14 – ஈடில்லா எனதுயிரே

அத்தியாயம் – 14

“அக்கா…” என்ற ராகவர்தினியால் வேறு பேசவே முடியவில்லை.

“என்ன உன் ரகசியத்தைக் கண்டுபிடிச்சுட்டேன்னு ஆச்சரியமா இருக்கா?” என்று கிண்டலுடன் கேட்டாள் நந்திதா.

“அப்படியெல்லாம் எதுவும் இல்லக்கா. அவர் என்னோட அத்தான். அந்தப் பாசம் தான் அவர் மேல் எனக்கு இருக்கு…” என்றாள்.

“இதை என்னை நம்பச் சொல்றியா?” நந்திதா கேட்க,

“நீங்க நம்பித்தான் ஆகணும் கா…” என்றாள் அழுத்தமாக.

“இல்லை, என்னால் நம்ப முடியாது. ஆரம்பத்தில் இருந்தே உங்களுக்குள் என்னவோ இருக்குன்னு எனக்குத் தோன்றிகிட்டே இருந்தது. அது என்னன்னு கல்யாணம் நின்னு போன அன்னைக்குத்தான் நிரூபணம் ஆச்சு…” என்றாள்.

“என்னக்கா, என்னென்னவோ சொல்லிட்டு இருக்கீங்க? அப்படி எல்லாம் எதுவும் இல்லக்கா. லவ் பண்ணிருந்தால் நான் ஏன் அத்தான் கல்யாணத்துக்குச் சந்தோஷப்படப் போறேன்? நின்னு போன கல்யாணம் நடக்கணும்னு இப்ப உங்ககிட்ட ஏன் பேசப் போறேன்?” என்று கேட்டாள்.

“காரணம் உன் அத்தானோட சந்தோஷம்!” என்றாள்.

“அக்கா…?”

“ஆமா, உன் அத்தானோட சந்தோஷத்துக்காக உன் காதலை நீ மறைக்கிற!” என்று அவள் சொன்னதும் ராகவர்தினியின் கண்களில் மெல்லிய திடுக்கிடல் வந்து போனது.

“கல்யாணத்துக்கு ட்ரெஸ் எடுக்கப் போன அன்னைக்கு நீ சந்தோஷமா இருக்குறது போல இருந்தாலும் உன்கிட்ட ஒருவித அலைப்புறுதல் இருந்துட்டே இருந்தது. நான் கூட என் தங்கை திவ்யா பேசியதால் அப்படி இருக்கன்னு முதலில் நினைச்சேன். ஆனா அப்படி இல்லைன்னு போகப் போகப் புரிந்து கொண்டேன்.

அடுத்து நீ பிரபஞ்சனை கேலி பேசி என் பக்கத்துல போய் இருக்கச் சொன்னாலும் அதில் உனக்கு முழுச் சந்தோஷம் இல்லை. முடிந்த வரை அவர் பக்கத்தில் நீ இருக்குற மாதிரி பார்த்துக்கிட்ட. அதுவும் லிப்ட்ல அவர் கை பட்டு உன் ட்ரெஸ் லேசா விலகினப்போ உன் முகத்தில் வெட்கம் வந்து போச்சு.

ஒரு ஆண் கை பட்டு நம்ம ட்ரெஸ் விலகினால், ஒன்னு கோபம் வரும். இல்லையா சங்கடம் வரும். ஆனால் உனக்கு ஏன் வெட்கம் வந்தது? அன்னைக்கே எனக்கு உறுத்தல் ஆரம்பிச்சுருச்சு.

ஆனால் பிரபஞ்சன் என்கிட்ட சாதாரணமா பேசவும், நீ தான் அவரைக் காதலிக்கிற. உன் அத்தானுக்கு உன் மேல காதல் இல்லைன்னு தெரிந்ததும் உன் விஷயத்தை ஒதுக்கி தள்ளிட்டேன்.

ஆனால் நிச்சயம் நடந்த அன்னைக்கு உன் கண்களில் அதிக அலைப்புறுதல். நானும் அவரும் ஜோடியா நிற்கும் போதெல்லாம் ஒருவித வலியோட எங்களை நீ பார்த்த. அவர் என் கையில் மோதிரம் போட வரும் போது முதலில் விளையாட்டா தான் பிடிச்சு தடுத்தன்னு நினைச்சேன்.

ஆனா அவர் கையில் அழுத்தம் விழும் அளவுக்கு வலுவா மோதிரம் போட விடாமல் பிடிச்சு இழுத்த. உன் நக அழுத்தம் கூட அவர் கையில் விழுந்ததைப் பார்த்தேன்.

சாப்பிடும் போதும் அப்படித்தான். உன் கூட இருந்த சொந்தகார பசங்களுக்காகத்தான் அவங்க கூட நீயும் எங்களைக் கலாட்டா செய்ற போலக் காட்டிக்கிட்ட. நீ உண்மையான சந்தோஷத்தில் அதைச் செய்யலை.

அதை விட உச்சம்! போலீஸ் வந்தப்ப நீ நடந்துகிட்டது. அவரோட அப்பா, அம்மா கூடப் போலீஸ் சொன்னதை நம்பினப்போ, நீ மட்டும் நம்பவே இல்லை. உன் அத்தானை அவ்வளவு நம்பின நீ.

பிரபஞ்சன் ஒரு பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்கிட்டதாகச் சொன்னப்போ நல்லவேளை கல்யாணத்துக்கு முன்னாடியே உண்மை தெரிந்து தப்பிச்சிட்டோம்னு மட்டும் தான் எனக்குத் தோனுச்சு. ஆனா நீ ஒவ்வொரு நொடியும் அவருக்காகத் துடிச்ச. யார் என்ன சொல்லியும் நீ அவர் மேல வச்ச நம்பிக்கையை மாத்திக்கவே இல்லை.

அதோட விடாமல் அலைந்து திரிந்து நீ தான் ஆதாரம் திரட்டி அவரை வெளியே கொண்டு வந்தன்னு கேள்விப்பட்டேன்…” என்ற நந்திதா அவளையே கூர்மையாகப் பார்த்தாள்.

ராகவர்தினியோ அவள் கண்களைச் சந்திக்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு உடல் விறைக்க நின்றிருந்தாள்.

“இப்ப கூட நின்னு போன கல்யாணம் நடக்கணும்னு ஆசைப்பட்டு என்கிட்ட பேச வந்திருக்க மாட்ட. பிரபஞ்சன் கல்யாணம் நின்னதில் வருத்தப்படுறார்னு நினைச்சு அவர் வருத்தத்தைப் போக்க என்கிட்ட பேச வந்திருப்ப.

இப்ப கூட அவருக்காக மட்டுமே என்கிட்ட பேச வந்திருக்க! இதை என்னால் உறுதியா சொல்ல முடியும். உன் மனதை தொட்டு சொல்லு. எங்க கல்யாணம் நின்னு போனதுக்கு நீ ஒரு செகண்ட் கூடச் சந்தோஷப்படலை?” என்று கேட்டவளை திடுக்கிட்டு பார்த்தாள் ராகவர்தினி.

“இதோ உன் ரியாக்ஷனே நீ சந்தோஷப்பட்டன்னு காட்டிக் கொடுத்திருச்சு. உள்ளே சந்தோஷப்பட்டுக்கிட்டு வெளியே ஏன் இப்படி என்கிட்ட பேச வந்து நின்னுட்டு இருக்க? சந்தோஷமா உன் அத்தானை நீ எப்படிக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு யோசிக்க வேண்டியது தானே?” என்று கேட்டாள் நந்திதா.

“அத்தான் மனதில் நீங்க தான் இருக்கீங்க. கல்யாணம் நின்னு போனதுக்கு வருத்தப்படுறார். நின்ன கல்யாணம் திரும்ப நடந்தால் சந்தோஷப்படுவார். எனக்கு அவர் சந்தோஷம் தான் முக்கியம்!” அவளின் முகத்தை நேராகப் பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னாள்.

“அவர் சந்தோஷப்பட்டால் அப்போ உன் சந்தோஷம்?” அழுத்தமாகக் கேட்டாள் நந்திதா.

“அவர் சந்தோஷம் தான் என் சந்தோஷம்!” என்று தன் பதிலையும் அழுத்தமாகச் சொன்னாள் ராகவர்தினி.

“அட! என்னே காதல் உன் காதல்!” என்று நந்திதா நக்கலாகச் சொல்ல, விறைத்து நிமிர்ந்தாள் ராகவர்தினி.

“எங்க கல்யாணம் நடந்து நாங்க இரண்டு பேரும் சந்தோஷமா வாழ்வதைப் பார்த்து நீயும் வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா வாழ்வ அப்படித்தானே?” என்று நந்திதா கேட்டதும், ராகவர்தினியின் கண்களில் வலி விரைந்தோடியது.

அவளால் பதில் சொல்ல முடியாமல் அவளின் தொண்டைக்குக் குழி அவஸ்தையுடன் ஏறி இறங்கியது.

“இப்ப எனக்கு ஒரு உண்மையைச் சொல்லு! நான் இப்ப பிரபஞ்சனை கல்யாணம் பண்ணிக்கிறேன்…” என்றதும் திடுக்கிட்டு அவளைப் பார்த்தாள் ராகவர்தினி.

அதைப் பார்த்துக் கொண்டே தன் பேச்சை தொடர்ந்தாள் நந்திதா.

“எங்க கல்யாணம் முடிந்த பிறகு, நீ கல்யாணம் பண்ணிக்குவியா? மாட்டியா?” என்று கேட்டாள்.

ராகவர்தினியோ பதில் சொல்ல முனையவே இல்லை.

முகம் இறுக அப்படியே நின்றாள்.

“பதில் சொல் ராகவர்தினி!” நந்திதா மீண்டும் கேட்க,

ராகவர்தினி உதடுகளை அழுத்தமாக மூடிக் கொண்டாள்.

“அப்போ நீ கல்யாணம் பண்ணிக்க மாட்ட! அதான் உன் பதில்னு நான் எடுத்துக்கிறேன்…” என்ற நந்திதா,

“நீ அவரைக் காதலிப்பது தெரிந்தும் அவரை நான் கல்யாணம் பண்ணிக்கணும். நாங்க சந்தோஷமா வாழ்வதைப் பார்த்து நீ வெளியே சந்தோஷப்படுற மாதிரி நடிச்சுட்டு உள்ளே வருத்தப்படுவ. அவரைக் காதலிச்சுக்கிட்டே வேற கல்யாணமும் பண்ணிக்க மாட்ட. இது எல்லாம் தெரிந்தும் ஒன்னுமே தெரியாத மாதிரி என்னை அவர் கூட வாழ சொல்றியா?

எங்க கல்யாணத்துக்குப் பின்னாடியும் என் கண் முன்னால் என் புருஷனை ஒருத்தி காதலிக்கிறாள்னு தெரிந்தே அவர் கூட நான் சந்தோஷமா வாழ முடியும்னு நீ நினைக்கிறயா? முடியாது! என்னால் கண்டிப்பா முடியாது!” என்று ஆவேசமாகச் சொன்னாள் நந்திதா.

“நான் வேற ஊருக்கு வேலை தேடி போயிடுவேன்…” என்றாள் ராகவர்தினி.

“இது என்ன கதை, சினிமான்னு நினைச்சியா? ஊரை விட்டுப் போனால் எல்லாம் சரியாகிடும்னு நினைக்கிறதுக்கு? நீ போனாலும் உன் நினைவும், பேச்சும் என்னைச் சுத்தி தான் வரும்…” என்றவளை கேள்வியாகப் பார்த்தாள்.

“நீ அவரோட அத்தைப் பொண்ணு. காலம் முழுவதும் தொடரும் உறவு. எந்த விதத்திலாவது உன்னைப் பற்றிய பேச்சு வீட்டில் யாராவது ஒருத்தர் பேசிட்டு தான் இருப்பாங்க. அதுவும் நீ கல்யாணம் பண்ணிக்காமல் வாழ்ந்தால் உன்னைப் பற்றிய பேச்சு இன்னும் அதிகமா இருக்கும்.

அதை நான் ஒன்னும் அறியாதவள் போலக் கேட்டுக்கிட்டு அமைதியாக, சந்தோஷமா அவர் கூட வாழ்க்கை நடந்த முடியும்னு நினைக்கிறயா? கண்டிப்பா முடியாது! என் புருஷனை ஒருத்தி நினைச்சுட்டு இருக்கான்னு நினைக்கும் போதே எனக்கு எரியும். அந்த எரிச்சலையும் நான் என் புருஷன்கிட்ட தான் காட்ட முடியும்.

அதில் அவரும் டென்ஷன் ஆவார். அப்புறம் எப்படி நாங்க சந்தோஷமா வாழ முடியும்? வாழவே முடியாது. நீ எங்க போனாலும் உன் நினைவும் எங்களைச் சுத்தியே இருக்கும் போது என் வாழ்க்கையில் நிம்மதியே இருக்காது. நிம்மதி இருக்காதுன்னு தெரிந்தே என்னைப் பிரபஞ்சனை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுவியா?” என்று கடுப்பாகக் கேட்டாள்.

“அத்தான் சந்தோஷத்துக்கு…” என்று ராகவர்தினி ஏதோ சொல்ல வர,

“போதும் நிறுத்து ராகவர்தினி! உன் அத்தானோட சந்தோஷத்துக்காக என் வாழ்க்கையை நான் அடகு வைக்க முடியாது. ஒருவிதத்தில் அன்னைக்கு அந்தப் பொண்ணு புகார் கொடுத்து எங்க கல்யாணம் நின்னது நல்லதுக்குன்னு தான் நினைக்கிறேன். இனி நின்னு போன கல்யாணத்தைப் பத்தி பேச வேண்டாம்னு எங்க வீட்டில் உறுதியா சொல்லிட்டேன். இனி என் முன்னாடி வந்து நிற்காதே!” என்று அவள் அங்கிருந்து கிளம்பிப் போக,

“அக்கா…” என்று அவள் கையைப் பிடித்து நிறுத்தினாள் ராகவர்தினி.

“அத்தான் கல்யாணம் நின்னதுக்கு வருத்தப்படுறார் கா. அவருக்காகக் கொஞ்சம் யோசிங்க…” என்று சொன்னவளை எரிச்சலுடன் பார்த்தாள்.

“இவ்வளவு நேரம் நான் சொன்னது உன் காதில் ஏறுச்சா இல்லையா? நீ என்ன உன் காதலை தியாகம் பண்ணி எனக்கு வாழ்க்கை பிச்சை போடுவதாக நினைக்கிறாயா? நீ போடும் வாழ்க்கை பிச்சை எனக்குத் தேவையில்லை!” என்ற நந்திதா வெடுக்கென்று தன் கையை அவளின் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு அங்கிருந்து விறுவிறுவென்று சென்று விட்டாள்.

சில நொடிகள் அப்படியே சிலையாக நின்று விட்டாள் ராகவர்தினி.

‘ஐயோ! அத்தான் இன்னும் இவங்களை நினைச்சுட்டுத்தானே இருக்காங்க. அவர் வருத்தப்படுவாரே!’ என்று இப்போதும் பிரபஞ்சனை பற்றித் தான் யோசித்தாள் ராகவர்தினி.

அவளை விட்டு விலகி சென்ற நந்திதாவின் கை உயர்ந்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டது.

அவள் மனதார தான் பிரபஞ்சனை திருமணம் செய்யச் சம்மதம் சொன்னாள்.

திருமண நிகழ்விலும் மகிழ்ச்சியுடன் தான் கலந்து கொண்டாள். ஆனால் எப்போது ராகவர்தினி மீது சந்தேகம் வந்ததோ அதில் இருந்தே அவளுக்கு மகிழ்ச்சி குறைந்து தான் போனது.

நிச்சய நிகழ்வின் போதும் அவள் தவிப்பை பார்த்து அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஆனால் எதிர்பாராமல் திருமணம் நின்று போனது அவளுக்கும் வருத்தம் தான். அதே நேரம் பிரபஞ்சனை பற்றி அவளும் அப்போது சந்தேகம் தான் கொண்டாள்.

பிரபஞ்சனை பற்றி முழுதாக அறியாதவள் அவள். அப்படியிருக்க அவள் சந்தேகம் கொண்டு விலகி நின்றது எந்தப் பெண்ணுமே இயல்பாகச் செய்யக் கூடியது. ஆனால் அவன் இப்படிச் செய்துவிட்டானே என்று மிகவும் வருந்தினாள்.

ஆனால் அவன் குற்றமற்றவன் என்று தெரிந்த போது மிகவும் சந்தோஷப்பட்டாள். தான் அவன் மீது சந்தேகம் கொண்டதற்காக வருந்தவும் செய்தாள். 

அதே நேரம் பெரியவர்கள் திரும்பத் திருமணப் பேச்சை ஆரம்பிக்கலாமா என்று கேட்ட போது தான் அவளுக்கு ராகவர்தினியின் ஞாபகம் வந்தது.

அந்தப் பெண் அவ்வளவு பிரபஞ்சனை விரும்பும் போது தான் அவனைத் திருமணம் செய்வது சரிவருமா? என்று பலவாறு தனக்குள் யோசித்துப் பார்த்தாள்.

எப்படி யோசித்துப் பார்த்தாலும் ராகவர்தினியின் காதலை தானே அழிப்பது போல் அவளுக்குள் ஒரு வித உறுத்தல் வந்து அவளை நிம்மதியாக இருக்க விடவில்லை.

அவள் மனது தனக்குத் தெரியாமல் போனாலும் பரவாயில்லை. தெரிந்தும் தான் பிரபஞ்சனை திருமணம் செய்வது காலம் முழுவதும் தனக்குக் குற்றவுணர்வை கொடுத்து விடும் என்று யோசிக்க ஆரம்பித்தாள். ராகவர்தினி பிரபஞ்சனை திருமணம் செய்வது தான் சரி! என்ற முடிவுக்கு வந்தாள்.

அதனால் வீட்டில் நின்று போன திருமணம் நின்று போனதாகவே இருக்கட்டும் என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள்.

பிரபஞ்சனை விட்டுக் கொடுப்பது அவளுக்கும் வருத்தமாகவே இருந்தது. ஆனால் பிரபஞ்சனை தானும் தவறாகத் தானே நினைத்தோம். ஆனால் அந்த நிலையிலும் அவனை ராகவர்தினி எவ்வளவு நம்பினாள்! அவள் இடத்தில் தான் இருந்திருந்தால் அப்படிப் பிரபஞ்சனை நம்பியிருப்போமா என்று நினைத்துப் பார்த்தாள்.

அவளுக்குக் கிடைத்த முடிவு, நம்பியிருக்க மாட்டோம் என்பதே!

தன்னை விடப் பிரபஞ்சனை உயிராக நேசித்து, அவனை எந்தச் சூழ்நிலையிலும் உறுதியாக நம்பும் ராகவர்தினி அவன் வாழ்க்கையில் வருவது தான் சரியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.

ஆனாலும் ராகவர்தினி இப்போதும் அவனுக்காகப் பேச வந்தது அவளுக்கு வியப்பாக இருந்தது.

ஒருத்தியால் இப்படியும் காதலிக்க முடியுமா என்ன? தான் விரும்புபவன் சந்தோஷத்திற்காக அவனின் நின்று போன திருமணம் நடக்க வேண்டும் என்று நினைப்பாளா? இதோ ராகவர்தினி தன் கண் முன்னால் சாட்சியாக நிற்கிறாள்! என்று நினைத்து நந்திதாவிற்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.

பிரபஞ்சனை விலகுவது வலியாகவே இருந்தாலும், ராகவர்தினியின் காதல் நிறைவேறட்டும் என்று நினைத்தே அவளிடம் கடுமையாகப் பேசிவிட்டு வந்துவிட்டாள் நந்திதா.

தனக்கும் பிரபஞ்சனை விட்டு விலகுவது வருத்தம் தான் என்று தெரிந்தால் ராகவர்தினி இந்தக் கல்யாணம் நடக்க இன்னும் தீவிரமாக நினைப்பாள் என்று நினைத்த நந்திதா எரிச்சலை காட்டியிருந்தாள்.

ஆனால் இப்போது அவளின் கண்கள் தன்னையறியாமல் கலங்கி போக, கண்களைத் துடைத்துக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டாள்.

நந்திதா சென்றதும் வருத்தத்துடன் அங்கிருந்து கிளம்பினாள் ராகவர்தினி.

தான் மட்டுமே அறிந்த தன் காதலை நந்திதாவும் கண்டுகொண்டாளே என்று எண்ணி அவளுக்கு மனதை ஏதோ செய்தது.

ஆம்! நந்திதா சொன்ன அத்தனையும் உண்மை தான்.

ராகவர்தினி பிரபஞ்சனை காதலிக்கிறாள்.

அவனுக்குத் திருமணம் முடிவாகும் வரை அவளே அவளின் மனதை அறியவில்லை. ஆனால் அவனின் திருமணம் நெருங்க நெருங்க பிரபஞ்சன் நந்திதாவுடன் நெருக்கமாகப் பேச ஆரம்பிக்கவும் அவளால் தாளவே முடியவில்லை.

என் அத்தான் நந்திதாவிற்குச் சொந்தமா என்ற உணர்வு அவளை ஆட்டிப் படைத்தது.

தனக்கு ஏன் அந்த எண்ணம் வருகிறது என்று அள்ளும் பகலும் யோசித்தவளுக்குக் கிடைத்த பதில் தான் பிரபஞ்சனின் மீதான அவளின் காதல்!

தன் மனதை அறிந்த பின் அவளுக்குச் சந்தோஷத்திற்குப் பதில் வந்தது என்னவோ வருத்தம் தான்!

ஏனெனில் பிரபஞ்சன் நந்திதாவுடனான திருமணத்தை நினைத்துச் சந்தோஷமாக வலம் வருவதைக் கண்டவளுக்குத் தன் காதல் நிறைவேறாத காதல் என்று புரிந்த பிறகு எதற்குத் தனக்கு இந்தக் காதல் வந்தது என்ற எண்ணம் தான் தோன்றியது.

அவனின் சந்தோஷத்தை கலைத்து தன் காதல் நிறைவேற தேவையில்லை என்று நினைத்தவள் தன் காதலை தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டு பிரபஞ்சனின் திருமண நிகழ்வில் சந்தோஷமாக இருப்பது போல் கலந்து கொண்டாள்.

நந்திதா சொன்னது போல் திருமணம் நின்றதில் அவளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி ஏற்பட்டது என்னவோ முற்றிலும் உண்மை!

ஆனால் பிரபஞ்சன் நின்ற திருமணத்தைப் பற்றி என்ன நினைக்கிறான் என்று அவள் அறிய வேண்டியது இருந்தது. அவன் எண்ணம் தெரியாமல் தான் சந்தோஷப்பட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை என்று நினைத்தாள்.

அதனால் தான் அவன் வீட்டிற்கு வந்து அவனின் எண்ணத்தை அறிய நினைத்தாள்.

அவன் முதலில் நின்ற திருமணத்தைப் பற்றிப் பேச வேண்டாம் என்றதும் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டாள்.

ஆனால் அடுத்த நொடியே, அவன் கையில் இருந்த மோதிரமும், கைபேசியில் பார்த்த நந்திதாவின் புகைப்படமும், அவள் அலைபேசி எண்ணை அவன் பிளாக் செய்யாமல் வைத்திருந்ததும் அவளின் சந்தோஷத்தை துடைத்து அவளை உள்ளுக்குள் வலிக்க வைத்தது.

ஆனால் நந்திதா தான் அவன் விருப்பம் என்றால் எப்படியாவது அவன் திருமணத்தை நடத்தி விடவே நினைத்தாள்.

இப்போது நந்திதா அவள் மனதை கண்டு கொண்டு விலகிப் போனது ஒருவிதத்தில் மகிழ்ச்சி தான் என்றாலும், பிரபஞ்சன் வருந்துவானே என்ற எண்ணம் மட்டுமே அவளை ஆக்கிரமித்துக் கொண்டு அவளை வருந்த வைத்தது.

அவனிடம் எப்படி நந்திதா விலகி சென்றதை சொல்வது என்று யோசித்துக் கொண்டே வண்டியில் சென்று கொண்டிருந்தாள் ராகவர்தினி.

இப்போதும் தான் சொல்லும் போது அவன் வருத்தப்படாமல் இருக்க என்ன செய்யப் போகிறோம் என்று அவனின் மனநிலையை மட்டுமே யோசித்தாள்.

தன் காதல் நிறைவேற சந்தர்ப்பம் கிடைத்து விட்டது என்று துள்ளிக் குதிக்கவே இல்லை ராகவர்தினி.