13 – உனதன்பில் உயிர்த்தேன்

அத்தியாயம் – 13

அங்கே தேன்மலர் ஒருவித நிம்மதியில் அன்றிரவு உறக்கத்தைத் தழுவ, இங்கே வைரவேலுவோ உறக்கம் தொலைத்துப் போனான்.

பகல் பொழுதை எப்படியோ ஓட்டி விட்டவனுக்கு, இரவின் கருமை இதயத்தின் கனத்தைக் கூட்டியிருந்தது.

ஒரு பெண்ணிற்குத் தன்னால் கெடுதல் நேர்ந்து விட்டது. அதைத் தான் தான் சரி செய்ய வேண்டும் என்று போதையிலும் யோசிக்கும் மனம் தான் அவனுடையது.

அந்த நல்ல மனதே இப்போது தனக்கு விரோதி ஆகிவிட்டதை நினைத்து மனம் கலங்கிப் போனான் வைரவேல்.

ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கொள்கை உடையவன் அவன்!

தன்னுடைய ஒருத்தியை மட்டுமே விரும்பி, சுவாசித்து, நேசித்து வாழ வேண்டும் என்று நினைத்தவன்!

மனைவி திடீரென இறந்த பின்பும், இனி அவள் நினைவுகள் மட்டுமே தனக்குச் சொந்தம்! அதனுடனே வாழ்ந்து மடிந்து விடலாம் என்று தான் நேற்று இரவு வரை அவனின் எண்ணமாக இருந்தது.

ஆனால் இப்போதோ தான் இன்னொருத்திக்கு தாலி கட்டிவிட்டோமே என்ற நினைப்பு அவனை ஆட்டிப்படைத்தது.

கண்மூடினால் ‘என்னோட இடத்தில் இன்னொருத்தியை கொண்டு வந்து நிறுத்திட்டியே?’ என்று மனைவி கேள்வி கேட்பதாகத் தோன்ற அவனால் கண்களை மூடவே முடியவில்லை.

‘இல்ல கண்ணு, போதைல தெரியாம தப்புச் செய்து போட்டேன். என்னைய மன்னிச்சுப் போடு கண்ணு. எம் பொஞ்சாதி நீ மட்டுந்தேன். வேற யாருக்கும் எம் மனசுல இடம் இல்ல ராசாத்தி…’ என்று கண்களை மூடி மனைவியிடம் மன்றாடினான்.

மனைவிக்குச் சொல்வது போல் தனக்குத்தானே எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தும் அவனின் மனம் அடங்க மறுத்தது.

‘அப்போ இப்ப தாலி கட்டியவளுக்கு என்ன பதில் சொல்வ?’ என்று அவனின் மனைவியே கேட்பது போலத் தோன்ற, பதில் தெரியாமல் விழி பிதுங்கி போனான்.

‘என்ன பதில் சொல்ல முடியும் நான்?’ என்று நினைத்தான். அதே நேரம் என்ன ஆனாலும் தன் மனைவி குமுதா மட்டுமே. வேறு யாருக்கும் அந்த ஸ்தானம் கொடுப்பதில்லை என்பதிலும் உறுதியாக இருந்தான்.

அவன் மனம் ஊஞ்சலாகத் தள்ளாட ஆரம்பித்து விட்டதை அவனே அறியாமல் போனான் வைரவேல்.

இந்நினைவுகளில் புரண்டு படுத்தும் உறக்கம் என்பதே அவனைச் சிறிதும் அண்டவில்லை.

இது போலான தவிப்பு குறையவே மனைவி இறந்த பிறகு குடியை நாடிப் போனான்.

ஆனால் அந்தக் குடியினால் இப்போது தான் மீள முடியா பள்ளத்தில் விழுந்து விட்டதால் இனியும் அந்தக் குடியை நாடிப் போக அவனுக்கு மனதில்லை.

அதற்கு மேல் படுத்திருக்க முடியாமல் கட்டிலை விட்டு எழுந்து விட்டான்.

மனம் மனைவி மரித்த கிணற்றை நோக்கி செல்ல சொல்லி தூண்டியது.

ஆனால் வழியில் இருந்த தேன்மலரின் வீடும் கண்ணில் படும் என்பதால் கிணற்றுப் பக்கம் செல்லவும் மனதில்லை.

என்ன செய்வது என்று அறியாமல் கட்டிலை விட்டு இறங்கி, இந்தப் பக்கமும், அந்தப் பக்கமுமாக நடை பயில ஆரம்பித்தான்.

திண்ணையில் படுத்திருந்த அப்பத்தாவும் அவனின் தவிப்பை பார்த்துக் கொண்டு தான் இருந்தார்.

காலையிலிருந்தே அப்பத்தா அவன் செய்வதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தாலும், அவனிடம் இன்னும் அவர் ஒன்றும் கேட்கவில்லை.

இப்போது அவனே தன் மனதோடு போராடிக் கொண்டிருப்பான் என்று அறிந்ததால் அவனிடம் பேசுவதைத் தள்ளிப் போட்டார்.

அவன் விடாமல் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தவர் லேசாகத் தலையைத் தூக்கி, “என்ன ராசா, தூங்கலையா?” என்று கேட்டார்.

அவரின் குரலில் நடையை நிறுத்தியவன், “ஒரே புழுக்கமா இருக்கு அப்பத்தா. தூக்கம் வரலை…” என்றான்.

புழுக்கம் என்ற பேரனை அந்த நிலா வெளிச்சத்திலும் கூர்ந்து பார்த்தார். அவரின் பார்வையை உணர்ந்தவன் போல் அவரின் முகம் பார்க்காமல் நிறுத்திய நடையைத் தொடர ஆரம்பித்தான்.

அவனின் புழுக்கம் உடலிலா, மனதிலா என்று அறியாதவரா அவர்?

இரவு நேர காற்று ஜில்லென்று வீசிக் கொண்டிருக்கும் வேளையில் புழுக்கம் என்று சொன்னால் சின்னப் பிள்ளை கூட நம்பாதே!

“சரிதேன் ராசா. செத்த நடந்துட்டு படு. அலுப்புல நல்லா தூக்கம் வரும்…” என்றவர் திண்ணையில் தலையைச் சாய்த்துக் கொண்டார்.

“ம்ம்…” என்று முனங்கியவன், “நான் போய்க் குளிச்சிப் போட்டு வாறேன் அப்பத்தா. அப்பத்தேன் தூக்கம் வரும் போல…” என்றவன் வீட்டின் பின்பக்கம் சென்றான்.

பின்பக்க கிணற்றில் இருந்து தண்ணீரை இறைத்தவன், வாளியுடன் அப்படியே தலையில் ஊற்றினான்.

நிலை இல்லாமல் அலைந்து கொண்டிருந்த மனது ஜில்லென்று தண்ணீர் பட்டதும் அடங்கியது போல் தோன்ற, வேக வேகமாக இன்னும் நான்கு வாளி தண்ணீரை இறைத்துத் தலையில் ஊற்றிக் கொண்டான்.

ஈரம் சொட்ட சொட்ட வீட்டிற்குள் வந்தவன், நேராக அறைக்குச் சென்று ஈர உடையைக் கலைந்து விட்டு வேறு உடைக்கு மாறினான்.

ஈரத்தலையைத் துவாலையால் துடைத்துக் கொண்டே, அலமாரியில் இருந்த மனைவியின் புகைப்படத்தை எடுத்துக் கட்டிலில் அமர்ந்து புகைப்படத்தை நெஞ்சோடு அழுத்திக் கொண்டு, அப்படியே கண்களை மூடி சாய்ந்தவனுக்குச் சற்று நேரத்திலேயே உறக்கம் தழுவ ஆரம்பித்தது.

திண்ணையில் இருந்தே வீட்டிற்குள் எட்டிப் பார்த்து விட்டு ஒரு பெருமூச்சுடன் தானும் நித்திரையைத் தழுவினார் அப்பத்தா.

மறுநாளிலிருந்து தன் வழக்கமான ஓட்டத்தை ஆரம்பித்தான் வைரவேல்.

மனம் அவ்வப்போது பாறாங்கல்லாகக் கனத்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தனக்குள்ளே அழுத்தி வைத்துக் கொண்டான்.

கூடுமான வரை தேன்மலரின் வீட்டுப் பக்கம் செல்வதே இல்லை. தன் வயலுக்குக் கூட வேறு பாதையில் வருபவன், அந்தப் பக்கமே சென்றும் விடுவான்.

இதைத் தான் ஏன் முதலிலேயே செய்யாமல் போனோம் என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டதும் உண்மை.

அப்படிச் செய்திருந்தால் போதையில் அவளின் பார்வையில் பட்டிருக்கவும் வேண்டாம், இப்போது தன்னால் அவளுக்குக் கெட்டப் பெயரும் கிடைத்திருக்காதே என்று வருந்தினான்.

காலம் கடந்த சிந்தனை என்று தெரிந்தும் அதற்கு அவனால் வருந்தாமல் இருக்க முடியவில்லை.

அவன் அப்படித் தன் கண்ணில் கூடப் படாமல் செல்வதைத் தேன்மலரும் கண்டு கொண்டு தான் இருந்தாள்.

ஆனால் அதற்கு அவளிடம் கசந்த முறுவல் எழுந்ததே தவிர, வேறு எதுவும் நினைத்துக் கொள்ளவில்லை.

அதுவும் சில நாட்கள் மட்டுமே! நாட்கள் செல்ல செல்ல வைரவேலின் விலகல் அவளுக்கு வலியை உண்டாக்கியது.

அதுவும் இரண்டு நாட்களுக்கு முன், அன்று பறித்த பூக்களை டவுனில் போட்டு விட்டு வீட்டிற்குத் திரும்பி கொண்டிருந்தாள். அப்போது எதிரே தன் இருசக்கர வாகனத்தில் வந்தான் வைரவேல்.

எதிரே அவள் வருவதைப் பார்த்தவன் சட்டென்று கிளை பாதையில் திரும்பிவிட்டான். அந்தச் சாலையும் மீண்டும் இந்தச் சாலையில் வந்து தான் முடியும்.

ஒருவேளை அந்தத் தெருவில் அவனுக்கு எதுவும் வேலை இருக்குமோ என்று தான் நினைத்தாள்.

ஆனால் அவள் இரண்டு எட்டு எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போதே, அந்தச் சாலையிலிருந்து இந்தச் சாலைக்கு வந்து அவளைத் தாண்டி சென்று கொண்டிருப்பதைப் பார்த்தவளுக்கு அவ்வளவு வேதனையாக இருந்தது.

அவளைத் தவிர்க்கவே அப்படிச் செல்கிறான் என்று புரியாத அளவுக்கு அவள் விவரமற்றவள் அல்லவே!

அவன் கட்டிய தாலி இன்னும் தன் கழுத்தில் இருக்கும் நிலையிலும், அவனை இதுவரை எந்த விதமாகவும் அவள் தொந்தரவு செய்யவே இல்லை. அவனின் மீது உரிமை கொண்டாட வேண்டும் என்ற எண்ணமும் அவளுக்கு எழவில்லை.

வழக்கம் போலத் தான் உண்டு தன் வேலை உண்டு என்று மட்டும் தான் இருக்கிறாள்.

அப்படியிருந்தும் எங்கே தான் அவனிடம் உரிமை கோரிவிடுவோம் என்று நினைத்து அவன் இந்த அளவு விலகல் காட்டுவது, ஏதோ தன்னை அவனிடம் உரிமை கேட்டு அலைபவளாகக் காட்டியது போல அவளை எண்ண வைக்க, சட்டென்று அவளுக்குக் கண்கள் கலங்கி போனது.

‘தன்னை இப்படிக் கீழாக நினைத்து விட்டானே?’ என்று நினைத்தபடி கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு வீடு சென்று சேர்ந்தாள்.

வைரவேலுவின் விலகலில் ஒருத்தி கண் கலங்க, ஒருத்தனுக்கோ கொண்டாட்டமாக இருந்தது.

ராமர் இருவரையும் கண்கொத்தி பாம்பாக நோட்டம் விட்டுக் கொண்டே இருந்தான்.

முக்கியமாக வைரவேல் அவளிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்று தெரிந்து கொள்ள முனைப்பாக இருந்தான்.

கோவிந்தனின் கூற்றுப் படி தேன்மலரை விட்டு வைரவேல் விலகி செல்லவும் தன் வேலை இனி சுலபம் என்று நினைத்துக் கொண்டான்.

அன்றிரவு அயர்ந்து தூக்கிக் கொண்டிருந்தாள் தேன்மலர்.

நேரம் நள்ளிரவு பன்னிரெண்டு ஆகியிருந்தது.

ஊரே தூங்கிக் கொண்டிருந்த வேளையில், அந்த வயலின் நடுவே இருந்த தேன்மலரின் வீடு இருட்டுக்குள் வெகு அமைதியாக இருந்தது.

திண்ணையில் படுத்திருந்த ராசுவும், சுற்றிலும் எந்தச் சப்தமும் கேட்காததால் அப்போது தான் கண் அசந்து இருந்தது.

உள் அறையில் படுத்திருந்த தேன்மலரின் காதுகளில் ஏதோ சத்தம் கேட்டது போல இருக்க, தூக்கத்திலேயே லேசாக நெற்றியை சுருக்கியவள் பிரண்டு படுத்தாள்.

மீண்டும் அந்தச் சத்தம் கேட்க, இப்போது அவளின் காதுகள் கூர்மை பெற்று இமைகள் சுருங்கி விரிந்தன.

‘சர்…சர்…’ என்று எதை வைத்தோ, எதுலேயோ சுரண்டுவது போலான அந்தச் சத்தம் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

இப்போது அவளின் தூக்கம் முற்றிலும் கலைந்தே போனது.

விழிகளைத் திறந்து அது என்ன சத்தம் என்று கூர்ந்து கவனித்தாள்.

வீட்டின் பின்பக்கம் இருந்து தான் சத்தம் வந்தது.

ராசு சில நேரம் கதவை திறக்க சொல்லி கதவை காலால் சுரண்டும் என்பதால், அது தான் அப்படிச் சுரண்டுகிறது என்று நினைத்தாள்.

“ராசு, இந்நேரம் என்னாத்துக்குச் சுரண்டுறீரு? கம்முன்னு இரும்…” என்று அங்கிருந்த படியே சத்தம் கொடுத்தாள்.

அவளின் குரல் கேட்டதும், முன்பக்க திண்ணையில் படுத்திருந்த ராசு வேகமாக எழுந்து குரைக்க ஆரம்பித்தது.

ராசு முன் கதவு பக்கம் இருந்து குரைப்பதை உணர்ந்தவள், திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள்.

அவளின் இதயம் அதிவேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

அதற்குள் ராசுவும் பின்பக்கம் சத்தத்தை உணர்ந்து வேகமாகப் பின்பக்கம் குரைத்துக் கொண்டே ஓடியது.

அங்கிருந்து யாரோ டப், டப் என்று ஓடும் சத்தமும், ராசு பின்னால் துரத்திக் கொண்டு ஓடும் சத்தமும் கேட்க, அரண்டே போனாள் தேன்மலர்.

வேகமாக எழுந்தவள் பின் பக்க கதவின் பக்கம் நின்று வெளியே கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள்.

ராசு வெகுதூரம் ஓடியது போல இருந்தது.

சற்று நேரம் அங்கேயே நின்று கவனித்தாள்.

அதன் பிறகு ஒரு சத்தமும் கேட்கவில்லை. வெகுநேரம் சென்று ராசு மட்டும் குரைத்துக் கொண்டே ஓடி வரும் சத்தம் கேட்டது.

“ராசு…” உள்ளிருந்த படியே குரல் கொடுத்தாள்.

பின்பக்க கதவின் மீது கால் வைத்து நின்று குரைத்து ‘நான் இங்கே தான் இருக்கேன்’ என்றது ராசு.

“யாருய்யா அது? நீர் பார்த்தீரா?” என்று கேட்டாள்.

அதற்கு வேறு மாதிரியாகச் சத்தம் கொடுத்தது ராசு.

அதுவே வேண்டாத ஆள் யாரோ என்று அவளுக்குப் புரிந்து போனது.

வேண்டாத ஆள் என்றால் அந்த ராமரா? என்று யோசித்தாள்.

அவன் இன்னும் அடங்கவில்லையா? இத்தனை நாளும் பேசாமல் தானே இருந்தான்? என்று நினைத்தவளுக்கு அடுத்து என்ன செய்வது என்றே புரியவில்லை.

மீண்டும் அறைக்குள் வந்தவள், சுவற்றில் சாய்ந்து அமர்ந்தாள். அவளின் உறக்கம் எல்லாம் எங்கோ சென்றிருந்தது.

வந்தது யாராக இருக்கும்? மீண்டும் அந்தச் சத்தம் கேட்குமா? அப்படி வந்தால் தான் என்ன செய்ய வேண்டும்? என்று யோசித்தபடி கலங்கி போன மனதுடன் அப்படியே அமர்ந்துவிட்டாள்.

அவள் உறக்கம் தொலை தூரம் சென்றுவிட, விடிய விடிய கொட்ட கொட்ட முழித்துக் கொண்டிருந்தாள்.

காலையில் நன்றாக விடிந்த பிறகே எழுந்து கதவை திறந்தாள்.

பின்பக்க கதவை பார்க்க, கல்லை வைத்து கீறியது போலக் கதவில் ஏதோ கோடுகளாக இருந்தன.

‘இப்படிச் செய்து என்ன சாதிக்கப் போகிறானாம்?’ என்று நினைத்துக் கொண்டவள், பெருமூச்சுடன் அன்றைய வேலையை ஆரம்பித்தாள்.

அன்றைய வேலைகளை இயந்திரகதியில் முடித்தாலும், மனம் முழுவதும் ஒரு வித பயம் அப்பிக்கொண்டிருந்தது.

தனியாக இருப்பவள் தானே இவளை எதுவும் செய்யலாம் என்ற எண்ணத்தில் தானே தன்னை இப்படிப் பயமுறுத்துகிறார்கள் என்று நினைத்தவளுக்குக் கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது.

அன்னையின் இழப்பு இன்னும் பூதாகரமாகத் தெரிந்தது.

முத்தரசி இருந்தவரை இப்படி ஒரு பிரச்சனையை அவள் எதிர்கொண்டதே இல்லை.

அன்னை, மகள் இரண்டு பேர் மட்டும் தனியாக வாழ்ந்து வந்த வயல் வீட்டில் இருந்தாலும் தொந்தரவு எதுவும் இருந்தது இல்லை.

ஆனால் இன்றோ? என்று நினைத்தவளுக்கு மனம் கசந்து வழிந்தது.

அன்று மட்டும் இல்லை, அடுத்து வந்த நாட்களும் அவள் நன்றாகக் கண் அயரும் நேரத்தில் ஏதாவது சத்தம் கேட்க ஆரம்பித்தது. ஒரு நாள் ஜன்னலை யாரோ தட்டுவது போல் கேட்டது. இன்னொரு நாள் ஓடு மேல் கல் எறிந்தது போலச் சத்தம் கேட்டது.

தொடர்ந்து அது போலான சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்க, தினமும் உறக்கத்தைத் தொலைத்தாள்.

இரவு தனியாகப் படுக்கவே பயந்தாள் தேன்மலர்.

முன்பாவது நள்ளிரவு வரை உறங்கியவள் அதன் பின் இரவு படுப்பதே இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டாள்.

இரவெல்லாம் தூங்காதது பகலில் சோர்வை கொடுக்க, சரியாக வேலையும் பார்க்க முடியவில்லை. நிறையப் பூக்கள் காய்ந்து வீணானது.

ராசுவை அழைத்து அதன் அருகில் அமர்ந்து கொண்டவள், “எமக்குப் பயமா இருக்கு ராசு. நா என்ன பண்ண போறேன்? அது யாருன்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது ராசு? நீரும் தேன் தினமும் அந்தக் களவாணி பய பின்னாடி விரட்டிட்டு போறீரு. ஆனா அகபடவே மாட்டேங்கிறானே. என்ன செய்றது?” என்று என்னவோ அது பதில் சொல்லிவிடும் போல் கேட்டாள்.

அவளுக்குக் கேட்கவோ சொல்லவோ தான் யாருமில்லையே?

அவளின் பேச்சு எல்லாம் இப்போது ராசுவிடம் மட்டும் தான்.

ராசுவும் இல்லையென்றால் அவளுக்கு இந்நேரம் பைத்தியம் பிடித்திருந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அன்று வைரவேல் தாலி கட்டிய நாளுக்குப் பிறகு அவளிடம் முன் போல் ஊருக்குள் இருந்து யாரும் வேலைக்கும் வருவது இல்லை என்பதால் பகலிலும் தனித்துத் தான் இருந்தாள்.

பேச ஆள் அற்ற நிலை, இரவில் உறக்கம் இல்லாதது, தனிமை, பயம், அன்னை இல்லாத சோகம் எல்லாம் தாக்க, சிறிது நாட்களில் ஆளே நலிந்து போனாள்.

தன் பிரச்சனையை யாரிடம் சொல்வது என்று கூட அவளுக்குத் தெரியவில்லை.

தாலி கட்டியவன் இருந்தும் அவனிடம் சொல்ல அவளுக்கு விருப்பமில்லை. என்னவோ தீண்ட தகாதவள் போல் அவன் ஒதுங்கி செல்ல ஆரம்பிக்கவுமே அவன் கொடுத்த போன் இருந்தும் ஒரு முறை கூட அவனுக்கு அவள் அழைக்கவில்லை.

விலகி செல்பவனை விரட்டி பிடிக்கவும் அவளுக்கு எண்ணமில்லை.

அவள் அழைக்காததால் அவளுக்கு இதுவரை எந்தப் பிரச்சனையும் இல்லை என்று நினைத்த வைரவேல் இன்னும் நிம்மதியுடன், தன்னில் மட்டும் மூழ்கி போனான்.

“தனியா கிடந்து பயந்து பயந்தே செத்து போய்டுவேன் போல இருக்குமா…” என்று அன்று இரவு அன்னையை நினைத்து கதறி அழுதாள் தேன்மலர்.

அவள் அழுது கொண்டிருக்கும் போதே அந்தச் சத்தத்தை உணர்ந்தாள்.

யாரோ கதவின் பூட்டை வெளியே இருந்து திறப்பது போல். அவ்வொலி பூதாகரமாக எழுந்து அவளை மிரட்ட, கண்கள் பயத்தில் அகலமாக விரிந்து கொள்ள, தனக்குள் ஒடுங்கி, சுவற்றில் பல்லி போல் ஒட்டிக் கொண்டாள் தேன்மலர்.