14 – நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்

அத்தியாயம் – 14

அவ்வளவு நேரம் தன் வலியை தர்மாவிடம் காட்டிக் கொண்டும், அவனிடம் ஆறுதல் தேடி கொண்டும், வலியில் அனத்தும் போதும் கூட அவனின் பெயரை சொல்லிக் கொண்டிருந்த சத்யாவிற்கு வலி குறையப் போட்ட ஊசி மருந்து வேலை செய்ய ஆரம்பித்ததாலோ, இல்லை வலியை தாண்டி அறுவை சிகிச்சை என்றதும் தன் வீட்டின் பொருளாதார நிலையை நினைத்ததாலோ, அல்லது இரண்டுமே தானோ ஏதோ ஒன்றின் பலனாக நிதானத்திற்கு வந்திருந்தாள் சத்யா.

நிதானத்தில் மூளை வேலை செய்ய ஆரம்பிக்க, அவனின் கையைப் பற்றியிருந்ததை உணர்ந்து அவள் விடுவித்துக் கொண்ட வேகத்தைப் பார்த்துத் தர்மா புரியாமல் கேள்வியுடன் அவளின் முகத்தை ஆராய்ந்தான்.

அவளின் முகத்தில் தவிப்பும், சங்கடமும், தன்னை நினைத்தே வந்த அவளின் கோபத்தையும் கண்டு, அவளுக்கு வலி குறைய ஆரம்பித்திருக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டான்.

ஆனாலும் அவள் தன் கையை அவ்வளவு வேகத்துடன் விட்டதில் கோபம் வர, படுக்கையின் மேல் இருந்த அவளின் கையைத் தானே எடுத்து தன் கைக்குள் அடக்கி கொண்டான். இனி நீயே நினைத்தாலும் உன் கரத்தை விடமாட்டேன் என்பது போல் இருந்தது அவனின் செய்கை.

அவள் மீண்டும் கையை விடுவித்துக் கொள்ளப் பார்க்க, “ஷ்ஷ்… பேசாம இரு சத்யா. நான் தானே? ஏன் யாரோ மாதிரி இப்படிக் கையை இழுக்குற?” என்று உரிமையுடன் அதட்டினான்.

அவன் அப்படி உரிமை எடுத்துக் கொள்ளத் தானே காரணம் என்பதை உணர்ந்து தன்னையே நொந்து கொண்ட சத்யா, “அப்பாகிட்ட பேசி வர சொல்லணும் தர்மா சார்…” என்றாள்.

“தர்மா சாரா…?” என்று முகத்தைச் சுளித்தவன், “இவ்வளவு நேரம் ஒழுங்கா தர்மானு தானே கூப்பிட்ட… இப்போ என்ன சாரு, மோருனு இழுக்குற? ஒழுங்கா, உரிமையா இனி தர்மானு தான் கூப்பிடணும்…” என்று கண்டிப்புடன் சொன்னான்.

“இல்ல சார். அது சரி வராது. அப்போ ஏதோ வலியில் அப்படி உளறிட்டேன். ஆனா அதுக்காக இனியும் அப்படிக் கூப்பிடுவது தப்பு…” என்று உறுதியுடன் சொன்னாள்.

அவளின் உறுதியை கண்டு தர்மாவிற்குக் கோபம் வர, “இப்போ நீ பேசுவது தான் உளறல். அப்போ சரியா தான் சொன்ன. அப்போ உண்மையா மனதில் இருந்து பேசின. இப்போ மனதுக்கு ஒரு திரையைப் போட்டு வெளியே வேற பேசுற…” என்று அவளை அறிந்தவனாகச் சொன்னான்.

அவன் சொல்லிக் காட்டியதில் சத்யாவின் முகம் சுருங்கியது. தன் மனதை காட்டி தவறு செய்து விட்டதாகத் தன் மேலே கோபப்பட்டுக் கொண்டாள்.

“நான் எந்தத் திரையும் போட்டுக்கலை தர்மா சார். இது தான் நான். நான் நானா தான் இருக்கேன். நீங்க தான் ஏதோ புரியாம பேசுறீங்க…” என்று தன் மனதை மறைக்க இறுகிய குரலில் சொன்னாள்.

அவளின் முயற்சியையும் பிடிவாதத்தையும் கண்டு இப்போது தர்மாவிற்குப் புன்னகை தான் வந்தது.

“ஓஹோ…! அப்படியா?” என்று சிரித்துக் கொண்டே மேலும் ஏதோ சொல்ல வாயை திறந்தான்.

ஆனால் அதற்குள் அங்கே வந்த செவிலி, “என்னங்க நீங்க இன்னும் பேசி முடிக்கலையா? ஆப்ரேஷனுக்கு ரெடி பண்ணனும் கிளம்புங்க…” என்றவள் “கல்யாணம் பண்ணிக்கப் போறவங்க எல்லாம் மணிக்கணக்கா பேச ஆஸ்பத்திரி தான் இடமா என்ன? வேலையைப் பார்க்க விடாம சும்மா பேசிக்கிட்டு…” என்று புலம்பி கொண்டே கடுகடுத்த முகத்துடன் வெளியே நடந்தார்.

அவர் சொன்னதைக் கேட்டு திகைத்து போனாள் சத்யா., ‘கல்யாணம் பண்ணிக்கப் போறவங்களா? அப்படினு யாரு சொன்னா?’ என்று திடுக்கிட்டு படுத்திருந்தவள் எழுந்து அமர்ந்தாள்.

‘வேற யாரு சொல்லியிருப்பா? அவன் தானே இப்போதைக்கு இங்கே இருக்கின்றான். அவனைத் தவிர வேறு யாரும் சொல்லியிருக்க முடியாது. ஆனா ஏன் அப்படிச் சொன்னான்? அப்படியென்றால் தான் அவனை விரும்புவது போல அவனும் தன்னை விரும்புகிறானா?’ என்று நினைக்கும் போதே அவளின் மேனி ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.

செவிலி சொல்லி சென்றதை கேட்டு சத்யா அதிர்ந்து எழவும் அவள் எதுவும் தவறாக நினைத்துக் கொண்டாளோ என்று ஆராய்ச்சியாக அவளின் முகத்தைப் பார்த்தான்.

ஆனால் சத்யாவின் முகத்தில் தெரிந்த மெல்லிய சந்தோஷமும், தன் கைக்குள் இருந்த அவளின் கை வழியாக உணர்ந்த சிலிர்ப்பும், அவளின் மனநிலையை எடுத்துக்காட்ட, தர்மாவின் உதடுகளில் இப்போது பெரிதாகவே புன்னகை தவழ்ந்தது.

மீண்டும் உள்ளே வந்த செவிலி இருவரையும் முறைத்த படி ஊசி மருந்தை எடுத்து வைத்துக் கொண்டு அங்கேயே நிற்க, அதற்கு மேல் அங்கு நின்று பேச முடியாமல், “நீ எதைப் பத்தியும் கவலைப்படாதே சத்யா. படுத்துக்கோ… ஆப்ரேஷனுக்கு ஏற்பாடு நடந்துட்டு இருக்கு. நீ அதுக்குத் தயாராகு. தைரியமா இருக்கணும். நான் வெளியே போய் அங்கிளுக்குப் போன் பண்ணி சொல்லிட்டு வர்றேன். எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன். மனசை போட்டு குழப்பிக்காதே…” என்று ஆறுதலாகச் சொன்னவன்,

செவிலி அங்கே இருப்பதையும் பொருட்படுத்தாமல் அவளின் கையைத் தூக்கி பட்டும் படாமல் அதில் இதழ் பதித்து, அதனால் உண்டான அவளின் சிலிர்ப்புடன் கூடிய அதிர்ச்சியையும் உள்வாங்கிக் கொண்டு மென்மையாக அவளின் கையைப் படுக்கையில் வைத்து விட்டு மலர்ந்த முகத்துடன் வெளியேறினான்.

ஏற்கனவே குழம்பி இருந்த மனம் அவனின் இதழ் ஒற்றலில் இன்னும் குழம்பித்தான் போனது.

உண்மையாகவே அவன் தன்னை விரும்புகின்றானா? ஆனால் இதுவரை அவன் அப்படி எதுவும் சொல்லியதில்லையே? அப்படி இருக்கும் போது எப்படி இப்படி என் கையில் முத்தம் கொடுக்கலாம்? என்று மானசீகமாக அவனுடன் சண்டையிட்டுக் கொண்டாள்.

அவனிடம் விளக்கம் கேட்டு தெளிந்து கொள்ள ஆசை வந்தது. ஆனால் அதற்கு இப்போது வாய்ப்பில்லையே என்று தவித்துப் போனாள்.

அவன் வெளியே சென்றதும் அவளை மேலும் உள்ளுக்குள் குழம்ப விடாமல் அவளின் அருகில் வந்த செவிலி அவளை அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல ஆயத்தப்படுத்த ஆரம்பித்தார்.

வெளியே சென்ற தர்மா முதல் வேலையாக மருத்துவமனையில் பணத்தைக் கட்டி விட்டு அதன் பிறகு தான் தியாகராஜனுக்கு அழைத்தான். அவர் வந்த பிறகு அவனைப் பணம் கட்ட விடமாட்டார் என்று நினைத்தவன் முந்திக் கொண்டான்.

விஷயம் அறிந்து பதறி போன தியாகராஜனை சமாதானப்படுத்தி அவர் வரும் வரை தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லிப் பதட்டம் இல்லாமல் கிளம்பி வர சொன்னான்.

அடுத்து சிவாவிற்கு அழைத்து அவனையும் மருத்துவமனைக்கு வர சொன்னான்.

அடுத்தப் பதினைந்தாவது நிமிடத்தில் அங்கே சத்யாவின் பெற்றோரும், தங்கையும் பதட்டத்துடன் வந்தனர்.

“என்ன மாப்பிள்ளை சத்யாவுக்கு என்னாச்சு? எங்க இருக்கா?” என்று பதறிப் போய்க் கேட்டார்.

“கீழே விழுந்ததில் கையில் எலும்பு முறிவு மாமா. அந்தப் பக்கம் தற்செயலா போகும் போது கூட்டமா இருக்கே என்னனு பார்த்தா நம்ம சத்யானு தெரிஞ்சதும் எனக்கும் பதறி போயிருச்சு. அந்தப் பதட்டத்தில் தான் உங்களுக்குக் கூடச் சொல்லாம விட்டுட்டேன். டாக்டர்கிட்ட பேசிட்டேன். சின்ன ஆப்ரேஷன் பண்ணனும்னு சொல்லியிருக்காங்க. அதுக்குத் தான் இப்போ உள்ளே ரெடி பண்ணிட்டு இருக்காங்க…” என்றான்.

ஆப்ரேஷன் என்றதும் தியாகராஜன் அதிர்ந்து நின்றுவிட, “என்ன மாப்பிள்ளை சொல்றீங்க?” என்று பயந்த வசந்தா அழவே ஆரம்பித்து விட்டார்.

“ஐயோ அத்தை…! பயப்பட ஒன்னும் இல்லை. மாவுக்கட்டுப் போட்டா கை கூட லேட்டாகும். ஆப்ரேஷன்னா நம்ம சத்யா சீக்கிரம் சரியாகிடுவா. அதான் நானும் சரின்னு சொல்லிட்டேன். நீங்க என்ன நினைக்கிறீங்க? உங்களுக்கும் ஓகே தானே?” என்று கேட்டான்.

அவர்கள் மறுத்தாலும் சம்மதிக்க வைக்கும் நோக்கோடு இருந்ததால் தான் அவனே அனைத்து ஏற்பாடும் செய்ய ஆரம்பித்திருந்தான். ஆனாலும் அவர்களும் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம் என்று நினைத்துக் கேட்டான்.

சத்யாவிற்குச் சீக்கிரம் சரியாகும் என்று சொல்லவும் உடனே ‘சரி’ என்று இருவரும் தலையசைத்து விட்டனர்.

“ஆப்ரேஷனே பண்ணிடலாம் மாப்பிள்ளை…” என்றவர் வசந்தாவின் புறம் திரும்பி, “நீ இங்கே பார்த்துக்கோ வசந்தா. நான் போய்ப் பணம் எடுத்துட்டு வர்றேன். எவ்வளவு ஆகும்னு தெரியலை. நான் போய் விசாரிச்சுட்டு அப்படியே பணம் எடுத்துக் கட்டிட்டு வர்றேன்…” என்றார்.

“இல்லை மாமா… தேவையில்லை…” என்று அங்கிருந்து நகர்ந்தவரை தடுத்து நிறுத்தினான் தர்மா.

“ஏன் மாப்பிள்ளை?”

“நானே பணம் கட்டிட்டேன் மாமா…” என்றதும்,

“இல்லை மாப்பிள்ளை அது சரிவராது…” என்று வேகமாக மறுத்தார் தியாகராஜன்.

“எல்லாம் சரியா வரும் மாமா. என் வருங்கால மனைவிக்கு நான் கட்டினா அது எப்படிச் சரிவராம போகும்?” என்று வேகமாக அவன் சொல்ல, இன்னும் தியாகராஜன் தயங்கி கொண்டு நிற்க, அவர்களின் பேச்சுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் இருவரையும் மாறி, மாறி பார்த்தபடி நின்றிருந்தார் வசந்தா.

ஆனாலும் இன்னும் திருமணம் நடக்காத நிலையில் தங்கள் மகளுக்காக அவன் பணம் கட்டுவதை ஏற்க முடியாமல் “இல்லை மாப்பிள்ளை. உங்கள் மனைவிக்குப் பணம் கட்டினா தப்பில்லை. ஆனா இப்போ அவ எங்க மகளா தான் இருக்கா. அதனால நான் கொடுக்குற பணத்தை நீங்க வாங்கிக்கணும்…” என்று பிடிவாதமாகச் சொன்னார் தியாகராஜன். அதற்கு வசந்தாவும் ஆமோதிப்பாகத் தலையசைத்தார்.

“நீங்க என்னை இப்படிப் பிரிச்சுப் பார்க்கிறது எனக்குக் கஷ்டமா இருக்கு மாமா. இப்போ உங்க மகளா இருந்தா என்ன? ஏன் நான் பணம் கட்டக்கூடாது? அப்போ எனக்குச் சத்யா மேல எந்த உரிமையும் இல்லை. தள்ளியே நில்லுன்னு சொல்றீங்களா?” என்று ஆதங்கமாகக் கேட்டான்.

“அச்சோ…! மாப்பிள்ளை, உங்களுக்கு உரிமை இல்லைனு சொல்லலை. ஆனா அந்த முழு உரிமையைக் காட்ட இன்னும் நாள் வரலைன்னு சொல்றோம். அந்த நாள் வந்துட்டா நாங்க ஏன் இப்படிப் பேசிக்கிட்டு நிற்க போறோம்? உங்க மனைவிக்கு நீங்க எதுவும் பண்ணுங்கனு விட்டுருவோமே…” என்று அவனுக்குப் புரிய வைக்க முயன்றார் தியாகராஜன்.

அவர்கள் சொல்ல வருவது புரிந்தது. ஆனால் அதை ஏற்றுக் கொள்ளத் தான் மனம் வரவில்லை. என் சத்யாவிற்கு நான் கட்டக் கூடாதா? என்று தான் தோன்றியது.

மருத்துவமனையில் வைத்து அதற்கு மேல் பேசி வழக்காட விரும்பாமல் அமைதியானான். ஆனால் அவர்கள் பணம் கொடுக்கும் போது அதை எப்படியும் தரவிடாமல் தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்ற உறுதி மட்டும் அவனின் மனதில் அழுத்தமாக இருந்தது.

முதலில் சத்யாவிற்குச் சரியாகட்டும். பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன் பேச்சை மாற்றிச் சத்யாவை பற்றி மேலும் சொல்ல ஆரம்பித்தான்.

இவர்கள் மூவரும் உரிமையுடன் பேசிக் கொண்டிருக்க, வசந்தாவின் அருகில் நின்றிருந்த கார்த்திகாவோ அவர்கள் பேசியதை எல்லாம் கேட்டு திகைத்துப் போய் நின்றிருந்தாள்.

அவளின் அக்காவிற்கு அடிப்பட்ட அதிர்ச்சி கூட அவளுக்குப் பின்னுக்குப் போய்விட்டது.

அவர்கள் மாப்பிள்ளை, மாமா என்று பேசிக்கொள்ளவும் வாயை பிளந்து பார்த்தவள், தர்மா, சத்யாவை வருங்கால மனைவி என்றதும் அகலமாக வாயை பிளந்து, கண்ணையும் பெரிதாக விரித்தாள்.

அவர்களிடம் பேசிக் கொண்டே திரும்பிய தர்மா, அவள் நின்ற நிலையைப் பார்த்து அந்த இறுக்கமான நிலையிலும் சட்டென்று சிரித்து விட்டான்.

சிரித்துக்கொண்டே “என்ன கார்த்திப் பொண்ணே, என்னை அப்படி வாயை பிளந்து பார்க்கிற?” எனக் கேட்டான்.

“அது… அது… மாமா… மாப்பிள்ளை… ” என்று திணறிய படியே பெற்றோரையும், அவனையும் மாறி, மாறி கையைக் காட்டினாள்.

“யெஸ்… நான் உனக்கு மாமா தான்…” என்று சிரித்துக் கொண்டே உறுதியுடன் சொன்னான்.

“என்ன மாமாவா…? எப்படி?” என்று அதிர்ந்து போய் அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“உன் அக்கா வழியில் தான்…” என்று லயித்துச் சொன்னான்.

அவளுக்கு இன்னும் அதிர்ச்சி கூடியதே தவிரக் குறையவில்லை.

அவளின் அதிர்ச்சியைப் பார்த்துக் கொண்டே “உன் அக்காவை கல்யாணம் பண்ணினா நான் உனக்கு மாமா தானே?” என்று புன்னகையுடன் கேட்டவன், “அப்புறம் இந்த விஷயம் இன்னும் கொஞ்ச நாளைக்கு ரகசியம்! யார்கிட்டயும் சொல்லிடாதே! முக்கியமா உன் அக்காகிட்ட…” என்று சொல்லிவிட்டு விஷமமாகக் கண்ணைச் சிமிட்டி சிரித்தான்.

அவனின் பேச்சையும், செயலையும் கண்டு “ஹான்…!” என்று அவள் இன்னும் பெரிதாக வாயை திறந்தாள்.

ஆனால் அதோடு அவனைச் சந்தேகமாக வேறு பார்த்து வைத்தாள்.

எப்போதும் அளவோடு மரியாதையோடு பேசி பழகுபவன் அவன் என்று தான் அவளுக்குத் தெரியும். அவனிடம் நேரடியாக அவளுக்கு அதிகப் பேச்சு வார்த்தை இல்லையென்றாலும் கூட, சத்யாவும், தந்தையும் வீட்டில் அவனைப் பற்றிச் சொன்னதை வைத்து அவன் குணம் அமைதியான குணம் என்றுதான் அவள் நினைத்திருந்தாள்.

ஆனால் இப்போது அவளின் அப்பா, அம்மாவிடம் அவன் உரிமையாகப் பேசிய த்வனியும், தன்னிடம் விஷமமாகப் பேசியதும் அவனின் வேறோரு பரிமாணத்தைக் காட்டியது.

அக்காவிற்கு மறைத்து அப்படி என்ன ரகசியம் காக்கிறார்கள் இவர்கள்? என்ற கேள்வி தோன்ற அவனைச் சந்தேகக் கண்ணோடு பார்த்தாள்.

அவளின் அந்தப் பார்வையைப் பார்த்து இன்னும் தான் தர்மாவிற்குச் சிரிப்பு வந்தது.

ஆனாலும் இருக்கும் சூழ்நிலை உணர்ந்து தன்னை அடக்கியவன் சிறிய பெண் என்றாலும் கவனத்துடன் இருக்கின்றாள் என்று கார்த்திகாவை மெச்சும் பார்வை பார்த்தான்.

மகளின் பார்வையை உணர்ந்த வசந்தா “கொஞ்ச நாள் முன்னாடி நம்ம சத்யாவிற்குப் பார்த்த மாப்பிள்ளை இவர் தாண்டி. உனக்கு மாமா. அவரை இப்படிச் சந்தேகமா முறைச்சு பார்க்காதே…” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி அதட்டினார்.

ஆனால் முன்பை விட இப்போது தான் அவளுக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.

‘அப்போ அக்கா வேண்டாம்னு மறுத்த இரண்டாந்தாரமாகக் கேட்ட மாப்பிள்ளை இவரா?’ என்று திகைத்துப் பார்த்தவளுக்குத் தன் அக்காவை நினைத்து அழுகை வந்தது.

‘இதை எப்படி அவள் தாங்குவாள்?’ என்று நினைத்தவள் தவித்துப் போனாள்.