14 – இன்னுயிராய் ஜனித்தாய்

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 14

ஒரு வீட்டில் திருமண வயதில் மகனோ, மகளோ இருந்தால் அவர்களுக்கு வரன் பார்க்கிறீர்களா என்று விசாரித்தால் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்வார்கள் அல்லது ஒன்றும் அமையவில்லை என்று வருத்தப்படுவார்கள்.

ஆனால் செவ்வந்தியோ இரண்டும் இல்லாமல் ஒருவித தவிப்புணர்வை வெளிப்படுத்த அவரைப் புரியாமல் பார்த்தாள் ஷாலினி.

“எந்த வரனும் சரியா அமையலையா மா?” என்று தானே கேட்டவளுக்கும் அவரால் உடனே எந்தப் பதிலும் சொல்லிவிட முடியவில்லை.

தொண்டையில் அடைத்த உணர்வை விழுங்குவது போல் அவரின் தொண்டை நரம்புகள் ஏறி இறங்கின.

இதற்கு மேலும் பதில் சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்று நினைத்தாரோ?

“கல்யாணமே வேண்டாம்னு சொல்றான்மா ஷாலினி…” என்றார் மெல்ல.

“ஏன்மா? கல்யாணம் பண்ணிக்காம என்ன செய்யப் போறாராம்?”

விடவில்லை ஷாலினி!

“இப்படியே தனியாத்தான் இருக்கப் போறானாம்…” என்று அவர் வருத்தத்துடன் சொல்ல,

“அவர் சொன்னா நீங்க ஏன்மா அப்படியே விடணும்? ஒரு பொண்ணைப் பார்த்து கையைக் காட்டினால் யோசிப்பாரே?” என்றாள்.

“இல்லமா…” என்று செவ்வந்தி மீண்டும் தயக்கத்தைத் துணைக்கு அழைத்துக் கொண்டார்.

“என்னம்மா? எதுவாயிருந்தாலும் சொல்லுங்க. நல்ல வரன் அமையலைனா நான் கூட எனக்குத் தெரிந்த இடமாகப் பார்த்துச் சொல்கிறேன்…” என்றாள் ஷாலினி.

“என்ன வரன் பார்த்தாலும் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிப் பிடிவாதம் பிடிக்கிறவனிடம் என்னமா பேச முடியும்? அவன் வாழ்க்கை பிரம்மச்சாரியாகத்தான் முடியணும்னு விதி போலிருக்கு…” என்றார் விரக்தியாக.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“அப்படி எல்லாம் நினைக்காதீங்கமா. அவருக்குன்னு நடக்க வேண்டியது கண்டிப்பா நடந்தே தீரும்! அதை நாமளே நினைச்சாலும் மாத்த முடியாது. அண்ணா மனசும் ஒரு நாள் மாறும்…” அவரை ஆறுதல்படுத்த முயன்றாள்.

“ம்ம்ம்…” என்ற பெருமூச்சை மட்டும் விட்டார் செவ்வந்தி.

அன்று கணவனிடம் பேசும் போது நித்திலனைப் பற்றி அவன் ஏதோ சொல்ல தயங்கியதும், செவ்வந்தி மகன் திருமண விஷயத்தில் இவ்வளவு மென்று முழுங்கி பதில் சொல்வதும் ஷாலினியை யோசனையில் ஆழ்த்தியது.

நித்திலன் விஷயத்தில் ஏதோ ரகசியம் ஒளிந்துள்ளது என்று புரிந்தாலும், அதை எப்படிக் கேட்க என்று அவளுக்குப் புரியவில்லை.

ஆனாலும் நித்திலன் திருமணம் செய்து கொள்வது மட்டும் கேள்விக்குறி என்பது அவளுக்கு நன்றாகப் புரிந்தது.

இப்போது முக்கியம் அவனின் ரகசியம் என்னவென்று அறிந்து கொள்வதை விட, அவனுக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டும் என்பதே என்ற முடிவுக்கு வந்தாள் ஷாலினி.

“அண்ணா கல்யாணம் தான் வேண்டாம்னு சொல்றார். ஆனால் குழந்தைகள்னா ரொம்பப் பிடிக்கும் போலிருக்கு? அடுத்த வீட்டுக் குழந்தைகளைக் கூட அவ்வளவு பிரியமா பார்த்துக்கிறாரே…” என்று மெல்ல நூல் விட்டுப் பார்த்தாள் ஷாலினி.

அந்த நூல் சரியாகப் பறந்து செவ்வந்தியின் மீது விழுந்தது போலும். அவரின் முகத்தில் பெரிய மாற்றம்.

“அடுத்த வீட்டுக் குழந்தையா? யாரைமா சொல்ற?” என்று கேட்டார்.

அவரிடம் சிறியதொரு ஆர்வம் தொனித்ததோ? ஆராய்ச்சியும், யோசனையுமாகப் பார்த்துக் கொண்டே, “நம்ம வருணாவைத்தான்! துர்கா குழந்தை… அச்சோ! உங்களுக்கு அவங்களைப் பற்றித் தெரியுமான்னு தெரியாம நான் பாட்டுக்குப் பேசி வைக்கிறேன்…” என்றாள் ஒன்றும் அறியாதவள் போல.

கணவன் மூலம் துர்கா இனி பேச வேண்டாம் என்று நித்திலனை திட்டியது செவ்வந்திக்கும் தெரியும் என்று அவள் அறிந்திருந்தாள்.

ஆனாலும் தனக்குத் தெரிந்ததைக் காட்டிக் கொள்ளாமல் அவள் அப்பாவி போல் கேட்டு வைக்க, “பக்கத்து வீட்டுப் பொண்ணையா சொல்ற?” என்று செவ்வந்தியும் தானே அவள் வீசிய நூலில் முடிச்சிட்டார்.

“ஒ, உங்களுக்குத் தெரியுமாம்மா? நீங்க பேசினீங்களா?”

“இல்லமா, நான் பேசலை. நித்திலன் தான் சொன்னான். அந்த வீட்டுக் குழந்தை இவனிடம் நல்லா ஒட்டிக்குமாம்…”

“ஆமாம்மா. எங்க பொண்ணு பிறந்தநாளுக்கு எங்க வீட்டுக்கு அண்ணா, துர்கா, அவள் மகள் எல்லாம் வந்திருக்கும் போது நானே பார்த்தேன். வருணா அண்ணாவை விட்டு இறங்கவே இல்லை. அவர் மடியில் தான் இருப்பேன்னு ஒரே அடம். துர்கா கூப்பிட்ட போது கூட அவளிடம் போக மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சு அண்ணா மடியிலேயே ஒட்டிக்கிட்டா…” என்று அவர்கள் தங்கள் வீட்டிற்கு ஜோடியாக வந்து விழாவில் கலந்து கொண்டார்கள் என்பதைப் போல் சொல்லி வைத்தாள்.

“உங்க வீட்டுக்கு இவங்க மூணு பேருமா வந்தாங்க?” யோசனையுடன் கேட்டார் செவ்வந்தி.

“ஆமாம்மா… அண்ணா மூலம் தான் எனக்கே துர்கா பழக்கம். ஆபிசில் அவரிடம், வருணா பத்தியும், துர்காவை பத்தியும் அண்ணா பேசிட்டே இருக்கவும், அவர் என்கிட்டே வந்து சொல்ல… அது யார்டா நித்திலன் அண்ணாக்கிட்ட இவ்வளவு ஒட்டுதலா இருப்பதுன்னு விசாரிச்சுத் தெரிஞ்சிக்கிட்டேன்.

ஏன்னா, அண்ணா என்கிட்ட கூடத் தயக்கமாத்தான் பேசுவார். ஆனா வருணா, துர்கா கூட நல்லா பேசுவும்… எனக்குள்ள குறுகுறுன்னு ஓர் ஆர்வம். உடனே துர்கா கூடப் பிரண்டு ஆகிட்டேன்…” என்றாள்.

“ஒ, துர்கா பத்தியும் பேசுவானா?” என்று கேட்டவரிடம் ஒரு வியப்பு.

“பேசுவாரா? அவங்களுக்கு ஒன்னுனா முன்ன நின்னு தட்டிக் கேட்பார்…” என்றவள் அன்று வித்யாவின் கணவன் துர்காவிடம் தவறாக நடக்க முயன்றதையும், அவனை நித்திலன் அடித்ததையும் சொன்னவள்,

“அது மட்டுமா? அன்னைக்குத் துர்காவை பத்தி அந்த வித்யா தவறா பேசவும், அவள் வீட்டில் வந்து அழுதிருக்கா. அவள் அழுகையைத் தாங்க முடியாமல் உடனே அண்ணா எனக்குப் போன் செய்து அவள் அழுகையை எப்படியாவது நிறுத்துமான்னு… என்னைத் துர்காவிடம் பேச சொன்னார்…” என்று அவரை ஓரப்பார்வையாகப் பார்த்துக் கொண்டே சொன்னாள் ஷாலினி.

செவ்வந்தி அனைத்தையும் கேட்டு தன் என் எண்ணம் சரிதானோ என்பது போல் யோசனையில் ஆழ்ந்தார்.

“அண்ணா நல்ல மனசோட தான் துர்கா கூடப் பேசுவார். ஆனால் இங்கே உள்ளே மத்த குடித்தனக்காரர்கள் எல்லாம் அவங்க இரண்டு பேரையும் சேர்த்து வச்சு பேசி பெரிய பிரச்சனை ஆகிப்போச்சு…” என்றாள் பெருமூச்சுடன்.

இதை எல்லாம் அவரிடம் இப்படிப் போட்டு கொடுக்கும் வில்லி போல் சொல்ல ஷாலினிக்கு விருப்பமே இல்லை. ஆனால் முரளி இதெல்லாம் சொல்லியே ஆகவேண்டும் என்றும் கட்டாயப்படுத்தி இருந்தான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

தான் இதைச் சொல்வதால் செவ்வந்தி எங்கே துர்காவை தவறாக நினைத்து விடுவாரோ என்று ஷாலினிக்கு உள்ளுக்குள் பயம் தான். அதோடு மகனை இவர் கடிந்து கொண்டால் அவர்கள் வீட்டிற்குள் தான் பிரச்சனையை இழுத்துவிட்டது போல் ஆகிவிடுமோ என்ற எண்ணம் தான் அவளுக்கு.

ஆனால் அவளின் கணவனோ அப்படி எதுவும் நடக்காது. துர்காவை பற்றி இன்னும் தான் அவர் உன்னிடம் விசாரிப்பார்.

மகனின் மனதில் துர்கா இருக்கிறாளோ என்று யோசிப்பார் எனச் சொல்லியிருந்தான்.

ஆனால் ‘அது எப்படி ஒரு விதவை பெண்ணிடம் மகன் ஒட்டுதலாகப் பழகலாம் என்று தானே எந்தத் தாயாக இருந்தாலும் நினைப்பார். அப்படி இருக்கச் செவ்வந்தி மட்டும் எப்படிச் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்?’ என்று கணவனிடம் வாதாடிப் பார்த்தாள்.

ஆனால் முரளியோ அப்படி எதுவும் நடக்காது என்று உறுதியாகச் சொல்லியிருந்தான்.

முரளி சொன்னது தான் நடந்து கொண்டிருந்தது. அவள் சொன்னதை எல்லாம் கோபப்படாமல் கேட்டுக் கொண்டிருந்து விட்டு செவ்வந்தியின் முகத்தில் யோசனையின் ரேகைகள் ஓடின.

“அந்தப் பொண்ணு துர்கா குணத்தில் எப்படிமா?” என்று வேறு சில நொடிகளுக்குப் பிறகு செவ்வந்தி கேட்டு வைக்க, கணவன் எப்படிச் சரியாகச் சொல்லியிருக்கிறான் என்று யோசனையாகிப் போவது இப்போது ஷாலினியின் முறை ஆகியது.

“என்னமா எதுவும் சரியில்லையா…” அவளின் நொடிப் பொழுது அமைதியைப் பார்த்துப் பதறி போய்க் கேட்டாரோ?

அவளுக்கு அப்படித்தான் தெரிந்தது.

“இல்லமா… துர்கா ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு. அவள் வாழ்க்கையில் சந்தோஷத்தையே அனுபவித்தது இல்லை. அவள் சின்ன வயசா இருக்கும் போதே அவளோட அம்மா இறந்துட்டாங்க. அதுக்குப் பிறகு அவளுக்கு எல்லாமே அவள் அப்பாதான். அப்பா ஸ்கூல் டீச்சரா இருந்தவர். மகளை ஒற்றை ஆளாகத் தனியாக வளர்த்து சொந்த தங்கை மகனுக்கே கட்டி கொடுத்தார்.

அவளோட கணவர் நல்லவர் தான். நல்லபடியாத்தான் அவள் வாழ்க்கை ஆரம்பிச்சது. ஆனால் இரண்டே மாசத்தில் அவர் ஒரு விபத்தில் இறந்திட்டார். அப்போ தான் வருணா அவள் வயிற்றில் உருவாகியிருந்த சமயம்.

இரண்டே மாதத்தில் அவள் கணவன் இறந்ததுக்கு அவளை ராசியில்லாதவளா ஆக்கியதோட, அவள் வயிற்றில் இருந்த குழந்தையையும் அதிர்ஷ்டம் இல்லாதவள்னு முத்திரை குத்தி வயித்துப் பிள்ளைகாரியைப் பிறந்த வீட்டுக்கே விரட்டி விட்டுட்டாங்க அவளோட அத்தை.

கணவனை இழந்து, வயிற்றில் குழந்தையோட வந்த மகளைப் பார்த்து உடைந்து போன சபரிநாதன் அங்கிள், அவர் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு மகளைத் தனிமையில் விடாமல் தானே பார்த்துக் கொண்டார்.

துர்காவிற்குக் குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆகவும், குழந்தையை அப்பாகிட்ட விட்டுட்டு ஒரு நர்சரி ஸ்கூலில் வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டாள்.

“அவள் வீட்டில் இருந்த வரை வராத தொல்லைகள் எல்லாம் வேலைக்குப் போகவும் வர ஆரம்பித்தது. இப்ப கூடக் குணான்னு ஒருத்தன் அவளுக்குத் தொந்தரவு கொடுத்துட்டு இருக்கான். இப்போ கொஞ்ச நாள் முன்னாடி எதிர் வீட்டில் இருக்கும் வித்யா கணவனும் அவள்கிட்ட தப்பா நடக்க முயற்சி செய்து, கடைசியில் அந்த வித்யா துர்கா தான் அவள் புருஷன்கிட்ட தப்பா நடக்க முயற்சி செய்தாள்னு புரளியைக் கிளப்பி விட்டுத் துர்கா பயந்து ஒடுங்கிப் போயிட்டாள்…” என்று துர்கா மூலமாக அவள் வாழ்க்கையில் தான் அறிந்து கொண்டதை தெரிவித்தாள் ஷாலினி.

அனைத்தையும் கேட்டு சில நொடிகள் அப்படியே அமர்ந்திருந்தார் செவ்வந்தி.

அவரும் பிள்ளைகள் பள்ளிப் படிப்புப் படித்துக் கொண்டிருக்கும் போதே கணவனை இழந்தவர் தான்.

அதன் பிறகு அவர் பட்ட இன்னல்கள் அதிகம் தான்.

கணவன் துணையில்லாமல் இருக்கும் போது வரும் கஷ்டங்களை நன்றாகவே அறிந்தவர் தான்.

துர்காவின் துன்பங்களையும் அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.

“என்னமா அமைதியா இருக்கீங்க?” என்று ஷாலினி கேட்க, தன் யோசனையிலிருந்து வெளியே வந்தார் செவ்வந்தி.

“அந்தப் பொண்ணு துர்கா பத்தி தான்மா யோசிச்சுட்டு இருக்கேன். ரொம்ப நல்ல பொண்ணாத்தான் தெரியுது. அவளுக்கு இவ்வளவு கஷ்டங்கள் வந்திருக்க வேண்டாம்…” என்றார்.

“ம்ம், ஆமாம்மா…” என்றாள் ஷாலினி.

“துர்காவிற்குக் குழந்தை பிறந்த பிறகு அவளோட மாமியார் பார்க்க வரலையாமா? என்ன இருந்தாலும் அந்தக் குழந்தை அவங்க மகன் வழி பேத்தியாச்சே?” என்று விசாரித்தார்.

“அவங்க அப்படி யோசிக்கவே இல்லைமா. அந்தக் குழந்தை உருவான நேரம் தான் தன்னோட மகன் இறக்க காரணம்னு உறுதியா நம்புறாங்க. அதனால் அவங்க குழந்தையைப் பார்க்க வரலை. அதோட அண்ணன் முறைக்கு வீட்டுக்கு எப்பவாவது வந்தாலும் குழந்தையை ஏறெடுத்துப் பார்க்கக் மாட்டாங்களாம். துர்கா சொல்லி வருத்தப்பட்டிருக்கிறாள்…” என்றாள்.

“பாவம் தான் குழந்தை. ஒன்னுமறியாத அந்தச் சின்னக் குழந்தை என்ன தப்பு செய்தது?” என்று வருத்தமாகக் கேட்டார்.

“அவங்க அதை யோசிக்கவே இல்லைமா. அப்பா இல்லாமல் வளர்வது அந்தப் பிள்ளைக்குத் தான் கஷ்டம். அதைப் புரிந்து கொள்ளாமல், என்னவோ அந்தக் குழந்தை தான் அவளோட அப்பாவை கொன்ன மாதிரி பிகேவ் பண்றாங்க. இப்படியும் மனுஷங்க இருக்காங்க போங்க…” என்றாள் ஷாலினி.

“ம்ம்ம்…” என்ற செவ்வந்தி சில நொடிகள் யோசனையாக இருந்தார். தான் கேட்க நினைப்பதை இவளிடம் கேட்கலாமா வேண்டாமா? என்ற பாவம் அவரிடம்.

கேட்டே விடலாம் என்று நினைத்தார் போலும்! ஒரு முடிவுடன் ஷாலினியை நிமிர்ந்து பார்த்தார்.

“அந்தப் பொண்ணு மறுமணம் பற்றி எதுவும் யோசனையில் இருக்காளாமா?” என்று பளிச்சென்று கேட்டு விட, உள்ளுக்குள் வியந்தாள் ஷாலினி.

ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவள் பேச வாயைத் திறந்த போது, கடைக்குச் சென்றிருந்த நித்திலனும், முரளியும் குழந்தையுடன் வந்துவிட்டனர்.

குழந்தையின் கையில் ஒரு பிஸ்கட் பாக்கெட்டும், ஒரு பலூனும் இருக்க, “உங்களுக்குச் செலவு வச்சுட்டாளா ணா?” என்று கேட்டாள்.

“ஒரு பலூன்ல என்னமா செலவு? குழந்தைக்கு இதுவே கம்மி தான். இன்னும் டாய்ஸ் வாங்கிக் கொடுக்கலாம்னு நினைச்சேன். ஆனா முரளி வாங்க விடலை. வீட்டில் நிறைய இருக்குன்னு தடுத்துட்டான்…” என்றான்.

“ஆமாண்ணா, வீட்டில் ஏற்கனவே விளையாட்டு சாமான் நிறைய இருக்கு. இன்னும் வாங்கி என்ன பண்ண? அதுவும் கொஞ்ச நேரம் ஆசையா விளையாடிட்டு தூக்கிப் போட்டுருவா…” என்றாள் ஷாலினி.

“குழந்தைகள் அப்படித்தான் இருக்கும் மா…” என்றார் செவ்வந்தி.

“அது சரிம்மா, நாங்க வரும் போது யாரைப் பத்தியோ பேசிட்டு இருந்தீங்க? யாருக்குமா மறுமணம்?” என்று நித்திலன் அன்னையிடம் விசாரிக்க, முரளி கேள்வியுடன் மனைவியைப் பார்த்தான்.

ஷாலினி கண்களைத் திருப்பிப் பக்கத்து வீட்டை காட்டுவது போல் கண்களைச் சிமிட்டினாள்.

புரிந்து கொண்ட பாவனையில் லேசாகப் புன்முறுவல் பூத்த முரளி, தாய், மகனின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தான்.

“அதான் பா, அந்தப் பொண்ணு துர்காவுக்கு…” என்ற செவ்வந்தி மகனை கூர்ந்து பார்க்க,

“என்ன?” என்று திடுக்கிட்டான் நித்திலன்.

அவனின் பாவனையே அங்கிருந்தவர்களுக்கு அவன் மனதை வெளிச்சம் போட்டு காட்ட போதுமானதாக இருந்தது.

“ஏன்பா, கணவனை இழந்த பொண்ணு வேற கல்யாணம் பண்ணிக்கக் கூடாதா?” என்று செவ்வந்தி போட்டு வாங்க தயாராக…

தன் அதிர்ச்சியைப் புறம் தள்ளி வெளியே வந்தவன், “இல்லமா, அப்படியெல்லாம் நான் நினைக்கலை…” என்றான் மெல்லிய குரலில்.

அவனுக்குக் குரலே எழும்பவில்லை. துர்கா இன்னொருவனைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாளா என்ன? என்ற கேள்வி அவனை உள்ளுக்குள் சில்லுசில்லாக உடைய வைத்தது.

இவர்கள் தான் பேசிக் கொண்டிருந்தனர். அவள் திருமணம் செய்து கொள்ளப் போகிறாளா இல்லையா என்று கூட அவன் அறியவில்லை. ஆனாலும் அதை எல்லாம் யோசிக்கக் கூட முடியாமல் அவனின் மனம் துடித்தது.

‘அப்போ நீ அவளைக் கல்யாணம் செய்து கொள்ள முடியுமா என்ன?’ என்ற கேள்வியும் அவனுக்குள் உடனே தோன்ற, “முடியாதே!” என்று வாய்விட்டே வலியுடன் சொல்லியிருந்தான்.

“என்ன நித்திலன் முடியாது? அவங்களுக்கு இன்னொரு கல்யாணமா? நல்ல பையனா கிடைச்சா முடியுமே…” என்று முரளி கேட்டு வைக்க, அவனின் கேள்வி புரியாமல் சில நொடிகள் விழித்தான் நித்திலன்.

பின்பு தான், தான் வாய் விட்டே முடியாது என்று சொல்லிவிட்டது புரிந்தது.

“அப்படிச் சொல்லலை முரளி. நான் வேற ஏதோ ஞாபகத்தில் சொல்லிட்டேன். நல்ல பையனா கிடைச்சால் அவங்க திருமணம் செய்து கொள்ளட்டும்…” என்று தன் வேதனையை மறைத்துக் கொண்டு சொன்னான்.

அவன் என்ன தான் மறைக்க முயன்றாலும், அவனின் வலியும், வேதனையும் அங்கிருந்தவர்களுக்கு நன்றாகவே புரிந்தது.

அதுவே துர்காவின் மீது அவனுக்கு இருக்கும் நேசத்தைப் புரிய வைத்தது. அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் செவ்வந்தி.

முரளியும், ஷாலினியும் கூட அவன் மனதின் ஆசையை எப்படி நிறைவேற்றி வைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தனர்.

அவர்கள் எண்ணத்தைப் பற்றி அறியாமல், ‘துர்கா வேறு ஒருவனைத் திருமணம் செய்தால் தன் நேசம்? தான் இழக்க போகும் குழந்தை வருணாவின் அருகாமை? இருவரும் இல்லாமல் தன்னால் தாங்க முடியுமா?’ என்று உள்ளுக்குள்ளேயே தவித்துப் போனான் நித்திலன்.