14 – இதயத்திரை விலகிடாதோ?

அத்தியாயம் – 14

‘தான் ஏன் அன்று அப்படிப் பேசினோம்?’

தனக்குள் பல முறை கேட்டுக் கொண்டாள் யுவஸ்ரீ.

‘உண்மையைத்தானே பேசினாய்?’ என்று கேட்டு மனது அவளைச் சமாதானம் செய்தது.

‘உண்மையாக இருந்தாலும் அப்படியா பட்டென்று போட்டுடைப்பாய்?’ இன்னொரு பக்கம் இப்படியும் கேட்டு அவளைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.

அவள் கேட்டது சரியோ, தவறோ ஆனால் கேட்டு விட்டாள். அதன் விளைவு? சூர்யா இப்போதெல்லாம் அவள் அருகிலேயே வருவது இல்லை.

நான் அப்படித்தான் என்று அவளை இரவானால் உரசிக் கொண்டே இருப்பவன், இப்போது விலகியே இருந்தான்.

அதையும் அவன் அவள் முகத்திற்கு நேராகச் சொல்லி விட்டு தான் விலகினான்.

அன்று இரவு அவனிடம் நன்றாகக் கேட்டு விட்டு தூங்க போவதாகத் திரும்பிப் படுத்தவளின் முதுகை சில நொடிகள் வெறித்த சூர்யா, பின் பட்டென்று அவள் தோளை பிடித்துத் தன் பக்கம் திருப்பினான்.

“ம்ப்ச், இன்னும் என்ன? நான் தூங்கணும்…” என்று சலிப்பாகத் திரும்பினாள் யுவஸ்ரீ.

“எதுக்கு அப்படிச் சொன்ன? அதைச் சொல்லிட்டு தூங்குடி…” என்றான்.

“சூர்யா, நாளைக்கு எனக்கு இன்டர்வியூ இருக்கு. என்னைத் தூங்க விடுங்க, ப்ளீஸ்…” என்றாள்.

“என் தூக்கத்தைக் கெடுத்துட்டு நீ மட்டும் தூங்க போறீயா?”

“உங்களை யார் தூங்க வேண்டாம்னு சொன்னது? நீங்களும் தூங்குங்க…”

“தூங்கவா? எப்படித் தூங்க? உன் பேச்சு இதோ… இங்கே குடையுது. அந்தக் குடைச்சலை நிறுத்திட்டு நீ தூங்கு…” என்று தன் நெற்றி பொட்டை தொட்டுக் காட்டிக் கேட்டான்.

“நான் ஒன்னும் தப்பா எதுவும் பேசலையே சூர்யா? உண்மைத்தானே சொன்னேன்?”

“அப்படி என்ன உண்மை? உன்னை நான் படுக்கிறதுக்கு மட்டும் கூப்பிடுறேன் என்பதா?”

“சூர்யா, ப்ளீஸ்! இப்படிப் கொச்சையா பேசாதீங்க. கேட்க கஷ்டமா இருக்கு. ஆனா அதுதான் உண்மை சூர்யா. ஒரு கணவனா நீங்க என்கிட்ட நடந்து கொள்வது அதில் மட்டும் தான். கணவன் என்றால் அதுக்கு மட்டும் தான்னு உங்களுக்கு யார் சொன்னது சூர்யா?” என்று அழுத்தமாகக் கேட்டவள், இப்போது எழுந்து அமர்ந்து அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள்.

அவனும் எழுந்து அமர்ந்து அவள் முகத்தை அழுத்தமாகப் பார்த்தான்.

“அப்புறம் வேற என்ன எதிர்பார்க்கிற?” என்று கேட்டான்.

“அதெல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது சூர்யா. உங்களுக்கே தெரிந்திருக்கணும். உங்களைப் பொறுத்தவரை ரொமான்ஸ் என்றால் எப்படிக் கட்டிக்கிறதும், ஒட்டிக்கிறதும் என்று அர்த்தம் இருக்கோ, அதே போல… கணவன் என்றால் தன்னோட வேலையை மட்டும் பார்த்துக்கிட்டு, தன்னோட தேவையை மட்டும் நிறைவேத்திக்கிறதுன்னு ஒரு டெபனிஷன் வச்சுருக்கீங்க. ஆனா அது உண்மை இல்லை சூர்யா.

கணவன் என்பது ஒர் ஆத்மார்த்தமான உறவு. அதன் அர்த்தம் என்ன என்பதை நீங்களே உணர்ந்து நடந்துக்கணும் சூர்யா. நான் சொல்லி நடந்து கொண்டால் அதில் எந்த அர்த்தமும் இல்லை. அப்படி நான் சொல்வதாக இருந்தால் இந்த ஆறுமாதமும் நான் பொறுமையாகக் காத்திருக்க வேண்டிய தேவையும் இல்லை…” என்றாள்.

அவள் சொன்னது எதுவும் அவனுக்குப் புரியவில்லை. ஆம்! புரியவே இல்லை.

தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறாள்? அவனுக்கு விளங்கவில்லை.

வேலை நேரம் போக மற்ற நேரம் அவளுடன் தான் வீட்டில் இருக்கிறான். சனி, ஞாயிறு மட்டும் தான் தன் நண்பர்களுக்காக ஒதுக்குகிறான். அவனைப் பொறுத்தவரை அவளுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் விதித்து முடக்கி போடவில்லை.

எல்லாம் அவள் விருப்பம் மட்டுமே. வீட்டில் என்ன செய்தாலும், வெளியே அவள் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தாலும், அவன் எதுவும் சொல்வதே இல்லை. எந்தக் கணவன் இப்படி இருப்பான்? நான் அவளுக்கு அந்தச் சுதந்திரத்தை கொடுத்திருக்கிறேனே? என்று தான் அவனுக்குத் தோன்றியது.

அவனுக்கு அவன் செய்து கொண்டிருக்கும் தவறு புரியவே இல்லை.

இன்று கூட வேலையை விட்டு வந்து அவளுடன் வீட்டில் தான் இருந்தான். ஆனால் அவளுடன் பேசிக் கொண்டிருந்தானா? அவள் கேட்ட சிறு உதவியைக் கூடச் செய்யவில்லை என்பதை நினைக்க மறந்து போனான்.

நண்பர்களுடன் நேரம் செலவழிக்கலாம். ஆனால் மனைவியை மறந்து நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது தவறு என்று அவனின் புத்திக்கு உறைக்கவில்லை.

மனைவியா? நண்பர்களா? என்ற தராசில் மனைவியை அதல பாதாளத்தில் நிறுத்தி வைத்திருக்கிறான் என்றும் அறியவில்லை.

தான், தனது என்று இருப்பவனுக்கு மனைவிக்கும் ஆசைகள் இருக்கும், எதிர்பார்ப்புகள் இருக்கும் என்று உணரவில்லை.

விளக்கை அணைப்பதுடன், மனைவியையும் அணைப்பது மட்டுமே கணவனின் கடமை இல்லை என்று உறைக்கவே இல்லை.

அதோடு ‘அவளுக்கான சுதந்திரம் அவளிடம் தானே உள்ளது. தான் ஒன்றும் கிடுக்குப்பிடி போடவில்லையே? அப்புறம் என்னிடம் என்ன குறையைக் கண்டுவிட்டாள்?’ என்று தான் அவனுக்குத் தோன்றியதே தவிர, மனைவிக்கு இருக்கும் ஏக்கங்களும், எதிர்பார்ப்பும் புரியத்தான் இல்லை.

இதுவரை தனக்குள் மட்டும் அவன் தன்னை இரவுக்கு மட்டுமே தேடுகிறான் என்று நினைத்துக் கொள்ளும் யுவஸ்ரீ, முதல் முறையாக வெளிப்படையாகத் தன் ஆதங்கத்தைச் சொல்லிவிட, சூர்யாவை அது குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது.

கூடவே இப்படிச் சொல்லிவிட்டாளே என்ற வீம்பும் சேர்ந்து கொள்ள, “நீ என்னென்னவோ சொல்ற. ஆனா எனக்கு ஒன்னு மட்டும் நல்லாவே புரியுது. நான் உன்னைத் தொடுவது உனக்குப் பிடிக்கலை… அப்படித்தானே?

சரிதான், இனி தொடலை. நான் ஒன்னும் பொண்ணுங்களுக்கு அலையிறவன் இல்லை. இனி நான் உன்னைத் தொட்டால் என்னன்னு கேளு…” என்றவன் கோபமாக அவளுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு படுத்து விட்டான்.

கணவனை விக்கித்துத் தான் பார்த்தாள் யுவஸ்ரீ.

தான் என்ன சொன்னால் இவன் என்ன புரிந்து கொண்டான்? இரவுக்கு மட்டுமில்லை, மற்ற நேரமும் கணவனாக நடந்து கொள்ள முயற்சி செய் என்று சொன்னால் விலகுகிறானாம்!

‘இப்போதும் நீங்க நான் சொல்ல வந்ததைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லைங்க. உங்களுக்குப் புரியவும் செய்யாது’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவளுக்கு உறக்கம் தொலைதூரம் போனது.

இவர்களின் இந்த உரையாடல் நடந்து ஒரு மாதம் கடந்து விட்டிருந்தது.

இன்னும் சூர்யா அவள் அருகில் வரவில்லை.

ஆனால் அதற்காக அவளால் சந்தோஷம் கொள்ள முடியவில்லை.

இரவு நேரத்திலாவது அவள் அருகாமையை நாடியவன், இப்போது மொத்தமாக அவளை விட்டு விலகி போய் விட்டதாகவே அவளுக்குத் தோன்றியது.

அதனால்தான், தன் பேச்சில் தான் தவறோ? என்று தனக்குள்ளேயே குழம்பிக் கொண்டாள்.

அவன் அவள் பேச்சில் மூலம் மாற முயற்சி செய்திருந்தாலாவது குழப்பிக் கொள்ளாமல் இருந்திருப்பாள். ஆனால் சூர்யா சிறிதும் மாறவில்லை. அவன் எப்போதும் போல் தான் இருந்தான்.

வேலை, வீடு, விடுமுறையில் நண்பர்கள், குடி என்று எதிலும் மாற்றமில்லை.

ஒரே மாற்றமாகக் குடி போதையில் இருந்தாலும் மனைவியை அவன் நாடவில்லை.

அது அவளுக்கே வியப்பாகத்தான் இருந்தது.

குடி போதையில் இன்னும் முரட்டுத்தனமாக நடந்து கொள்பவன், இப்போது அமைதியாக வந்து படுத்துக் கொள்கிறான்.

அவனின் அந்தக் கட்டுப்பாடு அவளை வியக்கத்தான் வைத்தது.

அவன் தன்னைக் குடி போதையில் நாடவில்லை என்று சந்தோஷப்பட வேண்டுமா? அல்லது என்னைத் தனியாக இப்படி விட்டுவிட்டானே என்று வருத்தப்பட வேண்டுமா? தான் என்ன செய்ய வேண்டும்?

விட்டது கணவனின் அந்தரங்க தொல்லை என்று சந்தோஷமாக இருக்க வேண்டுமா? அந்தரங்கமாகக் கூடத் தன்னை அணுக மாட்டேங்கிறானே என்று கவலை கொள்ள வேண்டுமா?

தான் இப்போது என்ன செய்ய வேண்டும்?

யோசனைகள்! யோசனைகள்! யோசித்ததையே வேறு வேறு வார்த்தைகள் போட்டு அவளின் யோசனை சென்றது.

தெளிவு தான் கிடைக்கவில்லை. ஒரு மாதம் கடந்த பிறகும்!

இந்த ஒரு மாதத்தில் அவளுக்கு அடுத்தப் பிராஜெக்ட் கிடைத்தது. அதில் தான் தற்போது வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

சூர்யக்கண்ணனும் புதுப் பிராஜெக்ட் ஒன்றிற்குத் தலைமை தாங்கி செய்து கொண்டிருந்தான்.

இருவருக்கும் வேலைக்கு ஓடவே நேரம் சரியாக இருந்தது.

அன்றும் காலையில் சூர்யா விரைவாகக் கிளம்பிச் சென்றிருக்க, யுவஸ்ரீ சற்றுத் தாமதமாகக் கிளம்பியிருந்தாள்.

அன்று அவளுக்கு மாதாந்திர பிரச்சினை இருந்தது.

அதனால் இரவெல்லாம் வயிறு வலித்ததில் சரியாகத் தூங்கி இருக்காததால் காலையில் நேரம் சென்று தான் எழுந்து வேலை பார்த்து விட்டு கிளம்பியிருந்தாள்.

வீட்டைப் பூட்டிவிட்டு கீழே சென்று வண்டியை எடுத்த போது தான் கவனித்தாள்.

பின் பக்க டயர் பஞ்சராகியிருந்தது.

“ச்சே, ஏற்கெனவே லேட். இதில் இந்த வண்டி வேற சொதப்புதே. இன்னைக்குப் பத்து மணிக்கு ஒரு மீட்டிங் வேற இருக்கு. இப்பவே மணி ஒன்பதரை ஆகிருச்சே…” என்று புலம்பிக் கொண்டே மெயின் சாலைக்கு விரைந்து நடந்தாள்.

அவர்கள் அடுக்குமாடி வளாகத்தைத் தாண்டி சிறிது தூரம் தள்ளி தான் ஆட்டோ ஸ்டாண்ட் இருந்தது.

சாலையில் ஒரு ஆட்டோவும் கிடைக்காமல், ஸ்டாண்ட் சென்று ஒரு ஆட்டோ பிடித்து அலுவலகம் சென்றாள்.

அன்று திங்கள்கிழமை வேறு. சாலை எல்லாம் டிராபிக்காக இருந்தது.

இதுவே இருசக்கர வாகனம் என்றால் சந்துக்குள் எல்லாம் நுழைந்து விரைவில் அலுவலகம் சென்று சேர்ந்து விடுவாள்.

ஆட்டோவும் விரைவில் சென்றாலும் அலுவலகத்திற்குச் சரியான நேரத்திற்குச் செல்வோம் என்பதில் அவளுக்கு நம்பிக்கை இல்லை.

பதட்டத்துடன் கடிகாரத்தையே பார்த்துக் கொண்டு வந்தாள்.

“அண்ணா, கொஞ்சம் சீக்கிரம் போங்க…” என்று ஆட்டோ ட்ரைவரையும் துரிதப்படுத்தினாள்.

ஆனால் அவளின் வேகத்திற்கு ஆட்டோ பறக்க முடியாதே!

“இதோ போறேன்மா…” என்று அவர் சொன்னாலும் ஆட்டோ ஊர்ந்து செல்வதாகத்தான் அவளுக்குத் தோன்றியது.

பத்து மணியைக் கடந்து மேலும் பதினைந்து நிமிடம் கடந்த பிறகு தான், அலுவலகம் சென்று சேர்ந்தாள் யுவஸ்ரீ.

அவள் மீட்டிங் அறைக்குச் சென்ற போது மும்முரமாகக் கலந்துரையாடல் ஓடிக் கொண்டிருந்தது.

அவளின் டீம் லீடர் அவளை ஒரு கடுமையான பார்வையுடன் வரவேற்க, உள்ளுக்குள் நொந்து போனாள்.

மீட்டிங் முடிந்ததும் அவளுக்குப் பக்கம் பக்கமாக அறிவுரை வழங்குவான் என்பது அவள் நன்றாக அறிந்த ஒன்று.

மன்னிப்பான பார்வையுடன் தன் இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

மீட்டிங்கில் இணைந்து கொண்டாலும் அவளால் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொள்ள முடியவில்லை.

அவளின் மாதாந்திர பிரச்சினை வேலையைக் காட்டிக் கொண்டிருந்தது.

வயிற்றைப் புரட்டி புரட்டி வலித்தது.

அவளுக்கு எப்போதும் அந்த வலி இருக்கும். வழக்கமாக அதற்கு மாத்திரை போடுவாள்.

ஆனால் இன்று நேரம் ஆகிவிட்டதால் சாப்பாடு சாப்பிட நேரமில்லை என்று டிபன் பாக்ஸில் உணவை அடைத்துக் கொண்டு வந்திருந்தாள்.

மீட்டிங் முடிந்ததும் சாப்பிட்டு மாத்திரை போட வேண்டும் என்று நினைத்தாள்.

ஆனால் அதற்குள் பொறுக்க முடியாமல், அவளின் வயிறு அவளைப் படுத்தி எடுத்தது.

பல்லை கடித்துப் பொறுத்துக் கொண்டு மீட்டிங்கில் கவனம் வைக்க முயன்றாள்.

உன் வயிறு வலியை மட்டும் கவனிப்பாயா? நானும் இருக்கிறேன் என்பது போல் தலை வேறு சுற்றிக் கொண்டு வந்தது.

சாப்பிடாததால் உடலில் சக்தி இல்லாமல் தலை கிறுகிறுத்தது.

மேஜை மீதிருந்த தண்ணீரை எடுத்து வேக வேகமாகக் குடித்தாள்.

அவள் குடித்த வேகத்தைப் பார்த்து மீட்டிங்கில் இருந்த மற்றவர்களின் பார்வை ஒரு நொடி அவளின் மீது படிந்து மீண்டது.

அவர்களுக்குச் சங்கடமான சிரிப்பொன்றை சிந்தி விட்டு மீட்டிங்கில் கவனத்தை வைத்தாள்.

ஒரு ப்ரோகிராம் பற்றிக் குறிப்பிட்டு அதை எப்படி முடிக்க வேண்டும் என்று கலந்துரையாடினார்கள்.

‘சீக்கிரம் பேசி முடிங்கடாப்பா…’ என்று உள்ளுக்குள் பல முறை அலுத்துக் கொண்டாள்.

அந்த மீட்டிங் முடிய ஒரு மணி நேரம் ஆக, சோர்ந்தே போனாள் யுவஸ்ரீ.

“ஓகே கைஸ், ஆல் கிளியர்னு நினைக்கிறேன். அப்படி ஏதாவது திரும்ப டவுட் வந்தால் எனக்கு இன்பார்ம் பண்ணுங்க…” என்று டீம் லீடர் சொல்லி முடிக்க, அனைவரும் அவனிடம் விடைபெற்று தனது இருக்கைக்குச் சென்றனர்.

யுவஸ்ரீயும் செல்வதற்கு வேகமாக எழ, “ஹலோ, நீங்க வெயிட் பண்ணுங்க…” என்று அவளை நிறுத்தினான் டீம் லீடர்.

‘அச்சோ! அட்வைஸ் என்ற பேரில் பிளேடு போட போறான்…’ என்று உள்ளுக்குள் முனங்கிக் கொண்டே அவன் முகத்தைப் பார்த்தாள்.

அனைவரும் சென்றதும் அவனும், அவளும் மட்டும் இருந்தனர்.

“இன்னைக்குப் பத்து மணிக்கு மீட்டிங் இருக்குன்னு தெரியுமா, தெரியாதா?” என்று கடுமையாகக் கேட்டான்.

“தெரியும்…” என்றாள்.

“அப்புறம் ஏன் லேட்?”

“கிளம்பும் போது வண்டி பஞ்சர் ஆயிடுச்சு. அதனால் ஆட்டோ பிடிச்சிட்டு வர நேரம் ஆகிடுச்சு…” என்றாள்.

“ஸ்கூல் பிள்ளைங்க மாதிரி காரணம் சொல்ல இது ஒன்னும் ஸ்கூல் இல்ல…” என்றான் முறைப்பாக.

“ஸாரி, இனி இப்படி நடக்காது. கரெக்ட் டைமுக்கு வர முயற்சி செய்றேன்…” என்றாள் மெதுவான குரலில்.

அவளுக்குப் பேச கூட வலு இல்லை. பசி ஒரு பக்கம், வயிறு வலி ஒரு பக்கம், தலை சுற்றல் ஒரு பக்கம் என்று மிகவும் சோர்ந்து போயிருந்தாள்.

அவள் முகத்தை ஒரு நொடி கூர்ந்து பார்த்தவன், “போய் வேலையை ஆரம்பிங்க…” என்றான்.

விட்டால் போதும் என்று ஓட வேண்டும் போல் தான் இருந்தது.

ஆனால் வேகமாக நடந்தால் கூட விழுந்து விடுவோம் என்பது போல் ஆகிப் போனவள், தலையை அசைத்து விட்டு மெல்ல திரும்பி நடந்தவள் அடுத்த நொடி தொப்பென்று கீழே விழுந்தாள்.

“ஏய் யுவா, என்னடி?” பதட்டமாக அவளின் அருகில் வந்தான் அவளின் கணவனும், தற்போதைய அவளின் டீம் லீடருமான சூர்யக்கண்ணன்.

தரையில் மயங்கி விழுந்து கிடந்தவளின் அருகில் சென்றவன், அவள் கன்னத்தில் கை வைத்து தட்டி, “யுவா, எழுந்திரு. என்னாச்சு உனக்கு?” என்று கேட்டான்.

மயங்கி கிடந்தவள் என்னவென்று பதில் சொல்வாளாம்?

சில நொடிகள் அவள் கன்னத்தைத் தட்டியவன், அப்போது தான் ஞாபகம் வந்தவன் போல், வேகமாக மேஜை மீதிருந்த ஒரு வாட்டர் பாட்டிலை திறந்து தண்ணீரை அவள் முகத்தில் தெளித்தான்.

தண்ணீர் பட்டதும் விழிகளை மலர்த்தினாள் யுவஸ்ரீ.

கண்ணுக்கு முன் தெரிந்த கணவனின் முகத்தைப் பார்த்தவள், புரியாத பாவனையில் எழுந்து அமர்ந்தாள்.

“என்னாச்சுடி பொண்டாட்டி? ஏன் திடீர்னு மயங்கி விழுந்த?” என்று கவலையான குரலில் கேட்டான்.

நிஜமாகவே அவனிடம் கவலை இருந்ததா என்ன? எனக்காக இவன் கவலை கூடப் படுவானா? என்று தான் அவளின் சிந்தனை போனது.

“ஏய், என்னன்னு சொல்லுடி…” அவள் பதில் சொல்லாமல் ஏதோ யோசித்துக் கொண்டிருக்கவும் லேசாக அதட்டினான்.

“எனக்கு ஒன்னுமில்லை. நான் என் சீட்டுக்குப் போறேன்…” என்று எழுந்தவள் தடுமாறினாள்.

அவளின் கையைப் பிடித்து நிறுத்தியவன், “ஒன்னுமில்லையா? என்னைக்கும் இல்லாம மயங்கி விழுந்திருக்க. இது ஒன்னுமில்லையா? இப்ப என்னன்னு சொல்ல போறீயா இல்லையா? இல்லைனா வா, ஹாஸ்பிட்டல் போகலாம்…” என்றவனை விநோதமாகப் பார்த்தாள்.

“ம்ப்ச், இன்னைக்கு என்ன புதுசா என் மேல் அக்கறை? என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும்…” என்றவள் தன் தோளை பிடித்திருந்த அவனின் கையை விலக்கி விட்டு மேஜையில் இருந்த தண்ணியை எடுத்துக் குடித்தவள், சற்று நிதானத்துடன் மீட்டிங் அறையை விட்டு வெளியேறினாள்.

சென்றவளையே வெறித்துப் பார்த்தான் சூர்யா.

அவளை இவ்வளவு சோர்வுடன் அவன் பார்த்ததே இல்லை.

அவளுக்கு இன்று மாதாந்திர பிரச்சினை என்றெல்லாம் அவனுக்குத் தெரியாது. அந்த நாட்களில் அவள் வயிற்று வலிக்கு மாத்திரை போடுவாள் என்பதும் தெரியாது.

காலையில் அவள் மெதுவாக எழுந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கவும், மீட்டிங் இருக்கிறது என்று காலை உணவை அலுவலகத்தில் பார்த்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டு வந்து விட்டான்.

அவள் ஏன் மெதுவாக வேலை செய்து கொண்டிருக்கிறாள், அவளுக்கு என்ன ஆனது? என்று கூட அவன் விசாரிக்கவில்லை.

அவனின் மீட்டிங் மட்டுமே ஞாபகத்தில் இருக்க, அவன் எங்கே இருந்து மனைவியின் உடல்நிலையைப் பற்றி அறிந்து கொண்டிருக்கப் போகிறான்?

ஆனால் இப்போது மனைவி மயக்கம் போடவும், ‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்!’ என்பதற்கேற்ப அவனின் நெஞ்சின் ஓரம் முதல் முறையாகச் சுருக்கென்று இருந்தது.

தன் மனைவி அவள். அவளுக்கு உடல் நிலை சரியில்லை. ஆனால் அது என்ன என்று கூட அவனுக்குத் தெரியவில்லையே? என்ற சிந்தனையுடன் மீட்டிங் அறையை விட்டு வெளியே சென்றான்.

மனைவியின் இருக்கையைப் பார்க்க, அவள் அங்கே இல்லை. எனக்கே போனாள்? என்ற கேள்வியுடன் பார்வையைச் சுழல விட்டான்.

கையில் சாப்பாட்டு கவருடன் வெளியே சென்று கொண்டிருந்தாள்.

அவளின் பின் சென்றான்.

யுவஸ்ரீ நேராகச் சாப்பிடும் இடம் சென்று வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த உணவை உண்ண ஆரம்பித்தாள்.

அவளின் எதிரே தானும் சென்று அமர்ந்தான்.

அவனைப் பார்த்தாலும் என்னவென்று கேட்காமல் அமைதியாக உண்டாள்.

“காலையில் சாப்பிடாமல் வந்துட்டியா? அதான் மயக்கம் வந்ததா?” என்று கேட்டான்.

‘ஆமாம்’ என்பது போல் தலையை மட்டும் அசைத்தாள்.

“சாப்பிட்டு வர வேண்டியது தானே? இல்லைனா சீக்கிரம் கிளம்பி இங்கே வந்து சாப்பிட்டிருக்க வேண்டியது தானே?” என்று கேட்டவனுக்கு அவள் எந்தப் பதிலும் சொல்ல முயற்சிக்கவில்லை.

அமைதியாக உண்டு முடித்தவள், கையோடு கொண்டு வந்த வயிற்று வலி மாத்திரையை வாயில் போட்டு தண்ணீரைக் குடித்தாள்.

“ஏய், என்ன மாத்திரை அது? பசியில் மயக்கம் தானே சொன்ன? இப்ப மாத்திரை போடுற? உனக்கு உடம்புக்கு என்னாச்சு?” என்று கேட்டான்.

அவனிடம் லேசான பதட்டம்!

அதை உணர்ந்தவளுக்குச் சந்தோசம் வரவில்லை கோபம் தான் வந்தது.

கோபத்துடன் அங்கிருந்து எழுந்து செல்ல போனவளின் கையைப் பற்றி நிறுத்தியவன், “பதில் சொல்லுடி!” என்றான்.

“போதும், நிறுத்துங்க சூர்யா! நமக்குக் கல்யாணம் முடிந்து ஏழு மாசத்துக்கு மேலேயே ஆகிருச்சு. நான் மாதமாதம் மாத்திரை போடுறேன். ஆனா இப்பத்தான் புதுசா கேட்குறீங்க. உங்க புது அக்கறையைப் பார்த்து என்னால் சந்தோஷப்பட முடியலை.

என் மேல் புதுசா அக்கறை பட்டு உங்க நேரத்தை வேஸ்ட் செய்யாதீங்க சூர்யா. பாவம்! உங்களுக்கு எத்தனையோ வேலை இருக்கும். அதைப் போய்ப் பாருங்க…” என்றவள் எழுந்து அலுவலகத்திற்குள் சென்று விட்டாள்.

அவளின் பேச்சைக் கேட்டு விக்கித்துப் போனான் சூர்யா.