவித்தான்.

காரணமே இல்லாமல் நள்ளிரவில் வாசலில் நின்று துர்காவின் வீட்டுக் கதவை வெறித்துக் கொண்டிருந்தான்.

தான் செய்வது முட்டாள்தனமான காரியம் என்று புத்தியில் உறைத்தாலும், அதனை அவனால் செய்யாமல் இருக்க முடியவில்லை.

அவனின் நடவடிக்கையைச் செவ்வந்தியும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார்.

அன்றும் நள்ளிரவில் வெளியே சென்ற மகனை கண்டதும் அதற்கு மேல் படுத்திருக்காமல் எழுந்து அமர்ந்தார்.

இதற்கு மேல் மகனின் மனதை அறிந்து கொள்ள அவருக்குத் தனியாக எந்த விசாரணையும் தேவையிருக்கவில்லை.

அதனால் இன்றே அவனிடம் பேசிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

சற்று நேரத்தில் உள்ளே வந்த நித்திலன், அன்னை அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் பின் சமாளித்தவன், “அது வந்து அம்மா, பாத்ரூம்…” அவர் காரணம் கேட்காமலே காரணம் சொல்ல முயல,

“இப்படி வந்து உட்கார் நித்திலா…” அமைதியாகத் தன்னருகே அமர அழைத்தார்.

அன்னையின் அமைதியான குரல் அவனை ஏதோ செய்தது. அவரின் அருகில் வந்தமர்ந்தான்.

“நானும் இங்கே வந்த நாளிலிருந்து உன்னைக் கவனிச்சுட்டுத்தான் இருக்கேன் பா. உன் மனசுல என்ன இருக்கு? இந்த அம்மாகிட்ட சொல்லு…” மென்மையாகக் கேட்டார்.

“என் மனசுல என்ன இருக்கப் போகுதுமா? அப்படி ஒன்னுமில்லையே…” வேகமாக மறுத்தான்.

“ஏன் மறைக்க நினைக்கிற நித்திலா? நைட் எல்லாம் தூங்காம நீ தவிப்பதும், பக்கத்து வீட்டுக் கதவையே வெறித்துப் பார்ப்பதும் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா? இரண்டு நாளைக்கு முன்னாடியே பார்த்துட்டேன். நீ உன் மனசுல என்ன நினைக்கிறன்னு நீயா சொல்வன்னு நினைச்சேன்.

ஆனா சொல்லவும் மாட்டிங்கிற. உனக்குள்ளேயே வச்சு தவிக்கிற. இதுக்கு மேலயும் என்னால் உன் தவிப்பை பார்த்துட்டு அமைதியா இருக்க முடியாது. சொல்லு, அந்தத் துர்காவை உனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கா?” என்று கேட்டதும் திடுக்கிட்டு அன்னையைப் பார்த்தான்.

“இல்லமா, குழந்தை வருணாவை பார்க்க முடியலைன்னு தான்…” என்று தடுமாறி நிறுத்தினான்.

“குழந்தை மட்டுமில்ல, துர்காவையும் பார்க்க முடியாமல் தான் நீ தவிக்கிறன்னு இந்த அம்மாவுக்கு நல்லா தெரியும்…” என்றதும் சட்டென்று மடங்கி அன்னையின் காலடியில் அமர்ந்தான் நித்திலன்.

“தப்புப் பண்ணிட்டேன் மா. பெரிய தப்புப் பண்ணிட்டேன். எனக்கு ஏன்மா இப்படி ஒரு ஆசை வந்தது? ஆசைப்பட எனக்கு என்ன தகுதி இருக்கு?” அன்னையில் காலடியில் மண்டியிட்டு அவரின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு குரல் கரகரக்க புலம்பினான்.

அவனின் தலையில் கைவைத்துத் தடவி விட்டவர், “நீ ஏன் அப்படி நினைக்கிற நித்திலா? நீ ரொம்ப ரொம்ப நல்லவன் பா. யாருக்கும் எந்தக் கெடுதலையும் மனசால கூட நினைக்கமாட்ட…” என்றார் ஆறுதலாக.

“ஆனா அது மட்டும் தகுதி இல்லையே மா?” என்று கண்கள் சிவக்க, மீசையோரங்கள் துடிக்கக் கேட்டான்.

“தேவையில்லாம மனதை போட்டு குழப்பிக்காதே நித்திலா. உனக்குத் துர்காவை பிடிச்சிருக்கா, இல்லையா? அதை மட்டும் சொல்லு…” என்று என்றார்.

“அம்மா…” என்று அவன் தயங்க,

“நித்திலா…” என்று அதட்டலாக அழைத்தவர், கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்! என்பது போல் மகனை தீர்க்கமாகப் பார்த்தார்.

“பிடிக்கும் மா…” என்றான் மெல்லிய குரலில்.

செவ்வந்தியின் முகம் மலர்ந்து போனது.

“நான் துர்கா அப்பாகிட்ட பேசுறேன்…” என்றார் மகிழ்ச்சியுடன்.

“இல்லமா, வேண்டாம்…” என்று உடனே மறுத்தான் நித்திலன்.

“அப்படிச் சொல்லாதே நித்திலா. நீயும் எத்தனை நாளைக்குத் தான் தனியா இருப்ப? உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா? நீ பேசாம இரு. நான் நாளைக்குப் பேசத்தான் போறேன்…” என்றார் உறுதியாக.

“அம்மா, புரிந்து தான் பேசுறீங்களா? இதெல்லாம் சரி வராது…” அவரை விட உறுதியாக மறுத்தான்.

“நீ தான் புரியாம பேசுற. எல்லாம் சரியாத்தான் வரும். நான் பேசத்தான் போறேன். எனக்கும் வயசாகிட்டே போகுது. உனக்கு நல்லது செய்து வைக்காம நான் போய்ச் சேர்ந்தால் சாவில் கூட எனக்கு நிம்மதி இருக்காது…” என்றார்.

“ஏன்மா இப்படியெல்லாம் பேசுறீங்க?”

“என்னை வேற என்ன செய்யச் சொல்ற? நீ இப்படித் தூங்காம தினமும் தவிப்பதை பார்த்துட்டே இருக்கணுமா என்ன? உனக்கு இன்னும் ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்காம இருக்கோமேன்னு ஏற்கனவே நான் தினம் தினம் மனதிற்குள் நொந்துட்டு இருக்கேன். இப்பத்தான் அதுக்கு விடிவு வந்தது போல உன் மனசுக்குள்ள ஒரு பொண்ணு வந்திருக்காள். இனியும் நான் சும்மா இருக்கப் போறது இல்ல. நாளைக்கே துர்கா அப்பாகிட்ட பேசத்தான் போறேன்…” என்றார் பிடிவாதமாக.

“வேண்டாம் மா. நான் தான் அவளை மனதில் நினைச்சுத் தப்பு செய்தேன்னா… நீங்களும் தப்பு செய்யாதீங்க. துர்கா நல்லா வாழ வேண்டிய பொண்ணு. என்னால் அவள் வாழ்க்கை பாழாகிறதில் எனக்கு விருப்பமில்லை…” அன்னையை விடப் பிடிவாதம் பிடித்தான்.

“நித்திலா, அம்மா சொல்வதைக் கேளு. கேட்டுப் பார்ப்பதில் எதுவும் குறைந்து விடாது…”

“இல்லமா, வேண்டாம். நீங்க கேட்க போறதால் எனக்கும் தான் கஷ்டம். என்னோட குறை அவங்களுக்குத் தெரிய வந்தால் அதை விட எனக்கு அவமானம் இருக்க முடியாது…” என்றான் குன்றிய குரலில்.

“நீயா ஏதேதோ நினைச்சுட்டு பேசாதே நித்திலா. உனக்கு ஒரு குறையும் இல்லைன்னு நீ முதலில் நம்பு. இதுக்கு மேல என்னைச் சரிக்கட்ட நினைக்காதே. என் மகன் வாழ்க்கையை நான் மலர வைத்தே ஆகணும்…” செவ்வந்தி அவர் பிடிவாதத்திலிருந்து பின் வாங்குவதாகவே இல்லை.

நித்திலனோ செய்வதறியாது அன்னையைப் பார்த்தான்.