14 – உனதன்பில் உயிர்த்தேன்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 14
காலையில் எழுந்து குளித்து விட்டு, கிளம்பி கூடத்திற்கு வந்தான் வைரவேல்.
கூடத்தில் இருந்த கண்ணாடி முன் நின்று தலையை வாரியவன், “இன்னைக்கு லோட் ஏத்த பக்கத்தூருக்கு போவணும் அப்பத்தா. வெரசா சோத்தைப் போடும்…” என்று அடுப்படியில் இருந்த அப்பத்தாவிடம் சொன்னான்.
அப்பத்தா சோறு சட்டியையும், குழம்பு சட்டியையும் எடுத்துக் கூடத்தில் வைத்தார்.
வேலையைத் தன்போக்கில் தொடர்ந்து கொண்டிருந்தாலும் அவரின் கண்கள் கூடத்தில் நின்றிருந்த பேரனையும் பார்க்க தவறவில்லை.
அப்பத்தாவின் பார்வையை உணர்ந்தாலும் அதைப் பற்றி எதுவும் கேட்காமல் கையைக் கழுவிவிட்டு சாப்பிட அமர்ந்தான்.
சில நாட்களாக அவரின் பார்வை அவனைத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
கேள்வியுடன் ஒரு பார்வை, சிந்தனையுடன் ஒரு பார்வை, எதிர்பார்ப்புடன் ஒரு பார்வை என்று அவரின் பார்வையில் இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்து கொண்டு தான் இருக்கிறான்.
அவரின் பார்வைக்கான அர்த்தம் அவனுக்கே புரிந்து தான் இருந்தது. ஆனால் தனக்கே பதில் தெரியாத போது அவருக்கு என்னவென்று விளக்கம் சொல்வான்?
தட்டில் சோற்றைப் போட்டுக் குழம்பை ஊற்றிய அப்பத்தா, “என்ன லோடு ஏத்த போறய்யா?” என்று கேட்டார்.
“பருத்தி லோடுக்கு வண்டி கேட்டுருக்காக அப்பத்தா. டவுனுக்குக் கொண்டு போவணும்…” என்று அவருக்குப் பதில் சொல்லிக் கொண்டே உணவை உண்ண ஆரம்பித்தான்.
“எய்யா வேலு, நா கேக்குறேன்னு சடவு ஆகிப்புடாதே. நானும் கேக்கணும் கேக்கணும் நினைச்சு, ஒ மனசு ஆறட்டுமேனு நாள தள்ளிப் போட்டுட்டே வாறேன்…” என்று பீடிகையுடன் ஆரம்பித்தார் அப்பத்தா.
அவர் என்ன கேட்க போகிறார் என்று புரிந்ததும், உணவை அள்ளி வாயின் அருகே கொண்டு போனவனின் கை அப்படியே நின்று போனது.
“விழுங்குயா… உம் மனசு எமக்குப் புரியுது தேன். அதுக்காக இதை அப்படியே விட்டுப்போட முடியாதுயா. என்னைக்கா இருந்தாலும் பேசி தீர்த்துப் போட்டுத்தேன் ஆவோணும்…” என்றார்.
“ம்ம்…” என்று முனங்கியவன் கையில் இருந்த உணவை வாயில் வைத்தான்.
“அந்தப் புள்ள விசயத்துல என்ன செய்யப் போறய்யா?” என்று நேராக விஷயத்திற்கு வந்தார்.
“செய்றதுக்கு என்ன இருக்கு அப்பத்தா?” என்று திரும்பி கேட்ட பேரனை தீர்க்கமாகப் பார்த்தார்.
அவரின் பார்வையைச் சந்திக்காமல் உணவை எடுப்பது போல் குனிந்து கொண்டான்.
“நீர் கட்டுன தாலி அந்தப் புள்ள கழுத்துல கிடக்குய்யா. நீர் உறவு வேணாம்னு சொன்னாலும் வூரு ஒலகம் அவளை உம் பொஞ்சாதின்னு தேன் சொல்லும்…” என்றார் அழுத்தமாக.
விலுக்கென்று தலையை நிமிர்த்திப் பார்த்தவன், “எம் பொஞ்சாதி குமுதா மட்டுந்தேன் அப்பத்தா…” என்றான் பட்டென்று.
“அப்படிச் சொல்லி யாரை ஏமாத்திக்கிடுறயா? என்னையவா? இல்ல, உம்மை நீரே ஏமாத்திக்கிடுறீரா?”
“நா யாரையும் ஏமாத்தலை அப்பத்தா…” என்றான் முகம் இறுக.
“எமக்கும் கண்ணு தெரியும் ராசா. நீர் செய்றதை எல்லாம் பார்த்துப் போட்டு தேன் கிடக்குறேன்…” என்றார்.
“இப்ப என்னாத்துக்கு இந்தப் பேச்சு அப்பத்தா?” என்றான் சலிப்பாக.
“வேற எப்ப பேசுறது? நீரும் அந்தப் புள்ள கழுத்துல தாலி கட்டி ஒரு மாசத்துக்கு மேல ஆவ போவுது. ஒன்னு குமுதாவை மட்டும் பொஞ்சாதியா நினைக்கிறவன், அவ உறவை அத்து விட்டு தாலியை வாங்கிப் போட்டு வந்திருக்கணும்.
இல்லையா, அதைச் செய்யப் போன உம் மாமனாரையாவது தடுக்காம இருந்திருக்கணும். அதை விட்டுப் போட்டு அந்தத் தாலியை கழட்டக் கூடாதுன்னு மாமனாரையே எதிர்த்து நின்னுருக்கீரு. அப்ப அந்தத் தாலிக்கு என்ன அர்த்தம் ராசா?” என்று கூர்மையாகக் கேட்டார்.
அவரின் மனதிற்குள் ஓர் எண்ணம் இருந்தது. அதை நிறைவேற வேண்டும் என்றால் பேரனை பேச வைக்க வேண்டும் என்றே கடுமையாகக் கேட்டார்.
அதுதானே அவனுக்கும் தெரியவில்லை. அது தெரியாமல் தானே அவள் முகம் பார்க்க கூசி ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறான்.
அவன் மௌனமாக இருக்க, “நீர் ஓடி ஒளிஞ்சது அம்புட்டும் போதும் ராசா. அவ பரம்பரையை எமக்குப் பிடிக்காது தேன். ஆனா அவ ஆத்தாவும், அவளும் உத்தமின்னு இந்தக் கிழவிக்கு நல்லா தெரியும்யா. ஓ வாழ்க்கையும் ஆரம்பிச்ச வேகத்துலையே பட்டுப்போச்சு.
எங்க நீரு ஒத்தக்கட்டையாவே வாழ்க்கைய கழிச்சு போடுவீரோன்னு விசனப்பட்டுப் போய்க் கிடந்தேன். ஆனா அதுக்கு ஒரு விடிவு வந்துருக்கு. பேசாம அந்தப் புள்ளய சேர்த்துக்கோயா…” என்று அப்பத்தா சொல்லவும், அவனின் முகம் இறுகி போனது.
“போதும் அப்பத்தா! இனி இப்படிப் பேசாதீர்…” என்றவன் பாதிச் சாப்பாட்டில் வேகமாக எழுந்தான்.
“எய்யா வேலு… கோவபடாத! உட்காந்து சாப்புடு…” என்று அவனின் கையைப் பிடித்தார்.
கோபம் இருந்தாலும் தான் சாப்பிடாமல் போனால் அவரும் சாப்பிட மாட்டார் என்று நினைத்தவன், மீண்டும் அமர்ந்தான்.
அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தார் அப்பத்தா.
அவன் உண்டு முடித்துக் கை கழுவியதும், “நீரு இப்படி ஒத்தையா கிடந்தா எங்கட்ட கூட வேகாது ராசா. போனவ ஆயுசு முடிஞ்சி போச்சு. போய்ச் சேர்ந்துட்டா. அதுக்காக இப்ப அந்தச் சாமியே கொடுத்த வாழ்க்கையை வேணாமுன்னு சொல்லலாமாயா?” என்று கேட்டார்.
“எது இது சாமி கொடுத்த வாழ்க்கையா? நா புத்தி பேதலிச்சுப் போய்ச் செய்த பெரிய தப்பு அப்பத்தா அது. அதை நியாயப்படுத்த பாக்காதீர். நா ஒத்தையா வாழணும்னு தேன் சாமி எமக்கு விதிச்சது. அதை மாத்த நினைக்காதீர்!
இன்னும் அந்தப் புள்ள கழுத்துல தாலியை நா விட்டு வச்சுருக்கேனா, அது அந்தப்புள்ள அதுக்கு வேலியா இருக்கட்டும்னு கேட்டுக் கிட்டதால மட்டுந்தேன். வேற எந்த நினைப்பும் எம் மனசுல இல்ல…” என்று கோபமாகச் சொன்னவன், அடுத்த நிமிடம் அங்கே நிற்காமல் மினி வேனை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
“ஆத்தா மகமாயி, இந்தப் பய இப்படிச் சொல்லிப் போட்டு போறானே. இதுக்கு விடிவு இல்லையா?” என்று அண்ணாந்து மேற்கூரையைப் பார்த்து புலம்பினார் அப்பத்தா.
அப்பத்தாவின் மனம் தேன்மலரை தன் வீட்டு மருமகளாக ஏற்றுக்கொள்ள, மனைவியாக ஏற்றுக்கொள்ள வேண்டியவன் நிலை?
வண்டியை ஓட்டி சென்றவனின் மனம் நிலையில்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது.
அவனும் அவள் கழுத்தில் தாலி கட்டிய நாளிலிருந்து மனதிற்குள் குமைந்து போனான்.
குற்றவுணர்வு அவனின் மனதை அரித்துக் குடைச்சல் கொடுத்துக் கொண்டே தான் இருந்தது.
அந்தக் குற்றவுணர்வினால் தான் தேன்மலரின் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்க முடியாமல் விலகி போனான்.
அவள் வாழ்க்கையை இப்படிப் பாழாக்கி விட்டோமே என்ற உணர்வில் அவனின் மனமே அவனை நிம்மதியாக இருக்க விடவில்லை.
இப்போதும் அவள் வாழ்க்கை அவனால் தான் பாழாகி கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல் போனான்.
அதோடு இந்தக் குழம்பிய நிலையிலும் தான் செய்த தவறுக்கு தன்னையே நொந்து கொண்டானே தவிர, அவள் கழுத்தில் இன்னும் ஏன் தாலியை விட்டு வைக்க வேண்டும் என்று மட்டும் அவன் நினைக்கவே இல்லை. விலகி போக மட்டுமே நினைத்தான்.
அப்படி விலகி போனதற்காகவே பின்னாளில் தான் வருந்த வேண்டியது இருக்கும் அறிந்திருந்தால் விலகி இருக்க மாட்டானோ?
அன்று இரவு திண்ணையில் படுத்திருந்தார் அப்பத்தா.
நள்ளிரவு திடீரென முழிப்பு வர, கண்விழித்துப் பார்த்தார். அப்போது போர்வையைத் தலை மேல் போர்த்திக் கொண்டு தேன்மலரின் வயலின் பக்கம் இருந்து ஒரு உருவம் ஓடி வருவதைக் கண்டார்.
களவாணி பயலோ? என்று நினைத்து எழுந்து அமராமல் படுத்துக் கொண்டே கூர்ந்து கவனித்தார்.
தெரு விளக்கின் வெளிச்சத்தில் அவ்வுருவம் தெருவுக்குள் நுழைந்ததைக் கண்டார்.
வேகமாக வந்த அந்த உருவம் அவர்களின் வீட்டை தாண்டி எதிர்சாரியில் இருந்த மூன்றாவது வீட்டிற்குள் நுழைவதை கண்டு அதிர்ந்து போனார்.
வீட்டிற்குள் நுழைந்ததும் இயல்பாகத் தன் போர்வையை விலக்கி கதவை மூடிய ராமரை கண்டு விட்டிருந்தார்.
இவன் எதுக்கு அவ வீட்டுப்பக்கம் இருந்து இப்படி வர்றான் என்று யோசித்தார்.
அப்போது தான் அவருக்குச் சில விஷயங்கள் ஞாபகத்தில் வந்தன.
பேரன் அவளுக்குத் தாலி கட்டிய அன்று ராமன் தான் எல்லா விஷயத்திலும் முன் நின்றான். மறுநாளும் பேரனின் மாமனாரை தூண்டி விட்டவனும் ராமர் தான்.
அது நினைவில் வந்ததுமே இத்தனை நாளில் இதை மறந்து போனோமே என்று வருந்தினார்.
எத்தனை நல்லவனாக நடித்தாலும் சிலரின் சாயத்தைச் சிலர் அடையாளம் கண்டுகொள்வது உண்டு. அப்பத்தாவும் ராமரின் குள்ளநரி தனத்தை அறிந்தவர் தான்.
சுற்றி முற்றி உறவினன் என்ற முறையில் அவனின் குணத்தை ஓரளவு அறிந்திருந்தார்.
ராமர் வீட்டிற்குள் சென்றதும் அவனைத் துரத்திக் கொண்டு வந்த ராசு அவரின் வீட்டின் முன் நின்று சுற்றிலும் தேடிப் பார்த்தபடி குரைத்தது. பின் ராமரின் வீட்டின் அருகே சென்று அவன் வீட்டு பூட்டிய கதவை பார்த்து குரைப்பதையும் கண்டார்.
அதிலேயே ராமர் ஏதோ திருட்டு வேலை செய்திருக்கிறான் என்று புரிந்து போனது. அதுவும் அவன் கை வரிசை காட்டியது பேரனின் புது மனைவியிடம் அல்லவா?
காலையில் முதல் வேலையாகப் பேரனிடம் இது பற்றிப் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.
ஆனால் மறுநாள் அதிகாலையிலேயே இன்னொரு ஊரில் லோடு ஏற்ற போக வேண்டும் என்று வைரவேல் கிளம்பி சென்று விட, அவரால் அது பற்றிப் பேச முடியாமல் போனது.
அன்று இரவும் வெகுநேரம் கழித்தே வீடு வந்து சேர்ந்தவன், குளித்துச் சாப்பிட்டு விட்டு நேராக அறைக்குள் சென்று படுத்துவிட்டான்.
இந்த ஒரு மாதமாக அவன் தன் அறையில் தான் படுத்துக் கொள்கிறான். தன் குற்றவுணர்வை குறைக்க மனைவியின் புகைப்படத்தை அணைத்துக் கொண்டு படுத்திருப்பதே இப்போது அவனின் வழக்கமாகியிருந்தது.
பேரனின் சோர்வை பார்த்து அப்பத்தாவிற்கு அப்போதும் அவனிடம் பேச முடியாமல் போனது.
ஆனால் தூங்காமல் விழித்திருந்தார். இன்றும் ராமர் வயல் பக்கம் போகிறானா என்று கவனிக்க நினைத்தார்.
கண்களில் உறக்கம் சொக்கினாலும் வம்படியாக விழித்திருந்தார்.
நேரம் நள்ளிரவை வந்தடைய, ராமரின் வீட்டுக் கதவு மெதுவாகத் திறப்பதை கண்டு கொண்டார்.
படுத்தபடி அவனைக் கவனிக்க ஆரம்பித்தார். வீட்டின் வெளியே வந்ததும், சுற்றி முற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு போர்வையை எடுத்து தலை மேல் போர்த்திக் கொண்டவன், வேகமாக நடக்க ஆரம்பித்தான்.
நேராகத் தேன்மலரின் வீட்டின் பக்கம் செல்வதைப் பார்த்து விட்டவர், அதற்கு மேல் படுத்திருக்க முடியாமல் எழுந்து விட்டார்.
ஏதோ தவறாக நடக்கப் போவதாக உள்ளுணர்வு உணர்த்த, எழுந்து வீட்டிற்குள் சென்றார்.
கதவை திறந்து வைத்தே தூங்கி கொண்டிருந்த பேரனிடம் சென்றார்.
“எய்யா வேலு…” என்று அவர் ஒரு குரல் கொடுத்ததுமே பட்டென்று விழிகளைத் திறந்தான்.
“அப்பத்தா… அதுக்குள்ளே விடிஞ்சிருச்சா?” என்று கேட்டான்.
“இல்லையா, சாமம் தேன் ஆவது. வெரசா எழுந்திருய்யா…” என்று அவசரப்படுத்தினார்.
“என்னாச்சு அப்பத்தா? மேலுக்கு எதுவும் சுகமில்லையா?” என்று பதட்டமாக எழுந்து கேட்டான்.
“ஏ மேலுக்கு நல்லாத்தேன் இருக்குய்யா. ஆனா அந்தப் புள்ளக்கு தேன் ஏதோ பிரச்சனை. என்னன்னு போய்ப் பாரு…” என்றான்.
தூக்கத்தில் எழுப்பித் திடீரென அந்தப் புள்ளக்குப் பிரச்சனை என்றதும் அவனுக்குச் சட்டென்று ஒன்றுமே புரியவில்லை.
“யாரு அப்பத்தா? கெட்ட கனா எதுவும் கண்டீரா?” என்று கேட்டான்.
“எய்யா, உம் பொஞ்சாதிக்கு தேன் அந்த ராமரால ஏதோ பிரச்சனை. மொதல போய் என்னன்னு பாருய்யா…” என்றார் பதட்டமாக.
“எம் பொஞ்சாதியா? அப்பத்தா… எம் பொஞ்சாதி தேன் போய்ச் சேர்ந்துட்டாளே? ஏதோ கெட்ட கனா தேன் கண்டீரு போலருக்கு. தின்னூரை அள்ளி நெத்தில பூசிட்டுப் போய்ப் படும். கனா வராது…” என்றான்.
“என்னய்யா நீரு இப்படி விவரம் கெட்டத்தனமா இருக்கீரு? ஒ ரெண்டாவது பொஞ்சாதி அந்தத் தேனு புள்ள வூட்டு பக்கமே நடுசாமம் ஆனா அந்த ராமரு பய போயிட்டு வர்றான். அங்கன போய் என்ன செய்றான்னு தெரியல. அவ நாயி அவனைத் துரத்திக்கிட்டே வருது.
அதுக்குள்ளார, இவன் அவன் வூட்டுக்குள்ளார போய் அடைஞ்சிக்கிறான். இப்பவும் செத்த நேரத்துக்கு முன்னாடி தேன் போர்வையை முக்காடு போட்டுக்கிட்டு அவ வூட்டுப்பக்கம் போறான். போய் என்னன்னு பாருன்னா வியாக்கியானம் பேசிட்டு இருக்கீரு…” என்று கோபமாகக் கடிந்து கொண்டார்.
அவர் தேன்மலரை தன் இரண்டாவது மனைவி என்றதும் திடுக்கிட்டவன், அடுத்து சொன்னதைக் கேட்டு முன்னதைப் பின்னே தள்ளியவனாக வேகமாகக் கட்டிலை விட்டு கீழே இறங்கினான்.
“தினமும் ராவுல போறானா?” என்று கோபமாகக் கேட்டான்.
“தெரியலையே, நா நேத்து ராவுல தேன் பார்த்தேன். இப்பவும் போறான்…” என்றார்.
கதவின் மீது தொங்கவிட்டிருந்த சட்டையை எடுத்து வேகமாக மாட்ட ஆரம்பித்தான்.
“நீரு அந்தப் புள்ள கழுத்துல தாலி கட்டின அன்னைக்கும் அந்த ராமரு பயதேன் வூருக்குள்ளார வந்து ஆளுகளைக் கூட்டிட்டுப் போனது. அவனுக்கு எப்படி நீரும், அவளும் வயலுக்குள்ள விழுந்து கிடந்தீருன்னு தெரியும்?
அந்தப் பய தேன் அன்னைக்கும் ஏதோ தகிடுத்தித்தோம் பண்ணிருப்பான் போல, அதுக்குத்தேன் அவ ஓடி வந்து ஒ கூட வயலுல விழுந்திருப்பாளா இருக்கும்…” என்று சட்டையை மாட்டிக் கொண்டே நடந்தவனின் பின் தானும் நடந்த படியே விவரம் சொன்னார்.
வாசல் அருகில் சென்றவன், “இத ஏன் அப்பத்தா நீரு முன்னாடியே சொல்லலை?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான்.
“மறந்து போட்டேன்யா. நீரு வெரசா போரும். பேசிட்டு இருக்க நேரமில்ல…” என்று அப்பத்தா துரிதப்படுத்தவும், வேகமாக வாசலில் இறங்கி ஓடினான்.
ஓடும் போதே, ‘அவள் ஏன் தனக்கு ராமரை பற்றி நேற்றே போன் செய்து சொல்லவில்லை?’ என்று தான் அவனுக்கு முதலில் தோன்றியது.
ராமர் நேற்று மட்டும் தான் தேன்மலரின் வீட்டுப்பக்கம் சென்றதாக நினைத்துக் கொண்டான்.
அவனுக்கு எங்கே தெரியும்? பல நாட்களாக ராமர் அவள் வீட்டுப் பக்கம் சென்று பயமுறுத்துவதும், தேன்மலர் அதனால் ஊன், உறக்கம் இல்லாமல் ஒடுங்கி போனாள் என்றும்.
ராமரின் திட்டமே தேன்மலரை பலவீனம் ஆக்க வேண்டும் என்பது தான்.
முதல் முறை அவளைச் சீண்ட சென்ற போது, உலக்கையை வைத்தே அவனைப் பலமாகத் தாக்கியிருந்தாள். அந்த வலியே அவனுக்கு வெகுநாட்கள் இருந்தது.
அதோடு கத்தியையும் அவள் கையில் வைத்துக் கொண்டு மிரட்டியது அவனின் சினத்தைக் கூடியிருந்தது.
மீண்டும் அவள் பலமுடன் இருக்கும் போது அவளைச் சீண்டினால் சேதாரம் நமக்குத்தான் என்று நினைத்தவன் அவளைப் பலவீனமாக்க, அவளைப் பயம் கொள்ளச் செய்ய நினைத்தான்.
அவன் நினைத்தபடியே நள்ளிரவில் பயத்தையும் காட்டினான்.
அதன்பிறகு, பகலில் தேன்மலரின் உறக்கமில்லா விழிகளையும், அவளிடம் தெரிந்த சோர்வையும் தூரத்திலிருந்து கண்டவனுக்குக் கொண்டாட்டமாகியது.
அவளைப் பலவீனப்படுத்திவிட்டோம் என்ற திருப்தியுடன் இன்று அவளின் வீட்டிற்குள் செல்ல முடிவெடுத்திருந்தான் ராமர்.
எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாகத் தேன்மலரின் வீட்டை நோக்கி ஓடினான் வைரவேல்.
ஓடும் போதே அவளின் போனுக்கும் அழைத்துப் பார்த்தான். ஆனால் அவள் எடுக்கவில்லை என்றதும், அங்கே எந்தச் சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறாளோ என்று நினைத்தவனின் கால்கள் விரைந்தன.
முதலில் வீட்டின் முன் பக்கமாகச் செல்ல, வீடு பூட்டியிருந்தது. ராசு கண்ணில் தட்டுப்படவில்லை.
கதவை தட்டிப் பார்த்தான்.
ஆனால் உள்ளே எந்தச் சத்தமும் கேட்கவில்லை.
லேசாகத் தயங்கி பின் கதவில் காது வைத்துக் கேட்டான்.
“ம்ம்… ம்ம்…” என்று உள்ளிருந்து ஏதோ முனங்கல் சத்தம் கேட்க, பதறி போனவன், “இந்தா புள்ள கதவத் திற…” என்று கதவை படபடவென்று தட்டினான்.
ஆனால் அதற்கு ஒரு பலனும் கிடைக்காமல் போக, அப்போது தான் இந்த வீட்டிற்குப் பின்பக்கம் இருப்பதும் ஞாபகத்தில் வர, பின்னால் ஓடினான்.
அந்தக் கதவை வேகமாகத் தட்ட கை வைத்ததுமே அது திறந்து கொண்டது.
விரைந்து உள்ளே சென்று பார்க்க கதவின் அருகிலேயே ஒரு போர்வை கிடந்தது.
ராமர் போர்வையைப் போர்த்திக் கொண்டு போனான் என்று அப்பத்தா சொல்லியது ஞாபகத்தில் வர, கூடத்தில் ராமரை தேடினான்.
ஆனால் கூடத்தில் யாரும் இல்லாமல் போக, உள்ளறையை நோக்கி ஓடினான்.
அங்கே அவன் கண்ட காட்சியில் ரத்தம் கொதித்துப் போனது.
உடைகள் ஆங்காங்கே கிழிந்து தேன்மலர் கீழே படுத்திருக்க, அவளின் வாயை அழுத்தி மூடிய படி மேலே படுத்து அவளை அழுத்திக் கொண்டிருந்தான் ராமர்.
“டேய்…” என்று ஆத்திரமாகக் கத்திய வைரவேல் ராமரின் தலை மயிரை பிடித்து அவளை விட்டு இழுத்தவன், இழுத்த வேகத்தில் அவனை அப்படியே அப்பால் தள்ளி விட்டான்.
தள்ளி விழுந்த ராமர் மீண்டும் தனக்குத் தடையாக இவனா என்ற வெறியில் வைரவேலுவின் மீது பாய்ந்தான்.
அவனுக்கு முன் தான் சுதாரித்துக் கொண்ட வைரவேல் ஓங்கி ராமரின் வயிற்றில் எத்தினான்.
ராமர் சுருண்டு போய் விழுந்தான். அதோடு தன் ஆத்திரம் அடங்காமல், ராமரின் தலை மயிரை பிடித்து மேலே தூக்கியவன், அவனின் கையைப் பிடித்து முறுக்கினான்.
அதில் ராமர், ஆஆவென்று கத்த, அவனை மேலும் கத்தவிடாமல் அவனின் வாயிலேயே ஒரு குத்து விட்டான்.
ராமரின் வாய் கிழிந்து ரத்தம் பொலபொலவென்று கொட்டியது.
“என்ன தைரியம் இருந்தா எம் பொஞ்சாதி மேலேயே கை வச்சுருப்ப?” என்று ஆத்திரத்துடன் கேட்ட வைரவேல், அவனின் இரண்டு கைகளையும் மாற்றி மாற்றி முறுக்கினான்.
அவனை அறியாமலேயே முதல் முறையாகத் தேன்மலரை தன் பொஞ்சாதி என்று சொல்லியிருந்தான் வைரவேல்.
அவன் முறுக்கிய முறுக்கில், ஒரு கை சொடக்கென்று சத்தம் கேட்க, அதை விடப் பலமடங்கு சத்தமாக அலறினான் ராமர்.
அவனின் கையை உடைத்ததுடன் விடாமல் சுற்றி முற்றி பார்த்தவன் கண்ணில் அங்கே கிடந்த உலக்கை பட, அதை எடுக்கச் சென்றான்.
அதற்குள் ராமர் அங்கிருந்து வேகமாகக் கதவை நோக்கி ஓடினான்.
உலக்கையை எடுத்துக் கொண்டு விரைந்து வந்த வைரவேல், ராமரின் முழங்காலின் மீது ஓங்கி ஒரு அடி போட்டான். அதில் ராமர் அலறிய அலறலில் மரத்தில் அமர்ந்திருந்த பறவைகள் எல்லாம் சிறக்கடிக்க ஆரம்பித்தன.
கையும் காலும் உடைய சுருண்டு விழுந்தான் அப்பெண் பித்தன்.
“இன்னொரு தடவ எம் பொஞ்சாதி பக்கமே நீ திரும்பக் கூடாது…” என்ற வைரவேல் அவனின் தலையிலேயே உலக்கையால் ஓங்கி அடிக்கப் போனான்.
அப்போது, “யோவ்…” என்று தேன்மலரின் தீனமான குரல் கேட்க, அவனை அடிப்பதை விட்டுவிட்டு, உலக்கையைக் கீழே போட்டு விட்டு அவளிடம் ஓடினான் வைரவேல்.
அவனிடமிருந்து உயிரை காத்துக் கொள்ளக் காலை இழுத்துக் கொண்டே வெளியே சென்றான் ராமர்.
இன்னும் எழுந்து கொள்ளாமல் கூட அப்படியே தரையில் கிடந்தாள் தேன்மலர்.
அவளின் சேலை எல்லாம் கிழிந்து கிடந்தது. சட்டையும் ஆங்காங்கே கிழிந்திருக்க, மறைக்கப்பட்ட பாகம் எல்லாம் லேசாகத் தெரிய, பதறிப் போனான் வைரவேல்.
கிழிந்து கிடந்த சேலையை இழுத்து மூடியவனுக்குக் கண்கள் கலங்கி போனது.
அவனை உயிரற்ற பார்வை பார்த்த தேன்மலர், “வந்துட்டீராய்யா?” என்று தீனமாகக் கேட்டவளின் தலை தொங்கி விழுந்தது.