13 – ஈடில்லா எனதுயிரே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 13
சில நாட்கள் கடந்திருந்தன.
கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் ராகவர்தினி. இளம் மஞ்சள் நிறத்தில் சிவப்புப் பூக்கள் போட்ட சுடிதாரில் இருந்தாள்.
கண்ணாடி முன் நின்றிருந்தாள்.
“டிபன் எடுத்து வச்சுட்டேன் ராகா. சாப்பிட வா…” என்று மகளை அழைத்தார் மீரா.
“தலைவாரிட்டு இருக்கேன் மா. இதோ வர்றேன்…” குரல் கொடுத்தாள் மகள்.
தலைவாரி முகத்திற்குப் பவுடர் போட்டு, நெற்றியில் பொட்டை ஒட்ட வைத்துக் கண்ணாடியில் தன்னைச் சரி பார்த்து விட்டு, துப்பட்டாவை சரியாக இழுத்து விட்டுக் கொண்டே டைனிங் ஹாலுக்கு வந்தாள் ராகவர்தினி.
அவள் சாப்பிட அமரவும் மீரா தட்டில் இட்லியைப் பரிமாற ஆரம்பித்த போது அவரின் அலைபேசி அழைத்தது.
“நீ சட்னி ஊத்தி சாப்பிட்டுட்டு இரு. இதோ வர்றேன்…” என்றவர் அலைபேசியை எடுத்து பேசினார்.
“என்னங்க அண்ணி, காலையிலேயே போன்?” என்று அழைத்த கஸ்தூரியிடம் விசாரித்தார்.
“ராகா வீட்டில் இருக்காளா? காலேஜ் கிளம்பிட்டாளா மீரா?” கஸ்தூரி கேட்க,
“சாப்பிட்டுட்டு இருக்காள் அண்ணி. சாப்பிட்டதும் காலேஜ் கிளம்பிடுவாள். என்ன விஷயம் அண்ணி?”
“அவள்கிட்ட கொஞ்சம் போனை கொடு மீரா, நான் பேசணும்…” என்றதும்,
“இந்தா ராகா, அண்ணி உன்கிட்ட பேசணுமாம்…” என்று மகளிடம் கைபேசியை நீட்டினார்.
“எனக்குக் காலேஜூக்கு நேரம் ஆச்சுமா. என்னால் இப்ப பேச முடியாது…” மெல்லிய குரலில் மறுப்பு தெரிவித்தாள் ராகவர்தினி.
ஆனால் அது அந்தப் பக்கம் இருந்த கஸ்தூரிக்கும் கேட்டுவிட்டிருந்தது.
‘சும்மா ஒரு வார்த்தை பேசு’ என்று மீராவும் மெல்லிய குரலில் சொல்ல,
‘ம்ப்ச், டைமாச்சுமா…’ என்று முனங்கினாள்.
அவளை முறைத்து விட்டு, “அவள் காலேஜ் போய்ட்டு வந்து பேசுறாளாம் அண்ணி…” என்று மீரா கஸ்தூரியிடம் சமாளிப்பாகச் சொன்னார்.
“என்கிட்ட பேச விருப்பம் இல்லைனா அதை ராகாவை நேராவே சொல்ல சொல்லு மீரா. என் பையன் போலவே அவளும் என்னை ஒதுக்கி வச்சுட்டாள். நான் அவள் போனுக்குப் போட்டால் எடுக்க மாட்டேங்கிறாள்னு தான் உன் போனுக்குப் போட்டேன். இப்பவும் அவளுக்குப் பேச மனசில்லைனா விடு…” என்று விரக்தியாகச் சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தார் கஸ்தூரி.
“ஏன்டி உன் அத்தைக்கிட்ட பேச மாட்டேக்கிறே? அவங்க எவ்வளவு வருத்தப்பட்டுப் பேசினாங்க தெரியுமா?” என்று மகளைக் கடிந்து கொண்டார் மீரா.
“நான் எதுக்குமா பேசணும்? என்கிட்ட பேச என்ன இருக்கு?” என்று கேட்டாள் ராகவர்தினி.
“என்னடி பெரிய மனுஷி மாதிரி கேள்வி கேட்டுட்டு இருக்க? அவங்க உனக்கு அத்தை. உன் அப்பாவுக்கு அக்கா. அந்த மரியாதையைக் கொடு…” என்றார் அதட்டலாக.
“அவங்க எனக்கு அத்தை. என்னோட அப்பாவுக்கு அக்கான்னு இத்தனை வருஷமா எனக்குத் தெரியாம இப்பதான் சொல்லிக் கொடுக்கிற மாதிரி சொல்லிக்கிட்டு இருக்கீங்க? சும்மா போங்கமா காமெடி பண்ணாம…” என்றாள் கேலியாக.
“ராகா போதும் விளையாட்டு! பெரியவங்ககிட்ட மரியாதையா நடந்துக்கணும்னு சொல்லியிருக்கேனா இல்லையா? காலேஜ் போய்ட்டு வந்ததும் உன் அத்தைக்குப் போன் போட்டு பேசு…” என்று கண்டிப்பாகச் சொன்னார்.
“முடியாது மா! நான் சொல் பேச்சு கேட்காத பிள்ளைன்னு பேர் எடுத்தாலும் பரவாயில்லை… நான் அவங்ககிட்ட பேசுவதாக இல்லை…” என்றாள் உறுதியுடன்.
“இதென்னடி பிடிவாதம்? அப்படி அவங்க மேல உனக்கு என்ன கோபம்?”
“அத்தானை கஷ்டப்படுத்தியவங்ககிட்ட நான் பேச தயாராயில்லை. இப்ப அவங்களால் அத்தான் தனியா எவ்வளவு கஷ்டப்படுறார் தெரியுமா? பெத்த மகனை நம்பாமல் பேசிட்டு இப்ப உட்கார்ந்து வருத்தப்பட்டால் ஆச்சா?” என்றாள் கோபமாக.
“அப்படிப் பார்த்தால் நானும் தான் பிரபாவை தப்பா நினைச்சேன். ஆனா நீ என்கிட்ட பேசுற தானே? அது போல அவங்ககிட்டயும் பேச வேண்டியது தானே?” மீரா கேட்க,
“நீங்க அத்தான் கூட அவ்வளவா பழகியது இல்ல. நீங்க அத்தானை புரிந்து கொள்ளாமல் போனால் அது வேற. ஆனா அவங்க பெத்து வளர்த்து கூடவே இருந்தவங்க. அவங்க ஏன் நம்பாம போனாங்க? இனி அதைப் பத்தி பேசி பிரயோஜனம் இல்லை. இனி அத்தான் எப்ப அவங்க கூடப் பேசுறாரோ அப்பத்தான் நானும் அவங்க கூடப் பேசுவேன். அதுவரை என்னை அவங்க கூடப் பேச சொல்லி கட்டாயப்படுத்தாதீங்க…” என்றாள்.
“அது அவங்க அம்மா, மகன் பிரச்சனை. அதில் நீ ஏன்டி தலையிட்டு பேச மாட்டேன்னு சொல்லிட்டு இருக்குற?”
“அது அப்படித்தான்!” என்றவள் சாப்பிட்ட கையைக் கழுவிவிட்டு எழுந்தாள்.
‘வர வர சொல் பேச்சு கேட்குறதே இல்லை’ என்று புலம்பிக் கொண்டார் மீரா.
பிரபஞ்சனை நம்பாதது மட்டுமல்ல, வேறொரு கோபமும் கஸ்தூரி, சுபேசன் மீது ராகவர்தினிக்கு இருந்தது.
பிரபஞ்சனின் நின்று போன திருமணத்தை எடுத்து நடத்த நினைக்காமல் அப்படியே விட்டுவிட்டார்களே என்ற கோபம் தான் அது.
அன்று மாதவன் வந்த பிறகு அவரும் பிரபஞ்சனிடம் திருமணத்தைப் பற்றிப் பேச்சை எடுத்ததற்கு அவளிடம் சொன்னதே தான் அவளின் தந்தையிடமும் சொன்னான்.
‘இனி இந்தப் பேச்சு வேண்டாம் மாமா’ என்று அவன் சொல்ல, அவருக்கும் அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.
அவன் தன் பெற்றோரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் மேற்கொண்டு பேசி முடிவு செய்யலாம். இப்போது தான் மட்டும் தனியாக என்ன முடிவு எடுக்க முடியும் என்று மாதவனுக்குத் தயக்கம் இருந்தது.
உதட்டளவில் வேண்டாமென்று சொன்னாலும் உள்ளத்தளவில் அவனின் வேதனையை அறிந்த ராகவர்தினிக்கு அவன் திருமண விஷயத்தில் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் ஆட்டிப் படைக்க, அதைக் கோபமாகக் கஸ்தூரி, சுபேசன் மீது காட்டினாள்.
அவர்கள் மட்டும் மகனை நம்பியிருந்தால் அவனுக்கு இந்த நிலை வந்திருக்காது. தனியாகவும் சென்றிருக்க மாட்டான். அடுத்து அவனின் திருமணத்தைப் பற்றியும் பேசியிருப்பார்கள் தானே என்ற எண்ணம் தான் அவளுக்கு.
அதுவும் சில நாட்களாகத் தானே நந்திதாவிற்கு அழைத்துப் பேசலாமா வேண்டாமா என்ற எண்ணம் வேறு அவளுக்குள் குடைந்து கொண்டிருந்தது.
ஆனால் தான் பேசினால் அது சரி வருமா இல்லையா என்று தெரியாமல் அவளுக்குப் பேச யோசனையாக இருந்தது.
திருமணம் விஷயம் பெரியவர்கள் பேசினால் தான் சரி வரும் என்றும் தோன்ற நந்திதாவிற்கு அலைபேசியில் அழைக்கும் எண்ணத்தைக் கைவிட்டாள் ராகவர்தினி.
ஆனால் அவள் எதிர்பார்க்காமல் அலைபேசியில் பேசாமல் நேராகவே நந்திதாவிடம் பேச ராகவர்தினிக்குச் சந்தர்ப்பம் தானாவே அமைந்தது.
அன்று கல்லூரி விட்டு தனது ஸ்கூட்டியில் வீட்டிற்குத் திரும்பி வரும் வழியில், ஒரு கடை வாசலில் நின்று யாருடனோ பேசிக் கொண்டிருந்த நந்திதாவை கண்டாள் ராகவர்தினி.
அவளைப் பார்த்ததும் சட்டென்று மனதில் ஒருவித பரபரப்பு தோன்ற, கடையைத் தாண்டி சென்றவள், மீண்டும் வண்டியைத் திருப்பிக் கொண்டு வந்தாள்.
“ஹாய் அக்கா…” வண்டியில் இருந்த படியே நந்திதாவை பார்த்து குரல் கொடுத்தாள் ராகவர்தினி.
அவள் குரல் கேட்டு திரும்பி பார்த்த நந்திதா, அவளை அங்கே எதிர்பாராத பார்வையை ஒரு நொடி பார்த்தவள், அடுத்த நொடி ஏதோ அறியாதவளை பார்த்தது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அவளிடமிருந்து அப்படி ஒரு செய்கையை எதிர்பார்க்கவில்லை ராகவர்தினி.
ஆனாலும் அவளைப் பார்த்து விட்டு அப்படியே போய்விடும் எண்ணம் எல்லாம் அவளுக்கு இல்லை.
பிரபஞ்சன் மீது ஏதாவது வருத்தம் இருந்தாலும் தான் சொல்லி புரிய வைப்போம் என்ற எண்ணத்துடன் வண்டியை விட்டு இறங்கி அவளின் அருகில் சென்றாள்.
அவள் தன் அருகில் வந்ததை உணர்ந்தாலும் அவளின் பக்கமே திரும்பவில்லை நந்திதா.
அவளுடன் பேசிக் கொண்டிருந்த பெண் ராகவர்தினியைப் பார்ப்பதும், நந்திதாவை பார்ப்பதுமாகப் பேச்சை தொடர முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள்.
“நந்திதா, உன்கிட்ட பேசத்தான் அவங்க நிற்கிறாங்கன்னு நினைக்கிறேன்…” என்று அந்தப் பெண் மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.
“நீ சொல்லு ராஜி. உன்னைப் பார்த்து எத்தனை நாள் ஆச்சு. உன்கிட்ட பேசத்தான் நான் இங்கே நிற்கிறேன்…” என்று நந்திதா சத்தமாகவே சொல்ல, ராகவர்தினியை சங்கடமாகப் பார்த்தாள் அந்த ராஜி.
அவளைப் பார்த்து மென்னகை புரிந்த ராகவர்தினி, ‘பேசி முடிங்க’ என்பது போல் அமைதியாக நின்றாள்.
நந்திதா தன்னைத் தவிர்ப்பது நன்றாகவே தெரிந்தாலும் அதை அவள் அசட்டையாக ஒதுக்கி விட்டாள்.
எவ்வளவு நேரம் தான் தன்னைத் தவிர்க்க முடியும்? என்பது போல் கைகளைக் கட்டிய படி அமைதியாக நின்றிருந்தாள்.
அவள் அப்படி நிற்பது பேசிக் கொண்டிருந்த இருவருக்குமே ஒரு மாதிரியாக இருக்க, அந்தப் பெண் தன் பேச்சை முடித்துக் கொண்டு, “சரி நந்து, நாம அப்புறம் மீட் பண்ணுவோம். உனக்கு நான் கால் பண்றேன்…” என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள்.
அவள் கிளம்பியதும் நந்திதா, ராகவர்தினி என்ற ஒருத்தி அங்கே இல்லாதது போல் வேறு பக்கம் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
“அக்கா, நான் உங்ககிட்ட பேசத்தான் நிற்கிறேன்…” என்று அவளின் வழியை மறைத்து நின்றாள் ராகவர்தினி.
“யார் நீங்க? என்னை எதுக்கு அக்கான்னு கூப்பிடுறீங்க? வழியை விடுங்க…” என்று நந்திதா சிடுசிடுத்தாள்.
“அட! என்னக்கா, சமீபத்தில் உங்களுக்கு அம்னீசியா எதுவும் வந்ததா என்ன? அதுக்குள்ள என்னை மறந்துட்டீங்க? என்னை மட்டும் தான் மறந்தீங்களா? இல்லை, உங்களை நீங்களே மறந்துட்டீங்களா? உங்க பேராவது உங்களுக்கு ஞாபகம் இருக்கா இல்லையா?” என்று கேலியாகக் கேட்டாள்.
அவளின் கேலியில் நந்திதாவின் முகம் கோபத்தில் சிவந்தது.
அவளின் கோபத்தைப் பார்த்து தன் விளையாட்டைக் கைவிட்டாள் ராகவர்தினி.
“சாரி, சாரிக்கா. சும்மா கேலி செய்தேன்…” என்றாள்.
“நீங்க கேலி செய்து விளையாட நான் ஆளில்லை. வழியை விடுங்க…” என்று அவளைத் தாண்டி செல்ல போனாள்.
“சரிக்கா, இனி கேலி செய்யலை. ஆனால் நான் உங்ககிட்ட பேசணும்…” என்றாள் தீவிரமான முகப்பாவத்துடன்.
“என்கிட்ட பேச என்ன இருக்கு?” அசட்டையாகவே கேட்டாள் நந்திதா.
‘ஒன்றுமே இல்லையா?’ என்பது போல் அவள் முகத்தைத் தீவிரமாகப் பார்த்தவள், அடுத்த நொடி அவளின் கை விரல்களை ஆராய்ந்தாள்.
அவள் எதிர்பார்த்தது அவள் விரல்களில் இல்லை என்றதும், ராகவர்தினியின் முகம் சுருங்கியது.
ஆனாலும் தன் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு அவளிடம் பேச முடிவெடுத்தாள்.
“அத்தான் மேல எந்தத் தவறும் இல்லைன்னு வெளியே வந்துட்டார் அக்கா. அது உங்களுக்குத் தெரியுமா?” என்று நந்திதாவின் முகத்தைத் தீவிரமாகப் பார்த்துக் கொண்டே கேட்டாள்.
“அது தெரிந்து நான் என்ன செய்யப் போறேன்?” இப்போதும் அதே அசட்டை நந்திதாவிடம்.
“என்னக்கா இப்படிச் சொல்றீங்க? அவர் கூடத் தான் உங்க கல்யாணம் நடப்பதாக இருந்தது. சொல்லப் போனால் இந்த நேரம் நீங்க அவர் மனைவியாக ஆகியிருக்க வேண்டியவங்க. அந்த நினைப்பு உங்களுக்குக் கொஞ்சம் கூட இல்லையா?” என்று வருத்தமாகக் கேட்டாள்.
நந்திதா அவளுக்குப் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றாள்.
“அத்தான் எந்தத் தவறும் செய்யலை. அவர் மேல அந்தப் பொண்ணு கொடுத்தது பொய் புகார்னு ஆதாரத்துடன் நிரூபணம் ஆகிருச்சு. அந்த ஆதாரம் இப்ப கூட என்கிட்ட இருக்கு. பார்க்குறீங்களா?” என்று தன் கைபேசியை எடுத்து அவளிடம் காட்டப் போனாள்.
“நான் எதையும் பார்க்க தயாராயில்லை. எனக்குப் பேப்பர் படிக்கத் தெரியும்…” என்றாள் நறுக்கென்று.
“அப்புறம் என்னக்கா? பேப்பர்லயே தெளிவா போட்டுருக்காங்களே… அதன் பிறகும் ஏன் இந்தக் கோபம்? எதுக்கு இந்தப் பாராமுகம்? அத்தான் இப்ப வேலைக்குக் கூடப் போக ஆரம்பிச்சுட்டார்கா. நீங்க என்கிட்ட பேசலைனாலும் பரவாயில்லை. அத்தான்கிட்ட அவர் வெளியே வந்த பிறகாவது பேசிருக்கலாமே அக்கா?” என்று கேட்டாள்.
“எல்லாம் முடிந்து போன பிறகு அவர்கிட்ட நான் ஏன் பேசணும்?” என்று நந்திதா கேட்க,
“அத்தான் தான் எந்தத் தப்பும் செய்யலையேகா? அப்புறம் ஏன் எல்லாம் முடிந்து போனதுன்னு நினைக்கிறீங்க? அவர் வெளியே வந்த பிறகு நின்ன கல்யாணத்தை நடத்த முயற்சி செய்யலாமே?”
“நீ அனாவசியமாகப் பேசிட்டு இருக்க ராகவர்தினி. எங்க கல்யாண விஷயம் முடிந்து போன விஷயம்…” என்று சிடுசிடுத்தாள் நந்திதா.
“அன்னைக்கு ஏதோ தவறான புரிதலில் நின்னு போயிருச்சுக்கா. ஆனால் அதுக்குப் பிறகு பெரியவங்க பேசி முடிக்கலாமே? ஏன்கா முடிக்கலை? உங்க அப்பா, அம்மா அதைப் பற்றிப் பேசவே இல்லையா?” என்று கேட்டவளை உன்னிடம் ஏன் சொல்லணும் என்பது போல் பார்த்தாள்.
“அத்தான் பக்கம் பேசலைனா அதுக்குக் காரணம் இருக்கு அக்கா. அத்தான் இப்ப அவரோட அப்பா, அம்மா கூட இல்லை. அவரை நம்பலை என்ற கோபத்தில் இப்ப தனியா வீடு எடுத்துத் தங்கியிருக்கார். அத்தையும், மாமாவும் அந்த வருத்தத்தில் இருப்பதால் அவங்களால் நின்னு போன கல்யாணம் பற்றிப் பேச முடியலைகா…” என்றவளை இடுங்கிய பார்வையுடன் பார்த்தாள்.
அவளின் பார்வையைப் பொருட்படுத்தாமல் பேச்சை தொடர்ந்தாள் ராகவர்தினி.
“ஆனா உங்க பக்க பெரியவங்க பேசினால் கல்யாணம் நடக்க வாய்ப்பு இருக்கு அக்கா…” என்றவளை கோபத்துடன் பார்த்தாள் நந்திதா.
“எங்க பக்க பெரியவங்க எல்லாம் நின்ன கல்யாணம் திரும்ப நடக்கப் பேசத்தான் நினைத்தாங்க. ஆனால் நான் தான் வேண்டாம்னு சொன்னேன்…” என்று நந்திதா சொன்னதை நம்ப முடியாமல் அதிர்ந்து பார்த்தாள் ராகவர்தினி.
“என்னக்கா சொல்றீங்க? ஏன்?” திகைப்புடன் கேட்டாள்.
“ஏன்னா… காரணம் நீ தான்!” என்றாள் கடுமையாக.
“அக்கா…!” அதிர்ந்து அழைத்தாள் ராகவர்தினி.
என்ன சொல்கிறாள் இவள்? நான் என்ன செய்தேன்? நான் எப்படிக் காரணமாக இருக்க முடியும்? என்ற குழப்பத்துடன் அவளைப் பார்த்தாள்.
“மண்டபத்தில் கல்யாணம் நின்னதுக்குக் காரணம் வேண்டுமானால் அவர் மேல வந்த பொய் புகாரா இருக்கலாம். ஆனால் திரும்ப நடத்த நினைத்த கல்யாணம் நிற்க காரணம் நீ தான். நீ மட்டும் தான்!” என்றாள் அழுத்தமாக.
“நான் என்னக்கா செய்தேன்?” திகைப்புடன் புரியாமல் கேட்டாள் ராகவர்தினி.
எத்தனை யோசித்தும் தான் எப்படித் திருமணம் நிற்க காரணமாக இருக்க முடியும் என்று அவளுக்குப் புரியவே இல்லை.
சொல்ல போனால் மற்றவர்களை விட, இவ்வளவு ஏன் மாப்பிள்ளையான பிரபஞ்சனை விட நின்று போன திருமணம் நடக்க வேண்டும் எனத் தவிப்பவளே அவள் தான். அப்படியிருக்க அவள் தான் திருமணம் நடக்காமல் போகக் காரணம் என்று சொல்வதை அவளால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. நம்பவும் முடியவில்லை.
“என்னக்கா சொல்றீங்க? நான் உங்க கல்யாணம் நடக்கணும்னு தான் ஆசைப்படுறேன்…” என்றாள் முகம் கசங்க.
நான் தான் காரணம் என்று சொல்லிவிட்டாளே என்று அவளின் மனம் துடியாகத் துடித்தது.
“அதெல்லாம் சும்மா பொய்! வெளி வேஷம்!” என்று கடுமையாகச் சொன்னாள் நந்திதா.
“அக்கா…”
“என்ன உண்மையைக் கண்டுபிடிச்சுட்டேன்னு ஷாக் ஆகிட்டாயோ?” என்று கிண்டலாகக் கேட்டாள்.
“என்ன உண்மைக்கா? எனக்கு நீங்க என்ன சொல்றீங்கனே புரியலை…” குழம்பித்தான் போனாள் ராகவர்தினி.
“என்னமாதிரி எல்லாம் நடிக்கிற நீ? உண்மையைச் சொல்லு! நீ பிரபஞ்சனை காதலிக்கிற தானே?” என்று நந்திதா கேட்க,
சத்தியமாக இப்படி ஒரு கேள்வியை ராகவர்தினி எதிர்பார்க்கவே இல்லை.
அதிர்வா? ஆத்திரமாக? கோபமா? வெறுப்பா? எரிச்சலா? வியப்பா? என்ன உணர்வுகளைக் காட்டுவது என்று புரியாமல் தான் போனாள் ராகவர்தினி.