13 – நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்

அத்தியாயம் – 13

சத்யா விழுந்த வேகத்தில் கை எலும்பு முறிந்தே விட்டிருந்தது.

அவள் விழுந்ததைக் கண்டும், அவளின் அலறலை கேட்டும் சாலையோரத்தில் இருந்தவர்கள் வேகமாக உதவிக்கு ஓடி வந்தனர்.

அவளை இருவர் பிடித்துத் தூக்கி அமர வைக்க, ஒருவர் முகத்தில் தண்ணியைத் தெளித்தார்.

அவள் கையைப் பிடித்துக் கொண்டு வலி தாங்க முடியாமல் வந்த அழுகையை அடக்கி கொண்டு இருக்க, அவளின் கையைக் கண்ட ஒருவர் “கையில் எலும்பு முறிச்சு போயிருச்சு போலங்க. வேகமா வீங்க ஆரம்பிக்கிது. ஆஸ்பத்திரிக்கு தான் கூட்டிட்டு போகணும்…” என்று சொல்ல,

“பாவம் கண்ணு தெரியாத பொண்ணு இப்படியா வந்து விழும்? துணைக்கு யாரையாவது கூட்டிட்டு வந்திருக்கக் கூடாது?”

“ஏம்மா… உன் வீட்டு ஆளுங்க போன் நண்பர் இருந்தா சொல்லுமா…”

“ஏய்…! அதை அப்புறம் கூடச் சொல்லிக்கிலாம் பா… முதலில் யாராவது ஆட்டோ பிடிச்சு இந்தப் பிள்ளையை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்கப்பா…” என்று ஆளாளுக்கு அவர்களுக்குள் பேசிக் கொண்டார்களே தவிர, அதைச் செயலில் காட்ட யாரும் முன் வரவில்லை.

சத்யா தன்னைச் சுற்றி வரும் பேச்சுக் குரல்களைக் கேட்டாலும் அவளாலும் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. விழுந்தது வேறு அவமானமாக இருக்க, அதோடு கை வலியும் அதிக வேதனையைக் கொடுத்துக் கொண்டிருக்க, அந்த வலி தந்த வேதனையில் கண்ணைக் கட்டிக் கொண்டு மயக்கம் வரும் போல இருந்தது.

அதோடு இருட்டுக்குள் துழாவுவது போல அவளின் கைப்பை துழாவினாள். அதைக் கண்ட ஒருவர் என்ன வேண்டும் என்று அவளைக் கேட்டு சிறிது தள்ளி விழுந்திருந்த அவளின் கைப்பையை எடுத்துக் கொடுத்தார்.

அதில் இருந்த தன் கைபேசியை எடுத்து வீட்டிற்குத் தகவல் சொல்ல நினைத்தாள்.

அதற்குள் ஒருவர் ஆட்டோ பிடிக்க, யார் உடன் போவது என்று அவர்களுக்குள் சிலர் மீண்டும் பேச ஆரம்பித்திருந்தனர்.

அந்த நேரத்தில் கூட்டத்தை விலக்கிக் கொண்டு அங்கே வந்தான் தர்மா.

அந்தப் பக்கம் தன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவன் சாலையின் ஓரத்தில் கூட்டமாக இருக்கவும் என்ன கூட்டம் என்று தெரிந்து கொள்ள வாகனத்தின் வேகத்தைக் குறைத்தான்.

அப்போது கூட்டத்தில் இருந்து வெளியே வந்த ஒருவர் “பாவம் கண்ணு தெரியாத பொண்ணு இப்படி விழுந்து கிடக்கே…” என்று ஒருவரிடம் பேசிக்கொண்டே அங்கிருந்து செல்ல, அதைக் கேட்டதும் ஏனோ அவனுக்குச் சட்டெனச் சத்யா தான் ஞாபகத்தில் வந்தாள்.

ஆனாலும் அவளாக இருக்கக் கூடாது என்று நினைத்துக்கொண்டு பதறியபடியே வண்டியை நிறுத்தி விட்டு அவனால் முடிந்த அளவு விரைந்து நடந்து வந்தான்.

அவ்வளவு கூட்டத்திலும் சத்யாவின் காதுகள் கூர்மை பெற்று தர்மாவின் காலடி சத்தத்தை உணர்ந்தன.

தன் கைபேசியைத் தேடுவதை விட்டுவிட்டு அவனின் புறம் வேகமாக முகத்தைத் திருப்ப, அதே நேரம் கூட்டத்தை விலக்கி கொண்டு உள்ளே வந்தவனும் சத்யாவை கண்டு “சத்யாமா… என்னடா?” என்று பதறிக் கொண்டு அருகில் வந்தான்.

அவன் குரல் கேட்டதும் “தர்மா…” என்று குரல் உடைய அழைத்து, அவனை எட்டி பிடிக்க முயன்று அவனின் பக்கம் கையை நீட்டி துழாவினாள்.

பல்லை கடித்துக் கொண்டு அழுகையை அடக்கி, அவள் அடக்க நினைத்த வலி மொத்தமும் அவள் முகத்தையே ரத்தம் கட்டியது போலச் சிவக்க வைத்திருக்க, அனாதரவான நிலையில் இருப்பவள் போல அவனின் புறம் கையை நீட்டியபடி இருந்தவளை பார்த்து தர்மாவின் கண்கள் சட்டென்று கலங்கி போனது.

கலங்கிய படி விரைந்து அருகில் வந்து துழாவிய அவளின் கையைப் பிடித்துக் கொண்டு “என்னாச்சுடா? எழுந்திரு….” என்று பதட்டத்துடன் கேட்டவனின் குரல் கரகரத்து ஒலித்தது.

அதற்குள் அருகில் இருந்தவர்கள் “என்ன சார், உங்களுக்குத் தெரிந்த பொண்ணா? அந்தப் பொண்ணு கை உடைஞ்சுருச்சு போலச் சார். ஆட்டோ வந்திருச்சு, சீக்கிரம் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போங்க…” என்று அவசரப் படுத்தினார்.

‘என்ன… கை உடைஞ்சுருச்சா?’ அதிர்ந்தே போனவன் வேகமாக அவளின் கையை ஆராய்ந்தான். அவளின் இடது கை வீங்கியும், ஒரு இடத்தில் துருத்தி கொண்டு ஒரு மாதிரி இருந்ததையும் கண்டு துடித்தே போனான்.

“ஐயோ…! எழுந்திருடா…!” என்று பதறியபடி அவளைத் தூக்கி விட முயன்றான். ஒரு கையில் ஊன்றுகோல் இருக்க, ஒற்றைக் கையால் அவளை வேகமாகத் தூக்க முயன்று லேசாகத் தடுமாறினான்.

உடனே அருகில் இருந்தவர்கள் உதவிக்கு வந்து ஆட்டோவில் ஏற்றி அமர வைத்து அவளின் பொருட்களைக் கொடுத்தனர்.

அவனும் ஆட்டோவில் அமர்ந்த பிறகு வண்டி கிளம்பிய அடுத்த நொடியில் “வலி தாங்க முடியலை தர்மா…” என்று கதறினாள். அவ்வளவு நேரம் வெளி ஆட்கள் முன்னால் தன் வலியை காட்டாமல் அடக்கி வைத்துக் கொண்டிருந்தவள், அவனின் முன்னால் வாய் விட்டு கதற ஆரம்பித்தாள்.

அவள் கதறவும் துடித்துப் போன தர்மா “ஒண்ணுமில்லைடா… இதோ ஹாஸ்பிட்டல் போயிடலாம்…” என்று சொன்னவன் அவளின் தலையை இழுத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

அவனின் கண்களும் கலங்கி போனது. தோளில் சாய்த்து அவளைச் சுற்றி கையைப் போட்டு இதமாக அணைத்துக் கொண்டான். அவளுக்கும் அந்த நேரத்தில் அந்த அணைப்பு ஆறுதலாக இருக்க அவனின் அணைப்பை ஏற்றுக் கொண்டாள்.

அந்த நேரத்தில் ஒரு அந்நிய ஆணின் தோளில் சாய்ந்திருக்கிறோம் என்ற எந்த எண்ணமும் அவளுக்கு இல்லை. என் வலியை சொல்ல என்னவன் அருகில் இருக்கிறான் என்ற நினைவு மட்டுமே அவளுக்கு இருந்தது.

அவர்களுக்குள் என்ன உணர்வு இருக்கிறது என்று பகிர்ந்து கொள்ளாமலேயே ஒருவர் மேல் ஒருவர் வைத்திருத்த அன்பை அவர்கள் வெளிகாட்டிக் கொண்டிருந்தனர்.

அவள் வலியில் துடிப்பதை பார்த்து வருந்தியவன் அவளின் கை வீக்கம் கூடிக் கொண்டே போனதை பார்த்து பயந்து போனான்.

“அண்ணா, கொஞ்சம் சீக்கிரம் போங்களேன்…” என்று ஆட்டோ ஓட்டுனரை அவசரப்படுத்தினான்.

“இதோ போயிடலாம் சார்…” என்று அவளின் அழுகையைப் பார்த்து ஏற்கனவே வேகமாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவர் இன்னும் வேகத்தைக் கூட்டினார்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் ஆட்டோ மருத்துவமனை வாசலில் நின்றது. இருவரின் உடல்நிலையைக் கவனித்திருந்த ஓட்டுனர் உதவ முன் வந்து “நான் போய் இவங்களைக் கூட்டிட்டு போக ஆள் கூப்பிட்டு வர்றேன் சார்…” என்று சொல்லிவிட்டு மருத்துவமனையின் உள்ளே ஓடினார்.

சில நொடிகளில் சக்கர நாற்காலியுடன் ஒரு செவிலியும் உடன் வந்தார்.

ஆட்டோவிலிருந்து இறங்கி தன் தோளில் சாய்த்துக் கொண்டே சத்யாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனை வாசலில் ஏறி அந்தச் சக்கர நாற்காலியில் அமர வைத்தான்.

அவளைச் செவிலி உள்ளே அழைத்துப் போனதும் வேகமாக ஆட்டோவிற்குப் பணத்தைக் கொடுத்து விட்டு ஓட்டுனருக்கு ஒரு நன்றியையும் செலுத்திவிட்டு சத்யாவை நோக்கி விரைந்து நடந்து சென்றான்.

அதற்குள் அவன் அருகில் இல்லை என்றதும் சத்யாவின் கை அவனைத் தேடி துழாவியது.

வேக எட்டு எடுத்து வைத்து அருகில் சென்று அவளின் கையைப் பிடித்துக் கொண்டு உடன் நடக்க ஆரம்பித்தான்.

அவனின் கையை விடாமல் இறுக பற்றிக் கொண்ட சத்யாவை அவசரப் பிரிவிற்குள் அழைத்துச் செல்ல அவனின் கையை விட்டுவிட்டு செவிலி வர சொல்ல, அவள் இன்னும் இறுக பிடித்துக் கொண்டாள்.

சத்யாவின் தவிப்பை உணர்ந்து தானும் அவளின் கையை இறுக பற்றிக் கொண்டவன் “சீக்கிரம் உள்ளே போடா சத்யா… அப்பதான் கை வலி குறையும்…” என்று அவளுக்கு ஆறுதலாகச் சொன்னவன், அவளின் கையை இறுகப் பிடித்து அழுத்தி விட்டு, அவளின் தலையை மெதுவாக வருடி விட்டு “நான் இங்கதான் இருக்கேன். போடாமா…” என்று இதமாகச் சொன்னான்.

அவள் உள்ளே சென்று சிறிது நேரம் கடந்த பிறகும் பதட்டத்துடன் வெளியே காத்திருந்தான் தர்மா.

சிறிது நேரத்திற்குப் பிறகு வெளியே வந்த செவிலி “உங்களை டாக்டர் கூப்பிடுறார். உள்ளே வாங்க…” என்றாள்.

உள்ளே நுழைந்ததும் அவனின் கண்கள் சத்யாவை தான் தேடின. அவள் திரை மறைத்திருந்த ஒரு படுக்கையில் படுத்திருக்க, அவளின் அனத்தல் குரல் மெல்லிதாக வெளியே கேட்டது.

உடனே அவளின் பக்கமாக அவன் நடக்கப் போக, “டாக்டர் இங்கே இருக்கார். இங்கே வாங்க…” என்று அருகில் இருந்த சிறிய மருத்துவர் அறைக்குள் செவிலி அழைக்க, சத்யா இருந்த புறம் திரும்பி பார்த்துக் கொண்டே அறைக்குள் சென்றான்.

“பேஷன்ட் சத்யவேணிக்கு நீங்க என்ன உறவு?” என்று அவன் எதிரே வந்து அமர்ந்ததும் மருத்துவர் தர்மாவிடம் கேட்க, “என் வருங்கால மனைவி சார்…!” சிறிது கூட யோசிக்கவே இல்லை பட்டென்று சொன்னான். அதைச் சொல்லும் போதே அவனின் குரல் கனிந்து ஒலித்தது.

“ஓ…! சரிங்க… அவங்களுக்குக் கை எலும்பு விலகி இருக்கு. ஒரு சின்ன ஆப்ரேஷன் பண்ண வேண்டியது இருக்கும்…” என்றார் மருத்துவர்.

“ஆப்ரேஷனா…?” என்று அவன் அதிர்வாகப் பார்க்க, “இப்போ எல்லாம் மாவு கட்டு போடுறதை விட ஆப்ரேஷன் ஈசி ஆப்ஷன். கையும் சீக்கிரம் சரியாகும். ஆப்ரேஷன் செய்றதா இருந்தா அதுக்கு உடனே ஏற்பாடு செய்யணும்…” என்று சொல்லிவிட்டு அவர் நிறுத்த, அவரைக் கவலையாகப் பார்த்தான் தர்மா.

“என்ன சொல்றீங்க, ஏற்பாடு செய்யலாமா? இல்லை மாவு கட்டு தானா? மாவுகட்டுனா நீங்க அதுக்கு வேற ஹாஸ்பிட்டல் தான் கூட்டிட்டு போகணும்…” என்றார்.

அவன் பணம் கட்ட தயங்குகின்றானோ என்று நினைத்து தான் மருத்துவர் அப்படிக் கேட்டார்.

அவனுக்குப் பணம் பொருட்டில்லை. அவனின் சேமிப்பில் ஓரளவு தாராளமாகவே இருப்பு இருந்தது. அவனின் தயக்கம் சத்யாவின் குடும்பத்தை நினைத்து தான். அவர்களுக்குச் சொல்லாமல் தான் எதுவும் செய்ய முடியாதே என்று நினைத்ததால் தயங்கினான்.

அந்த நேரத்தில் அறைக்கு வெளியே படுத்திருந்த சத்யா “அம்மா… தர்மா…” என்று மாறி, மாறி சொல்லி அனத்துவதைக் கேட்டவன், அடுத்த நிமிடம் யோசிக்கவே இல்லை. ‘அவளின் அன்னைக்கு அடுத்து அவனைத் தேடுகிறாள்’ எனும் போது இனி யோசிக்க ஒன்றுமே இல்லை என்று நினைத்துக் கொண்டான்.

“நீங்க ஆப்ரேஷனுக்கு ஏற்பாடு பண்ணுங்க டாக்டர். எவ்வளவு பணம் ஆகும்னு சொல்லுங்க. நான் கட்டிட்டு வர்றேன்…” என்றான்.

“ஓகே… ஆப்ரேஷனுக்கு ஏற்பாடு பண்றோம். பண விவரம் ரிஷப்ஷன்ல கேளுங்க சொல்லுவாங்க. அப்புறம் நீங்க வெறும் உட்பி தானே? அதனால் ஆப்ரேஷன் பார்ம்ல நீங்க கையெழுத்து போட முடியாது. அதனால் அவங்க பேரன்ட்ஸ் சைன் பண்ணினா பெட்டர்…” என்றார்.

“சரிங்க டாக்டர். அவங்க இப்போ வந்துடுவாங்க. அதுக்குள்ள நீங்க ஏற்பாடு பண்ணுங்க…” என்று அவரிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தவன் சத்யாவை நோக்கி நடந்தான்.

அவன் அங்கே செல்வதைப் பார்த்து, “நீங்க வெளியே வெயிட் பண்ணுங்க சார்…” என்று செவிலி அவனை அனுப்ப முயல, “இல்லை நான் ஒரு முறை பார்த்துட்டு போய்டுறேன்…” பார்க்காமல் போகமாட்டேன் என்பது போல உறுதியாகச் சொல்ல, அவர் புலம்பிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தார்.

திரையை விலக்கி அவன் உள்ளே செல்ல, அவனின் நடை சத்தம் கேட்டுச் சட்டெனச் சத்யாவின் அனத்தல் நின்று போனது. “தர்மா…” என்று ஆவலுடன் அழைத்தாள்.

“நான் தான்டா சத்யா…” என்று அவளின் வலது கையைப் பிடித்துக் கொண்டான். அவனின் கையை அவளும் இறுக பற்றிக் கொண்டாள்.

தர்மா அவளின் இன்னொரு கையைப் பார்க்க, முதலுதவி செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. அவளின் முகத்தைப் பார்த்தான். அவளின் வலியை அப்படியே பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

“ரொம்ப வலிக்குதாடாமா?” என்று வாஞ்சையுடன் கேட்டான்.

“ஹ்ம்ம்…” என்று அவனின் கையை இறுக்கி பிடித்துக் கொண்டு முனங்க, அதுவே அவளின் வலியின் அளவை சொல்லியது.

அவளின் வலி அவனையும் வலிக்க வைத்தது. அவளை அணைத்து ஆறுதல் சொல்ல அவனின் மனது துடித்தது. ஆனால் அதைச் செய்ய முடியாத நிலை அவனைக் கட்டிப் போட வருத்தத்துடன் கண்ணை மூடி தன்னைச் சமாளித்தவன், “சரியாகிடும் டா சத்யா…” என்றவன் “கைல ஒரு சின்ன ஆப்ரேஷன் பண்ணனும்னு டாக்டர் சொல்லியிருக்காங்க சத்யா…” என்றான்.

“ஆப்ரேஷனா?” என அதிர்ந்து அவனின் கையைப் பயத்தில் மேலும் இறுக்க,

“ரிலாக்ஸ் சத்யா. ஆப்ரேஷன் பண்ணினா கை சீக்கிரம் கூடிரும். மாவுகட்டுனா லேட் ஆகும். அதான் நானும் ஆப்ரேஷனுக்கு ஓகே சொல்லிட்டேன். உனக்கும் ஓகே தானே?” என்று கேட்டான்.

“ஆப்ரேஷன்னா பணம் நிறையச் செலவு ஆகுமே? அப்பாகிட்ட சொல்லிட்டிங்களா?” என்று கேட்டாள்.

“பணத்தைப் பத்தி யோசிக்காதே சத்யா. அதெல்லாம் பார்த்துக்கலாம். அங்கிளுக்கு இதோ போன் போடுறேன். பதட்டத்தில் நானும் சொல்ல மறந்துட்டேன்…”

“ஆனா அப்பாகிட்ட ஆப்ரேஷன் பண்ற அளவு பணம் இருக்குமா தெரியலையே…” என்று கவலையாகத் தனக்குள் புலம்புவது போலச் சொன்னாள்.

“இப்போ தான் அதைப் பத்தி கவலை வேண்டாம்னு சொன்னேன் சத்யா. நான் பார்த்துக்கிறேன்…” அதட்டலாக உரிமையுடன் அவன் சொன்னதைக் கேட்டு நெற்றியை சுருக்கினாள்.

அப்பொழுது தான் அவளுக்கு உறைத்தது. அவன் உரிமை எடுத்துக் கொள்ளும் அளவில் தான் நடந்து கொண்டு விட்டோம் என்று.

வலியில் தன்னையறியாமல் தான் நடந்து கொண்டது எல்லாம் மனதில் ஓட… பற்றியிருந்த அவனின் கையை வேகமாக விடுவித்தாள் சத்யவேணி.