13 – சிந்தையில் பதிந்த சித்திரமே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 13
“இங்கேயும் ஒரு பின் குத்துங்கமா. இடுப்பு எல்லாம் தெரியுது…” என்று சிணுங்கினாள் நயனிகா.
“என்னடி இது ஒரு சேலையைக் கட்டிக்கிட்டு என்னை இத்தனை பாடு படுத்துற? இதுக்குத்தான் அப்பப்போ சேலை கட்டி பழகுன்னு சொல்றது. அப்படிக் கட்டியிருந்தால் இப்ப இவ்வளவு கஷ்டப்பட வேண்டாம் இல்ல…” என்று சொல்லிக் கொண்டே இடை தெரியாமல் இழுத்து ஒரு பின்னை குத்தி விட்டார்.
“ஆமா, இது எங்க உடம்பு தெரியுதோன்னு வாட்ச்மேன் மாதிரி என் உடம்பை நானே காவல் காக்குற மாதிரி இருக்கு. சுடிதார் போட்டு போகலாம்னு பார்த்தால் இன்னைக்கு எல்லாரும் சேலை கட்டுவோம்னு எங்க ஃபிரண்ட்ஸ் கேங்க் முடிவு பண்ணிட்டாங்க…” என்று புலம்பிக் கொண்டே அன்னையின் உதவியால் சேலையைக் கட்டி முடித்து விட்டுக் கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள்.
புடவையில் தன் தோற்றம் கச்சிதமாக இருந்ததைக் கண்டவள், “பரவாயில்லை, நானும் கொஞ்சம் பார்க்கிற மாதிரி இருக்கேன்…” என்றாள்.
“அது என்னடி கொஞ்சம்? இப்பத்தான் ரொம்ப லட்சணமா இருக்க?” என்ற அபிராமி மகளின் கன்னம் வழித்து நெட்டி முறித்தார்.
“அப்ப வேற ட்ரெஸ்ல அசிங்கமாகவா இருக்கேன்?” மூக்கை சுருக்கி கேட்டாள்.
“ம்க்கும், உடனே வேணும்னே இதைக் கேட்டுரு. பொண்ணுங்க மார்டர்ன் ட்ரெஸ்ல ஒரு அழகுனா புடவையில் ஒரு அழகு. அவ்வளவு தான். போ, போ… கிளம்பு. கல்யாணத்துக்கு நேரம் ஆகுது…” என்று மகளை விரட்டினார்.
நயனிகா வெளியே வர, மகளைப் புடவையில் பார்த்த ஞானசேகரன், “நல்லா இருக்கமா…” என்றார்.
“தேங்க்ஸ் பா. போயிட்டு வர்றேன்பா…” என்று பரிசு பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
“அக்கா, என்ன என்னை விட்டுட்டு போற? நேத்து நீதானே என்னையும் கூட்டிட்டு போறேன்னு சொன்ன…” என்று தயாராகயிருந்த தயா ஓடி வந்தான்.
“நானாடா வர சொன்னேன்? நீயே தானே வர்றன்னு சொன்ன. அப்பாகிட்ட நீ எதுக்கு வர்றன்னு சொல்லட்டுமா?” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்டாள்.
“நோ அக்கா, போட்டுக் கொடுக்காதே. அப்புறம் நானும் போட்டுக் கொடுப்பேன்…” என்று தானும் ரகசியமாக அவளை மிரட்டினான்.
“நான் என்னடா தப்புச் செய்தேன், போட்டுக் கொடுக்க?”
“அதுவா…” என்று தயா இழுக்க,
“என்ன அப்படி அக்காவும், தம்பியும் ரகசியமா பேசுறீங்க? கிளம்பலையா?” என்று அபிராமி கேட்க,
“இதோ கிளம்பிட்டோம்மா…” என்றவள், “வாடா” என்று தம்பியையும் அழைத்துக் கொண்டு வெளியேறினாள்.
“நான் என்னடா செய்தேன்? ஏன் அப்படிச் சொன்ன?” என்று மின்தூக்கியில் செல்லும் போது கேட்டாள் நயனிகா.
“எனக்கு என்ன ஒன்னும் தெரியாதுன்னு நினைச்சியா? அதெல்லாம் உன்னைப் பத்தி பெரிய ரகசியமே எனக்குத் தெரியும்…” என்றான்.
தம்பியை புரியாமல் பார்த்தாள் நயனிகா. அவன் அப்படி என்னைப் பற்றிய ரகசியம் எதைக் கண்டுபிடித்தான் என்பது போல் அவனைப் பார்த்தாள்.
“புரியுற மாதிரி சொல்லுடா…” என்று கேட்டாள்.
அதற்கு அவன் பதில் சொல்ல முயன்ற போது மின்தூக்கியின் கதவு திறந்து மூன்றாம் தளத்தில் இருந்த ஒருவர் ஏற, தயா அமைதியாகிவிட்டான்.
அதன் பிறகு இருவரும் அதைப் பற்றிப் பேசிக் கொள்ளவில்லை.
இருவரும் திருமண மண்டபத்திற்குச் சென்று சேர்ந்தனர்.
தோழிகளைப் பார்த்ததும் நயனிகா அவர்களுடன் சேர்ந்து அரட்டை அடிக்க ஆரம்பிக்க, தயா தன் சைட் அடிக்கும் வேலையைத் தொடர்ந்தான்.
“கன்கிராட்ஸ் பானு…” என்று மேடையேறி தோழிக்குப் பரிசை கொடுத்து விட்டு வாழ்த்து தெரிவித்தாள்.
“தேங்க்ஸ் நயனி. புடவையில் ரொம்ப நல்லா இருக்கடி. ஆமா சார் வரலையா?” என்று கேட்டாள் பானு.
“எந்தச் சார்?” நயனிகா புரியாமல் விழிக்க,
“நம்ம கதிர் சார்டி. உனக்குப் பத்திரிகை வைக்க வரும் போது அவருக்கும் பத்திரிகை வச்சேன். கண்டிப்பா வர்றேன்னு சொன்னார்…” என்றாள்.
கதிரின் பெயரை கேட்டதும் நயனிகாவின் விழிகள் எதிர்பார்ப்புடன் மின்னின.
அவளைக் கவனித்துக் கொண்டிருந்த தயா, ‘அக்கா மொத்தமா விழுந்துட்டாள் போலயே’ என்று நினைத்துக் கொண்டான்.
“அவர் வர்றாரான்னு எனக்குத் தெரியலை பானு. நான் வரும் போது அவர் வீடு பூட்டியிருந்தது…” என்றாள்.
“சரி விடு…” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “ஹேய் பானு, நம்ம கதிர் சார் வந்துட்டார்டி…” என்று ஒரு தோழி குரல் கொடுக்க, நயனிகா ஆவலுடன் வேகமாகத் தலையைத் திருப்பினாள்.
வெள்ளை சட்டை, கருப்புப் பேண்ட் அணிந்து, படிய வாரிய தலையுடன் பளிச்சென்று வந்து கொண்டிருந்தான் கதிர்நிலவன்.
அவனின் முன்னாள் மாணவர்கள் எல்லாம் அவனை வரவேற்க, மெல்லிய சிரிப்புடன் மேடையேறி வந்தான்.
அவனைக் கண்சிமிட்டாமல் பார்த்தாள் நயனிகா.
“இவர் தானே உன்னோட ரகசியம் அக்கா?” என்று அவளின் அருகில் நின்றிருந்த தயா முணுமுணுக்க, தம்பியை அதிர்ந்து திரும்பி பார்த்தாள்.
“நேத்து ஐஸ்க்ரீம் கடையில் வச்சே உன்னைக் கவனிச்சேன். உன் சாய்ஸ் சூப்பர் தான். சார் உனக்கு மேட்ச்சா இருப்பார்…” என்றான் சிரிப்புடன்.
தம்பியின் ஆதரவை உணர்ந்தவளுக்கும் உதட்டில் புன்னகை தவழ்ந்தது.
கூடவே நேற்று காஃபி ஷாப்பில் கதிர்நிலவனுடன் பேசிக் கொண்டிருந்த பெண்ணைப் பற்றிய கேள்வியும் மனதில் எழுந்தது.
கதிர்நிலவனும், அந்தப் பெண்ணும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தனர். பேச்சு முடியும் நேரம் கதிர் ஏதோ சொல்ல, உடனே அந்தப் பெண்ணின் முகம் அதிர்ச்சிக்கு மாறியது. பின் அவள் ஏதோ சொல்லிவிட்டு எழுந்து சென்றதையும் கண்டாள் நயனிகா.
அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தை விட, அந்தப் பெண் யார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் அவளுக்கு மிகுதியாக இருந்தது.
‘இவர்கிட்ட கேட்டாத்தானே தெரியும். இன்றே எப்படியாவது கேட்டு விடுவோமா?’ என்று நினைத்துக் கொண்டே ஓரவிழிகளால் அவனைப் பார்த்தாள்.
அவன் மணமக்களுக்குப் பரிசு கொடுத்து விட்டு, அவனிடம் பேசிய மாணவர்களிடம் எல்லாம் பேசிக் கொண்டிருந்தான்.
அனைவரிடமும் பேசியவன், தன் புறம் மறந்தும் கூடத் திரும்பவில்லை என்பதைக் கண்ட நயனிகாவிற்கு வருத்தமாக இருந்தது.
மணமக்களுடன் அனைவரும் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
நண்பர்கள் அனைவரும் சாப்பிட செல்ல, அவர்களுடன் நடந்தாலும் நயனிகாவின் நினைவு முழுவதும் கதிர்நிலவனிடம் எப்படிப் பேசலாம் என்பதில் தான் இருந்தது.
சாப்பிட்டு முடித்துக் கதிர்நிலவன் முன்பே கிளம்ப, நண்பர்கள் கூட்டம் மண்டபத்தில் வட்டமாக உட்கார்ந்து அரட்டை அடிக்கத் தயாராகினர்.
அவர்களுடன் கலந்து கொள்ளாமல் நயனிகா கதிர்நிலவன் பக்கம் நடந்தாள்.
“அக்கா, உன் ஃபிரண்ட்ஸ் எல்லாம் இங்கே இருக்காங்க. நீ எங்கே போற?” தயா அவளை நிறுத்த,
“தயா ப்ளீஸ்டா. நான் கதிர்கிட்ட கொஞ்சம் பேசணும். நான் இதோ வந்துடுறேன். என் ஃபிரண்ட்ஸ் யாரும் என்னைக் கேட்டால் அவங்களைச் சமாளிச்சுட்டு இரு…”
“பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு முன்னேறிட்டியாக்கா?” என்ற தயாவின் கேள்விக்குப் பதில் சொல்ல அவள் அந்த இடத்திலேயே இருக்கவில்லை.
“கதிர், ஒரு நிமிஷம் நில்லுங்க…”
அவன் மண்டபத்தின் வெளியே நிறுத்திய தன் கார் கதவை திறந்து கொண்டிருக்கும் போது அழைத்தாள் நயனிகா.
அவளின் குரலை கேட்டு நின்றாலும் அவள் புறம் திரும்பவில்லை அவன்.
“ப்ளீஸ், நான் உங்ககிட்ட ஒரே ஒரு விஷயம் கேட்கணும். அதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டு போங்க…” என்று சொல்ல, மெல்ல அவளின் புறம் திரும்பினான்.
அவனின் பார்வை அவளின் முகத்தை விட்டு அகலவில்லை.
‘நான் இன்னைக்குத் தானே முதல் முதலாகச் சேலை கட்டியிருக்கேன். அதை ஒரு முறை பார்த்தால் தான் என்னவாம்?’ அவளின் மனம் சிணுங்கிற்று.
அவனோ, ‘விரைவில் சொல்!’ என்பதாகப் பார்த்துக் கொண்டு நின்றான்.
“நேத்து உங்க கூடக் காஃபி ஷாப்ல பேசிட்டு இருந்த பொண்ணு யாரு?”
கேட்க தயக்கம் தான் என்றாலும் தெரிந்து கொள்ளவில்லை என்றால் தான் நிம்மதியாகத் தூங்க முடியாது என்று நினைத்தவள் முயன்று கேட்டுவிட்டிருந்தாள்.
கண்களைச் சுருக்கி அவளைப் பார்த்தவன், “என் கூட வேலை பார்க்கும் லெக்சரர்” என்று சொல்லிவிட்டு திரும்பி கார் கதவை திறக்க போனான்.
‘லெக்சரரா? பார்க்க ரொம்ப யங்கா, கல்யாணம் ஆகாதவங்க போல இருந்தாங்களே’ என்று உள்ளுக்குள் பதறியவள்,
“உங்ககிட்ட என்ன பேசிட்டு இருந்தாங்க?” என்று அவள் வேகமாகக் கேட்கவும், சட்டென்று திரும்பி அவளை முறைத்துப் பார்த்தான்.
“அதைத் தெரிஞ்சிக்கிட்டு நீ என்ன பண்ண போற? என்கிட்ட பேசுறவங்க விவரம் எல்லாம் உன்கிட்ட சொல்லணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. இனி இப்படி என்கிட்ட கேட்காதே…” என்று கடுமையாகச் சொன்னவன், மேலும் அவள் பேச இடம் கொடாமல் காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
தான் கேட்டது தவறு என்று அவளுக்கே தெரிந்தது தான். ஆனாலும் காதல் கொண்ட நெஞ்சம் தன்னவனுடன் ஒரு யுவதி அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறியது.
சிறிது நேரம் மண்டபத்தில் நண்பர்களுடன் நேரத்தை கடத்திவிட்டு தம்பியுடன் வீடு போய்ச் சேர்ந்தாள் நயனிகா.
“உன் லவ்வை அவர்கிட்ட சொல்லிட்டியாக்கா?” தமக்கையிடம் மெதுவாக விசாரித்தான் தயா.
“ம்ம்… சொல்லிட்டேன்…”
“ஓஹோ! அப்போ செம ஸ்பீடா தான் போயிட்டு இருக்க. அதுக்கு அவர் என்ன சொன்னார்?”
“மறுத்துட்டார்…” என்று வருத்தமாகச் சொன்னாள்.
“ஓ! ஏனாம்?” என்று கேட்ட தம்பியிடம் கதிர்நிலவனின் கை விஷயத்தைச் சொல்ல மனது வரவில்லை.
அது என்னவோ கதிர்நிலவன் இன்று வரை தன் வலதுகையை மறைத்துக் கொள்வதில் தான் முனைப்பாக இருந்தான் என்பதால் அவனின் நெருங்கிய வட்டம் சிலரை தவிர யாருக்கும் அவன் கையின் நிலை தெரியாது.
அபிராமிக்கும், தயாவிற்கும் கூடத் தெரியாது என்பதால் நயனிகாவும் சொல்லவில்லை.
இப்போது சொல்லவும் விருப்பம் வரவில்லை என்பதால் அமைதியாக இருந்தாள்.
“நீ அவர் ஸ்டுடெண்டா இருந்தன்னு மறுக்குறாரா?” என்று தயா கேட்க, குத்து மதிப்பாகத் தலையை ஆட்டி வைத்தாள்.
“இனி என்ன செய்யப் போற?” என்று கேட்டான்.
“தெரியலை. ஆனா என் வாழ்க்கையில் அவரைத் தவிர வேற யாருக்கும் இடமில்லை…” என்றாள் உறுதியாக.
“அம்மா, அப்பா சம்மதிப்பாங்களா?”
“முதலில் அவர் சம்மதிக்கட்டும் டா. அப்புறம் அப்பா, அம்மாகிட்ட சொல்றதை பத்தி யோசிப்போம். ஆனா நீ எதுவும் அவங்க கிட்ட அவசரப்பட்டு உளறி வச்சுடாதே…” என்றாள்.
“சொல்லாம இருக்கணும்னா நீயும் நான் சொல்றதுக்கு எல்லாம் தலையை ஆட்டணும். இல்லனா போட்டுக் கொடுத்துடுவேன்…” என்று மிரட்டினான்.
“நீயெல்லாம் ஒரு தம்பியாடா. சொந்த அக்காவையே கந்து வட்டிக்காரன் மாதிரி மிரட்டுற?”
“நீயும் தானே நான் ஏதாவது செய்தால் அப்பா, அம்மாகிட்ட சொல்லிடுவேன்னு மிரட்டுற?”
தொடர்ந்து அக்காவும், தம்பியும் வழக்கடித்துக் கொண்டனர்.
அன்று கல்லுரி முடிந்து வீட்டிற்கு வந்து அழைப்பு மணியை அழுத்தினாள். நயனிகா.
ஆனால் எப்போதும் உடனே கதவை திறந்துவிடும் அபிராமி அன்று திறக்கவே இல்லை.
‘அம்மா கடைக்கு எதுவும் போட்டாங்களா?’ என்று நினைத்துக் கொண்டே மீண்டும் அழைப்பு விடுக்க, அபிராமி வருவது போல் தெரியவில்லை.
“என்னமா நயனிகா, அம்மா கதவை திறக்கலையா?” என்று பக்கத்து வீட்டு பெண்மணி வெளியே வந்தவர் கேட்டார்.
“ஆமா அக்கா. கடைக்கு எதுவும் போய்ட்டாங்க போல…”
“மதியம் தானேமா நானும் உன் அம்மாவும் சேர்ந்து கடைக்குப் போனோம். இப்போ உள்ளே தான் இருந்தாங்க. தூங்கிட்டாங்களோ என்னவோ? எதுக்கும் திரும்ப மணி அடிச்சுப் பார். நான் ஒரு அவசர வேலையா வெளியே போய்ட்டு இருக்கேன். கிளம்புறேன்…” என்று அந்தப் பெண்மணி சென்று விட, நயனிகா இப்போது கதவை தட்டினாள்.
அதற்கும் பதில் இல்லாமல் போக, தன் போனை எடுத்து அன்னைக்கு அழைத்தாள்.
வீட்டுக்குள் அன்னையின் போன் அடிக்கும் ஓசை மெல்லிதாகக் கேட்டது.
‘அம்மா போனை வீட்டில் வச்சுட்டு வெளியே போக மாட்டாங்களே. அப்போ வீட்டுக்குள் இருந்துட்டு ஏன் கதவை திறக்க மாட்டேங்கிறாங்க?’ என்று பதட்டமாக நினைத்தவள் படபடவென்று கதவை தட்டினாள்.
அப்போது அந்த வளாகத்தில் இருந்த மற்ற வீடுகள் அனைத்துமே மூடித்தான் இருந்தன.
அதனால் யாரிடம் உதவி கேட்பது என்றும் தெரியவில்லை என்பதால் மீண்டும் மீண்டும் அழைப்பு மணி அடித்தும், கதவை தட்டியும் ஓய்ந்து போனவளுக்கு அழுகையே வந்து விட்டது.
“அம்மா, என்னாச்சுமா? கதவை திறங்கமா…” என்று அழுகையுடன் அவள் கதவை தட்டிக் கொண்டிருக்க, அப்போது படியேறி மேலே வந்தான் கதிர்நிலவன்.
அவன் வருகையை உணராமல் அவள் விடாமல் அழுது கொண்டே கதவை தட்ட, யோசனையுடன் அவளைப் பார்த்துக் கொண்டு வந்தான்.
“அம்மா… அம்மா…” என்று அவளின் அழுகை இப்போது அதிகரிக்க,
“என்னாச்சு?” என்ற குரலில் வேகமாக அவனின் புறம் திரும்பினாள்.
“கதிர்… கதிர்… அம்மா கதவையே திறக்க மாட்டேங்கிறாங்க. எனக்குப் பயமா இருக்கு…” என்று அவன் அருகில் ஓடி வந்தாள்.
“அவங்களுக்குப் போன் பண்ணி பார்த்தியா?”
“போன் உள்ளே இருந்து தான் சத்தம் கேட்குது?”
“உன்னோட அப்பா, தம்பி எங்கே? அவங்ககிட்ட அம்மா எங்கேயும் வெளியே போயிருக்காங்களான்னு விசாரிச்சியா?”
“இல்லையே…” என்று அவள் உதட்டை பிதுக்க,
“முதலில் அவங்களுக்குப் போன் போட்டு கேளு. அவங்ககிட்ட சொல்லிட்டு கூட அம்மா வெளியே போயிருக்கலாம்…” என்றான்.
வேகமாகத் தன் போனில் முதலில் தந்தைக்கு அழைத்தாள். அவர் ஒரு மீட்டிங்கில் அந்த நேரம் இருந்ததால் அவளின் அழைப்பை ஏற்கவில்லை என்றதும், அடுத்து தம்பிக்கு அழைத்தாள்.
“டேய் தயா, அம்மா உன்கிட்ட எங்கயாவது வெளியே போறேன்னு சொன்னாங்களா?” அவன் அழைப்பை ஏற்றதும் பதட்டத்துடன் வேகமாகக் கேட்டாள்.
“என்னாச்சுக்கா? அம்மா என்கிட்டே ஒன்னும் சொல்லலையே? வீட்டில் தான் இருப்பாங்க…”
“இல்லடா அம்மா கதவையே திறக்க மாட்டேங்கிறாங்க. எனக்குப் பயமா இருக்கு…” என்றாள்.
“பயப்படாதேக்கா. நான் காலேஜ் விட்டுக் கிளம்பிட்டேன். அம்மா எங்கயாவது பக்கத்தில் போயிருக்கலாம். நான் கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன்…” என்றான் தயா.
“தயா என்ன சொல்றான்?” அவள் போனை வைத்ததும் விசாரித்தான் கதிர்நிலவன்.
“அவனுக்குத் தெரியலை. எனக்கு நல்லா தெரியும். நான் இந்த நேரத்தில் வீட்டுக்கு வருவேன்னு அம்மா எங்கேயும் போக மாட்டாங்க. அவங்க உள்ளே தான் இருப்பாங்க. அவங்களுக்கு என்னமோ ஆச்சு. அப்பா வேற போனை எடுக்க மாட்டேங்கிறார். எனக்குப் பயமா இருக்கு…” என்று அழ ஆரம்பித்தாள்.
“சரி, சரி, அழாதே! வாட்ச்மேன்கிட்ட கேட்டுப் பார்க்கலாம்…” என்றவன், தன் கைபேசியில் வாசல் அருகில் இருக்கும் காவலாளிக்கு அழைத்தான்.
அபிராமி வீட்டில் தான் இருக்கிறாரா? இல்லையா? என்று தெரியாத சூழ்நிலையில் சட்டென்று அவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
காவலாளியிடம் விசாரிக்க, அவரோ அபிராமி வெளியே செல்லவில்லை என்ற தகவலை தந்தார்.
“அம்மா உள்ளே தான் இருக்காங்க போல. நான் கதவை திறக்க முடியுதான்னு பார்க்கிறேன்…” என்று சொல்லிவிட்டு தன் வீட்டுக் கதவைத் திறந்து சென்றவன் சற்று நேரத்தில் கதவு பூட்டை உடைக்கச் சில பொருட்களை எடுத்து வந்தான்.
அதை வைத்து பூட்டுப் பகுதியில் ஓட்டை போட்டு எப்படியோ ஒரு வழியாகக் கதவை திறந்தான்.
நயனிகா முதல் ஆளாக உள்ளே சென்று பார்க்க, சமையலறையில் கோணல் மாணலாக மயங்கி விழுந்து கிடந்தார் அபிராமி.
“அம்மா…” என்று அலறிக் கொண்டு அருகில் ஓடினாள்.
“தண்ணி எடுத்துட்டு வா நயனிகா…” அவளைத் துரிதப்படுத்தினான் கதிர்நிலவன்.
அவள் தண்ணீரை எடுத்து வந்து கொடுக்க, அதை அவர் முகத்தில் தெளித்தான். அதிலும் அவர் விழிக்காமல் போக, நாடி துடிப்பை பார்த்தான்.
நாடி துடிப்பு இருந்தது.
“அம்மா… அம்மாவுக்கு என்னாச்சு கதிர்? ஏன் எழுந்திருக்க மாட்டேங்கிறாங்க?” பதறிப் போய்க் கேட்டாள்.
“நாடி துடிப்பு இருக்கு. மயக்கம் தான்னு நினைக்கிறேன்…” என்றவன், மீண்டும் மீண்டும் தண்ணீரை தெளித்து, “அம்மா… அம்மா…” என்று அவரின் கன்னத்தில் லேசாகத் தட்டினான்.
அதில் சற்றுநேரத்தில் லேசாகக் கண்களைத் திறந்தார் அபிராமி.
“அம்மா… என்னம்மா ஆச்சு உங்களுக்கு?” என்று நயனிகாவும் போட்டு அவரை உலுக்க,
“ம… மயக்…கமா…” என்று திக்கி திணறி சொன்ன அபிராமியின் கண்கள் மீண்டும் சொருக ஆரம்பித்தன.