14 – சிந்தையில் பதிந்த சித்திரமே

அத்தியாயம் – 14

“ரொம்ப நன்றி தம்பி. சரியான நேரத்துக்கு நீங்க மட்டும் வந்திருக்கலைனா என்ன நடந்திருக்குமோ?” என்றார் ஞானசேகரன்.

“இருக்கட்டும் சார். என் இடத்தில் யாரா இருந்தாலும் அந்த உதவியைச் செய்திருப்பாங்க. அம்மா இப்ப எப்படி இருக்காங்க? டாக்டர் என்ன சொன்னார்?” என்று விசாரித்தான் கதிர்நிலவன்.

“திடீர்னு பிரஷர் ரொம்ப அதிகமாகியிருக்குன்னு சொன்னார். அவளுக்கு இதுக்கு முன்னாடி பிரஷர் எல்லாம் இருந்தது இல்லை. இப்ப எப்படி வந்துச்சுன்னு தெரியலை…” என்றார்.

“ம்ம், டாக்டர் சொல்ற மாத்திரை எல்லாம் சரியா கொடுங்க. சரியா போயிடும். அப்போ நான் கிளம்புறேன் சார்…” என்றான்.

“ஒரு சின்ன உதவி தம்பி. நீங்க போகும் போது, தயாவையும், நயனியையும் கூட்டிட்டு போய் வீட்டில் விட்டுருங்க தம்பி. பக்கத்து வீட்டிலிருந்து ஆசாரியை வச்சு கதவை சரி பண்ணிட்டதா போன் செய்தாங்க. இவங்க போய்த் தான் ஆசாரிக்குப் பணம் கொடுக்கணும்…” என்றார்.

“அப்பா, தயா மட்டும் போகட்டும். நான் அம்மா கூடத் துணைக்கு இருக்கேன்…” என்றாள் நயனிகா.

“இல்லைமா. நீ நைட் இங்கே தங்க வேண்டாம். இன்னைக்கு ஒரு நாள் நைட் மட்டும் தானே டாக்டர் இங்கே இருக்கச் சொல்லியிருக்கார். காலையில் நாங்களே வந்திருவோம். நீ கிளம்பு…” என்றார் முடிவாக.

அதற்கு மேல் மறுப்புச் சொல்லாமல் கதிர்நிலவனுடன் இருவரும் கிளம்பினர்.

“அம்மாவுக்குத் தான் பெருசா எதுவும் பிரச்சனை இல்லைனு டாக்டர் சொல்லிட்டாரே தயா. அப்புறம் ஏன் இன்னும் எப்படியோ இருக்க?” காரில் செல்லும் போது மிகவும் அமைதியாக வந்த தயாவிடம் கேட்டான் கதிர்நிலவன்.

மாலை மீண்டும் அபிராமி மயங்கிய போது “அம்மா, முழிச்சுக்கோங்க. உங்களுக்கு ஒன்னுமில்லை. இப்ப ஹாஸ்பிட்டல் போயிடலாம்…” என்று அவரின் கன்னத்தைத் தட்டி முழிக்க வைத்திருந்தான் கதிர்நிலவன்.

அவருக்கு ஓரளவு உணர்வு வந்த நேரத்தில், தயாவும் வந்துவிட, உடனே அபிராமியை மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தனர்.

அவன் தன் அன்னைக்கு உதவி செய்யும் போதே கதிர்நிலவனின் வலதுகையைப் பார்த்து விட்டிருந்தான் தயா.

அப்போது இருந்த சூழ்நிலையில் அதைப் பற்றி நினைக்க முடியவில்லை என்றாலும், இப்பொழுது மீண்டும் காரை ஓட்டிக் கொண்டிருந்த கதிர்நிலவனின் கையைப் பார்த்ததும் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை.

தன் வலதுகையையும் பயன்படுத்தித் தான் காரை ஓட்டிக் கொண்டிருந்தான் கதிர்நிலவன்.

கேள்வி கேட்டவனுக்குப் பதில் சொல்லாமல் அவனின் வலது கையின் மீது தயா பார்வையைச் செலுத்த, அவன் மனநிலை புரிந்தது போல் மெல்ல சிரித்துக் கொண்டான் கதிர்நிலவன்.

“ரொம்ப நன்றி கதிர். அம்மாவுக்கு என்னவோ ஆச்சுன்னு என் உயிரே நடுங்கி போயிருச்சு. நீங்க மட்டும் எனக்குத் துணைக்கு இருக்கலைனா நான் என்ன ஆகியிருப்பேனோ…” என்று பின்னால் அமர்ந்திருந்த நயனிகா சொல்ல,

“ம்ம், பரவாயில்லை விடு…” என்று அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டான் கதிர்நிலவன்.

‘அக்கா ரொம்ப இயல்பா இருக்காளே. அப்போ இவர் கையைப் பத்தி அக்காவுக்கு ஏற்கனவே தெரியுமா?’ என்று யோசனையுடன் அமர்ந்திருந்தான் தயாகர்.

“அக்கா, அவர்… அதான் கதிர் சாருக்கு ஒரு கை?” வீட்டிற்கு வந்ததும் ஆசாரிக்குப் பணம் கொடுத்து அனுப்பிவிட்டு முதல் கேள்வியாகத் தமக்கையிடம் கேட்டான் தயா.

“ம்ம், ஆமா. நீ பார்த்தது உண்மை தான். அதனால் என்ன?” என்று கேட்டாள்.

“உனக்கு வருத்தமா இல்லையாக்கா? அது… அது… எப்படி அவருக்கு ஒரு கை இல்லாதப்ப அவரை லவ் பண்ற?” தான் சரியாகத் தான் கேட்கிறோமா என்று புரியாமல் திணறிக் கொண்டே கேட்டான்.

“என்னடா ஆளுக்கு ஆள் கை கைனே சொல்லிட்டு இருக்கீங்க? ஒரு கை இல்லனா என்ன? அவர் என்ன எந்த வேலையும் செய்யாம முடங்கிப் போயா இருக்கார்? அவரால் வலது கையையும் யூஸ் பண்ண முடியும்டா.

அப்படியே பண்ண முடியாமல் போனாலும் எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை. எனக்கு அவரோட நல்ல மனதை தான் ரொம்பப் பிடிச்சுருக்கு. நிம்மதியா வாழ நமக்கு வர்ற துணை நல்லவங்களா இருந்தால் போதும். என் கதிர் ரொம்ப ரொம்ப நல்லவர். இளகின மனசு. இதுக்கு மேல அவர்கிட்ட எந்தக் குறையும் இருக்குறதா எனக்குத் தெரியலை…” என்றாள்.

‘தன் அக்கா தெளிவாகத்தான் இருக்கிறாள்’ என்று நினைத்த தயா அதற்கு மேல் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

“எப்படி இருக்கீங்கமா?” அபிராமி மறுநாளே வீட்டிற்கு வந்திருக்க, மாலையளவில் அவரிடம் நலம் விசாரிக்க வந்தான் கதிர்நிலவன்.

“உங்க உதவியால் நல்லா இருக்கேன் தம்பி…” என்றார் அபிராமி.

“உடம்பை பார்த்துக்கோங்கமா…”

“சரிங்க தம்பி. ஆனா நீங்க ஏன் தம்பி முன் போல எங்ககிட்ட எல்லாம் பேசுறது இல்லை? நாங்க எதுவும் தப்பு செய்துட்டோமா?” வெகுநாட்களாக அவனிடம் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டுவிட்டிருந்தார்.

அவர்களை விட்டு சற்று தள்ளி நின்றிருந்த நயனிகாவின் மனம் படபடவென்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.

“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. எப்பவும் தனியாக இருந்து பழகிட்டேன். அப்படியே இருந்துட்டு போவோம்னு தான்…” என்றவன் அங்கே நயனிகாவும் ஒருத்தி இருக்கிறாள் என்பதைக் கண்டுகொள்ளவே இல்லை.

‘என்னை இப்படிக் கொஞ்சம் கூடக் கண்டுக்க மாட்டேங்கிறாரே. இவர் மனதில் நான் எப்படித்தான் இடம் பிடிக்க? நான் தள்ளி நிற்கிற வரை அவர் மனதை மாற்றவே முடியாதோ? நெருங்கினால் என்னை இன்னும் வெறுத்துடுவாரோன்னு பயமா வேற இருக்கே. நான் என்ன தான் செய்வது?’ அவனை நெருங்கும் வகையறியாது தவித்துப் போனாள் நயனிகா.

அவளின் தவிப்பையோ வேதனையைப் பற்றியோ சற்றும் கவலைப்படாமல் சற்று நேரம் மட்டும் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்று விட்டான் கதிர்நிலவன்.

நயனிகாவின் படிப்பு ஒரு பக்கம் சென்று கொண்டிருந்தாலும், கதிர்நிலவன் மீதான காதலும் விருட்சம் போல் வளர்ந்து கொண்டிருந்தது.

ஆனால் அவனை நெருங்கத்தான் அவளுக்கு எந்தச் சந்தர்ப்ப சூழ்நிலையும் அமையவில்லை.

கதிர்நிலவனும் முன்பை விட விலகியும் போனான்.

நாட்கள் செல்ல, நயனிகாவின் முதுகலை படிப்பின் முதல் வருடம் முடிந்து விடுமுறையும் விடப்பட்டது.

அன்று மாலை அன்னை சொன்ன பொருட்களை வாங்கிக்கொண்டு கடையிலிருந்து வந்த நயனிகா தன் வண்டியை தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டுப் பொருட்கள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

“ஏன்மா, ஒரு நிமிஷம்…” என்று அவளின் பின்னாலிருந்து யாரோ அழைக்க, நின்று திரும்பி பார்த்தாள்.

ஒரு நடுத்தர வயதானவர் நின்று கொண்டிருந்தார்.

“இந்தப் பில்டிங்ல கதிர்நிலவன்னு ஒருத்தர் இருக்காரே. அவரைத் தெரியுமா?” என்று கேட்டார்.

இதுவரை அவனைத் தேடிக் கொண்டு இப்படி யாரும் வந்ததில்லை என்பதால் வியப்புடன் அவரைப் பார்த்தாள்.

“தெரியுமே. எங்க எதிர் வீடு தான். ஏன் கேட்குறீங்க?”

“அப்போ ரொம்ப நல்லதா போச்சு. அவர் ஆள் எப்படிமா?” என்று கேட்டவரை இப்போது சந்தேகத்துடன் பார்த்தாள் நயனிகா.

“ஆள் எப்படினா? என்ன கேட்க வர்றீங்க. அவரைப் பத்தி எதுக்கு விசாரிக்கிறீங்க? யார் நீங்க?” என்று கேட்டாள்.

“என்னமா நீ இத்தனை கேள்வி கேட்கிற?”

“நீங்க யாருன்னு தெரியாம எப்படிங்க ஒருத்தரை பத்தி சொல்ல முடியும்?”

“விவரமாத்தான் இருக்கமா. எனக்கு ஒரு பொண்ணு இருக்குமா. அவளுக்குக் கதிர்நிலவனைத் தான் மாப்பிள்ளையா பார்த்துட்டு இருக்கோம். மேட்ரிமோனி வழியாத்தான் பார்த்தோம். என் பொண்ணுக்கு ஒரு கால் ஊனம். அந்தத் தம்பிக்கும் ஒரு கை ஊனம்னு விவரம் இருந்தது.

அதுக்காக ஒன்னும் விசாரிக்காம பொண்ணைக் கொடுத்துட முடியாதே? அந்தத் தம்பிக்கிட்ட போனில் கேட்டப்ப சில விவரம் எல்லாம் சொல்லுச்சு. ஆனாலும் பொண்ணு கால் தான் ஊனமா போயிருச்சு. வாழ்க்கையாவது எந்தப் பிரச்சனையும் இல்லாம இருக்கணுமேன்னு தான் மாப்பிள்ளை பத்தி விசாரிக்க வந்திருக்கேன்மா. அந்தத் தம்பியை பத்தி உனக்குத் தெரிஞ்ச விஷயத்தைச் சொல்லும்மா…” என்று அந்தப் பெரியவர் சொல்ல,

நயனிகா உறைந்து போய் நின்றிருந்தாள்.

என்றைக்கு இருந்தாலும் கதிர்நிலவன் தனக்குத்தான். அவன் கல்யாணமே செய்து கொள்ளப் போவதில்லை என்று சொன்னாலும் ஒரு நாள் அவன் மனதை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் தான் இத்தனை நாட்களும் விட்டுப்பிடித்தாள்.

ஆனால் கல்யாணமே செய்து கொள்ளப் போவதில்லை என்றவன், இப்போது திருமணத்திற்குப் பெண் தேட ஆரம்பிப்பான் என்பதை எதிர்பாராதவள் அதிர்ந்து போனாள்.

“என்னமா எந்தப் பதிலும் சொல்ல மாட்டீங்கிற? அவரைப் பத்தி உனக்குத் தெரியுமா? தெரியாதா?” என்று அவர் கேட்டதும் தன் அதிர்விலிருந்து வெளியே வந்தாள்.

“கதிர்…” என்றவள் அவரிடம் ஏதோ சொல்ல, அதைக் கேட்டு இப்போது அதிர்வது அவரின் முறை ஆகிற்று.

அவர் அங்கிருந்து சென்று விட, ஒரு முடிவுக்கு வந்தவளாக வேகமாக மேலே சென்றாள்.

அவளின் பார்வை கதிர்நிலவன் வீட்டை நோக்கி பாய்ந்தது.

அவன் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருந்தான்.

உடனே தன் வீட்டிற்குச் சென்று அவன் வரும் நேரத்திற்காகக் காத்திருந்தாள்.

அவன் வர ஒரு மணிநேரம் ஆனது. அந்த ஒரு மணிநேரத்தில் அவள் மனம் துடிதுடித்துக் கொண்டிருந்தது.

இப்படிச் செய்து விட்டானே? என்று அவள் மனம் ரணமாக வலித்தது.

அவன் வந்த சத்தம் கேட்டதும், அன்னையிடம் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டு வெளியே சென்றாள்.

கதிர்நிலவன் அப்போது தான் உள்ளே சென்று கதவை அடைத்து விட்டு படுக்கையறையை நோக்கி நடக்க, நயனிகா அழைப்பு மணியை அழுத்தியிருந்தாள்.

மீண்டும் வந்து கதவை திறந்தவன் நயனிகாவை பார்த்ததும், “என்ன?” என்றான்.

அவனின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவன் நெஞ்சில் கை வைத்து அவனை உள்ளே தள்ளிவிட்டு தானும் உள்ளே நுழைந்தாள்.

“ஏய் நயனிகா, என்ன பண்ணிட்டு இருக்க? வெளியே போ…” என்றான் கோபமாக.

“போதும் கதிர். உங்க எனர்ஜியை வேஸ்ட் பண்ணாதீங்க. நான் பேச வந்ததைப் பேசாம இங்கே இருந்து போக மாட்டேன்…” என்றவள் கதவையும் கையோடு மூடினாள்.

“உன் மனசில் என்ன நினைச்சுட்டு இருக்க நயனிகா? இப்ப எதுக்கு அநாகரிகமா நடந்துக்கிற?”

அவளின் செயலில் அவனின் கோபம் அதிகமாகியது.

“என் மனதில் என்ன இருக்குன்னு நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லிட்டேன் கதிர். ஆனால் நான் சொன்னதை ஏதோ விளையாட்டுக்கு சொன்னேன்னு நினைச்சுட்டீங்கல? என் காதல் விளையாட்டு இல்லை கதிர். என் உணர்வோட கலந்து என் உயிரோடு உறைந்து போயிடுச்சு. ஆனா அது உங்களுக்குப் புரியவே இல்லைல?

புரிஞ்சிருந்தால் இப்படி ஒரு காரியம் பண்ணிருப்பீங்களா? நான் விலகி இருக்கவும், மொத்தமா உங்களை விட்டு விலகிட்டேன்னு நினைச்சீங்களா கதிர்?

அஷ்வத் மாதிரி நானும் உங்களுக்கு டார்ச்சரா மாறிட கூடாதுன்னு தான் தள்ளி இருந்தேன் கதிர். அஷ்வத் காதல் மாதிரி என் காதல் இல்லைனு உங்களுக்குப் புரிய வைக்கத்தான் தள்ளியிருந்தேன். ஆனா நீங்க அதை உங்களுக்குச் சாதகமா எடுத்துட்டு இப்படிப் பண்ணிட்டீங்களே?” என்றவளுக்கு உணர்ச்சிவசத்தில் கண்ணீர் வர ஆரம்பித்தது.

“இப்ப என்ன நடந்ததுன்னு இங்கே வந்து இவ்வளவு நீளமா பேசிட்டு இருக்க?” என்று எரிச்சலுடன் கேட்டான்.

“என்ன நடந்ததா? நீங்க உங்க வாழ்க்கையில் காதலும் இல்லை, கல்யாணமும் இல்லைன்னு தானே சொன்னீங்க? ஆனா இப்போ உங்களுக்குப் பொண்ணு தேடிட்டு இருக்கீங்களே… அப்போ என்னை விலகி போக வைக்கப் பொய் தானே சொன்னீங்க?” என்று கேட்டாள்.

‘இவளுக்கு எப்படித் தெரிந்தது?’ என்பது போல் அவன் பார்த்துக் கொண்டு நிற்க,

“என்ன இவளுக்கு எப்படித் தெரிஞ்சதுன்னு பார்த்தீங்களா? அந்தப் பொண்ணோட அப்பா என்கிட்ட தான் உங்களைப் பத்தி விசாரிக்க வந்தார்…” என்று அவள் சொல்ல, மெல்லிய திடுக்கிடலுடன் அவளைப் பார்த்தான்.

“என் நேரத்தை பார்த்தீங்களா? நான் லவ் செய்றவர் கல்யாணத்துக்கு என்கிட்டயே விசாரிக்க வர்றாங்க…” என்றாள் விரக்தியுடன்.

“அவங்ககிட்ட நீ என்ன சொன்ன?” யோசனையுடன் கேட்டான்.

“நானும் கதிரும் லவ் பண்றோம். எங்களுக்கு இன்னும் கொஞ்ச நாளில் கல்யாணம் நடக்கப் போகுதுன்னு சொன்னேன். மனுஷன் பேசாம போயிட்டார்…”

“ஏய், என்ன காரியம் பண்ணி வச்சுருக்க? உன்னை யார் அப்படிச் சொல்ல சொன்னா? நான் உன்னை லவ் பண்றேன்னு எப்ப சொன்னேன்?” என்று அவன் கோபத்துடன் கேட்க, அசையாமல் அவனைப் பார்த்தாள்.

“வேற யாரையோ கல்யாணம் பண்ண நினைக்கிற நீங்க, உங்களை விரும்புற என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்கிறீங்க கதிர்? உங்க வாழ்க்கை துணையா வர முடியாத அளவுக்கு மோசமான பொண்ணா நான்?” என்று வேதனையுடன் கேட்டாள்.

“இதோ பார் நயனிகா, நான் யாரை கல்யாணம் பண்ணனும்னு நான் முடிவு பண்ணிக்கிறேன். நீ இடத்தைக் காலி பண்ணு. இன்னொரு முறை என் வீட்டுக்கு வராதே. உனக்கு உன் பெயரை பத்தி கவலை இல்லாமல் இருக்கலாம். ஆனா எனக்கு என் பெயரை பத்தி கவலை இருக்கு. என் பெயர் கெட்டுப் போவதில் எனக்கு விருப்பம் இல்லை. இங்கிருந்து போ…” என்றான்.

“போறேன் கதிர். நான் போய்டுறேன். ஆனா நான் திரும்ப இந்த வீட்டுக்கு வருவேன் என் அப்பா, அம்மாவோட…” என்றவளை அவன் திகைத்துப் பார்க்க,

“என்ன அப்படிப் பார்க்கிறீங்க? உங்களுக்கு என்னோட காதல் தானே வேண்டாம். ஆனா என் அப்பா அம்மாவோட வந்து உங்களை முறைபடி கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லையா? உங்களுக்குத் தேவை கல்யாணம் பண்ணிக்க ஒரு பொண்ணு தானே? அது நானா இருந்துட்டு போறேன். இப்போ போறேன். திரும்ப அவங்களோட வர்றேன்…” என்று தீர்மானமாகச் சொன்னவள் உடனே அந்த வீட்டை வெளியேறினாள்.

அவள் கதவை திறந்து வெளியே சென்ற அதே நேரம் வெளியே இருந்து வந்த ஞானசேகரனின் கண்ணில் பட்டுவிட்டாள்.

மகளைக் கூர்மையுடன் பார்த்தவர், “எங்கே போய்ட்டு வர்றமா?” என்று கேட்டார்.

“அப்பா, அது கதிர்கிட்ட பேச…” என்றவள் லேசாகத் தயங்கினாள்.

அவனிடம் வீராப்பாக அன்னை, தந்தையிடம் தன் காதலை சொல்லி அழைத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டாலும் தந்தையைத் திடீரென்று நேரில் பார்க்கவும் நடுக்கம் உண்டானது.

“ஓஹோ! அந்த அளவுக்குப் போயாச்சா? உள்ளே போ…” என்று தங்கள் வீட்டிற்குள் போகச் சொன்னவர், தானும் பின்னால் நுழைந்தார்.

“அபிராமி… அபிராமி… அந்தக் கிச்சனுக்குள்ளயே என்ன குடைந்து கொண்டு இருக்க? இங்க வா…” வீட்டிற்குள் நுழைந்ததும் மனைவியைக் கோபமாக அழைத்தார்.

“என்னங்க?” என்று அபிராமி வர,

“என்ன நொன்னங்க? இந்த வீட்டில் சமையல் செய்வது மட்டும் தான் உன் வேலையா? உன் மகள் எங்கே போனாள்னு கேளு…”

“கீழே வண்டியை சரியா பூட்டிருக்கேனான்னு சந்தேகம் வந்துருச்சுமா. அதைப் பார்த்துட்டு வர்றேன்னு போனாள்…” என்றார்.

தான் அன்னையிடம் பொய் சொல்லிவிட்டுப் போனது உண்மை தான். ஆனால் கதிர்நிலவன் வீட்டிற்குச் சென்றதற்குத் தந்தை இவ்வளவு கோபம் கொள்வார் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

அதனால் நயனிகா தந்தையைப் பயத்துடன் பார்த்தாள்.

“அவ என்ன பொய் சொன்னாலும் அப்படியே நம்பிடுவீயா? உன் பொண்ணு வண்டியை செக் பண்ண போகலை. அந்தக் கையில்லாத எதிர்வீட்டுக்காரன் வீட்டுக்கு போய்ட்டு வர்றா. அதுவும் எப்படி? இவ்வளவு நேரம் உள்ளே கதவை மூடிக்கிட்டு, கதவை திறந்து வெளியே வர்றாள். இவளுக்கு எவ்வளவு தெனாவெட்டு இருக்கணும்?” என்று ஞானசேகரன் கோபத்துடன் கத்த,

தந்தை சொன்ன கையில்லாதவன் என்ற வார்த்தையில் திடுக்கிட்டு அவரைப் பார்த்தாள் நயனிகா.

அவனுக்குக் கை இல்லாதது தந்தைக்கும் தெரிந்துவிட்டதா என்ற திடுக்கிடல் இல்லை அது.

தங்களுக்குப் பெரிய பெரிய உதவி செய்தவன் என்பதையும் மறந்து தந்தை அவனின் உடல்குறையைச் சொல்லி இழிவாகப் பேசியதால் வந்த திடுக்கிடல் அது.

அதுவும் தந்தையின் கோபம் அவளுக்கு வித்தியாசமாகத் தோன்றியது. தன் காதல் விஷயம் தந்தைக்கே தெரிந்து விட்டதோ? அதனால் தான் கோபமோ? என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அது தான் உண்மை என்பதை ஞானசேகரன் அடுத்ததாகப் பேசிய பேச்சு எடுத்துரைத்தது.

“உன் பொண்ணு என்ன பண்றா தெரியுமா? லவ் பண்றா… அதுவும் யாரை தெரியுமா? அந்தக் கை இல்லாதவனை…” என்று மனைவியிடம் பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னவர்,

“உனக்கு என்ன புத்தி புல் மேய போகுதா? ஒரு கை இல்லாதவனைப் போய் லவ் பண்றீயே… அறிவில்லை உனக்கு? ஒரு கை இல்லாதவனுக்கு உன்னைக் கட்டிக் கொடுப்பேன்னு எப்படி நினைச்ச? நீ நினைப்பது கனவில் கூட நடக்காது…” என்று மகளிடம் கோபத்துடன் கத்தினார் ஞானசேகரன்.

நயனிகாவோ நடப்பது எதுவும் புரியாமல் விதிர்த்துப் போய் நின்றிருந்தாள்.